Oonjal 19

Oonjal 19

ஊஞ்சல் – 19

‘பைசா செலவில்லாத சாகுபடி’ என்னும் ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ இயற்கை முறையில், ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதாகும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுபாஷ்பலேகர் என்பவரால் இந்தமுறை அறிமுகபடுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது இந்த முறையையே பின்பற்றுகிறார்கள்.

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் வெளியில் இருந்து ஒரு இடுபொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாட்டுப் பசுவை வைத்துக் கொண்டு முப்பது ஏக்கர் விவசாயம் செய்ய முடியும்.

இயற்கையாக, மண்ணில் நுண்உயிரிகளை மீண்டும் கொண்டுவர பசுஞ்சாணம் போதும். ஒருகிராம் பசுஞ்சாணத்தில் ஐநூறுகோடி நுண்உயிரிகள் இருக்கின்றன.

இந்த ஜீரோ பட்ஜெட் விவசாய முறையில் வேளாண்மை பயிலும் மாணவர்களை கொண்டு சாகுபடி செய்யும் இடம் அது. ஒரு கிராமத்தையே அடக்கி விடலாம் போன்ற பரந்த வயல்வரப்பில், தனது நண்பன் கவினுடன் நடந்து கொண்டிருந்தான் விஸ்வேந்தர்.

நெல்வயலை அடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்த திராட்சை தோட்டம் இருபக்கமும் இருக்க, அதற்கு அணைகட்டுவது போல் வாழைதோப்பும் சூழ்ந்திருந்த அந்த சாலையில் இயற்கையழகில் தங்களை மறந்து நடந்தனர்.

“இது உனக்கே நியாயமாரா விஸ்வா? வெளியே போகலாம்னு சொல்லிட்டு, வயலும் வாழ்வும் பாக்க கூட்டிட்டு வந்திருக்கியே?” – கவின்.

“ஏமிரா? இது வெளியிடம் மாதிரி தெரியலையா? கண்ணுக்கு குளிர்ச்சியா கொஞ்சம் ரசிக்க கத்துக்கோ” – விஸ்வா.

“சுத்தியும் காடுமாதிரி இருக்கு… இங்கே என்ன பார்த்து அனுபவிக்க வந்தோம்?” – கவின்.

“இது ****அக்ரீ காலேஜ்க்கு சொந்தமான இடம்ரா… காலேஜ் மட்டும் எழுபது ஏக்கர் இருக்கும், அதுபோக ஸ்டுடண்ட்ஸ் ஃபீல்ட் வொர்க்(களப்பணி) பார்க்க, சொந்தமா ஐநூறு ஏக்கர் வரை இங்கே வளைச்சு போட்டுருக்காங்க” – விஷ்வா.

“எப்படிரா இவ்ளோ டீடேய்ல்ஸ் தெரிஞ்சு வச்சுருக்க?” – கவின்.

“ஜஸ்ட் ஜிகேதான் மச்சி! மேமாசத்துல கூட வெயில் பாக்க முடியாது, அவ்வளவு சில் கிளைமேட்ரா கவின்” பேசிக்கொண்டே சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.

சற்றுதூரம் சென்றதும் மாணவர் குழு ஒன்று களப்பணிக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்க, அவர்களை நோக்கி சென்றான்.

“புரிஞ்சு போச்சுரா! நீ எதுக்காக இந்த ஜிகேய தெரிஞ்சிகிட்டேனு?” – கவின்.

“நண்பேன்டா நீ! அப்படியே கொஞ்ச ஓராமா நின்னு வேடிக்கை பாரு… இதோ வந்துட்டேன்” என்றவன், தான் தேடிவந்த தேவதையை காணச் சென்றான்.

பொம்மியின் நினைவில் எந்நேரமும் உழன்றவனுக்கு, அந்த இடத்தில் தனது சித்தம் கலைத்த பெண்ணின் தரிசனம் அத்தனை மகிழ்வை கொடுத்தது.

அன்று பத்ரி திருமணத்தில் பேசிக் கொண்டவர்கள்தான், மூன்று மாதம் கழித்து இப்பொழுதுதான் சந்தித்துக் கொள்கிறார்கள். நேரில் பார்க்கும்போது மட்டுமே பேசும் பழக்கம் இருந்ததால், அலைபேசியின் தயவை தவிர்த்திருந்தான் விஸ்வா.

சிலம்ப வகுப்பிற்கென போகும் சமயங்களில் அவன் கண்களுக்கு சிக்காமல் பொம்மியும் போக்குகாட்ட, முடிவில் தன்தேவதையை பார்க்கவென களப்பணி ஆற்றும் இடத்திற்கே வந்து விட்டான். கல்லூரியில் அத்தனை சுலபமாய் பெண்களை பார்க்க அனுமதி கிடைப்பதில்லை.

“நல்லா இருக்கியா பத்மி?” என்ற குரலில், விதிர்த்துப் போய் திரும்பி பார்த்தாள் பொம்மி

“என்ன விஸ்வா இந்த பக்கம்?”

“பார்த்து ரொம்ப நாளாச்சு, அதான் உன்னை பாக்க வந்தேன். ஊர்ல என்னை பாக்குறத ஏன் அவாய்ட் பண்ணற பத்மி?”

“நீ கட்டாயம் பார்த்தே ஆகவேண்டிய விஐபினு எனக்கு தெரியாதே விஸ்வா?” மாறாத துடுக்குத்தனத்துடன் பேச,

“என்னை பார்க்காம இருக்கத்தானே, நான் கிளாஸ்க்கு வர்ற நேரம் நீ வராம இருந்த?”

“துஷ்டனை கண்டால் தூரம் விலகுன்னு சொல்லியிருக்காங்க விஸ்வா! அத செஞ்சது தப்பா?”

“கீழே விழுந்தாலும் என் திமிரழகிக்கு மூக்கு உடையல பார்த்தியா? அங்கே நிக்கிறா என் ஸ்பைசி குவின்” விஸ்வா சீண்டலை தொடர,

“இப்படியே பேசிட்டு இருந்தா… நாணாகிட்ட சொல்ல வேண்டிவரும்” கோபத்துடன் பேசினாள்.

“அவ்ளோ பயந்த பொண்ணா நீ? என்னமோ நீ தைரியசாலி, ஊர்ல உன்னை மாதிரி பாக்க முடியாதுனு ஜம்பம் அடிக்கிறாங்க, அதெல்லாம் பொய்யா?” நக்கலில் இறங்கினான் விஸ்வா.

“மனசுல இருக்குறத, நாணாகிட்ட பகிர்ந்துக்கிறதுக்கு பேர் பயமில்ல, என்னோட சுபாவம்… அதெல்லாம் உனக்கு தெரிய வாய்பில்ல ராஜா… நடைய கட்டு”

“நான் இங்கே சுத்திப் பாக்க ஸ்பெஷல் பெர்மிஷன்ல வந்துருக்கேன், என்னை இங்கே இருந்து உன்னால அனுப்ப முடியாது… ஒரு செகண்ட்கூட வேஸ்ட் பண்ணாம உன்ன சைட் அடிக்கபோறேன்” எகத்தாளத்தில் இறங்கினான்.

“என்ன திமிரா? என் கேங் பத்தி உனக்கு தெரியாது, ரவுடி கும்பல் நாங்க எல்லாம். வீணா அசிங்கப்படாதே ஓடிப் போயிரு!” பொம்மி.

“அப்படியா? உன் ரவுடி கேங்க வரச்சொல்லு பாப்போம்” என்று சொல்ல முடிக்கும்போதே அவளது தோழி ஸ்வேதா வந்துவிட்டாள்.

“ஏய் பத்மா! எவ்வளவு நேரமா வெயிட் பண்ணறது? யாரையாவது பாத்தா போதும், கதபேச ஆரம்பிச்சுடுவியே? உன்ன காணோம்னு அங்கே எல்லாம் தேடுறாங்க, அடுத்து நம்ம குரூப்தான் போகணும் சீக்கிரம் வாடி!” அவள் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள்.

திரும்பி திரும்பி விஸ்வாவை முறைத்துக் கொண்டே சென்ற பொம்மிக்கு, அவன் மேல் ஏககோபம் மையம் கொண்டது. விஸ்வாவும் சளைக்காமல் அவள் பிம்பம் மறையும் வரை, அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

“உன்னோட திடீர் இயற்கை ரசனைக்கு காரணம் இதுதானா? பொண்ணுங்க கையில அடி வாங்குறது வருங்கால கலக்டருக்கு அழகா? வில்லன் ரோல் பண்ற… மண்ட பத்திரம் மாப்ளே” அங்கே வந்த கவின் அறிவுரை கூற,

“படிக்க ஹாஸ்டல் போறதுக்கு முன்னாடி இவள பார்த்துட்டு போகாலாம்னு வந்தா, இவ முறைச்சிட்டு நிக்கிறா” – விஸ்வா.

“ஹை ஓல்டேஜ் போல தெரியுதே மச்சி… பொண்ண ஒத்துக்க வைக்கிறத விட, அப்பாவை கரெக்ட் பண்ணேன்! உன் பருப்பு வேகுதான்னு பாப்போம்”

“லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவுல இருக்கேன்ரா! என்னோட நினைப்புல பாலிடாயில ஊத்தாத”

“நா எந்துக்கு(நான் எதுக்கு) ஆபீசர் செய்றேன்… நீ சிலகா(உன் கிளி) அழகா செஞ்சு முடிப்பா!” கவின் சீண்டலை தொடர்ந்திட,

“வாய கழுவுடா கொரில்லா… இன்னைக்கு அவகிட்ட என்னோட முடிவ சொல்லியே ஆகணும்” என்று சிடுசிடுத்துக் கொண்டே மாணவிகள் இருக்கும் இடத்திற்கு நண்பனை இழுத்துக் கொண்டு சென்றான்.

“ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? லேட் ஆகுதுன்னு சொல்லிட்டு வராம, அவன்கூட பேசிட்டு நிக்கிற” என்று பொம்மியை கடிக்கத் தொடங்கி இருந்தாள் ஸ்வேதா.

“அத்தன அறிவு இருந்தா, நான் ஏன்டி உன்ன ஃப்ரண்டா பிடிக்கிறேன்?” தோழியை சீண்டியபடியே பொம்மியும் அவர்கள் குழு இருக்கும் இடத்திற்கு வந்திருந்தாள்,
“எப்பவும் கரெக்ட் டைமுக்கு வர்ற பழக்கம் வராதா பத்மா?”

“மகாராணிய அழைக்க, பின்னாடி நாலுபேர் குடைபிடிக்க வரணுமாடி?” தோழிகள் மாற்றி மாற்றி அவளை கேலி பேச,

“அதான் வந்துட்டேனே? எதுக்கு இப்போ திட்டி தொலைக்கிறீங்க?” கடுப்படித்தாள் பொம்மி.

“நீங்க வந்துடீங்க மகாராணி… ஆனா லேட்டா என்ட்ரி போட்டதால இன்னைக்கு நம்ம குரூப்க்கு சான்ஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க!” ஒருதோழி பாவமாய் பேச,

“அப்படி சொல்லியிருந்தா என்னை இப்பிடியாடி நிக்க வச்சு பேசுவீங்க? குனிய வச்சு கும்மியிருக்க மாட்டீங்க… என்கூட சேர்ந்தும் உனக்கு பொய் சொல்ல தெரியலையேடி” என்று பொய் பேசிய தோழியின் கன்னத்தை கிள்ளியபடியே உச்சுக் கொட்டினாள் பொம்மி.

“யாருடி அது உன்கிட்ட வம்பு வளர்த்த உத்தமராசா?” – ஸ்வேதா.

“எல்லாம் நம்மூரு தான்… இங்கே சுத்தி பார்க்க வந்திருக்கார். வேற ஒன்னுமில்ல” பொம்மி முனுமுனுக்க,

“நெஜமாவா? நான் நம்பிட்டேன்டி… மச்சீஸ் நீங்களும் நம்பிட்டீங்கதானே?” தோழிகளை கேட்டுவிட்டு விடாமல் ஸ்வேதா, பொம்மியை வாரிவிட, இதற்கு காரணமான விஸ்வா மீது கோபம் வந்தது பொம்மிக்கு.

அவளது எண்ணத்தை கண்டுகொண்டவனை போல் அங்கே வந்த சேர்ந்த விஸ்வா,

“என்னாச்சு? ஏன் இவ்ளோ கடுப்பா மொகத்தை வச்சுட்டு இருக்க?” பொம்மியை பார்வையால் வருடியபடியே கேட்க,

“இதோ… இவர் தாண்டி சுத்தி பாக்க வந்த மகராசா… இடத்தையா? இவளையான்னு கேட்டுச் சொல்லுங்கடி” என்றபடியே மற்ற தோழிகளுடன் முன்னே வந்தாள் ஸ்வேதா.

“சிஸ்டர், ஒரு பத்து நிமிசம் எனக்கு டைம் குடுக்கலாமே? உங்க ஃப்ரண்ட பத்திரமா உங்ககிட்ட திருப்பி குடுத்துருவேன் ப்ளீஸ்!” என்ற விஸ்வாவின் பவ்யமான பேச்சு அனைவரையும் கட்டிப்போட, இருவரையும் தனியே விட்டு சற்று தூரம் தள்ளி நின்று கொண்டனர்.

‘அடப்பாவி! எல்லோரையும் ஒத்த வார்த்தையில் வாயடைக்க வச்சுட்டான். இவன நம்பி இதுங்களும் போகுது பாரு… பக்கீஸ்’ மனதோடு நொடித்துக் கொண்டவளை விஸ்வா ரசித்துக் கொண்டிருந்தான்.

“கொஞ்சம் டீசண்டா பிஹேவ் பண்ணு விஸ்வா! என்னோட முடிவ அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். திரும்பவும் ஏன் பின்னாடியே வந்து தொல்லை பண்ற?” கோபத்தில் வார்த்தைகளால் அவனை குதற தொடங்கி இருந்தாள்.

“நீ, என்னை அவாய்ட் பண்ணாம இருந்திருந்தா, நான் ஏன் இவ்ளோ தூரம் வரப்போறேன் பத்மி”

“எப்படி? உன் பார்வையோட அர்த்தம் புரிஞ்சும், உன் பக்கத்துல உக்காந்து பேசணுமா?”

“மனசுல சலனம் இல்லாதவளுக்கு எதுக்கு தடுமாற்றம் வருது பத்மி? ஒருவேள என் பார்வையில மயங்கி, என்னை பிடிச்சிருக்குனு சொல்லிடுவியோன்னு பயமா உனக்கு?”

“இந்த மாதிரி அர்த்தமில்லாத பேச்செல்லாம் கேக்க எனக்கு நேரமில்ல விஸ்வா! புத்தி, கோணங்கி டான்ஸ் ஆடுது உனக்கு”

“ஏன் இவ்வளவு கோபம்? என்மனசுல இருக்குறத சொன்னது தப்பா? லவ் பண்ணறது அவ்ளோ பெரிய குத்தமா?”

“எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் விஸ்வா, ஆர்கியு பண்ணாதே!”

“இனி உன்கிட்ட இந்த மாதிரி பேச வரமாட்டேன் பத்மி! என்னோட ஸ்டடீஸ் கண்டினியு பண்ணப்போறேன். எப்படியும் யுபிஎஸ்சி எச்சாம்ஸ் அண்ட் ட்ரைனிங் முடிஞ்சு நான் வர்றதுக்கு மூணு வருஷம் ஆகிடும். நல்லா யோசி! என்னை வேண்டாம்னு சொல்றதுக்கு வேல்யுரீசன் சொல்லு… என்னை மாத்திக்க ட்ரை பண்றேன். பட் என்னை அவாய்ட் பண்ண நினைக்காதே… உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும் பத்மி” என்று உறுதியான குரலில் பேசினான்.

“பெஸ்ட் விஷஸ் விஸ்வா! உன்னோட ஆம்பிஷன் சக்சஸ் ஆகட்டும். உன்னோட முட்டாள்தனமான நினைப்பை
எல்லாம் முட்டைகட்டி வச்சிடு. எங்க வீட்டுல சொல்றததான் என்னோட விருப்பமா மாத்திப்பேன். இதுல சந்தேகம் வேண்டாம் விஸ்வா! குட்பை” சொன்னவள் அவனை விட்டு விலகி நடக்க,

“பிரேக்கிங் த ரூல்ஸ் ஸ்வீட்டி”

“நோ! ஐ கான்ட் அலவ் திஸ்… ஒரு நல்ல தோழியா உன்கிட்ட நிறைய பேச நினைக்கிறேன் விஸ்வா. ஆனா நீ, இந்த முடிவுலதான் இருக்கிறேன்னு தெரிஞ்ச பிறகும் எப்படி?” என்று மேற்கொண்டு பேச இயலாமல் அவனை கடந்துசெல்ல, விஸ்வாவின் மனதில் ஏதோ ஒரு பாரம் உணர்ந்தான்.

பொம்மியின் பேச்சில், அவளது தீவிரமான எதிர்ப்பை கண்டுகொண்டவன்,

‘படிக்கிறதுக்கு யோசிச்சத விட, உன்னை வழிக்கு கொண்டு வர நிறைய யோசிக்கனும் போலயே… செய்றேன்’ என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவன், அங்கிருந்து அகன்றான்.

மலர்க் கூட்டத்தின் நடுவே
வண்ணத்துப் பூச்சியாய்
உனைப் பார்க்க…
மின்னலென ராணித்தேனீயாய்
நீ நிற்க…
என் நினைவுத் தோரணத்தை
நீ பறித்து செல்ல…
சிலையாகிப் போனேன் நான்…
*********************************************

பத்ரியும் மஹதியும் தங்கள் வாழ்க்கை பயணத்தை படிப்பு மற்றும் மருத்துவத்தோடு தொடர்ந்திட, விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கமாகி இருந்தது.

மருமகளாக பார்க்காமல், மகளாக மஹதியை பாசம் காட்டி ரிஷபனின் குடும்பம் கொண்டாட, பெரிய வீட்டுப் பெண்ணும் பாகுபாடு இல்லாமல் தன்னை அவர்களுக்குள் இணைத்துக் கொண்டாள்.

படிப்பு முடிந்ததும் பொம்மிக்கு திருமணம் முடிக்கும் முயற்சியில் வரன் பார்க்கவென ரிஷபன் இறங்கியிருக்க, பொம்மியும் எந்தொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தலையசைத்தாள்.

“இந்த ஊர விட்டு என்னால போகமுடியாது சீனிப்பா, அந்த மாதிரி அலையன்ஸ் பாருங்க! மத்தபடி எனக்குனு எந்த எதிர்பார்ப்பும் இல்ல” என்று தெளிவாக சொல்லிவிட, அசலாட்சியோ எந்தவித ஈடுபாடும் இல்லாமல் இருந்தாள்.

உள்ளூரில் வரன் தேடி வருவது குதிரைக் கொம்பாக இருக்க, அப்படி வந்தாலும் ஏதாவது ஒன்றை சொல்லி தட்டிக் கழிப்பது அசலாவிற்கு வாடிக்கையாகிப் போனது.

முதலில் சாதாரணமாக ஏற்றுக் கொண்ட ரிஷபனுக்கும் மனைவியின் செயலில் சந்தேகத்தைக் கிளப்ப,

“உன் மனசுல என்ன ஓடுது சாலா? எதுக்காக எந்த வரன் வந்தாலும் தட்டிக் கழிக்கிற?”

“எந்த குழப்பமும் இல்ல பாவா! அவளுக்கு இன்னும் வயசிருக்கே? அதுதான் யோசிக்கிறேன்”

“நாளைக்கே ஒண்ணும் கல்யாணம் முடிக்கப் போறதில்லையே? வேற ஏதோ ஒரு குழப்பம் உனக்கு?”

“அப்படி எதுவுமில்ல…” என்று வார்த்தையை முடிக்க,

“இத்தன வருஷத்தில என்னை நீ எப்டி புரிஞ்சுக்கிட்டியோ தெரியாது? ஆனா நான், உன்னோட கண்ண பார்த்தே, நீ மனசுல நினைக்கிறத சொல்லிடுவேன் சாலா”

“பாவா அது… எப்படி சொல்ல?” அசலாட்சி திக்கித் திணற,

“உம்மேல உனக்கே பயமா? இல்ல வெளியுலகத்தை நினைச்சு இன்னும் தயங்கிட்டு இருக்கியா? இன்னும் யாருக்காக ஒதுங்க நினைக்கிற? எல்லாமே கனவா மறைஞ்சு, தடமே இல்லாம அழிஞ்சு போச்சு”

“ஆனா அவளுக்கு கல்யாண வாழ்க்கையில எப்படி உணர்வாளோனுதான் மனசு தவிக்குது பாவா! பொதுவா இந்த மாதிரி பெண்களுக்கு, அவங்களோட குடும்ப வாழ்க்கையிலதானே பிரச்சனை வரும்னு சொல்றாங்க… அந்த பயம்தான் எனக்கு” தன் மனதை ஆட்டிவைக்கும் குழப்பத்தை தெளிவு படுத்திவிட்டாள்.

“மத்தவங்களும் நம்ம பொண்ணும் சரிசமம் கிடையாது. அவளுக்கு இருக்குற தெளிவும் தன்னம்பிக்கையும் என்னனு உனக்கு தெரியாதா? அப்படிபட்டவளுக்கு குடும்ப வாழ்க்கையில நடக்கிற எல்லா விசயங்களும் தெரிஞ்சிருக்கும். எந்தவித குழப்பமும் உனக்கு வேண்டாம். ரொம்ப பக்குவமான பொண்ணாதான் அவள நான் வளர்த்திருக்கேன்.”

“அந்த பக்குவம்தான் என்னை தடுமாற வைக்குது. நமக்கு எந்த கஷ்டத்தையும் குடுக்க கூடாதுனு, எல்லாத்தையும் தனக்குள்ளேயே போட்டு மூடி வச்சுகிட்டா, இன்னும் பெரிய பாதிப்ப உண்டாக்குமே!”

“அவ தன்னோட பாதிப்பில இருந்து மீண்டு வந்துட்டா… அத மனசுல பதிய வச்சுக்கோ சாலா” என்று கண்டனத்துடன் வார்த்தைய விட,

“அப்ப நான்தான் வெளியே வரலையா? ஒரு அம்மாவா என்னோட குழப்பம் உங்களுக்கு புரியாது பாவா”

“நான் அப்படி சொல்லல, என்னோட வளர்ப்பு பொய்யா போகாது சாலா! என்னை நம்பு… நம்ம பொண்ண நம்பு! அதுக்கும் மேல எந்த கஷ்டம் வந்தாலும் தீர்த்து வைக்கிற உன்னோட பெருமாளை நம்பு! இனி உன் மனசுல அவள பத்தின குழப்பமோ, பயமோ வரவே கூடாது” என்று காட்டமாக சொல்லிச் சென்றான்.

ஏனோ, மகளை பற்றிய பழைய சம்பவங்களை கிளறியதும் ஒரு தந்தையாக அவனுக்குள் ஏற்பட்ட படபடப்பு, மனைவியிடம் கோபமாக உருவெடுத்தது.

‘கொஞ்சம் விட்டா நடந்த எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு எரிஞ்சு விழுவார் போல!’ நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட மனச் சுணக்கத்தில், அசலாவும் மனதிற்குள் புலம்பினாள்.

ஒரு மனைவியாக கணவனை நம்பியவளுக்கு, தாயாக தன்மகளின் திருமண வாழ்வை பற்றி நினைக்கையில் ஏற்படும் பயத்தை தடுக்க முடியவில்லை. இதன் காரணமே வரன் பற்றிய விசாரிப்பில்கூட அத்தனை அசுவாரசியம் காட்டினாள்.

ரிஷபனின் பிடிவாதத்தால் வரன் பார்க்க ஆரம்பித்த நாள் முதல், அவள் மனதில் அலைபாயும் எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. தனது மனநிலை புரிந்தும், தன்னை கடிந்து கொண்டு செல்லும் கணவனைக் கண்டு அமைதியாகத்தான் இருக்கத்தான் முடிந்தது.

பொம்மியின் படிப்பு முடியவும், அவளுக்கு வரன் அமையவும் சரியாக இருக்க, ரிஷபனுக்கும் அத்தனை மகிழ்ச்சி.

தற்செயலான காரியமா அல்லது பேசிவைத்து நடந்த முயற்சியா ஏதோ ஒன்று வரன் தகைந்திருக்க, அந்த வீட்டின் மாப்பிள்ளையாக, பத்மாக்ஷினியின் மணவாளனாக வந்து நின்றவன் விஸ்வேந்தர். ஐபிஎஸ்.

****************************************************

ஐஏஎஸ் பயிற்சிக்கென சென்ற விஸ்வேந்தர், அடுத்தடுத்த கட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவன், மூன்றாவது தேர்வான நேர்காணலில் தன் தகுதிக்கு கிடைத்த ஐஏஎஸ் பயிற்சியை தவிர்த்து விட்டு, ஐபிஎஸ் பயிற்சியை தேர்ந்தெடுத்தான்.

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் பயிற்சி மையத்தில்(எஸ்விபிஎன்பிஏ) பதினொருமாதத்தில் முடித்தவன், கேடார் முறையில் நூறு நாட்கள் பயிற்சிப் பணியை அங்கேயே தங்கி முடித்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில்(லாஅண்ட்ஆர்டர்) சென்னையில் பணி நியமனம் செய்யப்பட்டான்.

தந்தையை போல காவல் துறையில் பணிசெய்ய நினைத்த காரணத்தால்தான், ஐஏஎஸ் வாய்ப்பை தவிர்த்தேன் என்று தன்தாய் வாணியிடம் சப்பைக்கட்டு கட்டியவனின் மனம் முழுவதும் பொம்மியின் ‘உனக்கு ஐபிஎஸ் தான்ரா கெத்து’ என்ற குரல் ஒலித்துகொண்டே இருக்க, அவனது மனம் தானாய் அந்த பயிற்சியை தேர்ந்தெடுத்து இருந்தது.

‘அவ நினைப்புல முழுப் பைத்தியமா ஆகுறதுக்குள்ள, பட்டா போட்டு அவள சொந்தமாக்கிக்கோ’ என்று மனமானது மூளைக்கு கட்டளையிட, சரியாக தனது திருமணப் பேச்சை ஆரம்பித்த தாயிடம், தனக்கு பொம்மியின் மேல் உள்ள விருப்பத்தை சொல்லிவிட்டான்.

மகனின் விருப்பத்திற்கு விஸ்வாவின் பெற்றோர் எந்தவொரு ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. எந்த வகையில் பார்த்தாலும் பொருந்திப் போகும் சம்மந்தமாகவே இருக்க சற்றும் தாமதிக்காமல் ரிஷபனிடம் பெண் கேட்டனர்.

நன்றாகப் பழகிய மனிதர்கள், நல்லதொடு குடும்பம் என்ற பல நல்லவைகள் இரு குடும்பத்திற்கும் பாலமாய் இருக்க, ரிஷபனுக்கும் பெண்ணை கொடுப்பதில் தயக்கமில்லை.

தன் விருப்பத்தை மனைவியிடம் சொல்ல,

”எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சே செய்றீங்களா பாவா? போலீஸ் வேண்டாமே நம்ம குடும்பத்துக்கு” – அசலா.

“நீ என்னோட மனைவி, அவ என்னோட பொண்ணு… இத இன்னும் நீ மனசுல பதிய வைக்கல சாலா? என்னோட பொண்டாட்டியா எப்போதான் தைரியமா யோசிக்கப் போற?”

“ஒரு பொண்ணோட அம்மாவ யோசிக்கிறது தப்பா? உங்க மனைவியாதான், அப்பாவான உங்ககிட்ட அவ பொறுப்ப எடுத்துக்க சொன்னேன். ஆனா ஒரு அம்மாவா என் மனசு சஞ்சலப்படுறத என்னால தடுக்க முடியல”

“நடந்தத மறக்காம இன்னமும் ஏன் தூக்கி சுமக்குற? உன்னோட பேச்சு, என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையோன்னுதான் நெனக்க தோணுது. உன்னோட சங்கடத்துக்கு அவளுக்கு ஒரு நல்லது பண்ணாம இருக்கச் சொல்றியா? வாழப் போறவளுக்கு அந்த தடுமாற்றம் இருந்தா, வேண்டாம்னு ஒதுக்கி வைக்கிறதுல அர்த்தமிருக்கு” மகளுக்கு திருமணம் என்று ஆரம்பித்த நாளில் இருந்தே மனைவியிடம் தர்க்கம் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

வருடங்கள் தாண்டியும் மனைவியின் குழப்ப மனநிலை ஒருவித சலிப்பை தந்திருக்க, ‘தன் வளர்ப்பின் மீதும் நம்பிக்கை இல்லாமல் பேசுகின்றாளே?’ என்ற கழிவிரக்கம் கோபமாய் இடம்மாற, வரன் பற்றிய எந்த பேச்சு வந்தாலும் அது வாக்குவாதத்தில் இருவருக்கும் முடிந்தது.

“காவல்காரரே! இனி இதுக்காக ஒரு சண்ட மாருதத்த வீட்டுல ஆரம்பிக்காதீங்க… ஏற்கனவே பல விஷயங்கள்ல மண்டை குழம்பிப் போயிருக்கேன். இதுல நீங்க வேற புதுசா சண்டை பிடிச்சிகிட்டு நிக்காதீங்க… நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு, இதுல நான் தலையிடல” என்று பொறுப்பை தட்டிக் கழித்து விட்டாள்.

பத்ரியிடம் கேட்க, “இது எனக்கு முன்னாடியே தெரிந்ததுதான் நாணா” என்ற அலட்சிய பாவனையில் பேசிட,

“புரியல சின்னா? என்னதான் சொல்ல வர்ற?” – ரிஷபன்.

“இவங்க ரெண்டுபேர் விசயமும் இப்படிதான் முடியும்னு எனக்கு தெரியும் நாணா! இவங்க பேச்சும் பழக்கமும் வெளியே, இவங்க சொல்லாத விசயத்தையெல்லாம் எப்பவோ சொல்லிடுச்சே…” – பத்ரி.

“நானும் அப்படிதான் நினைச்சிருந்தேன் அங்கிள்” மஹதியும் தன் பங்கிற்கு பேசினாள்.

தங்கள் திருமணம் நடந்த பொழுதிலும் அதற்கு முன்பும் பொம்மி விஸ்வாவுடன் பேசியதை வைத்தே இருவரும் தங்கள் அபிப்பிராயத்தை கூறினர்.

“ஃப்ரண்டாதான் எனக்கு, அவன் கூட பழக்கம் சின்னையா! வீணா கற்பனை பண்ணாதே” – பொம்மி.

“யார் இல்லன்னு சொன்னா பொம்மி? இப்படி ஆரம்பிச்ச பழக்கம்தானே லவ்ல வந்து முடியுது. நீ ஏன் இத தப்பா நினைக்கிற?” என்று சமாதனப்படுத்தி பத்ரி பேசினாலும், அண்ணனின் பேச்சு தங்கைக்கு வேப்பங்காயாக கசந்தது.

“ஹை… நம்ம வீட்டுல டாக்டர், ஃபார்மர், இப்போ ஐபிஎஸ் வரப் போறாங்க செம்மையா இருக்கும்க்கா… அவருக்கு ஸ்டார்டிங்ல நீதானே சிலம்பம் கிளாஸ் எடுத்தே?”

“அப்போ யாரும் அவைலபிளா இல்லடி ரோஸ்குட்டி… நீயுமா இப்படி புரிஞ்சுக்கிற” பொம்மியால் ஆற்றாமையில் பேச மட்டுமே முடிந்தது.

“அதனால என்ன அம்மு? நீ மனசுக்குள்ள வச்சுருக்க, அந்த தம்பி வெளியே சொல்லிட்டான். எங்களுக்கும் சந்தோசம்” என்று தாத்தா சங்கரய்யாவும் பாட்டி கனகம்மாவும் சம்மத்ததை தெரிவித்தனர்.

“ஓ! இப்படி ஒன்னு இவங்களுக்குள்ளே இருக்கும்னு நான் யோசிக்கவே இல்லையே பாபு! அதான் உங்க நாணா சொன்னதும் மறுபேச்சு இல்லாம சம்மதம் சொன்னாளா?” என்று அசலாவும் தன் பங்கிற்கு பேசியே இம்சைப்படுத்த, பொம்மிக்கு விஸ்வேந்தரின் மீது நாளுக்குநாள் வெறுப்பு கூடிக்கொண்டே போனது.

ஏற்கனவே அவனது விருப்பம் என்று கூறியே மகனுக்கு பெண் கேட்டு வந்தவர்களும் அதே கருத்தை ஆமோதிக்க, விஸ்வாவின் காதலி என்ற பட்டம் தானாக வந்து சேர்ந்திருந்தது.

தந்தையின் சொல்லிற்கு மறுபேச்சு பேசாமல், நல்ல பெண்ணாய் திருமணத்திற்கு சம்மதித்தவளுக்கு, ஏனோ விஸ்வேந்தர் மீது உச்சகட்ட வெறுப்பு மட்டுமே மனதில் தங்கியிருந்தது.

அந்த வெறுப்போடு அவனோடு நிச்சயமும் நடந்து முடிந்திருக்க, அடுத்ததாக அவன் செய்த செயல் பொம்மியின் இயல்பு நிலையை முற்றிலும் புரட்டிப்போட்டது.

error: Content is protected !!