Kadhal 20

தனபாலனை பழி தீர்க்க காத்திருந்த மேக்னாவிற்கு இன்னும் ஒரு நாளே எஞ்சியிருந்தது.

எந்த தடயமும் இல்லாமல் தனபாலன் மற்றும் அவரது உடனிருப்போரை கூண்டோடு அழிக்க திட்டம் போட்டு கொண்டிருந்தவளிற்கு தெரியவில்லை நாளைய விடியல் அவளுக்கு பெரிதாக ஒரு இடியை அவளது தலையில் இறக்க காத்திருக்கிறது என்பது.

அடுத்த நாள் காலை வானம் கூட முழுமையாக விடியாமல் மப்பும், மந்தாரமுமாக இருக்க மேக்னாவின் மனமும் அதேமாதிரி ஒரு இயல்பில்லாத நிலையிலேயே தவித்துக் கொண்டிருந்தது.

பெயருக்கு சாப்பிடுகிறேன் என்ற பெயரில் ஒன்றிரண்டு உணவுப் பருக்கைகளை கிள்ளி வாயில் போட்டவள் அவசர அவசரமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றாள்.

வழக்கமாக மேக்னா அவசரமாக சாப்பிட்டு விட்டு செல்லப் போனால் வள்ளி அவளை அப்படி செல்ல விடாமல் கடிந்து கொள்வதுண்டு.

ஆனால் இப்போது வள்ளி அப்படி எதுவும் கூறாது இருக்க அவளும் அது எதைப்பற்றியும் சிந்தனை இல்லாமல் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

பல்வேறு சிந்தனைகளினூடே பேரூந்தில் ஏறி தனபாலனின் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வந்தவள் அந்த கட்டடம் மூடப்பட்டு இருக்கவும் சுற்றிலும் ஒரு தடவை திரும்பி பார்த்து விட்டு மெல்ல சத்தமின்றி அந்த கட்டடத்தின் பின்புறமாக இருந்த பாழடைந்த கட்டடத்தை நோக்கி நடந்து சென்றாள்.

தனபாலன் உள்ளே இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக அவரது கார் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருக்க சத்தமின்றி அடியெடுத்து வைத்து அந்த கட்டடத்தின் வாயிற் கதவின் புறமாக சென்று நின்று கொண்டவள் தன் முகத்தில் வடிந்த வியர்வை துளிகளைத் துடைத்து கொண்டே உள்ளே என்ன நடக்கிறது என்று காது கொடுத்து கேட்க தொடங்கினாள்.

“அண்ணே! நீங்க பலே ஆளுண்ணே! உங்களை எதிர்த்து யாரு வந்தாலும் அவங்களை எல்லாம் ஒரே நிமிஷத்தில் உங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துடுறீங்களே! எப்படிண்ணே அது உங்களால் மட்டும் முடியுது?” போதையில் குளறியபடியே ஒருவர் தனபாலனைப் பார்த்து கேட்க

அதற்கு பெருங்குரலெடுத்து சிரித்துக் கொண்டவர்
“இத்தனை வருஷமாக போலீசையும், அரசாங்கத்தையும் ஏமாற்றி உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் வைத்து இருக்குறது எப்படின்னு நினைச்ச? எல்லாம் பணம்! அந்த பணம் இருந்தால் என்ன வேணும்னாலும் பண்ணலாம் அப்படி இருக்கும் போது கேவலம் என்னை எதிர்க்க நினைக்குற ஆளை வாங்க மாட்டேனா என்ன?” கேள்வியாக தன்னை சுற்றி நின்றவர்களை நோக்க

அவர்களும்
“ஆமா! ஆமா!” என ஆமோதிப்பாக தலை அசைத்து கொண்டனர்.

“அப்போ அந்த மேக்னா பொண்ணையும் அப்படி தான் உங்களுக்கு கீழே வேலை பார்க்க வைத்தீங்களா?” இன்னொரு நபர் சந்தேகமாக கேட்க அதை கேட்ட தனபாலனது முகமோ கோபத்தில் சிவந்து போனது.

தனது கையில் இருந்த மதுக் கோப்பையை இறுகப் பற்றிக்கொண்டவர்
“மேக்னா! அவ சாதாரணமான பொண்ணு இல்லை அவ நூறு ஆம்பளைக்கு சமம் தைரியத்திலும் சரி, மூளையிலும் சரி அவளை அடித்து கொள்ள ஆளே இல்லை!” என்று கூறவும்

அவர் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு நபரோ
“என்ன அண்ணே! இப்படி சொல்லுறீங்க?” சற்று குழப்பத்துடன் அவரை நோக்கினார்.

“பின்ன அவ என் கூடவே இருந்துட்டு என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு என்னை அழிக்க திட்டம் போட்டு இருக்கா! அப்படிப்பட்டவள் சாதாரணமான பொண்ணா?”

“என்ன அண்ணே சொல்லுறீங்க? உங்களை அழிக்க அந்த பொண்ணு திட்டம் போட்டு இருக்காளா? அவளை பற்றி தெரிந்ததற்கு அப்புறமும் எதற்காக அவளை இன்னமும் உயிரோடு வைத்து இருக்கீங்க அண்ணே? ‘ம்’ ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அவ தலையை வெட்டி உங்க காலடியில் போடுறேன்” தனபாலன் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் ஆக்ரோஷமாக சத்தமிட அந்த நபர் கூறியதை எல்லாம் கேட்டு கொண்டு நின்றவள் தன்னை பற்றி எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டதே என்ற ஆதங்கத்துடனும், அந்த நபர் தன்னை பற்றி கூறியவற்றைக் கேட்டு கோபத்துடனும் முகம் சிவக்க தன் கைகளை ஓங்கி அங்கிருந்த சுவற்றில் குத்திக் கொண்டாள்.

“என் தம்பி மகேஷை அடித்து ஹாஸ்பிடலில் படுக்க வைத்த அன்னைக்கே அவளை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பேன் ஆனா அவ பண்ண வேலைகள் எல்லாம் என்னை அப்போ தயங்க வைத்துடுச்சு மகேஷ் சாவுக்கு அப்புறம் கட்சியில் இருந்து ஒவ்வொரு ஆளா விலக ஆரம்பிச்சுட்டானுங்க அந்த நேரம் என் பணம் கூட அங்கே வேலை செய்யல அப்போவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது போன வாரம் தான் அந்த சந்தேகம் உறுதியானது இதெல்லாம் பண்ணது அந்த மேக்னா தான்?”

“எப்படி அண்ணே? அவ ஒரு சாதாரண பொண்ணு அவளை போய் உங்க எதிரி ஸ்தானத்துக்கு வைக்குறீங்க உங்க காலில் போடுற செருப்பைத் தொடக்கூட அவளுக்கு தகுதி இல்லை அவளை போய்!”

“நானும் ஆரம்பித்தில் அப்படி தானே நினைத்தேன் அது தான் நான் பண்ண பெரிய தப்பு அப்போவே என் நண்பன் சுதர்சன் சொன்னான் அவளை கூட்டு சேர்க்காதேன்னு நான் தான் கேட்கல”

“எப்படிண்ணே அப்போ அவள் தான் எல்லாம் பண்ணான்னு கண்டு பிடித்தீங்க?”

“நம்ம கட்சியில் இருந்து விலகி போனானே சேகர் அவன் தான் போன வாரம் போதையில்
எல்லாவற்றையும் உளறிக் கொட்டிட்டான் என்ன தான் அவ அவளோட சாமார்த்தியத்தை பயன்படுத்துனாலும் நான் என்னோட பண பலத்தை
பயன்படுத்தி ஒருத்தனை ஆச்சும் விலைக்கு வாங்க மாட்டேனா? ஊமை மாதிரி இருந்துட்டு என் காலை சுற்றி சுற்றி வந்தவ இப்போ என்னை கூண்டோடு அழிக்க திட்டம் போட்டு இருக்கா”

“எல்லாம் தெரிந்தும் இன்னும் ஏன்ண்ணே பொறுமையாக இருக்கீங்க? அவளை இப்போவே வெட்டி போட்டுடலாம் வாங்கண்ணே!”

“ஆமா! ஆமா! வாங்கண்ணே!” அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த எல்லா நபர்களும் தங்களை மறந்து கோபமாக சத்தமிட

அவர்கள் எல்லோரையும் பார்த்து புன்னகையோடு அமைதியாக இருக்கும் படி சைகை செய்தவர்
“நான் எப்போதும் என் எதிரியை ஆரம்பத்தில் நேருக்கு நேராக அடிக்க மாட்டேன் அவனோட வீக் பாயிண்டை தெரிந்து அங்கே தான் கை வைப்பேன் அப்போ தான் அவன் தானாகவே நம்ம காலில் வந்து விழுவான்” என்று கூற அவரை சுற்றி நின்ற அனைவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக திரும்பி பார்த்து கொண்டு நின்றனர்.

“என்ன புரியலையா?”

“இல்லையே அண்ணே!”

“மேக்னாவை நேருக்கு நேராக மோதுவது சிங்கத்தின் குகைக்குள் நாம தனியாக வேணும்னே போய் தங்குற மாதிரி ஆனா அவளோட ஆணி வேராக இருக்கும் அவ சொந்தக்காரங்க மேல கை வைக்குறது அந்த சிங்கத்திற்கே தெரியாமல் அதற்கு வலை விரித்து வைக்குற மாதிரி!”

“அப்படின்னா நீங்க ஏற்கனவே வலையை விரிச்சுட்டீங்க இல்லையா அண்ணே?”

“கரெக்ட்! நான் வலையை விரித்து இரண்டு மணி நேரம் ஆகுது இந்நேரம் அந்த சிங்கத்தோட குடும்பம் கைலாசத்திற்கு டிக்கெட் வாங்கி இருக்கும்” என்று விட்டு தனபாலன் சத்தமிட்டு சிரிக்க சுற்றி நின்றவர்களும் அவரது சிரிப்பில் இணைந்து சிரிக்கத் தொடங்கினர்.

வெளியே அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நின்ற மேக்னா இறுதியாக தனபாலன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் சிலையென உறைந்து போய் நின்றாள்.

‘இ…இந்த தனபாலன் என்…என்ன சொல்லுறான்? என்னைப் பற்றி தெரிந்து கொண்டானா? என் குடும்பத்தை அழிச்சுட்டதாக வேறு சொல்லுறானே? ஒருவேளை ராணி அம்மா இருக்கும் இடம் தெரிந்து இருக்குமா? இல்லை இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை! ஒரு வேளை நர்மதா! அய்யோ! நர்மதாவை ஏதாவது பண்ணிட்டாங்களோ?’ அவசரமாக தன் கைப்பையில் இருந்து தன் போனை எடுத்து கொண்டு சற்று தள்ளி சென்று நின்றவள் ஒரு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.

“ஹலோ! நர்மதா!” பதட்டத்துடன் அவள் அழைக்க மறுபுறம் அழைப்பு கோபமாக துண்டிக்கப்பட்டது.

அந்த கோபத்திற்கான காரண கர்த்தா யார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியுமாகையால் நிம்மதியாக பெருமூச்சு விட்டு கொண்டவள் மனமோ
‘ஒரு வேளை வள்ளி மற்றும் நடராஜனுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ?’ என்று அச்சம் கொள்ள ஆரம்பித்தது.

மறுபடியும் தன் போனை எடுத்து கொண்ட மேக்னா வள்ளிக்கு அழைப்பை மேற்கொள்ள அவரது தொலைபேசியோ சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

மீண்டும் மீண்டும் அழைப்பை மேற்கொண்டவளுக்கு அதே பதிலே கிடைக்க அவளுக்கோ உள்ளுக்குள் அச்சத்தில் குளிர் பரவத் தொடங்கியது.

வீட்டுக்கு சென்று நேரில் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டு வேகமாக அங்கிருந்து செல்ல போனவள் அந்த கட்டடத்திற்குள் இருந்து வந்த சிரிப்பொலியைக் கேட்டு ஒரு நொடி அந்த இடத்திலேயே தயங்கி நின்றாள்.

‘இன்று இந்த தனபாலனை விட்டால் நாளை என்னை சூழ இருக்கும் மற்ற நபர்களுக்கும் இவனால் ஆபத்தாக தான் அமையும் ஏற்கனவே அந்த தனபாலன் என்னைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டான் இதற்கு மேல் தாமதித்தால் எனக்கு தான் அது ஆபத்தாக அமையும்’ என்று எண்ணிக் கொண்டவள் சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டுக் கொண்டே அந்த கட்டடத்தின் வாயிற் கதவின் அருகில் சென்று நின்று கொண்டு தன் கைப்பையில் இருந்து கையுறைகளை எடுத்து மாட்டிக்கொண்டாள்.

பின் மெல்ல மெல்ல அந்த கதவை இழுத்து வெளிப்புறமாக பூட்டியவள் உள்ளே இருக்கும் நபர்கள் வெளியே செல்ல முடியாதபடி எல்லா கதவுகளையும் வெளிப்புறமாக தாழிட்டு விட்டு தன் கைப்பைக்குள் இருந்த லைட்டரை எடுத்துக்கொண்டு ஒரு ஜன்னல் புறமாக வந்து நின்றாள்.

அந்த ஜன்னல் இருக்கும் பகுதியில் தான் பல வகையான வெடிமருந்து பொருட்களை அவர்கள் அடுக்கி வைத்திருப்பர்.

மீண்டும் ஒரு தடவை திரும்பி சுற்றிலும் நோட்டம் விட்டவள் தன் கையில் இருந்த லைட்டரை கொளுத்தி அந்த ஜன்னலினூடாக உள்ளே போட்டு விட்டு வேகமாக அந்த இடத்தில் இருந்து விலகி ஓடிச் சென்றாள்.

அவள் அந்த இடத்தில் இருந்து விலகி ஏழு, எட்டு அடிகள் வைத்து இருக்கவும் அந்த கட்டடம் முழுவதும் ஒரு பெரும் சத்தத்துடன் வெடித்து புகை மூட்டமாக மாறவும் சரியாக இருந்தது.

வானமே இடிந்து விழுந்தாற் போல பெரும் சத்தத்துடன் தரைமட்டமாக மாறிய அந்த கட்டடத்தை திரும்பி பார்த்த மேக்னாவின் முகத்தில் அத்தனை பரவசம் தாண்டவமாடியது.

பல வருடங்களாக மனதிற்குள் வளர்த்து வந்த வஞ்ச உணர்வை நிறைவேற்றி விட்ட திருப்தியோடு அவள் அந்த இடத்தில் இருந்து அகன்று வேகமாக தன் வீட்டை நோக்கி விரைந்து சென்றாள்.

வீட்டுக்கு வந்து சேரும் ஒவ்வொரு நொடியும் அவளது மனம் அவள் வசம் இல்லை.

தனபாலன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் நினைவுக்கு வந்து அவளை பாடாய்ப்படுத்த தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவள்
“அம்மா! அப்பா!” சத்தமிட்டு கத்திக் கொண்டே மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

அங்கே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த மேக்னாவை வரவேற்றது நடராஜன் மற்றும் வள்ளியின் உயிரற்ற உடல்களே.

தன் கையில் இருந்த கைப்பை நழுவி கீழே விழ தடுமாற்றத்துடன் வள்ளியின் உடலின் அருகில் வந்து அமர்ந்து கொண்டவள் கைகள் நடுங்க அவர் மூக்கின் அருகில் தன் கையை கொண்டு சென்றாள்.

அவரது மூச்சுக் காற்று எப்போதோ அவரை நீங்கி சென்று இருக்க
“அம்மா!” என்ற அலறலோடு அவரை அள்ளி தன் மடியில் போட்டு கொண்டவள்

“அம்மா! அம்மா! ப்ளீஸ் ம்மா! என்னைப் பாரும்மா நான் இனி எந்த தப்பும் செய்ய மாட்டேன் என்னைப் பாரும்மா ப்ளீஸ் ம்மா! நான் நான் இப்போவே நர்மதாவை போய் கூட்டிட்டு வர்றேன் ப்ளீஸ் ம்மா! என்னைப் பாரும்மா! அம்மா பேசும்மா! அப்பா! அம்மாவை என்னோட பேச சொல்லுப்பா” கண்ணீரினூடு நடராஜனின் புறம் திரும்ப அவரோ இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

“அப்பா! அப்பா! எழுந்திரிங்கப்பா! நீங்க என்னை விட்டுட்டு இப்படி எல்லாம் போக கூடாது ப்ளீஸ் ப்பா! ப்ளீஸ் என்னை விட்டு போக வேணாம் ப்ளீஸ்! ப்ளீஸ்!” நடராஜனது உடலையும், வள்ளியின் உடலையும் தன் மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுத படி இருந்த மேக்னாவின் மனமோ

‘அநியாயமாக இவர்கள் உயிரை பறித்து விட்டாயே மேக்னா!’ என அவளைக் குற்றம் சாட்டியது.

‘நானா? நானா இவர்கள் உயிரை பறித்தேன்?’

‘ஆமாம் நீ தான் எல்லாவற்றுக்கும் காரணம்! நர்மதாவைக் காப்பாற்றிக் கொண்டு வந்து வீட்டில் வைத்ததோடு விடாமல் தனபாலனை தேடி சென்று அவனைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி இவர்கள் உயிரை அழித்து விட்டாயே! நீ இவர்கள் வாழ்க்கையில் வந்திருக்கா விட்டால் இப்போது இவர்களுக்கு இந்த ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காதே! அப்படி என்றால் தனபாலன், மகேஷ் மட்டுமல்ல இவர்களை கொலை செய்ததும் நீ தானே?’ அவளது மனசாட்சி அவளைப் பார்த்து கேள்வி எழுப்ப அவளோ அந்த கேள்வியில் முற்றிலும் குழம்பி போனாள்.

“நான்…நான் தான் இவர்களை கொலை செய்து விட்டேன்! நான் தான் கொலை செய்தேன்! நான் தான் கொலை செய்தேன்! நான் தான் கொலைகாரி! நான் தான் தப்பு பண்ணிட்டேன்! எனக்கு தண்டனை கொடுங்க! எனக்கு தண்டனை கொடுங்க” மேக்னா தன்னை மறந்து பெருங்குரலெடுத்து சத்தமிட்டு கத்த சுற்றிலும் இருந்த அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அந்த வீட்டின் முன்னால் குவிய ஆரம்பித்தனர்.

இரத்தம் தோய்ந்த கைகளோடு மேக்னா வள்ளி மற்றும் நடராஜனுடன் இருந்த கோலத்தைப் பார்த்து விட்டு அவர்கள் அவசரமாக போலீசாருக்கு அழைப்பை மேற்கொள்ள ஜெஸ்ஸி தலைமையிலான ஒரு குழு அங்கே வந்து சேர்ந்தது.

சிறிது நேரத்தில் வள்ளி மற்றும் நடராஜனது உயிரற்ற உடல்களை வாகனத்தில் ஏற்ற அவர்களது உடலையே வெறித்துப் பார்த்து கொண்டு நின்றவள் ஜெஸ்ஸியின் முன்னால் வந்து நின்று தன் இரத்தம் தோய்ந்த கைகளை அவளின் புறம் நீட்டி
“நான் தான் அவங்களை கொலை பண்ணேன் என்னை அரெஸ்ட் பண்ணுங்க” என்று கூற அவள் மட்டுமின்றி சுற்றி நின்ற அக்கம்பக்கத்தினர் கூட அவளை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நின்றனர்.

அவளது கைகளில் உறைந்து இருந்த இரத்தக் கறையும், சுற்றிலும் நின்ற அக்கம்பக்கத்தினர் ஒரு சிலரது வாக்கு மூலமும் மேக்னா கூறியதை உறுதிப்படுத்துவது போல இருக்க ஜெஸ்ஸி மேக்னாவின் கைகளில் விலங்கை மாட்டினாள்.

‘சுந்தரிம்மா மற்றும் எனது அப்பாவின் ஆக்சிடெண்டில் தடம் மாறி சென்ற எனது வாழ்க்கை இறுதியாக வள்ளிம்மா மற்றும் நடராஜன் அப்பாவின் இறப்பில் எனக்கான ஒரு இறுதி இலக்கை கொண்டு வந்து சேர்த்தது அது தான் மரணம் நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டால் எனக்கு தண்டனை கிடைக்கும் இத்தனை நாட்களாக நான் செய்த ஒட்டுமொத்த தவறுக்குமான தண்டனையை எந்த கவலையும் இன்றி சந்தோசமாக ஏற்றுக் கொள்ளும் ஆவலுடன் எனது முதல் அடியை காவல் நிலையத்திற்குள் எடுத்து வைத்தேன்’ மேக்னாவின் டைரியில் இருந்த அந்த வார்த்தைகளைப் படித்து பார்த்த சித்தார்த்திற்கு அந்த கணம் என்ன செய்வது என்றே புரியாமல் இருக்க

‘மேக்னா செய்யாத கொலைக்காகவா தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறாள்?’ என்ற கேள்வியோடு டைரியின் அடுத்த பக்கத்தை புரட்டினான்.

இரண்டு, மூன்று மாதங்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டே இருக்க சரியான ஆதாரம் இல்லாமல் அந்த கொலை வழக்கு இழுபறி நிலையிலேயே சென்று கொண்டிருந்தது.

அதற்கிடையில் மேக்னா மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு இருக்க அங்கே தான் மகேஷை கொலை செய்த அன்று தான் காப்பாற்றிய பெண்ணின் அன்னையை மேக்னா கண்டு கொண்டாள்.

தன் மகளின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொடுத்த நல்ல உள்ளம் படைத்த இந்த பெண்ணா தன் தாய், தந்தையை கொலை செய்து இருப்பாள் என்று அவரால் நம்ப முடியவில்லை.

அதனால் என்னவோ அவர் எப்போதும் மேக்னாவிற்கு மற்றவர்கள் அறியாமல் அடிக்கடி உதவி செய்து கொடுப்பதுண்டு.

அவளும் அவரை தன் உறவு போலவே நினைத்து வைத்தாள்.

தனபாலனது கடத்தல் பொருட்கள் இருந்த இடம் முற்றிலும் தீக்கிரையாகி இருக்க போலீசாரும் அதைப் பற்றி பெரிதாக விசாரணை நடத்தவில்லை.

ஏற்கனவே அவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் இருந்திருக்க இப்போது தானாகவே அந்த இடம் அழிக்கப்பட்டு இருக்க நெருப்பினால் விபத்து நடந்து அந்த கட்டடத்தில் இருந்த அனைவரும் தனபாலன் உட்பட எல்லோரும் இறந்து விட்டனர் என்று சொல்லி அந்த விசாரணையை முடித்து இருந்தனர்.

‘எல்லாம் முடிந்து விட்டது! எனது இலட்சியம் நிறைவேறி விட்டது! தனபாலன் என்ற ஒரு தனியாள் ஆட்டுவித்த மொத்த சாம்ராஜ்யத்தையும் அழித்து விட்ட திருப்தியுடன் தூக்கு மேடையேற நான் தயாராகி இருக்க அந்த கடவுளோ மறுபடியும் நான் நினைத்ததை எனக்கு கொடுக்காமல் பதினைந்து வருடங்களுக்கு ஆயுள் தண்டனையை எனக்கு பெற்று தந்து விட்டார் இறப்பதற்கு கூட எனது விருப்பத்தை நிறைவேற்ற அவருக்கு ஆசை இல்லையோ? என்னவோ?’ மேக்னாவின் கண்ணீர் துளிகள் பட்டு அந்த இடம் காய்ந்து போய் இருந்தது.

மெல்ல தன் கைகளால் அந்த இடத்தை வருடிப் பார்த்தவன் அடுத்த வரிகளை படிக்கத் தொடங்கினான்.

‘நான் உண்மையாகவே தப்பை செய்து விட்டு அதை மறைத்த போது என்னை காட்டிக் கொடுக்கவோ, காப்பாற்றவோ துணை வராதவர்கள் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட தவறில் இருந்து என்னை காப்பாற்ற பாடாய்ப்படுகின்றனர்’ அந்த வசனங்கள் யாருக்காக எழுதப்பட்டிருந்தது என்று சித்தார்த்திற்கு நன்றாகவே புரிந்ததால் அவன் இதழ்கள் இயல்பாக புன்னகையில் விரிந்தது.

‘எல்லாம் இயல்பாக போய் கொண்டிருந்த வேளை மறுபடியும் என்னை சோதித்து பார்க்க தனபாலன் இறக்கவில்லை என்ற செய்தி என்னை வந்து மொத்தமாக புரட்டிப் போட்டது எல்லாம் முடிந்து விட்டது என்று நான் இங்கே நிம்மதியாக இருக்க மறுபடியும் நான் வைத்த முற்றுப்புள்ளி காற்புள்ளியாக மாறி விட்டது அந்த காற்புள்ளியை மேலும் தொடர விடாமல் முற்றுப்புள்ளியாக மாற்ற என்னிடம் வந்து சேர்ந்தது ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷம் நான் விலகி விலகி போகும் வேளை எல்லாம் என்னைத் தொடர்ந்து வந்த இம்சையாக நான் நினைத்து இருந்தவர் தான் இப்போது என்னை, என் வாழ்க்கை பயணத்தை முழுமையாக மாற்றப் போகிறார் என்ற ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்

இப்படிக்கு,
சித்தார்த் உங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் மேக்னா’
இறுதியாக இருந்த டைரியில் இறுதிப் பக்கத்தில் இருந்த அந்த இறுதி வசனங்களை படித்து பார்த்ததுமே சித்தார்த் சட்டென்று அந்த டைரியை மூடி வைத்து விட்டு

”இவ என்ன சொல்லி இருக்கா? இவ வாழ்க்கையை நான் மாற்றப் போறேன்னா? என்ன ஒரு தைரியம் இவளுக்கு! செய்யுறது எல்லாம் கொலை, கடத்தல்! இதுல நான் வேற அவளை காப்பற்றணுமாம் டேய்! சித்தார்த்! வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கி வந்து இருக்கியே கண்ணா! என் வாழ்க்கையையே என்னால மாற்ற முடியல இதுல உன் வாழ்க்கையை வேறு நான் மாற்றணுமாம்மா மேக்னா? என்ன கொடுமை ஸார் இது?” தன்னை மறந்து புலம்பியபடி தன் தலையில் கை வைத்து கொண்டான்……