kurumbuPaavaiyile-24

குறும்பு பார்வையிலே – 24

நேரம் செல்ல செல்ல குழந்தையின் முகம் வாட ஆரம்பித்தது. கிருஷ், வாய் விட்டுக் கேட்கவில்லை.

‘அம்மாவை போல் அழுத்தம்.’ என்று எண்ணிக் கொண்டு ஆகாஷ் ஸ்ருதியின் வீட்டை நோக்கிக் கிளம்பினான்.

‘என்ன பிரச்சனை ஆகுமோ?’ என்று பார்வதியிடம் ஒரு தவிப்பு. ஈஸ்வரன் தன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ருதியின் முகத்திலும் ஒரு தேடல் இருக்கத்தான் செய்தது. ஆனால், அதைத் தாண்டி ஆகாஷ் மீதுள்ள நம்பிக்கையை அவள் நிதானம் வெளிப்படுத்தியது.

கார்த்திக் வீட்டின் வாசலில் நடை பயின்று கொண்டிருந்தான். ‘ஸ்ருதி கிளம்ப மாட்டேன்னு சாதிக்கிறாளே! ஆகாஷ் வந்திருவாரா?’ அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

ஆகாஷ், ஒரு  கேப் எடுத்துக் கொண்டு ஸ்ருதியின் வீட்டிற்கு வந்தான்.  ஆகாஷ் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, நடந்தான். அந்த வீட்டிற்குள் நுழைய கிருஷ் தான் துருப்பு சீட்டு என்பது போல் இருந்தது அவன் செய்கை.

ஆகாஷின் மனதில் பல சங்கடங்கள். ‘நான் ஸ்ருதியின் பெற்றோரை எந்த முகத்தை வைத்துக் கொண்டு முழிப்பேன்?’ தர்மசங்கடத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

“மாப்பிள்ளை வாங்க…” பார்வதி இப்பொழுது சற்று படபடப்பானார். ஆகாஷ் அவர்கள் அழைப்பை உள்வாங்கும் விதமாகத் தலை அசைத்துக்கொண்டான்.  ஈஸ்வரனும்  ஆகாஷை வரவேற்கும் விதமாகத் தலை அசைத்துக் கொண்டார்.

ஈஸ்வரன் ஆகாஷின்  மனநிலை அறிய, அவனை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட வேண்டும்.’ என்று அவர்களை ஆர்வமாக பார்த்தான் கார்த்திக். ஆகாஷ் குழந்தையை இறக்கி விடவில்லை. கிருஷை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்தான். வீட்டுக்கு வந்ததே போதும் என்பது போல் கிருஷ் ஆகாஷ் மீது ஒய்யாரமாக சாய்ந்திருந்தான்.

சில நொடிகளுக்கு பின், “நாங்க மாப்பிள்ளைன்னு  உங்களை கூப்பிடலாமில்லை?” தயக்கத்தோடு கேட்டார் பார்வதி.     ஸ்ருதியின் கண்கள் அவள் தாயை கனல் கக்கும் பார்வையோடு பார்த்தது. பார்வதிக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்திட வேண்டும் என்ற பரபரப்பு.

ஸ்ருதியை பார்த்ததுமே, ஆகாஷிடம் தடுமாற்றம். அதிலும், குழந்தையைப் பார்த்ததும் ஆகாஷ் முடிவு எடுத்து விட்டான்.

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அதில மாற்றமே கிடையாது.” சற்று அழுத்தமாகக் கூறினான் ஆகாஷ். அவன் கண்கள் இப்பொழுது ஸ்ருதியை தொட்டு மீண்டது.      ஸ்ருதி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“பார்வதி, மாப்பிளையை உட்கார சொல்லு. எதாவது சாப்பிட சொல்லு. இப்படியே நிக்க வச்சி பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” ஈஸ்வரன் கூற, ஆகாஷ் கிருஷை இறக்கிவிட்டான்.

கிருஷ் ஓடி சென்று ஸ்ருதியை அணைத்துக்கொண்டான். “நான் அம்மா கிட்ட போகணுமுன்னு சொன்னேன். அப்பா தான் சோ லேட்.” என்று கண்களை விரித்தான் கிருஷ்.

“டேய்… என்னடா கதை விடுற? நீ எப்ப அம்மா கிட்ட போகணுமுன்னு சொன்ன?” என்று ஆகாஷ் கிருஷிடம் சண்டைக்குத் தயாராக, “ஐ சேட் மாம் இஸ் மை வேர்ல்ட். அப்பா,  நீங்க லிசென் பண்ணலை.” என்று கிருஷ் மழலை குரலில் கொஞ்ச, “கிருஷ் இதெல்லாம் ஸோ மச்.” என்று அவனைப் போலவே பேசினான் ஆகாஷ்.

பார்வதி, ஈஸ்வரன், கார்த்திக் மூவரும் அவர்கள் சம்பாஷணையை ஆர்வமோடு பார்க்க, கிருஷின், ‘அப்பா…’ என்ற அழைப்பை மனதில் குறித்துக்கொண்டாள் ஸ்ருதி.

‘மனதில் நினைத்ததை சாதித்து விடுவான்.’ என்ற எண்ணத்தோடு, அதற்கு மேல் அங்க நிற்க விருப்பமில்லாமல்  கிருஷை அழைத்துக்கொண்டு அவன் முகம், கை, கால் கழுவி அவனுக்கு உடை மாற்றினாள்.

அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க , குழந்தையும் கார்த்திக், ஆகாஷ் என அவர்களோடு விளையாட ஆரம்பிக்க, ஸ்ருதி அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஆகாஷின் கண்கள் ஸ்ருதியையே பின் தொடர்ந்தது.

“நான் ஸ்ருதி கிட்ட பேசணும்.” என்று ஆகாஷ் அனுமதி போல், உறுதியாக உரிமையாகக் கேட்டான். ஸ்ருதியின் அறையை அவர்கள் காட்ட, அவன் அவள் அறை நோக்கிச் சென்றான்.

கதவை ஆகாஷ் தட்ட, அவனை வரவேற்கும் விதமாகக் கதவு திறந்து கொண்டது.

ஆகாஷ், அறைக்குள் நுழைய ஸ்ருதி சுவரின் மீது சாய்ந்து கொண்டு, அவனை ஆழமாகப் பார்த்தாள்.

‘என்னை தேடி வர இத்தனை வருடங்கள்! அதுவும் எனக்காக இல்லை.’ அவள் சிந்தை அவளையே பார்த்துச் சிரித்தது.

என்ன பேசுவது என்று தெரியாமல் உள்ளே நுழைந்த ஆகாஷின் கண்களில் அங்கிருந்த புகைப்படம் பட, அவன் கவனம் அதில் திரும்பியது.

அறை முழுக்க கிருஷின் புகைப்படம்.  அவன் பிறந்தவுடன், அவன் அழுவது போல், அவன் பொக்கை வாய் திறந்து சிரிப்பது போல், அவன் குப்புற விழுந்து இருப்பது போல், அவன் முட்டிட்டு தவழ்வது போல் ஆகாஷின் கண்கள் கண்ணீரைக் கோர்த்துக் கொண்டது. சுவர் அருகே சென்று அந்த புகைப்படத்தை ஆசையாகத் தீண்டினான்.

கிருஷ் அந்த பருவத்தில் அவனிடமே இருப்பது போல் தோன்ற,  அவன் குழந்தையின் கன்னங்களை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்தான்.  ஒவ்வொரு வயதிலும் கிருஷின் பிறந்தநாள் புகைப்படம் இருக்க, அவற்றை பார்த்தபடி நடக்கக் கடைசியாகப் பெரிதாகத் தாயும், மகனும் இருப்பது போன்ற புகைப்படம் ஆகாஷின் கோபம் சர்ரென்று ஏற்றியது.

கோபமாக ஆகாஷ், ஸ்ருதியின் முன் அவளை நெருங்கி நின்றான்.

“ஏன் இப்படி பண்ண?” அவன் குரல் காட்டமாக ஒலிக்க, ‘நான் ஏன் இவனை விட்டுட்டு  வந்தேன்னு கேட்க இத்தனை வருஷங்களா?’ என்று அவள் அவனைப் பார்க்க, “கேட்கறேன்ல சொல்லு, ஏன் குழந்தை விஷயத்தை என் கிட்ட மறைச்ச?” வருத்தம், கோபம் அனைத்தும் கலந்து கேட்டான் ஆகாஷ்.

‘ஓ… இப்பவும் இவன் என்னை பத்தி யோசிக்கலை. என் மனசை, என் தவிப்பை யோசிக்கவே இல்லை. குழந்தை… குழந்தை… மட்டும்…’ மேலே சிந்திக்க முடியமால் ஸ்ருதி ஆகாஷை கோபமாகப் பார்க்க, ஆகாஷ் ஸ்ருதியின் நாடியைப் பிடித்திருந்தான்.

“கேட்குறேன்ல சொல்லு.” என்று அவன் விரல்கள் அவள் கன்னங்களை அழுத்தமாகப் பிடிக்க, ஸ்ருதிக்கு மெலிதாக வலித்தது. அதை விட அவள் மனவலி கூடியது.

‘நீ கோபப்பட்டால், என்  தண்டனை இப்படி தான்.’ என்று அவள் கன்னத்தில் இதழ் பதிக்கும் ஆகாஷ் கண்முன் தோன்ற, ‘என் முகம் எதையாவது காட்டிக்கொடுத்து விடுமோ?’ என்ற எண்ணத்தோடு  ஸ்ருதி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

மூடிய கண்களுக்கு கீழ் உள்ளே அவள் கன்னக்கதுப்புகள், ஆகாஷின் பழைய நினைவுகளைத் தூண்ட, அங்கிருந்த நாற்காலியில் மொந்தென்று அமர்ந்தான்.

‘என்னால் ஸ்ருதியின் மீது இப்படி எல்லாம் கோபப்படமுடியுமா?’ ஆகாஷ் நொந்து கொள்ள, ஸ்ருதி அவனை மௌனமாகப் பார்த்தாள்.

ஆகாஷின் வாடிய முகம் அவளையும் வாட்டியது.

நொடிக்குள் தன்னை சுதாரித்துக்கொண்டு, “ஸ்ருதி… எனக்கு கிருஷ் வேணும். என்னால் தனியா இருக்க முடியாது.” அவன் உறுதியாகக் கூறினான் அவள் பதிலை எதிர்பார்த்து.

ஸ்ருதி ஆகாஷை ஆழமாகப் பார்த்தாள். கோபம் தான், வருத்தம் தான். எல்லாவற்றையும் தாண்டி அவன் மீது காதல் அல்லவா?

‘உன்னை நம்பி, உனக்காக என்னையே கொடுத்தேன். என் குழந்தையை கொடுக்க மாட்டேன்னா?’ என்பது போல் இருந்தது அவள் பார்வை.

ஸ்ருதியின் பார்வையின் அர்த்தம் முழுதும் ஆகாஷுக்கு புரியாவிட்டாலும், ஏதோவொரு குற்ற உணர்ச்சியில் தன் கண்களை இறுக மூடி திறந்தான் ஆகாஷ்.

கிருஷின் பாஸ்ப்போர்ட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். “கிருஷை கூட்டிட்டு போங்க.” என்று அவள் நிதனமாகக் கூறினாள்.

ஆகாஷ், அந்த பாஸ்போர்ட்டை வாங்கவில்லை. “எனக்கு நீயும் வேணும் ஸ்ருதி.” அவன் கூறிவிட்டான். தன் வைராக்கியம், தன் கோபம் அனைத்தையும் விடுத்துக் கூறிவிட்டான்.

அந்த குரலில், அவன் ஏக்கம், காதல் எல்லாம் வழிந்ததா? இல்லையா? ஸ்ருதிக்கு தெரியவில்லை.

புன்னகைத்துக் கொண்டாள். ‘இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?’ என்பது போல், அவன் பார்க்க, அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“உங்களுக்கு நான் வேண்டாம் ஆகாஷ். உங்களுக்கு நான்   வேணுமிங்குற எண்ணம் இருந்திருந்தா, என்னை தேடி எப்பவோ வந்திருப்பீங்க. நான் உங்களுக்கு தேவை இல்லை.” அவள் இப்பொழுது சற்று அழுத்தமாகக் கூறினாள்.

“நீங்க குழந்தைக்காக வந்திருக்கீங்க. நீங்க கேட்டு இல்லைன்னு சொல்ல என்கிட்டே ஒண்ணுமில்லை. இந்தாங்க பாஸ்போர்ட்.” அவள் உறுதியாகக் கூறினாள்.

ஆகாஷ் இல்லாத பொழுது வீராப்பு பேசிய ஸ்ருதி இப்பொழுது சற்று காணாமல் போயிருந்தாள் அவளறியாமல்.

“நான் குழந்தையை தேடி இங்க வரலை. எனக்கு குழந்தை விஷயம் இப்ப தான் தெரியும். குழந்தை விஷயம் தெரிஞ்சா, நான் இப்படி இருந்திருக்கவே மாட்டேன்.” ஆகாஷ் பரிதவிப்போடு கூறினான்.

‘ம்… குழந்தை வேணும். ஆனால், என்னை என்ன வேணா நக்கல் பேசுவான்?’ என்ற கேள்வி தோன்ற, “சரி விடுங்க… உங்க கிட்ட நான் எதுவும் பேச விரும்பலை. எதுக்கு  என்னை தேடி வந்தீங்க?” கேட்டாள் ஸ்ருதி.

‘இதற்கு மேல் பேசாமல் இருக்க முடியாது.’ என்ற எண்ணம் தோன்ற, “கீதாவுக்கு, கார்த்திக்கை பேசணும். இப்ப இருக்கிற சூழ்நிலையில் நான் கார்த்திக் வீட்ல பேசினா மறுப்பு வரும். நீ பேசினா, நடக்கும். அது தான்…” என்று ஆகாஷ் தயங்கினான்.

ஸ்ருதி, கார்த்திக்கிடம் திருமண விஷயம் பேசினால், ‘தெரியல ஸ்ருதி… எந்த பெண்ணையும் பிடிக்கலை.’ என்று கார்த்திக் அவ்வப்பொழுது கூறுவது நினைவு வர, ஸ்ருதி ஆகாஷை யோசனையாகப் பார்த்தாள்.

நொடிக்குள், “நான் கார்த்திக் வீட்ல பேசுறேன்.” என்று ஸ்ருதி கூற, “இப்ப அவசியமில்லை. நாம சேர்ந்தே பேசுறோம்.” என்று பிடிவாதமாகக் கூறினான் ஆகாஷ்.

“எதுவும் மாறலை ஆகாஷ். நான் ஒரு நாளும் உங்க கூட வரமாட்டேன்.” என்று ஸ்ருதி கூற, “என்னால, குழந்தையை விட்டுட்டு போக முடியாது.” என்று ஆகாஷ் உறுதியாகக் கூறினான்.

“நானும் அதை தான் சொல்றேன். உங்களுக்கு குழந்தை வேணும். நான் தடுக்கலை கூட்டிட்டு போங்க.” என்று அவள் உறுதியாகக் கூறினாள்.

“எந்த ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ, இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப்படுறேன். இந்த ஜென்மத்தில், தாயையும், மகனையும் பிரிச்ச பாவம் எனக்கு வேணாம்.” என்று ஆகாஷ், எழுந்து நின்று ஸ்ருதியின் முகம் பார்த்து மறுப்பு தெரிவிக்கும் விதமாக கூறினான்.

‘என்னால் இவனுக்கு கஷ்டமா?’ என்ற கேள்வியோடு, அவள் மனதில் கோபம் சுருக்கென்று தைத்தது.

சட்டென்று வார்த்தைகளை சிதறவிட்டாள் ஸ்ருதி.

“நான் வாழ்க்கைன்னு நம்பின விஷயங்கள் இல்லாமல் போய் கூட, நான் என்ன செத்தா போய்ட்டேன்? நான், நல்லா தான் இருக்கேன். கிருஷ் இல்லாமலும் என்னால் வாழ முடியும். கிருஷ் என்னை விட உங்க கிட்ட பத்திரமா இருப்பான். அவனை கூட்டிட்டு கிளம்புங்க. நீங்க சொன்ன விஷயத்தை நான் பேசி முடிக்குறேன்.” என்று ஸ்ருதி உறுதியாக கூறினாள்.

ஸ்ருதி கோபமாக, வெறுப்பாகத் தான் பேசினாள். ஆனால், ஆக்ஷிற்கோ அவள் பேச்சு இதமாக இருந்தது.

‘என்னை விட்டுவிட்டு வந்து விட்டாளே ஒழிய, இவள் என் மேல் வைத்துள்ள, நம்பிக்கை அன்பு எதுவும் குறையவில்லை.’ என்ற எண்ணத்தோடு அவன் முகத்தில் புன்னகை விரிந்தது.

அப்பொழுது, “அம்மா…” என்று அழைத்துக்கொண்டு கிருஷ் ஓடிவர, அவன் பின்னே ஓடி வந்த கார்த்திக்கின் செவிகளில் அவர்கள் பேசிய கடைசி வார்த்தை விழ, அவன் நெற்றி சுருங்கியது.

ஓடிவந்த கிருஷை, ஆகாஷ் தூக்கிக் கொண்டான்.

“அம்மா! நாம எப்ப அப்பா கூட போறோம்?” என்று கிருஷ் கேட்க, “ஸூன் கிருஷ்.” என்று கூறினான் ஆகாஷ்.

‘இவன் என்னை விட்டுவிட்டுப் போக மாட்டானோ?’ என்ற கேள்வி அவள் மனதில் எழ, “அப்பா… என் பொம்மை பாருங்க.” என்று ஆர்வமாகக் காட்டினான் குழந்தை.

“என்னடா இது? ஒரே பொம்மையா இருக்கு. ட்டூர்…. கார்… சர்ருன்னு போற பைக் எல்லாம் இல்லையா?” என்று ஆகாஷ் கேட்க, “ம்… அது கொஞ்சம். இப்ப இப்ப தான்… அம்மா இது தான் நிறைய வாங்குவாங்க!” என்று கிருஷ் கூறினான்.

“சரி விடு… நாம புதுசா வாங்கிருவோம்.” என்று ஆகாஷ் கூற, “இதெல்லாம் வேஸ்ட் ஆகிரூமே!” என்று கிருஷ் வருத்தப்பட, “அது பரவால்லை கிருஷ், நாம தங்கச்சி பாப்பா வரும் பொழுது கொடுதிறலாம்.” என்று ஆகாஷ் சமாதானம் செய்ய, அவனை கடுப்பாக பார்த்தாள் ஸ்ருதி.

‘பாஸ்ப்போர்ட்டை குடுக்குற பாஸ்போர்ட். என்கிட்டவேவா?’ என்று ஆகாஷ் அவளை நக்கலாக பார்த்தான்.

‘இவனெல்லாம் திருந்தவே மாட்டானா? எப்பவும் கேலி பேச்சு தானா?’ என்று ஸ்ருதி அவனைக் கடுப்பாகப் பார்க்க, “ஒரு வேளை தம்பி பாப்பா வந்திருச்சுன்னா?” என்று கிருஷ் தீவிரமாகச் சந்தேகம் கேட்டான்.

‘நீ வேற உங்க அம்மா கிட்ட எனக்கு அடி வாங்கி குடுக்காம போக மாட்ட போலியே டா…’ என்று மனதிற்குள் நொந்து கொண்டு, “அதுக்கு அப்புறமாவது தங்கச்சி பாப்பா வரும்டா.” என்று ஆகாஷ், கிருஷின் சந்தகத்தைத் தீர்க்க, “கிருஷ்…நீ பாட்டி கிட்ட போ! அம்மா வரேன்.” என்று அவனை விரட்டினாள் ஸ்ருதி.

புதியவனை விட்டுச் செல்ல மனமில்லாமல், தாயின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து பாட்டியிடம் சென்றான் கிருஷ்.

“பேச ஒண்ணுமில்லை ஸ்ருதி. நாம தெளிவா பேசிட்டோம். உனக்கு என்னை பிடிக்காது. எனக்கும் உன்னை சுத்தமா பிடிக்காது. நான் சொல்றது சரிதானே?” என்று அவன் உதட்டை மடித்து குறும்போடு கேட்டான்.

‘ஸ்ருதி, நீ எதையோ உளறினதில், இவன் எதையோ பிடித்துக்கொண்டு தொங்குகிறான்.’ என்ற எண்ணம் தோன்ற அவனை கடுப்பாக பார்த்தாள் ஸ்ருதி.

“ஆமா… இல்லை எதாவது சொல்லு.” என்று ஆகாஷ் அவனை வம்பிழுக்க, ‘இல்லைன்னு எப்படி சொல்றது?’ என்று எண்ணிக்கொண்டு, “ஆமா!” என்று கூறினாள் ஸ்ருதி.

“எனக்கு தெரியும் ஸ்ருதி, நான் என்ன சொன்னாலும் நீ ஆமான்னு சொல்லுவா… நான் கேட்டாலும் தூக்கி கொடுத்திருவன்னு… அதனால், நீயும் என் கூட வர.” என்று அவள் கன்னம் தட்டி சொல்லி சென்றான்.

“முடியாது…” அவள் திட்டவட்டமாக அறிவிக்க, “வருவ…” அவன் உறுதியாகக் கூறி சென்றான்.

ஸ்ருதி அறைக்குள் முடங்கி கொள்ள, கார்த்திக் ஆகாஷை வழிமறித்தான்.

“ஆகாஷ்… நீங்க கிருஷை கூட்டிட்டு போயிருங்க. ஸ்ருதி உங்களுக்காக வருவான்னு எனக்கு தோணலை. கிருஷ்க்காக கண்டிப்பா வருவா.” எப்படியாவது ஸ்ருதியை ஆகாஷோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முனைப்போடு கார்த்திக் கூறினான்.

“கிருஷ்க்காக வருவா. அது கூட என் கட்டாயத்தில் வர கூடாது. ஸ்ருதி, அவளா வரணும். கட்டாயத்தில் கூட்டிட்டு போயிரலாம். ஆனால், ஸ்ருதி மனசில் அது வடுவா மாறிரும். என்னால், அதை ஆயுசுக்கும் சரிபண்ண முடியாமலே போயிரும்.” என்று ஆகாஷ் ஆழமான குரலில் கூறினான்.

படி இறங்கியவன் மீண்டும் படி ஏறி, “எனக்காகவும், என் ஸ்ருதி வருவா!” ஆகாஷ் புன்னகையோடு கூறினான்.

‘ஆகாஷின் நம்பிக்கை ஈடேறுமா?’ என்ற கேள்வியோடு கார்த்திக் ஆகாஷை யோசனையாகப் பார்த்தான்

குறும்புகள் தொடரும்…

 

error: Content is protected !!