Kumizhi-2

Kumizhi-2

குமிழி-2

 

தூங்கியே வந்தாலும்
தூங்காமல் வரவேற்கும்
எங்கள் ஊர் மதுரை தூங்காநகரம்.

மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இருந்து பதினைந்து நிமிட பயணத்தில் இருக்கும் ஒரு பகுதி தான் மதுரை யா.ஒத்தக்கடை என்ற சிறிய ஊர்,

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இங்கே  யோகநரசிங்கப் பெருமாள் கோயில், பாலதண்டாயுதபாணி திருக்கோயில்  மற்றும் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது.

இந்த ஊரில் யானைமலை என்ற மலை உள்ளது. இந்த மலையின் மேலும், அடிவாரத்திலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சமணர் குகைகளை இங்குள்ள மக்கள் “பஞ்ச பாண்டவர் படுக்கை” என்றும் அழைக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படும் “ரோசா நிற கருங்கல்” இந்த மலையில் இருந்து தான் அதிகம் பெறப்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த ஒத்தக்கடையில் விவசாயத்தை செய்ய வழி கிடைக்காமல், ஒரு சிறிய உணவு விடுதியை நடத்தி கொண்டு தன் மனைவி கோதைநாயகியுடனும், தன் ஒரே செல்வ மகன் வருண பாண்டியனுடனும் சுக ஜீவனம் நடத்தி வந்தவர் ஈஸ்வர பாண்டியன்.

மகனின் கல்வி சற்றே ஏற்ற இறக்கத்துடன் இருந்த சமயத்தில், அவனை அதட்டி படிக்க வைக்கும் பொறுப்பை கையில் எடுத்தாலும், அதனை தன் மனைவி தடுத்து விட, அவன் படிப்பு விட்ட குறை தொட்ட குறையாக இழுத்து பிடித்து B.A பட்டதாரியாக்கி அழகு பார்ப்பதற்குள், அவர் சிவலோக பதவியை அடைந்து, அவன் படிப்பினை முடித்து தன் கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

கண்டிப்புடன், கட்டுப்பாட்டையும் சேர்த்து மகனை வளர்த்தவர் ஈஸ்வர பாண்டியன். கல்வியில் சற்று பின்தங்கிய நிலையை பொறுத்துக் கொண்டாலும், ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் அவனை புடம் போட்ட தங்கமாகவே உருமாற்றி வைத்திருந்தார். பாண்டியனும் தந்தை சொல்லையே வேதவாக்காக எடுத்துகொண்டு கடைபிடித்து வாழ்பவன்.

அனைத்து நல்ல விசயங்களையும் மகனுக்கு போதித்தவருக்கு அவனது அவசரபுத்தியையும், ஆத்திரத்தையும் அதனால் ஏற்படும் கோபகுணத்தையும் மாற்றி விட எவ்வளவோ முயற்சி செய்தாலும் அது இயலாத காரியமானது. அக்குணங்கள் அவனைத் தொடர்ந்த வண்ணமே, அவன் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வந்து கொண்டிருந்தது.

வருண பாண்டியன் பிறந்த நேரம், ஊரில் அடாது மழை பெய்து எல்லோரையும் மகிழ்விக்க, அந்த இன்ப நினைவை மனதிலே இருத்திக்கொள்ள அந்த வருண பகவானின் பெயரை மகனுக்கு சூட்டி அழகு பார்த்தார் ஈஸ்வர பாண்டியன்.

அவரின் மறைவிற்கு பிறகு படித்த படிப்பிற்கு வேலை சரிவர கிட்டாத காரணமும், சுய தொழிலின் மேல் கொண்ட நாட்டமும், அவனின் விருப்ப வேலையுமாய் உணவு தாயரிக்கும் தொழில் இருக்க, தன்னுடன் படித்த ஆறு நண்பர்களை கொண்டு, தாயாரின் நகைகளையும், அவன் தந்தை சிறிதளவே சேர்த்து வைத்த சொத்தையும் மூலதனமாக கொண்டு இருபத்திரண்டு வயதில் ஆரம்பித்ததே “ஹோட்டல் பாண்டியா”

தற்போது பதினைந்து பேர் அவன் கீழே வேலை பார்க்க, சமையலுக்கும், உணவு விடுதிக்கும் ஆட்களை பிரித்து, சூழ்நிலைக்கு தகுந்த முறையில் வேலைகளை அமைத்து கொடுத்து, வாரம் ஒரு முறை சம்பளத்தை கொடுக்கும் முதலாளி வர்க்கத்தை சேர்ந்தவனாய் வளர்ந்து நிற்கிறான் வருண பாண்டியன்.

இப்பொழுது அவன் தங்கி இருப்பது ஒத்தக்கடையில் உள்ள அவனது பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் தான். இடப்பற்றாக்குறையும், வேலை செய்வதற்கு ஏதுவாக விசாலமான, காற்றோட்டமான இடமும் தேவைப்பட்ட காரணத்தால், அவன் வீட்டிற்க்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை பார்த்து வாங்கியிருந்தவன் அதற்கு “கோதை இல்லம்” என்று பெயர் வைத்திருந்தான்.

வீட்டின் முன்னே இருபுறமும் சிறிய அளவில் திண்ணை இருக்க, அதனை தாண்டி உள்ளே சென்றால் நடை பாதையும், அதை ஒட்டியே ஒரு சிறிய அறை தொடங்கி, இரு பெரிய அறைகள் இருக்க, அதை ஒன்றாக்கி சமையல் வேலைகளுக்கு தகுந்த வசதிகளுடன் பெரிய அளவில் சமையல் கூடத்தை அமைத்து, அதற்கு பக்கத்திலே இரண்டு அறைகளும், மேலே மாடியில் மூன்று அறைகளும் கொண்ட வீட்டினையும் வாங்கி, வங்கிக் கடன் மூலம் மாதத் தவணை செலுத்தி வருகின்றான்.

வீட்டிற்கு பின்னால் சிறய அளவில் வாழையும், கீரை வகைகளும் கோதை நாயகியின் கைவண்ணத்தால் பயிரடப்பட்டிருக்க, கிணற்றுடன் கூடிய மோட்டார் பம்ப் செட்டும் போட்டு தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

காய்கறிகளை ஏற்றி கொண்டு கோதை இல்லத்திற்கு அவன் வந்தடைந்த நேரம் காலை நான்கு மணி.

சற்றே கனத்த சரீரமும், கை வைத்த வெள்ளை பனியன் வேட்டியில் வந்து கதவை திறந்தவர் அந்த வீட்டின் விசுவாசியாய், ஈஸ்வர பாண்டியன் காலத்தில் இருந்தே வாழும் ராமலிங்கம்.

ஒரு கால் ஊனமுடன், தாய் தந்தை மறைவிற்கு பிறகு ஆதரவில்லாமல் அனாதையாய் வந்தவருக்கு அடைக்கலம் தந்து, தன் கஷ்ட ஜீவனத்திலும், தனக்கு உணவு உடை இருப்பிடம் தந்து ஆதரவு அளித்தவரின் குடும்பத்திற்க்கு என்றும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டிருக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்.

வருண பாண்டியனின் மேல் அளவில்லாத பாசம் கொண்டவர் வார்த்தைக்கு வார்த்தை “பாண்டியரே” என்று எப்பொழுதும் அன்புடன் அழைப்பவர்.

கையில் ஊன்றுகோலுடன் சற்றே விந்தி நடந்து கதவை திறந்து

“என்ன பாண்டியரே? இன்னைக்கும் நேரம் கழிச்சு தான் வந்திருக்கீங்க?”

“இது எப்போவும் நடக்குறது தானே பெரியப்பா!! காய்கறி எல்லாம் சமயகட்டுல வைக்கிறேன், அம்மா, அத்தை வந்து பிரிச்சு வைக்கட்டும். நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க. இப்போவே எல்லாத்தையும் பிரிச்சு எடுத்து வைக்க வேணாம், காலம்பரம் ஏழு மணிக்கு மணி வருவான், அவன் கூட ஹோட்டலுக்கு போய் நான் வர்ற வரைக்கும் அங்கே கல்லாவுல உக்காந்திருங்க, சுத்த பண்ணற வேலையெல்லாம் முடிச்சுட்டு தான் வந்தேன், அங்கே போய் சாமி கும்பிட்டு, யார் எத்தன மணிக்கு வேலைக்கு வந்தாங்கனு குறிச்சு வச்சுடுங்க”

“அதெல்லாம் சரிய்யா, இப்படி பொழுதுக்கும் தூங்காம வேலை பார்த்து தான் ஆகணுமா? உங்க அம்மா இங்கன புலம்பிட்டு இருக்கு, இந்த மார்கெட்டு வேலைக்கு ஒரு ஆள வச்சா தான் என்ன? இல்ல மதியம் வரைக்குமாவது நீ தூங்கினா தான் என்ன?” என ராமலிங்கம் ஆதங்கத்துடன் கேட்க

“இப்போ வீட்டுக்கு போய் அந்த வேலைய தான் பாக்க போறேன் பெரியப்பா!! பத்து மணிக்கு மேல தானே என்னோட அடுத்த வேலையில கையில எடுக்க போறேன் இது பத்தாதா?”

“அது எப்படி பத்தும் பாண்டியா? ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு மணிநேரம் தூங்கணும்னு டிவி பொட்டியில, நியூஸ் பேப்பர்ல எல்லாம் சொல்லிட்டே இருக்க நீ அஞ்சுமந்நேரம் (ஐந்து மணிநேரம்) மட்டுமே தூங்குனா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?” என்று ராமலிங்கத்திருக்கு துணையாய் பேசியவர் செங்கமலம். கோதை நாயகிக்கு அனைத்து வகையிலும் உதவியாய் இருப்பவர்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்த, இப்படி நேரக்கணக்கு பார்த்து நாம இங்கே வேலை பார்த்தா, நம்மள இன்னொருத்தன் முந்திட்டு போயிருவான். அதுக்கு நாம இடம் குடுக்க கூடாது”

செங்கமலத்திடம் பேசி முடித்தவனின் கண்கள் ரவியை தொடர அவனோ எல்லா காய் வகையிலும் இருந்து நான்கு வீதம் ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தான்.

“என்னடா பண்றே ரவி?”

“அதுவா பாண்டி!! மதியம் அத்தை வீட்டுக்கு போறேன், அங்கே  கொண்டு போக தான் இதெல்லாம், போன தடவையே அத்த சொல்லி விட்டுச்சு”

“அத்த சொல்லி விட்டுச்சா? இல்ல உன்னோட வருங்காலத்துக்கிட்ட நல்ல பேர் வாங்க கொண்டு போறியா?”

ரவியின் சொந்த முறைப்பெண் கனிமொழி, திருமணம் செய்ய பேச்சு வார்த்தையில் முடிந்திருக்க, உத்தங்குடியில் இருக்கும் அவள் வீட்டிற்கு வாரத்தில் ஒரு முறை சென்று வருவது வழக்கம்.

“நமக்குள்ள என்ன பாண்டி? இதெல்லாம் வெளியே சொல்லிட்டு இருக்கே?”

“அட என் பொறுப்பு புண்ணாக்கே?? உன்னோட நல்லத்தனத்துக்கு ஒரு அளவில்லையாடா? உன்னோட காதல் பயிருக்கு ஊட்டம் குடுக்க என்வூட்டு காய்கறி தான் கிடைச்சுதா?” சிரித்துக்கொண்டே சீண்டலுடன் கேட்டாலும் தன் பங்குக்கு காய்கள் சிலவற்றை அவனுக்கு எடுத்துக் கொடுத்தான்.

“அட என்னாப்பா நீ? இதுக்கே இவ்ளோ கணக்கு பாக்குற? மார்கெட்ல அந்த பாட்டி எவ்ளோ பீன்ஸ் அப்பிடியே அள்ளி போட்டுச்சு, அதுக்கு எல்லாம் நான் பங்குக்கு வந்தேனா? அது போக ரெண்டு கூடை தக்காளிக்கு குத்தம் குறை சொல்லியே ஒண்ணுக்கு தான் காசு குடுத்தே, இதெல்லாம் நான் ஏதாவது வெளியே சொன்னேனா இல்லல்ல? அது மாதிரி நீயும் இதயெல்லாம் அப்பப்ப கண்டுக்காம விட்றது தான் உனக்கு நல்லது மச்சி”

“போதும்டா நிப்பாட்டு… கம்பெனி ரகசியத்த வெளியே சொன்னா, அங்கே நீ யாரை எல்லாம் சைட் அடிச்சனு என் தங்கச்சி கிட்ட சொல்ல வேண்டி வரும் மச்சான்” பாண்டியன் நக்கலடிக்க

“டேய் மச்சான், உன்னோட சமூக சேவைக்கு கொஞ்சம் ப்ரேக் விடு. அங்கே இருக்கிற பாட்டிகளோட கனமான சுருக்கு பை கீழே நழுவி விழுந்தா ஆட்டைய போடலாம்னு பார்த்தத, சின்ன பொண்ணை சைட் அடிச்ச கணக்கா சொல்லி வைக்குறியேடா, உனக்கு வரவர குசும்பு ஓவரா போச்சு, இப்படி பேசிபேசியே அஞ்சு புதினா கட்டுல, மூணுக்கு தான் காசு குடுத்துட்டு வந்த பாண்டி”

“டேய் அவன் கட்டுல புதினா கீரை கம்மியா இருந்துச்சுடா, அத நீ பார்த்தே தானே, உன்னை பக்கத்துல வச்சுட்டு எந்த வேலையும் செய்ய முடியல. உனக்கு மொத ஒரு கால்கட்டு போட்டு வீட்டுல அடைக்க சொல்லணும், இல்லைனா என் பொழப்பு தான் நாறிப்போகும் போல, பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா உன்னை விட்டு தள்ளவும் முடியல, கூட கட்டிக்கிட்டு அழவும் முடியலடா ரவி” சீண்டிக்கொண்டே பாண்டியன் சிரிக்க

“இங்கே சொன்னத எங்க வீட்டுல வந்து சொல்லுப்பா, எல்லாத்துக்கும் உன்னைய மனசுல வச்சுட்டே, என்னை எடை போட்டு பேசி, இப்போ கல்யாணத்துக்கும் உன்னை காரணம் சொல்லியே சீக்கிரம் வைக்காம இருக்காங்க” சோகமாய் ரவி புலம்ப,

“அடப்பாவமே!! என்னடா என்னை வில்லனாக்கிட்ட? நான் என்னடா செஞ்சேன்? வீட்டுல என்னத்த பேசி வச்சே நீ?”

“நான் பேசல மச்சி, எங்க வீட்டு ஆத்தா, அத்தை எல்லாம் முடிவு பண்ணி, இப்போ என்னோட கல்யாண கனவுல நீ தான் குதிச்சு கும்மி அடிச்சிட்டு இருக்க, நான் சன்யாசம் வாங்குறதும் சம்சாரி ஆகுறதும் உன் கையில தான் மச்சான் இருக்கு” தன் சோகத்தை கசக்கி பிழிய விட்டான் ரவி.

“அப்டி என்ன கெடுதல்டா நான் பண்னினேன்? என் வேலைய பார்த்துட்டு ஒரு ஓரமா தானே போயிட்டு வந்திட்டு இருக்கேன்” -பாண்டி

“அதான் அங்கே தப்பா போயிட்டு மாப்பு, முதலாளி நீயே சிங்கிளா சுத்தும் போது தொழிலாளி உனக்கு என்னடா அதுக்குள்ள மிங்கிள் ஆக ஆசைன்னு எல்லாரும் கேட்டு வைக்கிறாய்ங்க… எனக்கு மச்சான் கொடுமை உன் மூலமா தான் நடக்குது மச்சி, இந்த கன்னி பையன் சாபம் உன்னை சும்மா விடாது சொல்லிபுட்டேன்” என பாவமாய் பேசி வைக்க

இந்த பேச்சுக்கள் அனைத்தும் நடந்தது, ஆட்டோவில் சாமான்களை இறக்கி வைக்கும் போது தான்.

“அதுக்கென்ன ரவி! இந்த தை பொறந்தா நம்ம பாண்டியருக்கு கல்யாணம் முடிய போகுது. கையோட உனக்கு அடுத்த முகூர்த்ததுலயே வச்சுட்டா போச்சு” என்று பெரியவர் ராமலிங்கம் சொல்ல

“பெரியப்பா!! இன்னும் பேச்சு வார்த்தையில தான் இருக்கு, அதுக்குள்ள நீங்க கல்யாணமே முடிஞ்ச மாதிரி பேசி வைக்க கூடாது”

“அது என்ன பாண்டி, இப்படி சொல்லிட்டே? உன்னய கட்டிக்க எந்த பொண்ணுக்கு தான் கசக்கும், இன்னிக்கு பேச வர்றவங்க நிச்சயத்துக்கு நாள் குறிச்சுட்டு தான் போவாங்க தம்பி” செங்கமலமும் தன் பங்குக்கு சொல்லிட

“எனக்கு அதெல்லாம் தெரியாது அத்த! நல்லது நடந்தா சரி தான். அம்மாக்கு ஒத்தாசையா ஒரு பொண்ணு வேணும் அவ்ளோ தான். எனக்குனு எந்த எதிர்பார்ப்பும் இல்ல, நான் பொழுதுக்கும் ஹோட்டல் போயி உக்காந்திருவேன், இங்கே உள்ளவங்க மனசு கோணாம வர்றவ நடந்துகிட்டா அதுவே போதும்”

“அதெல்லாம் உன் மனசு போலவே நடக்கும் பாண்டி” சொல்லிவிட்டு இரண்டு பெரியவர்களும் உள்ளே சென்று விட

“என்ன பாண்டி? இவ்ளோ பெரிய விசயத்த ஈசியா சொல்லி முடிச்சுட்டே”-ரவி

“என்ன பெரிய விஷயம் மச்சான்?” -பாண்டி

“அதான்டா உனக்குனு எந்த எதிர்பார்ப்பும் இல்லனு சொன்னியே அத சொன்னேன்டா பாண்டி”

“இதெல்லாம் ஒரு விசயமாடா? விட்றா… விட்றா நான் எப்போவும் நிம்மதியா இருக்க பிளான் பண்ணிட்டேன்டா. அதான் இந்த முடிவு. நீயும் என்னை மாதிரி இருக்க பாரு ரொம்ப சீக்கிரம் முன்னுக்கு வந்துருவ ரவி”

“யாரு உன்னை மாதிரி தானே? மாறிட்டா போச்சு, சும்மாவே ரவைக்கு(ராத்திரி நேரம்) வீட்டுல தங்காத குறைக்கு தான் உனக்கு கல்யாணம் முடிக்கவும், எனக்கு முடிக்க பாக்குறாங்க. உன் பின்னாடியே நானும் வந்தேன்னா என் வம்சம் தலச்சிரும்டா மாப்பு” ரவி அங்கலாய்க்க

“அதெல்லாம் சைட் கேப்ல பார்துக்கலாம் மச்சி, எல்லாமே அந்தந்த நேரத்துக்கு தான் நடக்கணும்னு சட்டம் இருக்கா என்ன? நாம புது ரூல்ஸ் கொண்டு வருவோம் ரவி மச்சான்”

“அப்போ புதியதொரு விதிசெய்வோம் கணக்கா புதுப்புது ருல்ஸ் போட்டு தான் உன்னோட பாமிலிய(family) பிளான் பண்ணி, டெவலப் பண்ண போறேன்னு சொல்லு மச்சி” வடிவேலு பாஷையில் ரவி பேச

“ஆமாண்டா என் நொங்கு… என் பின்னாடியே வந்து என்னை கெட்டியா பிடிச்சுக்கோ. என்னோட புது விதிக்கு உன்னை சட்ட அமைச்சர் ஆக்கிட்றேன்”- பாண்டி

“ஏண்டா டேய்!! சம்சாரி ஆனாலும் சன்யாசத்தை விட மாட்டியாடா நீ? மூணு வேளை சாப்பாடு நான் முழுசா சாப்பிடுறது உனக்கு பிடிக்கலன்னா சொல்லிடு மச்சான், நான் இந்த பக்கம் தலைவச்சு படுக்கமா இருந்துறேன். ஏற்கனவே பலியாடு கணக்கா உன் பின்னாடி சுத்துறேன்னு பேர் எனக்கு, நீ அத நெசமாக்கி என் குடும்ப வாழ்க்கைக்கு எண்டு கார்டு(end card) போட்டுடாதே மாப்பு. உன்னோட விதிய நீயே ஃபாலோ பண்ணி, உன்னோட சட்டத்துக்கும், திட்டத்துக்கும் அமைச்சரா இருந்துக்கோ, என்னை ஆளை விடு” என்று  புலம்ப

அதற்குள் பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்த ராமலிங்கமும், செங்கமலமும்

“இன்னும் நீங்க வீட்டுக்கு போகலையா தம்பிகளா?, அண்ணி வந்து பார்த்தா என்னை தான் சத்தம் போட போறாங்க”

“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க அத்த, இதோ கிளம்பிட்டோம்”

“பாண்டியா! இன்னைக்கு சாயந்திரம் சிவா ஹாஸ்டல் காலி பண்ணிட்டு வர்றாப்பா போய் கூட்டிட்டு வரணும்”

“அதுக்கென்ன அத்த… யாரை அனுப்பணும்னு சொல்லு அனுப்பி வைக்கிறேன்”

“உனக்கு அந்த பக்கம் போற வேலை இருந்தா போய் கூட்டிட்டு வா தம்பி, இல்லைனா நான் போயி கூட்டிட்டு வரேன்”

“நான் மதியம் போல சொல்றேன்த்த, எதுக்கும் நீயும் போறதுக்கு ரெடியா இரு” என்று சொல்லியவாறே அவன் உறங்க தன் வீட்டிருக்கு சென்ற நேரம் காலை ஐந்து மணி.

***************************************************

யானைமலையின் நீளம் சுமார் 4 கிமீ., அதாவது 4 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், 4 மீட்டர் உயரம் கொண்டது . இம்மலையைச் சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போலத் தோன்றுவதால் இம்மலை யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது. யானைமலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.

***************************************************

பார்த்த இடமெல்லாம் கண்ணைக் கவரும் கோபுரங்கள், மங்கையர் விரும்பும் மல்லிகை, சுடச்சுட சுக்கு காபி, ஜில் ஜில் ஜிகர்தண்டா இவையெல்லாம் மதுரை மண்ணின் இயல்போடு உறவாடும்.

திரும்பிய இடமெல்லாம் வடை கடைகள், விதவிதமான சுடச்சுட வடை சாப்பிடுவோரின் “சொர்க்கபூமி” மதுரை தான்.

error: Content is protected !!