Kumizhi-10

Kumizhi-10

மௌனம் – 10

உத்தங்குடியில் ஒற்றை அறை கொண்ட கிராமத்து ஒட்டு வீடு, பின்புறம் கிணற்றுடன் கூடிய புழக்கடையும், கொல்லைப்புறமும் அமைந்திருக்க, அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் புதிய, புரியாத பார்வைகளை சந்தித்த வண்ணம் தாயும் மகளும் தனிக்குடித்தனம் ஆரம்பித்திருந்தார்கள்.

தங்கள் தேவைகளாக இருந்த சொற்ப பொருட்களுடன், சிவனியாவின் படிப்பு சம்மந்தமான புத்தங்கள் இருந்த சிறிய மரப்பீரோ மட்டுமே அவர்கள் சொத்தாக இருக்க, இரவோடு இரவாக ரவி அதனை அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தான்.

தொடர்ந்து வந்த நாட்களில் வீட்டிற்கு மிக அத்தியாவசியமான பொருட்களை வாங்கியவர்கள், அமைதியான மனநிலையுடன் அந்த வீட்டில் பொருந்த முயற்சி செய்தனர்.

செங்கமலத்தின் மனம் முழுவதும் ஏதோ ஒரு பயபந்து உருண்டு கொண்டே இருந்தது. மகளைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், நடந்தவைகளை மீண்டும் யாராவது கேட்டு சங்கடப்படுத்தி விடுவார்களோ என எந்நேரமும் பயந்து கொண்டிருந்தார். அதனாலேயே அக்கம் பக்கத்தில் பேசுவதை கூட நிறுத்தி விட்டார்.

திருமண வயதை எட்டிப் பார்த்திருக்கும் அவளது வயதும் சேர்ந்து அவரது கவலையை அதிகமாக்கியது. என்ன மாதிரியான மாப்பிளையை, எப்படி போய் தேடுவது என்ற யோசனையை இப்பொழுதில் இருந்தே மனதில் உரு போட ஆரம்பித்திருந்தார்.

கையிருப்பாய் இருந்த சேமிப்புகள் கரைய ஆரம்பித்திருந்தன. நல்லதொரு வருமானத்திற்க்கு முதலில் வழி வகுத்துக் கொள்ளும் முயற்சியில் பக்கத்து அரிசி ஆலையில் தற்காலிக வேலைக்கு சேர்ந்தார். மனம் முழுவதும் பல வித குழப்பங்கள் அலைமோத நாட்களை கடத்த ஆரம்பித்திருந்தார்.

இத்தனை வருடங்களில் இவ்வளவிற்கு தன் மனதை அலைபாய விட்டதில்லை செங்கமலம். பாண்டியனின் வீட்டில் இருந்த போது, தன் வரவு செலவுகளை, தன் வருமானத்தை கொண்டே பார்த்துக் கொண்டாலும், அப்போதிருந்த மனமுதிர்ச்சி இப்போது காணாமல் போய் இருந்தது. மகளை பற்றிய எந்தவொரு கவலையும் அங்கே இருந்த போது யோசித்ததில்லை.

வீட்டைக் விட்டு வெளியே வராத கூண்டுகிளியாய் இருந்த செங்கமலம், ஒரு வேகத்தில் காதல் மணம் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினாலும், கணவனின் கையணைப்பும், பாதுகாப்புமே அவரை வழி நடத்திக் கொண்டிருந்தன. கணவரின் மறைவிற்கு பிறகு பயத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்திருந்த நேரத்தில், பாண்டியன் தன் தாயின் நலனுக்காக ஆதரவு கரத்தை நீட்டி, தன் பாதுகாப்பில் தாயையும் மகளையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டான். கோதைநாயகியின் வீட்டில் அடைக்கலமாகிய இருவரும் மீண்டும் கூண்டுகிளிகளாய் அமைதியாய் தங்கள் வாழ்க்கை பயணத்தை நிம்மதியுடன் கழித்து வந்தனர்.

சுற்றிலும் உறவினர்களின் பாதுகாப்பில் இருந்த மகிழ்ச்சியில் மகளின் திருமணத்தைப் பற்றிய சிந்தனையை அறவே மறந்திருந்தார் செங்கமலம். இப்பொழுது நிலைமை தலைகீழ் ஆனதில் யோசிக்கும் திறன் கூட சமயத்தில் அவருக்கு மறந்து போய் விடுகிறது.

தாய் கூண்டிலிருந்து வெளிய வந்து சிறகினை விரிக்கவே யோசித்து பயந்து கொண்டிருக்க, மகளோ சுதந்திர காற்றை சுவாசிக்க, சிறகினை விரித்து பறக்க துடித்துக் கொண்டிருந்தாள்.

தாயின் பயந்த நிலைக்கு நேர்மாறாக சிவனியா எப்படியாவது வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டுமென்ற தீவிர சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள். மீண்டும் யாருடைய தயவிலும் போய் ஒண்டிக் கொள்வதை அவள் மனம் ஏற்கவில்லை.

தினமும் தன் மின்னஞ்சலை பார்க்கவென்று ப்ரௌசிங் சென்டர் சென்று வருபவள், தன் வேலைக்கான அழைப்பு வந்ததும் சென்னைக்கு புறப்பட தேவையான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினாள்.

நடந்து முடிந்த அசம்பாவிதங்களை எக்காரணம் கொண்டும் நினைத்துப் பார்க்க கூட அவள் விரும்பவில்லை. சதா எதையாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் தன் தாயை கூட அதட்டி வைத்தாள். அதிலும் குறிப்பாக தன் திருமணத்தை பற்றி செங்கமலம் கவலை கொள்ளும் போது அவளுக்கு கோபம் வரத் தான் செய்தது.

“என்னமோ நேத்து தான் நான் பொறந்த மாதிரி இன்னைக்கு உக்காந்து என் கல்யாணத்துக்கு கவலைப் படறேம்மா நீ? இத்தன நாள் இதையெல்லாம் யோசிக்காம இருந்தது உன்னோட தப்பு தான், அதுக்கு கூட நீ அவங்கள குத்தம் சொல்வியா?” – சிவா

“நான் என்ன காசு பணம் இல்லன்னா கவல படறேன்? பொறுப்பை கையில எடுத்து செய்ய ஆள் இல்லன்னுதான் சங்கடப் படறேன். நமக்கு எல்லாமே பாண்டியனும் அண்ணியும் பார்க்கப் போயி தான், நானும் அத பத்தின யோசனையே இல்லாம இருந்தேன். பாண்டியனும் அப்படிச் சொல்லிதானே கூட்டிட்டு போனான். இப்படியெல்லாம் நடக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்?” – கமலம்

“அவங்க சொன்னா நீ உன் பொறுப்ப தட்டி கழிக்கப் பார்ப்பியாம்மா? உனக்கு தானேம்மா நான் பொண்ணு, அவங்களுக்கு இல்லையே? அப்பறம் எப்படி என்னோட பொறுப்ப அவங்க ஏத்துப்பாங்கன்னு நீ எதிர் பார்க்கலாம். நிஜத்துக்கோ, பேச்சுக்கோ அவங்க சொன்னத நம்பி இருந்தது உன்னோட தப்பு” – கடுமையாய் ஆட்சேபித்தாள் சிவா

“என்னடி நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற?”- இந்த எண்ணமும், மகளின் ஆட்சேபனையும்  செங்கமலத்தின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

“இது சப்போர்ட் கிடையாது, உன்னோட புலம்பலுக்கு என்னோட பதில் அவ்ளோ தான்” – சிவா

“அப்போ நான் பொறுப்பா இல்லன்னு சொல்றியா? எந்த கவலையும் உனக்கு வரவிடாம படிக்க வைச்சுருக்கேன், இது வரைக்கும் எதாவது ஒண்ணு உனக்கு இல்லன்னு சொல்ல விட்டிருக்கேனா?” கமலம்

“அததானம்மா நானும் சொல்றேன். இவ்ளோ நாள் எப்படி செஞ்சியோ, அப்படியே தான் இனிமேலும் நீ செய்யப்போற. என்னோட கல்யாணம் பத்தின கவலைய இதோட விடு, அதுக்கு இன்னும் வருஷம் இருக்கு. நல்ல விதமா நீயே நடத்தி வைக்கலாம். நாம இன்னும் நல்ல நிலைமைக்கு வரப் போறோம் அதை மட்டுமே மனசுல நினைச்சுட்டு ஆகுற வேலையைப் பாரு” என மகள் சமாதானம் சொன்னாலும் தாயின் மனமோ அந்த பயத்திலேயே தவிக்க ஆரம்பித்தது.

அன்னைக்கு சமாதானம் சொல்லி விட்டு வேலையில் சேர்வதற்க்காய் சென்னைக்கு புறப்பட்டு சென்றாள். அவளுக்கும் வருத்தம் உண்டு தான். அதை தற்போது தன் அன்னையிடம் காண்பித்தால் இன்னும் மனம் உடைந்து போய் நம்பிக்கையை இழந்து விடுவார் என்ற எண்ணத்தில் அவரின் எண்ணப்போக்கை திசை மாற்றி சமாதானப் படுத்தினாள்.

தாயுடன் இருக்கும் பொழுதுகளில் அவரை சகஜ நிலைக்கு கொண்டு வரவென்று தன் மனதை வேறெந்த நினைவுகளையும் தாக்க விடாமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் விடுதியில் சேர்ந்த நாள் முதல், தனிமையில் தன் மனதை சமன் செய்ய முடியவில்லை.

செங்கமலத்திடம் பேசும் பொழுதுகளில் மட்டும் சகஜமாய் பேசிவிட்டு மீண்டும் ஒரு பலமான வாய்பூட்டு போட்டுக் கொண்டாள். தவறான நபர்களால் பேசப்பட்ட பேச்சுகள் இன்னும் அவளை அலைகழித்தன. இதன் பாதிப்பு தனக்கென ஒரு கைப்பேசியை இன்னும் அவள் வாங்கியிருக்கவில்லை. பழைய கைப்பேசியை அந்த நேரமே செங்கமலம் போட்டு உடைத்து வைத்திருந்தார்.

கைப்பேசியை அன்றோடு தலைமுழுகி விட்டிருந்தனர் தாயும் மகளும். அறையில் தன்னுடன் தங்கியிருக்கும் தோழியின் செல்போன் எண்ணும், விடுதி அலுவலகத்தில் இருந்த எண்ணையுமே கொடுத்து அதிலிருந்தே தான் தாயுடன் பேசி கொண்டிருந்தாள்.

சிவனியாவின் உடம்பில் பட்ட அடியோ இன்னும் குறையாமல், தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தது. சற்று வேக எட்டுகளை எடுத்து வைத்தாலே பாதம் தொட்டு இடுப்பினை தாக்க மெதுவான நடை தன்னாலேயே பழக்கமாகி இருந்தது. வெளிக்காட்டாத மனப்புழக்கங்கள் அவளது சுபாவத்தை மாற்றி உடல் மெலிவை காட்டத் தொடங்கியது.

மனம் முழுவதும் தனக்கான அடையாளைத்தை எப்படியும் தேடிக் கொண்டு விடவேண்டுமென்ற தவிப்பும், தனிமனுஷியாய் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்ற துடிப்பும் அவளது சுயத்தை மாற்றி இறுக்கமாய் செயல்பட வைத்தது.

********************************

உத்தங்குடியில் கனிமொழியின் வீடு. ரவியின் சொந்த அத்தை மகள், கிராமத்துப் பெண், மஞ்சள் பூசிய முகம் நாணத்தோடு மிளிர, புன்னகை கலந்த உரிமையுடன் தன் முறைமாமன் ரவியை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்றிலிருந்து பதினைந்தாம் நாள் அவர்களின் திருமண நடக்க இரு வீட்டு பெரியவர்களால் நாள் குறிக்கப்பட்டு, உறவுகளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டிருந்தனர் .

மாப்பிள்ளை ரவிச்சந்திரன் என்கிற ரவிக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் அதை முழுமையாய் அனுபவிக்க முடியாமல் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தான். தன் நண்பனின் திருமணத்திற்கு பிறகு தான், தன் திருமணத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தன் பிடிவாதத்தை இரு வீட்டு பெற்றோரும் தகர்த்திருந்தனர். இதற்கு முழுக் காரணமும் பாண்டியன் தான். தன் முடிவில் நிலையாய் நின்று அவன் திருமண ஏற்பாட்டை தொடங்கி இருந்தான்.

கனிமொழியின் வீட்டிற்கு மிக அருகிலேயே தான் செங்கமலம் தற்பொழுது வசித்து வருவது. யாரவது தெரிந்தவர்கள் பக்கத்தில் இருப்பது நல்லது என அந்த சமயத்தில் ரவியின் மனதிற்குப் பட, கனியின் வீட்டிற்க்கு அருகே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.

தினமும் சிவனியா, கனியின் கைப்பேசியில் செங்கமலத்திடம் பேசி வந்தாள். நாள் தவறாமல் காலை இரவு என இருமுறை பேசிவிடுவாள்.

சென்னையில் ஏதோ ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக சொல்லியிருந்தாள். ஆனால் முழுமையான முகவரி என்னவென்று சரியாகத் தெரியவில்லை. அதை பற்றிய பேச்சு தான் இப்பொழுது ரவிக்கும் கனிமொழிக்கும் நடந்து கொண்டிருந்தது.

“ரொம்ப நேரம் என் பக்கத்துலயே உக்காந்திருக்கியே மச்சான். பாண்டியண்ணே உன்னை சும்மா விடுவாரா?” – கனி

“என் சிநேகிதனுக்கு கொஞ்சம் இங்கிதம் தெரியும். இன்னைக்கு பேச்சு வார்த்தைக்கு அவன் தான் காரணம், தெரிஞ்சுக்கோ” – ரவி

“அடேயப்பா! என்னா கோபம் வருது என் துரைக்கு? இந்த தங்கச்சி மேல அவருக்கு இருக்குற அக்கறை உனக்கு இல்லாம போனதால தானே அவர் கல்யாண வேலைய ஆரம்பிச்சாரு… ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே மொகத்த தூக்கி வைக்கிறியே  மச்சான்?’ – கனி

“இப்போ என்னோட அக்கறைல என்ன குறைய கண்டுட்ட நீ? ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்க்கைய ஆரம்பிக்க நினைச்சோம் இப்போ அது மாறினது தான் எனக்கு பிடிக்கல, மத்தபடி உன்மேல இருக்கிற அக்கறை அலையெல்லாம் எப்போவும் ஒரே கரையில தான் நிக்குது, அதை எப்போ தெரிய வைக்கனுமோ அப்போ தெரிய வைக்கிறேன்” – ரவி

“என்ன ஆச்சு மச்சான்? இவ்ளோ வெசனப்பட்டு பேசுற? நெசமாவே உனக்கு இஷ்டம் இல்லன்னா தேதிய தள்ளி வைக்க சொல்றேன். நீ மனச போட்டு உளப்பிக்காதே!” – கனி

“எனக்கு கோபம் எல்லாம் பாண்டி மேல தான், என்ன சொன்னாலும் கேக்காம இப்போ சென்னைக்கு போயே தீருவேன்னு ஒத்த காலுல நிக்கிறான். கொஞ்சம் நிதானமா யோசிச்சா, சிவனி மேல இருக்குற பாசம் என்ன மாதிரின்னு இவனுக்கு தெரியும். சொன்னா புரிஞ்சுக்க மாட்டிக்கான்”-  ரவி

“ஆமா என்கிட்டே கூட அவ எங்கே தங்கி இருக்கான்னு கேட்டாரு. சிவாகிட்ட எப்பிடி கேக்குறதுன்னு தான் தெரியல? அம்மாவும் பொண்ணும் இப்போ ரொம்ப மாறிட்டாங்க மச்சான். எதையும் வெளிப்படையா பேச மாட்டேங்குறாங்க? ஏதோ இந்த செல்போன்க்கு தான் என்கிட்டே ரெண்டு வார்த்தை அதிகமா பேசி வைக்குறாங்க. இல்லன்னா எப்போவும் மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு வீட்டுலயே அடைஞ்சி கிடக்குது கமலம் அத்த…” –கனி

“இப்படி ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிப்பாங்கன்னு நினைச்சு பார்த்தோமா என்ன? அவ அட்ரஸ் எப்போ சொல்லுவா? அவ ஃபோன் பண்ணினா எனக்கு பேச சொல்றியா? நான் பேசி பாக்குறேன்” – ரவி

“முன்னாடியே நீ பேசணும்னு சொன்னத, நானும் அவ கிட்ட சொல்லிட்டேன், என்கிட்டே சரின்னு சொல்லிட்டு அவ பேசாம இருக்கா, நான் என்ன பண்ண முடியும்?” – கனி

“இன்னைக்கு ஃபோன் வர்ற வரைக்கும் உன்கூட இருந்து, அட்ரஸ் வாங்கிட்டு வர சொல்லிருக்கான் பாண்டி” – ரவி

“தோடா!! இத தான் ஆட்டை மேய்ஞ்சுகிட்டே அண்ணனுக்கு பொண்ணு பாக்குறதுன்னு சொல்றதா? உங்க காரியம் ஆகுறதுக்கு தான் இங்கன பேசிகிட்டு இருக்கீகளோ? நல்ல சிநேகிதம் தான் மச்சான் உனக்கு. உன் தங்கச்சிய பாக்கபோற விஷயம் மட்டும் அவ அம்மாக்கு தெரிஞ்சது சாமியாடிடும். சும்மாவே மூச்சுக்கு முன்னூறு தடவ அண்ணன ஏசிகிட்டும், வைஞ்சுகிட்டும் இருக்கு, அதுக்கு நீங்க சலங்கை கட்டி விட்டு வேடிக்கை பாக்கப் போறீங்க! இது எங்கே கொண்டு போய் முடியுமோ எனக்கு தெரியல?” – கனி

“எனக்கு மட்டும் பிடிக்கவா செய்யுது? கோதையம்மாவுக்கும் பிடிக்கல தான். சொல் பேச்சு கேட்டா தானே இந்த பாண்டி? என்னமோ இவன் தான் உலகமகா உத்தமன்னு நினைப்பு. அங்கே போய் மனசு நிறைய வாங்கிட்டு வரட்டும். என்னதான் நடக்குதுன்னு பாப்போம், நம்ம கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பனும்ன்னு சொல்லி அட்ரஸ் வாங்கு மொழி” – ரவி

“சரி மச்சான் கேட்டு பாக்குறேன், நீங்க செய்யப்போற திருகுதாளத்துக்கு என்னை பிள்ளையார பிடிச்சு வைக்கமா இருந்தா சரி” என்று நக்கலாகவே சொன்னவள், தன் திருமணத்தை சொல்லியே சிவனியாவிடம் முகவரியை வாங்கி விட்டாள்.

“இப்போ லீவ் கிடைக்காது அண்ணி, அம்மாக்கு தான் பத்திரிகை வைக்கிறீங்களே, அது போதும்” என சிவனியா முகவரி கொடுக்க மறுக்க

“கல்யாணத்தை பாக்காதவ பத்திரிகைய பார்த்தாச்சும் எங்கள நினைச்சுகோ சிவா! நீ தான் எனக்கு நாத்தனார் முடிச்சு போடுவேன்னு எதிர் பார்த்தேன், இப்படி என் ஆசையெல்லாம் பொய்யா போச்சு. எல்லாத்துக்கும் இந்த பாண்டி அண்ணேந்தான் காரணம். வீம்பு பிடிச்சு, நாள் குறிச்சிட்டு, இப்போ நாங்க தான் அவதி அவதியா வேலை பாக்கோம்” என பாண்டியனை பற்றி சொல்லியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முகவரியை அனுப்பி வைத்தாள்.

“இந்தா மச்சான், நீ கேட்ட அட்ரசு, எனக்கு என்னமோ அண்ணே அங்கன போயி நின்னா, இவ கல்லையும் மண்ணையும் பாக்குறாப்புல தான் பார்த்து வைக்கப் போறான்னு தோணுது. அவர பத்தி நான் பேசினாலும், என்ன ஏதுன்னு கேட்டு வைக்கல உன் தங்கச்சி” ஒரு வித அசட்டையுடன் தான் கனியின் பேச்சு இருந்தது.

அவளுக்கு பாண்டியன் செல்லும் காரியம் சுபமாகாது என்று தெரியும். ஆனாலும் பாண்டியன் செல்வது மீண்டும் புதியதொரு பிரச்சனைக்கு வழி வகுத்து விடக் கூடாதே என்று தான் பயந்தாள். இவர்கள் ஒட்டு மொத்தமாய் சேர்ந்து மறந்த விஷயம் முகவரி வாங்கியதைப் பற்றி செங்கமலத்திடம் சொல்லாதது தான், சிவனியாவும் இவர்களிடம் முகவரி கொடுத்ததை தாயிடம் சொல்ல மறந்து போனாள்.

ஒருவழியாய் சிவனியாவின் முகவரி கைக்கு வர, வருண பாண்டியன் சென்னைக்கு புறப்பட்டான்.

***********************

 

சிவனியா தங்கியிருந்த மகளிர் விடுதிக்குச் சென்று அவள் பேர் சொல்லி பாண்டியன் விசாரிக்க

“சிவனியாக்கு நீங்க என்ன முறைன்னு தெரிஞ்சுக்கலமா? யாரும் இது வரைக்கும் வந்ததில்லையே? சேரும்போது வீட்டுல உள்ளவங்க கையெழுத்து போடணும்னு சொன்னதுக்கு அடுத்த வாரம் வருவாங்கன்னு சொன்னாளே! அதுக்கு வந்திருக்கீங்களா?” என விடுதியில் பொறுப்பில் உள்ளவர் கேட்க, என்ன காரணம் சொல்வதென்று யோசனையில் இருந்த பாண்டியனுக்கும் இது தான் சாக்கு என்று தலையை ஆட்டி, தன் ஊரையும், பேரையும் சொல்லி வைத்தான்.

அவளது அறைக்கு தகவல் சொல்லிவிட்டு சேர்க்கை பதிவேட்டில் அவள் பக்கத்தை எடுக்க, அதில் தாய் என்று செங்கமலத்தின் பேரும், பக்கத்தில் கார்டியன் என்று இவன் பெயரை போட்டு இவனது ஹோட்டல் முகவரியையும், கோதை இல்லத்து முகவரியையும் தனது வீட்டு முகவரியாக கொடுத்து வைத்திருந்தாள்.

இதனை பார்த்தவுடன் அவன் மனதில் எப்படி அவளைப் பார்த்து பேசுவது என்று பின்தங்கிக் கொண்டிருந்த எண்ணம் யாவும் அகன்று சந்தோசப் பெருமூச்சுடன் அவர்கள் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டு அவளை பார்க்க காத்திருந்தான்.

‘என்ன கோபம் இருந்தாலும், மனசுல வச்சுக்காம என் பேர் தான் சொல்லி இருக்கா இத விட வேறன்ன வேணும்? சிவும்மாக்கு எம் மேல கோபம் போயிருச்சு போல… சியாபாப்பா தங்கம்டா’ மனதில் குதூகலித்தாவாறே சந்தோஷமாய் அவளின் வருகைக்காக காத்திருந்தான்.

தன்னை பார்க்க மாமன் வந்திருக்கிறான் என்றவுடன் சிவனியாவின் மனதில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கோபம் தன் இருப்பை வெளிக்காட்டத் தொடங்கியது.

‘இப்போ எதுக்காக வந்துருக்காரு இந்த சண்டியரு? என்ன ஏழரைய கூட்டி வச்சாலும் பேசக் கூடாது, கிறுக்குப் பையன் மாதிரி கத்திட்டு போகட்டும். எப்பவும் என்னை சிக்கல்ல சிக்க வைக்கனும்னே வேலை பாக்கிற முசுடு’ என மனதிற்குள் பொறுமிக்கொண்டே, கோப முகத்துடன் தன் அறையில் தங்கிக்கொண்டு, தன்னுடன் வேலை செய்யும் பூமிகாவுடன் கீழே வந்தவள்,

“நான் ஃபைவ் மினிட்ஸ்ல அவரை பார்த்துட்டு வரேன் பூமி, வாசல்ல வெயிட் பண்ணு” – சிவா

“சீக்கிரம் வா சிவா… கேப் வந்துரும், ஈவினிங் வந்து பேசலாம்ன்னு சொல்லிட்டு வாடி டைம் ஆச்சு’ – பூமி

“சரி சொல்றேன்” என்று கூறி விட்டு, அவனருகே அமைதியாக நின்றாள். அவனுடன் பேசப் பிடிக்கவில்லை அவளுக்கு

அவனுக்கும் சற்று தடுமாற்றம் வந்தது, ஆனால் அவளை மிக அருகில் பார்க்கவும், அவள் உடல் மெலிவில் மனம் பதபதைக்க

“என்ன ஆச்சு பாப்பா? ஏன் இப்படி இருக்கே? சாப்பாடு ஒத்துக்கலையா? இல்லா சாப்பிட்றதே இல்லையா?” வந்த காரியம் சுத்தமாய் மறந்து போனது பாண்டியனுக்கு.

‘இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல… செய்றதெல்லாம் செஞ்சுட்டு ரொம்ப தான் அக்கறை’ என நொடித்துக் கொண்டது சிவாவின் மனம்.

“இன்னைக்கு ஆபிஸ்க்கு லீவ் சொல்லு, ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” அசையவில்லை அவள்.

‘இவர் தான் அங்கே வேலை போட்டு குடுத்த மாதிரி பேசி வைக்கிறத பாரு’  என மனதிற்குள் பொருமிக்கொண்டே,

இவனிடத்தில் என்ன பேசுவது என்ற பிடிவாதமும் கோபமும் ஒன்று சேர, அவனை விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

“ப்ச்… சிவும்மா! நான் சொல்றத கேளு, பொறுமையா உக்காந்து பேசுவோம் போகாதே!”

“—————“

‘தோடா பொறுமையா உக்காந்து பேசனுமாம், பேச்சைப் பாரு போடா டேய்’ – சிவாவின் மைன்ட் வாய்ஸ்

“நில்லு பாப்பா உனக்கு என்ன பண்ணுது? நீ சரியில்ல”

“————-“

‘நாட்டாமை தீர்ப்பு சொல்ல வந்துட்டாரு… சொம்புக்கு பதிலா பேக் அவ்ளோ தான் வித்தியாசம்’ – மனதோடு சிவாவின் பேச்சு

இவன் பின்னால் பேசிக்கொண்டே வர, இவளும் அவன் பேச்சை காதில் வாங்காமல் முன்னே நடக்கவும், அந்த நேரத்தில் அலுவலக வண்டியும் வர, இவள் ஏறி விட்டாள். பின்னோடு வந்தவன் சிவனியின் கையை பிடித்து,

“உன் கோபம் புரியுதும்மா… கீழே இறங்கு பேசுவோம்”

“————“

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல், தன் கைகளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டு, வாகனத்தில் அமர்ந்து விட்டாள்.

‘இவனுக்கெல்லாம் இப்படி செஞ்சாதான் புத்தி வரும்’ மனதோடு அவனுக்கான பதிலடியை கொடுத்துக் கொண்டே சென்றாள்.

‘இதென்னடா ஒரு வார்த்தை கூட பேசாம போறா? என்ன தான் செய்யுது இவளுக்கு? ஆபிஸ்க்கு போவோமா? எப்போ இவளுக்கு டுயுட்டி(duty) டைம் முடிய? எப்போ நான் பேச?’ என மனதிற்குள் எண்ணியவன், விடுதியில் உள்ளவர்களிடம் அவள் அலுவலகத்திற்க்கு எப்படி செல்வது என்ற விவரங்களை கேட்டு, அவளுக்காக வேலை முடிந்து வரும் வரை அங்கே காத்திருக்க ஆரம்பித்தான்.

காலையில் இருந்து செய்த வேலைகள் யாவும் தவறாகி விட, ஒரு வித படபடப்பில் தான் வேலைகளை தப்பும் தவறுமாய் பார்த்து வைத்தாள் சிவனியா.

இவரை இப்போ யாரு வரச் சொன்னது? இவர்கிட்ட அட்ரஸ் குடுக்கத் தான் பத்திரிகை அனுப்பி வைக்கறேன்னு சொல்லி கேட்டாங்க போல? ச்சே… இதுக்கு தான் யாரையும் நம்பக் கூடாதுன்னு சொல்றாங்க போல. என்னை நிம்மதியா இருக்க விடாம செய்ய எல்லோரும் ஒண்ணு கூடி வேலை பாக்குறாங்க… நடந்த கருமத்த மறக்க நினைச்சா, இப்படி நட்ட நடு நாயகமா வந்து நின்னு கடுப்பேத்துராரு. என்ன ஒரு அதிகாரம்? ஆபீஸ் போகாதே, ஹாஸ்பிடல் போவோம்னு கையபிடிச்சு பேச்சு வேற… ஒரு சாரி சொல்ல முடியல? வந்துட்டாரு… இனிமே என்கிட்டே பேசட்டும்? பேசாமயே சாவடிக்கிறேன்… இவர் வந்து கூப்பிட்டா, பின்னாடியே போக இன்னும் பழைய சிவான்னு நினைச்சுட்டு இருக்காரு போல, எப்படி எங்கே வந்து பேசினாலும் இனிமே இவர் கூட பேசவே கூடாது… தெரியட்டும் நமக்கும் கொஞ்சம் ரோசம் இருக்குனு தெரிஞ்சுக்கட்டும்….’ என பலவிதமான அர்ச்சனகளை மனதிற்க்குள் வசைபாடிக் கொண்டே, பாண்டியனை சந்திப்பதை அறவே தவிர்த்திட நினைத்தாள்.

இவள் ஒன்று நினைக்க, நடந்ததோ வேறொன்று. அவ்வளவு சுலபத்தில் அவளை நிம்மதியாய் இருக்கவிட்டால் வருணபாண்டியனின் வருகைக்கு அர்த்தம் இல்லையே? அவள்அலுவலகத்தை விட்டு வெளியேறும் நேரம், வாயிலில் நின்று இவளை வரவேற்றான். அப்பொழுது இரவு ஏழு மணி.

“பாப்பா!! எப்போ உனக்கு ஆபிஸ் டைம் முடியுது? நாலு மணியில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இந்த செக்யூரிட்டி உள்ளே விட மாட்டேன்னுட்டான். நம்மூருக்கு இவன் வரட்டும் அப்போ தெரிய வைக்கிறேன் என்னை பத்தி… நீ வாடா சிவும்மா கிளம்பலாம்” என மீண்டும் அவள் கையை பிடித்து அல்ல இழுத்துக் கொண்டு வெளியே ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

சிவனியாவிற்க்கு கையை உதறிக் கொண்டு அவனிடம் இருந்து விடு பட நினைத்தாலும், அவளால் முடியவில்லை. இன்னொரு கையை கொண்டு அவன் கையை எடுத்து விட முயற்சிக்க, அவனோ அந்த மற்றொரு கையையும் இழுத்து கொண்டு நடந்தான். இது அங்கே உள்ளவர்கள் கண்டு கொண்டாலும், தோழி பூமிகாவுடன் இவன் பேசிக்கொண்டு நடந்ததால் எளிதாய் எடுத்துக் கொண்டனர்.

“சிவனிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன், நைட் நான் கொண்டு வந்து விடறேன், ஹாஸ்டல்ல சொல்லிடுங்க, நீங்க கிளம்புங்க சிஸ்டர்” பூமிகாவை அனுப்பி வைத்து, இவளுடன் ஆட்டோவில் தொற்றிக் கொண்டான்.

சிவனியாவும் பாண்டியனை தன்னுடய மாமன் என்று சொல்லி வைத்திருந்ததால் தோழிக்கும் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.

“நல்ல வேலை செய்றீங்கண்ணா… எத்தன தடவ நானும் கூப்பிட்டு பார்த்துட்டேன், வரமாட்டேன்ன்னு ஒரே பிடிவாதம். இப்படி பிடிச்சு இழுத்துட்டு போனா தான் இவ வழிக்கு வருவா! நீங்க கூட்டிட்டு போங்கண்ணா” என தன் தோழியின் மீதான அக்கறையை கூறி அவளும் விடைபெற்றாள்.

பெரிய பல்நோக்கு மருத்துவமனை தான். முன்னமே பேசி வருகையை பதிவு செய்துவிட்டு தான், அவளை அலுவலகத்தில் அழைக்கச் சென்றான் பாண்டியன். அதனால் தாமதமில்லாமல் அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவளை கிட்டத்தட்ட ஒரு நோயாளியை போலவே நடத்த ஆரம்பித்திருந்தனர்.

இதற்க்கு முழு காரணமும் பாண்டியனின் செய்கைகளும், பேச்சுக்களும் தான். ஒரு மாதத்தில் அவள் உடல் மெலிவை அதிகமாக கூறி அதிலும் அவள் நடப்பதையே பேரும் குறையாக காட்டி, தன் அக்கறையை காட்ட, வேறு பேச்சின்றி மருத்துவமனை நிர்வாகம் தன் பங்களிப்பை சரியாகச் செய்து, அவனிடம் கணிசமாய் தொகைகளை கறந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை பாண்டியன். அவனுக்கு வேண்டியது, அவனது சிவனியின் உடல், நலம் பெறவேண்டும் என்பது மட்டுமே.

எந்த இடத்திலும் சிவனியாவை இவன் பேச விடவில்லை, அவளும், இவனிடம் நமக்கென்ன பேச்சு என்ற ரீதியில் இவன் எது வரைக்கும் தான் செல்கிறான் என்று பார்ப்போமே? என்று அந்த நேரத்தில் ஒரு பொம்மையை போல் சொல்வதை கேட்க ஆரம்பித்திருந்தாள்.

எல்லா வித பரிசோதனையின் போதும் உடனிருந்து, அவள் வலியில் முகம் சுளிக்கும் போது, அவள் தோள் தட்டிக் கொடுத்து, அவளுக்கு இணையாய் மெதுவாய் நடந்து என எந்நேரமும் அவள் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தான்.

சிவனியாவிற்கு உள்ளுக்குள் கோபம் கொப்பளிக்கத் தான் செய்தது. ஆனால் இடமும், காலமும் அதை வெளிபடுத்த தடை விதிக்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அனைத்திற்கும் செவி சாய்த்து, மருத்துவ ஆலோசனைகள் முடிந்து, மருந்து மாத்திரைகளும் வாங்கிக் கொண்டு இவர்கள் வெளியே வரும் பொழுது இரவு மணி பத்தை தாண்டி இருந்தது.

“சாப்பிட போகலாமா சிவும்மா… எங்கே டிபன் நல்லா இருக்கும் சொல்லு” என எப்பொழுதும் போல் கையை பிடித்துக் கொண்டு நடந்த படியே இவன் கேட்க,

“வெட்டிப் போட்டிருவேன் உங்கள!! இதென்ன பழக்கம் கையை பிடிச்சுட்டு போறது, டெஸ்ட் எடுக்குற நேரமெல்லாம் என்னை தொட்டு பிடிக்கிறது? யார் குடுத்த தைரியம் இது? ஒண்ணும் சொல்லாம இருக்கா… எதுனாலும் செய்யலாம்ங்கிற திமிரா உங்களுக்கு? யார் உங்கள இங்கே வரச் சொன்னது? இன்னும் நாலு அடி அடிச்சு என்னை கொலை பண்ண வந்துருக்கீங்களா?” என உரக்க பேசி, பாண்டியனை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் நின்றிருந்தது ஆள் அரவமற்ற மருத்துவமனை வளாகத்தை ஒட்டிய, வரவேற்பு மற்றும் புதிய சீட்டுக்களை பதிவு செய்யும் இடம். அப்பொழுது யாரும் இல்லாமல் வெறிச்சொடிக் கிடந்தது. ஆனாலும் இவள் பேசிய வார்த்தைகள் வெவ்வேறு மூலைகளில் நின்றிருந்த சொற்ப நபர்களின் காதில் விழத்தான் செய்தது.

சுத்தம் செய்து கொண்டிருந்த ஊழியர்களில் ஒருவரும் இவள் பேச்சை கேட்டு

“தங்கச்சி!! வீட்டுல போய் சண்டை போடுங்க இங்கே சத்தம் போடகூடாது” என சொல்லிவிட்டு “புருஷன் பொஞ்சாதி சண்டைய வீட்டுல போடாம வெளியே வந்து போடுதுங்க இந்த காலத்து புள்ளைங்க” என்று முணுமுணுத்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

“மெதுவா பேசுடா… எதுக்கு இவ்ளோ கோபம்? உனக்கு முடியலைன்னு தானே கை பிடிச்சு கூட்டி போறேன், இதுக்கு முன்னாடி இப்படி செஞ்சுருக்கேனா என்ன?” மெதுவாய் பாண்டியன் கேட்க

“என்னை நானே பார்த்துக்குறேன் நீங்க கிளம்புங்க மொதல்ல… உங்களை பாக்கவே பிடிக்கல எனக்கு, எப்பபாரு ஏதாவது ஒண்ணு இழுத்து வைக்கிறதுக்குன்னே வர்றீங்க?” கோபத்துடன் இவள் பேச்சு.

“உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு நான் கிளம்புறேன், சாப்பிட்டு போவோம்.” என அவளை இழுத்துக் கொண்டே ஹோட்டலுக்கு சென்று அவள் பக்கத்திலேயே தான் அமர்ந்தான்.

அதற்கும் இவள் முறைத்து வைக்க, “ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளுடா… அப்புறம் நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்”

“——————-“

“உனக்கு ரத்தக்கட்டு இன்னும் சரி ஆகலையாம் பாப்பா… அதான் உனக்கு நடக்க கஷ்டமா இருக்குனு டேப்லட்ஸ் குடுத்திருக்காங்க, அதோட நீ ரொம்ப வீக்கா இருக்கியாம், அதுக்கும் சேர்த்து தான் மாத்திரை இருக்கு, கொஞ்சநாள் விடாம எடுக்க சொல்லிருக்காங்க… ஒரு மாசத்துக்கு வாங்கிட்டேன். மறக்காம போட்டுக்கோ” என இவன் சொல்ல இவளின் முறைப்பு அதிகமாகியது. இதை ஒரு நொடி உற்று நோக்கியவன்

“சாரிடாம்மா… எனக்குமே தெரியுது நான் செஞ்சது ரொம்ப தப்புன்னு… அந்த நேரம் இப்படியெல்லாம் நான் நடந்துப்பேன்னு சத்தியமா நினைக்கலடா. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல? அந்த நேரத்தை இப்போ நினைச்சாலும் அவ்ளோ சங்கடமா இருக்கு என் மனசுக்கு… உனக்கு அத விட கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும், என்கூட பேச கூட பிடிக்காது தான். ஆனா அப்படி எல்லாம் இருக்காதடா!! ஏற்கனவே மாமா மனசெல்லாம் நொந்து போயிருக்கேன். உன் மொகத்த பாக்குற வரைக்கும் நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். என் கண்ணுக்குள்ளேயே நிக்கிறடா சிவும்மா… இனிமே கோபமே படமாட்டேன்னு சொல்ல முடியல, ஆனா இனிமே என்னை கட்டுபடுத்திக்க நிறைய முயற்சி பண்ணறேன்… என்கூட பேசுடா செல்லம்… நாலு அடி அடிச்சுக்கோ… மாமா ஒண்ணும் சொல்ல மாட்டேன்” மனதில் இருந்த பாரத்தை இவன் இறக்கி வைக்க, அங்கே அவளுக்கு கோபத்தின் வீரியம் ஏறிக் கொண்டே இருந்தது.

“இப்போ ஹாஸ்டல் போகணும் நான், ஏற்கனவே லேட் ஆயிருச்சு உங்க பிரசங்கத்தை கேக்க எனக்கு டைம் இல்ல” அவள் செல்ல முற்பட

“சாப்பிட்டு போலாம்மா, மறக்காம மாத்திரை போட்டுக்கணும்” என மருந்துகளை அவளிடம் கொடுக்க கோபத்தில் அதை குப்பை தொட்டியில் போட்டு விட்டு கிளம்பி விட்டாள்.

“நில்லு பாப்பா!! என்னை கோபக்காரன்னு சொல்லிட்டு இப்போ நீதான் ரொம்ப கோபமா இருக்கே… சாப்பிட்டு கிளம்பலாம், நான் கொண்டு போய் விடறேன் தனிய போக வேணாம்” அவளை இழுத்து அமர வைத்து உணவை அவள் முன் வைக்க, சரியாய் அவன் கைப்பேசியில் கனியின் அழைப்பு வந்தது.

“என்னம்மா இந்த நேரத்துக்கு ஃபோன் பண்ணிருக்கே?”- பாண்டியன்

“அண்ணே நீங்க எங்கே இருக்கீங்க? உங்க கூட சிவா இருக்காளா? அத்த அவ கூட பேசணுமாம்” என்று ஒரு வித படபடப்போடு அவள் கேட்க

“என்கூடதான் இருக்கா… இப்போதான்ம்மா சாப்பிடறோம், ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடவா?” – பாண்டியன்

“உடனே குடுங்க… இங்கே அத்த பேசணும்னு அவசரபட்றாங்க”

“சரி குடுக்கிறேன்” என சொல்லி சிவனியாவிடம் கொடுக்க

அந்த நொடியில் இருந்து செங்கமலத்தின் வசை மொழிகள் மகளை சரமாரியாக தாக்க ஆரம்பித்தது.

******************************

வெறுப்பைக் கூட சுலபமாக கடந்தும், மறந்தும் விடலாம். அன்பை அத்தனை எளிதாய் கடந்து விடவோ, மறந்து விடவோ முடியாது. மனதையும், உயிரையும் கொன்று வதைக்கும் விஷம் தான் இந்த அன்பு. பொங்கிப் பெருகினாலும் கஷ்டம் தான், மௌனமாய் உள்ளே அமுங்கினாலும் சிக்கல் தான்.

*****************************

புழக்கடை – சின்ன தோட்டம், குளம் கூட இருக்கும், பாத்திரங்களையும், துணிகளையும் சுத்தம் செய்யும் வேலைகளை இங்கு தான் செய்வார்கள்.

புழக்கடையை ஓட்டினார் போல் தான் கொல்லைபுறம் இருக்கும். அங்கே தான் கழிப்பறை மற்றும் குளியலறை அமைக்கபட்டிருக்கும்.

error: Content is protected !!