KS(final)

KS(final)

அத்தியாயம் – 9
 அன்றைய விழா முடிந்து, சங்கீதாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அவளின் உறவினர்கள். பிரத்யுஷை அழைத்துக் கொண்டு, தோப்பு வீட்டிற்க்கு அழைத்து செல்ல கௌதமிடம் கூறினார் மூர்த்தி.
 ப்ரத்யுஷின் தந்தையும், சங்கீதாவின் தந்தையும் நாளை திருமணத்திற்கான சில வேலைகளை செய்து முடித்துவிட்டு அவரவர் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். தோப்பு வீட்டிற்கு வந்தது முதல், ப்ரத்யுஷ் அவனின் அறையில் குட்டி போட்ட பூனை போல், அங்கும், இங்கும் நடை பயின்று கொண்டு இருந்தான்.
 கெளதமோ, அவனின் இந்த நடைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் முழி பிதுங்கிக் கொண்டு இருந்தான். ஆனால் சிறிது நேரத்தில், ப்ரத்யுஷ் கூறிய காரணத்தை கேட்டு அவன் மயக்கம் போடாத குறை தான்.
“ஏன் டா மொத்தமா என்னை இங்க புதைச்சிட்டு போகணும்ன்னு, நீ முடிவே பண்ணிட்டியா. டேய் மாப்பிள்ளை சொன்னா கேளு டா, தங்கச்சி ஏதோ தெரியாம சொல்லிருச்சு, நீ எதுனாலும் சென்னைக்கு போனதுக்கு அப்புறம் பார்த்துக்கோ டா ” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் கெளதம்.
“நோ வே டா கெளதம், என்னை சீண்டி பார்த்துட்டா, நான் யார்ன்னு அவளுக்கு இப்போவே புரிய வைக்கணும் ” என்று கூறிக் கொண்டே, அறையின் ஜன்னல் வழியே வெளியே கௌதமையும் இழுத்துக் கொண்டு குதித்து விட்டான்.
“ஹையோ ஒரே ஒரு நண்பனை வச்சு, நான் படுற பாடு இருக்கே, சொல்ல முடியல. ஆத்தா எங்களை காப்பாத்து, ஒரு கிடா வெட்டுறேன் உன் திருவிழா அன்னைக்கு ” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே அவனோடு, அந்த இருட்டில் செல் டார்ச் மூலம் நடந்து சென்றான்.
 அந்த இருட்டில் தட்டு தடுமாறி, ஒரு வழியாக சங்கீதா வீடு அருகே நெருங்கி விட்டனர். ஆனால் அங்கே பயில்வான் போல் காவல் காக்கும் ஆட்களை பார்த்து, கெளதம் அரண்டு விட்டான்.
“டேய் வா டா திரும்ப போயிடலாம், நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே நீ சிஸ்டர் கூட டீலிங் வச்சுக்கோ. இப்போ இந்த பயில்வான் அண்ணா கூட எல்லாம், நம்மால மல்லு கட்ட முடியாது. சொன்னா கேளு டா ப்ரத்யுஷ், வா டா போகலாம் ” என்று கெளதம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
“டேய் இப்போ நீ நான் சொல்லுற மாதிரி செய்யல, அப்புறம் ஸ்ருதி கிட்ட நீ தேற மாட்டன்னு சொல்லி உன்னை டிவோர்ஸ் பண்ண சொல்லிடுவேன் ” என்று மிரட்டினான் ப்ரத்யுஷ்.
“அடேய் இப்போ தான் டா கல்யாணம் முடிவு ஆகிருக்கு எனக்கு, அதுக்குள்ள நீ இப்படி பிரிக்க வேலை பார்குற. டேய் ராசா என்ன செய்யணும் சொல்லு, அதுக்குன்னு இப்படி என் வாழ்க்கையோட விளையாடாத சொல்லிட்டேன் ” என்று கூறினான் கெளதம்.
“ஒன்னும் இல்லை ரைட் சைடு ல சங்கீதா ரூம் இருக்கு, நீ என்ன பண்ணுற அங்க அங்க சுத்திகிட்டு இருக்கிற ஆட்களை எல்லாம் ஒரு அரை மணி நேரத்திற்கு லெப்ட் சைடு ல வச்சுக்கோ. நான் அதுக்குள்ள பேசிட்டு வந்திடுவேன், யாரும் அந்த பக்கம் வராம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு ” என்று ப்ரத்யுஷ் கூறியதை கேட்டு கௌதம்க்கு மயக்கமே வந்தது.
“டேய் ஊரை விட்டு போகும் பொழுது, என்னை பார்சல் பண்ணி அனுப்ப பிளான் பண்ணிட்டியா டா. டேய் எங்க டா போற, ஹையோ இப்போ நான் இந்த பயில்வான்களை அந்த பக்கம் போக விடாம பார்த்துக்கனுமா ” என்று சலித்துக் கொண்டே, அவர்களை எப்படி திசை திருப்புவது என்று யோசிக்க தொடங்கினான் கெளதம்.
 அங்கே சங்கீதாவின் அறைக்குள் நுழையும் வழி, என்னவென்று பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரத்யுஷ். பின் பக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டு, தன்னை ஒரு பக்கம் மறைத்துக் கொண்டு எட்டிப் பார்த்தான்.
 அங்கே சங்கீதாவின் பாட்டி, வெளியே மடக்கும் கட்டில் ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு, அதில் மெத்தை, தலையணை சகிதம் அடுக்கி வெளியே படுத்து விட்டார். இதுதான் சமயம் என்று எண்ணி, அவன் சிறிது சிறிதாக சத்தம் செய்யாமல், பின் பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
“அடியே பாண்டி, ஆத்தா உன்னைதேன் முதல எழுப்பும். அதனால நீ தயாரானதுக்கு அப்புறம்தேன் என்னை எழுப்பி விடனும், இப்போவே சொல்லிபுட்டேன். அப்புறம் உன்னை எழுப்பி விட்டாய்ங்கன்னு, என்னையும் சேர்த்து எழுப்பி விட்ட அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியும் ல பிள்ளை ” என்று சங்கீதா, அவள் தோழியை மிரட்டிக் கொண்டு இருந்தாள்.
“ஆத்தா, உன்னை எழுப்பியே விடல தாயி, பாவம் டி ஆத்தா உன் மாமியார் உன்னை எப்படிதேன் சமாளிக்க போறாங்களோ. இங்கேயே இந்த துள்ளு, துள்ளுற போற இடத்துல எப்படி இருக்க போறியோ பிள்ளை ”.
“பாவம் ஆத்தா, நீ எப்படி இருக்க போறியோ அங்கன்னு இப்போவே விசனப்பட ஆரம்பிச்சிடாங்க. நீ கொஞ்சம் அடக்க, ஒடுக்கமா அங்கின போய் இருந்தா, ஆத்தாவை ஒரு குறை சொல்ல மாட்டாங்க யாரும், கொஞ்சம் யோசி பிள்ளை ” என்று அவளின் தோழி பாண்டியம்மாள் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
“ம்கும்… நான் அங்கின போய் அடக்கம், ஒடுக்கமா இருந்தா என் மாமியார் என் தலைல மிளகாய் அறைச்சிட்டு போயிகிட்டே இருக்கும். என் ஆத்தாவை யாரும் ஒரு குறை சொல்ல விடாம, நான் பார்துகிடுதேன், நீ இப்போ தூங்கு ” என்று கூறிவிட்டு, தன் போர்வைக்குள் புகுந்து படுத்துக் கொண்டாள்.
 இந்த சம்பாஷணையை அறையின் வெளியே கேட்டுக் கொண்டு இருந்த ப்ரத்யுஷிர்க்கு, தன்னவளை நினைத்து சிரிப்பு ஒரு பக்கமும், அதே போல் தாயை ஒரு சொல் யாரும் சொல்ல விடாமல் காக்கும் பொறுப்பும், தனக்கு இருக்கிறது என்பதை அழகாக அவள் சொன்ன விதம் பிடித்து இருந்தது.
“ஹே கீத்ஸ் பேபி, மாமன் உன்னை தேடி வந்து இருக்கேன். வா நாம வெளியே, ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு வரலாம் ” என்று பிரத்யுஷ் அவளின் அறைக்குள் சென்று, அவளை அழைக்கவும், சங்கீதா அரண்டு விட்டாள்.
“இங்க பாருங்க தயவு செய்து வெளியே போங்க, என்ற அப்பத்தா பார்த்தா என்னை வையும். எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம், முதல இடத்தை காலி பண்ணுங்க ” என்று வழக்கத்துக்கு மாறாக, பயந்து கொண்டே கெஞ்சினாள் சங்கீதா.
“ச என்ன கீத்ஸ் பேபி இது, சும்மா பயப்புடுற மாதிரி சீன் போட்டுக்கிட்டு. சீக்கிரம் வா, நாம வெளியே ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு வரலாம் ” என்று ப்ரத்யுஷ் விடாமல் அவளை பிடித்து இழுத்தான்.
“என்னது சீன் போடுறேனா, என்ற அப்பத்தா பத்தி உமக்கு தெரியாது, இப்போ மட்டும் உங்களை இங்கின பார்த்துச்சுன்னா, உங்களை ஒன்னும் சொல்லாது, என்னைதேன் அடி பின்னிடும். அடிக்கிரதோட நிப்பாட்டாம, ஒப்பாரி வச்சு ஊருக்கே தண்டோரா போட்டுடும் ”.
“இப்போவாவது என் பயம் என்னனு புரியுதா உமக்கு, தயவு செய்து சத்தம் போடாம வெளியே போங்களேன் ” என்று கெஞ்சினாள் சங்கீதா.
“அடி பாவி நீ தான சொன்ன, கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்தா நல்லா இருக்கும்ன்னு . வந்த உடனே ஏன் வரலன்னு என்னை அடிக்க வேற செய்த, இப்போ கூப்பிட்டா இப்படி பிளேட்டை திருப்பி போடுற ” என்று சலித்துக் கொண்டான் ப்ரத்யுஷ்.
“அதுக்குன்னு இப்படி நடு ராத்திரி ல, யாராச்சும் வருவாங்களா. சரி சரி சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க, என்ற அப்பத்தா முளிச்சிகிட்டா வம்பு ” என்று அவனை அனுப்புவதில் குறியாக இருந்தாள் சங்கீதா.
“சரி சரி கிளம்புறேன், ஆனா வந்ததுக்கு ஒரு உம்மா உன் கிட்ட இருந்து வாங்காம நான் போக மாட்டேன். சீக்கிரம் எனக்கு கொடு, வெளியே உன் friend வேற ரொம்ப நேரமா நிக்குறா ” என்று அவளிடம் கேட்டுக் கொண்டு இருந்தான்.
“என்னது உம்மாவா, ஹையோ முதல வெளியே போங்க நான் நாளைக்கு தரேன் ” என்று சங்கீதா கூறவும், அவன் முறைத்தான்.
“இவ்வளவு தூரம் வந்ததுக்கு, நான் உன் கிட்ட உம்மா வாங்காம இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் ” என்று சட்டமாக அங்கே அமர்ந்து கொண்டான் பிரத்யுஷ்.
“ஹையோ ஏனுங்க இப்படி பண்ணுறீங்க, என்ற அப்பத்தா சும்மாவே எப்போ டா இவ மாட்டுவான்னு பார்க்கும். நீங்க அதுக்கு வாய்ப்பு தர போறீங்களா, உங்க கீத்ஸ் பாவம் ல மாமா ” என்று கெஞ்சினாள் சங்கீதா.
“நீ இப்படி பேசிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா, உம்மா கொடுத்தா நானும் வாங்கிட்டு போயிகிட்டே இருப்பேன் ல ” என்று அவன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.
 அவன் இப்பொழுது, தான் முத்தம் கொடுக்காமல் இங்கு இருந்து நகர மாட்டான் என்று தெரிந்து கொண்ட சங்கீதா, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“என்ன பார்குற, நான் உள்ள வரும் பொழுதே உன் தோழி வெளியே போயிட்டா. இங்க நீயும், நானும் மட்டும் தான் தைரியமா கொடு ” என்று அவன் கூறியதை கேட்டு மனதிற்குள் சிரித்தாள்.
 அவனை கண்களை மூட சொல்லிவிட்டு, இவள் கைகளை உயர்த்திக் கொண்டு அவனை அடிக்க எண்ணுகையில், அதை எதிர்பார்த்தவன் போல், கண்களை திறந்து கொண்டான். அதன் பின் உயர்த்திய அவள் கையை, இவன் ஒரு கையால் பிடித்து விட்டு, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு, அவள் இதழில் முத்தம் ஒன்றை அழுத்தமாக பதித்தான்.
 அவனின் முத்தத்தில் சங்கீதா, மதி மயங்கி அவனோடு ஒட்டிக் கொண்டாள். இருவரும் முத்தத்தில் திளைத்து இருக்க, வெளியே நின்ற அவளின் தோழியோ ஒரு கட்டத்தில் கதவை தட்ட தொடங்கினாள்.
 அந்த சத்தத்தில் இருவரும் வேகமாக விலகினர், பின்னர் ப்ரத்யுஷ் அவளிடம் சிரித்துக் கொண்டே ஒரு தலையசைப்போடு அங்கு இருந்து சென்றான். உள்ளே வந்த அவளின் தோழி பாண்டியம்மாள், அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள்.
“டேய் எந்த எடுபட்ட பையன் டா அது, இப்படி நடு ராத்திரியில் இங்க வந்தது. டேய் மாரியப்பா, எங்க டா இருக்க. களவாணி பய வந்தது கூட தெரியாம, நீ எங்க டா காவல் காக்குற ” என்று அப்பொழுது வெளியே படுத்து இருந்த, குமுதவள்ளி பாட்டி எழுந்து கத்த தொடங்கினார்.
 அவரின் சத்தத்தை கேட்டு, வீட்டினுள் படுத்து இருந்த எல்லோரும் வெளியே வந்தனர். காவல் காப்பவர்கள் கூட சுற்றும், முற்றும் தேட தொடங்கினர், வந்தது யாரென்று.
“ஹையோ அவுக மாட்டிகிட்டாகளா பிள்ளை, சும்மாவே இந்த கிழவி வையும், இப்போ சொல்லவா வேணும். ஏய் பிள்ளை வெளியே போய், என்ன நிலவரம்ன்னு செத்த போய் பார்த்துட்டு வா பிள்ளை ” என்று இங்கே சங்கீதா, பதற்றத்துடன் தோழியை அனுப்பி வைத்தாள் வெளியே.
“அப்பத்தா யாரும் இல்லை, நல்லா தேடி பார்த்துட்டேன். என்னை மீறி அப்படி யாரு அப்பத்தா உள்ளார வர முடியும் ” என்று அந்த மாரியப்பன், தன் முறுக்கு மீசையை நீவி விடவும், இங்கே பாண்டியம்மாள் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
“அம்மோய் சும்மா நட்ட நடு சாமத்துல, நீ கனா கண்டு எல்லோரையும் பயம் காட்டாத. அப்படி எல்லாம் யாரும் உள்ளார வர முடியாது, என்ற வீட்டுக்கு பலத்த காவல் போட்டு இருக்கேன் ல. எல்லோரும் போய் படுங்க, வெள்ளன எழுந்து கிளம்பனும் ஆமா. அம்மோய் எதுக்கும், நீ உள்ளார வந்து படுத்துக்கோ ” என்று தர்மதுரை சற்று அதட்டவும், எல்லோரும் களைந்து சென்றனர்.
“அம்மாடி உன்ற ஆளு மாட்டல டி ஆத்தா, நீயும் நல்லா படுத்து தூங்கு, நானும் செத்த படுத்து தூங்குறேன் ” என்று பாண்டியம்மாள் கூறிய பிறகு தான், சங்கீதாவிற்கு நன்றாக மூச்சு விட முடிந்தது.
“ச எப்படி எல்லாம் தவிக்க விட்டுட்டாங்க, எல்லாம் என்னை சொல்லணும் அவங்களை நல்லா உசுபேத்தி விட்டுட்டு இப்போ அவஸ்தை படுறேன். ஆனா இது கூட நல்லாதேன் இருக்கு, ஹி ஹி ” என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டே, கனவுலோகத்தில் நுழைந்து கொண்டாள்.
 மறுநாள் பொழுது நன்றாக விடிந்தது எல்லோருக்கும், கல்யாண மேடையில் மாப்பிள்ளை கோலத்தில் ப்ரத்யுஷ் அய்யர் கூறும் மந்திரங்களை திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில், அய்யர் பொன்னை அழைத்து வாங்கோ என்று கூறவும், கண்கள் தாமாக தன்னவளை காண துடித்தது பிரத்யுஷிர்க்கு.
 அங்கே கூரை புடவை கட்டிக் கொண்டு, அழகு தேவதையாக நடந்து வந்து ப்ரத்யுஷின் அருகே வந்தமர்ந்தாள் சங்கீதா. மேடையில் இருவரும் கண்களால், காதல் கவி பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து சந்தோஷமாக இருந்தனர், அவர்களை சுற்றி உள்ள அன்பு நெஞ்சங்கள்.
 சிறிது நேரத்தில் அய்யர் கெட்டிமேளம் சொல்லவும், பிரத்யுஷ் தாலியை எடுத்து சங்கீதாவின் கழுத்தில் கட்டி, தன்னுடைய சரி பாதியாக்கிக் கொண்டான். திருமண சடங்கில் பட்டும், படாமல் கலந்து கொண்டவர், பிரத்யுஷின் தாய் லலிதா மட்டுமே.
“ஷப்பா டேய் பிரத்யுஷ் ஒரு வழியா உனக்கு கல்யாணம் முடிஞ்சது டா, இனி நான் கொஞ்சம் ப்ரீயா இருப்பேன் டா. சிஸ்டர் உங்களை பார்க்க நேத்து அவன் பண்ண அலும்பல் தாங்க முடியல, அடி வாங்கி இருக்க வேண்டியது நானு, ஜஸ்ட் மிஸ் ”.
“இனிமேல் எதுனாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க சிஸ்டர், உங்களுக்கு புண்ணியமா போகும் ” என்று கெளதம் கூறியதை கேட்டு கலகலவென்று சிரித்தனர், பிரத்யுஷும், சங்கீதாவும்.
“டேய் மாப்பிள்ளை, இனி தான் டா நீ எங்களுக்கு நிறைய ஹெல்ப் செய்யணும் ” என்று பிரத்யுஷ் ஆரம்பிக்கவும், கெளதம் அந்த இடத்தை விட்டு, வேகமாக நகர்ந்து சென்றான்.
 நண்பர்கள், உறவினர்கள் என்று சில பல கலாட்டாகளோடும். பெரியவர்களின் ஆசியோடும் அந்த திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அதன் பின் அன்றே, சங்கீதாவை அழைத்துக் கொண்டு ப்ரத்யுஷ் வீட்டினர் சென்னை பயணம் செய்தனர்.
“ஐயா, ஆத்தா, அப்பத்தா நான் போயிட்டு வாரேன். ஏய் பிள்ளை பாண்டி, எங்க அப்பத்தா, ஆத்தா, ஐயா எல்லோரையும் நல்லா பார்த்துக்கோ பிள்ளை ” என்று சங்கீதா கிளம்பும் முன், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
“அடியே சங்கீதா, போற இடத்துல வாயை கொஞ்சம் குறை. அங்கேயும் போய் வாயை கொடுத்துகிட்டு இருக்காத, மாப்பிள்ளை கொஞ்சம் அவளை கண்டிச்சே வைங்க ” என்று சங்கீதாவின் பாட்டி குமுதவள்ளி கூறவும், சங்கீதா முறைத்தாள்.
“ஹே கிழவி, உனக்கு வர வர ரொம்ப குசும்பு ஜாஸ்தி ஆகிடுச்சு. முதல உன்னைதேன் என்ற அப்பாரு கண்டிக்கனும், ஊரு ல வம்பு பேசாம நீ இரும் முதல ” என்று பதிலுக்கு ஒரு பிடி பிடித்துவிட்டே அங்கு இருந்து சென்றாள் சங்கீதா.
 பிரத்யுஷின் தாய், தந்தை மற்றும் சில உறவினர்கள் முதல் காரில் செல்லவும், பின்னாடி இவர்கள் இருவர் மட்டும் அவனின் bmw வண்டியில் சென்னையில் அவன் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
 களைப்பின் காரணமாக இருவரும், வண்டியில் உறங்க தொடங்கினர். சென்னையில் பிரத்யுஷ் வீடு வரவும், சங்கீதாவை எழுப்பி விட்டான். ஏற்கனவே ஒரு முறை, அவனுக்கு அடி பட்டு இருக்கும் பொழுது வந்து இருந்தாலும், திருமணமாகி அவனோடு சேர்ந்து வந்து, வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது சிலிர்த்தாள் சங்கீதா.
 தன்னவளை அழைத்துக் கொண்டு, வீடு வந்து சேர்ந்த அவனுக்கும் மனதில் சந்தோஷ சாரல் அடித்தது. அடுத்து பிரத்யுஷின் தாய், பேசிய பேச்சில் அங்கு சூழ்நிலை சற்று மாறியது.
 அத்தியாயம் – 10
 கண்ணாடி முன் நின்று, தன்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு இருந்தாள் சங்கீதா. தேனிலவிற்கு, இருவரும் கொடைக்கானல் வந்து இருந்தனர்.
“ஹே கீத்ஸ் செல்லம் நீ அழகா தான் டா இருக்க, இன்னும் எவ்வளவு நேரம் தான் கண்ணாடி முன்ன நிற்க போற ” என்று கிண்டலாக கேட்டான் பிரத்யுஷ்.
“ரொம்பத்தேன் உங்களுக்கு மாமா, இப்போதேன் வந்து நிக்குறேன். எல்லாம் சரியா இருக்கான்னு, ஒரு முறை பார்குதேன் அம்புட்டுதான். எல்லாம் தெரிஞ்சே என்னை சீண்டி பார்குரீக நீங்க ம்கும்…” என்று நொடித்துக் கொண்டாள் சங்கீதா.
“போதும் டி கழுத்து சுளுக்கிக்க போகுது, ஆனாலும் உன் கிட்ட இனி நான் ஜாக்கிரதையா தான் இருக்கணும். கல்யாணம் முடிஞ்சு வந்த அன்னைக்கே, நீ பட பட பட்டாசா பொரிஞ்சி தள்ளிட்ட என் அம்மா கிட்ட, இனி என் பாடு திண்டாட்டம் தான் ” என்று அவளை பிடித்துக் கொஞ்சிக் கொண்டே சீண்டினான் பிரத்யுஷ்.
“மாமா போதும், நானும் பார்த்துகிட்டே இருக்குதேன், என்னை ரொம்பதேன் சீண்டுறீங்க, இங்க வந்தது ல இருந்து. என்னமோ நான் மட்டும் பட்டாசா பொரிஞ்ச மாதிரி, ஏன் மாமா சீன் போடுறீக. நீங்கதேன் முதல அயித்தை சொன்னதுக்கு, பதிலுக்கு பொரிஞ்சி தள்ளிடீங்க ”.
“அப்புறம் அவிக என்ற அப்பாரை இழுக்கவும்தேன், நான் பதிலுக்கு பேச வேண்டியதா போச்சு. ஆனா எனக்கு இன்னும் சங்கடம்தேன், வந்த உடனே இப்படி அயித்தையை பேசிபுட்டோமேன்னு ” என்று வருந்தினாள் சங்கீதா.
“ஹே சும்மா வருத்தப்பட்டுகிட்டு, கொஞ்சம் ரிவைண்ட் பண்ணி பாரு, அன்னைக்கு அவுங்க அப்படி பேசலைனா நாம ஏன் பேசி இருக்க போறோம் ” என்று பிரத்யுஷ் அவளை சமாதானப்படுத்தினான்.
 அன்றைக்கு திருமணம் முடிந்து, சென்னைக்கு தன் கணவருடன் தங்கள் வீட்டிற்குள் நுழைந்த தினத்தை நினைத்து பார்த்தாள் சங்கீதா.
“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க ரெண்டு பேரும் ” என்று பிரத்யுஷின் தங்கை ப்ரீத்தி, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றாள்.
“அண்ணி வாங்க, முதல விளக்கு ஏத்துங்க ” என்று ப்ரீத்தி சங்கீதாவையும், ப்ரத்யுஷையும் அழைத்துக் கொண்டு, பூஜை அறைக்கு அழைத்து சென்றாள்.
 அந்த பூஜை அறையில், மனதார இருவரும் கடவுளிடம் தங்கள் வாழ்க்கை இனி சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்து விட்டு வெளியேறினர்.
 அங்கு இருந்த மூத்த பெண்மணிகள், ப்ரீத்தியிடம் அவர்களுக்கு பாலும், பழமும் கொடுக்க கூறினர். அங்கு இருந்த அந்த காலத்து மர ஊஞ்சலில், இருவரையும் அமர வைத்து பாலும், பழமும் கொடுத்தனர்.
 இளையவர்கள் இவர்களை கிண்டல் செய்து, அந்த இடத்தையே கலகலப்பாக்கிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு ப்ரத்யுஷின் தாய் லலிதாவின் சங்கத்து தோழிகள், இவர்களை வாழ்த்த ( வம்பு பேச ) வந்து இருந்தனர்.
“என்ன லல்லி, உன் மருமக ஒரு பட்டிக்காடு கிராமம்ன்னு கேள்விப்பட்டேன். நீ இங்கிலீஷ் பேசினா அவளுக்கு புரியுமா, இல்லை உன் பையன் பேசுற பிசினஸ் புரியுமா ” என்று அவர்கள் ஆங்கிலத்தில், ஒவ்வொருவராக அவரை உசுப்பேத்திக் கொண்டு இருந்தனர்.
 பக்கத்தில் இருந்த லலிதாவின் கணவர் மூர்த்தி, இதை கேட்டு கொதித்து விட்டார்.
“எறிர எண்ணெயில் கூட கொஞ்சம் ஊத்தி, கொளுத்தி போடுறாங்க. இவளுக்கு மட்டும் எங்க இருந்து தான், இப்படி தோழிகள் கிடைக்குறாங்களோ. ஒரு வேலை இவங்க இப்படி சொல்ல போய் தான், லலிதாவுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்து இருக்குமோ ”என்று யோசிக்க தொடனினார்.
 அதற்குள் அங்கே அவர்களின் தூபத்தில் லலிதா பொரிய தொடங்கினார்.
“இதுக்கு தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன், ஏங்க நீங்க கேட்டீங்களா. ஒரு பட்டிக்காடு நம்ம குடும்பத்துக்கு சரி வர மாட்டான்னு, அவனும், நீங்களும் என்ன கண்டீர்களோ இந்த பட்டிக்காடு கிட்ட, இவ தான் வேணும்ன்னு பிடிச்சு கூட்டிட்டு வந்துடீங்க ”.
“இப்போ பாருங்க, உங்களால நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம். முதல அவளை நீ அவங்க வீட்டுக்கே அனுப்பு டா ப்ரத்யுஷ், இவ இங்க இருக்க இருக்க நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம் ” என்று ஆத்திரத்தில் என்ன ஏதென்று யோசிக்காமல், அங்கு எல்லோரும் கூடி இருக்கும் சபையில் கத்தியே விட்டார்.
“மாம், ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். என்ன சும்மா சும்மா நீங்க அவளை பட்டிக்காடுன்னு திட்டுறீங்க, அவ என் பொண்டாட்டி அவளை இப்படி சபையில் நீங்க திட்டுறது சரியில்லை சொல்லிட்டேன் ”.
“முதல இந்த கூட்டத்தை நீங்க டிஸ்போஸ் பண்ணுங்க, they have no rights to comment on my life It is disgusting. நீங்க முதல என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேளுங்க அம்மா, இனி நீங்க அவளை இப்படி பேசுநீங்கன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன் ” என்று ப்ரத்யுஷ் பதிலுக்கு கத்தினான்.
“ஹ்ம்ம்… என்ன டா மந்திரம் போட்டா உனக்கு அவ, இப்படி கல்யாணம் முடிஞ்ச உடனே அம்மாவை எல்லோர் முன்னடியும் திட்ட கத்து கொடுத்துட்டா போல. ஏண்டி உங்க அப்பா, அம்மா இதை தான் உனக்கு சொல்லி கொடுத்து விட்டாங்களா ”.
“ஆமா உங்க அப்பா உன்னை அப்படி புகழ்ந்தாரு, இப்படி குடும்பத்தை குலைக்க தான் உனக்கு சொல்லிக் கொடுத்தாரோ. வீட்டுக்குள்ள வந்த அன்னைக்கே, இப்படி ஒரு தரித்திரத்தை எங்க தலையில் கட்டிட்டாரு உங்க அப்பன் ” என்று அவர் சங்கீதாவின் தந்தையை தரம் இறக்கி பேசவும், பொங்கி விட்டாள் சங்கீதா.
“அயித்தை என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போறீங்க, நானும் அப்போ பிடிச்சு பார்க்குதேன் உங்க பேச்சே சரியில்லை. என்ற அப்பாரை பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை தெரிஞ்சிக்கோங்க ”.
“என்னை என்ற வீட்டுல்ல நல்லாதேன் வளர்த்து இருக்காங்க, உங்க தோழிகள்ன்னு நீங்க சொல்லிட்டு இருக்கீங்களே அவிகதேன் சரியில்லை தெரிஞ்சிக்கோங்க. அடுத்த வீட்டுல என்ன நடக்குதுன்னு, வேவு பார்த்துட்டு இருக்கிறதே பொழைப்பா வச்சு இருக்காங்க போல ” என்று சங்கீதா கூறியதை கேட்டு, அவரின் தோழிகள் பொங்கி விட்டனர்.
“என்னமா பொன்னே, பட்டிக்காடுன்னு சரியாதான் இருக்கு. இங்க அவளுக்கும், அவ பிள்ளைக்கும் தான் வாக்குவாதம் நடக்குது, அதுவும் உன்னால, நீயா வெளியே போனா புத்திசாலி. உனக்கு எங்க புரிய போகுது, புரிஞ்சு இருந்தா இந்நேரம் நீ வெளியே போய் இருக்க மாட்ட ” என்று லலிதாவின் தோழிகள், ஆளாளுக்கு அவளை விரட்ட நினைத்து, பேசிக்கொண்டே இருந்தனர்.
“I will just count till 3, just get out from here. Otherwise u ppl have to face the consequences, just get out ” என்று சங்கீதா ஆங்கிலத்தில் அழுத்தமாக, அவர்களை ஒரு பார்வை பார்த்து பேசவும், அவளின் ஆங்கில புலமையில் வாயடைத்து போய், உடனே அந்த இடத்தை காலி செய்தனர்.
“அயித்தை இன்னொரு தடவை என்ற அப்பாரையும், ஆத்தாவையும் தரை குறைவா பேசுநீங்க தெரிஞ்சது அம்புட்டுத்தேன், உங்க பிள்ளையை விட்டு என்ன செய்யணுமோ எல்லாம் செய்திடுவேன் ” என்று அழுத்தம் திருத்தமாக பேசவும், அவர் ஒன்றும் பேச முடியாமல் வாயடைத்து போய் நின்று விட்டார்.
 அதன் பின்னர் தந்தையின் கண்ணசைவில், ப்ரீத்தி மணமக்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அவர்களின் அறைக்கு அழைத்து சென்றாள்.
“லல்லி இது நீயா பேசலன்னு தெரியுது, உன் சேர்க்கை அப்படி. இத்தனை நாள் உன்னை நான் கவனிக்காம விட்டது என் தப்புன்னு, இப்போ எனக்கு நல்லா புரியுது. இனி நான் சொல்லுறதை கேளு, முதல இந்த லேடீஸ் கிளப் போறதை நிப்பாட்டு ”.
“நம்ம பையன் மறுவீடு எல்லாம் போயிட்டு வரட்டும், நாம தனியா உலக சுற்றுப்பயணம் போகலாம். நமக்கான நேரத்தை இனி நாம செலவு செய்யலாம், சீக்கிரம் நமக்கு பேரன், பேத்தி வருவாங்க, அவங்க கூட நாம நேரத்தை செலவு செய்யலாம் ” என்று மூர்த்தி அவரை தாங்கி பேசவும், லலிதாவோ தன் செய்கையை அப்பொழுது தான் முழுமையாக உணர்ந்தார்.
 தான் இவ்வளவு தூரம் பேசியும், கணவர் தன் மேல் தப்பு இல்லை, நீ தேடிக் கொண்ட சேர்க்கை தான் தவறு என்று அடித்து கூறி தன்னை சமாதானப்படுத்தும் அவரின் நல்ல உள்ளத்தை கண்டு வியந்தார். இப்படி ஒரு நல்ல கணவர் எத்தனை பேருக்கு கிடைப்பர், தனக்கு நல்ல குடும்பத்தை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
 இனி தன் குடும்பத்து சந்தோஷம் தான், தன் சந்தோஷம் என்று எண்ணி கணவர் காட்டிய பாதையில் நடக்க முடிவு செய்து கொண்டார்.
 மாடியில் இருக்கும் அவர்களின் அறைக்கு வந்த மூவரும், என்ன பேசுவது என்று தெரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். பின்னர் அந்த அமைதியை கலைத்து, ப்ரீத்தி பேச தொடங்கினாள்.
“அண்ணி தப்பா எடுத்துக்காதீங்க, எங்க அம்மா நல்லவங்க தான். ஆனா அவுங்க சேர்க்கை சரியில்லாததால அவங்களே என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேசிட்டாங்க, அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் ” என்று ப்ரீத்தி மன்னிப்பு கேட்கவும், சங்கீதா வேண்டாம் என்றாள்.
“ஹையோ அண்ணி நீங்க போய் ஏன் மன்னிப்பு கேட்குறீங்க, அயித்தை அப்படி பேசினது வருத்தம்தேன். ஆனா அவிகளா அப்படி பேசலைன்னு எனக்கு தெரியும், அயித்தையை பத்தி எங்க அப்பத்தா ஏற்கனவே சொல்லி விட்டாங்க. நீங்க கவலை படாதீங்க, ஆமா உங்க குட்டி பொண்ணு எங்க அண்ணி ”என்று சங்கீதா கேட்கவும் தான் அவளுக்கு, தன் மகள் கீதாஞ்சலியின் நினைவு வந்தது, உடனே அவளை தேடி சென்றாள்.
“ஆமா உனக்கும், உங்க அப்பதாவுக்கும் தான் ஏழாம் பொறுத்தமாச்சே, அவுங்க எப்போ உன் கிட்ட எங்க அம்மாவை பத்தி பேசினாங்க ” என்று சங்கீதாவிடம், தன் சந்தேகத்தை எழுப்பினான் ப்ரத்யுஷ்.
“என்ற அப்பத்தா ரொம்ப நல்லவங்க தெரியுமா, அந்த காலத்திலையே அவிக காதலிச்சாங்க. ஆனா அவங்க காதல், ஊர்ல சில பேரோட சாதி வெறியினால நிறைவேறாம போயிடுச்சு ”.
“அது மட்டும் இல்லாம உடனே எங்க தாத்தாவுக்கும், அவங்களுக்கும் கல்யாணம் பண்ணி முடிச்சிட்டாங்க. எங்க தாத்தா ரொம்ப நல்லவங்க, எங்க பாட்டி மனசை புரிஞ்சிக்கிட்டு, அவுங்களுக்காக காத்துகிட்டு இருந்தாங்க ”.
“ஒரு நாள் அவுங்க காதலிச்சவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, இவுங்க முன்னாடி வந்து நின்னாங்க. நம்மளாள தான் ஒன்னு சேர முடியல, நம்மள நம்பி வந்தவங்களை நாம காக்க வைக்க கூடாதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க ”.
“எங்க பாட்டியினால உடனே எங்க தாத்தாவை ஏத்துக்க முடியல, ஆனா எங்க தாத்தாவோட பொறுமையும் அன்பும் எங்க பாட்டியை மாத்திடுச்சு. அப்புறம் ரொம்ப நாளைக்கு ரெண்டு பேரும், ரொம்ப அந்நியோனியமா இருந்து இருக்காங்க. எங்க சின்ன அயித்தை பிறந்ததுக்கு அப்புறம், ஒரு நாள் புல்லட் ல போகும் பொழுது விபத்து நடந்து என்ற தாத்தா உயிரை விட்டாங்க ”.
“அப்புறம் எங்க அப்பத்தாதேன், எல்லோரையும் நல்லபடியா வளர்த்து விட்டாங்க. ஊர்ல என்ற குடும்பம் இன்னைக்கு பேரும், புகழோடு இருக்குன்னா, அதுக்கு என்ற அப்பத்தாவும் ஒரு காரணம்தேன் ”.
“ஆட்களை எடை போட என்ற அப்பத்தாவுக்கு நிகர் அவிகளேதேன். அயித்தையை பத்தி நேத்து, என் கிட்ட முழுசா சொல்லிபுட்டாங்க. ஆனாலும் இன்னைக்கு நான் செத்த கோவமா பேசிப்புட்டேன், அதேன் எனக்கு வருத்தமா இருக்கு ” என்று அவள் வருத்தம் கொள்ளவும் அவன் சமாதானப்படுத்தினான்.
 இதை எல்லாம் நினைத்து பார்த்தவள், அவனை பார்த்து சிரிக்க தொடங்கினாள்.
“என்ன சிரிப்பு பலமா இருக்கு, என்னை பத்தி தான் ஏதோ நினைச்சு இருக்க போல என்ன கீத்ஸ் பேபி நினைச்ச அப்படி, இந்த மாமனை பத்தி ” என்று கேட்டான் ப்ரத்யுஷ்.
“இல்லை வருத்தமா இருக்குன்னு நான் சொன்னதுக்கு அப்புறம், நீங்க என்னை சமாதானப்படுத்தின அழகை நினைச்சு சிரிப்பு வந்திடுச்சு மாமோய் ” என்று சங்கீதா கூறவும் அவன் முறைத்தான்.
“எங்க அப்போதான் நல்ல சான்ஸ் கிடைச்சது உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்க, சரியா மூக்குல வேர்த்த மாதிரி அப்போ பார்த்து எங்க அம்மா வந்து உன்னை கட்டி பிடிச்சு மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க ”.
“சரி எப்படியும் அன்னைக்கு நமக்கு முதலிரவு நடக்கும், நாம அப்போ பார்த்துக்கலாம் பார்த்தா, தூக்கம் வருதுன்னு நல்லா தூங்கிட்ட நீ. ”
“அப்புறம் மறுவீடு, அது இதுன்னு ஏகப்பட்ட சம்பிரதாயம் வச்சு மனுஷனை ரொம்ப சோதிச்சிட்டாங்க. ஒரு வழியா நேத்து இங்க வந்ததுக்கு அப்புறம் தான், உன்னை பக்கத்துலயே பார்க்க முடிஞ்சது ” என்று பெருமூச்சு விட்டு அவன் கூறியதை கேட்டு, அவள் சிரித்தாள்.
“அதேன் நான் உங்க பக்கத்துல வந்துட்டேன் ல மாமா, அப்புறம் என்ன இனி உங்களோடதேன் இருக்க போகிறேன் ” என்று கூறி கலகலவென்று சிரித்தாள்.
 அவளின் சிரிப்பை ரசனையோடு பார்த்துவிட்டு, அவளை கொஞ்ச தொடங்கினான். அவளும் பதிலுக்கு அவனுக்கு ஈடு கொடுத்துக் கொண்டு இருந்தாள், தன் காதலால்.
 சங்கீதா அவளின் பெயருக்கு ஏற்றது போல், ப்ரத்யுஷிற்கு காதலை சொல்லிக் கொடுத்து, காதலின் சங்கீதத்தை அவனுக்கு கற்றுக் கொடுத்து அவனோடு சேர்ந்து பயணித்தாள்.
காதல் சங்கீதம் பேசியது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!