மேகதூதம் 3

 

காமாட்சிக்கு பெண்ணை அத்தனை தூரம் தனியாக அனுப்புவதில் விருப்பம் இல்லை. மகளை அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல வகையில் பல பிரச்சனைகளிலிருந்து மீட்டிருக்கிறாள். இருந்தாலும் அவர்களின் வளர்ச்சிக்கு அவர் எப்போதுமே ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். அஞ்சலி என்ன விரும்பி சாப்பிடுவாள் என்பதை நினைவில் வைத்து, அவளுக்கு அங்கு சென்று எளிதாக உண்ண சாம்பார் பொடி, இட்லி பொடி என தனி தனியாகா பார்ஸல் செய்ய ஆரம்பித்தார்.

வார இறுதியில் அவளுக்குத் தேவையான உடைகளை வாங்கலாம் என்று காமு கூற,
“வேண்டாம்மா. இங்க விட அங்க இன்னும் டிரஸ் நல்ல கிடைக்கும்னு அங்க இருக்கற ஒரு பொண்ணு சொன்னா, இங்கிருந்து போகறப்ப என்கிட்ட இருக்கற டிரஸ் போதும்” என்றுவிட,
அதிகம் அலைச்சல் இல்லாமல் போனது.

அப்படி இப்படி என்று நாட்கள் வேகமாகச் சென்றது. அவசியம் தேவை என்று நினைத்தை மட்டும் அஞ்சலி எடுத்து வைத்துக் கொண்டாள். ஆனால் அவன் நினைவாக இருக்கும் சிலவற்றை விட்டுப் போகவும் மனம் வரவில்லை.

“இந்த புடவைல நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொன்னா அது சாதாரணமா இருக்கும் அஞ்சு..”
“வேற எப்படி ஸ்பெஷலா சொல்லப் போறீங்க?”
“உன்னை இந்த புடைவைல அப்படியே என் மனசுல நிரப்பி வெச்சிருக்கேன். எப்போ கண்ணைமூடி உன்னை நினைச்சாலும் இந்த புடவைல தான் நீ வருவ. அவ்வளவு லட்சணமா இருக்க” இதயத்தில் கை வைத்து அவன் அப்போது குத்திக்கொண்டது இப்போதும் அஞ்சலியின் கண்முன் நிழலாடியது.

உடனே பீரோவில் பல துணிகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த அந்தப் புடவையை நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே எடுத்தாள். முதலில் அவள் கட்டிய புடவையும் அது தான் , கடைசியாக அவள் கட்டியதும் அதே நாளில் தான். அதன் பிறகு வேறு எங்குமே அவள் புடவை அணியவில்லை. காமு எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டாள்.

அந்தப் புடவையை பிரித்துப் பார்த்தாள். புடவை நுனியில் ஒட்டியிருந்த அந்தக் குங்குமக் கரை காய்ந்து கரையாகி அப்படியே அதில் இருந்தது.
அதை தன் கைகளால் தடவிப் பார்த்தாள். கண்களில் முணுக்கென கண்ணீர் கோர்த்தது.

“இந்தக் கரை இந்தப் புடவைய விட்டுப் போகாத மாதிரி என் மனசும் உங்களைத் தாண்டி எங்கயும் போகல. ஆனா நீங்க..?!” புடவையிடம் பேசினாள். மனதின் பாரத்தை அவளால் தாங்க இயலவில்லை. தனியாக வாய்விட்டு நிம்மதியாக அழ கூட அவளால் முடிவதில்லை.

காமு வருவது தெரிந்ததும் உடனே அந்தப் புடவையை மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டாள். அவன் அவளுக்காக வாங்கி கொடுத்த ஒரு ஜோடிப்புறா வடிவமைக்கப் பட்ட ஒரு சில்வர் கீசெயின். அதில் தான் அவளைது பெட்டி சாவி எல்லாம் சேர்த்து மாட்டி வைத்திருந்தாள். பெட்டியில் அனைத்தையும் பேக் செய்த பின்னர் மறக்காமல் அந்த சாவிக்கொத்தை கைப்பையில் பத்திரப் படுத்திக் கொண்டாள்.

“நாளைக்கு எத்தன மணிக்கு ப்ளைட்?” காமு அவளுக்காக பாயசம் எடுத்து வந்தார். அதைக் கொடுத்துவிட்டு அஞ்சலியிடம் பேச,

“காலைல நாலரை மணிக்கு. ரெண்டு மணி நேரம் முன்னாடி அங்க இருக்கணும். ஆமா என்ன இன்னிக்கு பாயசமெல்லாம் செஞ்சிருகீங்க?” அதை வாங்கி சுவைத்துக் கொண்டே கேட்டாள் அஞ்சலி.

“நீ நாளைக்கு ஊருக்கு போறல அதான் பூஜை பண்ணேன். அதுக்காக செஞ்சது.” மகளின் பிரிவை நினைத்து வருந்தினார் காமாட்சி.

“அம்மா நீ கவலை படாத, எத்தனையோ பேர் நம்ம ஆளுங்க அந்த ஊர்ல இருக்காங்க. எல்லாரும் குடும்பத்தை விட்டுட்டு தான் வேலை செய்யறாங்க. ரெண்டே வருஷம் தான் , சீக்கிரம் ஓடிடும்.” ஆருந்தால் கூறினாள்.

“என்னமோ அஞ்சலி, நீ முன்ன ஒரு தடவ வேலைல டிராஸ்பெர் கெடச்சி ஒரு ரெண்டு வருஷம் வெளியூர்ல இருந்த, எப்போவாவது நீ அடிக்கடி வந்து போவ, அப்போவே கஷ்டமா தான் இருந்தது. இப்போ மொத்தமா ரெண்டு வருஷம் உன்ன பார்க்காம எப்படி இறுக்கப் போறேனோ” மனதின் கவலையை முகத்தில் அப்பட்டமாகத் தெரிய காமுவின் குரல் தேம்பியது.

காமு கூறியது போல அப்போது வந்து போவது அவளுக்கும் கூட கஷ்டமாகத் தான் இருந்தது. அவனை விட்டு வருவது! அந்த இரண்டு வருடம். அவளது வாழ்வின் வசந்த காலம்.
மனம் ஒரு நொடி பின்னோக்கிப் பார்க்க ஆரம்பித்தது. இருந்தும் காமு அருகில் இருந்ததால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ,

“எவ்வளவோ டெக்னோலஜி வளந்துடுச்சு. டெய்லி வீடியோ கால் பேசலாம். தினமும் என்னை நீ பார்க்கலாம். அசட்டு அம்மா” என அவரது கன்னத்தை கிள்ளி லேசாக குறும்புத் தனத்தை காட்டி காமுவை மெல்ல சிரிக்க வைத்தாள்.

“உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்ல அஞ்சலி. பாத்து இருந்துக்கோ. நீ உன்கூட வேலைபாக்கற பொண்ணோட தங்கப் போறான்னு சொன்னியே , அவ நம்பரை என் போன் ல சேவ் பண்ணிக்க குடு. போய் இறங்குனதும் எனக்கு ஒரு கால் பண்ணிடு. அப்பப்ப எங்க இருக்கன்னு மெசேஜ் அனுப்பிகிட்டே இரு. புரியுதா” குழந்தைக்கு சொல்வது போல சொல்ல,
எதுவும் பேசாமல் தலையை ஆட்டினாள் அஞ்சலி.

பிரபுவும் காமுவும் அஞ்சலியை வழியனுப்ப வந்தனர்.

அவளுக்கு அனைத்தையும் மறுபடியும் சொல்லி அனுப்பினார் காமு. பிரபுவோ , “நல்லா என்ஜாய் பண்ணு அஞ்சலி. இது தான் உன் டைம்” என வாழ்த்தி அனுப்ப, உண்மையிலேயே அது தான் அவள் வாழ்வின் முக்கிய நேரம் என விதியும் நிர்ணயித்தது.

பிளேனில் ஏறி அமர்ந்ததிலிருந்து அவளது நினைப்பு மொத்தமும் அவனை நோக்கி பறக்க ஆரம்பித்திருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு தனிமை கிடைக்கவே , உலக நினைப்பு மொத்தமும் விடுத்து அவனே உலகமானான் அஞ்சலிக்கு.
இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த மொத்த நினைவுகளும் ஒரு சேர முட்டி மோதிக்கொண்டு அவள் மனதில் அலைகடலென பொங்கியது.

“என்னை மறந்துடறது உனக்கு பெட்டெர் அஞ்சு”
“நீங்க நிச்சயம் என்கிட்ட திரும்பி வருவீங்க. நான் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்கல.” தேம்பித் தேம்பி அவன் முன் அழுதுகொண்டு நின்றாள் அஞ்சலி.
“என்னோட பலம் பலகீனம் ரெண்டுமே நீ தான்.” திரும்பாமல் சென்றுவிட்டான்.

அவன் கடைசியாக அவளிடம் உரைத்த வார்த்தைகள் அவள் இதயத்தைப் பிளந்தது. அந்த நாளை நினைக்கையில் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அவளுக்கும் அதை துடைக்கும் நினைவு சுத்தமாக இல்லை.அவளது பயணம் அந்த இரண்டு வருட நிகழ்வுகளை அசைபோடுவதிலேயே சென்று கொண்டிருந்தது.

இவளின் அழுகைக்கு காரணமான அவனோ அவள் செல்லப் போகும் அதே கனடாவில் ஒரு பப்பில் சில அரைகுறை ஆடை அணிந்த பெண்களுடன் கையில் மதுக் கோப்பையுடன் ஆடிக்கொண்டிருந்தான் ரிஷி.

ஐந்தேமுக்கால் அடிக்கும் மேல் வளர்ந்திருந்த அவன் தேகத்தை அழகாக மெருகேற்றி வைத்திருந்தான். சிக்ஸ் பேக் உடம்பு. சிவப்பும் அல்லாத கருப்பும் அல்லாத வசீகர நிறம். நேர் கொண்ட பார்வை. எல்லாவற்றுக்கும் மேல் திறமைசாலியும் கூட.

” என்ன ரிஷி , இன்னிக்கு கூட என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டியா?” நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு வெள்ளைக்கார பெண் கேட்க,

“என்கூட ஆடு பாடு என்ன வேணா பண்ணு, ஆனா எல்லாத்தையும் ஒரு ரெண்டடி தள்ளி நின்னே பண்ணு. நான் மத்தவங்கள அந்த டிஸ்டன்ஸ்ல தான் எப்போதும் வெச்சிருக்கேன். ” முகத்தில் அடித்தாற்போல் அவளிடம் பதில் தந்தான் ரிஷி என்கிற ரிஷிகேஷ்.

“நீ இங்க வந்து ரெண்டு வருஷம் ஆகுது. ஒரு பொண்ணுகிட்ட கூட நீ கம்மிட் ஆகல. ஆனா எல்லா பொண்ணுங்களும் உன்கூட டேட் பண்ண ரெடியா இருக்காங்க. யாரையும் நீ சொன்ன அந்த டிஸ்டன்ஸ்க்கு மேல வரவிட்டதே இல்லையா? ஆர் யூ ஸ்டில் விர்ஜின்?” என்று கேட்டு விட,

ரிஷிக்கு அவளது பேச்சு எரிச்சல் தர, “நான் சூஸ் பண்ற பொண்ணுக்கு சில தகுதி இருக்கணும். அது இங்க யாருக்கும் இல்ல” அவளுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

தன்னுடைய டெஸ்லா காரைக் கிளப்பிக் கொண்டு வேகமாக இலக்கின்றி பறந்தான். அந்தக் குளிர் இரவில் உள்ளே சென்ற விஸ்கியின் வேகம் இறங்கும் வரை மனதில் வலியும் இறங்கவில்லை.

எங்கோ ஒரு நடுக்காட்டில் வண்டியை நிறுத்தினான். குளிர் , எதிரில் என்ன வருகிறது என்று கூட பார்க்கமுடியாத அளவிற்கு
கும்மிருட்டு. வண்டியை விட்டு இறங்காமல் இருளில் எதையோ வெறித்தது அவனது விழிகள்.

இங்கு யாருக்கும் தகுதி இல்லை என்று அவன் சொன்ன வார்த்தைகள் அவனுக்கே ஒலித்தது.அப்போது தகுதி உடையவள்! ? இந்தக் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

“நான் விர்ஜினா?” தனக்கே கேட்டு சிரித்துக் கொண்டான். அவளின் முகம் கண்முன் வந்து போனது.

வரும் கோபத்தை பல்கலைக் கடித்துக் கொண்டு கட்டுப் படுத்தினான். போதை அனைத்தும் இறங்கும் வரை காத்திருந்தவன், காரின் ஹெட் லைட் வெளிச்சத்தை அந்தக் காட்டில் பரவ விட்டான்.

“நான் ஹேப்பியா தான் இருக்கேன். ஆல்வேஸ்” மூச்சை இழுத்து வாய் வழியாக விட்டான். வண்டியைக் கிளப்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் தனிமை அவனை ஆட்கொண்டது. அதுவே அவனுக்கு பழகியும் விட்டது. ஆறேழு வருடங்களாக தனிமையில் தான் அவன் வாழ்க்கை சென்றது. வெளியில் மற்றவர்களோடு எல்லா விதமான ஆட்டமும் பேச்சும் கலகலப்புமாக இருப்பவன் தன்னுடைய வீட்டில் தனிமையை தான் துணையாக வைத்திருந்தான்.

ரிஷி ஆஸ்திரேலியா , யூரோப் என்று ஆண்டுக்கு ஓர் நாடாக தனது தொழிலை விஸ்தரித்துக் கொண்டிருந்தான். அவன் தந்தை தோற்ற அந்தத் தொழிலில் இப்போது பல மடங்கு பெருக்கி அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தான். ஆனாலும் அவன் வாழ நினைத்த வாழ்க்கை அவனிடம் இல்லை. இரவு வீட்டிற்கு வரும்போது வெறுமையே மிஞ்சியது.

தான் நம்பியவள் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவள் மேல் இருக்கும் கோபத்தை தொழிலில் காட்டி வெறியுடன் வெற்றி பெற்றான்.
ஆனாலும் அவளை நினைத்த மாத்திரத்தில் அவன் நெஞ்சிற்குள் காதல் சுரப்பதை அவனால் இப்போது வரை தடுக்க முடியவில்லை.

அன்று இரவு அவனால் அஞ்சலியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளை முதல்முதலில் கண்ட நிகழ்வை நினைத்துப் பார்த்தான்.

மொட்டை மாடியில் கம்பியில் சாய்ந்து கொண்டு “அம்மா, கவலைப் படாத, நாங்க நாலஞ்சு பேர் சேர்ந்து தான் வீடு எடுத்திருக்கோம். எல்லாம் சேஃப் தான். கவலைப் படாதீங்க. நான் அடுத்த சனிக்கிழமை ஊருக்கு வரேன்” தாயிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், ஒருவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் புருவத்தை சுருக்கி அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

ரிஷி அவளின் தோற்றத்தைக் கண்டு ‘நல்ல பிகர்’ என மனதில் நினைத்தாலும் அதை வெளிக்காட்டாமல்,
“நீங்க மாடி போர்ஷன்கு குடிவந்திருக்கலாம், ஆனா மொட்டை மாடி எல்லாருக்கும் பொது. அதுனால நாங்களும் இங்க தான் துணி காய போடணும். சோ உங்க துணி எதுன்னு கொஞ்சம் பாத்து யூஸ் பண்ணுங்க. நீங்க தோள்ல போட்டிருக்கறது என்னோட துண்டு, கொஞ்சம் தரீங்களா?” அலட்டிக் கொள்ளாமல் கேட்க,

அப்போது தான் தாயிடம் பேசும் சுவாரஸ்யத்தில் வேறு ஒரு துண்டை எடுத்து தன்னுடையது என்று போட்டுக் கொண்டது புரிந்தது.

உடனே அவனிடம், “சாரி. ஒரே கலர்ல இருந்ததனால மாத்தி எடுத்துட்டேன். வாஷ் பண்ணி குடுத்துடறேன்” என்றாள் வழியாமல்.

“இல்ல பரவால்ல. நானே பண்ணிக்கறேன்” அவன் துண்டைக் கேட்க,

“இல்ல வேண்டாம். நானே பண்ணி தரேன்” என அங்கிருந்து நகர்ந்தாள்.

அவன் அழகாகவே அவள் கண்களுக்கும் தெரிந்தாலும், ஆண்கள் மீது அவளுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. முதலில் துண்டை வாங்கி கொண்டு பிறகு அவளது வாசனை வந்து அவள் நினைவு வந்து விடக் கூடாது என்று எண்ணித் தான் வலுக்கட்டாயமாக அதை துவைத்துத் தர நினைத்தாள்.

இதை அவள் கூட வசிக்கும் ஒருத்தியிடம் சொல்வதை கேட்ட ரிஷி , அவளை வித்தியாசமாகப் பார்த்தான்.

அவள் மறுநாள் அவனிடம் சென்று அந்த டவலை திருப்பிக் கொடுக்க,
“நேத்து நீ அப்படியே கொடுத்திருந்தாலும் எனக்கு உன் நினைப்பு வந்திருக்காது, உன் பிரென்ட் கிட்ட சொன்ன காரணம் உன்னை மறுபடி நினைக்க வெச்சுடுச்சு” என அவளிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டான்.அவள் அப்பாவியாக விழித்ததும் நினைவில் தங்கிவிட்டது.

 

error: Content is protected !!