manam2

manam2

மகிழம்பூ மனம்

மனம்-2

கூடுவாஞ்சேரியை ஒட்டிய கிராமம், தேவேந்திரனின் பூர்வீகம்.  பெற்றோர் அவனின் ஒரே இளைய உடன்பிறப்பான யுகேந்திரனுடன், அங்கு வசித்து வருகின்றனர்.

பங்களூருவில் இருந்து தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தான் தேவா. ஆரம்பத்தில் சில வாரங்கள் ஊரிலிருந்து பணிக்கு வந்து சென்றான்.  நேர அவகாசம் ஒத்துவராமையால், அதன்பின் சென்னையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தான்.

வாடகை வீட்டில் சில அசௌகரியங்களை உணர்ந்ததால், தனது வருமானத்தினைக் கொண்டு சென்னையிலேயே ஃபிளாட்டை வாங்கியிருந்தான் தேவா. அதன்பின் அங்கிருந்தே பணிக்குச் சென்று வந்தான்.

தாய் வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே, கிராமத்திற்கு சென்று, இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரும்புவதை திருமணத்திற்கு முன்புவரை வழக்கமாக்கியிருந்தான்.

இந்நிலையில் பெரியவர்கள்கூடி, தேவா மற்றும் யாழினி திருமணத்தை நிச்சயித்து, அவ்வூர் வழக்கப்படி அங்கிருந்த சமுதாயக் கூடத்தில் வைத்து, எளியமுறையில் திருமணத்தை நடத்தியிருந்தனர்.

யாழினியினுடையது விவசாயக் குடும்பம்.  மூன்று பெண்மக்களைப் பெற்றதால், மூத்தவளான யாழினியை இளங்கலைப் பட்டம் பெற்றவுடனே மணமுடித்துக் கொடுத்திருந்தனர்.

விவசாயம் தற்போது பொய்த்து போகக்கூடிய நிலையில், பெண்மக்களை உரிய பருவத்தில் கரையேற்றி, தங்களது கடமைகளை முடித்திட எண்ணியபோது வந்த தூரத்துச் சம்பந்தம் இது.

திருமணம் முடிந்து ஒரு வாரத்தில், தனித்து சென்னை கிளம்பிய தேவேந்திரனை, அவனது தாயார் தடுத்திருந்தார். அத்தோடு உடன் அவன் மனைவியையும் அழைத்துச் செல்லும்படி, வலியுறுத்தியதோடு அல்லாமல் வற்புறுத்தியதால்… பெரிய மனது வைத்து… மனையாளையும் சென்னைக்கு உடன் அழைத்து வந்திருக்கிறான் தேவா.

வெளியில் கிளம்பும் தோரணையுடன், தன்முன் நின்றிருந்த மகனைக் கண்ட அம்பிகா, “என்ன தேவா எங்க கிளம்பிட்ட…?”, என்று யோசனையோடு கேட்டார்.

யோசனையுடனான, வதனத்தைக் கொண்ட தாயின் கேள்விக்கு, “வேலைக்குத்தான்மா”, என்று மிகவும் குறைந்த குரலில், பட்டும்படாமல்… எண்ணெய் தடவிய உடலில் ஊற்றிய ஒட்டாத நீரைப்போல, விரக்தியாக பதில் பேசினான் தேவா.

மகனின் குரலில் இருந்த விரக்தியை உணர்ந்து கொள்ளும் நிலையில், தேவாவின் தாய் இல்லை.

தேவாவின் பேச்சைக் கேட்டதுடன், “அப்போ யாழினியவும்கூட கூட்டிட்டு கிளம்பு. எதுவும் முன்கூட்டியே சொல்லாம… நீ பாட்டுக்கு தனியா கிளம்பி வந்து நின்னா… என்ன அர்த்தம் தேவா?”, என்று மகனிடம் பேசிய வார்த்தைகளின் உச்சரிப்பில் கடுமை காட்டினார் அம்பிகா.

‘இந்தக் காலத்துப் புள்ளைகளே ஒரு தினுசான டிசைனா இருக்குதுகனு பாத்தா… நான் பெத்தது இன்னும் ஒரு தினுசாவுல… வந்து… வளந்து நிக்குது!

புதுமாப்பிள்ளை கணக்காவா நடக்கறான்!  இவன் என்னவோ புதுரா(புதிராக) எதுலயும் ஒட்டாமத் தெரியறான். 

கல்யாணமாகியும் இன்னும் ஒரு கலகலப்பா இல்லாம…! இஞ்சி தின்ன குரங்காட்டமா முகத்தை வச்சிக்கிட்டு…! அங்கபோயி கம்பூட்டரைக் கட்டிக்கிட்டு இருக்க.. என்ன அவசரமோ இவனுக்கு தெரியல?’, என்று தனது தலையில் அடித்தபடியே தனக்குள் பேசியவாறே,  “யாழினி…!”, என்று மருமகள் இருந்த அறையை நோக்கி அழைத்தார்.

தனது மகனின் இயல்பு, திருமணத்திற்குப் பிறகேனும் மாறாதா? என்ற ஏக்கத்தில் இருந்தவருக்கு, ஏக்கர் கணக்கில் எகத்தாளத்தைப் பயிரிட்டு, எனக்கென்ன! என்று திருமணத்திற்குப் பிறகும் கடுகளவும் மாறாதிருந்த மகனைக் கண்ட வருத்தம், அம்பிகாவை அவ்வாறு புலம்பச் செய்திருந்தது.

தாயின் ‘யாழினி’ என்ற அழைப்பைக் கேட்ட தேவா, ‘அய்யோ, இந்தப் பொண்ணுகிட்ட(யாழினி) இருந்து தப்பிக்க நினச்சு, நான் ஊருக்கு கிளம்பினா? இந்தம்மா இப்ப இவளக் கூப்பிட்டு என்ன செய்து வைக்கப்போகுதுன்னு தெரியலயே! ஒருவேளை இவளையும் எங்கூட அனுப்ப நினைக்குதோ?’, என மனதிற்குள் எண்ணியவனால், தனது தாயிடம் எதையும் பேசும் துணிச்சல் இன்றி, மனதிற்குள் ஒரு போராட்டம் நிகழ்த்தியவாறு நடப்பதைக் கண்டவாறு நின்றிருந்தான்.

நடப்பது நடக்கட்டும் என்று அதற்குமேல் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றவனின் மனமோ, ‘ஒரு கன்குலூசனுக்கு வரவேண்டி, தனியா போயி யோசனை பண்ணலாம்னு கிளம்பினா… தாயம்மா தண்டனை தந்திரும் போலவே’, என நினைத்தபடியே தாயின் பின்னே நடந்து கொண்டிருந்தான், தேவா.

மகன் தன்னோடு நூல்பிடித்தவாறு வருவதை உணர்ந்த அம்பிகா, மகனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவர், “எதுக்கு இங்க இப்டி எம்பின்னாடியே வர்ற,   வந்த புள்ளை பின்னாடி தெரிஞ்சா… அது நியாயம்! சின்னப்புள்ளைல தான் இப்டி இருந்தேன்னா… இன்னும் மாத்திக்காம என்னாடா தம்பி இது?”, என்று மகனிடம் சற்று கடுமையாகவே பேசினார்.

‘இவனென்னன்னா இன்னும் எஞ்சேல முந்திக்குப் பின்னயேல்ல தெரியறான்…! எங்குலத்தை எந்தக் குறையுமில்லாம காப்பாத்து சாமி!’ என மனதிற்குள் வேண்டுதலை வைத்தபடியே தனது இருகைகளையும் குவித்து மேல்நோக்கி வணங்கினார்.

பின்பு மகனிடம் திரும்பி, “அந்தப் புள்ளையும் கிளம்பட்டும்.  அதுவரை ஒரு ஓரமாப் போயி உக்காரு.  கல்லடைப்பால அவதிப்படறவங்கனக்கா ஒரு தினுசா முகத்தை வச்சிக்கிட்டு… ஏந்திரியறே?”, என்று மகனிடம், தனது வருத்தத்தை வார்த்தையில் காண்பித்திருந்தார், அம்பிகா.

அம்பிகா, மகனுக்கு திருமணம் முடிந்து பதினைந்து நாட்களாவது, தங்களோடு தம்பதியினரை தங்க வைத்திருக்க எண்ணியிருந்தார்.

பெரும்பாலும் கிராமத்து வீடுகளில் புதுமணத் தம்பதியருக்கான உணவு, உடை, நீராடல் போன்றவற்றில் தனிக்கவனிப்பு இருக்கும்.  அதுபோன்றே தேவா, யாழினி இருவரையும் கவனிக்கும் ஆவலில் இருந்தவருக்கு, சென்னை கிளம்புவதாக தேவா கூறியதைக் கேட்டதில் சற்றே மனம் தொய்ந்திருந்தார்.

அதனால் அவரையும் மீறி வந்த சிடுசிடுப்பை கட்டுப்படுத்த இயலாமல், மகனிடம் கடுமையாக பேச இயலாதபோதும், தன்னைமீறிப் பேசியிருந்தார்.

அதுவரை தாயோடு நடந்தபடியே வந்தவன், தாயின் பேச்சைக் கேட்டபின், அங்கு போடப்பட்டிருந்த நாடாவினால் கட்டப்பட்டிருந்த கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்.

மாமியாரின் அழைப்பைக் கேட்டு, உடனே அங்கு வந்து நின்ற மருமகளை வாஞ்சையோடு பார்த்த அம்பிகா, “அவன் வேலைக்குப் போகணும்னு கிளம்பறான். இன்னும் ஒரு வாரம்போல இங்க இருப்பான்னு நினைச்சேன்.  அதுக்குள்ள வண்டி கிளம்பிருச்சு!”, என்று சிரித்தபடியே மருமகளிடம் தன் மகன் ஊருக்குக் கிளம்பிவிட்டதையும், அதனால் தற்போது தான் யாழினியை அழைத்தமைக்கான காரணத்தையும் கூறினார்.

“இனி என்ன சொன்னாலும் தேவா கேக்கமாட்டான்.  அதான் அவனோட உன்னையவும் கிளம்பச் சொல்லக் கூப்பிட்டேன்மா”, என்று கூறியபடியே, தொலைக்காட்சியின் மீது வைத்திருந்த தனது அலைபேசியை கையில் எடுத்தார்.

மாமியாரின் பேச்சில் தலையை ஆட்டியவள், முடிவுறாப் பேச்சுடன் நடைபயின்றபடி இருந்த மாமியாரைப் பார்த்தபடியே சற்றுத் தயங்கி ஒரு ஓரமாக நின்றிருந்தாள் யாழினி.

நாடாக் கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்த கணவனை கடைக்கண் வழிப் பார்த்தவளுக்கு, ‘ரொம்ப அவசரம் போலவே, அதுக்குள்ள கிளம்பி உக்காந்திருக்காங்களே!’, என நினைத்தபடியே மாமியாரின் அடுத்தகட்ட பேச்சினை எதிர்பார்த்துக் காத்து நின்றாள்.

கையில் உள்ள அலைபேசியில் நம்பரைத் தேடியவாறே, “உனக்கு வேணுங்கற உடுப்பு, நகையெல்லாம் எடுத்து வச்சிக்கோ.  உன் சீரு பாத்திரத்தில தேவைப்படற அத்தியாவசிய பாத்திரத்தையும் எடுத்து வச்சுக்கோ!”, என்று மருமகளிடம் பணித்தார்.

அழைப்பு பொத்தானை அமுக்கிவிட்டு காதில் போனுடன் அமர்ந்த அம்பிகாவிடம், “சரியத்த”, என்றுவிட்டு, அதற்குமேல் எதையும் பேசாமல், யாழினியும் தனக்கு தேவையானதை துரிதமாக எடுத்து வைக்கத் துவங்கியிருந்தாள்.

சம்பந்தவழிக்கும் அலைபேசி வாயிலாக விடயத்தைப் பகிர்ந்து கொண்ட அம்பிகா, மருமகளின் நேர்த்தியான பணிகளை அளவிட்டவாறே, மருமகளிடம் வந்தார்.

“நாங்க எல்லாரும் உங்களோட வந்து, உங்களை அங்க குடிவச்சிட்டு வரோம், ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா மகராசியா இருக்கணும்மா. உனக்கு புத்திமதி சொல்ற அளவுக்கு… நீ இன்னும் சின்னப்புள்ள இல்ல! காலேசு எல்லாம் போயி படிச்சிருக்க வேற!.  இருந்தாலும் எனக்கு தோணுறத… இந்த அத்த சொல்றேன்.  பாத்து பதவிசா நடந்துக்கங்கத்தா…”, என்று மருமகளிடம் புத்தி கூறியவர், “நீ கிளம்பு, சாமான்களை அடுக்கி கட்டிவைக்க, சின்னவனக் கூப்டு செய்யச் சொல்றேன்.  அவன் வந்து பாத்துக்குவான்”, என்றபடி அங்கிருந்து அகன்றிருந்தார் அம்பிகா.

இருபக்க பெற்றோர்களும் உடன் வந்திருந்து, புதிய மணமக்களை சென்னையில் இருக்கும் தேவேந்திரனின் ஃபிளாட்டில் குடிவைக்க வந்திருந்தனர்.  யாழினியின் தாயாரோ, “மதினி, நீங்க இராத்தங்கிட்டு கிளம்புங்க… ரெண்டு புள்ளைங்களும் தனியா இருக்குங்க… அப்ப நாங்க கிளம்பட்டா”, என்று தேவாவின் தாயிடம் தாங்கள் கிளம்பும் நோக்கத்தோடு வந்ததை தெரிவித்தார்.

“ரெண்டு அறைதான் இந்த வீட்ல இருக்கு.  நம்ம வீடுகள் மாதிரி சிலாவத்தா இல்ல… வந்தவங்க தங்கினா சின்னஞ்சிறிசுகளுக்கு கஷ்டமா இருக்கும்.  அதனால நாங்களும் இன்னிக்கே கிளம்பிருவோம்.  இந்தப் பய முன்னாடியே சொல்லியிருந்தா ரெண்டு நாள் தங்கற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு வந்திருக்கலாம்.  இவன் சுடுதண்ணிய காலுல ஊத்தினவங்கணக்கா வந்து நின்னா… நானும் உங்களுக்கு சொல்லிட்டு வீட்டை அப்டியே போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டேன்.  வீட்டில விளக்கு பொருத்தக் கூட ஆளில்ல.  அதனால கிளம்பத்தான் ஆகணும்”, என்று தனது சம்பந்திக்கு பதிலளித்திருந்தார் அம்பிகா.

ஒருவாறு அன்றே அனைவரும் ஆளாளுக்கு ஒரு விடயத்தைச் சாக்கிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார்கள்.

யாழினி, வந்தவர்களை அங்கு தங்கி காலையில் செல்லுமாறு எவ்வளவோ எடுத்துக் கூறியும், யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

யாழினியின் கலகலவென்ற பேச்சையும், ஓய்வில்லாது அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்யும் நேர்த்தியையும் கவனித்த தேவாவிற்கு, மனதில் ஏகத்திற்கு வருத்தம் மேலிட்டிருந்தது.

என்னடா நமக்கு அப்டியே ஆப்போசிட்டா… திறந்த வாயே மூடவே மாட்டுது, இந்தப் பொண்ணு! நிமிச நேரம் உக்காராம உண்டி வில்லு கணக்கா பாய்ஞ்சுல்ல திரியுது.  இது எப்டி எங்கூட சமாளிக்கும்!’ என தனக்குள் கேள்வி எழுப்பி இருந்தான்.  பிறகு, ‘அது அவ பிரச்சனை…!’ என்று அவனாகவே ஒரு முடிவுக்கும் வந்திருந்தான்.

அதுவரை யாழினியை தான்தவிர்க்க எண்ணும் தனது எண்ணத்தையோ, இல்லை மனதிற்குள் பலவற்றை எண்ணித் தான்தவிப்பதையோ, யாரிடமும் காட்டிக் கொள்ளாமல், தனக்குள் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருந்தான், தேவா.

யாழினியின் தாயும், தனது பங்காக பல அறிவுரைகளை மகளுக்கு எடுத்துக் கூறிவிட்டே கிளம்பியிருந்தார்.

எதிலும் பட்டும்படாமல் இருந்த தேவா, அனைவரும் கிளம்பியவுடன் ‘அக்கடா!’ என நிம்மதிப் பெருமூச்சுடன் தொலைக்காட்சியின் காட்சிகளுக்கிடையே தன்னை மறந்திருந்தான்.

ஊரிலிருந்து கிளம்பும்போது கொண்டு வந்திருந்த உணவினை, இரவு உணவிற்கு பகிர்ந்து கணவனுக்கும் உண்ணக் கொடுத்துவிட்டு, தானும் உண்ண அமர்ந்திருந்தாள் யாழினி.

மனைவி கொடுத்ததை உண்டு முடித்தவன், இனி யாழினி எனும் ஒருத்தியை மட்டுமே சமாளிக்கத் தன்னை தயார் செய்ய எண்ணி, “நீ அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ”, என்று அடுக்களையை ஒட்டியிருந்த அறையைக் காட்டி, சன்னமான குரலில் சுவரைப் பார்த்தவாறே நின்று கூறிவிட்டு, அவன் வழக்கமாகத் தங்கும் அறைக்குள் அடைக்கலமாகி, தன்னைப்பற்றி யோசிக்கத் துவங்கியிருந்தான்.

ஊரிலிருந்த வரை ஒரே படுக்கையில் படுத்தபோதும், தேவா படுக்கைக்கு வருவதை எதிர்பார்த்தே உறங்கியிருப்பாள், யாழினி.

எப்போது படுக்கைக்கு வருகிறான், எப்போது எழுகிறான் என்று எதுவும் தெரியாமல், தேவாவின் நடவடிக்கை புரியாமல் இருந்தவளுக்கு, கணவனின் பேச்சு மனதில் பலதையும் சிந்திக்கச் சொன்னது.

தேவா வேலைக்குச் சென்றபின் தனியொருத்தியாகவே, எடுத்து வந்திருந்த பொருட்களை அதனதன் இடத்தில் ஒவ்வொன்றாக அடுக்குவதிலும், சமையலிலும் அடுத்து வந்த ஒரு வாரத்தை இலகுவாகக் கடந்திருந்தாள் யாழினி.

தனிமையில் அமைதியாக இருந்து இதுவரை பழகியிராத யாழினிக்கு, இருவர் மட்டுமே இருக்கும் வீட்டில், பெரும்பாலும் நத்தைபோல தன்னை தவிர்த்து அறைக்குள் அடைந்து கொள்ளும் கணவனோடு இருக்க முதலில் சிரமப்பட்டாள்.

பகல் முழுவதும் அலுவலகம் சென்று விடுபவன், வீட்டிலிருக்கும் நேரங்களிலும், தொலைக்காட்சி அல்லது அலைபேசி என்று அதனுடன் நேரம் செலவிடுவதைப் பார்த்தவளுக்கு, ‘என்னடா இது… இப்டி ஒரு டிசைன்ல நமக்கு ஒரு வாழ்க்கைத் துணையா?’, என்ற கேள்வியுடன், நகராத நாட்களை நத்தை வேகத்தில் கடத்தினாள்.

தங்களது திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர், ‘ரொம்ப பொருத்தமான ஜோடி!’, என்றும், சிலர், ‘ரொம்ப சிம்பிளா அலங்கரிச்சிருக்கறதுக்கே ஆளுங்களை சுண்டி இழுக்குறாங்கப்பா ரெண்டு பேரும்..!’, என்றும், சிலர், ‘சினிமால வரதுபோல அருமையான அழகு ஜோடி!’, என்றும் மனதார புகழ்ந்ததை தற்போது நினைவு கூர்ந்தவளுக்கு,

‘கண்ணுக்கு புதுஜோடி அம்சமா இருந்தா மட்டும் போதுமா?,

அம்சமா எங்கே நான் இருக்கேன், விதி என்னை துவம்சம் பண்ணாம விட்டா சரிதான்!’, என தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டவள்,

‘ஏதோ அழகா பரவா இல்லாம தான் நான் இருக்கேன்…! தனிக்குடித்தனத்துல… தனக்குனு வந்து எந்நேரமும் காத்திட்டே இருக்கற பொண்ணை, ஆராதிக்க தெரியாதவருக்கு, கண்ணு எதுக்கு?  ஆக்கி மட்டும் போடன்னா, அதுக்கு எதுக்கு கல்யாணம்? ஆக்கி, பொங்கி போடத்தான் இப்பல்லாம் நல்ல வேலைக்காரிங்க கிடைக்கறாங்களேனு!’, தன்னிலையை எண்ணி, தனக்குத்தானே அவ்வப்போது மனதிற்குள் சலிப்பாக நினைத்துக் கொண்டாள், யாழினி.

தனது தேவைக்காகவும், கணவனின் தேவை கருதியும் பேசாமல் இருப்பது வேலைக்காகாது என்பதை உணர்ந்து, ஒருவழிப் பயணம்போல யாழினி மட்டும் தேவாவுடன் உரையாடுவதை வந்த அடுத்த நாளே தொடர்ந்திருந்தாள்.

சென்னைக்கு இவர்கள் வந்த ஓரிரு நாட்களில், தேவேந்திரனின் தம்பி யுகேந்திரனுக்கு, சென்னையில் ஆசிரியர் பயிற்றுநர் பணி கிடைக்கப்பெற்றிருந்தது. சிலநாட்கள் அவர்கள் ஊரிலிருந்து சென்னையில் உள்ள தங்களது பணிமையத்திற்கு பணிக்கு வந்து சென்றான்.

சின்ன மகனுக்கு அரசாங்க வேலை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திருந்தனர் பெற்றோர்.  பெரிய மருமகள் வீட்டிற்கு வந்த ராசி! என அந்த ஊரில் உள்ளவர்கள் சிலர், அம்பிகாவின் காதுபடவே பேசிக்கொண்டனர்.

சிலர் பெரிய மருமகளின் ராசி, கொழுந்தனுக்கு எப்டி வரும்? அப்டி எல்லாம் வராது என்றும் அவர்களுக்குள்ளாகவே மறுத்திருந்தனர். சிலர் இலட்சுமி கடாட்சம் பொருந்திய பொண்ணுங்க… ஒரு வீட்டுக்கு மருமகளா வந்தா… அந்த வீட்டுல இருக்குற எல்லாருக்கும் விருட்சம்போல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்!, என்றும் தங்களுக்குள் விவாதித்திருந்தனர்.

இதை எல்லாம் காதில் வாங்கியும், கேட்காததுபோல இருந்தார், அம்பிகா.

நரம்பில்லா நாக்கு நான்கையும் பேசும்,  நாவைக் கொடுத்து, எதையும் கெடுத்துக் கொள்ள பிரியப்படவில்லை.

முதல் ஒரு வாரம் தினசரி கூடுவாஞ்சேரியில் இருந்து அதிகாலையில் கிளம்பி சென்னையில் உள்ள பள்ளிகளின் பணிமையத்திற்கு வந்து சென்றிருந்தான் யுகேந்திரன்.

தினசரி வந்து போக வேண்டிய அலைச்சல் மற்றும் செலவினங்களை கருத்தில் எண்ணி, பெற்றோர் முடிவின்படி பெற்றோருடன், யுகேந்திரனும், சென்னையில் தேவாவின் குடும்பத்துடன் வந்து தங்க முடிவு செய்திருந்தனர். யுகேந்திரனை பணிமுடிந்து தேவாவின் ஃபிளாட்டிற்கு வந்துவிடுமாறி கூறியவர்கள், அன்று மாலை வேளையில் பெரியவர்கள் இருவரும் ஊரிலிருந்து கிளம்பி தேவாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

“வாங்க அத்தை, வாங்க மாமா, வாங்க”, என்று முகம் மலர வரவேற்ற மருமகளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார், அம்பிகா.

“எப்டிடாம்மா இருக்கீங்க? அவங்கிட்ட இப்போதான் பேசினோம்.  நைட் வர லேட்டாகும்னு சொன்னான்”, என்று மருமகளிடம் கூறியவருக்கு

“ஆமாந்தை… அவரு வர சில நாளு லேட்டாகும்!”, என்று ஆமோதித்தவாறே வந்தவர்களை அமரச் செய்ததோடு, அதுவரை இருவேறு அறைகளில் தங்கியிருந்த தம்பதியர்களின் பொருட்கள் அனைத்தையும் தேவாவின் அறைக்கு நிமிடங்களில் மாற்றிவிட்டு, யாழினி தங்கியிருந்த அறையை பெரியவர்களுக்கு என ஒதுக்கிக் கொடுத்தாள்.

இரவில், யுகேந்திரனும் அங்கு வந்தபிறகுதான், இனி குடும்பமே சென்னையில் தங்கப்போகும் விடயத்தினை, அம்பிகா தெளிவாக மருமகளிடம் பகிர்ந்து கொண்டார்.

தனிமையில் இருந்தவளுக்கு, மாமியார், மாமனாரின் வருகை மனதிற்கு சற்றே இதமளித்திருந்தது.

பெற்றோரின் வரவிற்குப்பின்… தம்பதியர் இருவரும், ஒரே அறையை பங்கிட்டுக் கொள்ளும் நிலை வந்திருந்தது.

கணவன் தன்னை இதுவரை பார்வையால் கூட தீண்ட யோசித்திருக்க, சில வாரங்களுக்குப்பின் தேவாவுடனான இரவுத் தங்கல் யாழினிக்கும் மலையளவு தயக்கத்தைத் தந்திருந்தது.

யாழினியின் தயக்கம் புரிந்தவன், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தாமதமாக வரத் துவங்கியிருந்தான்.

வேலை நேரம் போக வீட்டிலிருக்கும்போது,  முன்பெல்லாம் தனதறைக்குள் முடங்கிக் கொள்வான், தேவா.  யாழினி உண்ண அழைத்தால் அமைதியாக வந்து உண்டுவிட்டு… தனதறைக்குள் சென்றுவிடுவான்.

பெற்றோர், தம்பி தங்களோடு வீட்டிற்கு தங்க வந்தபிறகு, வீட்டிற்கு வரும் நேரத்தை இயன்றவரை தாமதப்படுத்துவான்.  இல்லையெனில் ஹாலிலேயே தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிடுவான்.

மனைவி கொண்டு வந்து தனக்குக் கொடுப்பதை ஏன், எதற்கு என்று எந்த கேள்வியும் இல்லாமல் வாங்கிக் கொள்வான்.

பெரியவர்கள் முன் யாழினி கேட்கும் சில வினாக்களுக்கு எந்த முகச்சுழிப்பும் இன்றி சுருக்கமாக பதில் பேசி அமைதியாக அகன்றுவிடுவான்.

கலகலவென என்றும் இல்லாதவன்! ஆகையால் பெற்றோரும் தேவாவின் செயலை பெரியதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

யாழினியும், எப்போதும் மகிழ்ச்சியுடன், அனைவருடனும் இனிமையாக பேசி பழகக் கூடியவளாக வலம் வந்ததால், திருமணத்திற்கு பிறகான புதுமணத் தம்பதியரின் பரஸ்பர தாம்பத்திய வாழ்க்கையை யாரும் சந்தேகிக்கவில்லை.

திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்திருக்க, தம்பதியரிடையே  வரவேண்டிய பரஸ்பர உறவு, இருவருக்கிடையே நொண்டியடித்ததை அறியாதவர்களாகவே பெரியவர்கள் இருந்தனர்.

யாழினியும், யாரிடமும் இது பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை.  அவளின் வருத்தமோ, குழப்பமோ அதனை அவளது முகத்தில் கொண்டு வராமல் இயல்பாகப் பேசிச் சிரித்து வளைய வந்திருந்தாள்.

தேவாவின் குணத்திற்கு, மாறான குணவானாக யுகேந்திரன் இருந்தான்.  இருப்பினும் யாழினியிடம் ‘அண்ணி’ என்ற வார்த்தைக்கு மேல் அதிகமாக… எதுவும் இன்று வரை பேசமாட்டான்.

எந்த விடயமாக இருந்தாலும், தனது தாய் அம்பிகாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வான். தந்தையிடம் மரியாதை காரணமாக தள்ளி நின்றே பேசும் பழக்கம் இரு மகன்களுக்கும் இருந்தது.

—————————-

பெற்றோர் மற்றும் தம்பியின் வரவிற்குப்பின், தேவா சற்று தாமதமாகவே வீட்டிற்குத் திரும்புவதை வாடிக்கையாக்கியிருந்ததை யாழினியும் உணர்ந்திருந்தாள்.

இதை அறிந்திருந்தாலும், யாழினி யாரிடம், எப்படி என்னவென்று எடுத்துச் சொல்லலாம் என தனக்குள் பட்டிமன்றம் நடத்தியவாறே வளைய வந்தாள்.

தனக்குள் உண்டான முடிவுகளை நடைமுறைப்படுத்த தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தாள்.

அம்பிகா தனது கணவர் மற்றும் சின்ன மகனுடன் பெரும்பாலும் இருப்பதால், யாழினி தங்களது விடயம் பற்றிப் பகிர சற்றே யோசித்திருந்தாள்.

சட்டென ஒரு நிமிடத்தில் பேசிவிடும் விடயமல்லவே. சாதாரண பாட்டி சுட்ட வடைக்கதை போல தங்களது குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேச இயலாது என்பதால், அதைப்பற்றிப் பேச மிகவும் தாமதித்து இருந்தாள்.

மேலும், குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய தாமதித்த தேவாவின் செயலை தனது மாமியிடம் கூறும்போது, எத்தகைய பதில் அம்பிகாவிடமிருந்து வரும்? என்பதையும் யூகித்துக் கணிக்க இயலாத நிலையில் யாழினி தயங்கியிருந்தாள்.

ஒரு புதுமணப்பெண் தங்களது தாம்பத்தியம் பற்றிய குறைகளை, முதன்முதலில் மாமியாரிடம் கூறி அதற்கான உரிய நியாயம் பெறக்கூடிய சமுதாயத்தில் நாம் வாழவில்லை என்பதையும் யாழினி உணர்ந்தே இருந்தாள்.

கிராமத்து வாழ்மனிதர்கள் தாம்பத்தியம் பற்றிய செய்திகளை, ரகசியமாக, அவசியமான நேரங்களில், தேவையான நிலையில் மட்டும் பரிமாறிக் கொள்வர்.  ஆனால் அவரவர் வயதொத்தவர்களிடம், நெருங்கிய நட்பு மற்றும் உறவுகளிடம் பகிரும் நிலைமட்டுமே என்றும் இயல்பான ஒன்று.

தற்போதைய தலைமுறையின் தாம்பத்திய உறவில் உண்டான தலையிறக்கம் பற்றி, முந்தைய தலைமுறையிடம் முறையிட்டு, நியாயம் பெற இயலுமா? என்கிற கனத்த சந்தேகமும் யாழினிக்கு இருந்தது.

தான் பேசத்துவங்கினாலே வெளியே கிளம்பிவிடும் தேவாவுடன் தனியறையில் தங்கத் துவங்கிய பின்பு, கணவனுடன் பேச முயற்சித்தும் தோல்வியைத் தழுவியிருந்தாள், யாழினி.

தேவாவின் நழுவலான, படபடப்பு மிகுந்த செயல்களைக் கண்ணாறக் கண்டவள், அதைத் தோல்வி என எண்ணவில்லை.  தேவாவின் செயல்களின் மீதான எண்ணம் யாழினிக்குள் முற்றிலும் மாறுபட்ட சந்தேகத்தை உண்டு செய்திருந்தது.

தனது தாயிக்கே அழைத்து பேசிவிடலாம் என எண்ணி, அலைபேசியில் பேசும்போது இயல்பாக, ஒரு எட்டு சென்னை வந்து தன்னைப் பார்த்துச் செல்லுமாறு கூறி வைத்திருந்தாள், யாழினி.

யாழினியின் தாயும், புதியதாக பிரிந்திருக்கும் பெண்களுக்கு வரும் ஏக்கம் என நினைத்து, அதனை ஒதுக்கிவிட்டு, வழமைபோல தனது பணிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.

நாட்கள் அதன்போக்கில் நகர, வழமைபோல ஐந்தே முக்கால் மணிக்கு எழுபவள் அன்றும் அதே நேரத்திற்கு எழுந்திருந்தாள், யாழினி.

எதேச்சையாக படுக்கையை கவனித்தவள், என்றும்… தான் துயில் எழும்போது… உறங்கிக் கொண்டிருக்கும் கணவன்… நனவில் சிரிக்க யோசிப்பவன், உறக்கத்தில் சற்றே இளகிய வதனத்தோடு, களையுடன் கூடிய கம்பீர உருவத்தில் உறங்குவதை விழியெடுக்காமல் பார்த்து நின்றாள்!

உறக்கத்தில் அவனைப் பார்த்தவளுக்கு அவனது செயல்களுக்கும், உருவத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை உணர்ந்தவளாய், பெருமூச்சு ஒன்றினை வெளியேற்றி, சற்றுநேரம் அதைப்பற்றி யோசித்தபடியே தனது படுக்கையை எடுத்துவைத்தாள்.

நேரம்போவதை உணர்ந்து, வேகமாக அறையை விட்டு வெளியே வந்து, பணிகளில் தன்னை மறந்திருந்தாள் யாழினி.

—————

விடுமுறை எடுத்து, யாழினியுடனான திருமண வாழ்வினை ஏற்பதா, தவிர்ப்பதா? என்கிற விவாத வினாக்களை எழுப்ப நேரம் ஒதுக்கியவனுக்கு, தன்னால் மனமொன்றி யாழினியுடன் வாழ இயலாது என்பதை தெளிவாகவே உணர்ந்து கொண்டான் தேவா.

யாழினியுடன் கழித்த நேரங்கள் மிகவும் சொற்பமாக இருந்தபோதிலும், அவளின்மீது தனக்கு ஏற்படாத தாம்பத்திய உணர்வை, தடிகொண்டு அடித்து வரவைக்க இயலாத போதும், தன்னாலானமட்டும் முயன்றும் மனம் ஒத்துழைக்காததால் விட்டுவிட்டான்.

மனமுழுமைக்கும் நிரம்பிய நினைவுகள், அவனை தற்போதைய நிஜத்தோடு ஒட்ட இயலாமல் செய்ததை உணர்ந்து கொண்டவன், யாழினியிடமிருந்து விலகிவிடத் தீர்மானித்துவிட்டான்.

தனது மனமுழுமையும் ஆகர்சித்திருக்கும், இல்வாழ்க்கையை வாழ எண்ணியவனாய், அதற்காக வேண்டியவற்றை கச்சிதமாக, யாருடைய கவனமும் தன்மீது வராதவாறு, கவனமாகச் செய்யத் துவங்கினான்.

தேவா முடிவெடுத்த ஓரிரு நாட்களில், பெற்றோரும் உடன் வந்துவிடவே, தனித்து… தனது அலுவலகம் செல்லும் நேரம் போக, எஞ்சிய நேரங்களை, தனது மனம்போல வாழ எண்ணியவாறு, தான் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சரிசெய்வதில் முனைந்திருந்தான்.

யாழினி எந்தப் பிரச்சனையும் இதுவரை தங்களது திருமண வாழ்வின் குறைகள் பற்றி, யாருடைய கவனத்திற்கும் கொண்டு வராததால், இலகுவாக தான் எண்ணியதை, செயல்படுத்தியிருந்தான்.

முன்பு பணிபுரிந்த பங்களூரு கிளைக்கு மாற்றல் பெறாமல், ஹைதராபாத் கிளைக்கு தான் எண்ணியது போல மாற்றல் பெற்றிருந்தவன், மனதில் எண்ணியதை ஒரு வெள்ளைத்தாளில் அந்த நடுநிசியில் அவசரமாக எழுதி வைத்தான்.

அதிகாலை மூன்று மணியளவில் அனைவரும் ஆழ்ந்திருந்த உறக்கத்தினூடே, யாரிடமும் விடயத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், முறையாக விடைபெறாமல், தனது வாழ்வின் இலட்சியத்தை நோக்கி கிளப்பியிருந்தான், தேவா எனும் தேவேந்திரன்.

இதை எதையும் அறியாதவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தபோது, தமிழக எல்லையைத் தாண்டி, பயணம் செய்துகொண்டிருந்தான் தேவா.

———————-

எதைநோக்கிய பயணம் அவனது?

வெள்ளைத்தாளில் தேவா எழுதிச் சென்ற செய்தி என்ன?

அடுத்த அத்தியாயத்தில் காணலாம்….

error: Content is protected !!