Jeevan 13

13
சென்னை மாதவரம் பகுதியில் அர்ஜுனுக்குச் சொந்தமான குடோன்கள் சில உண்டு.

மொத்தமாக பருப்பு கொள்முதல் செய்து அவற்றை காய வைக்கப் பெரிய களங்களும், அவற்றை பதப்படுத்தி பத்திரப்படுத்த பெரிய பெரிய குடோன்களும் உண்டு.

இவர்களது பருப்பு மூட்டைகள் தவிர்த்து வேறு சில வியாபாரிகளின் பருப்பு மூட்டைகள்கூட அங்கு அடுக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு நாள் கணக்கில் வாடகை வசூலிக்கப்படும். அதாவது எத்தனை நாட்கள் பருப்பு குடோனில் இருக்கிறதோ அதற்கு தக்க வாடகை.
இது தினப்படி வருமானம். இந்தக் கணக்குகளை சரியாகப் பார்ப்பது சுபத்ராவின் வேலை. இந்த வாடகையே மாதமானால் சில லட்சங்களைத் தாண்டும். அது மட்டுமில்லாமல் மில்லில் பருப்பு அரைப்பதும் பட்டை தீட்டி பாலீஷ் போட்டுக் கொடுப்பதும் நடக்கும். அது தனி வருமானம். இதற்கும் முறையாக கணக்குகளை அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்.

அர்ஜுன் சுபத்ராவிடம் இந்த கணக்குகளை ஒப்படைத்த பிறகு மில்லுக்கும் குடோன்களுக்கும் அவ்வளவாக வருவதில்லை.

ஸ்ரீராம்தான் வாரம் ஒருமுறை வந்து போவான்.

அர்ஜுனுக்கு மற்ற கம்பெனிகளை விரிவாக்கும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைத்தது இப்போது. பட்டர் ஜாம் ஆகியவற்றின் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினான். பருப்புகளை வறுத்து தரும் யூனிட் ஸ்ரீராம் கட்டுப்பாட்டில் இயங்கும். அதையும் மேற்பார்வை பார்த்துக்கொள்வான்.

அர்ஜுனுக்கும் நிற்க நேரமில்லாமல் வேலைகள் இருப்பதால், சுபத்ராவுக்கு மில்லுக்கும் குடோன்களுக்கும் போய்வர தனி வண்டியையும் டிரைவரோடு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.

ஒவ்வொரு முறையும் அவளை அழைத்துச் சென்று அழைத்து வருவதெல்லாம் சாத்தியப்படாது என்பதாலும், அவனோடு வருவதற்கு அவள் பெரிதும் தயக்கம் காட்டியதாலும் அவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

மாலையில் குடோன் பொறுப்பை அங்கேயே தங்கியிருக்கும் மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு, அவள் கிளம்பி கணினி வகுப்பிற்கு வந்து அதை முடித்துக் கொண்டு நேராக வீட்டுக்கு வந்துவிடுவாள்.

புதிதாக கற்றுக்கொள்ளும் கணினி அவளுக்கு வெகு உபயோகமாக இருந்தது. இருவரும் ஒன்றாகப் போய் ஒன்றாக வருவதில்லை என்பதாலேயே ஸ்வேதா அதற்குபிறகு சுபத்ரா மில்லுக்குச் செல்ல பெரிதாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

மணிவாசகம்தான் தினமும் மில்லுக்கும் குடோன்களுக்கும் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் செல்வார். இதுவரை மனிதர் ஒரு லட்ச ரூபாய் வரை சுபத்ராவிடம் பணம் வாங்கியிருந்தார். அதையும் “அர்ஜுனிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். நீ எதுவும் சொல்லாதே” என்று கூறியிருந்தார்.

ஐயாயிரத்தில் ஆரம்பித்தது லட்சத்தை தொட்டு நிற்பதை கணக்கெடுத்தவளுக்கு மலைப்பாக இருந்தது. இதை எப்படி அர்ஜுனிடம் தெரிவிக்க. முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்று கோபிப்பானோ… என் மாமாவுக்கு பணம் கொடுக்க கணக்குப் பார்க்கிறாயா என்று கடிந்து கொள்வானோ… அவளுக்கு சொல்லவும் பயமாக இருந்தது. சொல்லாமலிருக்கவும் முடியவில்லை.

சரி ஸ்ரீராம் காதுகளிலாவது போட்டு வைப்போம் என்று எண்ணியிருந்தாள். சுபத்ரா மில்லுக்கு வர ஆரம்பித்ததில் இருந்து வாரம் ஒருமுறை மட்டும் வரும் ஸ்ரீராம் அங்குள்ள மில் தொழிலாளிகளுக்கும் குடோனில் பராமரிப்பு பணியில் உள்ளவர்களுக்கும் வாரச்சம்பளத்தை தந்துவிடுவான்.

மேல்நிலை பணியாளர்களுக்கும், மேனேஜர்களுக்கும் மாதச்சம்பளம் கொடுப்பது வழக்கம். அந்த மாதச் சம்பளத்தை கணக்கு பார்த்து கொடுத்து முடித்தவன் அருகே வந்தவள், மணிவாசகம் வாங்கிய பணத்துக்கான தேதிவாரியாக எழுதி வைத்திருந்த கணக்குகளை அவனிடம் கொடுத்தாள்.

“எப்போலேர்ந்து வாங்குனாரும்மா?”

“நான் மில்லுக்கு வந்த ஒரு வாரத்துல வந்து வாங்கினாருண்ணா. அதுக்கப்புறம் எந்தெந்த தேதியில வாங்கினாருன்னு இதுல இருக்கு. என்னை சொல்ல வேண்டாம்னு சொல்லி, அவரே சொல்லிக்கிறதா சொன்னாரு. வீட்டுச் செலவுன்னு கணக்குல எழுதச் சொன்னாரு.”

புருவத்தைச் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தவன், “சரிம்மா… இதை நான் அர்ஜுன்கிட்ட சொல்லிக்கிறேன். நீ எதுவும் சொல்ல வேணாம்.”
மேலும் தயங்கி நின்றவளிடம் என்ன என்று கேட்க, “அது… அதுவந்துண்ணா… நான் இந்த மில்லுக்கு வந்து ஒருமாசத்துக்கு மேல ஆகுது. எனக்கு சம்பளமே நீங்க தரலை.”
ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்தியவன் சிரிப்போடு,

“என்னம்மா சொல்ற? உனக்கு சம்பளம் போடவா? எதுக்கு… அர்ஜுன் என்னை ஓடவிட்டு உதைக்கவா? இந்த மில்லுக்கு முதலாளிம்மா நீ.”

“இல்லைண்ணா நான் முதலாளியெல்லாம் இல்லை. எனக்கு எந்த சொத்துமே வேணாம். ஒரு வருஷம் முடிஞ்சதும் அவர் கேட்கற இடத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்திட்டு நான் போயிடுவேன். நான் இங்கேயிருந்து கண்டிப்பா போகனும்ண்ணா.

கௌரவமா வாழறதுக்கு ஒரு வேலை மட்டும் வாங்கித் தாங்க போதும்.” முகம் கசங்கச் சொன்னவளை அமர வைத்தவன்,

“என்னம்மா ஆச்சு? ஏன் இவ்வளவு சீரியஸா பேசற? அர்ஜுன் உன்னை அப்படியெல்லாம் விட்டுடுவானா?”

“ஹைய்யோ… அவர் நல்லவர்ண்ணா. நான் அவர் மேல எந்த தப்பும் சொல்ல மாட்டேன். நான் இந்த ஊருக்கு வந்திருக்கவே கூடாது. என்னாலதான் அவருக்கு இவ்வளவு பிரச்சனையும்.
ஸ்வேதாவும் அவரும் எவ்வளவு விரும்பினாங்கன்னு எனக்குத் தெரியும். நான் இங்க வந்த அன்னைக்கே என்கிட்ட எல்லாமே சொல்லியிருக்காரு.

நான் இங்க வந்ததாலதான் அவங்க ரெண்டு பேரும் சேர்றதுல பிரச்சனை. மேல மேல பிரச்சனை பெருசாதான் ஆகுதே தவிர, குறையல. எங்க அவங்க ரெண்டு பேரும் பிரிய நான் காரணமா ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு.

எனக்காக அவர் ஸ்வேதாகிட்ட பேசப் போய் அவங்களுக்குள்ள பிரச்சனை வந்துடுச்சி போல. நான் இங்க இருந்தா சரிவராது. எனக்கு ஒரு வேலை மட்டும் வாங்கித் தாங்க போதும் நான் சமாளிச்சிக்குவேன்.

எனக்கு இந்த ஊர்ல வேற யாரையும் தெரியாது. அதான் உங்ககிட்ட கேக்குறேன்.” மனதில் இருந்ததை எல்லாம் படபடவென்று பேசினாள்.

சில நாட்களாக வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் அவளை பேச வைத்திருந்தது.

‘என்ன நடந்ததென்று தெரியவில்லையே. இந்தப் பெண் இவ்வளவு மருகிப் பேசுகிறாள்.

அர்ஜுனுக்கு ஸ்வேதாவுடன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள துளிகூட விருப்பமில்லை என்பது எனக்குத் தெரியும்.

ஸ்வேதாவுக்கு நல்ல தொழில் ஒன்றை அமைத்துக் கொடுக்கவும், நல்ல வரனாய் பார்த்து திருமணம் முடித்து வைக்கவுமே அவன் எண்ணியிருப்பது. அதற்கான முயற்சிகளைதான் செய்து கொண்டிருக்கிறான்.

இவள் விரும்பினால் இவளுடன் சேர்ந்து வாழும் எண்ணமும் அவனுக்கு உள்ளது. இந்தப் பெண் இங்கிருந்து போவதிலேயே குறியாய் நிற்கிறாளே.

என்ன நடந்தது என்று அர்ஜுனிடம் கேட்டால்தான் தெரியும். என்னதான் நண்பனாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் குடும்ப விஷயங்களைக் கேட்க முடிவதில்லை. ஆனால் இதை விடக்கூடாது. அவனிடம் கேட்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டவன் சுபத்ராவிடம்,

“சரிம்மா… உனக்கு வேற வேலை வாங்கிக் குடுத்தேன்னு அர்ஜுனுக்குத் தெரிஞ்சா கண்டிப்பா என் மண்டையை உடைப்பான். சரி தங்கச்சிக்காக நான் தாங்கிப்பேன்னு வச்சிக்கோ. நீ எந்த ஊருக்குப் போனாலும் அவன் வந்து நிப்பானே என்ன செய்வ? வெளிநாட்டுக்குப் போவியா?”
திகைத்து விழித்தவள்,

“வெளிநாட்டுக்கா?”

“ம்ம்… நீ வெளிநாட்டுக்கே போனாலும் அவன் அங்கவந்து நிப்பான். ஏன்னா நீ அவன் பாட்டியோட நிம்மதியை மீட்டு குடுத்திருக்க. உனக்காக அவன் எது வேணும்னாலும் செய்வான்.

உன்னை அவ்வளவு சீக்கிரம் போக விட்ற மாட்டான். நீ ஏன் இந்தப் பிரச்சினையெல்லாம் உன் தலையில ஏத்திக்கற? அதெல்லாம் அர்ஜுன் பார்த்துப்பான். புரியுதா? சரி… சம்பளம் எதுக்கு கேட்ட?”

“அது… அது வந்து… கொஞ்சம் பணம் சேர்த்து வச்சு இந்த வீட்டை விட்டுப் போகும்போது ஸ்வேதாவுக்கு குடுக்க.”
புரியாமல் அவளைப் பார்த்தவன்,

“ஸ்வேதாவுக்கு குடுக்கவா? அவளுக்கு எதுக்கு நீ பணம் தரனும்?”

“வீட்டைவிட்டு போகும்போது எதையும் கொண்டுபோகக் கூடாதுன்னு சொன்னா. எ…என்னால இ…இந்தத் தாலியை மட்டும் கழட்டித் தரமுடியாதுன்னு சொன்னேன்.

தங்கம் விக்கிற விலையில உனக்கு அதை தரமுடியாதுன்னு சொன்னா.

அதான் கொஞ்சம் பணம் சேர்த்து இந்த செயினுக்கு பதிலா அவகிட்ட குடுத்திடலாம்னு…”

புன்னகையில் முகம் விகசிக்க,

‘இந்தப் பொண்ணு என்ன சொல்றோம்னு தெரிஞ்சுதான் சொல்லுதா? தாலியைக் கொடுக்க இஷ்டமில்லைன்னா அர்ஜுனை விட்டுக்கொடுக்கவும் இஷ்டமில்லைன்னுதான அர்த்தம்.
அவன் மேல கொஞ்சமாவது பிரியம் இருக்குன்னுதான அர்த்தம். எது எப்படியோ அர்ஜுன் லைஃப் பத்தின கவலை இனி இல்லை’ மனதுக்குள் சந்தோஷமாக எண்ணிக் கொண்டவன், அவளோட போக்குலயே போவோம் என்று எண்ணிக் கொண்டு,

“உன்னோட சம்பளம் என்கிட்டயே இருக்கட்டும் உனக்கு என்னைக்கு பணம் தேவையோ அப்ப வந்து வாங்கிக்கோம்மா. வேற வேலை தேடறதெல்லாம் அப்புறமா பார்க்கலாம் சரியா?”
சரியென்று தலையசைத்தவள் அறையைவிட்டு வெளியேறினாள்.

தன்னிடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு ஸ்ரீராமிடம் அனைத்தையும் சொன்னது சிறிது ஆறுதலாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக மனதை அரிக்கும் கவலையிலிருந்து முழுதாக விடுதலை கிடைக்கவில்லை.

மனம் அர்ஜுனின் வார்த்தைகளை எண்ணி எண்ணி ஓய்ந்து போனது.

என்ன நடந்தது என்று முழுதாகத் தெரியாத போதும், தனக்கு அர்ஜுன் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னது மட்டும் வெகுவாக பாதித்திருந்தது அவளை.

அவரை விட்டு போகச் சொன்னால்கூட போய்விடுவேன். ஆனால் இன்னொருவரை எப்படி மணக்க முடியும்? அர்ஜுன் முன்னின்று திருமணத்தை நடத்துவானாம் நினைக்க நினைக்கத் தாளவில்லை. மனதின் சோர்வு உடலைத்தாக்க கண்மூடி மேஜையில் சாய்ந்து கொண்டாள்.

தேவகி சுபத்ராவை அர்ஜுனின் அறைக்கு அனுப்பியது ஸ்வேதாவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருந்தது. அவளைப் பெற்றவர்களிடம் பெரிதும் எகிறியிருந்தாள்.

“அவங்கதான் சொன்னாங்கன்னா நீங்க ரெண்டு பேரும் எப்படி சம்மதிச்சீங்க?”

“எங்க சம்மதத்தை எங்க கேட்டுச்சி இந்த சித்தி. யாரோட சம்மதமும் கேட்கல. புருஷனும் பொண்டாட்டியையும் பிரிக்கக் கூடாதுன்னு ஒரே பிடிவாதமா அந்தப் பொண்ணை மாடிக்கு அனுப்பிடுச்சி. அலங்காரம்கூட உங்கம்மாதான் பண்ணா அந்தப் பொண்ணுக்கு.”

“என்னை என்ன பண்ண சொல்றீங்க? அவங்க சொல்லும்போது மறுக்க முடியுமா? அர்ஜுன் கல்யாணத்துல ஏதோ சரியில்லைன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சி. மருமகளையும் பேரப்பிள்ளைகளையும் ஊருக்கு அனுப்பிட்டு இன்னும் ஒரு மாசம் இங்கதான் இருக்கப் போறாங்களாம். இங்கயே தங்கிட்டாங்க.

அவங்க இங்க இருக்கறவரை இரண்டு பேரும் ஒரே ரூம்லதான் இருப்பாங்க. சுபத்ராவோட எல்லா பொருளையும் மாடி ரூமுக்கு மாத்திட்டாங்க.”
தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவளை, அருகே வந்து அணைத்துக் கொண்டவர்,

“நான் அன்னைக்கே சொல்லிட்டேன் ஸ்வேதா. இது சரிவராதுன்னு. உனக்கு என்ன குறைச்சல்? நீ எதுக்குடா இரண்டாம்தாரமா வாழ்க்கைப்படனும்? அர்ஜுனும் முன்ன மாதிரி இல்லை ரொம்பவே ஒதுங்கிதான் போறான்.
அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு இல்லைன்னாலும் இன்னும் கொஞ்ச நாள்ல வாழ ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கப்புறமும் அர்ஜுன்தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கப் போறியா?”

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “அவகிட்ட போய் நான் மாமாவ தோத்துட்டேனாம்மா? மாமா அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்தேன்ல எனக்கு இது தேவைதான். மாமா இனி எனக்கு இல்லையாம்மா” என்று அழுதவளை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி போனது இருவருக்கும்.

கடைசி முயற்சியாக மாமனிடம் பேசுவோம் என்று அவனை வெளியே சந்தித்துப் பேசியிருந்தாள், அவன் தன்னிலையை தெளிவாக உரைக்க ஆடிப் போயிருந்தாள்.

“இனி நமக்கு கல்யாணம் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை ஸ்வேதா. இது இப்ப எடுத்த முடிவில்லை. என்னைக்கு பாட்டி முன்னாடி சத்தியம் செய்தேனோ, அதை என் கடைசி மூச்சுவரை காப்பாத்துவேன்னு எனக்குத் தெரியும்.

எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் ஸ்வேதா. சின்ன வயசில இருந்து என்னோடவே வளர்ந்த பொண்ணு.

உன்னுடைய சின்ன சின்ன குறைகள் பெருசா என்னை பாதிச்சதில்லை. அதையெல்லாம் கடந்து உன்னோட அருமையான வாழ்க்கை வாழமுடியும்னு நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஆனா… எப்ப நீ சொத்துக்காக என்னைப் பணயம் வச்சாகூட தப்பில்லைங்கற மென்டாலிட்டில இருந்தியோ, அப்பவே எனக்குப் புரிஞ்சு போச்சு உனக்கும் எனக்கும் செட்டாகாதுன்னு. என்னை எந்த சூழ்நிலையிலும் நீ விட்டுக்குடுத்திருக்கக் கூடாதுன்னு மனசு வெறுத்துப் போச்சு.

உண்மையில இந்தப் பிரச்சனையில ரொம்ப பாதிக்கப்பட்ட பொண்ணு சுபத்ராதான். சம்பந்தமே இல்லாம நம்ம பிரச்சனையில நடுவுல அவளை நிறுத்தி, அவ சம்மதம்கூட கேட்காம அவளைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். பாட்டிக்காக பண்ணாலும் கல்யாணம் கல்யாணம்தான். என் மனைவி என்னைக்கும் சுபத்ராதான்.

அவளுக்கு என்மேல விருப்பமிருந்தா அவளோட சேர்ந்து வாழ்வேன். இல்லைன்னா அவ மனசுக்குப் பிடிச்சமாதிரி நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுப்பேன். அதுக்கான அவகாசம்தான் இந்த ஒரு வருஷம்னு நான் சொன்னது. நாம சேர்றதுக்காக இல்லை.”

“…”

“உன்னோட படிப்புக்கு ஏத்த மாதிரி நீ பொட்டீக் வைக்க உன் பேர் அண்ணாநகர்ல கடை ஒன்னு வாங்க பார்த்து பேசி வச்சிருக்கேன். நீ வந்து பார்த்து ஓகே சொல்லிட்டா இடத்தை முடிச்சிடலாம். உனக்காக நான் இன்னும் என்ன வேணும்னாலும் செய்வேன் ஸ்வேதா.

நீ எங்க வீட்டு பொண்ணு. என்கூடவே வளர்ந்தவ. உன்னோட வாழ்க்கையும் எதிர்காலமும் எனக்கு முக்கியம். கொஞ்சநாள் போகட்டும் உன்னோட மனசும் மாறும். அப்ப உனக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம் பண்ண வேண்டியது என் பொறுப்பு.”

“என்னைவிட அவ எந்தவிதத்துல உசத்தியா போயிட்டா? அவளுக்கு விருப்பமிருந்தா அவகூட வாழ்வேன்னு சொல்றீங்க. உங்களுக்கு பொருத்தமா மாமா அவ. எங்கப்பா பேச்சைக் கேட்டு நான் செய்த தப்பால உங்களை இழந்துட்டேனே. நாம சேரவே முடியாதா?”

“பொருத்தம்ங்கறது என்ன ஸ்வேதா? உடல் பொருத்தமா? வசதி வாய்ப்பா? கிடையாது… மனசு பொருந்தனும். அவளும் நம்மகூட வளர்ந்திருந்தா இப்படியா வளர்ந்திருப்பா? இன்னைக்கு என்கிட்ட இருக்கற சொத்துல சரிபாதிக்கு சொந்தக்காரி.
ஆனா இது எதுவுமே வேண்டாம்னு எனக்காக அவ வாழ்க்கையைவே பணயம் வச்சிருக்கா. அப்பவே அவ உசந்துட்டா. அவ மனசுதான் எனக்கு முக்கியம். உடல் பொருத்தத்தைப்பத்தி எனக்கு கவலையில்லை.

நீ செய்தது தப்போ சரியோ… இது கடவுள் போட்ட முடிச்சாதான் நான் நினைக்கிறேன். அதனாலதான் எங்கயோ வளர்ந்த அவளை இத்தனை வருஷம் கழிச்சு என் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கு விதி. இதை எக்காரணம் கொண்டும் நான் மாத்தறதா இல்லை.”

இனி அர்ஜுனிடம் பேசுவது வீண் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்வேதா,

தனது மனக்கசடுகள் அனைத்தையும் கொண்டுவந்து சுபத்ராவிடம் கொட்டியிருந்தாள்.

“ஏய் புள்ளபூச்சி மாதிரி இருந்துகிட்டு என் மாமாவ என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்லை. நீ எப்படி வாழறன்னு நான் பார்த்துக்கறேன்.

நானும் மாமாவும் எவ்வளவு விரும்புனோம்னு தெரியுமா உனக்கு.
வந்த ஒரு மாசத்துல எங்களுக்கு நடுவுல பிளவை ஏற்படுத்திட்ட இல்ல. பெரிய கைகாரிடி நீ. சீச்சீ… இதெல்லாம் ஒரு பொழைப்பு.”

மேலும் காதுகொடுத்து கேட்க முடியாத அளவில் சுபத்ராவைத் திட்டியிருந்தாள்.

ஏற்கனவே காலையில் நடந்த ஒரு சம்பவத்தில் அரண்டு போயிருந்த சுபத்ரா, ஸ்வேதாவின் பேச்சில் மேலும் அரண்டு போனாள். தான் இங்கிருந்தால் இருவரையும் பிரித்துவிடுவோம் என்று உறுதியாக நம்பியவள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அர்ஜுனை விட்டுப் போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

அன்று காலையில் வழக்கம் போல தேவகியின் அரட்டலுக்கு பயந்து அர்ஜுனுக்கு பெட் காபி எடுத்துச் சென்றாள். இரவு வெகுநேரம் லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு நேரம் கழித்து உறங்கியிருந்ததால் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவனை எப்படி எழுப்ப என்று தடுமாறியவள், அவனைப் பெயரிட்டு அழைத்துப் பார்த்தாள்.

“அர்ஜுன் எழுந்துக்கோங்க…” அசைவில்லாமல் நன்கு உறங்கியவனை வேறு வழியில்லாமல் தோளைத் தட்டி எழுப்பினாள். இரண்டு உலுக்கலில் லேசாகப் புரண்டு படுத்தவன் அவளையும் இழுத்து தன்னுள் அடக்கிக் கொள்ள அதிர்ந்து போனாள்.

கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியபடி கழுத்து வளைவில் முகம் புதைந்தவனை விலக்க முடியாமல் விதிர்விதிர்த்துப் போயிருந்தாள்.

அவனிடமிருந்து விலக செய்த முயற்சிகள் தோல்வியைத் தழுவ,

மேலும் மேலும் தன்னுள் புதைந்தவனின் மீசையின் உராய்வில் உடல் சிலிர்க்க… பயத்தில் அழுகையே வந்துவிட்டது அவளுக்கு.

“அர்ஜுன் ப்ளீஸ் விடுங்க என்னை…”
அவளது குரலோ, அவனிடமிருந்து விடுபட முயன்ற திமிறல்களோ ஏதோ ஒன்று அவனை மேலும் மேலும் அவளுள் புதையச் செய்தது. அணைப்பும் இறுகியது.

“அர்ஜுன்… அஜ்ஜூ செல்லம். எழுந்துக்கோங்க…” “அஜ்ஜூ இங்க பாருங்க…” தன்னைக் கொஞ்சும் குரல் எங்கோ அடியாழத்தில் ஒலிக்க மஞ்சள் மணக்கும் கழுத்தில் சுகமாக முகத்தைப் புரட்டிப் புதைந்தவனுக்கு,

தன் பலத்தைக்கூட்டித் தள்ளிய சுபத்ராவின் திமிறலில் லேசாக சுயநினைவு வந்தது.

இமைகளைத் திறந்து பார்த்தவன் கண்டது கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு கண்களில் நீர் வழிய தன் அணைப்பில் படுத்திருந்த சுபத்ராவைத்தான். தீச்சுட்டது போல சட்டென்று விலகியவன் தன்னையே நொந்து கொண்டான்.

‘டேய்… என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? அவ சும்மாவே ஒதுங்கிப் போவா… இனி சுத்தம்’

“சுபா… ஸாரிம்மா… தெரியாம… ஏதோ கனவு… பழைய நினைப்பு… வேணும்னு பண்ணல…” என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறியவனைப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அழுகையோடு அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

காலையில் நடந்த இந்த சம்பவத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தளிடம் வந்து ஸ்வேதாவும் எகிறிவிட்டு சென்றிருக்க வெகுவாக சோர்ந்து போனாள்.

இரவு உணவின்போது அர்ஜுனுக்கு சுபத்ரா பரிமாறிக்கொண்டிருக்க, பார்வையாலேயே மன்னிப்பு வேண்டியவனிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் அவனது பார்வையைத் தவிர்த்தவள், அமைதியாக நடமாடிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கே வந்த மணிவாசகம் அவனெதிரே அமர, அவருக்கும் தட்டு வைத்து பரிமாறினாள்.

“மாப்ள… ஸ்வேதாகிட்ட பேசுனியாம் சொல்லுச்சி.”

“ஆமாம் மாமா.”

“அப்ப நான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கவா?”

“பாருங்க மாமா. நம்ம வீட்டுப் பொண்ணுக்கு பார்க்கறோம் எந்தக் குறையும் பையனுக்கு இருக்கக் கூடாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் முன்ன நின்னு முடிச்சு வைக்கிறேன்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்கறது எல்லாருக்குமே நல்லது மாமா. இல்லையின்னா தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.”

“சரி மாப்ள… நான் பார்த்துட்டு சொல்றேன். நீ முடிவு பண்ணு.”
இவர்கள் பேசியதை அறைகுறையாக காதில் வாங்கியவள் அர்ஜுன் தனக்குதான் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னான் என்று எண்ணிக் கொண்டு மறுகிப் போனாள்.

சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து தன்னை அனுப்பி வைக்க நினைக்கிறான். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்று காலையில் நடந்ததைச் சொல்கிறான் என்று அவளாக எண்ணிக் கொண்டாள்.

பத்து நாளாக மிகுந்த மனவுளைச்சலில் இருந்தவள், மில்லுக்கு வந்த ஸ்ரீராமிடம், தான் எடுத்திருந்த முடிவுகளை ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாள்.

அவனது பதில் லேசாக சமாதானப்படுத்தியது அவளை.

அதுபோல அர்ஜுன் தன்னிடம் பேசிய அனைத்தையும் மணிவாசகத்திடம் கூறியிருந்தாள் ஸ்வேதா. தனக்கு கிடைக்காத இந்த வாழ்க்கை அவளுக்கும் கிடைக்கக்கூடாது ஏதாவது செய்யுங்கள் என்று வெகுவாக பொங்க… அவளை அடக்கியிருந்தனர் மணிவாசகமும் லோகேஸ்வரியும்.

“ஒரு காலத்துல அந்த மாதவன் போன காரை அடிக்க லாரி ஏற்பாடு பண்ணவனே நான்தான். அதுல எங்க அக்காவும் மாமாவும் அந்த மாதவனும் செத்துப்போனாங்க. அப்பவே போலீஸ் சந்தேகம் என்மேல திரும்புச்சி.

எப்படியெப்படியோ கஷ்டப்பட்டு தப்பிச்சேன். இனி இந்த வயசுக்கு மேல எதையும் செஞ்சு போலீசுகிட்ட மாட்டவெல்லாம் அப்பாவால முடியாதும்மா.

அப்பவே அந்த கோமதியையும் அவ புள்ளையையும் கொன்னுருக்கனும், போலீசுக்கு பயந்துதான் அவகிட்ட சொத்தை மட்டும் எழுதி வாங்கிட்டு விரட்டி விட்டேன்.

அது மறுபடியும் வளர்ந்து வந்து என் பொண்ணு வாழ்க்கையில விளையாடுது. அர்ஜுனுக்கு தொழில்ல ஏதாவது குடைச்சல் குடுக்க முடியுமான்னு பார்க்கறேன்.”

“நம்ம பொண்ணும் வாழனும் தேவையில்லாம எந்த சிக்கல்லயும் மாட்டிக்காதீங்க. அர்ஜுன்தான் எல்லாம் செய்யறேங்கறானே.

அவன்கிட்ட எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கறதுதான் புத்திசாலித்தனம். அதைவிட்டுட்டு அவனை பகைச்சிக்கிட்டா நமக்குதான் நஷ்டம்.”

“அம்மா சொல்றதும் சரிதான் ஸ்வேதா. இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நாம ஒன்னு நினைச்சா நடந்தது ஒன்னா இருக்கு.

இதுக்கு மேல அர்ஜுனை நம்பறது வேஸ்ட். அப்பா உனக்கு நல்ல கோடீஸ்வர மாப்பிள்ளையா பார்க்கறேன். அவன் செலவு செஞ்சு கட்டிக்குடுப்பான்.”

வெகுநேரம் இருவரும் விடாமல் பேசியதில், வேறு வழியின்றி அவர்களது முடிவுக்கு ஒத்துக்கொண்டாள் ஸ்வேதா.

தொடரும்…