அத்தியாயம் 24
டோன்ட் கால் மீ அம்மா, பப்பின்னு கூப்புடு
பப்பியா? அது நாய் குட்டி மாதிரி இருக்கே
அப்படி பாக்காத தேவா, எனக்கு எப்படியோ இருக்கு. அப்புறம் கண்ணு சரியில்ல காது சரியில்லம்ப
(கஜோல்- பிரபுதேவா—(மின்சார கனவு)
இந்துவுக்கு புரிந்து விட்டது இவன் தன் கணவரின் அக்கா மகன் என்று. பிள்ளைகள் சின்ன வயதில் இருந்தப் போது பார்த்தது. சொத்து தகறாருக்கு பிறகு உறவு விட்டுப் போனதால் யார் எவர் என்று தெரியவில்லை. அவரின் கணவர் இறப்புக்கு வந்திருப்பார்கள். ஆனால் யாரையும் பார்க்கும் நிலையிலா அப்பொழுது அவர் இருந்தார்! கணவர் சடலத்தைப் பார்த்து புத்தி பேதலித்த நிலை அல்லவா அப்பொழுது.
இந்துவின் கணவருக்கு ஒரு அக்கா மட்டும்தான். பெற்றவர்கள் இருந்த பொழுதும் சரி, இறந்த போதும் சரி நிலத்தில் உழுது பாடுபட்டவர் அவர் அக்காவும் அவர் கணவரும் தான். பட்டணத்தில் படித்து சொகுசாக வாழ்ந்த இவருக்கு விவசாயம் பிடிக்கவில்லை. பிரச்சனை இலாமல் தான் போய் கொண்டிருந்து இவர் வியாபாரம் செய்ய நிலத்தை விற்று காசு கொடு என அக்காவிடம் வந்து நிற்கும் வரை. சோறு போடும் சாமியை விற்பதா என் அவர் அக்கா சிலிர்த்துக் கொள்ள, வார்த்தை தடித்து உறவு வெடித்து.
அப்பன் சொத்து மகனுக்குத் தான் என இவர் நிற்க, உழுதவனுக்குத் தான் நிலம் சொந்தம் என அக்கா நிற்க கேஸ் கோர்ட் வாசலுக்கு சென்றது. ஒவ்வொரு தடவையும் இவர்கள் பக்கம் தீர்ப்பு வரும் மாதிரியே இருக்கும். ஆனால் வாய்தா வாங்கியே காலத்தைக் கடத்தினார்கள் அக்காவும் அவர் கணவரும். நாளுக்கு நாள் வாய்தாவோ கைதா, கால்தாவாக மாறி இந்துவின் கழுத்தை அறுத்தது. கணவர் உயிருடன் இருந்தப் பொழுது விட்டுக் கொடுக்க சொல்லி கெஞ்சி இருக்கிறார் இந்து. மனைவியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரியும் அவர், இதற்கு மட்டும் ஒத்துக் கொண்டதே இல்லை.
“அய்த்தை, உங்களுக்கும் எங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டை தான் அப்படியே இருக்கே. அப்புறம் எந்த தைரியத்துல இங்க வந்தீங்க?” கேட்டான் அவன்.
அதற்குள் ஆண்கள் மூவரும் பெண்களைப் பாதுகாப்பாக அவர்களின் பின்னால் நிறுத்தி இருந்தார்கள். இந்து மட்டும் முன்னே வந்து தைரியமாகப் பேசினார்.
“இங்கப்பாருப்பா மாப்பிள்ளை” என இந்து ஆரம்பிக்கும் போது,
“அம்மா!” என இரு கண்டன குரல்கள் கேட்டன. லட்டுவும் கார்த்திக்கும் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர்கள்.
“இருங்கப்பா! முறைப்படி மாப்பிள்ளை தானே.” என பிள்ளைகளைப் பார்த்துக் கூறியவர், அவனைப் பார்த்து,
“உன் பேரு என்னப்பா?” என கேட்டார்.
“முத்துக்காளை, அய்த்தை. காளைன்னு கூப்புடுங்க”
‘எருமை மாடு மாதிரி இருக்கான்! இவனை காளைன்னு கூப்பிடனுமாம்.’ கார்த்திக் தான் திட்டித் தீர்த்தான்.
“காளை, இந்த சொத்து விவகாரத்துல நான் தலையிட்டது இல்லப்பா. உங்க மாமா தான் கேசு போட்டாரு. இப்ப அவரே போய் சேர்ந்துட்டாரு, எனக்கு எதுக்குப்பா சொத்து? இந்த தடவை ஹியரிங் வரப்ப கண்டிப்பா நான் ஒதுங்கிக்கிறதா சொல்லிருறேன். அதோட நிலத்துல உழுது கஸ்டப்படறது உங்கம்மாவும் அப்பாவும். அதுல பங்கு கேக்க எனக்கு உரிமை இல்லப்பா. அப்பன் சொத்து மகனுக்கு தான் போகனும், மகளுக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லறது எல்லாம் தர்மம் இல்ல. உங்க மாமா தான் ஏதோ கோபத்துல கேச போட்டுட்டாரு. எங்கள மன்னிச்சு வம்பு பண்ணாம போயா” நயமாகப் பேசினார்.
கணவர் இறந்ததும் சொத்தை விட்டுக் கொடுத்து விடலாம் என கூறியும் பேராசைப் பட்டு தாமரை தான் விடாப்பிடியாக கேசை நடத்தினார். இதையும் விழுங்கி ஏப்பம் விடலாம் என்பது தான் அவர் ஆசை. காளையிடம் தன் அண்ணியை விட்டுக் கொடுக்காமல் பழியைத் தன் மேலேயே போட்டுக் கொண்டார் இந்து.
“நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் அய்த்தை. நீங்க விட்டுக் கொடுக்கறீங்கன்னு சொல்லுறப்ப எனக்கு புல்லரிச்சுப் போகுது. இந்த வார்த்தையையே உங்க மகள பார்க்கும் முன்னுக்கு சொல்லி இருந்தீங்கன்னா, என் தெய்வமேன்னு கால்ல விழுந்துருப்பேன். இப்ப லட்டு கணக்கா இருக்கற என் அய்த்தைப் பொண்ண பார்த்துட்டனே. எப்படி விடறது? எனக்கு கட்டிக் குடுங்க அய்த்தை, கண்ணுல வச்சிப் பார்த்துக்கறேன்”
‘கண்ணுல வச்சிப் பார்த்துக்க அவ என்ன கான்டேக்ட் லென்சாடா? என் காதல் பென்சுடா’ பொருமினான் கார்த்திக்.
‘டேய், யாருடா நீங்க எல்லாம்? ஆன்னா ஊன்னா தாலிய தூக்கிட்டு சுத்துறீங்க. பொண்ணுங்க தாலிய வீட்டுல கழட்டி வச்சுட்டு வேலைக்கு போற யுகம்டா இது. மனசுக்குப் பிடிச்சவன் கட்டுனாத்தான் தாலி. மத்தவன் கட்டுனா அது வெறும் கயிறுதான்னு இந்த மரமண்டைங்களுக்கு யாரு புரிய வைக்கிறது? எங்க அக்கா மாதிரி இல்ல நான். கழட்டி மூஞ்சுல வீசிட்டுப் போய் கிட்டே இருப்பேன்டா என் சிப்சு’ யுத்தக்களத்துக்கு ரெடியானாள் லட்டு.
“இங்க பாரு காளை! இப்படி நிராதரவா நிக்க வச்சி உங்க வீரத்த காட்டுறது தான் உங்க ஊர் பழக்கமா?” வந்தவனின் தன்மானத்தை சீண்டினான் வேந்தன்.
“டேய் ! பட்டணத்து மச்சான் கூப்பாடு போடுறாரு. அவங்க மூனு பேருக்கும் கம்ப தூக்கி போடுங்கடா! பட்டிக்காடா பட்டணமான்னு பார்த்துரலாம்”
காளை அப்படி கூறியவுடன், இவர்கள் மூவருக்கும் கம்பு கொடுக்கப் பட்டது. பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் நிறுத்தினான் வீரா. பின் வேந்தன், கார்த்திக், வீரா மூவரும் ஒரு சேர வேட்டியை மடித்துக் கட்டினர். கம்பை சுற்றி பூமிக்கு வணக்கம் வைத்து விட்டு நிமிர்ந்த மூவரையும் பார்த்த காளையின் கூட்டாளி,
“மாப்புள, என்னய்யா இப்படி அழகா கம்பு சுத்துறானுங்க? பீதியா இருக்குய்யா” என கிசுகிசுத்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்புள! ராத்திரி தேவர் மகன் சினிமா பாத்துருப்பானுங்க. அதான் சலம்புறானுங்க. நீ வேணா பாரு! ரெண்டுல ஒன்னு, எனக்கு மட்டும்தான் பொண்ணு.”
“சண்டை நம்மளுக்குள்ள தான். எங்க வீட்டுப் பொம்பளைங்கள உஆரும் டச் பண்ணக் கூடாது. டீல் ஓகேவா?” கேட்டான் வேந்தன்.
“மச்சான், அவங்க நம்ப வீட்டுப் பொண்ணுங்க. என்னோட கண்ணுங்க”
“டேய்!” மூவரும் கத்தினார்கள்.
“கண்ணு மாதிரின்னு சொல்ல வந்தேன் மச்சான்”
வீராவை பற்றி சொல்லத் தேவையில்லை. அவனுக்கு எல்லா வகை தற்காப்பு கலையும் அத்துப்படி. வேந்தனும், கார்த்திக்கும் காலேஜில் இருந்தப் பொழுது சிலம்பம் முறையாக கற்றவர்கள்.
அவர்கள் கம்பு சுற்றிய அழகைப் பார்த்து மூன்று பெண்களும் அசந்து விட்டார்கள். இந்துவோ,
“ஏன்டாப்பா, சண்டை போட்டு தான் ஆவனுமா? சமாதானமா போக கூடாதா?
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே” அப்படின்னு சிவாஜி கதறி கதறி அழுவாறே, அத கேட்டும் கூட எதுக்குப்பா சண்டை?”
“புதுசா ஒருத்தன் தங்கச்சிய கட்டுறன்னு வந்து நிப்பான், அத பார்த்துகிட்டு இருக்க இந்த மலர்வேந்தன் ஒன்னும் கேணையன் இல்லம்மா. இன்னிக்கு பொழக்கறேன் பாருங்க இவனுங்கள”
அவன் பேசி முடிக்கவும், கிராமத்து விடலைகள் சண்டைக்கு வரவும் சரியாக இருந்தது. கம்பு சண்டை சரமாரியாக நடந்தது. இவர்கள் ஒருத்தரே நான்கு பேரை சமாளித்தார்கள். கார்த்திக் காளையை துவைத்து எடுத்துவிட்டான். அரை மணி நேரம் ஆகியும் சளைக்காமல் நடந்தது இந்த ச(த)ரித்திர சண்டை. மூவரும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழப்பதைப் பார்த்த தேவி மெல்ல வேனுக்கு நழுவி டேஸ்போர்டில் வீரா வைத்திருக்கும் கைத்துப்பாக்கியை எடுத்து வந்தாள்.
வானத்தை நோக்கி அவள் சுட்ட சத்தத்தில் எல்லோரும் பிரேக் போட்டது போல் சண்டையை நிறுத்திவிட்டு ஜெர்க் ஆகி நின்றார்கள்.
“ஹேன்ஸ் அப்! இனி யாராச்சும் எங்களை நெருங்கினீங்க, குருவி சுடற மாதிரி சுட்டுத் தள்ளிருவேன். லைசன்ஸ் வச்சிருக்கேன். எவனும் என்னை ஒன்னும் பண்ண முடியாது, மைண்ட் இட்” என கத்தினாள்.
ஊர் பொடுசுகள் பயந்து கம்பையும் கட்டையையும் போட்டு விட்டு கையை மேலே தூக்கினார்கள். வீராவோ வீட்டினர் அனைவரையும் வேனுக்கு செல்ல சொல்லி துரிதப்படுத்தினான். அவனை நிறுத்திய வேந்தன்,
“அம்மா! பூஜை சாமானுல உள்ள மஞ்சள ஒரு கயித்துல கோத்து கொண்டாங்கமா” என்றான். இவர்கள் கிளம்பினாலும் ஊர் எல்லையைத் தாண்டும் வரை பாதுகாப்பு இல்லை. தங்கை கழுத்தில் மஞ்சள் கயிரு ஏறினால் தவிர காளையும் அவன் சகாக்களும் அடங்க மாட்டார்கள் என தெளிவாக புரிந்தது அவனுக்கு. இவர்கள் தாலி காத்த காளியம்மன் படம் பார்த்து வளர்ந்த கிராமத்து மக்கள், தாலி செண்டிமெண்டை மதிப்பவர்கள். திருமணம் ஆன பெண்ணை சகோதரியாக வரிக்கும் மண் மணம் மாறாத கிராமத்து மக்கள். அதனால் தங்கையின் திடீர் திருமணம் தான் இதற்கு தீர்வு என வேந்தன் முடிவெடுத்தான்.
“மங்கள பொருள நான் எப்படிப்பா?” தயங்கினார் இந்து.
“எங்க நலனையும் சந்தோஷத்தையும் மட்டும் உயிர் மூச்சா கொண்ட நீங்க எடுத்துக் கொடுத்தா தான். எங்களுக்கு மங்களம்மா. ஹ்ம்ம் சீக்கிரம் எடுங்க”
அவர் கையில் கொடுத்த மஞ்சள் கயிறை கார்த்திக்கிடம் நீட்டிய வேந்தன்,
“கட்டுடா தாலிய” என்றான்.
திகைத்து நின்ற கார்த்திக்,
“மச்சி!” என இழுத்தான்.
“உங்க காதல் கன்றாவி எனக்கும் அம்மாவுக்கும் ஏற்கனவே தெரியும். கண்ணில்லாத கபோதி கூட கண்டுப்பிடிச்சுருவாண்டா நீ வழியறத பார்த்து. எங்களால கண்டுப் பிடிக்க முடியாதா? ஓவரா நடிக்காம என் தங்கச்சி கழுத்துல தாலிய கட்டு”
தாலியை கை நடுங்க வாங்கிய கார்த்திக், தேவியை ஏறிட்டு நோக்கினான். அவள் கட்டு என்பது போல் தலை அசைக்கவும், லட்டு நின்றிருக்கும் இடத்திற்கு விரைந்தான்.
“லட்டுமா, உனக்கு சம்மதமா? “ எனக் கேட்டு அவள் தலை அசைப்பில், மூன்று முடிச்சு போட்டு சிங்கிள் ஸ்டேட்டசை மேரிட் என மாற்றினான் கார்த்திக்.
மாங்கல்ய தாரண மந்திரத்தைப் படித்த இந்து, பின்
“ நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான் காலம் முழுக்க சிந்து பாடணும்” என பாடினார்.
“மாப்புள, தாலி கட்டனவுடனே உங்க அய்த்தை கிழவிக்கு குசும்ப பார்த்தியா?” ஹேன்ஸ் அப்புக்கு கையைத் தூக்கிக் கொண்டு நின்ற ஒருவன் காளையை உசுப்பேற்றி விட்டான்.
“போடா! நானே லட்டு மாதிரி பொண்ணு புட்டுக்கிச்சேன்னு காண்டுல இருக்கேன். இவன் வேற” சோகமாகி விட்டான் காளை.
அதற்குள் அங்கே மீண்டும் சலசலப்பு.
இப்போது வந்தவர்கள் காளையைப் பெற்றவர்களும் மற்ற ஊர் பெரியவர்களும் தான்.
“ஏன்டா காளை, மதினி ஊருக்குள்ள வந்துருக்கு வீட்டுக்கு கூட்டியாடான்னு அனுப்பி வச்சா இங்க வந்து என்னடா கைய தூக்கிக் கிட்டு நிக்கிற?”
“அது வந்து மா” இழுத்தான் அவன்.
அதற்குள் என்ன நடந்தது என எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டான் அவன் நண்பன். கேட்ட அவர் கொதித்துப் போய் மகன் கன்னத்தில் பட்டாசை கொழுத்தினார். பின் இந்துவிடம் வந்தவர்,
“மதினி, என் முட்டாள் மகனை மன்னிச்சுரு. இவன் இப்படி மல்லுக்கு வந்து நிப்பான்னு நான் நினைக்கவே இல்லை. அப்படியே என்னையும் மன்னிச்சுரு மதினி. சொத்து பத்து வேணும்னு சொந்தத்தை தொலைச்சிட்டு நிக்கிறேன். இருந்த ஒத்த உடன் பிறப்பு போய் சேர்ந்தவுடன் தான் பாசம் நேசம்லாம் புரியுது. போய் சேர்ந்தானே என் தம்பி, என்னத்த எடுத்துக் கிட்டுப் போனான்? ரத்தம் சூடா இருக்கறப்ப இப்படி சலம்பிகிட்டு திரிய தோணும், அதுவே வயசாச்சுன்னா தான் பந்த பாசத்தோட அருமை புரியும். தாயத்துப் போனா சீரத்துப் போவும்னு சொல்லுவாங்க. என் பக்க சொந்தம் எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா பறி கொடுத்துட்டு பாவியா நிக்கிறேன். நீ மட்டும் தான் இருக்க என் தாய் வீடுன்னு. வா மதினி, என்னை மன்னிச்சு என் வீட்டுல ஒரு வாய் சாப்புடு” கட்டிப் பிடித்து அழுதார் அவர்.
“அழாதீங்க அண்ணி. எனக்கு உங்க மேலேல்லாம் எந்த பகையும் இல்ல. நீர் அடிச்சு நீர் விலகுமா? வரேன் அண்ணி, கண்டிப்பா வீட்டுக்கு வரேன்”
தன் பிள்ளைகளையும் மதினிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார் இந்து. வேந்தனைக் கட்டி உச்சி முகர்ந்தவர்,
“அப்படியே என் தம்பி மாதிரியே இருக்கான். கண்ணாலம் ஆச்சா? நம்ம சனத்துல பொண்ணு இருக்கு மதினி. கட்டி வச்சிரலாமா?”
அவர் சொன்னதை கேட்ட தேவி, துப்பாக்கியை கைப்பையில் வைத்து விட்டு வேந்தனை நெருங்கி கைப்பற்றிக் கொண்டு நின்றாள்.
“அண்ணி இது தான் வேந்தன் பொண்டாட்டி. பேரு தேவி” என் அறிமுகப்படுத்தினார் இந்து.
“அடி ஆத்தி! வெள்ளைக்காரியையா கட்டிருக்கான்? துரையம்மா தமிழு பேசுமா?” அதிசயித்தார் அவர்.
சண்டை, தாழம்பூ கொண்டையாகி விட்டதால் மற்ற அனைவரும் அவரவர் வீட்டுக்கு புறப்பட்டனர்.
இந்துவின் அண்ணி வீட்டில் தடபுடலாக இவர்களுக்கு விருந்து பறிமாறப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு அங்கேயே பாழும் பழமும் வழங்கப் பட்டது.
மணமக்களுக்கு உணவு பரிமாறிய காளை, லட்டுவைப் பார்த்து,
“என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி” என சோக கீதம் வாசித்தான்.
கடுப்பான கார்த்திக்,
“என் பொண்டாட்டிதான்
எனக்கு மட்டும் தான்
சொந்தம் தான் என்று நான் சொல்லுவேனே” என பாட்டை மாற்றிப் படித்து லட்டுவின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.
“என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைச்சிருக்கேன். அதுல ஆனந்தக் கண்ணீர தான் நான் பாக்கனும் தம்பி” துண்டை வாயில் வைத்துக் கொண்டு சோகமாக சொன்னான் காளை.
“அதெல்லாம் அவங்க அம்மா தான் சொல்லனும். நீ ஓவரா பீலிங் காட்டாம மத்தவங்களுக்கு சோத்தை வைப்பா.”
‘இவனுக்கு காளைன்னு பேரு வச்சதுக்கு தொல்லைன்னு வச்சிருக்கலாம். நானே கஸ்டப்பட்டு ஒரு வழியா இப்பத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன். இவன் வேற நடு நடுவுல பிலிம் காட்டிக்கிட்டு.’
உணவு உண்டு உறவைப் புதுப்பித்துக் கொண்டு கிளம்பும் போது, தேவி நடு கூடத்தில் மயங்கி சரிந்தாள். பக்கத்தில் நின்றிருந்த வேந்தன் கீழே விழாமல் தாங்கிக் கொண்டான். அனைவரும் பதறி விட்டனர்.
“அம்மா, ரோஜாவுக்கு என்னம்மோ ஆயிருச்சும்மா. சீக்கிரம் வந்து பாருங்க” பயந்து விட்டான் வேந்தன். கார்த்திக்கும் துடித்து விட்டான். இவர்கள் இருவரும் செய்த ஆர்ப்பாட்டத்தில் வீடே அல்லோலகல்லோலப் பட்டது. அனைவரையும் விலக்கி காற்று வர வைத்த இந்துவின் அண்ணி, முகத்தில் தண்ணீர் தெளித்து தேவியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். கலவரமாக அவர் முகத்தைப் பார்த்த மற்றவர்களைப் பார்த்து சிரித்தவர்,
“நல்ல சேதிதான். துரையம்மா முழுகாம இருக்கா” என்றார்.
“அம்மா குழந்தையம்மா தாயே! உன் சந்நிதிக்கு வந்த எங்களுக்கு நல்ல சேதிய குடுத்துட்டம்மா. உன் மகிமையே மகிமை” கண்ணில் நீ வழிய மருமகளை நெட்டி முறித்தார் இந்து.
கார்த்திக் வேந்தனை தூக்கி சுற்றி இறக்கி, இறுக கட்டிக் கொண்டான்.
“காங்ராட்ஸ் மச்சி. சாதிச்சிட்டடா!”
எல்லோரும் வேந்தனை வாழ்த்த, லட்டு மட்டும் அவனை நம்பாத பார்வைப் பார்த்தாள்.
‘டேய் அண்ணா! நீதான் இந்தப் பேய் கிட்ட இருந்து நம்ம குடும்பத்தைக் காப்பாத்துறேன்னு சத்தியம் வைக்க வந்த ஆளா? நல்லா காப்பாத்துனடா! நல்ல வேலை அன்னிக்கே உன் வாயைப் பொத்தி சத்தியம் பண்ணாம தடுத்தேன். நீ ஒரு அப்பாடக்கருன்னு நான் நம்பிக் கிடந்தா நான் வெத்து வேட்டுன்னு நிருபிச்சிட்டீயே!’
தங்கையின் பார்வையைப் பார்த்த வேந்தன் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தான். அவன் முகம் போன போக்கைப் பார்த்த லட்டுவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தப் படி அவனைக் கட்டிப் பிடித்து வாழ்த்தினாள். தங்கைக்கு தன் மேல் கோபம் இல்லை என அறிந்தவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
இந்துவும் அவர் அண்ணியும் இனிப்பு செய்து அசத்தி விட்டனர். கார்த்திக்கோ அந்த ஊரில் இருந்த ஒரு ஸ்வீட் ஸ்டாலையும் காலி செய்து ஊருக்கே விநியோகித்து விட்டான்.
நம்ம காதல் கள்ளன் வீராவோ, அனுவைப் பார்த்து நீ தான் அடுத்து என சைகை காட்டியே அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். ஆரிய கூத்தாடினாலும் அவன் காரியத்தில் அவன் கண்ணாக தான் இருக்கிறான்.
வேந்தன் மற்றவர்களைப் பற்றிக் கவலை படாமல், தேவியை தன் மடியிலே படுக்க வைத்துக் கொண்டான். கலைந்திருந்த அவள் தலைக் கோதி, காற்றாடி ஓடினாலும் ஓலை கற்றாடி வைத்து தானே விசிறிவிட்டான். களைப்பில் அவன் மடியில் சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள் தேவி. இந்த நாடகம் முற்றத்தில் போடப் பட்டிருந்த பாயில் தான் நடந்தது.
ஸ்வீட் கொடுத்து விட்டு வந்த கார்த்திக், லட்டுவிடம்,
“இன்னும் ஏழே மாசத்துல நாமளும் அம்மா அப்பா ஆகுறோம் ராஜாத்தி. யூ டோண்ட் வோரி. எங்க இந்த வீட்டுல நமக்கு ஒரு ரூமு இல்லையா? ரூமு இல்லாட்டி போகுது போ, நெல்லு மூட்டையெல்லாம் போட்டு வச்சிருப்பாங்களே ரூமு, அங்க ஓரம் கட்டுலாம். ரோமேண்டிக்கா இருக்கும்” கண்களில் காதல் வழிய பேசினான்.
அவன் தலையில் நச்சென ஒரு கொட்டு கொட்டியவள்,
“எல்லாத்துலயும் அவசரம். நெல்லுக் கொட்டுற எத்துல ஜல்சா பண்ண நம்ம என்ன எலியா? பிச்சுருவேன். கல்யாணம் தான் அவசர அவசரமா நடந்துருச்சு. மத்ததெல்லாம் நாம் படிச்சு முடிச்சவுடன் தான். அதுக்கு முன்ன என் மேல கை பட்டுச்சு, கை இருக்கும் ஆனா பேச உனக்கு வாய் இருக்காது” மிரட்டினாள் அவள்.
“அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். நான் மட்டும் என்ன இளிச்சவாயா? நேத்து வந்த வீரா கலர் கலரா டூயட் பாடுறான். உங்கண்ணன் அந்த அம்மாஞ்சி அப்பாவாவே ஆகப் போறான். நான் மட்டும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கனுமா?” கொதித்தான் அவன்.
அப்பொழுது அந்தப் பக்கம் வந்த காளை லட்டுவைப் பார்த்து,
“போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே” என பாடினான்.
“டேய் காளை! உன்னைக் கொல்லுறேண்டா இப்ப. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போற கணக்கா, தாலிய தூக்கிக்கிட்டு வந்ததுமில்லாம, உன் கட்டைக் குரலை வச்சுப் பாடி வேற பயங்காட்டுறயா?” இருவரும் நடு முற்றத்தில் கட்டிப் புரண்டார்கள்.
வெளியே வந்துப் பார்த்த இந்து,
“வெளையாடுறதுன்னா வெளிய போய் வெளையாடுங்கப்பா. புள்ளத்தாச்சி தூங்கிக்கிட்டு இருக்கற எடத்துல என்ன விளையாட்டு?” என சத்தம் போட்டார். லட்டுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் சிரிப்பதைப் பார்த்து காளையும் கார்த்திக்கும் சேர்ந்து சிரித்தார்கள்.