குறும்பு பார்வையிலே – 10
அசுர வேகத்தில் கதவைத் திறந்து கொண்டு ஸ்ருதி உள்ளே நுழைய, ஆகாஷ் தன் சூழல் நாற்காலியிலிருந்து எழுந்து வர, அவள் கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்து, அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்.
ஆகாஷிடம் சிறிதும் அசைவில்லை.
அவன் கண்கள் பெரிதாக விரிந்து, ஸ்ருதியை பார்த்தது. ஸ்ருதியின் முகத்தில் அத்தனை சந்தோசம்.
‘ஆசை வெட்கம் அறியாது.’ என்பது போல், அந்த நொடி அவள் முகம் சந்தோஷத்தை மட்டுமே தேக்கி நின்றது.
ஸ்ருதியின் முகபாவனையை ரசித்தபடி, “இந்த பரிசுக்கு என்ன காரணுமுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று தன் புருவம் உயர்த்தி கேட்டான் ஆகாஷ்.
“உங்களுக்கு தெரியாதா?” என்று ஸ்ருதி அவன் முகம் பார்த்துக் கேட்க, ‘தெரியாது.’ என்பது போல் ஆகாஷ் மறுப்பாகத் தலை அசைத்தான்.
அவன் மறுப்பில், தான் செய்தது, நின்று கொண்டிருக்கும் கோலம் அனைத்தும் நினைவு வர, வெடவெடத்து மாலையாகக் கோர்த்திருந்த கைகளை கீழே இறக்கி விலக எத்தனித்தாள்.
சரேலென்று அவன் கைகள் அவள் இடையை வளைத்துக் கொண்டது. “தெரியும்.” என்று குறுஞ் சிரிப்போடு.
“அப்புறம் எதுக்கு இந்த விளையாட்டு?” என்று தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஸ்ருதி.
“நச்…” என்று அவள் கன்னத்தில் அவன் இதழ் பதிக்க, ஸ்ருதி அவனை வெட்கத்தோடு பார்த்தாள்.
“கோபத்தில் முகம் திருப்பின்னா என் டாலிக்கு இதுதான் தண்டனை.” அவள் அருகாமையை ரசித்துக் கூறினான்.
“டாலியா?” என்று அவள் கேட்க, “டால் மாதிரி இருக்க. எப்பவும் கையில் பொம்மையோட இருக்க. கீய் செயின்ல, ஹாண்ட் பேக்ல, எல்லாத்துலயும் பொம்மை. அதுல அழகான கண்கள் வேற? அப்ப உன்னை டாலின்னு தானே கூப்பிடனும்?” என்று அவன் விளக்கவுரை அளித்தான்.
“எப்பவும் விளையாட்டு தானா?” என்று அவள் விலகி நிற்க, அவள் சங்கடம் உணர்ந்தவன் போல் தன் கைகளை இறக்கி அவளை விடுவித்தான்.
“ஏன் பிடிக்கலையா ?” என்று அவன் கேட்க, “எப்படி பிடிக்குது தான் தெரியலை. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உங்களை ஏன் பிடிச்சிதுன்னு தான் தெரியலை.” என்று தோள்களைக் குலுக்கினாள்.
அவன் புன்னகைத்துக் கொண்டான்.
இது தான் தன் மனதைத் திறக்கும் சந்தர்ப்பம் என்று நினைத்தவன் போல் பேச ஆரம்பித்தான்.
“எனக்கும் இந்த லவ் அட் ஃப்ரஸ்ட் சைட் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால், உன்னை பார்த்ததும் எல்லாம் மாறிடுச்சு போல.” என்று அவன் நிறுத்த, ‘அன்றிலிருந்தா?’ என்று என்பது போல் ஆச்சரியமாக தன் கண்களை விரித்தாள்.
“இப்படி சாசேர் மாதிரி கண்களை விரித்தா, நடக்கும் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை.” என்று அவன் தோள்களைக் குலுக்க, அவனை இப்பொழுது கோபமாக முறைத்தாள் ஸ்ருதி.
அவள் ஆச்சரியம், கோபம் என்று அனைத்தையும் ரசித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தான்.
அவன் எதிரே இருந்த மேஜையில் அவள் ஏறி அமர்ந்துகொள்ள, ‘நேற்று வரை அலுவலகத்திற்கு வர மாட்டேன் என்று கூறிய ஸ்ருதியா இது?’ என்று கேள்வி அவன் மனதில் எழ, அவன் புன்னகை விரிந்தது.
‘நான் செய்த ஒரு செயல்…’ என்ற எண்ணம் தோன்ற, அவன் மௌனமாகிவிட்டான்.
அவன் பேசட்டும் என்று காத்திருந்த ஸ்ருதி, அவன் மௌனமாகிவிட, “என்ன அமைதியாகிடீங்க?” என்று கேட்டாள்.
மறுப்பாக அவன் தலை அசைக்க, அவன் முகத்தில் ஓர் வெட்க புன்னகை பூத்தது.
‘ஆண்களுக்கும் வெட்கம் வரும் போல?’ என்ற எண்ணத்தோடு, அவன் பேசட்டும் என்று காத்திருந்தாள்.
“உன் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை. உன் மனசை தெரிஞ்சிக்க தான் இத்தனை நாள் காத்திருந்தேன். அது நேத்து தெரிஞ்சிருச்சு. அது தான் பாட்டி கிட்ட சொல்லி, நேத்தே கல்யாணம் பேச சொல்லிட்டேன்?” என்று அவன் கூற, “தேங்க்ஸ்…” என்று கூறி முகம் சிவந்தாள்.
“வந்த உடனே பரிசெல்லாம் பலமா இருந்துச்சு? இப்ப ஒண்ணுமில்லையா?” என்று அவன் கேலியாக நிறுத்த, “ம்…” என்று அவள் இழுத்தாள்.
“ம்…” என்று அவன் பதிலுக்காகக் காத்திருக்க, “அதெல்லாம் ஒரு அதீத சந்தோசம். அது எப்பவாது தான் வரும்.” என்று ஸ்ருதி நிறுத்தி நிதானமாக அவன் முகம் பார்த்துக் கூறினாள்.
“அது சரி தான்.” என்று ஒத்துக்கொண்டு, அவள் மேஜையில் ஏறி அமர்வதற்கு ஏதுவாக இருக்கும் அவள் லெக்கிங்ஸ், டாப்ஸை பார்த்தபடி, “எனக்கு ஒரு சந்தேகம்.” என்று கேட்டான் ஆகாஷ்.
‘என்ன?’ என்று அவள் விழி உயர்த்த, “இல்லை கல்யாணம் பேசிட்டா மாப்பிள்ளையை பார்க்க, பொண்ணு வெட்க படுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்க அப்படி எதுவும் தெரியலியே?’ என்று அவன் கன்னங்களைத் தடவியபடியே கேட்டான்.
அவளை கேலி செய்கிறான், என்பது புரிந்து கொண்டவள், “ஏன் பொண்ணு தான் வெட்க படணுமா? மாப்பிள்ளை வெட்க பட கூடாதா?” என்று அவனை மடக்கினாள்.
“வெட்கபட்டுடா போச்சு.” என்று அவன் அவளுக்கு ஒத்து ஊதி, சிறிது நேரத்திற்கு முன் வெட்கத்தில் சிவந்த அவள் முகம் நினைவு வர, “உன்னை வெட்கப்பட வைக்கவும், எனக்குத் தெரியும்.” என்று கண்சிமிட்டிச் சிரித்தான் ஆகாஷ்.
அவன் சொல்லில் அவள் முகம் குங்குமமாக சிவக்க, “டாலி…” என்று உணர்ந்து, ரசித்துக் கூறினான். அவனின் ஆழமான குரலில் தாக்கப்பட்டு, ‘கு…று…ம்…பா…’ என்று தன் உதட்டை மெல்லமாக அசைத்தாள்.
“என்ன சொன்ன?” என்று அவன் விழிகள் இடுங்க, “நேரமாச்சு கிளம்புறேன். எங்க ஆபீஸ் போகணும்? வேலை இருக்கு.” என்று குதித்து இறங்கி, அவள் ஓட, அவள் கைகளைப் பிடித்து நிறுத்தினான்.
அவன் இழுத்த விதத்தில், ஒரு முறை சுற்றி அவன் மேல் மோதி சுவரோடு சாய்ந்து நின்றாள்.
இரு பக்கமும் கைகளை ஊன்றி, அவளைக் கூர்மையாகப் பார்த்தான். “என்ன சொன்ன?” என்று அவன் கேட்க, “வேலை இருக்கு…” அவள் முணுமுணுக்க, “ம்… க்கூம்…” மறுப்பாகத் தலை அசைத்தான் அவன்.
“உனக்கு பொய் சொல்ல தெரியாது. உன் மனசில் உள்ளது பட்டுன்னு சொல்லிருவ.” அவன் உணர்ந்து கூற, அவள் இதயம் தடக் தடக்கென்று ஓட ஆரம்பித்தது.
“சொல்லு…” அவன் பிடிவாதம் பிடிக்க, “இந்த பிடிவாதம் கூடாது.” என்று கண்டிப்போடு கூறினாள்.
“நீ சொன்னால் சரி தான்.” ஆனால், அவள் கைகளை நகர்த்தவில்லை. “ப்ளீஸ்…” என்று அவன் இறங்க , அவன் ப்ளீஸ் சொல்வது பிடிக்காமல், “குறும்பா!” என்று கூறிக்கொண்டு தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
“என் குறும்புகள் அவ்வளவு பிடிச்சிருக்கா?” என்று அவன் ஆர்வமாகக் கேட்க, “சில சமயம் கோபம் வரும்.” என்று அவளை முகம் திருப்ப, “முகத்தை திருப்பின்னா…” என்று அவன் கூற, சட்டென்று அவனைத் திரும்பி நேராகப் பார்த்தாள்.
“ஹா… ஹா…” என்று அவன் சிரிக்க, ‘இவன் எப்பொழுது கை எடுப்பான்?’ என்ற கேள்வி எழுந்தாலும், ‘இவன் அருகாமை என்னை மயக்குகிறதே.’ என்று அவனை மயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை குறும்பால் மட்டுமில்லை, அன்பாலும் மயக்குவேன்.” என்று அவன் கரகரப்பான குரலில் கூற, அவள் அவனைக் காதலோடு பார்த்தாள்.
அவள் தலையில் செல்லமாகத் தட்டி, “நீ கிளம்பு… நீ இங்க இருக்கிறது எனக்கு நல்லதில்லை.” என்று அவன் கூற, “அதை தான் நானும் சொல்றேன்.” என்று கூறி சிட்டாகப் பறந்தாள்.
ஸ்ருதி அலுவலகத்திற்குள் நுழைய, அவளுக்காக அங்குக் காத்திருந்தான் கார்த்திக்.
“என்ன லேட்?” என்று அவன் கேட்க,”வீட்டிலிருந்து கிளம்ப நேரம் ஆகிருச்சு.” என்று தன் நண்பனிடம் கூறியபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.
“என் கிட்டயே பொய்யா?” என்று அவன் கேட்க, அவனை ஒற்றை புருவம் உயர்த்தி யோசனையாகப் பார்த்தாள்.
“நான் வீட்டுக்கு போயிட்டு தான் வரேன்.” என்று கார்த்திக் கூற, “ஓ… அது ஆகாஷை பார்த்துட்டு வரேன்.” என்று வெட்கத்தோடு கூறினாள்.
“அவர் பாக்குற பார்வையிலே, நீ அவரை பார்க்க ஓடுவன்னு தெரியும். ஆனால், அவர் இப்படி ஆபீஸ் வந்த மறுநாளே ஓடுவன்னு நினைக்கலை.” என்று கார்த்திக் கேலி பேச, அருகே இருந்த பேனாவை அவன் மீது தூக்கி எறிந்தாள் ஸ்ருதி.
ஸ்ருதியின் முறைப்பு, கோபம் என்று எதையும் கண்டு கொள்ளாமல், அவன் கேலி தொடர்ந்து கொண்டிருந்தது.
கேலியோடு கேலியாக அவர்கள் வேலையும் தொடர்ந்து கொண்டே போனது.
வேலையை முடித்து விட்டு, இருவரும் ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்றனர்.
பார்வதி “உர்…” என்று அமர்ந்திருக்க, “மாப்பிள்ளை வீட்டில் நிச்சயாதார்த்த தேதி, கல்யாண தேதி எல்லாம் குறிச்சி கொடுத்துட்டாங்க. மாப்பிள்ளை வேகமா? இல்லை மாப்பிள்ளை வீட்டில் வேகமான்னு தெரியலை. ஹா… ஹா…” என்று செய்தி கூறி கேலி முடித்து சந்தோஷமாகச் சிரித்தார் ஈஸ்வரன்.
‘ஆகாஷுக்கு எல்லாமே வேகம் தான். என்கிட்டே கூட சொல்றதில்லை.’ என்று எண்ணியபடி, “நீங்க ஏன்மா ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள் ஸ்ருதி.
“உங்க அப்பா நிச்சயாதார்த்தம், கல்யாணம் தேதி மட்டும் தானே சொல்லிருக்காங்க. மாப்பிள்ளை வீட்டில் இன்னமும் சொல்லிருக்காங்க அதை கேளு.” என்று கழுத்தை நொடித்தார் பார்வதி.
“என்ன ஆன்ட்டி, பயங்கர வரதட்சணையா?” என்று கேலியாகக் கேட்டான் கார்த்திக்.
“பணம் ஒரு பிரச்சனையா? நம்ம கிட்ட இல்லாத பணமா?” என்று கேட்டார் பார்வதி.
‘வேறு என்ன தான் பிரச்சனை?’ என்று ஸ்ருதி, கார்த்திக் இருவரும், ஈஸ்வரனைப் பார்த்தனர்.
“ப்ரீ வெட்டிங் ஷூட் பண்ணனுமா.” என்று ஈஸ்வரன் இழுக்க, ஸ்ருதி, கார்த்திக் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன பாக்குறீங்க?” என்று பார்வதி கேட்டுக்கொண்டே, “அது தான் கல்யாணத்துக்கு முன்னாடியே ஜோடி ஜோடியா போட்டோ எடுப்பாங்களே. அது தான்.” என்று முடித்தார் பார்வதி.
“ஆன்ட்டி, இது இப்ப சகஜம் தானே?” என்று கேட்டான் கார்த்திக்.
பார்வதி அவனை மேலும் கீழும் பார்த்து, “ஒரு நாளில் எல்லாம் முடிக்க முடியாதாம். இங்க உள்ளூர்ல எடுக்க மாட்டாங்களாம். வெளிநாடு போகணுமாம்.” என்று அவர் கடுப்பாக கூறினார்.
ஸ்ருதி, கார்த்திக் இருவரும் ஆச்சரியமாக பார்க்க, “நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம், கல்யாணத்துக்கு முன்னாடி, நான் கூடப் போக முடியுமா? வீட்டில் வேலை இருக்காதா எனக்கு? இல்லை இவளை மாப்பிளையோட தனியா அனுப்ப முடியுமா?” என்று கேள்வியாக நிறுத்தினார்.
“எதோ ப்ரீ வெட்டிங் ஷூட் அப்படினா, பக்கத்துல எங்கயாவது போய் எதோ போட்டோ எடுத்தா சரி. இது என்னவோ ஹனிமூன் ட்ரிப் மாதிரி பேசுறாங்க.எனக்கு சரியா படலை.” பட்டென்று கூறினார் பார்வதி.
குறும்புகள் தொடரும்…