KarisalKaattuPenne5

KarisalKaattuPenne5

கரிசல் காட்டுப் பெண்ணே 5

 

ஸ்ரீராமின் நாட்கள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தன. அங்கே சுற்றுப்புற ஊர்களிலிலிருந்தே சங்கரன் உதவியுடன் கட்டுமான திறமையுள்ள மேஸ்திரிகளையும் மரவேலை செய்யும் தச்சர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அதோடு கொத்தனார்கள், ஆண், பெண் சித்தாள்கள், கையாட்கள், கூலி ஆட்களையும் பேசிக் கொண்டான்.

தான் கட்டவிருக்கும் புது வீட்டின் வரைப்படத்தை அவன் முன்பே வடிவமைத்து பெற்றவர்களுக்கும் காட்டிய பிறகே இங்கு வந்திருந்தான். கிராமத்து சூழலுக்கு ஏற்ப அதில் சிற்சில இடங்களில் மாற்றம் செய்து, தன் மெஸ்திரிகளுக்கு புது வீட்டை கட்டும் முறைப்பற்றி விளக்கத்தையும் கொடுத்திருந்தான்.

“வீட்டு பிளான் ஜோரா இருக்கு இன்ஜினியரே, நாம கட்டி முடிச்சதுக்கு அப்புறம் ஊரே அதிசயச்சு பார்க்கும் பாருங்க” மாரி மேஸ்திரி சொல்ல,

“இந்த ஒருவாரத்தில பெரிய வீட்டை இடிக்கப்போறதை பத்தி தான் பா ஊருக்குள்ள பேச்சு” என்றார் ரஜினி மேஸ்திரி.

அவர்கள் சொன்னதற்கு தலையாட்டிக் கொண்டார் மூர்த்தி மேஸ்திரி. ரஜினி, மூர்த்தி நடுத்தர வயதை கடந்தவர்களாக இருக்க, மாரி ஏறத்தாழ ஸ்ரீராமின் வயதோடு ஒத்திருந்தான்.

கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களை வாங்கவும், தரமான பொருட்களை தேர்ந்தெடுக்கவும் ஸ்ரீராம் மாரியை உடன் அழைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

ஜல்லி, சிமெண்ட், செங்கல், கம்பிகள் எல்லாம் சொல்லி முடித்திருக்க, மணல் மட்டுமே சற்று இழுபறியாக இருந்தது. அந்த ஊர்வழி பாலாறு இருந்தும் அதில் பாதிக்குமேல் மணல் சுரண்டப்பட்டு இருந்தது.

அங்கே பஞ்சாயத்து பணியாளர்களிடம் விசாரிக்க, “பணங்கொடுத்து மணல் எறக்கிட்டு போங்க தம்பி, சும்மா சட்டதிட்டம் பேசிக்கிட்டு, இதையெல்லாம் தோண்டி துருவனீங்கனா, உங்க வீட்டு வேலை தான் தாமதப்படும்” என்றனர்.

எந்த காரணத்திற்காகவும் தன் வீட்டு வேலை தாமதப்படுவதில் ஸ்ரீராமிற்கு உடன்பாடு இல்லை. எனவே இவனும் ஒரு பெருமூச்சோடு அவர்கள் சொன்னபடியே தலையாட்டிக் கொண்டான்.

ஆயிரத்திற்கு ஒரு மாட்டுவண்டி மணல் என்று தான் அங்கே விற்கப்பட்டது. அதுவும் மணல் இரவு நேரங்களில் மட்டுமே தருவிக்கப்படும் என்றனர்.

ஸ்ரீராம் இதைப்பற்றி கேட்க, அன்றைய மாலை வையாபுரி தேநீர் கடையில், மணல் பற்றிய விவாதம் காரசாரமாக தொடங்கியது.

“அவங்கெல்லாம் கீழ்மட்டத்துல இருந்து மேல்மட்டம் வரைக்கும் மணலை சுரண்டி பணம் பார்க்கறவங்க தம்பீ” ஒருவர் ஆரம்பிக்க,

“மாட்டு வண்டிய மடக்கி பிடிக்கற நம்மூரு போலீஸ் மணல் லாரிய எல்லாம் கண்டுக்கிறதே இல்லை பா” என்று அங்கலாய்த்தார் ஒரு விவசாயி.

“கேரளா, கர்நாடகா, ஆந்திராவில எல்லாம் மணல் அள்ள முழுசா தடை போட்டுருக்காங்க, நாம தான் இப்படி!” நடுத்தர வயதுடையவர் குமைந்து கொண்டார்.

“அரசாங்கம் தான் வளங்களை பாதுகாக்கணும், மாறா, நம்ம நாட்டு இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிங்களுக்கு வித்து காசு பாக்குது” என்று இளைஞன் ஒருவன் புரட்சி பேச,

“மூணு அடி தான் மணல் அள்ளணும்ற சட்டத்தை எவன் மதிக்கிறான். வெள்ளாத்துல முப்பது அடிக்குமேல எடுத்து கட்டாந்தரையா கிடக்கு” என்று மற்றொருவர் வேதனையாகச் சொன்னார்.

“ஆத்து மணலை சுரண்டி நிலத்தடி நீரை அழிச்சுபுட்டு, இப்ப மழைநீரை சேகரிக்க நமக்கு அறிவுரை சொல்றாங்க ப்பா” என்று பேச்சு வளர,

“ஆத்து மணல், தண்ணீ, இயற்கை வளமெல்லாம் யாராலும் உருவாக்க முடியாது. அது இயற்கையோட கொடை. ஆடு, மாடு, மரம், செடி, கொடி, மனுசங்க எல்லாத்துக்கும் பொது, யார் இதையெல்லாம் யோசிக்கிறாங்க. இங்க எல்லாரும் சுயநலமா தான் நடந்துகிறாங்க” வெள்ளை மீசை பெரியவர் அழுத்தமான குரலில் சொன்னார்.

ஆம், இயற்கை அனைத்து வளங்களையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவில் தான் வைத்திருக்கிறது. இதில் மனிதன் மட்டுமே வளங்களை பயன்படுத்துகிறேன் என்ற பெயரில் அதனை சுரண்டி எடுத்து வெறும் சுயநல பிராணியாக இயற்கையை ஒட்டு மொத்தமாக நாசம் செய்து கொண்டிருக்கிறான் என்று ஸ்ரீராமின் எண்ணங்கள் ஓட, தலையைக் குலுக்கி கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான்.

இரண்டு வாரங்கள் கடந்திருக்க, நாளை வீடு இடிப்பதென முடிவாகி இருந்தது.

இரவு சரியான உறக்கமின்றி புரண்டிருந்தவன், விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் விழித்து, குளியலை முடித்து, பெரிய வீட்டிற்கு வந்து விட்டான்.

இறுதியாக பெரிய வீட்டை ஒருமுறை பார்ப்பதற்காக வர இருந்த பரமேஸ்வரால் இங்கே வர இயலாத தொழில் சூழல் அமைந்துவிட, தனியே வர கௌதமியும் மறுத்துவிட்டார்.

பெரிய வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தன் அலைப்பேசியில் நிழற்படங்களாக சேகரித்துக் கொண்டிருந்தவனை பழைய நினைவுகள் மோதி திணறடித்துக் கொண்டிருந்தன.

தன் பிள்ளை பருவத்தை மொத்தமாக தேக்கி வைத்திருக்கும் வீட்டை, தானே அழித்துவிட போகிறேன் என்ற குற்றவுணர்வும் இருக்கத்தான் செய்தது.
ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும்!

அந்த வேளையில், ஒரு பெரும் செயலை தன்னந்தனியாக தொடங்கும்போது ஏற்படும் படபடப்பு, இனங்காண இயலாத பயவுணர்வு, அதீதமான எதிர்பார்ப்பு, பிரமிப்பு, மன அழுத்தம் என கலவையான உணர்வுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

# # #

பனிக்காலை பொழுதில், கையில் மூங்கில் பூக்கூடையோடு தன் வீட்டின் பின்கட்டில் இருந்த ஒற்றையடி பாதைவழி நடந்து, பெரிய வீட்டின் தோட்டத்தின் பின்கட்டு தடுப்பு தட்டை திறந்து உள்ளே வந்தாள் சீதாமஹாலட்சுமி.

அப்போது தான் குளித்து முடித்து ஈர கூந்தலைத் துவட்டி நுனியில் சின்ன முடிச்சுட்டு, மஞ்சள் பூசிய முகம் மிளிர, இன்றைய வெள்ளிக்கிழமை பூஜைக்கான பூக்களை பறித்து பூக்கூடையில் சேகரிக்க தொடங்கினாள்.

முன்பெல்லாம் மாலைவேளை முழுவதையும் இந்த தோட்டத்தின் பராமரிப்பில் தான் கழிப்பாள். ஸ்ரீராம் வந்த பிறகு காலையில் தேவையான பூக்களை பறித்து கொள்வதோடு சரி, தண்ணீர் இறைப்பது கூட சக்திவேல் வேலையாக மாறி இருந்தது. சில நாட்கள் அவனுடன் சேர்ந்து ஸ்ரீராமும் தண்ணீர் இறைப்பான்.

வானுக்கு சுண்ணம் பூசியது போல விடிந்தும் விடியாத காலைப் பனிப்பொழுதில் தோட்டத்தின் இயற்கை அழகில் அவளின் மனம் நெகிழ்ந்திருக்க, வாய் தானாக பாட தொடங்கியது.

“மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே…”

காற்றுக்கும் வலிக்காமல் தனக்கு பிடித்த இனிய பாடலை பாடியபடி, சீதா பூக்களை பறித்துக் கொண்டிருக்க,

“இன்னொரு முறை பாடுறியா சீதா, ப்ளீஸ்” என்ற குரல் கேட்டு சட்டென திரும்பினாள்.

பெரிய வீட்டின் பின்புற கதவில் சாய்ந்தபடி தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தான் ஸ்ரீராம்.

இந்த இரண்டு வார அலைச்சலின் தாக்கம் அவன் சோர்ந்த முகத்திலும் தளர்ந்த உடலிலும் நன்றாகவே தெரிந்தது.

“உங்களுக்கு உடம்பு ஏதும் முடியலையா? என்னாச்சு” சீதா அவன் முகம் நோக்கி விசாரிக்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, கொஞ்சம் டென்ஷனா இருக்கு, அதான்” என்று பின் வாசல் கீழ் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான். இந்த தவிப்பான மனநிலையில் ஏதேனும் ஆதரவை வேண்டியது அவன் மனம்.

“இதோ வந்திடுறேன்” என்று சீதா திரும்ப, “ப்ளீஸ் சீதா, இப்ப பாடின பாட்டை மறுபடி பாடேன், அந்த நாலுவரி மனசுல ஆத்மார்த்தமா பதியுது” என்று மறுபடி வேண்டினான். அவளின் குரலில் சற்றுமுன் அமைதியடைந்த அவன் மனம், மீண்டும் அதே ஆறுதலை நாடியது.

“கண்டிப்பா வந்து பாடுறேன்” என்று ஓடியவள், சில நிமிடங்களில் மரகதத்துடன் அங்கே வந்தாள். ஸ்ரீராம் முகம் பார்த்து பதறிய மரகதம், “என்னாச்சு ஸ்ரீராமா, வாடி தோஞ்சு கிடக்குற” என்றவர் தான் கொண்டு வந்திருந்த ஏலக்காய் தேநீரை அவனிடம் தர, அதை மறுப்பின்றி வாங்கி பருகினான்.

“அம்மா, சின்னாவுக்கு அத்த, மாமா ஞாபகம் வந்திருக்கும் போல, அதான் உடைஞ்சு போய் இருக்காங்க” சீதா தன் அறிவுக்கு எட்டிய வரையில் அவன் மனநிலையைக் கணித்துச் சொல்ல,

“அண்ணாக்கும் அண்ணிக்கும் விவஸ்தை கெட்டு போச்சா, பச்ச புள்ளய இப்படி தனியா தவிக்க விடுறாங்களே, ஒருநாள் வந்து போலாமில்ல” என்று அவனுக்காக ஆதங்கப்பட்டவர், அவன் தலைக்கோதி, “நீ கவலைப்படாதே டா, நான் அவங்களை என்னானு கேட்டு வைக்கிறேன்” என்க. ஸ்ரீராம் சின்னதாய் சிரித்து காலி டம்ளரை அவரிடம் தந்தான்.

“மைண்ட் கொஞ்சம் டென்ஷனா இருக்குத்த, முன்ன இப்படி இருந்தா அம்மா மடிமேல கொஞ்சம் படுத்துப்பேன், ஆனா இப்ப!” அவன் தோய்வாய் சொல்ல,

“நீ சின்ன புள்ளையில அண்ணி மடில வளர்ந்ததைவிட எம்மடில வளர்ந்ததுதான் டா அதிகம்” என்று அவன் பக்கம் மேற்படியில் அமர்ந்து கொண்டவர், அவனை தாயாய் தன் மடிசாய்த்துக் கொண்டார் மரகதம்.

அவர் தூக்கி வளர்த்த முதல் குழந்தையும் ஸ்ரீராம் தானே, இங்கு இருக்கும் வரை இவர்கள் வீட்டில் தான் நாள் முழுவதும் விளையாடிக் கொண்டிருப்பான். சீதா பிறந்தவுடன் ‘இந்த பாப்பா நன்னா இல்ல, வாணா… அத்த, நானு’ என்று மழலை மாறாத மொழியில் பொறாமையில் சிணுங்கும் சிறுவன் மரகதம் நினைவில் இப்போதும் பசுமையாகவே பதிந்திருந்தான்.

ஸ்ரீராம் நெகிழ்ந்து தான் போனான்.
அன்னை மடியின் இதத்தை அத்தை மடியில் உணர்ந்து கண்மூடி கொண்டவன், சற்று நேர அமைதிக்கு பின், “என்னை ‘சின்னா’னு சொல்ல தெரியுது உங்க பொண்ணுக்கு… நான் நாலுவரி பாட சொன்னா பாடல” என்று தாயிடம் மகளை போட்டும் கொடுத்தான்.

சின்ன வயதிலும் மரகதம் மடியில் இப்படி தான் படுத்துக் கொண்டு சீதாவை அழகு காட்டி வம்பிழுத்துக் கொண்டிருப்பான். விட்ட பழக்கம் இப்போது தானாய் வந்து ஒட்டிக் கொண்டது போலும் அவனுக்கு.

சீதா கண்கள் சுருக்கி அவனை பார்க்க, “என்ன பாட்டு சீதா” பாட மறுப்பவள் தன் மகள் இல்லையே என்று மரகதம் கேட்க,

“குட்டி பாட்டு தான் அத்த, அவ்ளோ ஸ்வீட்டா கேட்டுட்டே இருக்கணும் போல இருந்தது, தெம்மாங்கு பாட்டு போல” இனிமையான பாடலை தெம்மாங்கு பாட்டு வகையில் சேர்த்து ஸ்ரீராம் சொல்ல,

“அது தெம்மாங்கு இல்ல, ஏற்றப்பாட்டு… ‘ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டில்லை’ன்னு நாட்டார் வாக்கு இருக்கு” சீதா அவனை சிடுசிடுப்போடு திருத்தினாள்.

“புள்ள வாய்விட்டு கேக்குது இல்ல, ஒத்த பாட்டு பாடேன் சீதாம்மா” மரகதம் ஆணையிட, முகம் கோணி இருவரையும் பார்த்து விட்டு அவள் பாட்டைத் தொடங்கினாள்.

அவன் அத்தை மடியில் மெத்தென்று தலைவைத்தபடி பாடலை ரசிக்க தயாராய் இருந்தான்.

“ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா நியழுறாய்
அரியகண்ணால் நீர் வழிய
அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்!
தொட்டாரைச் சொல்லியழு
தோல்விலங்கு போட்டு வைப்போம்!
வெண்ணையால் விலங்கு பண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம்!
மண்ணால் விலங்கு பண்ணித்
தண்ணீரில் போட்டு வைப்போம்!”

பாட்டின் ஏற்ற இறக்கங்களுடன் அவள் குரலும் ஜாலம் செய்ய,

“அத்தை… நான் அழுமூஞ்சின்னு கிண்டலா பாடுறா பாருங்க” என்று ஸ்ரீராம் எழுந்து கொண்டு அவளை முறைத்தான். ‘அமைதியான பொண்ணா இருப்பான்னு நினைச்சா என்னை கேலி பண்ற அளவுக்கு ராங்கிகாரியா இருப்பா போல’ என்று தனக்குள் கடுகடுத்தான்.

“உங்க டென்ஷன் குறைய கொஞ்ச நேரம் தூங்கி எழவீங்கனு தாலாட்டு பாடினேன்” என்றவள் கைகள் பூக்களை பறித்தபடி இருக்க, அவளின் பதிலும் பாட்டு போல சற்று இழுவையாக தான் வந்தது.

“விடியகாலையில யாராவது தாலாட்டு பாடுவாங்களா? வேணும்னு தான பாட்டை மாத்தி பாடின” அவன் எரிச்சலாக கேட்டான். ‘ஒருபாட்டை பாட கேட்டது ஒரு குத்தமா, ரொம்ப தான் திமிரெடுத்தவளா இருப்பா போல’ என்று சலித்துக் கொண்டான்.

“விடுப்பா, அவளை நான் பாட சொல்றேன்” என்று மரகதம் மகளை பார்க்க, அந்த பார்வையே போதுமானதாக இருந்தது சீதாவிற்கு. அவன் கேட்ட பாடலை மீண்டும் பாட.

“மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே…!”

அங்கே இனிமையாய் இதமாய் பரவியது அவள் பாடல்!

தான் கேட்டு அவள் பாடவில்லை என்று எண்ணிக் கொண்டாலும், அந்த அற்புதமான வரிகளின் ஆத்மார்த்தமான பொருளிலும் அவளின் மென்மையான குரலின் இதத்திலும் அன்றைய விடியல் அழகாகவே விடிந்தது ஸ்ரீராமிற்கு.

# # #

வருவாள்…

error: Content is protected !!