UUP–EPI 6

அத்தியாயம் 6

 

கேஸ்ட்ரின்(Gastrin) எனும் ஹார்மோன்தான் கேஸ்ட்ரிட் அசிட் எனும் திரவியத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அசிட் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் ப்ரோட்டினை  உடைத்து உடம்புக்குரிய சத்தினை எடுத்துக் கொள்கிறது. அதோடு உணவில் இருக்கும் பாக்டிரியாக்களையும் கொல்ல உதவுகிறது. இந்த ஹார்மோன் அதிகமாக கேஸ்ட்ரிக் அசிடை சுரக்கும் போது தான் அல்சர், செரிமான பிரச்சனைகள் போன்றவை வருகிறது.

 

அன்று

 

“ஒவ்வொரு வருஷமும் ஔவையாரு தானாம்மா? ஒரு ராணி வேஷம், டயானா வேஷம், இல்லைனா மகாலெட்சுமி வேஷம் இப்படி எதாச்சும் போடலாம்லமா” சிணுங்கினாள் சண்மு.

பள்ளியில் மாறுவேடப் போட்டி அறிவித்திருந்தார்கள். அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

“டயானா வேஷம் போட்டா அழகான ட்ரெசு வேணும், ராணி வேஷம் போட்டா கிரீடம் வேணும், லெச்சுமி வேஷம் போட்டா நல்ல பட்டு சேலை, கழுத்துல காதுல நகைங்கன்னு போடனும்டி! அதுக்குலாம் நான் எங்கப் போவேன்? உங்க ரெண்டு பேரு வயிரு வாடாம இருக்கவே நான் படாதபாடு படறேன். இதுல கொசுறா இந்த செலவு வேறயா? உங்க ஸ்கூலுல ஏன்டி இந்த மாதிரிலாம் போட்டி வைக்கிறாங்க? இருக்கறவன் நல்லா அம்சமா வருவான், இல்லாதவன் நம்மள மாதிரி தான் பிச்சைக்காரன் வேஷம் போடனும். இந்த வயசுலயே புள்ளிங்க மனசுல நான் பணக்காரன், நீ ஏழைன்னு விதைச்சு வைக்கறானுங்க நாசமா போனவனுங்க” திட்டியப்படியே தன்னிடம் லேசாக கிழிந்திருந்த ஒரு பழைய புடவையை சண்முவுக்காக வெட்டித் தைக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். கண்ணன் தாயின் காலடியில் சுருண்டுப் படுத்திருந்தான்.

அம்மா சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வயதா அவளுக்கு? மனம் கோபத்தில் ஓலமிட,

“நான் கதிரப் பார்க்கப் போறேன்” என நண்பனைப் பார்த்துப் புலம்ப போக முயன்றாள்.

“இருடி, உடனே ஓடிருவ! அடுப்படில கீரைக்கட்டு வச்சிருக்கேன் பாரு! கொண்டு போய் மூனாவது வீட்டு அச்சம்மா கிட்ட குடுத்துட்டு, அவங்க குடுக்கற காசை வாங்கிட்டு வா. காசு மேல கைய வச்ச, கொன்னுப் போட்டுருவேன். ஓடு!” என விரட்டி விட்டார் மீனாட்சி.

தாஉ சொல்லை அச்சுப்பிசகாமல் கேட்பவளா சண்மு! சில்லரையை எடுத்து பாக்கேட்டில் போட்டுக் கொண்டவள், மீத பணத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டு வெளியே ஓடினாள்.

“அடியே, சில்லரைலாம் எங்கடி?” என இடி போல மீனாட்சியின் குரல் கேட்க, அடித்துப் பிடித்து ஓடிவிட்டாள். வீட்டிற்குப் போனதும் முதுகு தோல் கிழிந்துவிடும். ஆனால் அதற்கு முன் குச்சி ஐஸ்சின் தித்திப்பும், ஜில்லிப்பும் மனதை நிறைத்து விடுமே! அதற்குப் பிறகு என்ன அடி வாங்கினாலும் அவளுக்கு தூசிதான்.

அவர்கள் மீட்டிங் ஸ்பாட், ஆலமரத்தடிக்கு வந்து அமர்ந்தாள் சண்மு. கீழே கிடந்த குச்சியை எடுத்து மண்ணை நோண்ட ஆரம்பித்தாள். கல்லைப் பொறுக்கி எவ்வளவு தூரம் வீச முடியுமோ, அவ்வளவு வேகத்துக்கு வீசினாள்.

அவள் வந்த பத்து நிமிடத்துக்குள் வந்து விட்டான் கதிர். ஒரு கையில் டிபன் பாக்ஸ். இன்னொரு கையில் கொஞ்சம் புத்தகங்கள். அவன் அருகே அமர்ந்த அடுத்த நொடி, அவன் கையில் இருந்த டிபன் பாக்சை பிடுங்கித் திறந்தாள் சண்மு.

“அய்!!!!உப்புமா! தேங்க்ஸ்டா கதிரு”

பலருக்கு உப்புமா என்றாலே அலர்ஜி. பழைய சோறு சாப்பிடும் சண்முவுக்கு உப்புமா கூட பிரியாணிக்கு சமம்.

கையைப் பாவாடையில் நன்றாக துடைத்துக் கொண்டவள், ஆசையாக அள்ளி சாப்பிட்டாள்.

“நல்லாருக்குடா கதிரு! என்ன சொல்லு, உங்கம்மா திட்டுறப்போ கோபம் கோபமா வந்தாலும், அவங்க சமைச்சத சாப்பிடறதே ஒரு சுகம்டா! அவ்ளோ ருசி”

சிரிப்புடன் வலது கையை அவள் முன் நீட்டினான் கதிர். உப்புமாவை உருட்டி அவன் கையில் வைத்தாள் சண்மு. சிந்தி விடாமல் அழகாக சாப்பிட்டான் கதிர்.

“நீ வீட்டுல சாப்டத்தானே? அப்புறம் ஏன்டா என் பங்கையும் கேக்கற?” கடுப்பாக பேசினாலும் மறுபடியும் அவன் கையில் உருட்டி வைக்கத் தவறவில்லை சண்மு.

“உன் கையால ஒரு பிடி சாப்டா இன்னும் ருசியா இருக்கு சம்மு”

“இருக்கும், இருக்கும்! காலைல இருந்து நான் கையையே கழுவல! அதான் அந்த ருசி!”

அவள் பெரிய ஜோக் சொல்லிவிட்ட மாதிரி உரக்க சிரித்தான் கதிர். சாப்பிட்டு முடித்தவர்கள், கொஞ்ச நேரம் பள்ளிப் பாடங்களை செய்தார்கள். அவளது நோட்டும் கதிரிடம் தான் இருந்தது. அவன் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க, இவள் ஏனோதானோவென்று படித்தாள்.

“சம்மு! அது சோவிங் மிசின். சேவிங் மிசின் இல்லடி”

“நீ பொய் சொல்லுறடா கதிரு! எஸ் ஈ(se) சேர்ந்தா சேன்னு வரும்னு வாத்தி சொன்னாரு. இதுல எஸ் ஈ தான் வருது. அதனால இது சேவிங் மிசின் தான். நீ சோவிங் சொல்ற! யார டபாய்க்கப் பார்க்கற? கொன்னுருவேன்!”

“இங்க எழுதியிருக்கறது சோவிங் தான்டி. அப்படினா உங்கம்மா தைக்கிறாங்களே அந்த மிசின் அது. சேவிங் மிசின்னா தாடி மழிக்கற மிசின்டி” பொறுமையாக விளக்கினான் கதிர்.

“அதெல்லாம் பொய்யி! நீ தப்பு தப்பா சொல்லிக் குடுக்கற! எங்க உன்ன விட நான் நல்லா இங்லீசு படிச்சிருவேனோன்னு உனக்கு பயம்!“

“ஆமாடி! தொன்னுத்து எட்டு மார்க்கு எடுக்கறவன் நாற்பத்தி எட்டு மார்க்கு எடுக்கற உன்னப் பார்த்து பயப்படறான்!”

“வாத்திலாம் உன்னைத் தலையில தூக்கி வச்சு டான்ஸ் ஆடறாங்கல, அந்தத் திமிர்ல பேசறடா! என்னவோ போ, இந்த இங்கிலீசே எனக்குப் புடிக்கலடா கதிரு!”

“அப்படிலாம் சொல்லக் கூடாது சம்மு! இங்கிலீசு தெரியலைனா நம்மள கேவலமா பார்ப்பாங்க! சென்னைல டாக்டர்லாம் இங்கிலீசுல தான் பேசறாங்க! எங்க கூட சொந்தக்காரு ஒருத்தர் வந்து டாக்டர் சொல்லறத தமிழ்ல சொல்லுவாருடி அம்மாவுக்குப் புரியற மாதிரி”

“ஓஹோ! அந்த டாக்டரு வெள்ளைக்காரரா?”

“இல்லடி தமிழருதான்”

“அப்பா தமிழுல பேசுனா அவருக்கு முத்து சிந்திருமோ? உங்கம்மாவும் தமிழு அவரும் தமிழு! அப்புறம் நடுவுல என்ன கர்மத்துக்கு இங்கிலீசு?”

“அது வந்து.. அவங்களாம் அப்படிதான்டி! படிச்சுட்டு பெரிய பதவிக்குப் போய்ட்டா தமிழ மறந்துடனும் போல! அப்போத்தான் நாலு பேரு மதிப்பாங்கடி”

“ஊரான் வீட்டு மொழிய படிச்சாத்தான் மதிப்பு வரும்னா, அப்படி யாரும் என்ன மதிக்க வேண்டா போ!”

“வெளிநாட்டுக்குலாம் போனா இங்கிலீசு வேணும் சம்மு!”

“வெளிநாடா? யாரு நானா? வாய்ல நல்லா வந்துரும்டா கதிரு! நீ அப்பேற்பட்ட சென்னைக்கேப் போய்ட்டு வந்துட்டல்ல அதான் இப்படி என்னைக் கிண்டல் அடிச்சுப் பார்க்கற! நான் பக்கத்துல இருக்கற கங்கை கொண்ட சோழபுரத்துக்கே போனது இல்ல! இதுல வெளிநாடாம்!”

தோழி கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவளை சமாதானப் படுத்த விழைந்தான் கதிர்.

“சரி அத விடு! மாறுவேடப் போட்டிக்கு என்ன வேஷம் கட்டப் போற சம்மு?” என அவளுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

“அதே சுட்டப் பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா ஔவையார்தான்டா! வேற வேஷம் கேட்டா எங்கம்மா வாயிலயே சூட்டுக்கோல வச்சி சுட்டுருவாங்க” கோபம் போய் சோகமானாள் சண்மு.

“உனக்கு ஔவையார் வேஷம் ரொம்ப அழகா இருக்கு சம்மு. அதனாலதான் அம்மா அதயே திரும்ப போட சொல்லுறாங்க! அதுவும் கொஞ்சமா கூன் வளைஞ்சு போன வருசம் நீ நடந்து வந்தப்போ, அப்படியே கே.பி சுந்தரம்பாள் பாட்டியே நேருல வந்த மாதிரி இருந்துச்சுடி”

“அப்படியா? நெஜமாவாடா? நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்” சோகம் மறந்து மகிழ்ச்சியானாள் சண்மு.

“அப்படியே நம்ம கண்ணனுக்கு கண்ணன் வேஷம் போட்டு விட்டரலாம். அம்மா கிட்ட சொல்லி கொஞ்சமா சேலை துணிடா இடுப்புக்கு கீழ சுத்தி விட்டரலாம். அப்படியே என் புல்லாங்குழல் கையில குடுத்துரலாம். மேல சட்டை ஒன்னும் போட வேணாம். என்னோட தங்க சங்கிலி மட்டும் போட்டு விட்டறலாம்! எப்படி என் ஐடியா?”

“ரொம்ப நல்லா இருக்குடா கதிரு! செம்ம ஐடியா! நீ என்னவா வர போற? போன வருஷம் வீரபாண்டிய கட்டப் பொம்மன் வேஷத்துல தக தகன்னு ரொம்ப நல்லா இருந்தடா நீ”

“இந்த தடவை பாரதியா வர போறேன்”

“பாரதியா? நம்ம தமிழ் வாத்தி கூட அவர் பாட்டு என்னமோ சொன்னாரே போன வாரம்”

“ஆமா, அச்சமில்லை பாட்டு! அவர் தான் என்னை தனியா கூப்பிட்டு பாரதியா வேஷம் போட சொன்னாரு. அந்தப் பாட்டையும் மேடையில பாட சொன்னாருடி”

“அந்தப் பாட்டு பாடறப்போ வாத்தியோட முகத்தப் பார்க்கனுமே! அப்படியே ஜொலிச்சுச்சுடா! எனக்கு அர்த்தம் புரியலைனாலும் அவர் அப்படியே சிலிர்த்துக்கிட்டு சொன்னப்போ நான் மெய் மறந்துப் போய்ட்டேன்டா கதிரு. உனக்கு தெரிஞ்சா அந்தப் பாட்டுக்கு, எனக்குப் புரியற மாதிரி அர்த்தம் சொல்லேன், ப்ளிஸ்டா”

“முதல் பாதி பாட்ட மட்டும்தான் என்னை பாட சொன்னாரு. அதுக்கு என்ன அர்த்தம்னு அவர் கிட்ட கேட்டேன். அவர் சொன்னத உன் மண்டைக்குப் புரியற மாதிரி சொல்றேன், கேளு!

‘அச்சமில்லை கொஞ்சம் கூட அச்சம் இல்ல

ஊருல உள்ளவங்க எல்லாரும் எதிர்த்து நின்னாலும் அச்சம் இல்ல

நம்மள கேவலமா நினைச்சு கேடு செஞ்சாலும் அச்சம் இல்ல

பிச்சை வாங்கி சாப்பிடற நிலைமை வந்தாலும் அச்சம் இல்ல

ஆசைப்பட்ட பொருளையெல்லாம் இழந்துட்டு ஐயோன்னு நின்னாலும் அச்சம் இல்ல கொஞ்சம் கூட அச்சம் இல்ல’

இதான் சம்மு அதோட அர்த்தம். புரிஞ்சுச்சா?”

“ரொம்ப நல்லா இருக்குடா கதிரு”

“ஆமா சம்மு! நம்ம பக்கம் நியாயம் இருந்தா எதுக்கும் பயப்படக் கூடாதுன்னு தமிழ் வாத்தியார் சொன்னாருடி”

“அப்படிங்கற? அப்போ நான் செஞ்சது தப்பே இல்ல”

“என்னடி செஞ்ச?”

“அந்தப் பெருமாள் இருக்கான்ல!”

“ஆமா, ரெண்டு நாளா அவன் ஸ்கூலுக்கு கூட வரல. கைல பூராண் கடிச்சிருச்சாம்”

“அந்த பூராண நான்தான் அவன் பேக்குல தூக்கிப் போட்டேன்.”

“என்னடி நான் செக் அப்புக்கு சென்னைக்கு போய்ட்டு வந்த கேப்ல இந்த வேலை பண்ணி வச்சிருக்க!” அதிர்ந்துப் போனான் கதிர்.

“பாரதியே சொல்லிட்டாருடா, நியாயம்னா அச்சப்படக் கூடாதுன்னு. அவன் என் தண்ணி போத்தல்ல மண்ண அள்ளிப் போட்டுட்டான்டா கதிரு. தவிச்ச வாயில மண்ண போட்டவனுக்கு தண்டனை வேணா? அதான் மண்ண அள்ளிப் போட்ட கைய ஆயி கூட கழுவ முடியாதபடிக்கு ஆப்படிச்சுட்டேன்”

தலையை சொறிந்துக் கொண்டே வில்லி கணக்காய் பேசினாள் சண்மு.

“இன்னோரு பூராண் கூட புடிச்சு வச்சிருக்கேன். இப்போ நீ சொல்லுடா கதிரு, இந்தப் புக்குல போட்டுருக்கே அது சோவிங்கா இல்ல சேவிங்கா?” என அவனை கெத்தாக பார்த்தப்படி கேட்டாள் சண்மு.

“செத்துப் போன எங்க ஆயா மேல சத்தியமா அது சோவிங்தான்டி சொறி சம்மு“ என சொன்னவன் அடுத்த நொடி புறமுதுகிட்டு ஓடியிருந்தான்.

“யார்டா சொறி சம்மு! இருடா ஒன்ரை உனக்கு பூராண் பூசை போடறேன்” என அவனைத் துரத்த ஆரம்பித்தாள் சண்மு.

மாறுவேட போட்டியின் போது, முதல் பரிசை வென்ற முண்டாசு கதிர் சொன்ன பாரதியின் வரிகள் இவைதான்:

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!”

கணீரெனும் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கவி பாடியதை  கீழே அமர்ந்தப்படி கேட்டிருந்த சண்முவின் மனதில் கல் வெட்டென பதிந்தன அவ்வரிகள்.

 

இன்று

ப்ளாஸ்கில் எடுத்து வந்திருந்த டீயை கப்பில் ஊற்றி மெல்ல உறிஞ்சியபடியே தன்னை சுற்றி மொட்டு விட்டிருக்கும் அழகிய மலர்களைப் பார்த்திருந்தாள் சண்மு. அன்று காலையில் சிவா மட்டும் வந்து கட்டிட வேலையைப் பற்றி பேசி விட்டு, முன்பணம் வாங்கி சென்றிருந்தான். மதிய நேரத்தில் கதிர் சொன்னதாக சொல்லி இரு பெண்கள் அவளிடம் வேலை கேட்டு வந்திருந்தார்கள். ஒருவர் கொஞ்சம் நடுத்தர வயதாகவும், மற்றவள் இப்பொழுதுதான் காலேஜ் முடித்தவளாகவும் இருந்தாள்.

இருவருக்கும் ஓரளவு தோட்ட வேலை தெரிந்திருந்தது. செடி கொடிகளைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். பேசிப் பார்த்ததில் சண்முவுக்கு முழு திருப்தி. மறுநாளில் இருந்து வேலைக்கு வரும்படி பணித்தவள், சம்பளம், விடுமுறை போன்றவற்றைப் பேசி முடித்து அனுப்பி இருந்தாள்.

மனதில் உள்ள சஞ்சலங்கள் அகன்றதால் வயிறு பசிப்பது போல இருந்தது. பேக்கில் இருந்து டிபன் பாக்சை வெளியே எடுத்தாள் சண்மு. வாட்டர் பாட்டிலில் இருந்த நீரால் கையைக் கழுவியவள், மண்ணில் அப்படியே அமர்ந்துக் கொண்டாள். மாலை நேரத்து சூரிய ஒளி எட்டிப் பார்க்க, தன்னை சுற்றி பூ வாசம் வீச, தானே செய்து எடுத்து வந்திருந்த உப்புமாவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு பசித்து சாப்பிவதை விடுத்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள் சண்மு.

இரண்டு வாய் சாப்பிட்டிருப்பாள், அவள் முன் வலிய கரம் ஒன்று நீண்டது. நிமிர்ந்துப் பார்த்தாள் சண்மு. கதிர் கொஞ்சமாக குனிந்து கையை அவள் முன் நீட்டியப்படி நின்றான். பார்வை மட்டும் அவள் மேல் இல்லாமல் உணவின் மேல் இருந்தது.

மெல்ல உப்புமாவை உருட்டி அவன் கையில் வைத்தாள் சண்மு. கொடுப்பாளா மாட்டாளா என்பது போல குனிந்து நின்றிருந்தவன், அவள் உணவை கையில் வைத்ததும் மெல்ல கீழே அமர்ந்தான். முகத்தை லேசாக சுருக்கியபடி, இரு காலையும் நீட்டிப் போட்டு தரையில் அமர்ந்துக் கொண்டான். அவன் கை நீட்ட, இவள் கொடுக்க என இருவரும் அமைதியாக சாப்பிட்டார்கள்.

உணவை முடித்து அவள் எழுந்துக் கொள்ள, அவன் அப்படியே அமர்ந்திருந்தான். கையைக் கழுவிக் கொண்டவள், எழாமல் அமர்ந்திருக்கும் அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

“கால்ல குண்டடி பட்டிருக்கு. இன்னும் ரிக்கவர் ஆகல. உட்காரும் போது கொஞ்சம் சுலபமா இருக்கும். ஆனா சட்டுனு எழ முடியாது”

“ஓ!!!”

அவள் பார்வை அவசரமாக அவன் இரு கால்களையும் ஆராய்ந்தது. முழு பேண்ட் போட்டிருந்ததால் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.

“சோத்து காலுல தான் அடி. நான் எழ கைக்கொடு” என கையை நீட்டியபடி அமர்ந்திருந்தான் கதிர்.

பலம் கொண்ட மட்டும் தன் இரு கைகளால் அவன் எழ உதவினாள் சண்மு. முழு பாரத்தையும் அவளிடம் தள்ளாமல் சிரமப்பட்டு எழுந்தான் கதிர்.

“எப்படி குண்டு பட்டுச்சு?”

“எப்படியோ பட்டுச்சு! உனக்கு என்ன அதைப்பத்தி?” மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

“நான் அப்பவே சொன்னேன், ஒன்ரைக்கெல்லாம் போலீஸ் வேலை சரிபடாதுன்னு. திருடன் லெப்ட்ல ஓடிருப்பான், நீ ரைட்ல துரத்திருப்ப! அதான் பொசுக்குன்னு சுட்டுட்டுப் போயிட்டான்” என சொல்லியவள் அவன் கைக் கழுவ தண்ணீரை நீட்டினாள்.

அவளை முறைத்தப்படி கைக் கழுவிக் கொண்டவன்,

“ஒன்ரையா இருந்தா இருந்துட்டுப் போறேன்! எனக்குன்னு ஒருத்தி வராமலா போயிட்டா!” என கடினமான குரலில் கூறினான்.

“ஆமா! அன்னிக்கு நிச்சயத்துக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்! நீ முகத்த திருப்பிக்கவும் சாப்பிடாம கூட வந்துட்டேன்” என சாப்பிடாமல் வந்தது தான் முக்கியம் போல பேசினாள் சண்மு.

“உன்னோட வாழ்த்த எதிர்ப்பார்த்து யாரும் ஏங்கிப் போய் கிடக்கல இங்க”

“அது சரி! என்ன இருந்தாலும் முன்னாள் நண்பனாச்சே! வாழ்த்தாம இருக்க முடியுமா? காங்கிராட்ஸ் ஏசிபி சார். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என சொல்லி குலுக்குவதற்காக தன் கையை நீட்டினாள் சண்மு.

அவள் கைப்பற்றி குலுக்கியவன்,

“பதினாறு பேறுல ஒன்னு மட்டும் என் வாழ்க்கையில குறையுமே மிஸ் சண்முகப்ரியா!” என அவளை ஆழ நோக்கி சொன்னான் கதிர்.

“என்ன குறையும்?”

“போகம்னு ஒரு பேறு. அதுக்கு மகிழ்ச்சின்னு அர்த்தம்”

வாயடைத்துப் போய் இவள் நிற்க, அவன் வெளியே போய் விட்டான். சண்முவுக்கு மனதை பாரமாய் எதுவோ அழுத்தியது. தனக்கு மேசேஜ் போட வேண்டாம், இனி இங்கே வர வேண்டாம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடலாம் என அவன் பின்னே போனவள், பைக் சத்தம் கேட்டு நிதானிந்தாள். கதிரும் பைக்கை தான் நோக்கினான்.

சின்ராசு பைக்கைத் தொத்தியபடி வந்திருந்தார் பரமு. மகனை அங்குப் பார்க்கவும் லேசாக அதிர்ந்தவர், பின் தன் அசட்டு சிரிப்புடன் அவர்களை தள்ளாட்டத்துடன் சமீபித்தார்.

“லாஜா! இங்க என்னப்பா ஜெய்ர?”

“சண்முக்கு நம்ம சிவாதான் கடை கட்டிக் குடுக்கறான்பா! அதப்பத்தி பேச வந்தேன். நீங்க எங்க இங்க?”

“அது…மம்மவ” என ஆரம்பித்தவர் அவசரமாக இரு கைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டார். மகனைப் பாவமாகப் பார்த்தவர் பின்,

“லாஜாத்திய பார்க்காலாம்னு வந்தேன்! பாசத்த வச்சுப்புட்டேனே! அது இழுக்குதுடா” என சொன்னவர், அருகில் நின்றிருந்த சண்முவின் கன்னத்தைப் பாசமாக தடவினார்.

“எப்டிடா இழுக்க லாஜாத்தி? கதிலப்பாவ மழந்துட்டல்ல” என கண் கலங்க கேட்டார்.

சண்முவுக்கும் கண்கள் கலங்கி விட்டது. பட்டென பரமுவைக் கட்டிக் கொண்டாள்.

“இந்த ஒரு வார்த்தை ‘எப்படி இருக்க’ன்னு யாராச்சும் கேட்க மாட்டாங்களான்னு எவ்வளவு ஏங்கித் தவிச்சேன் தெரியுமா கதிரப்பா!” இறுக்கமாக அவரைப் பற்றிக் கொண்டு கண் கலங்கினாள் சண்மு. போதையில் இருந்தவர், அவளின் வேக அணைப்பில் தள்ளாட, கதிர் இருவரையும் இரு கரம் கொண்டு விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“அதான் வந்துட்டால்ல! நீங்க அழாதீங்கப்பா. பாருங்க அவளும் எப்படி அழறானு” என அப்பாவை கொஞ்சமாக மிரட்டினான் கதிர்.

அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டு, மெல்ல புன்னகைக்க முயன்றார். அவர் கதிரின் அணைப்பில் இருந்து விலகி இருக்க, சண்மு இன்னும் அவனின் அணைப்பில் தான் நின்றிருந்தாள். அவள் அழுகை நிற்கும் வரை மெல்ல தோளைத் தட்டிக் கொடுத்தான் கதிர். சமாளித்துக் கொண்டவள், சட்டென அவனை விட்டு விலகி நின்றாள். கண்ணைத் துடைத்துக் கொண்டவள்,

“நான் நல்லாருக்கேன் கதிலப்பா! திலீர்ன்னு உங்ள பாழ்க்கவும் கண்ணு கல்ங்கிருச்சு” என எப்பொழுதும் போல அவரைக் கிண்டலடித்தாள் சண்மு.

பரமு வாய் விட்டு சிரித்தார்.

“என் லாஜாத்தி!” என அவளைக் கொஞ்சவும் மறக்கவில்லை அவர்.

“ஜரிம்மா! நான் கெளம்பறேன்! அடிக்கடி வலேன் உன்ன பாழ்க்க”

“நான் வீட்டுக்குத்தான் போறேன். என் கூட வாங்க. பைக்ல போக வேணாம்” என அழைத்தான் கதிர்.

தலையை சொறிந்தவர்,

“அது வந்து” என இழுத்தார்.

“அதான் வீட்டுல பாரின் சரக்கு வாங்கிக் குடுத்துருக்கேன்ல. இன்னும் ஏன் கண்ட லோக்கல் சரக்கெல்லாம் அடிச்சு உடம்ப கெடுத்துக்கறீங்க?” என கோபத்தைக் காட்டினான் கதிர்.

“அதில்ல லாஜா! டாஸ்மாக்னா நம்கு கூட்டாளி இர்பாங்க. ஜாலியா பொழ்து போகும். வூட்டுல ஒண்டியா குட்சா கிக் இல்லப்பா. புழிஞ்சுக்கோப்பா” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டார் அவர்.

சின்ராசுவை அருகே அழைத்த கதிர்,

“அப்பா பத்திரம்டா! அது சரி, இது என்ன ஹேர்ஸ்டைல்? கலர் கலரா சிலிப்பிக்கிட்டு நிக்குது?”

“நல்லா இருக்காண்ணா? இன்னிக்குத்தான் டை பண்ணேன்” என தலை முடியை ஸ்டைலாக கோதிக் காட்டினான்.

“இது என்னா இஸ்டைலுன்னு தெலியலையாப்பா கதிலு? இதான் புள்ளிங்கோ இஸ்டைலு! ஜெம்மையா இருக்குல்ல! இப்டிக்கா முடிய வெட்டிகினு

‘ஏ கும்புலாக ஜூத்துவோம்

நாங்க ஐயோ யம்மான்னு கத்துவோம்’னு பாட்னா பொண்ணுங்க நம்ம பின்னாலேயே ஜுத்துங்களாம்” என சொல்லி அவர் பாடி ஆடிக் காட்ட சண்முவுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. சிரிக்கும் அவளையே புன்னகை முகத்துடன் பார்த்திருந்தான் கதிர்வேலன்.

 

(உயிர் போகும்….)