kurumbuParvaiyile-23

குறும்பு பார்வையிலே – 23

கார்த்திக் அங்கிருந்து கிளம்பவில்லை. திக்பிரமை பிடித்தவன் போல் இருந்தான். ‘ஸ்ருதி வருவாளா? வரமாட்டாள்.’ என்று அறிவு கூற… மனமோ, ‘கிருஷ்க்காக வந்திருவா.’ என்று முடிவு எடுத்துக் கொண்டது.

‘ஆனால், என்ன பிரச்சனை ஆகும்?’ அவன் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

‘ஸ்ருதி ஆடி தீத்துருவா.’ அவன் மூளை அவனை எச்சரித்தது.

‘கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.’ கார்த்திக் தன்னை சமாதானம் செய்து கொண்டான். ‘ஸ்ருதியை சமாளிச்சு தான் ஆகணும்.’ தன்னை தானே தேற்றிக்கொண்டான்.

‘ஆண்ட்டி, அங்கிளுக்கு என்ன பதில் சொல்லுவேன்? அவங்க பேரப்பிள்ளையை உயிரா நினைக்குறாங்க? யாரை கேட்டு விட்டுட்டு வந்தன்னு கேட்டுட்டா…’ அவன் ஆகாஷை யோசனையாகப் பார்த்தான்.

“ஏன் கார்த்திக், என் குழந்தையை என்னை நம்பி விட்டுட்டு போக மாட்டியா?” இப்பொழுது ஆகாஷின் குரலில் காட்டம் இல்லை. மாறாக ஏக்கம் இருந்தது.

முன்னை விட இப்பொழுது கார்த்திக் இன்னும் அதிர்ந்தான். “ஆகாஷ்… என்ன நீங்க இப்படி எல்லாம்…” தடுமாறினான்.

‘ஆகாஷின் குழந்தையை அவனிடம் கொடுக்க தயங்க நான் யார்?’ என்ற குற்ற உணர்ச்சி, கார்த்திக்கிற்குள் எழும்ப, அவன் ஆகாஷை பரிதாபமாகப் பார்த்தான்.

‘கார்த்திக்! உன் பார்வைக்கு அது தானே அர்த்தம்?’ என்ற கேள்வி வேதனையோடு ஒலிக்க, கார்த்திக்கால் அவன் அதிகாரத்தை, கோபத்தை ஒதுக்க முடியும். ஆனால், அவன் ஏக்கம் கார்த்திக்கின் மனதைப் பிசைந்தது.

“கிருஷ் கிட்ட ஒரு வார்த்தை.” என்று கார்த்திக் கூற, “கிருஷ்… என் கூட கொஞ்சம் நேரம் இருக்கீங்களா? அப்புறம் அம்மா கிட்ட போவோமா?” என்று கேட்டான் ஆகாஷ்.

‘இதுக்கு என்ன அர்த்தம், ஸ்ருதி வரமாட்டாள் என்று ஆகாஷுக்கு தெரியுமா? இல்லை இயல்பா சொல்றானா? ஐயோ இவங்க விளையாட்டில் நான் தான பந்தா?’ என்ற எண்ணத்தோடு குழந்தையைப் பார்த்தான்.

“உங்களை டுடே தான் பார்த்தேன். எப்படி நீங்க அஸ்க் பண்ணா நான் ஸ்டே பண்ண முடியும்? கார்த்திக் அங்கிள் சொன்னா ஸ்டே பண்றேன்.” என்று தெளிவாகக் கூறினான் கிருஷ்.

‘டேய்… இருக்க மாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே. அப்படியே அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தப்பாம பிறந்திருக்க டா! என்னை கோர்த்து விடுறதுல்ல.’ என்று நொந்து கொண்டே கிருஷை பரிதாபமாகப் பார்த்தான் கார்த்திக்.

ஆகாஷ் குழந்தையைப் பெருமையாகப் பார்த்தான்.

“ஸே அங்கிள். நீங்க சொல்றதை அப்படியே டூ பண்றேன்.” என்று கிருஷ் சமத்தாக ஆங்கிலம் கலந்து தமிழில் கூற, ‘டூ பண்ணுவீங்க டா… நல்லா பண்ணுவீங்க. மொத்த குடும்பமுமா சேர்ந்து என்னை டூ பண்றீங்க.’ என்று கார்த்திக் மனதிற்குள் நொந்து கொண்டே குழந்தை ஆகாஷோடு இருக்க சம்மதம் தெரிவித்து விட்டுக் கிளம்பிவிட்டான்.

அத்தனை நேரம் குழந்தையைத் தூக்காத ஆகாஷ், அவனைத் தூக்கிக் கொண்டு உச்சி முகர்ந்தான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. குழந்தையை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

புதியவனின் ஸ்பரிசத்தில், அழுத்தத்தில் கிருஷ் நெளிந்தான்.  குழந்தையின் தடுமாற்றத்தில், சுதாரித்துக் கொண்டு, கிருஷை தன் அறையை நோக்கிக் கூட்டிச் சென்றான்.

“ஐ கென் வாக்.” என்று கிருஷ் கூறினாலும், ஆகாஷ் அவனைக் கீழே இறக்கவே இல்லை.

அறைக்குள் சென்றதும், “என்ன சாப்பிடுற?” என்று அவன் கேட்க, “எங்க மாம் கொடுத்தா தான் நான்  ஈட் பண்ணுவேன்.” என்று கையை ஆட்டி மறுப்பாகக் கூறினான் கிருஷ்.

“ஏன் உங்க பாட்டி, தாத்தா குடுத்தா சாப்பிட மாட்டியா?” என்று ஆகாஷ் அவனிடம் புருவம் உயர்த்த, “அம்மா குக் பண்ணிருப்பாங்க அதை.” என்று கிருஷ் உதட்டைச் சுழித்துக் கூற, ஆகாஷ் புன்னகைத்துக்கொண்டான்.

“உங்க அம்மா வேற என்னல்லாம் பண்ணுவாங்க?” என்று ஆகாஷ் கேட்க, “நான் தான் சொன்னனே. இப்படி கேட்க கூடாது பேட் ஹபீட்டுனு.” என்று கிருஷ் கண்டிப்போடு கூறினான்.

“மத்தவங்க பேமிலி பத்தி கேட்டா தான் தப்பு. நான் உங்க பேமிலி தான். இல்லைனா, கார்த்திக் அங்கிள் உங்களை என்கிட்டே விட்டுட்டு போவாங்களா?” என்று ஆகாஷ், கேள்வியாக நிறுத்த, கிருஷ் யோசனையோடு தலை அசைத்துக் கொண்டான்.

“அம்மா… சூப்பரா குக் பண்ணுவாங்க. அம்மா… அம்மா…” என்று கிருஷின் பேச்சு முழுவதும் ஸ்ருதியை சுற்றியே வந்தது.

“உங்க அம்மாவை உனக்கு ரொம்ப பிடிக்குமோ?” என்று ஏக்கமாக, சற்று பொறாமை உணர்வோடும் கேட்டான்.

“ம்… ஷி இஸ் மை வேர்ல்ட்.” என்று கிருஷ் கூற, ‘எனக்கும் தான் டா…’ அவன் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.

‘ஆனால், அவளுக்கு நீ தான் உலகம் போல.’ என்று எண்ணிக் கொண்டு, கிருஷின் தலை கோதினான்.

“அப்பா…” என்று கேட்க ஆரம்பித்து, என்ன கேட்பது என்று தெரியாமல் ஆகாஷ் தடுமாற, “எங்க அப்பா சீக்கிரம் வருவாங்க.” என்று குழந்தை பெருமையாகக் கூறியது.

“யார் சொன்னாங்க?” என்று ஆகாஷ் மிரட்சியாக கேட்க, “அம்மா…” என்றான் கிருஷ்.

“அம்மா… சொல்லிட்டே இருப்பாங்க. அப்பா தான் வரவே இல்லை.” என்று கிருஷ் உதட்டை பிதுக்கினான்.

ஆகாஷ், கிருஷை மடியில் வைத்துக்கொண்டு தன்னோடு சாய்த்துக் கொண்டான்.

“அப்பா ரொம்ப ரொம்ப குட் தான். விசா தான் இல்லையாம். கிடைச்சதும் வந்துருவாங்க.” என்று கிருஷ் கூற, “உங்க அப்பா, குட் ன்னு சொன்னது யாரு?” என்று ஆகாஷ் கேட்க, அதை கேட்க முடியாமல் அவன் குரல் உடைந்தே போனது.

“அம்மா…” என்று கிருஷ் கூற, ‘நான் வருவேன் என்று காத்திருந்தாளோ? எனக்காகக் காத்திருந்தாளா? ஏன் காத்திருக்க வேண்டும். அவள் தானே போனாள், என் மீது அக்கறை இருந்தால் என்னைத் தேடி வர வேண்டியது தானே?’ என்று ஸ்ருதிக்காக மருக ஆரம்பித்து அவன் எண்ணங்கள் கோபமாகவே பயணிக்க ஆரம்பித்தது.

‘எல்லாம் சொல்லுவா. என்னை அவளுக்கு பிடிக்கும். ஆனால், என்னை தேடி வரமாட்டா… இப்பவும் வர மாட்டா…’ என்று எண்ணிக்கொண்டான்.

மனதின் ஓரத்தில், ‘குழந்தை என்னிடம் இருக்கிறது. ஒருவேளை குழந்தைக்காகவாவது, என்னைத் தேடி வருவாளா?’ என்ற ஆசை ஆகாஷிற்குள் எழுந்தது.

அதை மறைத்துக் கொண்டு மகனிடம் பேச ஆரம்பித்தான் ஆகாஷ்.

கார்த்திக் சாலையில் குறிப்பிட்ருந்த ஸ்பீட் லிமிட்டில் எவ்வளவு மெதுவாகக் காரை செலுத்த முடியுமோ, அவ்வளவு மெதுவாகச் செலுத்தினான். இருந்தும் கார், வீட்டை வந்தடைந்தது.

கார்த்திக் உள்ளே நுழைய, ஈஸ்வரன், பார்வதி இருவரும் அவன் பின்னே பார்க்க, அந்த இடம் காலியாக இருந்தது.

அவர்கள் கேட்பதற்குள், கார்த்திக் முந்திக் கொண்டான்.

“கிருஷ் ஆகாஷ் கிட்ட இருக்கான்.” என்று அவன் தலையைக் குனிந்து கொண்டே கூற, ‘ஆகாஷ்!’ என்ற பெயரில்  ஸ்ருதியின் தாய் தந்தை இருவரும் அதிர்ச்சியில் அமைதியாக அமர்ந்தனர்.

கார்த்திக் அவர்களிடம் சுருக்கமாக கூறினான். முழுவதும் கூறவில்லை. கூற வேண்டியதைக் கூறி, மறைக்க வேண்டியதை மறைத்து ஒருவாராகக் கூறி முடித்தான். இத்தனை வருடத்தில் கார்த்திக்கிற்கும் கொஞ்சம் அனுபவம் வந்திருந்ததை அவன் பேசியவிதம் வெளிப்படுத்தியது.

“இத்தனை வருஷத்தில் ஆகாஷை நீ சந்திக்கவே இல்லை தானே?” என்று கேட்டார் ஈஸ்வரன்.

“இல்லை அங்கிள் நான் வர இடத்தை, பொதுவா ஆகாஷ் தவிர்த்திருவார். அவருக்கு குழந்தை விஷயம் இது வரைக்கும் தெரியாது. நானும் ஆகாஷை தேடி போகலை. இயல்பா பாக்குற சந்தர்ப்பம் அமையுமான்னு பார்த்தேன். ஆனால், ஆகாஷ் அதை சாதுரியமா தவிர்த்திட்டார்.  யு.எஸ் க்கு கூட ஆகாஷ் பொதுவா வறதில்லை. இந்த தடவை ஸ்ருதியை பார்க்கத் தான் வந்திருக்கணுமுன்னு நினைக்குறேன்.” என்று கார்த்திக் கூறினான்.

‘ஸ்ருதி ஏன் இத்தனை பிடிவாதமாக இருக்கிறாள். ஆகாஷ் ஏன் இத்தனை வருஷம் வரவே இல்லை?’ என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தவர்கள், ‘இன்றாவது தன் மகளின் வாழ்க்கை மாறாதா?’ என்ற எண்ணத்தோடு, ஆகாஷின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில், ஸ்ருதி கீழே இறங்கி வந்தாள். கார்த்திக் மட்டும் அமர்ந்திருக்க, அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.

நொடிக்குள் சுதாரித்துக்கொண்டு, “கிருஷை, ஆகாஷ் கிட்ட கொண்டு போய் விட்டுட்டு வந்துட்ட?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“அப்படி இல்லை ஸ்ருதி. சும்மா தான் அந்த பக்கம்…” என்று கார்த்திக் இழுக்க, “எதுக்கு அந்த பக்கம் போகணும்?” என்று நறுக்கென்று கேட்டாள்.

கார்த்திக் பதில் கூறவில்லை.   “குழந்தை என்கிட்டே இருக்கட்டும். அவளை வரச்சொல்லுன்னு சொன்னாரா?” என்று நக்கல் தொனித்த குரலில் கேட்டாள் ஸ்ருதி.

நேரில் பார்த்தது போல் சொல்லும் ஸ்ருதியை கார்த்திக் பிரமிப்பாகப் பார்த்தான்.

“அது தானே?” என்று ஸ்ருதி கடுப்பாக கேட்க, “அப்படி எல்லாம் இல்லை ஸ்ருதி. உன்கிட்ட தனியா பேசணுமாம். எதுக்கு குழந்தைக்கு அலைச்சல். கொஞ்சம் நேரம் என்கிட்டே இருக்கட்டுமேன்னு ஆசையா கேட்டார். கிருஷை விட்டுட்டு வந்துட்டேன்.” என்று பாதி உண்மையும், சூழ்நிலை கருதியும் பேசினான் கார்த்திக்.

“பொய் சொல்லாத கார்த்திக். பிள்ளையை அவன் கிட்ட வச்சுக்கிட்டா, நான் வேற வழி இல்லாமல் அவனை தேடி போவேன்னு நினைச்சிருப்பான். திமிர். ஆண் ஆதிக்க திமிர். பணக்காரன்னு திமிர். அவன் நினச்சா என்ன வேணா பண்ண முடியுமுன்னு திமிர். இந்த திமிர் வேண்டாமுன்னு தானே நான் விலகி வந்துட்டேன்.” என்று எரிச்சலோடு கூறினாள் ஸ்ருதி.

“ஸ்ருதி…” என்று பார்வதி ஆரம்பிக்க, “என்ன அம்மா? நான் தப்பு பண்ணினவ. அது தானே?” என்று ஸ்ருதி வெறுப்பாகக்  கேட்கப் பார்வதி மேலும் பேசவில்லை.

“நான் தப்பு பன்னவ தான். ஆனால், தப்பானவ கிடையாது. நான் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். போதுமான அளவுக்கு அனுபவிச்சிட்டேன். எதுவும் வேண்டாமுன்னு தானே இங்க வந்து, யாரும் இல்லாம இருக்கேன். என்னால், யார் காலில் போயும் விழ முடியாது.” என்று உறுதியாகக் கூறினாள்.

ஈஸ்வரன் எதுவும் பேச வில்லை.

“ஆகாஷுக்கு நான், எண்பதுகளில் வரும் கதைகளிலும், சினிமாலையும் வரும் பொண்ணுன்னு நினைப்பு. பிள்ளையை வச்சுக்கிட்டா, ஐயோ… என் குழந்தைன்னு அவன் காலில் விழுவேன்னு.” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

“அப்படி எல்லாம் அசர மாட்டா இந்த ஸ்ருதி. பிள்ளை யார் கிட்ட இருக்கு. அவங்க அப்பா கிட்ட தானே? என்னை விட, அவங்க அப்பா கிட்ட இன்னும் பத்திரமா தான் இருப்பான். இதுக்கெல்லாம் இந்த ஸ்ருதி பயப்பட மாட்டா.” என்று ஸ்ருதி கூற, தன் மகளின் பேச்சில்  ஈஸ்வரனின் உதடுகள் மெலிதாக வளைந்தது.

அவள் அறை நோக்கி ஸ்ருதி படி ஏற, “மாப்பிளை…” என்று பார்வதி ஆரம்பிக்க, ‘யாருக்கு யார் மாப்பிள்ளை?’ என்பது போல் ஸ்ருதி முறைத்தாள்.

“கிருஷை அவங்க அப்பா அப்படியே கூட்டிட்டு போய்ட்டா?” என்று பதட்டமாகக் கேட்டார் பார்வதி, பேரனையும், மகளின் வாழ்க்கையும் எண்ணி பதட்டத்தோடு.

“பாஸ்போர்ட் என் கிட்ட இருக்கு. கிருஷை என்கிட்டே இருந்து எங்கையும், யாரும் கூட்டிட்டு போக முடியாது. சட்டத்தில் கூட அதுக்கு இடம் கிடையாது. என்னை மீறி எதுவும் நடக்காது. நான் நடக்கவும் விட மாட்டேன்.” என்று ஸ்ருதி கோபமாகக் கூற, “ஒரு பொண்ணுக்கு இவ்வளவு அகம்…” என்று பார்வதி ஸ்ருதியை விட கோபமாக பேச ஆரம்பித்தார்,

ஈஸ்வரனோ, “பார்வதி…” என்று தன் மனைவியை அடக்கினார்.

“இது அகம் இல்லைம்மா. என் தன்மானம். என் சுயமரியாதை. நான் அதை யாருக்காகவும், எங்கயும் விட்டு கொடுக்க மாட்டேன். இறங்கவும் மாட்டேன். அப்படி இறங்கி எனக்கு எதுவும் தேவை இல்லை.” என்று உறுதியாகக் கூறினாள்.

“உங்க விளையாட்டில் பாதிக்கப்படுறது கிருஷ்.” என்று பார்வதி மேலும் பேச, “பார்வதி…” என்று தன் மனைவியை மீண்டும் அடக்க, ஸ்ருதி தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

பார்வதி தன் கணவனை வருத்தத்தோடு பார்க்க, “கவலைப்படாத, எல்லாம் சரியாகுற நேரம் வந்திருச்சு. அதனால் தான் இவ்வளவு பிரச்சனை. யாரவது ஒருவர் இறங்கி வருவாங்க. அவங்களுக்காக இல்லைனாலும்,கிருஷ்க்காக இறங்கி வருவாங்க.” என்று ஈஸ்வரன் உறுதியாகக் கூறினார்.

“என்னால் தான் இத்தனை பிரச்சனையோ?” என்று கார்த்திக் புலம்ப, “எல்லாம் நல்லதுக்கு தான்.” என்று கார்திக்கையும் சமாதானம் செய்தார் ஈஸ்வரன்.

ஸ்ருதி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

‘குழந்தைக்காக கூட ஆகாஷ் என்னைத் தேடி வரமாட்டானா? நான் எதில் குறைந்து விட்டேன்? படிப்பு, அழகு, தனக்கென்று ஒரு பிசினெஸ் சாம்ராஜ்யம்.’ என அனைத்தும் அவள் கண்முன் விரிந்தது.

‘என்னை அவனிடம் இழந்ததாலா? காந்தருவ மணம். நான் புரிந்ததும் காந்தருவ மணம் தானே? ‘ என்று அவள் மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

‘சகுந்தலையும், துஷ்யந்தனும் புரிந்து கொண்ட அதே காந்தருவ மணம்!  துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தது போல் ஆகாஷ் என்னை மறந்திருப்பானோ? இல்லை என் ஆகாஷ் என்னை மறந்திருக்க மாட்டான். என்னை அவனால் மறக்க முடியாது. என் நினைவுகள் இல்லாமல், அவனால் சுவாசிக்கக் கூட முடியாது.’  அவனை எண்ணி மருக ஆரம்பித்து அவள் மனம் ஓலமிட்டது.

‘நான் செய்தது தவறென்றால், அதைச் செய்தது இருவரும் தானே?’ அவள் மணம் சிணுங்கியது.

‘இறைவன், ஏன் பெண்ணை மட்டும் தண்டிக்கிறான்? எல்லா அவப்பெயரும் எனக்கு மட்டும் தானா? இப்பொழுதும் நான் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க வேண்டுமா? இல்லை குழந்தைக்காக அவன் முன் நிற்க வேண்டுமா? இல்லை… முடியாது. கிருஷ் என்னை தேடி வருவான்.’ உறுதியாக நின்றாள் ஸ்ருதி.

ஆகாஷும், குழந்தையும் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல ஆகாஷின் மனம் குமுறியது.

‘என் ஒழுக்க கேடால், எனக்கு இத்தனை பெரிய தண்டனையா? ஸ்ருதி குழந்தையை அவளிடமே வைத்துக் கொண்டாள். நான் கிருஷை பார்க்க கூட முடியாமல் போயிற்றே.’ அவன் மனமும் பல கோணங்களில் சிந்தித்து, ஸ்ருதியை கோபித்துக் கொண்டிருந்தது.

நேரம் செல்ல, செல்ல கிருஷின் பேச்சு தாயை சுற்றியே இருந்தது. ‘இனி குழந்தை தாங்க மாட்டானோ? முகம் வாடுகிறதே.’ அவன் மனம் குழந்தைக்காக பரிதவித்தது.

‘எவ்வளவு அழுத்தம்? ஸ்ருதி வந்தால் என்ன?’ என்ற எண்ணத்தோடு அவன் மனம் காத்திருந்தது.

காத்திருப்பு, தவிப்பாக மாறியது. குழந்தையின் முக வட்டத்தில் ஆகாஷின் இதயம் கசிந்தது. ‘குழந்தையை பக்கத்தில் வச்சிக்கிட்டு இருக்கிற எனக்கே இப்படி இருக்கே. ஸ்ருதி இன்னும் கஷடப்படுவாளோ?’ என்று காதல் கொண்ட அவன் மனம் கோபத்தையும் தாண்டி வேண்டாம் என்று நினைத்தாலும் அவளுக்காக துடித்தது.

நேரம் செல்ல செல்ல, ஸ்ருதியின் இதய துடிப்பு எகிறியது. ‘கிருஷ், என்னை தேடி இருப்பானோ? இருப்பான் என்றால் ஆகாஷ் கூட்டிட்டு வந்திருக்கணுமே.’ அவள் மனம் முரண்டியது.

‘ஒருவேளை தேடாமல், விளையாடிகிட்டு தான் இருக்கானா?’ என்று யோசனை ஓட, அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

‘அப்பாவை பார்த்ததும், என்னை மறந்திருவானா?’ அவள் கண்கள் மெலிதாக கலங்கியது.

‘குழந்தையின் எண்ணத்தை ஆகாஷால் புரிந்து கொள்ள முடியலையோ?’ அவள் மனம் குழந்தையை எண்ணித் தவிக்க ஆரம்பித்தது.

அறையில் இருந்து வெளியே வந்தாள் ஸ்ருதி.

“ஸ்ருதி… நாம வேணா போவோமா?” கார்த்திக் கேட்க, “அவ என்ன எண்பதுகளில் தாயான பொண்ணா? இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு தாய். அப்படி எல்லாம் அசர மாட்டா.” பார்வதி தன் மகளை நக்கல் பேசினார்.

‘அம்மா… இத்தனை வருஷ கோபத்தை சேர்த்து பேசுறாங்களே.’ மனதிற்குள் நொந்து கொண்டு,   “உண்மையில் எனக்குக் கொஞ்சம் கூட பயமும், கவலையும் இல்லை அம்மா. ஆகாஷ் குழந்தையை நல்லா பார்த்துப்பான்.” நிதானமாகக் கூறினாள் ஸ்ருதி.

‘ஏக்கம் தான்… தவிப்பு தான்… ஆனால், இது தான் என் வாழ்க்கையோ?’ என்ற கேள்வி ஸ்ருதியிடம் எழுந்தது.

காதல்… அன்பு… எதிர்பார்ப்பு… ஏக்கம்… தவிப்பு… என

குறும்புகள் தொடரும்…