அடுத்த நாள் காலை..
எழுந்து கொள்ளும் போதே….
இத்தனை வருடமும் இல்லாத ஒரு வெறுமை, சயனாவிற்கு. தாய்மை இல்லாத முதல் பிறந்தநாள் என்று நெஞ்சம் சற்று விம்மியது.
இதுவரையும் ஏதும் பெரிய கொண்டாட்டங்கள் கிடையாது. ஆனாலும், ஏதோ அந்த நாள் முழுமை அடைந்த உணர்வு வரும். இன்று மனம் திண்டாடிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குள்ளே அங்கும் இங்கும் நடந்து பார்த்தாள். அதுவும் எந்தப் பயனும் அழிக்கவில்லை.
தனிமை உணர்வு மேலோங்கிய அடுத்தக் கணம், அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
வாசல் நோக்கி விரைந்தாள்.
கதவு திறந்தாள்.
ரேவ்!!
‘வீட்டுக்கு வராதே’ என்று சொன்ன பின்னும், விடியற்காலையே வந்து நிற்பதெல்லாம் விலையில்லா நட்பு!!
” ஹேப்பி பர்த்டே சயனா” – ரேவ்.
‘போனா போகுது வச்சுக்கோ’ என்ற தோரணையில் சொல்லப்பட்டது போல் இருந்தது.
“உள்ளே வா..”
இருவரும், உள்ளே வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தனர். வழக்கமாக அவர்களது உரையாடல் அரங்கேறும் இடம், இதுதான்.
இன்று சயனா எதுவும் பேசவில்லை.
“என் மேல கோபமா? ” – ரேவ்.
‘இல்லை’ என்பது போன்று தலை ஆட்டல்கள்.
“நீ ஏன் இப்படி இருக்க?”
“ஒன்னுமில்ல”
“இல்ல, ஏதோ இருக்குது”
“ப்ச்”
“அம்மாவ மிஸ் பண்றீயா? ”
“….”
“மனோகர்கிட்ட பேசுனியா?”
“…”
“உனக்கு அம்மா நியாபகம் வருதா? ”
“சும்மா, நொய்யு நொய்யுனு பேசி, உயிர வாங்காத, ரேவ்”
“போ. எனக்கு அழுகையா வருது தெரியுமா?. எனக்கு அம்மா ஞாபகம் வருது தெரியுமா. அதுக்குத்தான், அன்னைக்கே சொன்னேன். என் அம்மா அப்பாவ, வரச் சொல்லாம்னு, கேட்டியா? ” என்று அழ ஆரம்பித்தாள், ரேவ்.
“போதும் ரேவ். ஏற்கனவே ஒரு மாதிரி இருக்கு. நீ வேற… ”
“சரி, நான் அழ மாட்டேன். நீ போயி குளிச்சிட்டு வா. கனகா மேம், நம்மள லஞ்ச்க்கு கூப்பிட்டாங்க. நாம அங்க போய் சாப்பிடலாம். ஓகே வா ”
‘சரி’ என்று எழுந்து, கிளம்பத் தயாரானாள். ஆனால், அதற்குள் மறுபடியும் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
“நீ போய் குளி. நான் கதவைத் திறக்கிறேன். “என்று சொல்லி, ரேவ் சென்றாள்.
ஆனால் சயனாவின், இருதயம் இறும ஆரம்பித்தது.
திறந்த கதவின் முன், அந்த அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி.
“மேடம், இந்தக் கவர சயனா மேடம்கிட்ட கொடுக்க சொன்னாங்க”
“தேங்க்ஸ்” என்று கூறி ரேவ் வாங்கிக் கொண்டாள்.
“அண்ணே ஒரு நிமிஷம் ” என்று சொல்லி, சயனா தன் கைப்பேசியை எடுத்து, வாசல் நோக்கி நடந்தாள்.
செக்யூரிட்டியிடம் கைப்பேசியைக் காட்டியவள், “இந்த போட்டோல இருக்கிறவங்களா? பார்த்துச் சொல்லுங்க” என்றாள்.
“ஆமாம் மேடம் ”
” தேங்க்ஸ் அண்ணே, நீங்க போங்க”
அவர் சென்றுவிட்டார்.
சக்திவேல், அவளைத் தேடி வீட்டிற்கே வருகிறான். – இதுவே சயனாவின் பிறந்தநாள் பரிசாகத் தோன்றியது.
கவரை, ரேவிடமிருந்து வாங்கினாள். அளவற்ற ஆவலுடன் திறந்து பார்த்தாள். அதில்
சயனா,
சந்திப்போம்
மாலை 4:30
போஃனிக் மார்கெட் சிட்டி
– சக்திவேல்.
ரேவும் வாசித்து விட்டாள்.
‘இன்று, ஏன் பிறந்தநாளோ? ‘ என்று இருந்தவள். ‘இன்றுதான் பிறந்தேனா’ என்று தோன்றியது.
என்ன சேதி என்று சேகரித்தப் பின், செயலற்று நின்றாள். நிமிர்ந்து தோழியைப் பார்க்க இயலவில்லை.
செயல்பட வேண்டிய தருணம்.
‘இப்படி நிற்காதே சயனா, யோசி’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ஏனென்றால் ரேவைச் சமாளிக்க வேண்டும்.
விருவிருவென தன் அறை நோக்கி நடந்தாள்.
“நீ போகப் போறியா” – ரேவ்.
யோசனையுடன், ஒரு கண்ணைச் சுருக்கி ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சொல்லி, சயனா நின்றாள்.
“அதான் கேஸ டிலே பண்ணியாச்சில. அப்புறம் எதுக்கு போற?” – இது ரேவே யோசனை தந்த தருணம்.
“கேட்கறேன்ல எதுக்கு இந்த மீட்டிங்?”
“கேஸ் டிலே பண்றோம்னு சக்திகிட்ட சொல்லிடரேன். இந்த மிரட்ற வேல வேண்டாம்னு வார்ன் பண்ணிட்டு வந்திடரேன்”
‘நம்புவாளா?’ என்ற பெரும் பயத்துடனே சயனா கூறினாள்.
“ம்ம்ம்… ஐடியா சூப்பர். அப்படியே உனக்கு மேரேஜ் ஆகப்போகுனு சொல்லிடு”
‘எங்க சுத்தினாலும், அங்கயே வந்து நிற்கிறாளே’ என்பது போல் பார்வை, சயனாவிடம்.
“உனக்கு டவுட் இருந்துச்சுன்னா, நீயும் என் கூடவா” – ரேவ் கண்டிப்பாக வர விரும்ப மாட்டாள் என்ற நம்பிக்கை.
“அப்கோர்ஸ் டவுட் இருக்கு. கண்டிப்பா வரேன். ஐ டோன்ட் ஹேவ் எனி இஸ்யூ”
‘ச்சே, கேட்டிருக்க கூடாது’ என்ற மனநிலையில் சயனா.
“மேம்கிட்ட சொல்லிட்டு வரவா? ” – ரேவ்.
“வேண்டாம்… வேண்டாம்… வந்து சொல்லிக்கலாம்” என்று, தன் அறைக்குள் நுழைந்தாள், சயனா.
‘என்ன உடை உடுத்த’ என்று ஒரு பட்டிமன்றம் நடப்பதற்கு அவசியமே இல்லை. ஏனெனில் இருந்த உடை அனைத்தும் ‘ப்ளு ஜீன்ஸ் வொயிட் பேன்ட்’. அதையே அணிந்து கொண்டாள்.
மதிய உணவிற்கே ‘மால்’ சென்று விட்டனர். ‘கனகா மேம்’ மறுக்க/மறக்க வேண்டிய ஒன்றாகி விட்டது, காதலில்.
******
போஃனிக்ஸ் மார்க்கெட் சிட்டி.
இருவரும் வந்தனர். உண்டனர்.
மணி 3:30, காதலின் காத்திருப்பு.
சயனாவின் விழிகள் இரண்டும், மனம் விரும்புகிறவனைத் தேடின.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, விந்தையான,ஓர் ஒப்பற்ற உணர்வை உணர்ந்தாள் காதலி.
போஃனிக்ஸ் பார்க்கிங்…
பார்க்கிங்கில் ஒரு வெண்மை நிற ராயல் என்ஃபீல்டு, சரேலென வந்து, பார்க் செய்யப்பட்டது. சயனா, எப்படி இரண்டு கால்களை ஊன்றி, ஸ்டேண்ட் போடுவாளோ! அதே பாணியில் ஸ்டேண்ட் போடப்பட்டது.
வண்டி புதியது போல, பதிவு எண்கூட இன்னும் மாட்டவில்லை. காதலியின் தாக்கம் இந்த ‘புது ராயல்’.
முழுவதும் கருப்பு நிறத்தில் ஆடை. இறங்கி, நடந்து வந்தான், சக்திவேல்.
அவனைப் பற்றி என்ன சொல்ல? சில நேரங்களில் வார்த்தைகள் தேவைப் படாது, ஒருவரை வர்ணிக்க. அவர்கள் வாழும் வாழ்க்கையே போதும்.
தன்னைச் சுமந்த தாயிற்காக, சற்றும் தயங்காமல், தன் எதிர்காலத்தைச் சுமையாக்கிக் கொண்டவன். அது அவனினது அகத்தின் அழகைச் சொல்லப் போதும்.
அவன் கண்களில், எழுத்துக்கள் எழுத இயலாத கவலைகள். எப்பொழுதும், கொஞ்சம் கலங்கியே இருந்ததோ?? அந்த கவல் கொண்ட கண்கள் ஊடே காதல் சேர்ந்த போது, கவர்ச்சி!!
இதையெல்லாம் தாண்டி, அவனுக்கு சிறப்பினைத் தரும் விடயங்கள் இரண்டு.
ஒன்று கழுத்துப் பகுதியில் வரையப்பட்டிருந்த ‘டேட்டூக்கள்’. காண்போரைக் கவர்ந்திழுத்திடும்.
மற்றொன்று, அவனது பெயர். ‘சக்தி’ என்று யார் அழைக்கும் போது, அந்த அழைப்பில் ஏதோ ஓர் ஈர்ப்பு உணரப்படும்.
‘எங்கே என் என்ஃபீல்டு’ என்று விழி மொழி பேசியபடி வந்தான், சக்தி. சயனாவின் ராயலைப் பார்த்தவன், அதன் அருகில் சென்று நின்றான்.
இலட்சம் ஆசைகளுடன், ராயலை வருடிக் கொடுத்தான். கலங்கிய கண்களுடன், மெல்லிய கீற்றாய் முறுவல். சயனா பார்க்கத் தவறவிட்ட, சக்தியின் காதல் முகம்.
சுவிங்கம் ‘பாக்கெட்’ ஒன்றினை, வண்டியின் மேலேயே விட்டுவிட்டு சென்றிருந்தாள், சயனா. அதிலிருந்து ஒன்றை எடுத்துச் சுவைக்கத் தொடங்கினான், சக்தி.
சிறிது நேரம் சுவைத்தான். அவனால் முடியவில்லை. அந்தச் சுவை, அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘எப்படி இவளால் இதை, எல்லா நேரமும் சுவைக்க முடிகிறதோ??!!’ என்ற எண்ணம், வந்தது.
வாழ்க்கை முழுவதும், இந்தச் சுவையைச் ‘சகிக்காக’ சகித்துக் கொள்ள வேண்டும், என நினைத்துச் சிரித்தான்.
‘சகிப்புத்தன்மை’ என்கின்ற போதும், முகம் சிரிப்புத்தன்மை கொள்கிறது என்றால், அதெல்லாம், காதலின் பெரிய பெரிய சறுக்கல்கள்.
அதற்குமேல் தாமதம், கொடியது.
மாலின் உள்ளே வந்துவிட்டான். இரு கருவிழிகளும் இருபுறம் சென்று, காதலியைத் தேடின. ‘இதயத்தில் இருக்கிறாள்’ என்று தெரியும். ‘இங்குதான் இருக்கிறாள்’ என்றும் தெரியும். ஆனாலும் பதட்டம், சக்திக்கு. அது காதல்!!
சற்று நேரத் தேடலின் முடிவில், பார்த்துவிட்டான் காதலியை!!
சட்டென தோன்றியது ‘இன்னைக்கும் இதே டிரஸ்ஸா’ என்றுதான். ஆம்! நீல நிறத்தில் ஜீன்ஸ், வெள்ளை நிறம் கொண்ட சட்டை!
காதலிக்கு சற்று அருகில் காதலன்.
ரேவ் மற்றும் சயனா…
சாயல்கால வேளையிலே, சர விளக்குகள் தரும் ஒளி மழையில், சயனாவின் தேடல்…
“என்ன ரேவ், இன்னும் காணும்” – காதல் காத்திருப்பில், சயனா.
“4:30 க்குத்தான் வரச் சொன்னான். நாம ரொம்ப சீக்கிரமா வந்துட்டோம்”
“ப்ச்” – சயனாவின் இதயம் இறுமும் ஓசை, சக்தி இருக்கும் இடம் வரை கேட்டது.
மங்கிய விளக்கொளியின் மறைவில், சக்தி…
காதலியின் கண்கள் இரண்டிலும் அலைப்புறுகின்றனவா? இல்லை, அலையடிக்கின்றனவா?? – காதலன் சந்தோஷ சந்தேகம்.
நீலக் கடலலையே உனது
நெஞ்சின் அலைகளடீ!!
– ஆசையுடன் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
விதவிதமான அடுக்குமுறைகளில் அடுக்கிய புத்தகக் கடையின், புதுப் புத்தக வாசனைகளுடன் சயனாவின் தேடல்…
“பேசாம, சக்தி.. சக்தினு சத்தமா கூப்பிட்டுப் பார்க்கவா” – சயனாவின் காதல் முற்றிய நிலை.
“ஆங்” – ரேவ், திரும்பி சயனாவைப் பார்த்தபடி வாய்பிளந்தாள்.
“இல்ல, சும்மாதான் கேட்டேன்” – சயனாவின் சமாளிப்புக்கள்.
புத்தக அலமாறியின் பின்புறத்தின் மறைவில், சக்தி…
காதலியின் குரலில் ‘தன் பெயர்’. காதல் முற்றிய நிலையைக் கண்டு, தலையில் லேசாகத் தட்டியபடியே சிரித்தான், காதலன்.
கோலக் குயிலோசை உனது
குரலின் இனிமை அடி!!
– சத்தமாய் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த, பூச்செண்டு கடைதனில் சயனாவின் தேடல்..
“சக்திய வார்ன் பண்ணதான வந்த?” – ரேவ், சந்தேகிக்க ஆரம்பித்தாள்.
“சக்திய பிடிச்சதாலதான் வந்தேன்” – சக்திக்கான, சயனா நிலை.
பூக்களின் பின்னே மறைந்து நின்ற, சக்தி…
தனக்கானக் காதலை, காதலியின், வாய்மொழி வார்த்தையாகக் காதலன் கேட்கின்ற தருணம். அடுத்த நொடியே, காதலிக்காக சிகப்பு வர்ண பூக்கள் கொண்ட, ஒரு அழகிய பூச்செண்டு வாங்கப்பட்டது. அதில் காதலன் கரங்களால் காதலைக் கிறுக்கினான்.
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்!!
– பூக்களுடன் சக்தியும் காதலும்.
திடீரென்று, காதலியின் உருவம், காதலன் கண் பார்வையில் விழவில்லை.
துடிதுடித்து விட்டான் காதலன்.
கொஞ்சமே கொஞ்ச நேரத்திற்குப் பின் காதலன் கருவிழியில், காதலி பிம்பம், விழுந்தன. காதலனது கலங்கிய கண்மணிகள், கொஞ்சம் களிப்பைக் காட்டின.
கண்ணின் மணிபோன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!!
– களிப்புடன் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
புஷ் புஷ்ஷென்று மென்மையான பொம்மைகள் கொண்ட, டெடி பியர் ஷாப்பில் சயனாவின் தேடல்…
“என்ன சொல்ற சயனா?”
“ப்ச், என்னயக் கொஞ்சம் தேட விடுறீயா? இங்கதான் பக்கத்துல சக்தி இருக்கிற மாதிரி தோனுது”
“அதெப்படி சொல்ற?”
“அது ஒரு பீல். உனக்குப் புரியாது”
இக்கணம், ரேவிற்கு சயனா தன்னை ஏமாற்றுகிறாள் என்று புரிந்தது.
ஆளுயர டெடியின் மறைவில் சக்தி…
காதலியின் காதல் உள்ளுணர்வு, காதலனைக் கொஞ்சம் காதல் கிறக்கம் கொள்ளச் செய்தது.
அன்னியம் ஆகநம்முள் எண்ணுவதில்லை – இரண்டு
ஆவியும்ஒன் றாகும்எனக் கொண்டதில்லையோ??
– காதலியுடன் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
பளபளத்த மின்னிய வைரம், தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணக் கடையில் சயனாவின் தேடல்…
“வா சயனா, நம்ம திரும்பிப் போகலாம் ” – சயனா நிலை ரேவிற்கு புரிந்துவிட்டது.
“ரேவ், நானே எரிச்சல்ல இருக்கேன். பேசாம இரு. ”
“உனக்கென்ன எரிச்சல்”
“எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறான். ச்சே” – சயனா கோபம் கொண்டதால், நெற்றி சுருக்கி, முகம் சிவந்து கொண்டாள்.
ஆபரணக் கடையின் ஓரத்தில் ஒளிந்து கொண்ட சக்தி…
காதல் காத்திருப்பு நீள்வதால், காதலன் மீது காதலிக்குக் கோபம். அந்தச் செல்லக் கோபத்தினைக் கூட, பொறுக்க முடியாமல், காதலன் மனம் பதைபதைத்தது.
சற்றுன் முகஞ்சிவந்தால் – மனது
சஞ்சல மாகுதடீ!
நெற்றி சுருங்கக்கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ!!
– பதட்டத்துடன் சக்தியும் காதலும்.
சக்தியைத் தேடியபடியே, சயனா, ஒவ்வொரு கடையினுள்ளும் நுழைந்து வெளியேறினாள்.
காதலி அறியாமல், காதலன் பின் தொடர்ந்தான்.
திடீரென்று, ஒரு இடத்தில் நின்றாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். காதலன் வாசம், காதலியின் நாசியைத் துளைத்துச் செல்கிறதோ?? .
காதலியின் இதயம், அன்றுபோல் இறுமிக் கொண்டது. ஏதோ ஒன்றை யோசித்தவள், அருகில் இருந்த கடை ஒன்றில் வைத்திருந்த கண்ணாடி முன் சென்று நின்றாள். ‘எந்தவித அலங்காரமும் இல்லையோ’ எனக் கேள்வி கேட்டுக் கொண்டாள்.
காதலன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
சுற்றிலும் நடந்த பெண்களைப் பார்த்தாள், காதலி. அரிதாரம் பூசிய முகங்கள். தான், வெற்றுக் காகிதமாக இருப்பது போல் உணர்ந்தாள். காதலனுக்கு இது பிடிக்குமா? என்ற கேள்வி கண்களில் தெரிந்தது.
காதலனுக்குக் காதலியின் கேள்வி புரிந்தது. ‘பிடிக்குமடி சகியே, சயனா’ என்று முனுமுனுத்துக் கொண்டான்.
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்! மோதும் இன்பமே! கண்ணம்மா!
– சகியுடன் சக்தியும் காதலும்!!
ரேவ் மற்றும் சயனா…
ஒதுங்கும் இடத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஓய்விடத்தில்…
“ரேவ், வாஷ்ரூம் போனும்” – சயனா.
“இப்பவா?”
“ம்ம்ம்”
“நானும் வரேன்”
“நோப், யூ வெயிட் ஹியர்”
ஓய்வு இடத்திற்கு ஒதுங்குவதற்கு முன்னரே, சில பல கடைகளுக்குள் ஒதுங்கினாள், காதலி.
ஓய்விடத்தில்…
முதல் முறையாக கண்ணாடி முன்பு நின்றாள், காதலி. சொப்பணத்திலும் நினைக்கவில்லை ஒப்பனை செய்வாளென்று!!
இமைகள் மெதுவாக உயர்ந்தன. காதலனுக்காக, காதலி தன்னின் ‘தனதை’ மாற்றுகிறாள். ஒரு ஐந்து நிமிடம்தான். அதுவே கடினமான உழைப்பு போல உணர்ந்தாள்.
வெளியே வந்தாள். சயனாவின் நயனங்கள் நாணத்தைக் காட்டின. ஏனெனில் புதிதாய் பூசப்பட்ட அரிதாரம்.
ஓய்விடத்திலே நின்று கொண்டிருந்த சக்தி…
காதலியின் வெட்கம். காதலன் என்ன நினைக்கின்றான், ‘தேவையில்லாத வேலை சகியே சயனா ‘. ஆனாலும் அந்த வெட்கம் கண்டு, காதலனும் தலை சரித்து , ஒரு முகில் நகையை உதிர்த்தான்.
ஒப்புக்கு காட்டுவதிந் நாணம் என்னடீ?
– நாணத்துடன் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
“எவ்வளவு நேரம் சயனா?” என்று சலித்துக் கொண்டாள், ரேவ்.
சயனாவைப் பார்த்தாள், ரேவ்.
துருவித்துருவிக் கேட்கப் படுகின்ற கேள்விகளைக் காட்டிலும், வலிமை கொண்டது, துளைக்கும் பார்வையே!!
ரேவ், சயனாவின் நாடியைப் பிடித்து உயர்த்தினால்.
“ரேவ், விடு”
“என்ன இது? எதுக்கு இது?”
“அது.. அது..”
“எதுக்கு இந்த மேக்கப்?”
“அது, இன்னைக்கு பர்த்டேல.. ஸோ”
“நான் காலேஜிலிருந்து, உன்கூட இருக்கேன். இப்படி என்னைக்கும், நீ பண்ணது இல்ல”
“ஆமா பண்ணதில்ல..”
“அப்புறம் இப்போ எதுக்கு?”
“சக்திக்காக”
காதலியின் வார்த்தையைக் கேட்ட காதலன், பேச்சற்று நின்றான். தனக்காக ஒருத்தி, தன் ‘தனதை’ மாற்றுகிறாள் என்றாள், அந்த இடத்தில் அந்தக் காதல் – உன்மத்தம் அடைகிறது.
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா
உன்மத்த மானதடீ!!
– உன்மத்தமாய் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
வண்ண வண்ண நிறங்களில் மாட்டி விடப்பட்ட, துணிமணிகள் நிறைந்த துணிக்கடையில் சயனாவின் தேடல்….
“ஏன் சயனா இப்படி பண்ற? ”
“இப்ப என்ன நான் பண்ணிட்டேன் ”
“நேத்து சக்திய லவ் பண்றீயானு கேட்டதுக்கு, தெரியலன்னு சொன்ன. ஆனா, இப்போ ஏன் இப்படி?”
“ஏன்னா? சக்திய கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்”
“ஓ.. ஒரு சிஐடி ஆபிஸரோட ப்யூச்சர் ஹஸ்பண்ட், இந்த மாதிரி ஒரு அக்யூஸ்ட்டா இருக்கணுமா??”
“ரேவ், உனக்கு… ”
சயனாவைப் பேசவிடவில்லை.
“போதும்…நீ அமைச்சர மட்டும் வச்சி பேசற. பேங்க்ல, இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல இது தெரிஞ்சா?? என்ன நடக்கும் சக்திக்கு?? ஜெயில்ல போடுவாங்க ”
“ரேவ், இப்படிப் பேசாத”
“சரி பேசல. ஆனா , நம்ம பழகிற இடத்தில, உன்னோட மரியாதை என்னாகும்னு யோசிச்சியா? ”
“ஏய்! நீ தேவையில்லாம பேசற… ”
அலங்காரத் துணிப் பொம்மை மறைவில் சக்தி…
காதலன், மறைந்து நின்று அனைத்தையும் கேட்டுவிட்டான். துடித்துக் கொண்டிருந்தான்.
‘போதும்’ என்று, திரும்பிச் சென்று விட யத்தனித்தவன், கண்கள் கலங்கின. கலங்கிய கண்கள் காட்டிய காட்சிகள் அனைத்தும் காதலியாய் தெரிந்தாள்.
பார்த்த இடத்தில்எல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி!! கண்ணம்மா
– தவிப்புடன் சக்தியும் காதலும்.
தான் வாங்கிய பூச்செண்டை, அந்தத் துணிக்கடைச் சிப்பந்தி கைகளில் தந்தான். பின்னர் சயனாவை நோக்கி கை காட்டி, ‘அங்கே கொடுத்திடுங்கள்’ என்று சைகை செய்தான்.
இழப்பா? இருக்கா? என்று தெரியாத, ஒரு பெரு மூச்சு!!!
விருவிருவென ‘பார்க்கிங்’ பிரிவிற்கு நடந்தான். என்ஃபீல்டு எதிரே தெரிந்தது. அருகில் சென்றான்.
இலட்சம் ஏக்கங்களுடன், என்ஃபீல்டை வருடிக் கொடுத்தான். அவனுக்கு, அவன் மேலேயே கோபம். தன் காதலியை, இப்படி ஓர் சூழ்நிலையில் நிறுத்தியிருக்கிறோம் என்று!
“சயனா…” – என்றழைத்து, ராயலின் உச்சந்தலை மேல் இதழ் பதித்தான். ஒரு வெந்துளி வெளியேறி, வீழ்ந்து, நின்றது.
காத்திருப் பேனோடீ – இதுபார்
கன்னத்து முத்தம் ஒன்று!
– வெறுமையில் சக்தியும் காதலும்.
ரேவ் மற்றும் சயனா…
இன்னும் துணிக்கடையில்…
“நீ ஏன் இப்படி பேசற? கோபப்பட வைக்காத ரேவ்”
“ஏன்னா…”
அதற்குள் கடைச் சிப்பந்தி வந்து சயனாவிடம், பூச்செண்டு தந்தார். யார் தந்திருப்பார் என்று தெரியும் என்பதால், எந்தக் கேள்வியும் கேட்காமல் வாங்கிக் கொண்டாள்.
சயனா, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, ” சந்தோஷமா? ” என்று, பூச்செண்டைத் தூக்கி ரேவிடம் காட்டினாள்.
“போய்ட்டான். இதத்தான ரேவ் எதிர்பார்த்த” என்று சொல்லிவிட்டு, மாலின் பார்க்கிங் பகுதிக்குள் வந்துவிட்டாள், சயனா.
ரேவ்…
ரேவ் கனகா மேமை கைப்பேசயில் அழைத்தாள்.
“ஹலோ,ஏய் ஏன் லஞ்ச்க்கு வரல”
“மேம், அத விடுங்க. நம்ம கேஸ குளோஸ் பண்ணிடலாம்”
“ஏன் திடீர்னு?”
“மேம்.. சயனா மாறவே இல்லை. நீங்க நாளைக்கு காலைல 4:30 க்கு அமைச்சரோட மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுங்க”
“ஏர்லி மார்னிங் கா”
“ஆமா மேம். சயனா ஆபீஸ் வரதுக்கு முன்னாடியே அமைச்சர்கிட்ட எல்லாம் சொல்லிடலாம்”
“ஓகே ரேவ். சக்திவேல் பத்தி எல்லா டிடெயில்ஸ் எடுத்திட்டு வா. அமைச்சர்கிட்ட கொடுத்திடலாம்”
“ஓகே மேம் ”
இருபுறமும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
*******
பார்க்கிங்கில்….
சிந்தனை முழுவதும்
அங்கனை நிரம்பியிருந்தாள் – சக்தி.
ஒரு தூணின் மறைவில்…
பார்கிங் பகுதிக்குள் நுழைந்தவள், தன் ராயல் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
யோசனை முழுவதும் சக்தியின் வாசனை. காரணம்: சயனாவின் கரங்களில் குடிகொண்டிருந்த, சக்தி தந்த பூச்செண்டு.
அதில்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
சயனா சக்திவேல்.
கண்ணீர் சுரக்காமல் கவலைக் காட்ட முடியுமா?? சயனாவின் கண்கள் காட்டின.
சயனாவின் பார்வையைத் தாங்க முடியவில்லை, சக்திக்கு.
வண்டியை உயிர்ப்பிக்க சாவியைப் பொருத்தினாள். சக்தி சிந்திச் சென்ற வெந்துளி, சயனா காதல் கண்களின் முன் தெரிந்தது. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள்.
புரிந்தது. அவன், தன்னை பின் தொடர்ந்திருக்கிறான். ‘இங்குதான் இருக்கின்றான்’ என்று தோன்றியது. ‘இதயத்தில் இருக்கின்றான்’ என்றும் தோன்றியது.
இந்தக் காதலை,நாம் இழக்கப் போவதில்லை. ‘என்றும் இது நிலைத்து இருக்கும்’ என்பது போல, தன் இதழ்களை அந்த வெந்துளி மேல் வைத்தாள்.
மறைந்து நின்று பார்த்த சக்திக்கு, ஓடிச்சென்று சயனாவை அணைத்திட வேண்டும் என துடித்தது.
அடி கண்ணே எனதிருகண் மணியே – – உனைக்
கட்டித் தழுவ மனம் கொண்டேன்
– தனிமையில் சக்தியும் காதலும்.
சயனா சென்று விட்டாள். தன் ஆவல் மொத்தமாய் கவல் ஆன வருத்தத்தில் சக்தி.
சயனா
காதல் சொல்லிக்
காயம் தேற்றிட
வந்தேனடீ…
காதலும் காயமாய்
போனதடீ!!
– காயத்துடன் சக்தியும் காதலும்.