குறும்பு பார்வையிலே – 30 (Prefinal)
ஸ்ருதி, கிருஷ் இருவரும் உறங்கிவிட்டார்கள். ஸ்ருதி முன்பை விட இயல்பாக இருக்கிறாள். ஆனால், நெருக்கம்? கேள்விக்குறி தான்!
ஸ்ருதியின் கண்களில் தெரிந்த ஏக்கம், ஆகாஷின் மனதைப் பிசைந்தது.
‘அப்படி என்ன இருக்கும் அந்த கிப்ட் பாக்ஸில்?’ என்ற எண்ணத்தோடு அவன் அவள் கொடுத்த பரிசுப் பொருளைத் திறந்தான்.
அதில் பளீரென்று வெள்ளை நிறத்தில் மூடப்பட்ட சிப்பி. அவன் முகத்திலும் ஒரு புன்னகை. ‘இவளுக்கு சிப்பினா அப்படி பிடிக்கும். ஒரு நாள் பீச் போகணும்.’ நினைத்துக் கொண்டான்.
அந்த சிப்பியை திறக்க முயல, அவனால் முடியவில்லை. ஆகாஷிற்கு, அதே நாள் அவளுக்குக் கொடுத்த பரிசுப்பொருள் நினைவு வந்தது. அவன் பெயரைச் சொன்னால், திறக்கும் இதயம்.
‘நம்மளை மாதிரியே யோசித்திருப்பாளோ?’, “டாலி…” அவன் அழைக்க அந்த சிப்பியும் திறந்து கொண்டது.
உள்ளே இரண்டு முத்துக்கள். ஒன்று மற்றொன்றைத் துரத்துவது போல் இதய வடிவில் ஓடிக் கொண்டிருந்தது. அது அவர்கள் இருவர், என்று சொல்லாமல் சொல்வது போல்.
அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து, சற்று தள்ளி உள்ள மேஜை அருகே வந்தான் ஆகாஷ். ஸ்ருதி கொடுத்த பரிசுப் பொருளை, மேஜை மீது வைத்து நாற்காலியில் சாய்ந்தமர்ந்து அதை ரசித்தான் ஆகாஷ்.
‘இவளுக்குக் கற்பனை சக்தி அதிகம் தான். அதைச் செயல்படுத்தும் திறனும்!’ பெருமிதமாக எண்ணிக்கொண்டே, அவள் கொடுத்த பரிசுப்பொருள் அழகில் மயங்கிப் போனான். அவன் கண்களில் மயக்கம்! அவன் கண்களில் காதல்! காதல் மட்டும் தான்!
திடீரென்று அவன் அறிவு விழித்துக்கொண்டது. ‘நான் கொடுத்த பரிசுப்பொருளை ஸ்ருதி வச்சிருக்காளா?’ என்ற கேள்வி அவன் மனதில் எழ,பதட்டம் சூழ அத்தனை அலமாரிகளையும் தேடினான். எங்குமில்லை. அவள் கைப்பை, அவள் பெட்டி எங்கும் தேடினான். அவனுள் வருத்தமே சூழ்ந்தது.
‘நான் இவளை தேடி போகலைன்னு என்னை வெறுத்துட்டாளோ?’ அவன் மனம் கேள்வி எழுப்ப, ஆகாஷ் தன்னை தானே திட்டிக்கொண்டான்.
பரிசுப்பொருள் எங்கும் இல்லாமல் போக, அவன் திரும்ப எத்தனிக்க, ஸ்ருதி திரும்பிப் படுத்தாள். அவளுக்குக் கீழ், அவன் கொடுத்த இதயம், இவனைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தது.
ஆகாஷின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது. தன் மனைவியின் பக்கத்தில் மண்டியிட்டு, அந்த இதயத்தை திறந்தான்.
அன்று போல் இன்றும், அதில் ஆகாஷின் குரல் ஒலித்தது.
“லவ் யு டாலி. லவ் யு சோ மச்… என் உயிர் உள்ள வரை என் காதலும் இருக்கும்.” அவன் குரல் உருகி ஒலிக்க, தூக்கத்திலும் அந்த குரலில் அவள் முகத்தில் ஓர் புன்னகை.
அவள் புன்னகையில் தன்னை மறந்தான் ஆகாஷ். ஆனால், அன்று போல் இன்று ஸ்ருதி காதலை வெளிப்படுத்தவில்லை.
“லவ் யு டாலி. லவ் யு சோ மச்… என் உயிர் உள்ள வரை என் காதலும் இருக்கும்.” பின்னணி இசையோடு ஆகாஷின் குரல் ஒலிக்க, “குறும்பா! எனக்குத் தெரியும். நீ எனக்காக வருவ. உன் காதலைத் தேடி வருவ… நான் காத்திருப்பேன்.” தூக்கத்தில் பிதற்றினாள் ஸ்ருதி.
ஆகாஷ், திடுக்கிட்டுப் போனான். இதயத்தை மூடிவிட்டு, நாற்காலியில் கண்மூடி அமர்ந்தான். ‘எனக்காக காத்திருந்திருக்கிறாள்! நான் ஏன் போகவில்லை? எனக்கு ஏன் இத்தனை கோபம்?’ அவன் நொந்து கொண்டான்.
அவள் கொடுத்த பரிசுப்பொருளைப் பார்த்தான். ‘டாலி பெயரைச் சொன்னால் திறக்கும் சிப்பி… அதற்குள் முத்து. இதை ஏன் திருமணத்திற்குப் பின் தான் பார்க்கணுமுன்னு சொன்னா?’ அவன் அந்த சிப்பியை கைகளில் ஏந்த, அவன் கைகளில் உள்ள தட்பவெப்ப நிலையில் சிப்பியின் மேல் பகுதியில் அவர்கள் கடலுக்குள் எடுத்த படங்கள்.
அவர்கள் இருவரும் அத்தனை நெருக்கமாகக் கடலுக்குள் சென்ற ஸ்குபா டைவிங். ஸ்ருதியின் கண்களில் பயம். அதை மிஞ்சும் காதல். அதையும் மிஞ்சும் ஆகாஷின் மேல் நம்பிக்கை.
‘இன்னைக்கு என்னை இப்படி நம்புவாளா? இப்ப எல்லாம் அவள் கண்களில் நான் இந்த காதலைப் பார்க்கவே இல்லையே?’ அவன் கண்களில் ஏக்கம்.
‘இலக்கணத்தை மாற்ற இவளால் தான் முடியும். சிப்பி கடலில் இருக்கும். ஆனால், இவள் சிப்பியில் கடல்.’ சிப்பிக்குள் கடல், கடலில் இவர்கள் அவள் திறமையில் அவன் மெய் மறந்திருக்க, “ஆகாஷ்…” ஸ்ருதியின் குரல் காணொளியொடு ஒலிக்க, ‘இது வேறையா?’ என்று அவள் பேசுவதை ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தான் ஆகாஷ்.
“நான் பேசுறதை நீங்க கேட்கும் பொழுது நான் உங்க மனைவியா இருக்கனும். காதலியா இல்லை. காதலிக்கு எல்லா உரிமையும் கிடையாது. ஆனால், மனைவிக்கு உண்டு.” ஸ்ருதியின் முகத்தில் ஓர் வெட்க புன்னகை.
“ஸ்ருதி உங்களுக்காக எல்லாம் மாத்திப்பா. விட்டுக்கொடுப்பா! ஆனால், அவளுக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம்.” ஸ்ருதியின் முகத்தில் ஒரு கொஞ்சல். ஆகாஷ் அவள் பாவனையை ரசித்து சிரித்துக் கொண்டான்.
“ஸ்ருதி கோபப்படும் பொழுது, நீங்க விட்டுக் கொடுக்கணும். அவ கோபட்டா நீங்க சமாதான படுத்தனும். அவ கொஞ்ச நேரத்தில் சரியாகிருவா? சரியா?” ஸ்ருதி ஒரு நொடி கேள்வியாக நிறுத்த, ஆகாஷின் உடல் நடுங்கியது.
“நாம்ம சண்டையே போட கூடாது. ஊரே, நம்மளை பார்த்து வியக்குற அளவுக்கு நாம வாழனும். சரியா?” அவள் தலை அசைத்துக் கேட்க, ஆகாஷ் கண்கள் கலங்கியது.
“யோசிக்கவே கூடாது. சரின்னு மட்டும் தான் சொல்லணும். இது உங்க மனைவியின் கட்டளை.” அவள் புன்னகையோடு கூற சிப்பி மூடிக்கொண்டது.
“டாலி… டாலி… நான்… நான்…” மேலே பேச முடியாமல் தடுமாறினான் ஆகாஷ்.
தன்னை நிதானப் படுத்திக்கொண்டான். கவனத்தை வேறு பக்கம் திருப்பினான். ‘இதில் என்னென்ன டெக்னாலஜி யூஸ் பண்ணிருக்கா?’ என்று சிப்பியைத் திருப்பி பார்த்தான். அவள் அறிவை மெச்சிக் கொண்டான்.
அவன் அன்றிரவு தூக்கத்தைத் தொலைத்திருந்தான்.
மறுநாள் காலையில் ஸ்ருதி விழிக்கும் இடத்தில் அந்த சிப்பி. அவளுள் சொல்ல முடியாத உணர்வு. குளித்துவிட்டு வந்தாள். எதுவும் பேசவில்லை.
“பியூடிபியுல்.” என்று கிருஷ் அதை பார்த்து கூற, “ஆமாடா கிருஷ். எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.” ஸ்ருதியை பார்த்துக் கண்சிமிட்டினான்.
‘என்ன ஆகாஷின் செயல் சரி இல்லையே.’ என்று கிளம்பினாள் ஸ்ருதி.
கிருஷ் மண்டபத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான்.
கிருஷ் அறையை விட்டு செல்ல எத்தனிக்க, “கிளம்பலாமா ஸ்ருதி?” என்று அவன் கேட்க, தலை அசைத்தாள் ஸ்ருதி.
ஆகாஷ் கிருஷை தூக்கி கொண்டு கன்னத்தில் இதழ் பதித்தான். “என்ன ஸ்பெஷல்? இப்படி மோர்னிங் கொஞ்சறீங்க?” கிருஷ் கேள்வியாக நிறுத்த, “நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா…” என்று ஆகாஷ் ஸ்ருதியை பார்த்துக்கொண்டே கூறினான்.
கீழே சுமதியின் சத்தம் கேட்க, “இட்’ஸ் லேட் அப்பா! வாங்க.” என்று கூறிவிட்டு, அவன் ஓடிவிட, ஸ்ருதி அவன் பின்னே ஓட எத்தனித்தாள்.
அவள் கைகளை பிடித்து நிறுத்தினான் ஆகாஷ்.
“நேரம் ஆச்சு!” ஸ்ருதி கூற, “இல்லை ஸ்ருதி… வருஷங்கள் ஓடினாலும், காலம் தாழ்ந்து போகலை.” அவன் கூறினான்.
“சிப்பி… அதில் முத்துக்கள் ஓட, நம்ம போட்டோ…” அவன் நிறுத்த, ‘நான் பேசியதை ஆகாஷ் கேட்டிருப்பானோ?’ அவள் முகத்தில் தவிப்பு.
அவள் தவிப்பை அவன் ரசித்தான். அவன் நெருங்க அவள் சுவரோடு சாய்ந்து கொண்டாள்.
“ரொம்ப அழகா இருக்க ஸ்ருதி.” அவன் அவளை ரசித்துக் கூற, “இத்தனை நாள் தெரியலையா?” அவள் கேட்க, “தெரிஞ்சிது சொல்லத்தான் பயம்.” அவன் கேலியாக சிரித்தான்.
“பயம்? உங்களுக்கு? நம்பிட்டேன்.” அவள் கூற, அவளை அமர வைத்தான். அவள் கால்களில் மெட்டி அணிவித்தான். அவளுக்குக் கொலுசும்.
“உண்மையில் பயம் தான். இதை என்னைக்கோ வாங்கி வச்சிட்டேன். கோபப்படுவியோன்னு பயங்கர பயம்.” அவன் நக்கலடிக்க, “இப்பவும் கோபப்படுவேன்.” என்று ஸ்ருதி முகத்தைத் திருப்பினாள்.
“நான் தான் இப்படி சமாதானம் செய்திருவேனே!” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, “வா… ஸ்ருதி நேரமாகிருச்சு.” என்று கிளம்பினான் ஆகாஷ்.
வெளியே சென்றவன் திரும்பி வந்து, “மனைவியின் கட்டளை…” கண்சிமிட்டி விட்டுச் சென்றான். என்ன நடந்திருக்கும் என்று கணித்து விட்ட ஸ்ருதியின் முகத்தில் வெட்க புன்னகை.
அதன் பின் அனைவரின் நாட்களும் அழகாக நகர்ந்தது.
கார்த்திக், கீதாவின் நாட்கள் புதுமணத்தம்பதிகளின் சுகத்தோடு நகர்ந்தது. ஆகாஷ், ஸ்ருதி ஒற்றுமையாக அவர்கள் ப்ராஜெக்ட் வேலையில் மூழ்கினர்.
சுமதிக்கு கீதா இல்லாத குறையை ஸ்ருதி பட்டும்படாமலும் தீர்த்து வைத்தாள்.
அன்று ஆகாஷ், ஸ்ருதி இருவரும் வேலையில் மூழ்கி இருக்க, அவர்களுக்கு ஓர் தொலைப்பேசி அழைப்பு வந்தது.
இருவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு கீதா அமர்ந்திருக்க, “அம்மாவை கூட்டிட்டு வரவேண்டியதுதானே?” என்று ஆகாஷ், கீதாவை கேட்க,”கார்த்திக் வருவேன்னு சொன்னான். இப்ப இன்னும் நேரம் ஆகுமுன்னு சொல்லிட்டான். தனியா இருக்க ஒரு மாதிரி இருந்தது. அம்மாவை கூப்பிட்டா டென்ஷன் ஆவாங்க. அதுதான் அண்ணியை வர சொன்னேன்? நீ ஏன் வந்த?” என்று கீதா ஆகாஷை எதிர் கேள்வி கேட்டாள்.
அதற்குள் மருத்துவரிடமிருந்து அழைப்பு வர, ஸ்ருதி, கீதா இருவரும் உள்ளே சென்றனர்.
ஆகாஷ் காத்திருக்க கார்த்திக் படபடப்போடு வந்தான்.
“என்ன ஆச்சு ஆகாஷ்? ” என்று கேட்க, “தெரியலை திடீருன்னு இங்க வர சொன்னா கீதா.” என்றான் ஆகாஷ்.
“என்னையும் இப்படி தான் வர சொன்னா. மீட்டிங்கில் இருக்கிற நான் பதட்டத்தோட வரேன். ஒண்ணுமில்லை சும்மா வாங்கன்னு ஹாஸ்பிடல் வர சொன்னா… டென்ஷன் ஆகுமா? ஆகாதா?” என்று கேட்க, கார்த்திக்கின் கேள்வியில் உள்ள நியாயத்தில் ஆகாஷ் தலையசைத்தான்.
“எப்ப பாரு ஏதாவது இப்படி தான் இடக்கு மடக்கா செய்யறா? இன்னைக்கு அவளை என்ன பண்ணறேன்னு பாருங்க?” பதட்டத்தில் படபடத்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
ஆகாஷ் அவர்களின் வருகைக்காகக் காத்திருக்க, ஸ்ருதி, கீதா இருவரும் இவர்களை நோக்கி வந்தனர்.
கார்த்திக் கீதாவின் முகத்தைப் பார்க்க, அவள் வெட்கப்பட்டுத் திரும்பிக் கொண்டாள். அவன் அவள் அருகே சென்று, தலை அசைக்க, அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
‘என்ன பன்றேன்னு பாரு?’ என்று கூறிக்கொண்டிருந்த கார்த்திக், அவளைத் தூக்கிச் சுற்ற, “கார்த்திக் இது ஹாஸ்பிடல்.” என்று கீதா கிசுகிசுக்க, வெட்கப்பட்டு அவளை இறக்கி விட்டான்.
தோள்களைக் குலுக்கிக் கொண்டு, “என் பொண்டாட்டி தானே?” என்று அசட்டையாகத் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
கீதாவின் முகத்தில் பெருமிதம்.
ஆகாஷுக்கு சந்தோசம் தான். ஆனாலும், அவனுள் ஒரு கேள்வி. ‘இப்படி அவள் முகம் பார்த்து ஒரு வரவேற்பைத் தான் ஸ்ருதி அன்று எதிர்பார்த்திருப்பாளோ? நான் ஸ்ருதியை அன்று காயப்படுத்தி அனுப்பிவிட்டேனோ?’ அவன் ஸ்ருதியை யோசனையாகப் பார்த்தான்.
ஸ்ருதி அவர்களுக்குச் சந்தோஷமாக வாழ்த்துக் கூறிக்கொண்டிருந்தாள்.
“கார்த்திக், எப்பவுமே இப்படி தானா? இல்லை இப்ப மட்டும் தான் இப்படியா?” என்று ஆகாஷ் குறும்போடு கார்த்திக்கிடம் கேட்க, “இதெல்லாம் குடும்பத்தில் சகஜம்.” என்று கீதாவை தன்னோடு சேர்த்துக்கொண்டு கூறினான்.
“எங்க வீட்டுக்கு போயிட்டு, அப்புறம் நம்ம வீட்டுக்கு போவோமா?” என்று கீதா கேட்க, “நீ சொன்னா சரி தான்.” என்று கார்த்திக் கூற அங்குச் சிரிப்பலை பரவியது.
இருவரும் அலுவலகத்துக்குச் சென்று வேலையைத் தொடர, ஆகாஷ் வேலையில் மூழ்கினான்.
ஸ்ருதி வேலை செய்ய முடியாமல், அந்த உயரமான கட்டிடத்தில் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக உலகை பார்த்தாள்.
“டாலி… என்ன யோசனை?” ஆகாஷ் அவன் நாற்காலியில் வட்டமடித்து கேட்க, ‘இவன் தான் ஆகாஷ். என் முகம் பார்த்து என்னைத் தெரிந்து கொள்வான். ஆனால், அன்று அவனும் தோற்றுவிட்டான். நானும் தோற்றுவிட்டேன்’ என்ற எண்ணத்தோடு நின்றாள்.
“கேட்குறன்ல டாலி…” அவன் மீண்டும் கேட்க,”கார்த்திக் ரொம்ப கொடுத்துவைத்த கணவர்.” ஒற்றை வரியில் அவள் கூற, ஆகாஷின் முகத்தில் புன்னகை.
‘ஆமான்னு சொன்னா செத்த… இல்லைன்னு சொன்னாலும் வில்லங்கம் தான்.’ என்று ஆகாஷின் யோசனை ஓடியது.
‘ஆனால், இதுவரை ஸ்ருதி மனதைத் திறந்து பேசவேயில்லை. இன்னைக்கு அவ சரி இல்லை.’ என்று எண்ண, அவள் அருகே சென்றான்.
ஸ்ருதியை அவன் பக்கம் திருப்பி, “என்ன ஸ்ருதி?” என்று அவன் கேட்க, ஸ்ருதி மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“சீதை கோட்டை மீறினால் ராமருக்கும் கஷ்டம் தானே?” அவள் கேட்க, “ஸ்ருதி…” அவன் கலங்கினான்.
“எல்லாம் நான் அன்னைக்கு பண்ண தப்பு. என் ஒழுக்கத்தைத் தொலைத்த தப்பு. என் கட்டுப்பாட்டை இழந்த தப்பு. என் வாழ்க்கை முழுதும் தப்பாகிருச்சு. என்னால், உங்களுக்கு கஷ்டம்.” ஸ்ருதி விசும்ப, “எனக்கு என்ன கஷ்டம் ஸ்ருதி. மனம் போல் மனைவி. அழகான குழந்தை. நான் நல்லாருக்கேன் டாலி.” அவன் அவளை சமாதானம் செய்தான்.
“இன்னைக்கு கீதா, கார்த்திக்கிற்கு கொடுத்த சந்தோஷத்தை நான் உனக்கு கொடுக்கலையே ஆகாஷ். கார்த்திக் முகத்தில் எவ்வளவு சந்தோசம் தெரியுமா?” ஸ்ருதி ஏக்கமாக கேட்டாள்.
ஆகாஷ், மறுப்பாக தலை அசைத்தான். “கார்த்திக், கீதாவோட முகம் பார்த்து அனைத்தையும் கணிச்சிட்டானே. கீதாவின் முகத்தில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? நான் உனக்கு அந்த நியாயத்தை செய்யலியே?” அவன் ஸ்ருதியை சமாதானப்படுத்தினான்.
அவனும் இளக, அவளும் இளக, “நான் உனக்கு சாபமா ஆகாஷ்?” அவள் கேட்க, அவன் அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தான். “நீ பக்கத்தில் இருந்தா வரம், விட்டுட்டு போனால் சாபம் தானே?” அவன் அவளை தன் மேலே சாய்த்துக் கொண்டே கேட்டான்.
அடுத்து ஸ்ருதி கேட்ட கேள்வியில் அவன் மனம், ‘ஐயோ!’ என்று பதறியது.
குறும்புகள் தொடரும்…