KSE-FINAl

அத்தியாயம் – 8

அரவிந்துக்கு போன் செய்து முழுதாக இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருந்தது. அவன் வரவேயில்லை.

நாளை சத் பூஜை. பாட்னா மக்களின் முக்கிய பூஜை. “இன்று எப்படியும் அரவிந்த் வருவான்” என பாட்டி கூறியிருந்தார்.

விடியற்காலமே சூரியனை நமஸ்கரிக்க மக்கள் எல்லாரும் இன்று மாலையே கங்கையை நோக்கி சென்று விடுவார்கள்.

அன்று இரவு முதல் விரதம் இருந்து காலையில் கங்கையில் குளித்து, சூரிய நமஸ்காரம் நடக்கும்.

இன்று மதியம் வரை அவன் வரவே இல்லை. பாட்டி வேறு அவளுக்காக புது புடவை ஒன்றை கையில் கொடுத்து அணிந்து வரக் கூறினார்.

சிகப்பு வண்ண புடவை. கிளாஸ் ஒர்க் அத்தனை அழகாக இருந்தது. கைகளில் வைத்து வருடிக் கொண்டாள் மிது.

குளித்து முடித்து அந்த புடவையை அணிந்து கண்ணாடி முன் அமர்ந்திருந்து தலை வாரிக் கொண்டிருந்தாள்.

பூவை கையில் எடுக்கவும், அவள் கையில் இருந்து பூவை  வாங்கிய அரவிந்த் அவள் தலையில் சூடி, அப்படியே அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவளைப் போலவே சிகப்பு வண்ண குர்தாவும், வெள்ளை நிற வேட்டியும் கட்டியிருந்தான். புதிதாக சிகப்பு நிற குல்லா ஒன்று தலையில் இடம் பிடித்திருந்து. நெற்றியில் சிகப்பு நிற பொட்டும் வைத்து அத்தனை அழகாக இருந்தான் அவன்.

கண்ணாடியில் அந்த முகத்தையே பார்த்திருந்தாள் மிது. அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அங்கிருந்த பொட்டை எடுத்து அவளின் நெற்றியில் வைத்துவிட்டு, அவளின் புடவை முந்தானையை எடுத்து தலையில் போட்டுவிட்டான்.

இப்பொழுது அவளை கண்ணாடி நோக்கி திருப்பியவன். ஏதோ நினைவு வந்தவனாக, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறு டப்பாவை கையில் எடுத்தான்.

அவனையே பார்த்திருந்தாள் மிது. அதை திறந்து அதில் இருந்த, பாசி கோர்த்த மெல்லிய ஒட்டியாணத்தை  எடுத்தவன், அவளின் இடுப்பில் மெதுவாக அணிவித்து விட்டான்.

அவளின் பார்வை ஆச்சரியமாக அவனை நோக்கியது. அவளின் பார்வையைக் கண்டவன் “அன்னைக்கு நீ கோவிலுக்கு வரும்போது சாரி கட்டி இருந்ததை பார்த்தேன். அப்போ தான் உன் இடுப்பில் எதுவோ குறைந்ததுப் போல் தெரிந்தது” மெதுவாக கூறினான்.

இப்பொழுது அவள், நேரடியாக அவனை முறைக்க,

“ஐயோ தப்பா எல்லாம் பார்க்கல… அழகா இருந்தது அது தான் கண்ணு கொஞ்சம் சிலிப் ஆகிட்டு”

“கண்ணு அங்க தான் சிலிப் ஆகுதா?” முறைக்க,

அவளை கூல் பண்ணும் பொருட்டு “இப்போ தான் ரொம்ப அழகா இருக்க நீ… அதிலும் நான் ரசிக்கும் சங்க கால அழகிகள் போல் இருக்க” கூறியபடியே மெதுவாக அவள் கன்னத்தில் தன் இதழைப் பதித்தான் அரவிந்த்.

இத்தனை நேரம் பேசியதை கூட பொறுத்துக் கொண்டாள். மீண்டும் அவன் சங்க கால அழகிகளை கூறவும், அவனை ஒரே முறைப்பில் தள்ளி விட்டிருந்தாள்.

“இப்படியே நீ பேசிட்டு இருந்த. எந்த அழகியும் உன்னை பார்க்கமாட்டா?” திட்டியபடியே வெளியில் சென்று காரில் அமர்ந்துக் கொண்டாள்.

“டேய் ஏன்டா இப்படி சொதப்புற, இனி என்ன சொல்லி அவளை சமாளிக்க” தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டவன், பாட்டியை அழைத்துக் கொண்டு பூஜைக்கு சென்றான் அரவிந்த்.

கார் அமைதியாக சென்றது. மெல்லிய குரலில் இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.

அந்த இரவு ஏகாந்த நேரம், வெளியில் குட்டி, குட்டி  விளக்குகளுடன் பாட்னா ஜொலித்துக் கொண்டிருந்தது. அன்று ரசிக்காத இடங்களை இன்று ரசித்துப் பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தாள் மிது.

சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி விட்டிருந்தான் அரவிந்த்.

மிது புரியாமல் வெளியே பார்த்தாள். கூட்டம் கூட்டமாய் மக்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கங்கையை சுற்றி நிறைய கூடாரம் அமைக்கப்பட்டு  விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அவளை இறங்கும்படி கூறியவன், புரியாமல் முழித்தவளிடம் “இங்க தான் சத் பூஜை நடக்கும். பாட்னா மக்கள் எல்லாரும் இங்கு தான் குழுமி இருப்பர்” மெதுவாக உரைத்தான்.

அதற்குள் பாட்டியை ஒருவர் அழைக்க, அவருடன் நடந்தார் அவர்.

“இங்க தான் நடக்குமா?”

“ஆமா, காலையில் எழுந்து சூரியனை இங்கிருந்து வணங்கினால். மனசில் என்ன வேண்டிகிட்டு அந்த பூஜை செய்தாலும் வேண்டுதல் நிறைவேறும்.

ஒரு நாள் முழுதும் விரதம் இருந்து, இந்த பூஜையை செய்வாங்க. பூஜை முடியும் வரை இங்க தங்கி இருந்து பண்ணுவாங்க.

பூஜை முடியவும், விளக்கை நீரில் விட்டு, இங்கயே சமைச்சு சாப்பிட்டு வீட்டுக்கு போவாங்க. இது இங்குள்ள மக்களின் பெரிய விசேஷம்”

அரவிந்த் சொல்லச் சொல்ல அங்கிருந்த மக்களைப் பார்த்தாள் மிது. ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் கூட்டமாய் அமர்ந்திருந்தனர்.

நிறைய ஆண்கள் அரவிந்த் போல் கலர், கலராக குல்லா அணிந்திருந்தனர். அது அவர்கள் வழக்கம் என்று கூறினான்.

பெண்கள் வண்ண வண்ண நிறத்திலான உடைகளை அணிந்திருந்தனர். அவர்களின் தலையை ஒரு துணி போர்த்தி இருந்தது. கைகளில் நிறைய வளையல்கள் அடுக்கி இருந்தனர்.

அங்கிருந்த மக்கள் பெரும்பாலும் நிறைய பேர், அரவிந்தை வணங்கிச் சென்றனர். மிதுவுக்கு அவன் அருகில் நடக்கவே அத்தனை பெருமையாக இருந்தது.

அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு டஜன் வளையல் இருக்க, அவர்களைப் போல் வளையல் அணிய ஆசை வந்தது மிதுவுக்கு.

‘இவனிடம் எப்படி கேட்க என்று’ அமைதியாக அவனுடன் நடந்து வந்தாள். அவன் தான் அவளின் எண்ணவோட்டத்தை அறிந்துக் கொள்பவன் ஆகிற்றே?

“மிது, வாரியா அங்க ஒரு அண்ணா நிறைய கலர் கலர் வளையல் வச்சுருப்பாங்க. உனக்கு வாங்கி தாரேன்” அவளின் கை பிடித்து அழைத்து சென்றான்.

இப்பொழுது நேரடியாக அவனை ரசித்தாள் அவள். அவரிடம் சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற வளையலை வாங்கியவன்.

அவளை நோக்கி தன் கையை நீட்டினான். தன் கையை அவன் கையில் அவள் வைக்க, அவளை அப்படியே அழைத்துக் கொண்டு தங்களுக்கான கூடாரம் அருகில் சென்றான் அரவிந்த்.

அவனையே யோசனையுடன் பார்த்தபடி நடந்தாள் மிது.

கூடாரம் அருகில் வந்தவன் அப்படியே அந்த தண்ணீர் தெளித்த மண்ணில் அமர, தன் முன்னே அவளையும் அமரவைத்தான்.

இப்பொழுது வளையல் ஒவ்வொன்றாக பிரித்தவன், அதை பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறம் என அடுக்க, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

இங்கு வந்த நாள் முதற்கொண்டு அவளின் தேவைகளை அவன் தான் நிறைவேற்றுகிறான். இவளின் கண் பார்வையில் எல்லாம் உணர்ந்துக் கொள்கிறான்.

இப்பொழுதோ அவளின் கையை அலங்கரிக்க, வளையலை அழகூட்டுகிறான்.

அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் சொதப்பலாக இருந்தாலும், கடைசியில் இவள் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறான்.

பதினெட்டு வளையலாக இரு கைக்கும் நிறத்தை     அடுக்கியவன், இப்பொழுது அவளின் கைக்காக தன் கையை அவள் முன் நீட்டி இருந்தான்.

தன் கையை அவன் முன் நீட்ட, மெதுவாக ஒவ்வொரு வளையலையும் அவளின் அழகு கைகளில் பூட்டினான் அரவிந்த்.

“இளம் வயசு பொண்ணை வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனசத் தொட்டு மயங்க வச்சி வளைக்கப் போறேன்.. அடி போட்டுக்கடி பொன் வளவி பூட்டிக்கடி நான் போட்ட பின்னே பாரு நீ பொன்னு மணி தேரு…” அவனின் இதழ்களோ மெதுவாக இசைத்தன.

அவன் வளையலை அணிவித்து முடிக்கவும், அவன் கையில் இருந்து தன் கையை வேகமாக விடுவித்தாள் மிது.

அவனின் பாடலோடு, அவனின் கை ஸ்பரிசம் அவளை எதுவோ செய்ய, இருக்கைகளையும் கொண்டு முகத்தை மறைத்தாள் அவள்.

அவளின் இச்செயல் அவன் முகத்தில் புன்னகையை  தோற்றுவித்தது. அவளின் கையை எட்டிப்பிடிக்க, அவன் கையை தட்டிவிட்டு கங்கையை நோக்கி ஓடினாள்.

அவளின் வளையல் ஓசை அவன் இதயம் தீண்டி சென்றது.

காலையில் எழவும் அவன் காதில் இன்னிசையாக ஒலி எழுப்பியது அவன் அணிவித்த கண்ணாடி வளையல்கள்.

குளித்து முடித்து, பச்சை நிற புடவையை அவள் அணிய, அவன் அவள் நிறத்தில் குர்தா அணிந்துக் கொண்டான்.

இருவரும் நெற்றியில் குங்குமத்தை பூசிக் கொண்டு சூரியனைத் தொழுது, மனதில் “இதே காதலோடும், சீண்டலோடும் பல வருடம் வாழ வேண்டும்” என்ற வேண்டுதலுடன் விளக்கை நீரில் மிதக்க விட்டனர்.

தனி, தனியாக நீரில் மிதந்த விளக்கு, கொஞ்சம் தள்ளி ஒன்றை ஓன்று உரசிக் கொள்ள.

மிதுவின் கைகளோ, அரவிந்த கைகளோடு உரசி காதல் பாடியது.

அவளை நோக்கி திரும்பியவன், அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “சென்னை போனதும் நமக்கு திருமணம்” என்ற இனிப்பான செய்தியை கூறி அவள் நெற்றியில் இதழ் பதிக்க,

“கல்யாணத்தையாவது சொதப்பாமல் நடத்துவீங்களா மிஸ்டர் அரவிந்த்”

“ஏன்டி கிண்டலா பண்ணுற” அவள் கையை பற்ற வர, அவனை அந்த மணலில் தள்ளி விட்டு ஓடினாள் மிது.

அவளை துரத்தி பிடித்தவன், அவளை பிடித்திழுக்க, அவன் மேல் மோதி, இருவரும் ஒன்றாக மணலில் விழுந்து, இருவரின் ரயில் பயணத்தை எண்ணி மாறி மாறி முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சூரிய பகவான் கொஞ்சம் கொஞ்சமாய் தன் ஒளியை அவர்கள் மேல் வேகமாக வீச ஆரம்பித்தான்.

………………………………….சுபம்………………………………..