ponnunjal20

ஊஞ்சல் – 20

ஏகாம்பரகுப்பத்தில் தனது காலடியை அழுத்தமாய் தடம் பதித்திருந்த இருபத்திமூன்று வயது பத்மாக்ஷினி என்ற பொம்மி, இன்று அந்த கிராமத்தின் மிகமுக்கியமான நபராய் மாறிப் போயிருந்தாள்.

தனது இளங்கலை வேளாண் படிப்பை முடித்த கையோடு நிர்வாக மேலாண்மையை நகரியில் உள்ள கல்லூரியில் சென்று படித்து வந்தவள், மாலை நேரங்களில் முழுமூச்சாக விவசாயிகளின் முன்னேற்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

தந்தை ரிஷபன் சீனிவாசனின் ஆதரவும் ஊக்கமும் அவளுக்கு துணை நிற்க, தான் எண்ணியது போலவே இயற்கைமுறை விவசாயத்தை(ஜீரோ பட்ஜெட் விவசாயம்) கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தி, தங்கள் ஊரில் ஒரு விவசாய புரட்சியே மேற்கொண்டாள்.

இரண்டு வருட மேற்படிப்பை முடிக்கவும், விவசாய மக்கள் இவள் சொல்லிய வழிமுறைகளை பின்பற்றி முன்னேறி வரவும் மிகச் சரியாகயிருக்க, பொம்மியை பாராட்டியே மகிழ்ந்தனர்.

விவசாயத்தின் மீதான இவளது அர்ப்பணிப்பின் பலனிற்கு ரிஷபனை முன்னிறுத்த, அந்த வருடத்தின் ‘சிறந்த முன்னோடி விவசாயி’ என்ற ஆந்திரா மாநிலத்தின் விருதும், சிறந்த முறையில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்ததின் பலனாக ‘சிறந்த விவசாய கிராமம்’ என்று ஏகாம்பரகுப்பத்திற்கும் விருதுகள் வந்து சேர்ந்தன.

இத்தனை அறிவார்ந்த முனைப்போடு செயல்படுபவளை பார்த்து, திருமண வாழ்க்கையில் தடுமாறுவாள் என்று சொன்னால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். தான் உயிராய் நேசிக்கும் மகளை பற்றி தன்மனைவியே சந்தேகம் கொள்ளும் போது, மனம் அத்தனை ஆவேசம் கொண்டுவிட ரிஷபன், அசலாட்சியிடம் கடிந்து கொண்டான்.

என்னதான் பக்குவப்பட்டு நின்றாலும் ஒருதாய்க்கு தன்பிள்ளை எப்பொழுதும் சிறுகுழந்தைதானே! அசலாட்சி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அதிலும் பொம்மியைப் போன்ற பிள்ளைகளை பெற்ற தாயின் மனநிலை இவ்வாறு சிந்த்திப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றே தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ஒருவாரு தெளிந்து தன்குழப்பங்களை தூரவைத்து மகளின் திருமண முனைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள, மகளோ யாருக்கு வந்த விருந்தோ என்பதைப்போல் நடமாடிக் கொண்டிருந்தது தாயின் மனதிற்கு மேலும் சஞ்சலத்தைக் கொடுத்தது.

நிச்சயம் முடிந்த தேதியில் இருந்து பொம்மியிடம் பெரும் மாற்றம் தென்பட்டது. எப்பொழுதும் தங்கையுடன் சேர்ந்து வீட்டில் கொட்டமடிப்பவள், வேலைகளை முடித்ததும் தன்அறையில் போய் முடங்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.

ஏதோ ஒன்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு தவிக்கிறாள் என்பது மட்டும் அசலாட்சிக்கு நன்றாக புரிந்தது. எப்படி கேட்டாலும் பதில் சொல்லாமல் நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறாள்.

என்றும்போல் இன்றும் மகளை ஒருபுரியாத புதிராகவே பார்த்தாள் அசலாட்சி. மாலை நேரத்தில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அமைதியாக உற்சாகமின்றியே சோபாவில் அமர்ந்திருந்தவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.

“என்னடி ஆச்சு உனக்கு? ஒன்னுமில்லன்னு எப்போவும் சொல்றதயே சொல்லாதே பொம்மி… கொஞ்ச நாளாவே நீ சரியில்ல”

“கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்றேன்ம்மா! வேற ஒன்னுமில்ல”

“மாப்ள கூட பேசுறதானே? ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சனை ஒன்னுமில்லையே?”

“ம்மா… டெய்லி நான் பேசுறது உனக்கே தெரியும் தானே? நைட் ஒன்பதுமணி சாமகோழி அவன் ஃபோன்லதான் எனக்கு கூவிக்கிட்டு இருக்கு” என்றே சலித்துக் கொண்டாள் பொம்மி.

“அதுதான்டி சந்தேகமா இருக்கு… தனியா போய் ரகசியமா பேசுவாங்க! நீ என்னடான்னா எல்லார் முன்னாடியும் பேசுற… அதுவும் எப்பப்பாரு வாடாபோடான்னு மரியாதயில்லாம… நல்லாவே இல்ல பொம்மி” என்று சொல்லும் பொழுதே அஜுகுட்டியை கூட்டிக்கொண்டு ரிஷபன் வர,

“உங்கம்மா என்ன சொல்றா? பங்காரம்” – ரிஷபன்.

“உங்க மாப்பிள்ளைக்கு முதல்மரியாதைய வரதட்சணையா குடுக்க சொல்றாங்க சீனிப்பா!” – பொம்மி.

“இப்போ அதுல என்ன குறை வந்துச்சாம்?” என்ற ரிஷபனின் வார்த்தையை தடை செய்தவாறே,

“உனக்கு இந்த வாய்தான்டி போற இடத்தில எதிரியாகப் போகுது. எல்லா நேரமும் உன் பேச்ச சரின்னு எடுத்துக்க மாட்டாங்க! அதுக்கு இப்போ இருந்தே பழக்கபடுத்திக்கோ” – அசலா.

“சாலா! எங்கே எப்படி பேசணும்னு அவளுக்கும் தெரியும். நாம சொல்லித் குடுக்க அவசியமில்ல” மகளுக்கு வக்காலத்து வாங்கினான் ரிஷபன்.

“இப்படி சொல்லியே அவளுக்கு ரொம்ப இடம் குடுக்கிறீங்க பாவா!” நொடித்துக் கொண்டு அமைதியானாள் அசலாட்சி.

“வாவ் சீனிப்பா… பாவா கூப்பிடுற சாலால, எங்கம்மா நல்லாவே மயங்குறாங்க… ஸ்வீட் அச்சும்மா” என்று தாயின் கன்னத்தை கிள்ளி பொம்மி கேலிபேசினாள்.

“அடிக்கழுத! உனக்கு திமிரு ஏறிபோச்சு” அசலா காதைத்திருக,

“உண்மைதானே ரோஸ்குட்டி… உனக்குப் புரியுதா?” – பொம்மி.

“எனக்கு ஒன்னும் புரியலக்கா! ஒருவேளை பொம்மிக்கும் பத்மிக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுறதால, புரியுதோ என்னவோ?” என்றும் போல் தன் வாரிவிடும் வேலையை சரியாகச் செய்தாள் அஜு.

“சின்ன பிள்ளைகிட்ட எது கேக்கணும்னு அறிவில்லையாடி உனக்கு? பாரு… அவளே புத்தி சொல்லிட்டுப் போயிட்டா…” என்றவுடன் பொம்மியின் முகத்தில் நொடியில் குறும்புத்தனம் மறந்து, ஒருவித இறுக்கம் குடிகொண்டது.

“இப்படி சட்டுன்னு முகம் மாறிப்போறது தான்டி எதுக்குன்னு கேக்குறேன்? சரியா பதில் சொல்லாம என்கிட்டே மழுப்புற” என்ற தாயை முறைத்துக் கொண்டு, தன்அறைக்கு சென்றவளின் உள்ளம் முழுவதும் விஸ்வாவை நினைத்து உலைகலனாக கொதிக்கத் தொடங்கியிருந்தது.

இன்றோடு விஸ்வேந்தருடன் நிச்சயம் முடிந்து மூன்றுமாதங்கள் முடிந்திருந்தது. அவளது முகத்தில் குறும்புத்தனம் நீங்கி ஒருவித இறுக்கநிலை வந்தும் அத்தனை நாட்கள் ஆகியிருந்தன.

சிறகை விரித்து பறந்தவள் ஒருகூண்டில் சென்று அடைபட்ட நிலையை ஒத்திருந்தது பொம்மியின் மனநிலை. இதற்கான புண்ணியத்தை தேடிக் கொண்டவன் விஸ்வேந்தர்.
நிச்சயம் முடிந்து அவளிடம் தனிமையில் பேசவந்தவன், தனக்கு இப்படியொரு இன்னலை செய்துவிட்டுப் போவான் என்று இவளும் கனவிலும்கூட நினைக்கவில்லை.

ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரம், அடர்ந்த நேர்த்தியாக வெட்டப்பட்ட சிகை, அளவான கற்றை மீசையில் இருபத்தைந்து வயது விஸ்வேந்தர் கம்பீரமான காவல் அதிகாரியாக நிமிர்ந்து நின்றான். நிச்சயம் எவரும் அவன் கண்களைப் பார்த்து பொய் கூற முடியாது அத்தனை கூர்மையான பார்வை.

எப்பொழுதும் இதழ்களில் தவழும் குறுநகையிலும் அவனது அழுத்தமான பார்வை பொம்மியை ஈட்டியாய் துளைத்துச் செல்ல, ஒரு நிமிடம் அவளது மொத்த வனப்பும் சிலிர்த்தே அடங்கியது.

அவனது கோதுமை நிறத்திற்கு பொருந்தினாற்போல் இவளது தங்கநிறமே இவர்களை ஜோடி சேர்த்திருந்தது. அடர்ந்த பச்சை பார்டரில் வெள்ளி சரிகை இலையாக நெளிந்த தாமரைப்பட்டில் தேவதையாக மிளிர்ந்தவளை கண்கொட்டாமல் ரசித்தான்.

“கார்ஜியஸ் பத்மி! ஹாப்பிதானே? இப்போவும் என்னை பிடிக்காதுனு தூரமா தள்ளி நிறுத்தப் போறியா?” நிச்சயத்தன்று விஸ்வா பேசிய முதல் வார்த்தை இதுதான்.

மாப்பிள்ளையாக ஃபுல் பார்மல் சூட்டில் வந்திருந்தான் விஸ்வா. அவனது கட்டுமஸ்தான தேகத்தை அவனது ஆடையே அழகாக எடுத்துக் காட்டியது.

“அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் விஸ்வா! வீட்டுல பார்த்தவன்ங்கிற முறையில உன்னை எனக்கு பிடிக்கும்” பதிலடி கொடுத்தாள் பொம்மி.

“அப்போ இன்னும் உன்மனசுல எனக்கு இடம் இல்லன்னு சொல்ல வர்ற, கரெக்டா?” நிச்சயம் முடிந்தபிறகு தனியே பேசவென அழைத்து வந்தவனின் வார்த்தையாடல் இது.

“எப்போ பேசினாலும் இப்படியேதான் கேட்டுட்டு இருக்கப்போறியா? இதுக்குதான் லவ் பண்ணறவன் கணக்கா தனியா கூட்டிட்டு வந்தியா? நான் கிளம்புறேன்” ரிஷபனின் வீட்டுத்தோட்டத்தில் அமர்ந்து இந்த சலிப்பான பேச்சு பொம்மிக்கு.

“லவ்தானே பண்ணிட்டாப் போச்சு! உன்வாயால ஐலவ் விச்சுகண்ணானு சொல்றத என் காது குளிர கேட்டுட்டு தாராளமா லவ்பண்ணுவோம் பத்மி” என்று அவள் தோள்அணைக்க வர, இவள் பின்னடைந்தாள்.

“திஸ் இஸ் த லிமிட் விஸ்வா.., உன்னோட இந்த கன்றாவிய எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு வச்சுக்கோ”

“ஏன்? உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளை… என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?

“முட்டாளாட்டம் பேசாதே! எனக்குன்னு சில பிரின்சிபில் இருக்கு. அத விட்டு வெளியே வரமாட்டேன். நான் இப்படிதான்… இதையெல்லாம் யோசிச்சு கல்யாணம் பேசியிருக்கணும்”

“ஓஹோ… அப்போ நானும் என் பிரின்சிபில் சொல்றேன்… எப்போ நீயா வந்து, என்கிட்ட உன்மனசுல நான்தான் இருக்கேன்னு சொல்றியோ, அப்போதான் நம்ம கல்யாணம்… அதுவரைக்கும் ஊரறிய லவ்வர்ஸா இருப்போம் சரியா?” நக்கலும் நையாண்டியும் தாண்டவமாடியது விஸ்வாவின் குரலில்.

“ஏன்டா இப்படி உசிர வாங்குற? எனக்கு வராதுனு சொல்றத வம்படியா வரவைக்க என்னால முடியாது” பல்லைக் கடித்தாள் பொம்மி.

“ஒருவாரம் என்னை பத்தி மட்டுமே யோசி பத்மி… உன் மனசுக்குள்ள இருக்குற நான் வெளியே வந்துடுவேன்.”

“இத்தன நாள் வராதது, இனியும் வராது. கிறுக்குத்தனமா உளராம, என்னை எப்படி சமாளிக்கிறதுன்னு தனியா எங்கேயாச்சும் கிளாஸ்க்கு போய் கத்துக்கோ”

“உன்கிட்டேயே கிளாசுக்கு வர்றேன் ஸ்பைசி… டெய்லி நீயும் நானும் பேசுவோம். அதுவே போதும் எனக்கு. நீ உன்னோட லவ் சொல்லாம நம்ம கல்யாணம் நடக்காது” என்று மீண்டும் வலியுறுத்தினான்.

“அப்போ எதுக்கு இந்த என்கேஜ்மெண்ட் விஸ்வா?”

“உனக்கு ரொம்ப தீவிரமா அலையன்ஸ் தேடுறாங்கன்னு கேள்விப்பட்டும் என்னை கைய கட்டிட்டு நிக்க சொல்றியா?”

“உனக்குள்ள இப்படி ஒரு வில்லனா?” கோபத்தில் சுட்டுப் பொசுக்கும் நிலைக்கே சென்றாள் பொம்மி.

“எனக்கான பொண்ணு நீ! என் கைய விட்டு போகாம இருக்க என்ன செய்யணும் அத செஞ்சேன்… அதுபோல என்னோட லவ்லி கேர்ள் கிடைக்க என்ன செய்யணுமோ அதையும் செய்வேன். டிலே பண்ணாம உன்னோட பாவாக்கு ஐலவ்யூ சொல்லப்பாரு”

“அறிவுகெட்டவனே! கல்யாணம் முடிச்சு அத சொல்ல வச்சுருக்கலாமே?”

“எனக்கெல்லாம் கல்யாணம் முடிச்சோமா… ஃபர்ஸ்ட்நைட் கொண்டாடி ஹனிமூன் போனோமான்னு இருக்கணும்…. பக்கத்துல ஹாட் ஃபிகரா உன்ன வச்சுட்டு, சும்மா இருக்குற தியாகி இல்லம்மா நானு… எனக்கு ஒருநாளைக்கு குறைஞ்சது நூறுகிஸ் உன்கிட்ட இருந்து வந்தே ஆகனும்.. அவசரப்பட்டு மேரேஜ் பண்ணிட்டு, உனக்கு ஆகுற சேதாரத்துக்கு என்னை குத்தம் சொல்லக்கூடாது பாரு! அதான் உன்னை லவ் பண்ண வச்சே கல்யாணம் பண்ணிக்கபோறேன்” பெருமையாக தன்காதல் ஆசையை சொல்லி முடித்தான் விஸ்வா.

“அடப் படுபாவி! இவ்ளோ கெட்டவனாடா நீ? என்னை நீ லவ் பண்ணல… பழிவாங்குற மாதிரிதான் தோணுது…”

“நீ எப்படியும் திட்டிக்கோ… நான் சொன்னது சொன்னதுதான்” என்று பேச்சை முடித்தவன் ஆறுமாதம் கழித்து, இந்த ஊருக்கு மாற்றல் வாங்கி வந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரிடமும் சொல்லிவிட்டான்.

“அந்த ஆறுமாசத்துலயும் நான் உன்கிட்ட லவ் சொல்லலன்னா என்ன செய்வ விஸ்வா?”

“சிம்பிள் டார்லிங்… இன்னும் டிரான்ஸ்பர் வரலன்னு சொல்லிட்டுப் போறேன், அப்பவும் கல்யாணம் பண்ணிட்டு அங்கே போன்னு உன்னைத்தான் சொல்வாங்க.. என்னை யாரும் கண்டுக்க மாட்டாங்க” தனது ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதில் வெறுப்பை ஏற்றும் என்று தெரிந்திருந்தும், வம்படியாக காதல் வரவழவைக்க முயன்றான்.

நாள் தவறாமல் இரவு ஒன்பது மணிக்கு அழைக்க ஆரம்பித்தவனை முதல் சில நாட்கள் வேண்டா வெறுப்பாக பேசித் தள்ள, வீட்டில் உள்ளோரின் கண்டனத்திற்கும் ஆளானாள் பொம்மி.

அவளுடன் பேசும் நேரத்தில் மிக அக்கறையாக அனைவரிடமும் பேசவென அலைபேசியை மாற்றிக் கொடுக்கச் சொல்ல இவளால் தவிர்க்க முடியவில்லை.
குறைந்தது ஒரு மணிநேரம் விஸ்வாவின் அக்கபோரை தாங்கியே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டாள் பொம்மி.

‘நீ எத்தனை தூரம் சென்றாலும் என்னிடம் இருந்து வார்த்தையை வாங்கிவிட முடியாது’ என்ற ரீதியில் இவளும் சலிக்காமல் உரையாடலை தொடர்ந்தாள்.

இவர்கள் இருவரும் காதல் பாஷைகள் தவிர மற்ற எல்லா விடயங்களும் பரிமாறிக் கொள்ள, இயல்பாகவே அழைப்பினை ஏற்று பேசத் தொடங்கினாள் பொம்மி.

மனம் கடுகடுத்தபடியே அவன் நினைவில் உழன்று கொண்டிருக்க, அலைபேசி நல்லதொரு காதல் பாட்டை சொல்லி அழைத்தது. நிச்சயத்தில் இருவரும் ஜோடியாக எடுத்திகொண்ட செல்ஃபி காலர் ஐடி படமாக வர, ஒருவித சுணக்கத்துடன்தான் அதை பார்த்தாள்.

தன் அலைபேசியை கைபற்றி அந்த பாட்டையும் படத்தையும் அவனது எண்ணிற்கு பொருத்திக் கொடுத்தது சாட்சாத் விஸ்வாவேதான்.

‘இவன் ஒருத்தன்… இவன நினைக்காம இருக்கணும்னு நினைச்சாலும் ஃபோன் பண்ணியே இவன் மூஞ்சிய காமிக்கிறான்’ என்று சலித்துக் கொண்டவள் அழைப்பை ஏற்றாள்.

இப்பொழுதெல்லாம் இவனது அழைப்பை பார்த்ததும் ஒரு நிமிடம் மனம் தடுமாறிப் போவதை இவளால் தடுக்க முடிவதில்லை என்ற உண்மையை அறியாத பேதையாகி இருந்தாள் பொம்மி.

“ஹலோ…” சுவாரசியமற்ற குரலில் இவள் பேச,

“என்ன பொம்மி மேடம்? உங்க மோனநிலையை கலைச்சுட்டேனா?” உல்லாசமான மனநிலையில் அவன் குரல் கேட்டதும், இவளுக்கு சந்தோசம் எட்டிப்பார்த்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“என்ன விஷயம் விஸ்வா?”

“நத்திங் ஸ்பைசி! இன்னைக்கு என்ன குடிச்சாலும் எது சாப்பிட்டாலும் ஒரே இருமல்… எதுவும் உள்ளே போக மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணுது, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உன்னோட உட்பிதான் உன்னை நினைக்குறானு சொன்னாங்க… அப்படித்தானா சண்டிராணி?”

“உனக்கு த்ரோட் இன்பெஃக்ஷன் ஆகியிருக்கும் அராத்து… டானிக் குடிச்சுட்டு தூங்கு. அதைவிட்டு பெரிய சந்தேகம் கேக்க ஃபோன் பண்ணிட்டான் இந்த நேரத்துல”

“நினைச்சியான்னு கேட்டா… ஆமா, இல்லனு பதில் சொல்லுடி! எப்போதான் நீ தெளிவா யோசிச்சு, தெளிவா பதில் சொல்லப் போறியோ?” என்றவனின் குரலில் கொஞ்சல்கள் சலங்கை இல்லாமல் நடனம் ஆடியது.

அதில் லயித்துபோனாலும் வெளிக்காட்டாமல்,

“இன்னைக்கு திருட்டு பசங்கள காவல் காக்குற டுயூட்டி இல்லையா போலீஸ்கார்? என்கூட கடலை போட்டுட்டு இருக்க” நக்கலாக பொம்மி பேச,

“ஹ்ம்ம்… என்ன பண்ணறது? அறுவடை பண்ணற வித்தைய தெரிஞ்சவகிட்ட தானே விதைக்க முடியும்?” என்று மனத்தாங்கலோடு பேச,

“இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்டே வச்சுக்க வேணாம்” எச்சரித்தாள் பொம்மி. அதற்கெல்லாம் அசருபவனா அவன்?

“ஹஹா… நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே சொல்றேன்… நீதான், இப்ப உன்னை வச்சுக்கோனு மாத்தி சொல்ற” என்று இருபொருள்பட பேச,

‘இவனுக்கு இன்னைக்கு என்னதான் ஆச்சு?’ மனதோடு நினைத்தவள்,

“வெயில்ல ரொம்ப நேரம் நின்னு டிராபிக் கிளியர் பண்ணியா விஸ்வா? உளறல் ஜாஸ்தியா இருக்கு?” என்று அக்கறையாக கேட்க,

“உன் வாயில இருந்து விச்சுகண்ணா வர்றவரை இப்படிதான் வந்துட்டு இருக்கும் பொம்மிகுட்டி”

“குட்டின்னு சொன்னா, பல்ல தட்டி கையில குடுத்துருவேன் பார்த்துக்கோ! என்கிட்டே வச்சுக்காதே வைரா ஃபோன” இவள் கடுப்பில் கத்த,

“ஹை! இது கூட நல்லா இருக்கே? செம்ம ரைமிங்டி செல்லம்… அப்படியே மன்னா கண்ணான்னு அடிச்சு விட்டு, ஸ்ட்ராங் கிஸ் குடு பாப்போம்” என்றான் வம்பை வளர்க்கும் குரலில்.

இப்படியெல்லாம் இவன் பேசிவைக்க, ஏறியிருந்த குழப்பங்கள் எல்லாம் ஒன்று கூடி வெறுப்பாய் மாறி வார்த்தைகளாக வெளி வந்தன.

“திருந்தவே மாட்டியாரா? நான் சொன்னதுல அந்த கல்லுக்கு கூட சொரணை வந்துருக்கும். உனக்கு ஏன்ரா புரிய மாட்டேங்குது? பொறுப்பான பதவியில இருக்குறவன் அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க பாரு விஸ்வா… எப்பபாரு வம்பு இழுத்துகிட்டு இருந்தா இன்னும் எத்தன ஜென்மம் எடுத்தாலும் உன்னை எனக்கு பிடிக்காமதான் போகும்” என்று கோபத்தில் பேசிவிட்டு அழைப்பை நிறுத்தினாள்.

சற்று நேரம் தனது மனஉளைச்சல்களை தவிர்க்க தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளுக்கு மனம் அத்தனை சீக்கிரம் சமாதானம் அடையவில்லை.

‘என்னதான் நினைச்சிட்டு இருக்கான்னு தெரியலே? என்னை பிடிச்சு வச்ச பொம்மையாட்டம் இவன் சொல்றத கேட்டே ஆகனுன்னு கங்கணம் கட்டிட்டு திரியுறான். இவன கட்டிக்கிட்டு எப்படிதான் இருக்கப்போறேனோ? ஃபோன்ல பேசும்போதே இத்தன வம்பு வளக்குறான்… நேர்ல பார்த்தா இருபத்திநாலு மணிநேரமும் சண்ட போடவைப்பான் போல‘ மனப்பொருமலோடு தனக்குள் முனுமுனுத்துக் கொண்டவளின் அருகில் வந்தமர்ந்தாள் தங்கை.

“ஏமி பொம்மிக்கா? எதுக்கு இவ்ளோ டென்ஷன்? நீ அடிக்கடி இப்படிதான் புலம்புற?”

“என்ன செய்ய சொல்ற ரோஸ்குட்டி? இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு பையித்தியம் பிடிக்காம இருந்தா அதிசயம்தான்”

“என்ன பிரச்சனக்கா? யார்கிட்டயாவது ஷேர் பண்ணிக்கோ!” என்று பெரிய மனுஷியாய் பேசினாள் பனிரெண்டாவது படிக்கும் அஜுகுட்டி.

“உன்கிட்ட ஷேர் பண்ற அளவுக்கு வொர்த் இல்லரா… நீ போய் தூங்கு… நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்”

“விஸ்வா மாமா ரொம்ப வம்பு பண்றாராக்கா? என்கேஜ்மென்ட் அன்னைக்கே நீ என்கிட்டே புலம்பினியே? அதையே இன்னமும் சொல்லிட்டு இருக்கறா? நாணாகிட்ட சொல்வோமாக்கா?”

நிச்சயத்தன்று மனம் தாங்காமல் தன்னையும் அறியாமல் தங்கையிடம் அவனது வில்லத்தனத்தை கொட்டியிருந்தாள் பொம்மி. அதை மனதில் வைத்துக் கொண்டே இப்பொழுது அவளும் கேட்க,

“அவன் சும்மா விளையாடுறான்… வேற ஒன்னுமில்ல” என்று தட்டிக் கழித்து விட்டாள். ஏனோ அவனை குற்றம் சொல்லி அழகு பார்க்க மனம் விரும்பவில்லை. அதோடு வீட்டில் இதை பற்றி சொன்னாலும் மூக்கு உடைபடப்போவது அவளாகத்தான் இருப்பாள்.

‘உரிமைப்பட்டவன், ஆசைப்படுகிறான் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?’ என்று அனைவரும் அவளையே குற்றம் சொல்லி மையப்படுத்துவர் என்பதை நன்றாக அறிந்திருந்தாள்.

‘சே… எந்த பக்கமும் போகவிடாம என்னை புலம்ப வைக்கிற விஸ்வா! என்னை சிக்கல்ல இழுத்து வைக்கவே பிளான் பண்ற’ என்று அலுத்துக் கொண்டவளுக்கு,

‘இன்னைக்கு கொஞ்சம் அதிகமாதான் பேசிட்டோமோ?’ என்றும் அவனுக்காக அவள் மனம் வாதாடிக் கொண்டது.

தீவிர யோசனையின் முடிவில் ஒரு வழியாக மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு வாட்ஸ்-அப்பில் ‘ஐலவ்யூ’ என்று டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பிட,

‘இந்த பொய் சொல்றதுக்கு இன்னும் என்னை நாலு திட்டு திட்டலாம்’ என்று பதில் அனுப்பினான் விஸ்வேந்தர்.

திகட்டாத காதலில் நானும்
தீராத வெறுப்பில் நீயும்
ஒருவரைதான் மற்றவர்
நினைத்துக் கொண்டிருக்கிறோம்
மறந்தும் கூட வேறு எதுவும்
நினைப்பதில்லை நாம்…