KurumbuPaarvaiyile-27

குறும்பு பார்வையிலே – 27

சுமதி இவர்களைக் கனல் கக்கும் பார்வை பார்க்க, ஆகாஷின் தந்தை, பாட்டி, தாத்தா அனைவரும் அமைதியாகவே நின்றனர்.

‘இவ்வளவு நேரம் என் கிட்ட சரியா கூட பேசலை. இப்ப எதுக்கு என் பக்கத்தில் நிக்குறா?’ என்று ஸ்ருதியை சற்று மனகீனத்தோடே பார்த்தான் ஆகாஷ். அவன் பார்வை அவள் கண்களில் வந்து நின்றது.

‘இப்படி தானே அன்றும் பார்த்தாள்.’ அவன் கடைசியாக அவளை பார்த்த தினம் அவனுக்கு நினைவு வர , ஆகாஷ் ஒரு நொடி ஆடிப்போனான். ‘அன்றும், ஸ்ருதிக்குள் இத்தனை பதட்டமா? ஏன் நான் இல்லையா இவளுக்கு?’ அவன் மனம் சிந்தித்தது.

கீதா நிலைமையை ஊகித்துக்கொண்டு, கிருஷை வாங்கி கொண்டு அவள் அறைக்குச் சென்றாள்.

வேலைக்காரர்கள், இங்கிதம் கருதி விலகிக் கொண்டனர்.

“கேட்குறேன்ல? என்ன சாட்சின்னு?” சுமதி விடாப்பிடியாக நின்றார்.  ‘விளையாட்டை அம்மா பக்கம் திருப்பிர வேண்டியது தான்.’ முடிவெடுத்துக்கொண்டான் ஆகாஷ்.

“வேற யார் சாட்சி? நான் தான்.” அசராமல் கூறினான் ஆகாஷ்.  அனைவரும் அவனை பார்க்க, “ஸ்ருதி கன்சீவ் ஆனது, அவளுக்குக் குழந்தை பிறந்தது அப்படின்னு எல்லாம் எனக்குத் தெரியும். நாங்க பிரியலாமுன்னு இருந்தோம். அது தான் உங்க கிட்ட சொல்லலை.” என்று அசட்டையாகக் கூறினான் ஆகாஷ்.

‘அடப்பாவி… எவ்வளவு பொய்?’ என்று கண்களை விரித்தாள் ஸ்ருதி.

‘எதுவும் சந்தேகம் இருக்கா?’ என்பது போல் ஆகாஷ் அவர்களைப் பார்க்க, ஆவுடை பாட்டி ஆகாஷின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். யாரும் எதுவும் பேசவில்லை.

“தப்பு தான் பாட்டி. குழந்தையை வச்சிக்கிட்டு, ஸ்ருதி கஷ்டப்பட்டிருப்பா.” என்று ஆகாஷ் முடித்துவிட, சுமதி மேலும் ஏதோ பேச தொடங்க, “அம்மா! ஸ்ருதி என் மனைவி. அவளை பத்தி எதுவும் பேசவேண்டாம்.” என்று கண்டிப்போடு கூறிவிட்டு, “ஸ்ருதி நம்ம ரூம்முக்கு வா.” என்று கூறிக்கொண்டு சென்றான் ஆகாஷ்.

“ஆகாஷ் பொய் சொல்றான்.” என்று சுமதி உறுதியாக கூற, “எங்களுக்கும் தெரியுது. கேட்டா ஒத்துக்கவா போறான்?” என்று சங்கரன் கேட்டுக்கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

“அதுக்காக அப்படியே விட முடியுமா?” என்று சுமதி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

“அப்படியே விட முடியாது. இதைப் பக்குவமா தான் ஹாண்டில் பண்ணனும்.” என்று ஷண்முக சுந்தரம் மருமகளை கண்டிக்கும் விதமாக கூற, ஆமோதிப்பாகத் தலை அசைத்தார் ஆவுடை பாட்டி.

ஸ்ருதி தானும் குளித்து, கிருஷை குளிப்பாட்டி, அவனுக்கு வேறு உடை அணிவித்தாள்.

ஆகாஷ், குளித்துவிட்டு ஷார்ட்ஸ், டீ-ஷர்ட்க்கு மாறியிருந்தான். அவன் தன் தலையைத் துவட்டிக்கொண்டு இருக்க, அவன் கன்னங்களைப் பார்த்தாள் ஸ்ருதி.

‘என்ன?’ என்பது போல், ஆகாஷ் புருவங்களை உயர்த்த, “எதுக்கு பொய் சொன்னீங்க? உண்மையைச் சொல்லிருக்க வேண்டியது தானே? எதுக்கு பொய் சொல்லி அடி வாங்கணும்?” என்று ஸ்ருதி நேரடியாகக் கேட்டாள்.

அப்பொழுது கிருஷ் அறையை விட்டு வெளியே ஓட,  குழந்தை பின்னே ஓட எத்தனித்தாள் ஸ்ருதி.

அவள் கையைப் பிடித்து, தன் பக்கம் இழுத்துக் கொண்டான் ஆகாஷ். அவன் மீது மோதி, அருகிலிருந்த சுவரில் சாய்ந்து நின்றாள் ஸ்ருதி.

“கிருஷ் எல்லார் கிட்டயும் பழகணும். நீ பின்னாடியே போனால், எல்லார் கவனமும் உன்கிட்ட இருக்கும். யாரும் குழந்தை கிட்ட பேசமாட்டாங்க.” அவளை தடுத்த காரணத்தைக் கூறினான் ஆகாஷ்.

இருபக்கமும் கைகளை ஊன்றி, அவள் செல்ல வழி விடாமல், “ஏதோ கேட்டியே? அதை இப்ப கேளு.” என்று கூறினான் ஆகாஷ்.

அவன் நெருக்கத்தில், அவன் வாசத்தில் ஸ்ருதியின் இதயம் தட், தட்டென்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“நான் என்ன கேட்டேன்?” என்று அவள் கேட்க, “சொன்னா, வழி விடுறேன்.” என்று பேரம் பேசினான் ஆகாஷ்.

“ஏன் பொய் சொன்னீங்க?” அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். “ம்…ச்… அதுக்கு அப்புறம்.” என்று ஆகாஷ் தலை அசைத்தான்.

“உண்மையை…” அவன் நெருக்கத்தில் அவள் தடுமாறினாள்.

“ம்…ச்… அதுக்கும் அப்புறம்.” அவன் தலை சிலுப்ப, அவன் மேல் வடிந்து கொண்டிருந்த நீர் துளி அவள் மேல் இடம் பெயர்ந்து கொண்டது.

அவன் அதை துடைத்து கொண்டே, “ம்… சொல்லு…” என்று சாவதீனமாகக் கேட்டான்.

‘இவன் எப்படி சகஜமா இருக்கான்? என்னால் முடியலையே?’ என்று அவள் எண்ணிக்கொண்டே, “எதுக்கு எனக்காக பொய் சொல்லி அடி வாங்கணும்?” என்று பட்டென்று கேட்டாள் ஸ்ருதி.

இங்கும், அங்கும் அசைய முடியாதபடி அவன் கைகள். அவளுக்குக் கொஞ்சம் மூச்சை முட்டுவது போல் தான் இருந்தது.

“ஏன் நான் அடி வாங்கினதும், உனக்கு மனசு வலிச்சுதா?” அவன் கேலி பேச, “உங்க பொய்யை நான் ஆதரிக்கனுமுன்னு அவசியம் இல்லை.” அவள் தலையைச் சிலுப்பிக்கொண்டாள்.

“வேணாம் விடு. நம்ம கதையை ஒன்னு விடாம அம்மா கிட்ட சொல்லுவோம்.” என்று கூறிக்கொண்டே, “அம்மா…” என்று அவன் அலற எத்தனிக்க, அவன் வாயை தன் கைகளால் மூடினாள் ஸ்ருதி.

“என்ன ஸ்ருதி? இப்படி பேசிட்டு இருக்கும் பொழுதே கிஸ் பண்ணுங்கன்னு, இப்படி கையை குடுக்குற?” அவன் அவள் கைகளில் இதழ் பதித்தபடி கேட்டான்.

ஸ்ருதி சரேலென்று தன் கைகளை உருவிக்கொண்டாள். “பட், ஐ லைக் இட்.” என்று அவன் கண் சிமிட்ட, ‘இவனை என்ன செய்தால் தகும்?’ என்று எண்ணினாள் ஸ்ருதி.

“ஸ்ருதி! இப்ப எதுக்கு கோபப்படுற, நானா உன்னை கிஸ் பண்ணலை. நீ தான்…” என்று ஆகாஷ், கேலியாக இழுக்க, ஸ்ருதி தன் காதுகளை மூடினாள்.

“ஐயோ… எப்ப பாரு கிஸ் கிஸ்ன்னு உங்களுக்கு வேற பேச்சே கிடையாதா?” என்று கடுப்பாக கேட்டாள் ஸ்ருதி.

“உன்னை பார்த்ததும் …” என்று அவன் இழுக்க, “ஏன் உங்களை மாமோய்ன்னு கூப்பிடுற பொண்டாட்டி இருக்கான்னு சொன்னீங்களே? அவ என்ன ஆனா?” என்று உனக்கு நானும் சளைத்தவள் இல்லை என்பது போல் கேட்டாள் ஸ்ருதி.

‘என்ன ஒரு வில்லத்தனம்?’ என்று எண்ணிக்கொண்டே, “நீ வரேன்னு அவளை அனுப்பி வச்சிட்டேன்.” என்று ஆகாஷ் விடாக்கொண்டனாய் கூறிக்கொண்டு தோள்களைக் குலுக்கினான்.

ஸ்ருதி, அவனை மேலும் கீழும் பார்க்க, “அவ… குடுக்கும் பொழுது, அவ்வுளவு கிக்கா இல்லை.” என்று அவள் வேண்டாம் என்று சொன்ன வார்த்தையைத் தவிர்த்து, அவன் கூற, ஸ்ருதி மேலும் கடுப்பாகி அவளைப் பார்த்தான்.

“நான் பேசுறது கடுப்பா இருக்கு ஸ்ருதி? கிளம்ப போறியா ஸ்ருதி? கிளம்பு ஸ்ருதி. கிளம்பு… கிளம்பு… இன்னைக்கு நைட் கிளம்புறியா? நாளைக்கு கிளம்புறியா? இப்படி ஒரு நாள் என்னை விட்டுட்டு போனவ தானே நீ?” என்று கேலி பேச்சை விடுத்து ஆழமான குரலில் சற்று வருத்தத்தோடும், கோபத்தோடும் கேட்டான் ஆகாஷ்.

ஸ்ருதி ஒரு நொடி ஆடிப்போனாள்.   ‘அவன் குரல்… அவன் கண் கலங்கியதோ? நான் போனது மட்டும் தான் தவறா? அவன் மேல் தவறே இல்லையா?’ ஸ்ருதி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

ஆகாஷ், தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது யாரோ அறையை நோக்கி வரும் காலடி ஓசை கேட்க, இருவரும் சுதாரித்துக்கொண்டு, அறை வாசலை நோக்கித் திரும்பினர்.

ஆவுடை பாட்டி நின்று கொண்டிருந்தார்.  “பாட்டி…” முன்னே சென்றான் ஆகாஷ்.

“என்ன புத்திசாலித்தனமா பொய் சொல்லி தப்பிச்சிட்டோமுன்னு நினைப்பா?” கடுகடுத்தார் பாட்டி.

“அப்படி எல்லாம் இல்லை பாட்டி. நீங்க கண்டுபிடிச்சிருவீங்கன்னு எனக்குத் தெரியுமே!” அறை வாங்கிய சுவடே இல்லாமல் பேசினான் ஆகாஷ்.

“குழந்தை பேரு கிருஷா? ஆகாஷ், ஸ்ருதி இரண்டும் சேர்த்து பேரெல்லாம் நல்லா வைக்க தெரியுது. வாழத்தான் தெரியலை.” ஆவுடை பாட்டி, ஸ்ருதியிடம் சிடுசிடுக்க, “பாட்டி…” ஆகாஷ் தயங்கினான்.

“என்ன உன் பொண்டாட்டியை ஒன்னும் சொல்லக் கூடாதா? இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. இனிமேலாவது விளையாட்டுத் தனம் இல்லாமல், ஒழுங்கா இருக்கிற வழியை பாருங்க.” பாட்டி சிடுசிடுக்க, “எங்க விளையாட்டுக்கு நீங்களும், ஒரு காரணம்.” கிடைத்த சந்தர்ப்பத்தில் விடாமல் ப்ரீ வெட்டிங் ஷூட்டை குற்றம் சாட்டினான் ஆகாஷ்.

‘இவன் வாயை மூட மாட்டானா? எல்லாரும் பிரிவெட்டிங் ஷூட்க்கு தான் கூட்டிட்டு போனாங்க. தப்பு பண்ணது நாம தானே.’ என்ற எண்ணத்தோடு, ஸ்ருதி ஆகாஷை முறைத்தாள்.

ஆகாஷ் அவள் முறைப்புக்குப் பதிலாகக் கண்சிமிட்டினான். பாட்டி தலையில் அடித்துக் கொண்டார்.

“கிருஷ் பிறந்தநாள் வரும்பொழுது, எல்லார் கிட்டயும் விஷயத்தை பக்குவமா சொல்லிரனும்.” என்று கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார் பாட்டி.

ஸ்ருதி யோசனையோடு நிற்க, “எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிரும் ஸ்ருதி.” அவளுக்கு ஆறுதல் போல் கூறினான் ஆகாஷ்.

கிருஷுடன் எல்லாரும் சற்று இயல்பாகப் பேசிக்கொண்டனர். ஸ்ருதி அறையை விட்டு வெளியே வரவில்லை.

கீதா, கிருஷுடன் சுற்றிக்கொண்டிருந்தாள். ஸ்ருதி என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று கீதாவுக்கு தெரியவில்லை. கிருஷ், வேகமாக ஸ்ருதி இருக்கும் அறைக்குள் நுழைய, கீதாவும் பின்னே ஓடினாள்.

ஸ்ருதியை அவள் நேரே பார்க்க, “எப்படி இருக்க கீதா?” என்று கேட்டாள் ஸ்ருதி.

“நான் நல்லாருக்கேன் அண்ணி. ஆனால், அண்ணா இப்ப தான் நல்லாருக்கான். முதலில், நீங்க வருவீங்கன்னு சொல்லிட்டே இருப்பான். அப்புறம், அப்புறம் யார் கிட்டயும் பேசுறதில்லை. ரொம்ப வருஷம் கழித்து, இன்னைக்கு தான் எல்லார் கிட்டயும் சகஜமா பேசுறான்.” கீதா அடுக்கிக் கொண்டே போனாள்.

ஸ்ருதி புன்னகைத்துக் கொண்டாள். எதுவும் பேசவில்லை.

ஆகாஷ், அவர்கள் அறைக்குள் வர, “அண்ணன் வர்றான்.” என்று கூறிக்கொண்டு, கீதா நழுவப் பார்க்க, “கீதா, என் அறை பக்கம் வரக்கூடாது. என் ஆள் வந்தாச்ச்சு.” என்று கண்சிமிட்டினான் ஆகாஷ்.

“அண்ணியை பார்த்தா, மெல்லினம், இடையினமுக்கு வாய்ப்பிருக்கிற மாதிரி தெரியலியே. வெறும் வல்லினம் தானோ? ட்டிஷுயும், ட்டிஷுயும் தானோ?” என்று ஆகாஷுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள் கீதா.

“எஸ்… அங்க ஒன்லி வல்லினம். பட்… நம்ம கிட்ட மெல்லினம், இடையினம்,வல்லினம் எல்லாம் கலந்து இருக்கும்.” என்று அவன் கீதாவின் காதில் கிசுகிசுக்க, கீதா தன் அண்ணனின் மீண்டு கொண்டு உற்சாகத்தில்  சந்தோஷமாக அவள் அறைக்குச் சென்றாள்.

ஆகாஷ், கிருஷோடு விளையாடிக் கொண்டிருந்தான்.  குழந்தைக்குத் தேவையான விளையாட்டு சாமான் அதற்குள் வந்திறங்கி இருந்தது.

ஸ்ருதி அவள் சாமானை அடுக்கிக் கொண்டிருந்தாள். அந்த அலமாரியின் ஓரத்தில் பிரிக்கப்படாத இரண்டு கிப்ட் பாக்ஸ்.  ஸ்ருதி ஆகாஷுக்கு வாலெண்டைன்ஸ் டே அன்று கொடுத்ததும். ஆகாஷ், ஸ்ருதிக்காக பிறந்த நாள் அன்று கொண்டுவந்ததும். அதை பார்த்தபடியே, ஸ்ருதி அவள் சாமானை அடுக்க, அவன் அலமாரியில் உள்ள, டைரி கீழே விழுந்தது.

அதை அவள் எடுத்துப் பார்க்க, அவள் கண்களில் ஆகாஷ் எழுதியிருந்த வரிகள் கண்ணில் பட்டது.

“நான்!  நான்! நான்! இலக்கணமும் இலக்கியமும்  பொய்யாகிப் போனதே…

ஏனோ ? ஏனோ? தொலைந்தேன் நான்!  வீழ்ந்தேன் நான்!   விழுந்தேன் நான்!   அர்த்தமற்று போனேன் நான்!

அனைத்தும்  உன்னாலே… உன்னாலே…

என்னவென்று சொல்ல?  இது காதல் செய்த மாயமோ? நான் செய்த பாவமோ? நீ எந்தன் சாபமோ?”

ஸ்ருதியின் முகத்தில் ஏளன புன்னகை விரிந்தது.

அவள் எழுதிய வரிகள் அவள் நினைவைத் தொட்டது. இது போன்ற வரிகள் தான் சில மாற்றங்களோடு.

‘நான்!  நான்! நான்!  இலக்கணமும் இலக்கியமும்  பொய்யாகிப் போனதே…

ஏனோ ? ஏனோ?

தொலைந்தேன் நான்! உன் குறும்புப் பார்வையில்…

வீழ்ந்தேன் நான்! உன் மந்தகாச புன்னகையில்…

விழுந்தேன் நான்! உன் அன்பென்னும் மழையில்….

அர்த்தமற்று போனேன் நான்! உன்னாலே… உன்னாலே…

என்னவென்று சொல்ல?  இது காதல் செய்யும் மாயமோ? நான் செய்த நலமோ? நீ எந்தன் வரமோ? ‘

ஸ்ருதி டைரியை மூடி உள்ளே வைத்தாள். ‘நான் இவனுக்குச் சாபமா? இவன் எதற்கு என்னை இங்கு கூட்டிட்டு வந்தான்? கிருஷ் இல்லை என்றால் என்னை இங்கு கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டானோ?’ அவள் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.

அப்பொழுது கிருஷ் அங்கிருந்த நாய்க்குட்டியை ஆன் செய்ய, அது “லொள்…” என்று குரைத்துக் கொண்டு அவன் மீது பாய்ந்தது.

“அம்மா…” என்று அவன் அலறிக்கொண்டு ஸ்ருதியை கட்டிக்கொள்ள, “டாம்…” என்று கண்களை விரித்தாள் ஸ்ருதி. அவள் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தது.

‘டாம் பார்த்து வர சந்தோசம் கூட இவளுக்கு என்னை பார்த்து வராது போல!’ ஆகாஷ் மனதில் பொருமினான்.

டாம் குரைப்பதை நிறுத்திவிட்டு, அவளை பார்த்து வாலை ஆட்டியது. “டாம் நோஸ் யூ?” கிருஷ் ஆர்வமாகக் கேட்டான்.

“ம்… இட்ஸ் எ டாக் ரோபோட். அதுக்கு இருக்கிற பாசம் கூட இங்க மனுஷங்களுக்கு இல்லை.” நக்கலாகக் கூறினாள் ஸ்ருதி.

கிருஷ் புரியாமல் பார்க்க, ஆகாஷ் அவளை விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தான்.

அவர்கள் வந்திறங்கியது மாலை நேரம், அவர்களுக்கு இரவு நேரம் நெருங்க, அவர்களுக்கு அழைப்பு வந்தது.

“கிருஷ்… நீ சாப்பிட போ. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நான் நாளைக்கு வரேன். நீ அப்பா கிட்ட சாப்பிடணும் ஓகே வா?” என்று கூற கிருஷ் தலை அசைத்து வெளியே சென்றான்.

கீதா அவனை அழைத்துக் கொண்டு செல்ல, “எத்தனை நாள் இப்படி உள்ளேயே இருப்ப ஸ்ருதி?” என்று ஆகாஷ் கேட்டான்.

“எனக்கு ஏனோ தயக்கமா இருக்கு. நான் வரலை.” ஸ்ருதி உறுதியாகக் கூறினாள்.

“என்னைக்கு நாளும் நீ வெளிய வந்து தான் ஆகணும் ஸ்ருதி.” ஆகாஷ் எடுத்துரைக்க, இன்னைக்கு வேண்டாமே!” ஸ்ருதி மறுப்பு தெரிவித்தாள்.

“ஸ்ருதி!” ஆகாஷின் குரல் உயர, “உங்களுக்கு தேவை கிருஷ். அவன் வந்துட்டான். கூட்டிட்டு போங்க. அவனுக்காகத்தானே, என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க.” ஸ்ருதி கூற, ஆகாஷ் தன் கண்களை இறுக மூடி திறந்தான்.

“அப்ப கிருஷ்க்காக நீ நல்லாருக்கனுமில்லை? சாப்பிட வா,” அவனும் விடாமல் நக்கலாகவே அழைக்க, ஸ்ருதி அவனைக் கடுப்பாகப் பார்த்தாள்.

இதற்கு மேல் பேசி பயன் இல்லை என்பது போல் ஆகாஷ் சென்றுவிட்டான்.

சுமதி பேரனைக் கண்களை உருட்டிப் பார்த்தாள். ஆகாஷ் வந்து அமர, “உன் மனைவி வரலையா?” சுமதியின் கேள்வி நக்கலாக வந்தது.

ஆகாஷ் தர்மசங்கமடமாக பார்க்க,  “நீங்க கால் பண்ணாதான்  அம்மா வருவாங்க.” நச்சென்று கூறினான் கிருஷ்.

“யார் சொன்னா அப்படி?” என்று கேட்டார் சுமதி கிருஷிடம்.

“அப்பா…” என்று கண்சிமிட்டினான் கிருஷ்.

‘நீ ஏண்டா என்னை கோர்த்துவிடுற? ஏற்கனவே எல்லாரும் என் மேல் செம காண்டில் இருக்காங்க.’ என்று எண்ணியபடி, “டேய்… நான் எங்கடா சொன்னேன்?” என்று ஆகாஷ், கிருஷிடம் கிசுகிசுத்தான்.

“சும்மா… ஜஸ்ட் ஜாலி. அங்க எல்லாரும் அம்மாவை சாப்பிட கூப்பிடுவாங்க. இங்க யாருமே கால் பண்ணலியே. உங்களையும், என்னையும் தான் கால் பண்ணாங்க. அது தான்.” என்று கிருஷ் மேடை ரகசியம் பேசி மீண்டும் ஆகாஷை போலவே தோள் குலுக்கி கண்சிமிட்டினான்.

‘என்ன சாட்சி?’ என்று சொல்லாமல் சொல்லியது போல் இருந்தது கிருஷின் செய்கை.

பாட்டி ஸ்ருதியை அழைக்கவே, ஸ்ருதி மறுப்பு தெரிவிக்காமல் வந்து அமர்ந்தாள்.

‘உங்கள் வேலையா?’ என்று ஸ்ருதி கண்களால் ஆகாஷை வினவ, அவசரமாக மறுப்பு தெரிவித்து, கிருஷை ஜாடை காட்டினான் ஆகாஷ்.

ஸ்ருதியோ, ஆகாஷை நம்பாமல் பார்க்க, “அண்ணா… எனக்கு கிருஷை ரொம்ப பிடிச்சிருக்கு. அவனை நான் என்கூடவே வச்சிக்கலாமுன்னு இருக்கேன்.” என்று கீதா கிருஷிடம் ஹை பை செய்தாள்.

ஆகாஷ், கீதாவைக் கடுப்பாகப் பார்ப்பது போல் இருந்தாலும், அவன் முகத்தில் புன்னகை மட்டுமே வீற்றிருந்தது.

ஆகாஷ் பல நாட்களுக்குப் பின் அவர்களோடு அமர்ந்து சாப்பிடுகிறான். அதுவும் கேலி பேச்சு, புன்னகையோடு! ஸ்ருதியை தவிர, அவன் வாழ்வில் ஸ்ருதி எத்தனை முக்கியம் என்று அனைவரும் முழுதாக புரிந்து  கொண்டனர்.

புரிதல் தானே குடும்ப சந்தோஷத்தின் மந்திர கோல். அந்த மந்திரக்கோல், அனைவரையும் ஸ்ருதியை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்திற்கு உந்தியது.

கார்த்திக் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினான்.

‘ஸ்ருதி வந்திருப்பா. அவளை பார்த்துட்டு போகலாமா? நேரம் ஆகிருச்சோ? அதுக்குள்ளே யாரும் தூங்கிருக்க மாட்டாங்க.’ எண்ணிக்கொண்டே வண்டியைச் செலுத்தினான் கார்த்திக்.

‘இப்ப போனால் யாரும் எதுவும் நினைப்பாங்களோ? கிருஷை பார்க்கலாம். யாரும் போகவே இல்லைனா ஸ்ருதிக்கு யாரும் இல்லைன்னு நினைச்சிற  கூடாது. போவோம். ஸ்ருதியை பார்க்க போறோம். ஆகாஷ் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார். ஒரு கால் செய்துட்டு வண்டியை அங்க விட வேண்டியது தான்.’  என்று ஆகாஷ் வீட்டிற்குச் சென்றான் கார்த்திக்.

ஜெட்லாக்க்கில் கிருஷ் தூக்கம் வராமல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டான்.

உணவை முடித்துக்கொண்டு, கிருஷும், கீதாவும் கண்களைக் கட்டிக்கொண்டு  விளையாட ஆரம்பித்தனர்.

கிருஷ் கண்களைக் கட்டிக்கொண்டு வர, கீதா அவனுக்குப் போக்கு காட்டி பின்னே பின்னே நகர, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த கார்த்திக் மீது மோதி விழ எத்தனிக்க கார்த்திக் அவளை இடையோடு பிடித்து கீழே விழாமல் தாங்கினான்.

கார்த்திக்கைப் பார்த்த நொடி, அவள்… அவள் வசம் இல்லை. ஆனால், நொடிகளுக்குக் குறைவான நேரம் தான்.  சட்டென்று விலகிக்கொண்டாள் கீதா. அவள் முகத்தில் கோபம்.

அந்த கோபத்தில் நியாயம் உள்ளதா?  அர்த்தம் உள்ளதா? காரணம் கூட உள்ளதா? அதெல்லாம் கீதாவுக்குத் தெரியவில்லை.

அவள் கார்த்திக்கைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்க, கார்த்திக்கின் முகம் வாடியது. ஆனால், கார்த்திக் கூறிய பதிலில் கீதாவின் முகம் பூ என மலர்ந்தது.

குறும்புகள் தொடரும்…