KS4

KS4

அத்தியாயம் – 7
 மருத்துவமனையில் ஒரு கையில் கட்டுடனும், மறு கையில் டம்பளரில் உள்ள பழச்சாறை வாயில் சரித்து குடித்துக் கொண்டு இருந்தவளை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான் ப்ரத்யுஷ்.
 சங்கீதாவோ அவனை பாவமாக ஒரு பார்வை பார்த்து, ஒன்றும் தெரியாதவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு இருந்தாள். அதில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும், அதை காட்டாது முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தான்.
“அடேய் நாந்தேன் அப்போவே சொன்னேன் ல, என் பேச்சை கேட்காம நீ உன்ற பொண்ணுக்கு நிச்சயம் முடிச்சதாலதேன் இப்படி இன்னைக்கு படுத்து கிடக்கா. பெரிய இடம்ன்னு வரவும், உன்ற பொண்ணை ஒரு வார்த்தை கூட கேட்காம முடிச்சிட்ட போல ”.
“நிச்சயம் முடிஞ்சதுக்கே இங்க என்ற பேத்தி இப்படி படுத்து கிடக்கா, இன்னும் கல்யாணம் முடிஞ்சா என்ன ஆகுமோ. முதல நீ பூசாரியை கூட்டிகிட்டு வா ல, வந்து என்ற பேத்திக்கு விபூதியை பூசிவிட சொல்லு. அப்புறம் கோவில் ல இவ பேருக்கும், மாப்பிள்ளை பேருக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ண சொல்லு ”.
“அப்புறம் இன்னும் கல்யாணம் முடியுற வரைக்கும், இவளை வீட்டுக்கு வெளியே விடாத. ஏய் தங்கம் இவளுக்கு ஒத்தாசைக்கு அந்த பாண்டி பிள்ளையை இங்கேயே இருக்க சொல்லு. நீ உன்ற புருஷன் கூட போய் கல்யாண வேலையை பாரு, அடியே சங்கீதா இனியாவது சூதனமா இருந்துக்கோ ” என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு சங்கீதாவிடம், பொரிந்து கொண்டு இருந்தார்.
“ஆமா நீங்க யாரு தம்பி, இங்க என்ன பண்ணுறீங்க. ” என்று அப்பொழுது தான் அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்த ப்ரத்யுஷை பார்த்து கேள்வி கேட்டார், சங்கீதாவின் பாட்டி குமுதவள்ளி.
“வணக்கம் பாட்டி, நான் தான் சங்கீதாவை கட்டிக்க போறேன் ” என்று கூறி அவர் காலில் விழுந்து வணங்கினான்.
“அட மாப்பிள்ளை தம்பியா, நல்லா இருக்கோணும் நீங்க. என்ற பேத்திக்கு கொஞ்சம் துடுக்குத்தனம் ஜாஸ்தி, நீங்க தப்பா எடுத்துகாதீக. கொஞ்சம் எடுத்து சொன்னா சட்டுன்னு புரிஞ்சிக்கும் என்ற பேத்தி ” என்று அவர் கூறியதை கேட்டு வாயை பிளந்து கொண்டு இருந்தாள் சங்கீதா.
“அடி ஆத்தி இவரு இப்படி காலில் விழவும், இந்த கிழவி என்னமா புகழ்ந்து பேசுது என்னை பத்தி. எப்போ பார்த்தாலும் கரிச்சு கொட்டிகிட்டே இருக்குமே, இப்போ ஏன் இப்படி பேசுது, என்னனு சீக்கிரம் தெரிஞ்சிக்குவோம் ” என்று மனதில் எண்ணிக் கொண்டே, அவர்களின் பேச்சை கவனிக்க தொடங்கினாள்.
“நீங்க கவலை படாதீங்க பாட்டி, உங்க பேத்தியை நான் நல்லா பார்த்துப்பேன் ” என்று அவருக்கு வாக்கு கொடுத்து கொண்டு இருந்தான் ப்ரத்யுஷ்.
“ம்ம்… ரெண்டு பேரும் ராசி ஆகிடாங்க போலயே, பார்க்கலாம் இனியாவது இந்த கிழவி அதோட கூட்டுல இருந்து வெளியே வருமான்னு ” என்று எண்ணிக் கொண்டே, ம்கும்… என்று செருமிக் கொண்டே, தானும் அங்கே இருப்பதை காட்டிக் கொண்டாள்.
“சரி தம்பி நீங்க பேசிகிட்டு இருங்க, நான் செத்த நேரம் வெளியே போய் இவ சிநேகித பிள்ளை வருதான்னு பார்க்க போறேன் ” என்று கூறிவிட்டு சங்கீதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
 அவர் சென்ற பிறகு, ப்ரத்யுஷ் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தவள், உடனே என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடங்கினாள்.
“ச இன்னும் எவ்வளவு நேரம்தேன், இப்படி மூலை முடுக்கை பார்த்துகிட்டு இருக்கிறது. எப்போதேன் இவிக என்னை வெளியே விடுவாக, ஹையோ இந்த பாண்டி பிள்ளை வேற இன்னும் காணோம் ”.
“இந்த மனுஷனுக்கு போனை போட்டா, போன் எடுக்க மாட்டேங்குறார் வேலையா இருப்பார்ன்னு விட்டாச்சு. இந்த பிள்ளையாவது வயக்காடு ல என்னதேன் நடக்குதுன்னு, எனக்கு வந்து சொல்லலாம் ல. வீட்டுல இத்தனை பேர் இருந்தாலும், ஒருத்தரும் நம்ம வயசுல இல்லை ”.
“இந்த அப்பாரு கிட்ட மட்டும் எப்படியாவது கேட்டு, வெளியே வயக்காடு வரைக்குமாச்சும் போயிட்டு வரணும் ” என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது வீட்டிற்குள், அப்பொழுது அவளின் தந்தை குரல் கேட்டது.
 உடனே வெளியே அவள் அறையில் இருந்து வந்து, தந்தை இருக்கும் இடத்தை பார்த்தாள். அப்பொழுது தான் அவர் அறைக்குள் செல்வதை பார்த்து, பின் தொடந்து சென்றாள்.
“என்ன மா தாயி, வீட்டுல இருக்க முடியலையா. இருந்தாலும் நீ இப்போ வெளியே போக முடியாது கண்ணு, உன்ற பாட்டிக்கு தெரிஞ்சா அம்புட்டுதேன். வேணும்னா பின்னாடி நம்ம தோட்டத்துக்கு போயிட்டு, விரசா வா தாயி ” என்று அவள் என்ன கேட்க போகிறாள் என்பதை அறிந்து கூறினார் தர்மதுரை, அவளின் தந்தை.
“அப்பாருன்னா, அப்பாருதேன் இந்த ஆத்தாதேன் கொஞ்சம் கூட காதுலையே வாங்கிக்கறது இல்லை பா. இதேன் கேட்க போறேன்னு தெரிஞ்சு, எனக்கு அனுமதி கொடுத்ததுக்கு ரெம்ப நன்றி ஐயா ” என்று அவரை கட்டி பிடித்துக் கொண்டு, சிறிது கண்ணீர் வடித்த சங்கீதாவை தேற்றினார்.
“உன்ற ஆத்தாக்கு நாமதேன் உலகம், யாரும் தான் பிள்ளையை ஒரு சொல் சொல்லிற கூடாதுன்னு நினைப்பா. அதுல பாசம்தேன் அதிகம் இருக்கும் தாயி, நீயும் புரிஞ்சிப்ப தாயி. உன்னை இத்தனை வருஷமா பார்த்துகிட்டு இருக்கேன், நீ எதுக்கு என்னை தேடி வருவன்னு கூட தெரியாம இருக்குமா தாயி ” என்று அவர் கூறியதை கேட்டு மனதில் மகிழ்ச்சி அடைந்தாள்.
 அதன் பின் அவள் யாருக்கும் எதுவும் சொல்லாமல், பின் பக்க தோட்டத்திற்கு தனியே சென்றாள். அது அவள் சிறு வயது முதல், விளையாடிய இடம் என்பதால், தன் மகிழ்ச்சியை அதனோடு பகிர்ந்து கொண்டே நடந்து கொண்டு இருந்தாள்.
 அப்பொழுது ஏதோ சத்தம் கேட்கவும், என்ன சத்தம் என்பதை உற்று கவனித்தாள். அது ஒரு காலடியோசை என்பதை உணர்ந்தவள், திரும்பி பார்த்தாள்.
 அவள் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பல் நெருங்கிக் கொண்டு இருந்ததை கவனித்து, அவளுக்கே உரிய தற்காப்பு உணர்வு உடனே விழிப்படைந்து உடனே செயல்படுத்த வைத்தது.
 தன் பலம் கொண்ட மட்டும், அவர்களுடன் போராடி சங்கேதக் குரலில் உதவி கோரி கத்திக் கொண்டு இருந்தாள்.
“ஏய் சும்மா கத்தாத, டேய் முதல அவ வாயை கட்டுங்க டா. யாரும் பார்கிறதுக்குள்ள இவளை கடத்தி கொண்டு போகனும், சீக்கிரம் பிடிங்க டா இவளை ” என்று ஒருவன் அவளை பின்னிருந்து பிடித்துக் கொண்டு, மற்றவர்களை ஏவிக் கொண்டு இருந்தான்.
“ஏலேய் விடு டா பரதேசி, இப்போ நீ என்னை விட்டா நீ தப்பிச்ச இல்லைனா அப்புறம் பின் விளைவுக்கு என்னை குறை சொல்லக் கூடாது சொல்லிபுட்டேன் ” என்று அவனிடம் மிரட்டல் விட்டுக் கொண்டு இருந்தாள்.
 ஆனால் அவனோ, அவளின் பேச்சை காது கொடுத்துக் கேட்கும் நிலையை எல்லாம் கடந்து இருந்தான். ஆகையால் அவள் தன் தற்காப்பு கலையை எல்லாம், அவனிடம் காட்டிக் கொண்டு இருந்தாள்.
 அவளை தடுக்க வந்த, அவனின் ஆட்களையும் ஒரு வழி செய்து விட்டாள். அதற்குள் இன்னொருவன், இவள் கையை சிறிது பதம் பார்த்து விட்டான்.
 அதில் தன் பலத்தை இழந்து கொண்டு இருந்தவளை, மீண்டும் தாக்க வந்தவனை அங்கு வந்த அவளின் தந்தையின் ஆட்கள் அவனை பின்னி எடுத்து விட்டனர். மற்றவர்களையும் தாக்க தொடங்கினர், இந்த கலவரத்தில் வலி பொறுக்க முடியாமல் அவள் மயங்கி விழ போவதை யாரும் கவனிக்கவில்லை.
 அவளை அப்பொழுது பார்த்த ப்ரத்யுஷ், அவள் கீழே விழாமல் தாங்கிக் கொண்டான். அங்கு இருந்து விரைவாக வண்டி எடுத்துக் கொண்டு வந்தவன், கண்ட காட்சி அவனை உலுக்கி விட்டது.
 அதற்குள் அங்கே அவளின் தந்தை வரவும், அவரிடம் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை பற்றி அறிந்து கொண்டு அவளை கையில் எந்திக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு அங்கே விரைந்தான்.
 அங்கே இவளுக்கு விரைவாக சிகிச்சை மேற்கொண்டு இருக்கையில், அங்கே வந்து சேர்ந்தார் அவளின் தந்தை தர்மதுரையும், அவளின் தாய் தங்கமும்.
“தம்பி எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியல தம்பி, பிள்ளை இத்தனைக்கும் பின்னாடி இருக்கிற எங்க தோட்டத்துக்குதேன் போச்சு. அங்கின எப்படி இந்த பொறுக்கி பசங்க நுழைந்தாங்கன்னு தெரியல, எப்படி தம்பி நீங்க அங்க சரியா வந்தீங்க ” என்று தர்மதுரை அவனிடம் கேட்டார்.
“அப்பா தான் ஒரு வேலையா என்னை இங்க அனுப்பினார் மாமா, அப்போ தான் உங்க எல்லோரையும் அப்படியே பார்க்கலாம்ன்னு நினைச்சு உங்க வீட்டுக்கு வந்தேன். திடிர்னு இவ சத்தம் மாதிரியே கேட்கவும், வேகமா வந்தேன் ” என்று கோர்வையாக ஒரு பொய்யை கூறி முடித்தான்.
“ஹோ அப்படிங்களா தம்பி, மன்னிச்சிடுங்க தம்பி இது யார் வேலைன்னு தெரியல. தப்பு சத்தியமா என்ற பிள்ளை மேல இருக்காதுங்க தம்பி, அவ தப்பை தட்டி கேட்பாளே தவிர, எந்த தப்புக்கும் போக மாட்டா ” என்று சங்கீதாவின் தந்தையாய் சிறிது பெருமையாக கூறிக் கொண்டு இருந்தாலும், இதை செய்தவர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஆவேசம் அவர் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.
“நீங்க உங்க பொன்னை பத்தி சொன்னது சரி மாமா, நானே நிறைய பார்த்து இருக்கேன். ஆனா நீங்க கல்யாண வேலையை மட்டும் பாருங்க, நான் அவளை தாக்க வந்தவங்களை என் வழியில் பார்த்துக்குறேன் ” என்று அவன் கூறியதை கேட்டு சற்று நிம்மதி அடைந்தார்.
 ஏனெனில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தது தெரிந்தால், வேறு ஆட்களாக இருந்தால் திருமணத்தை நிறுத்த தான் முனைந்து இருப்பர். ஆனால் ப்ரத்யுஷ் அவ்வாறு செய்யாமல், திருமண வேலைகளை பார்க்க சொல்வதோடு, தன் வருங்கால துணைவிக்கு ஆபத்து விளைவித்தவர்களை அவனுடைய பாணியில் தண்டனை கொடுக்க முன் வந்து இருப்பது அவருக்கு நிம்மதியை கொடுத்தது.
 அதற்குள் டாக்டர் வெளியே வந்து, சிறிது நேரத்தில் அவள் கண் முழித்து விடுவாள் என்று தெரிவிக்கவும், இவர்கள் உள்ளே சென்றனர். தர்மதுரை அவரின் தாய் குமுதவள்ளிக்கு மட்டும் விவரம் தெரிவித்து இருந்தார், வேறு எந்த சொந்தத்துக்கும் அவர் இது பற்றி மூச்சு விடவில்லை.
 விஷயம் அவர்களுக்கு தெரிந்தால், திருமண வீட்டில் பல பேச்சுக்கள் தன் மகளை பற்றி பேசுவார்களே என்று எண்ணி, யாருக்கும் தெரிவிக்கவில்லை அவர். விஷயம் தெரிந்த அவர் இங்கே வந்து, பெரிய அறிவுரைகளை வழங்கிக் கொண்டு இருந்தார்.
“என்ன இன்னும் நீங்க அப்படியே முறைச்சு பார்த்துகிட்டு இருக்கீக, நாந்தேன் கவனமா இருந்தேன் ல. இது சின்ன காயம் தேன், சீக்கிரம் சரியாகிடும். நீங்க கொஞ்சம் சிரிங்க, இது நல்லாவே இல்லை ” என்று அவனை பார்த்து கூறினாள் சங்கீதா.
“ரொம்ப சாரி ” என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு அங்கு இருந்து வெளியேறினான்.
 அவனின் இந்த செயலில் அவள் திகைத்தாள், எதற்காக மன்னிப்பு கேட்டான், உடனே ஏன் சென்றான் என்று அதற்குள் அவள் தலையில் ஆயிரத்தெட்டு கேள்விகள் படை எடுத்தது. சிறிது தூரம் சென்றவன் திரும்பி அவளெதிரில் வந்து நின்று, அவளை இறுக்கி அணைத்தான்.
“ரொம்ப யோசிக்காத, நல்ல பொண்ணா கல்யாணத்துக்கு ரெடியாகு ” என்று கூறி நெற்றியில் இதழ் பதித்துவிட்டு சென்றான்.
 அவனின் இதழ் ஒற்றலும், இறுகிய அணைப்பும் அவளுக்கு வேண்டிய பதிலை கொடுத்துவிட்டது. அவனை பற்றி நினைத்துக் கொண்டே, மருந்தின் உதவியால் சிறிது நேரம் உறங்கினாள்.
“டேய் கெளதம் அவனை பிடிச்சு வச்சாச்சா, அவன் ஆட்கள் எல்லோரையும் பிடி. அப்புறம் அந்த ராஸ்கல் கை எனக்கு வேணும், எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட பொண்டாட்டி மேல கை வைப்பான் ” என்று காரை சென்னைக்கு செலுத்திக் கொண்டு, கோவத்தில் உறுமிக் கொண்டு இருந்தான் ப்ரத்யுஷ்.
“டேய் எல்லோரையும் பிடிச்சாச்சு, ஆனா அவனுங்க எல்லாம் போலீஸ் கஸ்டடி ல இருக்கானுங்க. உங்க அப்பாவுக்கு எப்படியோ நியூஸ் போயிருச்சு, உனக்கு முன்னாடி அவர் முந்திகிட்டார் என்ன டா பண்ண இப்போ ” என்று கெளதம் அவனிடம் கேட்டான்.
 ஒரு நிமிடம் ஆழ மூச்செடுத்தவன், தந்தை செயலில் இறங்கி இருக்கிறார் என்று தெரிந்தவுடன், கௌதமிடம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று மட்டும் கூறினான்.
 காரை ஒரு இடத்தில் ஓரங்கட்டி விட்டு, கதவை திறந்து கொண்டு இறங்கி காரின் முன் பக்கம் சென்று அதில் சாய்ந்து நின்று யோசிக்க தொடங்கினான்.
“உண்மையாவே அவளை நாம லவ் பண்ணுறோமா, இல்லை இன்னும் நாம அவளை எதிரியா பார்கிறோமா ” என்று அவனுக்குள்ளே பெரிய பட்டி மன்றம் நடத்திக் கொண்டு இருந்தான்.
 அவளுடன் இருக்கும் பொழுது, அவள் வேண்டும் என்று மனது அடித்துக் கொள்வதும். அதன் பிறகு இவளை பழி வாங்கியே தீர வேண்டும் என்று, மற்றொரு சமயத்தில் கங்கணம் கட்டி திரிந்ததும் அவன் கண் முன்னே விரிந்து கொண்டு இருந்தது.
 இன்று நடந்த கலவரத்தில், அவன் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டு இருந்தான். அது அவளுக்கு ஒன்று என்றால் தன்னால் தாங்க முடியாது என்பது தான், அவளை யாருக்கும் விட்டு தர முடியாது என்பதையும் புரிந்து கொண்டான்.
“கீத்ஸ் பேபி, நான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன் போல பேபி. அதான் உன் கையை அவன் பதம் பார்த்த உடனே, அவன் மேல கொலைவெறியே வந்தது. நீ மயங்கி விழுந்ததும், ஒரு நிமிஷம் எனக்கு நீ என்னை விட்டு போயிடுவியோன்னு பயந்தேன் ”.
“உன்னை காப்பாத்தி உன்னை என் கூடவே வச்சு இருக்கனும்ன்னு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமா உன்னை காப்பாத்த ஆஸ்பிடல் போனேன். நீ இல்லைனா நான் இல்லைன்னு புரிஞ்சிகிட்டேன், இனி மாமா உன்னை சீண்டிகிட்டே காதலிக்க போறேன் ”.
“ஐ வில் ஷோ மை டீப் லவ் டு யு பேபி, கெட் ரெடி மை ஜெர்ரி, யுவர் டாம் இஸ் ஆன் தி வே ” என்று மனதிற்குள் அவளிடம் சொல்லிக் கொண்டு, அவனுக்கு பிடித்த பாடலை விசில் அடித்துக் கொண்டே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
 இங்கே சங்கீதா கனவில் அவனோடு டூயட் பாட்டை பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் சுகமான நினைவுகளோடு தூங்கிக் கொண்டு இருந்தாள். இங்கே இருவரின் காதலை அறிந்த விதி, இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டது, தனது அடுத்த திருவிளையாடலை நினைத்து.
அத்தியாயம் – 8
 இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், இங்கே சென்னையில் இருந்து பூஞ்சோலை கிராமத்திற்கு ப்ரத்யுஷின் வீட்டில் எல்லோரும் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் வந்த கெளதம் அந்த கிராமத்தை கண்டு வியந்தான். திருச்சிக்கும், சென்னைக்கும் நடுவில் இருக்கும் அந்த கிராமம், இயற்கை அன்னையோடு ஒட்டி உறவாடிக் கொண்டு இருந்தது.
“டேய் இந்த இடம் ரொம்ப சூப்பரா இருக்கு டா, ஒரு தடவை நான் என் ஆளை இங்க கூட்டிட்டு வரணும். உங்க அப்பா எப்படி டா இங்க இருந்து பொண்ணை உனக்கு தேடி பிடிச்சார், இனி நீ இங்க அடிக்கடி வரலாம், ரொம்ப லக்கி டா நீ ”என்று கெளதம் சிலாகித்துக் கொண்டு இருந்தான்.
“ம்ம்ம், ஆமா டா எங்க அப்பா பண்ண ஒரு நல்ல விஷயம் இது தான். நிறைய எனக்கு செய்து இருக்கார், ஆனா இப்படி ஒரு அழகான இடத்தில நல்ல பொண்ணா தேடி கொடுத்து இருக்கார், அது தான் டா எனக்கு பிடிச்சதே ”.
“இது எல்லாத்துக்கும் மேல, அவங்க வீட்டுல அவங்க அப்பாவுக்கும், இவளுக்கும் மட்டும் தான் என்னோட பாஸ்ட் தெரியும். அவங்க அப்பாவுக்கு என்னோட அப்பாவே எல்லாம் சொல்லிட்டார், அவளுக்கு நான் எல்லாம் சொல்லுற மாதிரி சூழ்நிலை ஆகிருச்சு ”.
“இந்த மாதிரி சம்பந்தம் வந்தா யாரும் அவங்க பொண்ணுக்கு, இப்படி ஒரு மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்து இருக்க மாட்டாங்க டா. இவர் சம்மந்தம் சொன்னதும் இல்லாம, அவளும் அதை ஏத்துகிட்டு இருக்கானா கண்டிப்பா என் மேல நம்பிக்கை வச்சு இருக்காங்க, அவளுக்கும் என்னை பிடிச்சு இருக்குன்னு தான் அர்த்தம் ”என்று ப்ரத்யுஷ் கூறிய விளக்கத்தை கேட்டு, கெளதம் வாயை பிளந்தான்.
 இவர்கள் பேசியதை கேட்ட ப்ரத்யுஷின் தாய் லலிதா, விஷமமாக சிரித்தார்.
“அவளும், அவங்க அப்பாவும் பணத்தை பார்த்து மயங்கி இருப்பாங்க, இதுல என்ன சந்தேகம் ” என்று இகழ்ச்சியாக கூறவும், ப்ரத்யுஷ் அவரை ஒரு பார்வை பார்த்தான்.
 அந்த பார்வையை பார்த்த பிறகும், அவர் அடுத்து வாய் திறக்க ஒன்னும் முட்டாள் இல்லை. ஆனால் அவர் அந்த ஊரில் சரியான ஆளை தேட வேண்டும் , இந்த திருமணத்தை நிறுத்த என்று மிகத் தீவிரமாக எண்ணிக் கொண்டார் .
“வாங்க சம்மந்தி, வாங்க மாப்பிள்ளை, வாங்கம்மா ”என்று முறையாக எல்லோரையும் வரவேற்றார், சங்கீதாவின் தந்தை தர்மதுரை.
“நம்ம தோப்பு வீட்டுலதேன், நீங்க தங்க ஏற்பாடு செய்து இருக்கேனுங்க. உங்க சொந்தகாரவிக கூட அங்கினயே தங்கிக்கலாம், வீடு நல்ல பெரிய வீடுதானுங்க. இன்னும் யாரும் வந்தா கூட, நம்ம வீட்டுல தங்க வச்சுக்கலாமுங்க ” என்று தர்மதுரை கூறினார் மூர்த்தியிடம்.
“ரொம்ப சந்தோசம் சம்பந்தி, முதல நாங்க அங்க தோப்பு வீட்டுக்கு போய் இறங்கிட்டு, கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கிறோம். அப்புறம் உங்க பூர்வீக வீட்டுக்கு போய், ஏற்பாடு எல்லாம் பார்த்துக்கலாம் ” என்று ப்ரத்யுஷின் தந்தை மூர்த்தி கூறினார்.
 இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, மற்றொரு பக்கம் ப்ரத்யுஷ், சங்கீதாவை கண்களால் தேடிக் கொண்டு இருந்தான். எங்கும் அவள் தென்படாததால், அவன் சற்று சோர்வடைந்தான்.
 அன்று பார்த்த பிறகு, அவன் பேசவும் இல்லை பார்க்கவும் இல்லை. அவனின் தேடலை கவனித்த, சங்கீதாவின் பாட்டி புன்னகைத்துக் கொண்டார். மாப்பிள்ளை வீட்டினரை அவர் இப்பொழுது தான் பார்கிறார், ஆகையால் அவர் ஒவ்வொருவரையாக பார்த்துக் கொண்டு இருந்ததில் ப்ரத்யுஷின் தேடல் அவரின் பார்வைக்கு சிக்கியது.
“பேராண்டி இப்படி செத்த என் கூட உட்காருயா ” என்று ப்ரத்யுஷை அழைத்து அவரருகில் உட்கார வைத்தார்.
“உன்ற கண்ணு என்ற பேத்தியை தேடுது, ராத்திரி மாப்பிள்ளை அழைப்பு, சடங்கு இருக்கும் அப்போ பார்த்துக்கோ. நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே, உன் கூடவே வச்சுக்கோ ” என்று கூறி சிரித்தார்.
“நீங்க ரொம்ப விவரமான பாட்டின்னு சொல்லி இருக்கா, இவ்வளவு விவரம்ன்னு எனக்கு தெரியாதே பாட்டி ” என்று அவன் கூறிய தினுசில் அவரும் சிரித்து விட்டார்.
“உன்ற ஆத்தாளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை போலயே, ஏதோ கடமைக்கு வந்து இருக்காப்ல இருக்கு. சும்மாவே என் பேத்தி பட்டணத்துல மாப்பிள்ளை பார்க்காதீங்க, உள்ளூர் ல மாப்பிள்ளை பாருங்கன்னு குதிச்சா ”.
“உன்ற ஆத்தாவை பார்த்தா நிச்சயம், என்ற பேத்தி கூட சண்டை பிடிச்சே தீருவேன்னு இருக்கிற மாதிரி தெரியுது. பேராண்டி யாருக்கு ஆதரவா இருக்க போறீக, என்ற பேத்திக்கா, இல்லை உன்ற ஆத்தாளுக்கா ” என்று கேட்கவும், அவன் ஒரு நிமிடம் அதிர்ந்தான், பின்னர் தன்னை சமாளித்துக் கொண்டு அவரிடம் பதில் கூற தொடங்கினான்.
“உங்க பேத்தி, அப்படி சண்டை எல்லாம் வந்தா அவளே பார்த்துப்பா. அவ பார்க்காத சண்டையா, உங்களுக்கு நல்லா தெரியுமே பாட்டி ” என்று அவன் கூறவும், அவர் சிரித்து விட்டார்.
 அதற்குள் தர்மதுரை நேரமாவதை உணர்ந்து, தன் வீட்டிலே எல்லோருக்கும் மதிய விருந்தை கொடுத்தார். அதன் பின் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தோப்பு வீட்டிற்கு அழைத்து சென்றார்.
 தோப்பு வீட்டை பார்தவர்கள் எல்லோரும் வாயை பிளந்தனர், அதற்க்கு காரணம் இயற்கை அன்னையோடு ஒட்டி இருந்த அந்த நவீனமுறையில் இருந்த அழகான குட்டி பங்களா. பிரத்யுஷின் தாய் லலிதாவிற்கு, அந்த வீட்டை பார்த்ததும், தன் வீட்டோடு ஒப்பிட்டு பார்க்க தோன்றியது.
“நம்ம வீட்டோட இதை ஒப்பிட்டு பார்த்தா, நம்ம வீடு எல்லாம் ஒன்னுமில்லைன்னு தோணுது. கிராமத்து பணக்காரங்க போலயே, ஆனாலும் எனக்கு இந்த கல்யாணம் நடக்க வேண்டாம். எப்படி திமிரா பேசினா, என் வீட்டுல நான் தான் ராணியா இருக்கணும் ”.
“அதுக்கு தான் நான் என் சொல் பேச்சு கேட்குற பிள்ளையை பார்த்தேன், எங்க இங்க அப்பாவும், மகனும் என் பேச்சை கேட்குறதாவே இல்லை. சென்னை ல என் லேடீஸ் கிளப் தோழிகள் எல்லாம், எப்படி வசதியான வீட்டு மருமகளும், சொல் பேச்சு கேட்குற மருமகளுமா வச்சு இருக்காங்க ”.
“இந்த பட்டிகாடோட நான் போய் நின்னா, என்னை எப்படி மதிப்பாங்க. இவளுக்கு இங்கிலீஷ் தெரியுமா பேச, அங்க எல்லோரும் அந்த மொழியில் தான் பேசுவாங்க. என்ன செய்ய எப்படியாவது நிறுத்தனும், யாரு இங்க இவங்க குடும்பத்துக்கு பகைன்னு முதல பார்க்கணும், அவங்களை வச்சே நிறுத்த வேண்டியது தான் ” என்று எண்ணிக் கொண்டே, கணவருடன் உள்ளே சென்றார்.
 எல்லோரும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின், தட்டு அடுக்கும் வேலையை பார்க்க வேண்டும் என்று மூர்த்தி, தன் சொந்தங்களுக்கு எல்லாம் கூறிவிட்டு, அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் மனைவியுடன் சென்றார்.
“டேய் மச்சான், இந்த ஊர் பிக் ஷாட் பொன்னை தான் டா உங்க அப்பா உனக்கு பிடிச்சு கொடுத்து இருக்கார். உங்க அம்மா ஒன்னும் இனி நிறுத்த மாட்டங்க கல்யாணத்தை, நீ என்ஜாய் பண்ணலாம் டா ” என்று கெளதம் கூறவும், பிரத்யுஷ் சிரித்தான்.
“ஹா ஹா உனக்கு புரியல டா, எங்க அம்மா அவ்வளவு சீக்கிரம் பின் வாங்க மாட்டாங்க. இன்னும் அவங்களுக்கு என் பொண்டாட்டியை பத்தி தெரியல, தெரிஞ்சா அவங்க நிறுத்த துணிய மாட்டாங்க ” என்று ப்ரத்யுஷ் கூறவும், வாய் பிளந்தான் கெளதம்.
“டேய் நான் உன் கிட்ட ஒரு விஷயம் கேட்குறேன், அதுக்கு நீ உண்மையா பதில் சொல்லணும். உனக்கு நிஜமாவே அந்த பொன்னை பிடிச்சு இருக்கா, இல்லை இன்னும் ஆரம்பத்துல சொன்ன ஸ்டேடஸ், அப்புறம் ஆரம்பத்துல அவ உன்னை வேண்டாம்ன்னு நினைச்சதுக்கு எல்லாம் சேர்த்து பழி வாங்க கல்யாணம் பண்ண போறியா ” என்று கெளதம் இந்த முறை உறுதியான பதில் அவனிடம் இருந்து பெறுவதற்காக கேட்டான்.
“உண்மையாவே நான் முதல இருந்தே, அவளை காதலிச்சிட்டு தான் டா இருந்து இருக்கேன். ஆனா அதை நான் நல்லா தெரிஞ்சிகிட்டது, அவ அடிபட்டு இருக்கும் பொழுது தான் டா. அந்த நிலைமையில் அவளை பார்த்த பொழுது, என் உயிர் என் கிட்ட இல்லை டா ”.
“எங்க அவளை இழந்திடுவோமோன்னு ரொம்ப பயந்துட்டேன் டா, நானே என்னை குழப்பிகிட்டு இருந்து இருக்கேன் இத்தனை நாளா. ஆனா அவ தெளிவா இருந்தா டா, என்னை அவளுக்குமே ஆரம்பத்துல பிடிக்கல ”.
“அதுக்கு காரணம், அவ இங்கேயே செட்டில் ஆகுற மாதிரி நினைச்சது தான். ஆனா அவ தன் குடும்பத்துக்காக, என்னை ஏற்க, காதல் செய்ய கத்துகிட்டா. இன்னொரு பொண்ணு கூட என்னை சேர்த்து வச்சு பார்க்கும் பொழுது, அவளோட கோபம் தான் அவளுக்கு என் மேல இருக்கிற காதலை புரிய வச்சது ”.
“ஆனா நான் அப்போ கூட, மாறி மாறி குழப்பத்துல தான் டா நான் இருந்து இருக்கேன். அவளுக்கு அடிபட்டதுக்கு அப்புறம் தான், நான் சுய அலசல் ல இறங்கினேன். அவ மேல நான் உண்மையான நேசத்தோட தான் இருந்து இருக்கேன்னு, இப்போ ரெண்டு வாரமாச்சு டா அவளை பார்த்து, பேசி ”.
“வா டா மாப்பிள்ளை, எப்படியாவது அவளை போய் பார்த்திட்டு வரலாம் ” என்று கௌதமை துணைக்கு அழைத்தான் பிரத்யுஷ்.
“ஏண்டா உனக்கு இந்த கொலைவெறி, அதான் அவங்க பாட்டி அப்போவே சொன்னாங்க ல. நீ இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ மச்சி, இந்த ஊர் ல இருக்குற ஆட்கள் எல்லாம் அடியாள் மாதிரியே இருக்காங்க டா. தயவு செய்து உன் மனசை மாத்திக்கோ மாப்பிள்ளை, எல்லாம் உன் நல்லதுக்கு தான் டா ” என்று கெளதம் சிறிது பயந்துக் கொண்டே கூறினான்.
“ஏன் டா இந்த பம்மு பம்முற, உனக்கு தான் இந்த ஊர் பிடிச்சு இருக்கே, அப்புறம் என்ன ” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் பிரத்யுஷ்.
“டேய் ஊர் ரொம்ப நல்லா இருக்கு டா, ஆனா இந்த ஊர் குட்டீஸ் ல இருந்து பெரியாள் வரைக்கும் ஏதோ அடியாள் ரேஞ் ல இருக்கிற மாதிரியே இருக்கு டா. இப்போ நீ என்னை கூட்டிட்டு போனா, உன்னை விட்ருவாங்க டா, ஆனா உனக்கும் சேர்த்து நான் தான் டா அடி வாங்கணும் மாப்பிள்ளை. என்னை விட்டுடு டா, உனக்கு புண்ணியமா போகும் ” என்று கூறியவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான், ரொம்ப நாட்கள் கழித்து.
 மாலை நேரம் சங்கீதா வீட்டில், எல்லோரும் பரபரப்பாக அவர்களின் பூர்வீக வீட்டுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். நல்ல நேரம் பார்த்து முதலில் சங்கீதாவை, பூர்வீக வீட்டிற்கு அனுப்பி வைத்தார் குமுதவள்ளி பாட்டி, சில உறவினர்களோடு.
 அதன் பின் எல்லோரையும் கூட்டிக் கொண்டு, அங்கே வந்து சேர்ந்தார். அவர்களின் பூர்வீக வீடு, இப்பொழுது ஒரு பெரிய மண்டபமாகவே காட்சி அளித்தது. பெரிய அரண்மனை போன்று இருக்கும் அந்த வீட்டை, மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்கள் சற்று வாயை பிளந்து பார்த்தனர்.
“ச, நானும் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துவோம்ன்னு பார்கிறேன், முடிய மாட்டேங்குது. பார்த்த வரை எல்லோருக்கும், அவங்க வீட்டுல இருக்கிறவங்க மேல ஒரு பயம் கலந்த மரியாதை தான் இருக்கு ”.
“நம்ம திட்டத்துக்கு யாரும் ஒத்து வர மாட்டாங்க போலயே, இந்த சங்கீதா பாட்டி கொஞ்சம் அவ மேல சிடுசிடுன்னு தான் இருக்காங்க. ஆனா நம்ம திட்டத்துக்கு ஒத்து வருவாங்களா, எதுக்கும் அவங்க கிட்டயே கேட்டு பார்க்கலாம் ” என்று எண்ணிக் கொண்டு, ப்ரத்யுஷின் தாய் லலிதா அவரை நோக்கி சென்றார்.
“அம்மா உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும், கொஞ்சம் அப்படி வரீங்களா ” என்று லலிதா, சங்கீதாவின் பாட்டியிடம் கேட்டு அவரை அழைத்துக் கொண்டு ஒதுக்குபுறமாக சென்றார்.
“என்ன மா, இந்த கல்யாணத்தை எப்படி நிருத்த்னும்ன்னு பார்க்கிற போல. நீ எப்படி குட்டிகரணம் போட்டாலும், இந்த கல்யாணம் நடந்தே தீரும். இன்னும் உன்ற மவனை பத்தியும், மருமகளை பத்தியும் உனக்கு தெரியல போல. நீ நிறுத்த நினைச்சா, அதோட பின் வளைவு பத்தி யோசிச்சிடியா மா ” என்று குமுதவள்ளி பாட்டி நச்சென்று கேள்வி கேட்கவும், அதற்க்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் லலிதா சிறிது நேரம்.
“இங்க பாருங்க எல்லாம் உங்க பேத்தி நல்லதுக்கு தான் சொல்லுறேன், என் மகன் அங்க குடி, பொண்ணுன்னு எல்லா கெட்ட பழக்கமும் படிச்சு இருக்கான். இப்படி ஒரு பையனை தான் நீங்க உங்க பேத்திக்கு பார்க்க நினைச்சீங்களா ” என்று தைரியமாக, தன் மகனின் மறுபக்கத்தை அவரிடம் கூறி நிறுத்த முயன்றார்.
 இந்த செய்தி குமுதவள்ளி பாட்டிக்கு புதிது, தன் பேத்தியின் கனவு நாயகனை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் மணமகனின் தாயாரே, தன் மகனின் மறுபக்கத்தை எடுத்துக் கூறவும் அவருக்கு பயம் வந்தது.
 ஆனால் யோசித்து பார்த்த பின்பு, இப்பொழுது தன் பேத்தியின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று எண்ணி, நிமிர்ந்து லலிதாவை பார்த்து பேச தொடங்கினார்.
“என்ற பேத்தி, உன்ற மவனை மாத்திக் காட்டுவா. நீ இப்படியே குடைச்சல் அவளுக்கு கொடுத்தா, உன்னை வீட்டுல இருந்து துரத்தி விட்ருவா. நீதேன் இனி சூதனமா நடந்துகோணும், அங்க பாரு உன்ற மவன் தான் கூப்பிடுறான் உன்னை, போய் என்னனு கேளு ” என்று பாட்டி கூறவும், அவசரமாக அங்கு இருந்து ஓடினார் லலிதா.
“ம்கும்… இந்த பட்டணத்து மாமியாருக்கு நேரம் சரியில்லை, என்ற பேத்தி அவளை எப்படி எல்லாம் உருட்ட போறாளோ. ஆண்டவா என்ற பேத்திகிட்ட இருந்து, அந்த பச்ச மண்ணை காப்பாத்து பா ” என்று லலிதாவிற்காக, மானசீகமாக வேண்டிக் கொண்டார் பாட்டி.
 தோப்பு வீட்டில் மாப்பிளை அழைப்பிற்காக, மாடியில் அவனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறையில் தயாராகிக் கொண்டு இருந்தான் ப்ரத்யுஷ். கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து திருப்தி அடைந்து திரும்பியவன், அங்கே தேவதையாக நின்று இருந்த சங்கீதாவை பார்த்து மூச்சு விட மறந்தான்.
“வாவ், செம அழகா இருக்க கீத்ஸ் செல்லம். இந்த பிங்க் சாரீ உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு, அதை விட அந்த லிப்ஸ் என்னை காந்தமா இழுக்குது டி செல்லம் ” என்று கூறிக் கொண்டே நெருங்கியவனை, ஒரே தள்ளு தள்ளி ஓங்கி ஒரு அரை விட்டாள்.
“உமக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது, ரெண்டு வாரமா போன் பேசல, இந்த பிள்ளை எப்படி இருக்கா என்ன ஏதுன்னு கேட்டீரா. என்னை வந்து பார்க்க கூட இல்லை, இப்போ மட்டும் செல்லம் கொஞ்சிகிட்டு வரீகளோ. இப்பொ கூட நான்தென் உம்மை பார்க்க வந்து இருக்கேன் ”.
“ஊருக்குள்ள வந்த உடனே, என்னை பார்க்க வந்து இருக்க வேண்டாம். கல்யாணம் முடியிற வரைக்கும் என்னை தொடவே கூடாது, இப்போவே சொல்லிபுட்டேன் ஆமாம் ” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சென்று விட்டாள்.
 திக்ப்ரமை பிடித்தவன் போல் நின்று இருந்த பிரத்யுஷை, கெளதம் தான் பிடித்து உலுக்கினான்.
“ஏன் டா சிஸ்டர் என்ன சொல்லிட்டு போறாங்க, நீ ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி இருக்க ” என்று அவன் கேட்டான்.
“ஏன் டா உன் நண்பனுக்காக, நீ ஒரு ரெண்டு அடி வாங்கி இருக்கலாம் ல. பாரு இப்போ அவ வந்து, என்னை ரெண்டு அடி அடிச்சிட்டு போறா. எல்லாம் உன்னால தான் டா, நான் அப்போ கூப்பிடும் பொழுதே நீ வந்து இருக்கலாம் ல டா ” என்று பதிலுக்கு பாய்ந்தான் பிரத்யுஷ், அவன் மீது.
“நீ சொல்லுறது தலையும் புரியல, வாலும் புரியல. கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன் டா, நான் என்ன டா பண்ணேன் ” என்று கெளதம் கேட்டான்.
“அவளை பார்க்க போகலாம் சொன்னேன் ல டா, அப்போவே போய் இருந்தா, இப்போ அவ என்னை அடிச்சு இருப்பாளா. உன்னை நான் அப்புறம் கவனிச்சுக்கிறேன், இப்போ நான் அவளை கவனிக்கிறேன் ” என்று கருவிக் கொண்டே, அவனை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான்.
“அட பாவிகளா, உங்க வாய்கால் தகராறுக்கு நான் தான் ஊறுகாயா டா. நல்லா வருவீங்க டா, ரெண்டு பேரும் ” என்று எண்ணிக் கொண்டே அவனோடு கூட சென்றான்.
 மாப்பிளை அழைப்புக்கு, மணப்பெண்ணின் வீட்டின் சார்பில் ஆரத்தி எடுத்து பெண்கள் பிரத்யுஷை வரவேற்றனர். அவனை அழைத்துக் கொண்டு மேடையில் ஏற்றி, சங்கீதா அருகில் உட்கார வைத்தனர்.
 இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு, அங்கு அந்த சடங்கில் கலந்து கொண்டனர். திரும்பவும் எலியும், பூனையுமாக இருக்கும் இவர்களை பார்த்து நொந்து போனான் கெளதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!