8
முகங்கள் என்றுமே மாறுவதில்லை…
சிலருடைய முகமூடிகள் மட்டுமே சிலநேரங்களில் கழன்று விழுகின்றன…

நம்மோடு நெருங்கி பழகும் சிலருடைய பொய்யான முகமூடிகள் கழன்று விழுவது தாங்க முடியாத பாரத்தை மனதில் ஏற்றும். அதை அவ்வளவு சீக்கிரம் நம்மால் தாங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை.

தமக்குத்தாமே குழி வெட்டிக் கொள்கிறோம் என்பதைக் கொஞ்சம்கூட உணராது மணிவாசகம் லோகேஸ்வரி ஸ்வேதா மூவரும் மும்முரமாக சரஸ்வதியிடமும் சுபத்ராவிடமும் தங்களது திட்டத்தை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தனர்.

அவர்களையே வெறுப்போடு நோக்கிக் கொண்டிருந்தது அர்ஜுனின் விழிகள். இதோ இன்னும் சில நொடிகளில் பெரியம்மாவின் விழிகள் நிமிர்ந்து என்னை ஆயிரம் கேள்விகள் கேட்கும். என்ன பதில் கூறுவேன்?

இதோ சுபத்ரா என்னை நிமிர்ந்து பார்த்து இவ்வளவுதானா நீ என்ற கேலிப் புன்னகை சிந்தப்போகிறாள்.

அந்தப் புன்னகையைத் தாங்க முடியுமா என்னால். நேற்றிரவு எவ்வளவு நம்பிக்கையோடு ஒரு நண்பனாக நினைத்து என்னுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
அந்த நம்பிக்கையும் என்னைப் பற்றிய நல்ல எண்ணமும் தூள்தூளாக உடையப் போகிறது.

தலையைக் குனிந்து கொண்டான் அர்ஜுன். அவர்களை நிமிர்ந்து பார்க்கும் சக்தி இல்லை அவனுக்கு.
அவனருகில் யாரோ அமரும் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.

சரஸ்வதிதான் வாஞ்சையாக அவனது தலையைக் கோதிக் கொடுத்தார்.

‘கண்ணா… இன்னும் சின்னப் பிள்ளதான்டா நீ. யார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டு…’ மனதுக்குள் எண்ணிக் கொண்டவர், அவனது கைகளைப் பற்றிக் கொண்டு…

“கண்ணா நிமிர்ந்து என்னைப் பார். இப்ப இங்க நடக்கற ஏற்பாட்டுல உனக்குப் பரிபூரண சம்மதமா? என்னைப் பார்த்து பதில் சொல்லு.”
தயக்கத்தோடு அவரை நிமிர்ந்து பார்த்தவன், “பெரியம்மா…”

“நீ என்னோட வளர்ப்புடா. உன்னால தவறா எந்த முடிவும் எடுக்க முடியாது. நீ செய்யப் போற இந்தக் காரியத்தோட சாதக பாதகங்களை நல்லா யோசிச்சு முடிவெடு. கல்யாணம்ங்கறது சும்மா இல்லை. அது ஒரு சத்தியம்.

முதல்ல பாட்டி முன்னாடி உன்னால பொய்யா ஒரு சத்தியம் பண்ண முடியுமான்னு யோசி. வீட்டுக்குப் போ.

உங்க அம்மா அப்பா ரூம்ல படுத்து யோசி. அப்புறமும் இது உனக்கு சரின்னு பட்டுச்சின்னா என்னோட ஆதரவு உனக்கு எப்பவுமே உண்டு.” என்றவர் அவனது தலையை தடவிக் கொடுத்துவிட்டு விலகிச் சென்று சுபத்ராவின் அருகே அமர்ந்து கொண்டார்.

 

 

சுபத்ராவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லை அவனுக்கு. அந்த நேரம் அவனது அலைபேசியில் மெஸேஜ் ஒன்று வந்ததற்கான ஒலி இசைத்தது. என்ன என்று எடுத்துப் பார்த்தான்.

ஸ்ரீராம்தான் அனுப்பியிருந்தான். கீதாசாரம்… பார்த்தனுக்கு கீதையின் சாரம் சொன்ன பார்த்தசாரதி போல, அர்ஜுனுக்கு அந்த நேரத்தில் தேவையான உபதேசமாக அது இருந்தது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

மௌனமாக இரண்டு மூன்று முறை அதனைப் படித்தவன், எழுந்து வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியேறி தனது காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

தனது தாய் தந்தையின் அறைக்குச் சென்று அவர்களது புகைப்படத்தை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், மனதில் ஆயிரம் கேள்விகள். ‘நான் செய்யப் போகும் செயல் சரியா தவறா…? எவ்வளவு யோசித்தும் மனம் ஒப்பவே மாட்டேங்குதே.

பாட்டிக்குத் தெரியாமல் இதுவரை எதையும் செய்ததில்லையே. இப்பொழுது எதற்காக என் மனம் தடுமாறுகிறது. மனிதர்களின் நிறங்களை நான் தெரிந்து கொள்வதற்காகவா?’ மனம் வெகுவாக அலைப்புற, அங்கிருந்த கட்டிலில் தலைசாய்த்து கண்களை மூடினான்.

அலர்மேல்மங்கைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதிலிருந்து நிம்மதியான உறக்கம் இல்லை அவனுக்கு. முன்னிரவும் வெகுநேரம் சுபத்ராவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றிருக்க, படுத்தவுடன் தூக்கம் ஆட்கொண்டது அவனை.

எவ்வளவு நேரம் தூங்கினானோ…? உறக்கமும் விழிப்பும் கலந்த நிலை. தெளிவற்ற காட்சிகள் மனதில் அலைமோத அதன் தாக்கத்தில் புரண்டு படுத்தான்.

மஞ்சள் மணத்த கழுத்தில் முகம் வைத்துத் தூங்க சுகமாக இருந்தது அவனுக்கு.

“ஹைய்யோ… அஜ்ஜு செல்லம் சாப்பிடாம தூங்கிட்டீங்க.” எங்கோ தூரத்தில் ஒலிப்பது போன்ற குரல்… முகத்தில் புன்னகை மிளிர சுகமாய் தலையணையில் முகம் புரட்டினான்.

“இங்கப் பாருங்க… அஜ்ஜுகுட்டி என்னைப் பாருங்க…”குரலில் உறக்கம் கலைவதாய்… மெல்ல கண்திறந்து அந்த முகத்தைப் பார்க்க முயற்சி செய்தான். கருணை வழியும் கண்கள்… உதட்டில் உறைந்த சிரிப்பு…

அந்த முகம்… அது… சுபத்ரா…
விருட்டென்று எழுந்து அமர்ந்தவன் வெகுவாக வியர்த்துப் போயிருந்தான். நினைவுக்கு வராத காட்சிகளின் எச்சங்கள் தலைக்குள் சுழன்றபடி இருந்தன. எப்பொழுதும் மூளைக்குள் சுழலும் பழைய நினைவுகளின் தாக்கம்தான்… புரிந்தது.

இத்தனைநாள் தெளிவில்லாமல் முகம் தெரியாமல் கனவில் வந்த காட்சிகளில் இன்று சுபத்ராவின் முகம் தெரிவதை அதிர்ச்சியோடு உணர்ந்தான்.

அவளையே நினைத்துக் கொண்டு படுத்ததின் விளைவோ ? தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தவனின் சிந்தை முன்பை விடத் தெளிவாக இருந்தது.

எழுந்து தன்னை ஃபிரெஷ் செய்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். மனம் மிகவும் அமைதியாக இருப்பது போல உணர்ந்தான். மீண்டும் ஒருமுறை ஸ்வேதாவிடம் தனியாக பேச வேண்டும். அதற்குபின் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

மருத்துவமனையில் சுபத்ராவின் நிலைதான் பாவமாக இருந்தது. உண்மையில் இது எதுவுமே வேண்டாம் என்று தூக்கிப் போட்டுவிட்டு தன் தாயின் மடி தேடி ஓட வேண்டும் போல இருந்தது.

தன்னைச் சுற்றி நின்றுகொண்டு சொத்துக்காக போலியாக பொய் சொல்லச் சொல்பவர்களைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது.

“எனக்கு எதுவுமே வேண்டாம்னு எப்பவோ சொல்லிட்டேன். ஏதாவது வேலை மட்டும் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க போதும். இந்த வீட்ல கூட நான் இருக்கலை.” என்று அவள் கூறியதும் வாயெல்லாம் பல்லாக மாறியது மணிவாசகத்துக்கு.

‘இவளைக் கிளப்புவது கஷ்டம் என்று எண்ணியிருந்தேனே… இவளே போயிடுறேன்னு சொல்றா. பெரிய பிரச்சனையே ஒன்னுமில்லாம ஆகிடுச்சி. இவளை கல்யாணத்துக்கு மட்டும் ஒத்துக்க வச்சிட்டா போதும்’ என்று எண்ணிக் குதூகலித்தவர் அவளிடம் பேசத் துவங்கினார்.

“இங்க பாரும்மா. உனக்கு நல்ல வேலை வாங்கித் தந்து இந்த ஊரை விட்டு வேற ஊருக்கு நல்லபடியா அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு. இப்ப இரண்டு நாளைக்கு மட்டும் நாங்க சொல்றதை கேட்டு நடந்துக்க.”

“…”

“பாட்டிகிட்ட போய் கல்யாணத்துக்கு சம்மதம்னு மட்டும் சொல்லுங்க. அவங்க தாலி கட்ட சொன்னா கட்டலாம். இல்லைன்னா விட்டுடலாம்.”

“…”

“எவ்வளவு படம் பார்த்திருப்ப எவ்வளவு நாடகம் பார்த்திருப்ப. அதுல எல்லாம் தாலி கட்ற மாதிரி நடிச்சிட்டு அப்புறமா கழட்டிடறது இல்லை அது மாதிரி நினைச்சிக்கோ. ஒன்னும் தப்பு இல்லை புரியுதா.”
மூவரும் மாற்றி மாற்றி பேச என்ன சொல்வது என்றேத் தெரியவில்லை

“நான் வேணும்னா பாட்டிகிட்ட பேசறேன் அங்கிள். எனக்கு எந்த சொத்தும் வேண்டாம்னு சொல்லிடுறேன். எதுக்கு அவங்ககிட்ட தேவையில்லாம பொய் சொல்லனும்?”

“ஐயய்யைய எங்கம்மா ஒத்துக்காதும்மா. பேசறதா இருந்தா என் மருமகனே பேசிப் பார்க்க மாட்டானா. அவனுக்கு இப்ப தொழிலை உன்கிட்ட தர விருப்பமே இல்லை. அதனாலதான் இந்த மாதிரி செய்யலாம்னு சொல்லவும் ஒத்துகிட்டான்.”

அர்ஜுன் ஒத்துக் கொண்டான் என்ற வார்த்தையைத் தாண்டி எதுவுமே யோசிக்க மறுத்தது மூளை. எப்படி ஒத்துக் கொண்டான்? சொத்துக்காகவா?

நேற்று நிலவொளியில் முகம் விகசிக்க அவனுடைய காதலியைப் பற்றி அவ்வளவு பேசியவன். பொய்யாகவேனும் வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட எப்படி ஒப்புக் கொண்டான்?

பாட்டியிடம் தன் வாழ்க்கைக்காக நேற்று கம்பீரமாகப் பேசினானே. இன்று எப்படி இந்த போலி நாடகத்தை பாட்டி முன் நடத்த ஒப்புக் கொண்டான்? வாழும் நாள் முழுமைக்குமான குற்றவுணர்ச்சி இது என்று தெரியவில்லையா? அல்லது பட்டணத்தில் வாழும் மெத்தப் படித்தவர்களிடையே தாலிக்கான மதிப்பு இவ்வளவுதானா…? நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அவளுக்கு.

அப்பொழுது அங்கு வந்த அர்ஜுன், “ஸ்வேதா… உன்கூட கொஞ்சம் தனியா பேசனும். வா என்கூட.”

“என்ன மாப்ள பேசனும் நானும் வரட்டுமா?”

“வேணாம் மாமா. இது நானும் ஸ்வேதாவும் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம். நாங்க பேசிட்டு வர்றோம்”
என்றவன் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பூங்காவில் போடப் பட்டிருந்த சிமென்ட் இருக்கையில் வந்து அமர்ந்தான். வந்தமர்ந்தும் சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருந்தவனை அழைத்தாள் ஸ்வேதா.

“என்ன மாமா பேசனும்? ஏதோ பேசனும்னு கூட்டிட்டு வந்து அமைதியா இருக்கீங்க. அங்க அம்மாவும் அப்பாவும் அந்த சுபத்ரா மனச மாத்த கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க. நாமளும் போய் பேசினா மாத்தலாம் இல்ல. சீக்கிரம் என்னன்னு சொல்லுங்க.”

“ஸ்வேதா… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுடா. எனக்கு இப்படி பாட்டியை ஏமாத்தி போலியா கல்யாணம் பண்றதெல்லாம் பிடிக்கல ஸ்வேதா.

தொழில்ல எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் ஸ்வேதா. கொஞ்சம் ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும். போகப்போக சரியாகிடும்.”

“என்ன மாமா திருப்பித் திருப்பி இதையே சொல்லிட்டு இருக்கீங்க. ஒரு இரண்டு நாளைக்காக பொய் சொல்லப் போறோம் அவ்வளவுதான். அதுக்கப்புறம் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போறோம் இதுல என்ன தப்பு?
சொத்தெல்லாம் எதுக்கு மாமா அவளுக்கு குடுக்கனும்? அதெல்லாம் உங்களோட சொத்து. நமக்கு எல்லாமே வேணும். அவளுக்கு ஏதாவது ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் மட்டும் பண்ணி வச்சிடலாம் அது போதும்.

எல்லாத்தையும் அவகிட்ட தூக்கிக் குடுத்திட்டு தொழில்லயும் கஷ்டப் படப்போறீங்களா…? ஒழுங்கா நான் சொல்றதைக் கேளுங்க மாமா.”

அவளையே வெறித்துப் பார்த்திருந்தவன், “நீ சொத்துக்காக என்னைப் பணயம் வைக்கிறங்கறது உனக்குப் புரியலையா ஸ்வேதா? நான் உனக்கு முக்கியமில்லையா? என்னை விட சொத்துதான் முக்கியமாப் போச்சா?”

“சும்மா சொன்னதையே சொல்லிகிட்டு இருக்காதீங்க மாமா. அம்மாவும் அப்பாவும் நம்ம நல்லதுக்குதான் சொல்லுவாங்க.

அவ்வளவு சொத்தும் முழுசா கிடைக்கும்னா இரண்டு நாள் உங்களைப் பணயம் வச்சா தப்பில்ல. அப்புறம் என்கிட்டதான வந்துடப் போறீங்க.” என்றவளை எதுவுமே பேசாமல் அமைதியாக சில நொடிகள் வெறித்தவன், “கிளம்பலாம் வா” என்று அழைத்து வந்தான்.
நேராக சரஸ்வதியிடம் வந்தவன்,

“பெரியம்மா… நல்லா யோசிச்சிட்டேன். இப்ப நானும் சுபத்ராவும் பாட்டிகிட்ட போய் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லப் போறோம்” என்றவன் சுபத்ராவிடம்,

“சுபத்ரா… நான் இப்ப பாட்டிகிட்ட போய் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறோம்னு சொல்லப் போறேன். இன்னையில இருந்து உன்னோட வாழ்க்கையும் எதிர்காலமும் என்னோட பொறுப்பு.

 

உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா… “ என்றபடி கைகளை அவளை நோக்கி நீட்டி வா என்பது போல பார்க்க, திகைத்துப் போய் அவனைப் பார்த்திருந்தாள்.
அவள் அருகே வந்த சரஸ்வதி,

“சுபத்ரா… அர்ஜுன் அவ்வளவு சொல்றான் இல்ல. அவன் ரொம்ப ரொம்ப நல்லவன். இதை மட்டும்தான் இப்ப என்னால சொல்ல முடியும். அவனை நம்பி அவன்கூட போம்மா” என்க… தயக்கத்தோடு அவனது கையில் தன் கரத்தை வைத்தவள் அவனோடு பாட்டி இருந்த அறையை நோக்கி நடந்தாள்.

பாட்டியின் அறைக்குள் அர்ஜுன் சுபத்ராவைத் தொடர்ந்து அனைவருமே உள்ளே நுழைந்தனர். வெகுவாக தளர்ந்து போய் படுத்திருந்த அந்த மூதாட்டியின் விழிகள் மெல்ல மலர்ந்தது அர்ஜுனைக் கண்டு.

அர்ஜுன் கைகளைப் பிடித்தவாறு அவனருகே நெருங்கி நின்றிருந்த சுபத்ராவைப் பார்த்தவர் சற்று யோசனையில் சுருங்கிய விழிகளோடு அர்ஜுனைக் கேள்வியாகப் பார்த்தார்.

“பா…பாட்டி உங்க ஆசைப்படி நான் சு…சுபத்ராவைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். சுபத்ராவுக்கும் இதுல சம்மதம்.” என்று கூறிவிட்டு பாட்டியைப் பார்த்தவனின் விழிகள் ஏகத்துக்கும் சிவந்து போய் இருந்தது.

பேரனையே சற்று நேரம் கூர்ந்து பார்த்த அலர்மேல்மங்கை தனது மாஸ்க்கை கழட்டச் சொன்னார்.

கழற்றியதும், “நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன் ராசா. எனக்கு உன் கல்யாணத்தைப் பார்க்கனும்.”

“ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க பாட்டி.” என்றவன் அறையை விட்டு வெளியே வந்தான். அவனைப் பின் தொடர்ந்து அனைவரும் வெளியே வந்துவிட…

அர்ஜுன் சுபத்ராவைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததில் சற்று தெம்பு வரப் பெற்றவராக சரஸ்வதியிடம் திரும்பி, “நீ என்கூடவே இரு சரோ. நல்ல நாள் பார்க்கனும். இன்னும் இரண்டு மூனு நாள்ல வர்ற மாதிரி.

அர்ஜுன் கல்யாணம் எப்படியெல்லாம் நடத்தனும்னு நினைச்சிருந்தேன். இப்படி ஹாஸ்பிடல்ல வச்சி நடக்கற மாதிரி ஆகிடுச்சே. முதல்ல ஸ்ரீராமுக்கு ஃபோனைப் போட்டு வரச் சொல்லு.

நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சிக்கோங்க.”
சற்று உணர்ச்சி வசப்பட்டு அதிகமாகப் பேசவும் மூச்சிரைக்க ஆரம்பிக்க, பாட்டியை ஆசுவாசப்படுத்தியவர், பாட்டியிடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கூறிவிடலாம் என்று எண்ணி சற்று தவிப்போடு அவரைப் பார்க்க… சரஸ்வதியின் முகத்தைப் பார்த்த அலர்மேல்மங்கையின் முகம் கனிந்தது.

“என்ன சரோ… என்ன சொல்லனும் என்கிட்ட? என் பேரன் திடீர்னு வந்து கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லும் போதே என்ன நடந்திருக்கும்னு என்னால ஊகிக்க முடியாதா?

எது நடந்தாலும் அது நன்மைக்கே நடக்குது சரோ. எனக்குப் பின்னாடி சுபத்ராவை மட்டும் கொஞ்ச நாளைக்கு அவங்க கிட்டயிருந்து ஜாக்கிரதையா பார்த்துக்கோ.”
தழுதழுத்த அலர்மேல்மங்கையை சமாதானப்படுத்தி விட்டு வெளியே வந்தார் சரஸ்வதி. தனியாக அமர்ந்திருந்தாள் சுபத்ரா.

“எங்கம்மா யாரையும் காணோம்?”

“தெரியலை அத்தை. அவர் ரூமை விட்டு வெளியே வரவும் கிளம்பி போயிட்டாரு. இவங்க மூனு பேரும் இப்பதான் போனாங்க.”
வெகுவாக பயந்து போய் குழம்பிய முகத்துடன் அமர்ந்திருந்த சுபத்ராவின் அருகே அமர்ந்தவர்,

“நானோ பாட்டியோ உனக்கு கெடுதல் நினைப்போமா… அர்ஜுன் ரொம்ப நல்லவன்டா. உன்னுடைய லைஃப் நல்லபடியா இருக்கும்.”
சரஸ்வதியின் வார்த்தைகள் சுபத்ராவின் மூளையைச் சென்று அடையவே இல்லை. சற்று முன்னர் மூவரும் பேசிச் சென்ற வார்த்தைகளே அவளைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தன.

“பாட்டி இரண்டு நாளைக்கு மேல தாங்க மாட்டாங்க. அவங்க காலம் முடிஞ்சதும் அர்ஜுன் கட்ற தாலியை நீ கழட்டி வச்சிடலாம்.”

“உனக்கு நல்ல வேலையும் தங்கற இடமும் ஏற்பாடு பண்ணி தரவேண்டியது என்னோட பொறுப்பு.”

“நீ யார்கிட்டயும் சொல்லிக்கனும்னு கூட அவசியம் இல்ல. உடனே இந்த ஊரை விட்டு கிளம்பி போய்டு.”
என்ன சொல்வது என்றே புரியாமல் அமர்ந்திருந்தாள். அவர்கள் மூவரிடமும் முடியாது என்று மறுத்துக் கூறிக்கொண்டிருந்தவள், எதற்காக அர்ஜுன் வந்து கேட்டதும் உடனடியாக சம்மதம் சொன்னேன்?
திருமணம் முடிந்து அவர்கள் காரியம் நடந்த பின் தாலியைக் கழட்டி கொடு என்றால் என்னால் கொடுக்க முடியுமா?

சாகும் வரை என் தந்தையின் நினைவுகளோடு வாழ்ந்து இறந்த என் அன்னை சொல்லித் தந்தது இதுவா? பெண்ணுக்குத் திருமணம் என்பது வாழ்வின் ஒருமுறைதான் இல்லையா? எப்படி நடந்தாலும் திருமணம் திருமணம்தானே…

அப்படியே போராடி நான் என்னுடைய தாலியைத் தக்க வைத்துக் கொண்டாலும், கட்டியவனின் மனதில் இருக்கும் வேறொரு பெண்ணை என்ன செய்வது? ஸ்வேதாவின் வாழ்க்கையை தட்டிப் பறிக்க என்னால் முடியுமா? அது நியாயமா?

அர்த்தமில்லாத இந்த திருமணத்திற்கு எதற்காக நான் ஒப்புக் கொண்டேன். நினைக்க நினைக்க கண்ணீர் பெருகியது.
தன்னிரக்கத்தில் அழுது கரைபவளைச் சமாதானப் படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த சரஸ்வதி அவளைக் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்து உறங்க வைத்தார்.

செங்கமலத்திடமும் சுபத்ராவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

குடும்ப ஜோசியரிடம் விபரத்தைத் தெரிவித்து சூழ்நிலையையும் தெரிவித்து திருமண நாளைக் குறித்துக் கொடுக்கச் சொல்ல, அவர் மறுநாளே மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றே வைத்துக் கொள்ளச் சொன்னார்.

ஸ்ரீராமுக்கு அழைத்து விபரத்தைச் சொன்ன அடுத்த பத்து நிமிடத்தில் அவர் முன்பு நின்றவன் வரிசையாக செய்ய வேண்டியதை அவர் கூறக்கூற குறித்துக் கொண்டான்.

அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து முடித்து விடுவதாக அவரிடம் கூறியவன் வெளியேறினான்.

அன்றிரவு முழுவதும் உறங்காமல் சரஸ்வதியும் ஸ்ரீராமும் திருமண ஏற்பாடுகளை செவ்வனே செய்து முடித்தனர்.

மறுநாள் அழகாக பொழுது புலர்ந்தது. அதிகாலையில் அர்ஜுனை தான் எடுத்து வந்திருந்த புது உடைகளைக் கொடுத்து கிளம்பச் செய்த ஸ்ரீராம், மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.

பாட்டியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையிலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. சலனமில்லாத முகத்தோடு பாட்டியின் அறைக்குள் சென்ற அர்ஜுன் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

சுபத்ராவுக்கும் திருமணத்திற்கென்று புதிதாக எடுக்கப்பட்ட புடவையை அணிவித்து, மெல்லிய ஒப்பனையுடன் அளவான நகைகளை அணிவித்து, தேவதை போல தயாராக்கி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் சரஸ்வதி.

மணிவாசகம் லோகேஸ்வரி ஸ்வேதா மூவரும் கிளம்பி வந்திருந்தனர். செங்கமலமும் வந்திருந்தார்.
அவர்கள் மட்டுமல்ல அர்ஜுனின் நெருங்கிய நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். அந்த மருத்துவமனையின் பங்குதாரரில் ஒருவன் அர்ஜுனின் நண்பன். அவனும் அவனது தாய் தந்தையோடு வந்திருந்தான்.

ஸ்ரீராமின் தாய் தந்தையும் வந்திருந்தனர். குடும்ப வக்கீல் வந்திருந்தார். ஆடிட்டரும் தனது மனைவியுடன் வந்திருந்தார். இவ்வாறாக அர்ஜுனின் நலம் விரும்பிகள் அனைவருமே அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த விஸ்தாரமான அறையில் அனைவரும் குழுமி இருந்தனர். அர்ஜுன் ஒரளவு இதை எதிர்பார்த்தே இருந்தான். தனக்குத் திருமணம் என்றால் பாட்டி இந்த அளவாவது ஏற்பாடுகளைச் செய்யாமல் இருக்க மாட்டார் என்று அவனுக்குத் தெரியும்.

ஆனால் மணிவாசகமும் அவரது குடும்பமும்தான் வெகுவாக ஆடிப் போயிருந்தனர். திருமணம் என்றால் நான்கு சுவருக்குள் யாருக்கும் தெரியாமல் நடக்கும் என்று எண்ணியிருக்க, அங்கு இவ்வளவு பேரை அழைத்திருந்த சரஸ்வதியை வெகுவாக கடிந்து கொண்டார் மணிவாசகம்.

“நான் என்ன செய்யறது அண்ணா. அம்மாதான் இவ்வளவு பேரையும் அழைக்கச் சொல்லிட்டாங்க.” என்று நழுவிக் கொண்டார் சரஸ்வதி.

மங்கல இசையை ஸ்ரீராம் ஒலிக்கவிட, அந்தத் தளத்தில் இருந்த அனைவருமே அந்த அறையின் முன் கூடிவிட்டனர். சிறிய மேஜையில் வெற்றிலைபாக்கு வாழைப்பழம் தட்டு வைத்து இரண்டு சிறிய விளக்குகளை ஏற்றி ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் தடவிய தேங்காயின் மீது பத்மாவின் தாலிச் சங்கிலியை சரஸ்வதி எடுத்து வைக்க, மணிவாசகம் சுத்தமாக அதிர்ந்து போனார்.

மரகத கற்கள் பதிக்கப்பட்ட அந்த தாலி அர்ஜுனின் தாய் பத்மா அணிந்திருந்தது. அதைப்பார்த்த அர்ஜுனின் புருவங்கள் வியப்பில் லேசாக மேலேறியது. விழிகள் அர்த்தத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டது. பாட்டியின் புன்னகையிலும் அர்த்தம் பொதிந்திருந்தது.

பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு மணமக்கள் இருவரும் அறையின் நடுவே வந்து நிற்க, வயதில் மூத்த தம்பதிகளான மருத்துவமனை பங்குதாரரும் அவரது மனைவியும், இறைவனை வேண்டிக் கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்தனர்.

பிண்ணனியில் மங்கல இசை ஒலிக்க அனைவரின் வாழ்த்துக்களோடு அட்சதையும் தூவப்பட, அந்த மங்கல நாணை சுபத்ராவின் கழுத்தில் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான் அர்ஜுன். மாலை மாற்றிக் கொண்டு மெட்டி அணிவித்து நிறைவாக நடைபெற்றது திருமணம்.

அனைவரும் கூறிய வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டவன், வயதில் மூத்தவர்கள் அனைவரிடமும் தம்பதியாக ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.

வக்கீல் உடனடியாக இருவரிடம் திருமணப் பதிவு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அங்கேயே திருமணத்தை உறுதி செய்தார். இவற்றை எல்லாம் கண்கொண்டு பார்க்க முடியாமல் ஸ்வேதா கிளம்பிவிட, அவள் பின்னே லோகேஸ்வரியும் கிளம்பி விட்டார்.

மணிவாசகமும் கடுப்போடு அனைத்தையும் பார்த்திருந்தவர், பிறகு வேறு வழியில்லாமல் அவரும் கிளம்பினார்.

எளிமையாக என்றாலும் நிறைவாக நடந்து முடிந்த திருமணத்தால் அலர்மேல்மங்கையின் முகம் நன்கு தெளிவாகவும் சந்தோஷத்துடனும் இருந்தது. வந்திருந்த அனைவரையும் ஸ்ரீராம் அருகில் இருக்கும் உணவகத்திற்கு அழைத்துச் சென்று நிறைவாக விருந்து உபசாரம் செய்து அனுப்பி வைத்தான்.

பேரனையும் பேத்தியையும் அருகே அமர வைத்துக் கொண்டு அந்த மூதாட்டியின் விழிகள் அவர்கள் இருவரையும் இமைக்காமல் பார்த்து தனக்குள் நிரப்பிக் கொண்டது.

தொடரும்…

error: Content is protected !!