kurumbupaarvaiyile-26

குறும்பு பார்வையிலே – 26

‘நீ ஏன் வந்த?’ என்று ஆகாஷ் கேட்டதில் கடுப்பான ஸ்ருதி, “நீங்க கூப்பிட்டிங்கன்னு நான் வரலை. உங்களுக்காக வரலை. குழந்தை முன்னாடி சண்டை வேண்டாமுன்னு வந்தேன். எல்லார் முன்னாடியும் சண்டை போட்டு,  எங்க அம்மா, அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாமுன்னு வந்தேன்.” என்று அவள் அடுக்கி கொண்டே போக, “எனக்காக வரலை?” என்று அவளைப் பார்த்து கூர்மையாகக் கேட்டான்.

‘ஆம்…’ என்பது போல் அவள் தலை அசைக்க, “நீ சொல்றதை அமைதியா கேட்டுட்டு இருந்ததால், நீ சொல்றது எல்லாம் சரியாகாது ஸ்ருதி.” என்று ஆகாஷும் உறுதியாகக் கூறினான்.

“கீதா இப்படி தப்பு பண்ணிருந்தா என்ன பண்ணிருப்பன்னு கேட்டியே? நீயே சொல்லு, நான் கீதாவை கன்னத்தில் பளார்ன்னு அறைஞ்சி ஏன் இப்படி பண்ணன்னு கேட்பேன்னு நீ நினைக்குறியா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

ஸ்ருதி அவனை மௌனமாக பார்க்க, ” நடந்தது நடந்து போச்சு. பதட்ட பட்டு என்ன ஆக போகுது ஸ்ருதி. இல்லை, அவளை அடிச்சோ அவளை மிரட்டியோ, காயப்படுத்தியோ என்ன ஆக போகுது ஸ்ருதி?” என்று மென்மையாகக் கேட்டான்.

” அவகிட்டயும், என்னமா இப்படி தா ஜாலியா இருக்க போறீங்களா, இல்லை கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இருக்கானு நக்கலா தான் கேட்ருப்பேன். அண்ணான்னு, அவளும் பதறிருப்பாளே ஒழிய, நான் அண்ணனே கிடையாதுன்னு விட்டு போயிருக்க மாட்டா. நான் எந்த தப்பும் பண்ணலை ஸ்ருதி.” அவன் உறுதியாகக் கூறினான்.

“இது தான் நான். நான் இப்படின்னு தெரிஞ்சி தான் நீ விரும்பின. அதை இல்லைன்னு சொல்லு ஸ்ருதி.” என்று ஆகாஷ் கூற, ஸ்ருதி எதுவும் பேசவில்லை.

“ஏன் ஸ்ருதி, அமைதியா இருக்க? சொல்லு, நீ இப்படின்னு தெரியாதுன்னு சொல்லு. இல்லை என்னை விரும்பவே இல்லைன்னு சொல்லு. நான் அப்படியே போயிடுறேன்.” என்று ஆகாஷ் சவால் விடும் விதமாக கூறினான்.

ஸ்ருதி மௌனமாக அமர்ந்திருந்தாள்.  “இப்ப நீ பேசினத்துக்கு காரணம் என்னன்னு நான் சொல்லட்டுமா ஸ்ருதி? நான் அன்னைக்கு பேசினத்துக்கான கோபம் உனக்கு இப்ப இல்லை. இத்தனை வருஷம் நான் உன்னைத் தேடி வரலைன்னு கோபம்.” என்றான் ஆகாஷ் சிரித்துக்கொண்டே!

“யாரும் யாரையும் எதிர்பார்க்கலை. நீங்க வரணும்னு தவம் கிடக்கலை.” அவள் முகம் சுழித்தாள்.

“ஹா… ஹா…” ஆகாஷ் பெருங்குரலில் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” என்று ஸ்ருதி கடுப்பாகக் கேட்க, “கல்யாணம் முடிந்த சந்தோஷமுன்னு வையென்.” என்றான் கண்சிமிட்டி.

அவன் கண்சிமிட்டலில், அவள் மனம் இன்னும் அவன் பின்னாடியே போக, அவள் மனதை அதட்டி அமைதியாக அமர வைத்தாள்.

“இல்லை, என் பொண்டாட்டி மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்துட்டா… இனி அவள் காதலை எப்படி காண்பிப்பாங்கிற சந்தோஷமா இருக்குமோ?” என்று சந்தேகமாகக் கேட்டான் ஆகாஷ்.

“காதல் இல்லை ஆகாஷ்.” என்றாள் அவள் முறுக்கி கொண்டு.

“கோபமா? இத்தனை வருஷமா நான் உன்னை தேடி வரலைன்னு கோபமா? அப்படி இருந்தா, நான் ஒன்னும் பண்ண முடியாது ஸ்ருதி. விட்டுட்டு போன நீ தான், என்னை தேடி வந்திருக்கணும். நான் ஏன் வரணும்?” என்று ஆகாஷ் உறுதியாகக் கேட்டான்.

“இப்ப மட்டும் எதுக்கு வந்தீங்க?” என்று ஸ்ருதி ஏமாற்றமாக  கேட்க, “நான் தான் சொன்னனே, என் தங்கைக்காக, இப்ப என் குழந்தைக்காக…” என்று அவனும் விடாமல் கூறினான்.

ஆகாஷின் மனமோ, ‘டேய்… உனக்காகத்தான்னு சொல்லி தொலையேன். ஒரு துளிக்காக கூட  ஸ்ருதிக்காக இல்லைன்னு உன்னால் சொல்ல முடியுமா?’ என்று அவனிடம் சவால் விட்டது.

‘எனக்காக ஏன் வரலைன்னு? ஸ்ருதி, என் சட்டையை பிடித்து கேட்கட்டும்…’ அவன் மனம் அவளை ஏக்கமாகப் பார்த்தது.

ஸ்ருதியின் கோபம் சர்ரென்று ஏறியது. “அது தான் நானும்  சொல்றேன். நமக்குள், காதலும் இல்லை, ஒண்ணுமில்லை. நீங்க அப்படியே போயிருங்க. இல்லை, உங்க மகனை கூட்டிட்டு போயிருங்க.” என்று சற்று சத்தமாகக் கூறினாள்.

“காதல் இல்லைன்னு சொல்லாத. காதல் இருக்கு. உனக்கு என் மேல் காதல் இருக்குன்னு நான் நிரூபிக்கட்டுமா?” என்று ஆகாஷ் புருவும் உயர்த்த, “உங்களுக்கு என் மேல் கொஞ்சமும் காதல் இல்லைன்னு நான் நிரூபிக்கட்டுமா?” என்று அவள் அவனிடம் சாவல் விட்டாள்.

அவள் கூற்றில் கடுப்பாகி, அங்கிருந்து எழுந்தான் ஆகாஷ்.

“கிளம்பு ஸ்ருதி. யாரும் எதையும் நிரூபிக்க வேண்டாம். நீ அப்படியே உங்க வீட்டுக்கு போ. நான் அப்படியே ஒரு கேப் புடிச்சு, ரூமுக்கு போறேன்.” என்று கூறிக்கொண்டு முன்னே நடந்தான்.

‘நான் விலகிவிட்டால் சந்தோஷமுன்னு போயிருவான்.’ அவள் மனம் கலங்கியது. ‘காதலித்தாலும், இது தான் என் நிலைமை. கல்யாணம் செய்தாலும் இது தான் என் நிலைமை. எனக்கு ஆகாஷ் மேல் அவ்வுளவு கோபம். இன்னும் கோபம். நான் அதை அவனிடம் காட்ட கூடாதா?’ என்று அவள் மனம் ஓலமிட்டது.

‘நானா அவனை தேடி போனேன். அவன் தானே வந்தான். வந்துட்டு போன்னு சொன்னா என்ன அர்த்தம்.’ அவள் மனம் குமுறினாலும், ஸ்ருதி எதுவும் பேசவில்லை. மெளனமாக நடந்தாள்.   இருவரும்  கோவிலுக்கு வெளியே வந்தனர். ஏதும் பேசவில்லை.

சிந்தனையில் இருந்த ஸ்ருதி, முன்னே இருந்த படியில் தெரியாமல் மோதிக்கொள்ள, வலியில் “ஸ்…” என்று முகம் சுழித்தாள்.

“பார்த்து வரக்கூடாதா?” என்று ஆகாஷ் கடிந்து கொண்டான்.

“ம்… வந்திருக்கலாம்.” கூறிக்கொண்டே, அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றாள்.   அந்த பதிலில் பல சிந்தனைகளை பொதித்து கொண்டு.

‘என்னை போக வேண்டாமுன்னு சொல்ல மாட்டாளா?’ என்று அவனும் அவள் அருகே நின்று கொண்டான்.

சின்ன பொட்டோடு இருந்த அவள் நெற்றியை பார்த்தான். அவளை தன் பக்கம் திருப்பி,  தன் கையிலிருந்த குங்குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்தான்.  ஸ்ருதியின் கண்கள் கலங்கியது.

‘உன்னை அழவைக்கணுமுன்னு, நான் ஒரு நாளும் நினைத்ததில்லை.’ அவன் மனம் அவளுக்காக உருகியது.

“டாலி…” அவன் உதடுகள் அவனை மீறியும் முணுமுணுத்தது.

அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் ஸ்ருதி.  அவன் அவள் தலை கோதினான். “ஸ்ருதி…” அவன் அழைக்க, அவள் விலகிக் கொண்டாள்.

“நீங்க அப்படியே கேப் பிடிச்சு போயிருங்க. நான் அப்படியே கிளம்புறேன்.” அவள் சிலுப்பிக்கொண்டாள்.

ஆகாஷ் அவள் முகத்தை கைகளில் ஏந்தி, அவள் கண்களைத் துடைத்தான்.

‘எதுவும் சரியாகவில்லை.’ அவன் அறிவு கூறியது.

‘இருவரின் மனதிலும் காயம். அதன் ஆழம் அதிகம். அதைக் கீறி மருந்திட வலியும், வேதனையும் வெளி வரும். அனுபவித்துத் தான் தீர வேண்டும். அதைத் தாண்டி வர வேண்டும். பொறுமையாக.’ எண்ணிக்கொண்டான் ஆகாஷ்.

“வா… வீட்டுக்கு போவோம்.” அவன் நடக்க, “நீங்க போங்க.” ஸ்ருதியின் முகத்தில் பிடிவாதம்.

“காதல் இல்லைனா போய்டுவேன். புரிதல் தான் இல்லை. வாழ்ந்து பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று ஆகாஷ் குறும்போடு கூறினான்.

“ஒன்னும் தேவை இல்லை.” அவள் சிணுங்க, “காருக்கு தூக்கிட்டு போகணுமுன்னு நீ சொல்லிட்டா, நான் தூக்கிட்டு போய்டுவேன்.” என்று அவன் கைகளை விரிக்க, அவள் காரை நோக்கி வேகமாக நடந்தாள்.

ஆகாஷின் சிரிப்பு அவளை வேகமாகத் துரத்தியது. ‘குறும்பா…’ அவள் மனம் அவளையும் மீறிக் குதூகலித்தது. இருவரும் வீட்டுக்குச் சென்றனர். ஸ்ருதியின் கழுத்தில் தாலி, உள்ளே மறைந்திருந்தது.  மற்றவர்களுக்குத் தெரியவில்லை. பார்வதி கண்டுகொண்டார். அவர் கண்கள் கலங்கியது. துடைத்துக்கொண்டார். ஆனால், அவர் மனதில் நிம்மதி பரவியது.

“அம்மா…” காத்திருந்த கிருஷ் அவளை கட்டிக்கொண்டான். அவள் கன்னத்தை உரசிக் கொஞ்சினான். “என்னடா? அப்பாவுக்கு கிடையாதா இதெல்லாம்?” அவன் கேட்க, தந்தையிடம் பாய்ந்தான் கிருஷ்.

உரிமையோடு ஸ்ருதியிடம் சாய்ந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டான் ஆகாஷ்.

‘இயல்பா வாங்குறானா? இல்லை வேணுமுன்னே செய்றானா?’ ஸ்ருதி அவனை சந்தேக கண்களோடு பார்த்தாள். ஆகாஷின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஸ்ருதி இருவரையும் பார்த்துக்கொண்டே இருக்க, “பையனை பாக்குற மாதிரி, என்னை சைட் அடிக்க கூடாது. தப்பு!” என்று அவன் காதருகில் சென்று கிசுகிசுத்தான்.

அவர்கள் நெருக்கத்தில் அனைவரின் முகத்திலும் திருப்தி. ஸ்ருதி மட்டுமே, அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவன் கண்ணடிக்க, ‘இவன் திருந்தவே மாட்டான்.’ அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“சாப்பிட வாங்க.” என்று பார்வதி அழைக்க, அனைவரும் சாப்பிடச் சென்றனர்.

விஷயத்தைக் கணித்திருந்தவர் போல், கேசரி செய்திருந்தார் .

இட்லி, சட்னி, சாம்பார், வடை, கேசரி என்று அவர் பரிமாற அனைவரும் உண்ண ஆரம்பித்தனர். கிருஷ்,  ஆகாஷ், ஸ்ருதிக்கு இடையில் அமர்ந்து சாப்பிட்டான். அவன் சாப்பிடுவதை ரசித்து பார்த்தான் ஆகாஷ்.

“ஊட்டி விடுங்க.” என்று பாதியில் கிருஷ் பிடிவாதம்  பண்ண, “டேய்…” என்று ஸ்ருதி அவனை மிரட்டினாள்.

“நான் குடுக்கட்டுமா?” என்று ஆகாஷ் ஆசையாக கேட்டான்.

“நோ… ஒன்லி அம்மா.” என்று கிருஷ் உறுதியாக கூறினான்.

“கிருஷ்… அப்படி சொல்ல கூடாது. அப்பா கிட்ட சாப்பிடு.” என்று ஸ்ருதி அவனை சமாதானம் செய்ய, “ஹி இஸ் எ நியூ மேன்.” என்று கிருஷின் பிடிவாதம் கூடியது.

ஆகாஷ் குழந்தையை வாஞ்சையோடு பார்த்தான்.  “பசி… தூக்கம்.. அது தான் இப்படி பேசுறான்.” பார்வதி தடுமாறினார். கார்த்திக், ஈஸ்வரன் இருவரும் ஆகாஷை தர்மசங்கடமாக பார்த்தனர்.

“கிருஷ் சொல்றதும் சரி தானே? ஸ்ருதி நீ அவனுக்கு குடு.” என்று கூற, ஸ்ருதி அவனுக்கு ஊட்டினாள்.

கிருஷ் அங்கிருந்து ஓட, “டேய்… இப்படி வளர்ந்தும், நீ என்னை ஓட விடுற டா.” என்று அவன் பின்னே அவனுக்கு ஈடு கொடுத்து ஓடினாள் ஸ்ருதி.

“நான் ஸ்ருதியையும், கிருஷையும் சென்னைக்கு கூட்டிட்டு போறேன்.” ஆகாஷ், ஸ்ருதி அருகில் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பேச்சை ஆரம்பித்தான்.

கார்த்திக் அங்கிருந்து நழுவ எத்தனிக்க, “உனக்கு தெரியாம, நான் எதுவும் பேசப்போறதில்லை கார்த்திக்.” என்று கூறி, அவனை அங்கு இருக்கச் செய்தான் ஆகாஷ்.

“எங்கயோ ஆரம்பித்த தப்பு. கல்யாணம் வரைக்கும் எதையும் சரியா பண்ண முடியலை.” ஈஸ்வரன் வருத்தத்தோடு கூறினார்.

“உங்களை கூட்டிட்டு போயிருக்கணும். ஆனால், அது இன்னும் மனக்கஷ்டம் தான்னு தோணுச்சு.” என்று ஆகாஷ் கூற, “சரி தான் மாப்பிள்ளை. இப்ப நடந்ததே எங்களுக்கு மன திருப்தி.” என்று பார்வதி கூறினார்.

“தேங்க்ஸ்…” என்று அவர்கள் புரிந்து கொண்ட நிம்மதியில் கூறினான் ஆகாஷ்.

“பிசினெஸ்…” என்று ஆகாஷ் இழுக்க, “நாங்க இப்ப அங்க வரலை. ஸ்ருதியையும், பேரனையும் கூட்டிட்டு போங்க. நான், இப்பொதைக்கு இங்க பிசினெஸ் பார்த்திக்குறேன். எல்லாம் சரியாகட்டும். அப்புறம் வரோம்.” என்று கூறினார் ஈஸ்வரன்.

ஆகாஷ், யோசனையாகப் பார்க்க, “எங்களாலையும் ரொம்ப நாள் கிருஷை பார்க்காம இருக்க முடியாது. சீக்கிரம் வந்திருவோம்.” என்று பார்வதி  சிரித்த முகத்தோடு கூறினார்.

“ஸ்ருதி அங்க இருந்து பிசினஸை பார்க்கட்டும்.” என்று ஈஸ்வரன் கூற, ஆகாஷ் சம்மதமாக தலை அசைத்துக்கொண்டான்.

ஆகாஷ், தன் தலையைத் திருப்பி ஸ்ருதியை பார்த்தான். கிருஷோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள். அவன் முகத்தில் ஒரு ரசனையோடு புன்னகை விரிந்தது.

“ஸ்ருதி கொஞ்சம் பிடிவாதக்காரி. கொஞ்சம் கோவக்காரி. ஆனால், நல்லவ…” பார்வதி சற்று தழைந்து பேசினார். அவர் கண்கள் கலங்கியது.

“உங்களை நம்பி தான் ஸ்ருதியை அனுப்பறோம்.” பார்வதியின் மனதில், ஆகாஷின் குடும்பத்தை பற்றிய பயம் தொற்றிக்கொண்டது. அவர் குரல் உடைய, “ஸ்ருதி என் பொறுப்பு அத்தை.” அவனும் அவர்களை இத்தனை வருடங்கள் வருத்தபடுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் பேசினான்.

அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது. ஸ்ருதி கிருஷோடு மல்லுக்கட்டிக்கொண்டே, அவர்களைப் பார்த்தாள்.

‘ஒரே நாள்… ஒரே நாளில் அனைத்தையும் சரிகட்டிவிட்டான். இத்தனை வருடங்கள் நான் இல்லாமல் தானே இருந்தான்?’ அவள் கண்கள் அவனை முறைத்துப் பார்த்தது.

‘இவனுக்கு வேற பிரெஷ் பீஸ் கிடைக்கலையா?’ அவள் மனம் முரண்டு பிடிக்க, அறிவோ, ‘அதை விட்டுத் தொலையேன்.’ என்று எச்சரித்தது.

சாப்பிட்டு முடித்த கிருஷ், சற்று தெம்பாக ஆகாஷிடம் சென்றான்.

“இனி அம்மா மாதிரி, எனக்கும் அம்மா, அப்பா இரெண்டு பெரும் இருப்பாங்க? அம் ஐ ரைட்?” என்று கேட்க, அனைவரும் குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, கிருஷை சற்று வலியோடு பார்த்தனர்.

ஸ்ருதி, அவள் அவனோடு கிளம்ப வேண்டிய கட்டாயத்தை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டாள்.

அதன் பின் நடந்த அனைத்திலும் வேகமே! ஆகாஷ், அவன் திரும்பும் தேதியை இவர்கள் வசதிக்காக மாற்றிக்கொண்டான். கார்த்திக் திட்டமிட்டபடி திரும்பிவிட்டான். அவன் சென்னை அலுவல், அவனை அழைத்துவிட்டது.

விமான நிலையத்தில், ஸ்ருதி சற்று பதட்டத்தோடு காணப்பட்டாள். கிருஷ், கொண்டாட்டமாக அங்குமிங்கும் சுற்றித் திரிந்தான். பாட்டி, தாத்தா விரைவாக இந்தியா வரவேண்டும் என்ற ஆணை வேறு!

விமானம், இந்தியா நோக்கி பறந்தது.

ஆகாஷ், ஸ்ருதியை நோட்டமிட்டான். ‘அவனுடன் வருவதற்கு விருப்பம் இல்லை என்றெல்லாம் இல்லை.’ அவன் மனம், அவள் மனதை அளவிட்டுக்கொண்டது.

‘ஆனாலும், ஏன் இந்த பதட்டம்? நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை ஒருநாளும் ஸ்ருதிக்கு வராதா?’ என்ற கேள்வியோடு அவளைப் பார்த்தான்.

ஆகாஷின் பார்வையில், ‘என்ன?’ என்று ஸ்ருதி புருவங்களை உயர்த்தினாள்.

“என்ன டென்ஷன்?” என்று அவன் கேட்க, “இல்லை… உங்க வீட்டில் எல்லாரும் நம்மளை என்ன சொல்லுவாங்களோ?” அவள் தடுமாற, “வாவ்! ரெண்டு பெரும் செய்தது உலக சாதனை. அப்படின்னு விருது குடுப்பாங்க.” அவன் குரல் கேலியாக ஒலித்தது.

ஸ்ருதி சட்டென்று கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ‘இவன் மாறவே மாட்டான்.’ அவள் கடுகடுத்துக் கொண்டாள்.

‘நான் இப்ப அப்படி என்ன சொல்லிட்டேன்? இவளுக்கு உடனே அப்படி என்ன பொசுக்குன்னு கோபம்? இவள் மாறவே மாட்டாள்!’ அவனும் அவள் கோபத்தை ரசித்துச் சிரித்துக்கொண்டான்.

‘விட்டுட்டே போனாலும், இந்த கோபம் எனக்கு பிடித்து தொலைக்குதே!’ அவன்  மனம் அவனையே கேலி செய்து கொண்டது.

சென்னை வந்தடைந்து, அவர்கள் வீட்டை நோக்கிப் பயணித்தனர். ஸ்ருதி, ஆகாஷிடம் எதுவும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. கிருஷ், பயணத்தில் சற்று களைப்பாக இருந்தான். தூக்கம் அவன் கண்களை சுழட்டிக்கொண்டு நின்றது.

தந்தையின் தோளில், சாய்ந்து கொண்டான்.

வீட்டில் யாருக்கும் விஷயம் தெரியாது. கீதாவுக்கு மட்டுமே கிருஷ் பற்றிய தகவலை கூறி இருந்தான் ஆகாஷ். கீதா இவர்கள் வருகைக்காகக் காத்திருக்க… ஆகாஷ், ஸ்ருதியுடனும் குழந்தையுடனும் வர, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

சுமதியே முதலில் தன்னை மீட்டுக்கொண்டார். “இத்தனை வருஷத்துக்கு அப்புறம் குழந்தையோடு வந்தா, இந்த குழந்தைக்கு நீ தான் அப்பாங்கிறதுக்கு என்ன சாட்சி?” என்று நக்கலாகக் கேட்டார்.

ஸ்டேட்டஸில் ஆரம்பித்த வெறுப்பு, பின் தன் மகனை முழுதாக ஆட்டி படைக்கிறாள் என்ற வெறுப்பு, விலகிச் சென்றும் தன் மகனின் வாழ்க்கையை அழித்து விட்டாள் என்ற வெறுப்பு, இன்று குழந்தையோடு வந்து மொத்த குடும்ப மானத்தையும் வாங்கிவிட்டாள் என்ற வெறுப்பு கேள்வியாக வெளிவந்தது.

‘ஆகாஷ் ஏற்றுக்கொண்டால், நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?’ என்று அழுத்தம் அவர் முகத்திலிருந்தது.

“கேட்குறேன்ல்ல என்ன சாட்சின்னு?” ஸ்ருதியை அவமானப்படுத்த அவர் முடிவாக நின்றார்.

ஸ்ருதி பிரச்னையை எதிர்பார்த்தால் தான், ஆனாலும் இந்த கேள்வியை… அவள் தைரியமும் மெல்ல ஆட்டம் கண்டது. ஆகாஷுக்கும், அவளுக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்துக்கொண்டு அவன் அருகே நின்று கொண்டாள்.

‘விளையாடி பார்த்திருவோமா?’ என்ற எண்ணத்தோடு, ஆகாஷின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

குறும்புகள் தொடரும்…