AOA- 16
AOA- 16
அவனன்றி ஓரணுவும் – 16
இந்தியாவிலேயே முற்றிலும் இயற்க்கை வேளாண்மைக்கு மாறிய பெருமை பெற்றிருக்கிறது சிக்கிம். இம்மாநில மக்கள் ராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் இல்லாமல் விவாசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் அதே தேசத்தில் வேளாணில் சிறந்து விளங்கய ‘நெற்களஞ்சியம்’ என்று போற்றப்பட்ட ஒரு ஊரில் விவாசயத்தை அழித்து மீத்தேன் வாயு எடுக்க போகிறார்கள்.
பிரபஞ்சன் அந்த தொலைக்காட்சியின் முன் அப்படியே சிலையாக சமைந்துவிட்டான். அப்போது அவனுடைய கைப்பேசியில் சேது எதிர்புறத்தில் பேசி கொண்டிருந்தது கூட அவனுக்கு மறந்து போனது.
“பிரபா… பிரபா” என்ற சேதுவின் கத்தல்கள் ஒன்றும் அவன் செவிகளை எட்டவில்லை. அந்தமான் தீவுகளில் நிலஅதிர்வு ரொம்பவும் அதீதமாக உணரப்பட்டதாக சொல்லி கொண்டிருந்தார் அந்த செய்தி வாசிப்பாளர்.
அவன் எதிர்நோக்கியிருந்த ஆபத்து அவர்களை ரொம்பவும் நெருங்கி வந்துவிட்டிருந்ததாக அவனுக்கு தோன்றியது.
அதேநேரம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் அரசாங்கம் பாதுக்காப்பு நடவடிக்கைகளை வேகமாக முடக்கிவிட்டிருந்தது. ‘டிசெஸ்டர் மேனேஜ்மென்ட்’ என்ற பெயரில் ‘டி’ என்ற ஒரு குழுவை அமைத்து 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வர போகும் பாதிப்பை தோராயமாகக் கணித்து முன்னெச்சரிக்கை திட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஆதலால் கடலோர மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு அவர்களே அனுப்பியிருந்தனர். அதேநேரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் செய்தியை பார்த்த மக்களும் பாதுக்காப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சனை இப்போது அது மட்டுமே அல்ல. அதை விடவும் பெரிய ஆபத்தல்லவா எல்லோரின் தலை மீதும் கத்தியாக தொங்கி கொண்டிருந்தது.
இயற்கை சீற்றத்தை விட மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பேரழிவு மிகவும் கொடூரமானது. உலக நாடுகள் பலவும் அணுமின் நிலையங்களின் ஆபத்தை உணர்ந்து அணுஉலைகளை மூடி கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. டெக்னாலஜியில் சிறந்து விளங்கும் ஜப்பானும் கூட மின்உற்பத்திக்கு அணுஉலை வேண்டாமென மாற்று வழிகளை தேடி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அணுகழிவு கட்ட இடம் தேடி கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பசிக்கு தன் சொந்த கையையே வெட்டி உண்ணும் அறிவீனமான காரியம் அது என்று அவர்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது?!
நாட்டின் வளர்ச்சிக்காக நம் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையையே பலிகடாவாக மாற்ற துணியும் அவலம். ஆனால் அது பற்றியெல்லாம் யோசித்து இனி ஒன்றும் ஆகிவிட போவதில்லை.
தான் கண்ட கனவுக்கான தீர்வுதான் என்ன? என்று பிரபஞ்சன் எண்ணலைகள் முழுவதுமாக அணுஉலைகளுக்கு ஏற்பட போகும் ஆபத்தினால் பரவ போகும் அதிபயங்கரமான விளைவுகள் குறித்துத்தான்.
என்ன யோசித்த போதும் அவனால் ஓர் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சிந்தனையோடு அரை மணி நேரம் கழிந்துவிட, அசைவின்றி அமைதியே உருவமாக சோபாவில் அமர்ந்திருந்தான் அவன்.
அப்போது ஷெர்லியும் ஹரியும் வீட்டிற்குள் நுழைய, அவர்களுடன் சத்யா குடும்பமும் வந்தது. அவர்களை பார்த்த நொடி அவன் வியப்போடு எழுந்து நின்றான்.
அப்போது ஹரி லோகநாதனின் தோள் மீது கை போட்டு, “ஒன்னும் நடக்காது லோகா! இது வெறும் எச்சரிக்கைதான்” என்று சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்து கொண்டிருந்தார். அதோடு அவர் குடும்பத்தாரையும் மரியாதையாக உள்ளே அழைத்தார்.
அப்போது லோகநாதனின் பார்வை அவருக்கு நேரெதிரே நின்றிருந்த பிரபஞ்சன் மீதுதான் விழுந்தது.
கொஞ்சம் கூட யோசிக்காமல் எல்லோர் முன்னிலையிலும் அவனை ‘அனாதை’ என்று சொல்லி அவாமானப்படுத்திவிட்டு இப்போது தன் குடும்பத்தோடு அவன் வீட்டிற்கே அடைக்கலம் தேடி வந்திருக்கிறோமே என்று அவர் உள்ளம் குற்றவுணர்வில் மருகியது. அதுதான் விதியின் விளையாட்டு என்பது!
பல நேரங்களில் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில்தான் சில அற்புதமான பாடங்களை மனிதன் கற்று கொள்ள நேர்கிறதே!
சத்யாவின் வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது சுனாமி தாக்க போகும் எச்சரிக்கை செய்தி காட்டு தீ போல் பரவியது. அடுத்த நொடியே அவர்கள் வீட்டில் குழுமியிருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டு சென்றுவிட, கால்மணி நேரத்தில் அந்த வீடே வெறிச்சோடி போனது.
அத்தனை நேரம் சந்தோஷமாக திருமண கொண்டாட்டத்தோடு குதூகலித்த அந்த வீடு மயான அமைதியில் மூழ்கியது. அந்த சமயத்தில்தான் ஷெர்லியும் ஹரியும் அங்கே வந்தார்கள்.
லோகநாதன் ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார்.
சத்யா தன் தந்தையிடம், “அப்பா வாங்க ப்பா… இங்கிருந்து உடனே கிளம்பலாம்” என்று அச்சத்தோடு தெரிவிக்க, அவரின் சகோதரிகளும் மனைவியும் கூட அதையேதான் உரைத்தார்கள். ஆனால் லோகநாதன் அதிர்ச்சியில் பதிலின்றி அமர்ந்திருந்தார்.
அவரை குழப்பமும், எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது என்ற கவலையும் பீடித்திருந்தது. அந்த வீடு அவர்கள் குடும்ப சொத்து. அவர்கள் சந்ததிகளாக மரியாதையோடு வாழ்ந்து வந்த இடம்.
கடல் மட்டம் வருடங்கள் கடந்து, தன் கரையை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து கொண்டே வந்திருந்தது. அதன் காரணத்தாலேயே இப்போது அவர்கள் வீடு கடற்கரைக்கு அருகாமையில் இருந்தது.
முந்தைய தடவை சுனாமி வந்த போது கூட அவர்கள் வீட்டிற்கு முன்பிருந்த மற்ற வீடுகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. அதன் காரணத்தால் இப்போது அவர்கள் வீடுதான் கரையையொட்டி இருக்கிறது.
பலரும் சுனாமி ஆபத்தை குறிப்பிட்டு அந்த வீட்டையும் இடத்தையும் விற்றுவிடும்படி முன்னமே எச்சரிக்கை செய்த போதும் கூட தங்கள் குடும்பம் வழிவழியாக வாழ்ந்த இடம் என்று அவர்கள் யார் வார்த்தைக்கும் அவர் மதிப்பு கொடுக்கவில்லை. அதுவுமில்லாமல் அந்த இடத்தின் மீதிருந்த பற்று காரணமாக தற்சமயம்தான் ஏகபோகமாக செலவு செய்து அவர் அந்த வீட்டை புதிப்பித்து கட்டியிருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் ஈகோவும் கூட. தான் பிறந்த ஊரில் கௌரவத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்ற ஈகோ!
இப்போது லோகநாதனால் தான் தவறு செய்துவிட்டோம் என்பதை ஏற்க முடியவில்லை. தன் தோல்வியை அவரால் தாங்கி கொள்ளவும் முடியவில்லை. அந்த வீட்டை அத்தனை சாதாரணாமாக விட்டுகொடுக்கவும் முடியவில்லை. அதில் தன்னுடைய கௌரவமும் ஈகோவும் அடங்கியிருப்பதாக எண்ணினார். ஆதலாலேயே தன் மனைவி மக்களிடம்,
“நான் என் வீட்டை விட்டு வர மாட்டேன்… சாவே வந்தாலும் அது என் வீட்டிலேயே நடக்கட்டும்… நீங்க எல்லாம் கிளம்புங்க” என்று சொல்ல, “அப்பா” என்று சத்யா அதிர அவர்கள் குடும்பத்தாரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.
மனிதன் தான் வாழும் காலங்களில் அதிகம் பற்று கொண்டுவிடுவது இந்த நிலையற்ற சொத்து பணம் மற்றும் ஆடம்பரத்தின் மீதுதான். நிரந்தரமாக இந்த பூமியில் இந்த சொத்துக்காக உறவுகள் நண்பர்களை கூட அவன் பகையாக மாற்றி கொள்ளும் அறிவீனத்தை செய்கிறான்.
வாழ்க்கையில் சாசுவதமானது உண்மையான அன்பு என்பதை இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள்தான் மனிதனுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்தி கொண்டிருக்கின்றன.
குஜராத்தில் பூகம்பம் வந்த போது செல்வந்தர்கள் பலரும் தன் சொத்து வாசல் வீடு இழந்து நடுத்தெருவிற்கு வர நேர்ந்தது. புகுஷிமா சுனாமியில் பாதிக்கப்பட்ட பலரும் வசதி படைத்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பாட்டில் தண்ணீர்க்காகவும் ஒரே ஒரு சாப்பாடு பொட்டலத்திறக்காகவும் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று வாங்கவேண்டியிருந்தது.
இதையெல்லாம் பார்த்த போதும் மனிதனின் சொத்து பணம் மீதான மோகம் தீர்ந்தபாடில்லை. அடுத்த வீட்டு கூரை எரியும் போது வேடிக்கையாகதான் இருக்கும். அதுவே தன் வீட்டில் எரியும் போதுதான் ஆபத்தின் தீவிரம் புரியும்.
இந்த சூழ்நிலையில்தான் ஹரி லோகாநாதன் வீட்டு வாயிலில் வந்து நின்றார். தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருந்த செய்தியை ஹரி அப்போதுதான் பார்த்தார். பிரபஞ்சனின் இன்ஸ்டிங்கட் பற்றி முன்னமே தெரிந்த அவருக்கே இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்ததெனில் ஷெர்லியை பற்றி சொல்லவா வேண்டும். அவள் விய்யபின் விளிம்பில் நின்றாள்.
ஆனால் எல்லாம் ஒரு சில வினாடிகள் மட்டுமே. ஹரி ஷெர்லியிடம் உள்ளே வர சொல்லிவிட்டு அவரும் உள்ளே நுழைந்தார். சரியாக அப்போது லோகாநாதன் தீர்மானமாக தன் வீட்டை விட்டு புறப்பட மாட்டேன் என்று சொல்ல,
“சூப்பர்… ரொம்ப சூப்பர்” என்று சொல்லி கை தட்டி கொண்டே ஹரி உள்ளே நுழைந்தார்.
லோகாநாதன் முகம் கோபத்தால் சிவக்க, ஹரி சிரித்த முகத்தோடு, “நீ வீட்டை விட்டு வரமாட்டேன்னா… அப்போ நீ இங்கேயே ஜலசமாதி ஆக போறேன்னு சொல்லு” என்று எள்ளிநகைத்தார்.
லோகாநாதன் கோபத்தோடு, “நீ ஏன்டா இங்க வந்த? முதல வெளியே போ” என்று மிகுந்த எரிச்சலோடு சொல்ல, ஹரியின் முகத்திலிருந்த புன்னகை அந்த நொடி மறைந்தது.
“நீ ஒரு நல்ல நண்பனா இருக்க லாய்க்கி இல்லைன்னு தான் நினைச்சேன்… ஆனா நீ உன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இல்லை… உன் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இல்ல… மொத்தத்தில் நீ ஒரு நல்ல குடும்ப தலைவனும் இல்லை” என்றார். யாராலும் அந்த நொடி எதுவுமே பேச முடியவில்லை.
“ஹரி” என்று லோகநாதன் சீற்றமாக கத்த,
“உண்மையை சொன்னா கோபம் வருதா? ஒரு குடும்ப தலைவனா முன்னாடி நின்னு உன் பொண்டாட்டி புள்ளைங்களை உயிரோட காப்பாத்தணும்னு நினைப்பியா… அதை விட்டுட்டு இந்த கல்லும் மண்ணால கட்டின வீட்டுக்கு என்னவாயிடுமோன்னு இந்த நேரத்தில யோசிச்சிட்டு இருக்கியே… மனுஷனாடா நீ?!” என்று ஹரி பதிலுக்கு அதே கோபத்தோடு கேட்டார்.
லோகாநாதனின் மனதில் அந்த கேள்வி ஈட்டியாக பாய்ந்தது. சில நொடிகள் அந்த இடத்தை கனத்த மௌனம் ஆட்சி செய்ய அந்த சூழ்நிலையை தம் கையில் எடுத்து கொண்ட ஹரி நிதானமாக,
“ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ லோகா! சொத்து, பணம், வீடு எல்லாம் போனா சம்பாதிச்சிக்கலாம்… ஆனா உறவுகள் அப்படி இல்ல” என்றார்.
ஹரி ரொம்பவும் சாதாரணமாக சொல்லிவிட்ட போதும் அது ஹரியின் வாழ்க்கையில் நடந்த கொடூரத்தை லோகநாதனுக்கு நினைவூட்டியது. சொந்த பந்தங்களை மொத்தமாக இழந்து ஊருக்கு தனியாளாக திரும்பிய ஹரியின் நிலைமை மனதை நெகிழ்த்தியது.
ஹரி லோகாநாதன் தோளில் உரிமையோடு தட்டி, “எழுந்திரு லோகா… முதல இங்க இருந்து கிளம்புவோம்… யாருக்கும் எதுவும் ஆக கூடாது… அதுதான் முக்கியம்” என்று துரிதப்படுத்தினார். அந்த விழிகளில் பகைமை இல்லை. அன்பும் அக்கறையும் நிறைந்திருந்தது.
லோகநாதன் வியப்போடு ஹரியின் முகத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் அந்த அதிர்ச்சியிலிருந்து தேறி கொண்டபடி,
“எங்க கிளம்புறது?” என்று கேட்டார்.
“வேறு எங்க? நம்ம வீட்டுக்குத்தான். அங்கே கண்டிப்பா சேஃப்தான்” என்றார் ஹரி.
அந்த நொடி லோகாநாதன் மனதில் ஹரி வானளவு உயர்ந்து நின்றார். அதுவும் ஹரி தன் குடும்பத்தை இழந்து ஆதரவற்று நின்ற போது அவன் சொத்தை தான் அபகரிக்க திட்டமிட்டோம் என்று அவர் உள்ளம் கூனிகுருகி போனது.
லோகாநாதன் கண்கள் கலங்கிவிட்டது. நண்பனை கட்டியணைத்து கொண்டார். ஹரியின் விழிகளிலும் நீர் நிறைந்தன. ஆனால் அந்த உணர்ச்சிக்களுக்கெல்லாம் இப்போது இடம் கொடுக்காமல்,
“லோகா இந்த மாதிரி இமோஷனல் சீனுக்கு எல்லாம் இப்போ டைம் இல்ல… முதல கிளம்பு… வீட்டுக்கு போலாம்” என்றார். அந்த சூழ்நிலையிலும் எல்லோர் முகத்திலும் புன்னகை எட்டி பார்த்தது.
அதேசமயம் அத்தனை நேரம் அப்பாவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் நின்றிருந்த சத்யாவிடம் சென்ற ஷெர்லி, “கம்மான் சத்யா… சூன்… தேவையான திங்க்ஸ் டாகுமென்ட்ஸ் எதாச்சும் இருந்தா பாஸ்ட்டா எடுத்து வைச்சிக்கோ… லெட்ஸ் மூவ்” என்றாள்.
அவள் அவ்விதம் சொல்லவும்தான் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த சத்யா சுயநினைவு பெற்று வேகமாக அறைக்குள் சென்று தேவையான சில முக்கிய பத்திரங்கள் சான்றிதழ்கள் மற்றும் வீட்டிலிருந்த பணம் முதலியவற்றை ஒரு பெட்டியில் அடுக்கி எடுத்து வைத்து கொண்டு அவர்களோடு புறப்பட்டான். அதன் பின் எல்லோரும் பிரபஞ்சன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
லோகநாதன் நேராக வந்து பிரபஞ்சன் கைகளை பிடித்து கொண்டு கண்ணீரோடு, “என்னை மன்னிச்சிடு பிரபா” என்றார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்… நீங்க முதல்ல வந்து ரிலேக்ஸ் ஆகுங்க” என்று லோகாநாதனை அவர் குடும்பத்தாரையும் மரியாதையாக வரவேற்று அமர வைத்தான்.
ஊடகங்கள் சூழ்நிலையை தங்களால் முடிந்தளவு பரபரப்பாக மாற்றி கொண்டிருந்தன. எல்லோருடைய கவனமும் அதன் மீது மட்டும்தான்.
பிரபஞ்சன் அந்த டென்ஷனை தாங்க முடியாமல் சந்தடியின்றி வெளியே தோட்டத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்.
தொலைகாட்சியில் வந்த செய்தி வேகவேகமாக அனைத்து சமூகவலைத்தளங்களிலும் பரவ தொடங்கியது. அதுவும் ஒன்றை ஒன்பதாக ஏற்றி சொல்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.
சென்னையே மொத்தமாக கடலில் மூழ்க போகிறது என்ற ஒரு அவதூறை சமூக வலைத்தளங்கள் பரப்பியதன் விளைவாக , பேருந்து நிலையம் தொடங்கி விமான நிலையம் ரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல் துறையினர் அவதியுற சென்னையே அன்றைய தினத்தில் அல்லோலகல்லோலப்பட்டு கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படியாக பெரும்பான்மையான மக்கள் ஊரை விட்டு சென்றாவது தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டால் போதுமென்று ஓடி கொண்டிருக்க, இந்த ஆபத்தான சூழ்நிலையையும் மீம்ஸ் போட்டு காலாய்த்து அதை வைரலாக்கி கொண்டிருந்தது மற்றொரு கூட்டம்.
அது அல்லாது இன்னொரு பைத்தியக்கார கூட்டம் சுனாமி வரும் போது செல்பி எடுக்க வேண்டுமென்று கைபேசியோடு கடலை நோக்கி படையெடுத்து கொண்டிருந்ததால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட பாதுக்காப்பு படையினருக்கும் காவல் துறையினருக்கும் கதிகலங்கி போனது.
இவற்றையெல்லாம் தாண்டி இந்த பூமியில் மனிதநேயம் மொத்தமாக அற்று போய்விடவில்லை என்பதற்கு சாட்சியாக கடலோரத்தில் வாழும் மக்களுக்கு சில தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்க்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
இந்த பாதுக்காப்பு நடவடிக்கைகளின் முக்கிய பங்காக தமிழ்நாட்டின் கடலோரத்தில் இயங்கி கொண்டிருந்த அணுஉலைகள் இரண்டும் சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
ஆனால் அந்த அவசரத்திலும் பதட்டத்திலும் ஊழியர்கள் அதன் இயக்கங்களை நிறுத்திய போது கல்பாக்கம் அணுஉலையிலிருந்த ஒரு யூனிட்டில் மட்டும் சில இயந்திர கோளாறு காரணமாக மெலிதாக அணுக்கசிவு ஏற்பட்டதை அங்கிருந்த ஊழியர்கள் யாருமே கவனிக்கவில்லை. அவர்கள் எல்லோருமே பதட்டத்திலிருந்த காரணத்தால் அதை அவர்கள் கவனிக்கும் மனநிலையிலும் இல்லை.
***
தோட்டத்தில் அமர்ந்திருந்த பிரபஞ்சனிடம் ஷெர்லி பேசி கொண்டிருந்தாள்.
“இன்னும் ஏன் டென்ஷன்… இனிமே கவர்ன்மென்ட் எல்லாத்தையும் பார்த்துக்கும்”
“எங்க ஊரு கவர்ன்மென்டா?” என்று ஏளனமாக அவளை பார்த்து சிரித்தவன், “எங்க அரசாங்கத்தோட கடமை உணர்ச்சி பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியாது ஷெர்லி” என்றான்.
ஷெர்லிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் படபடப்பை குறைக்கத்தான் அவனிடம் பேச வந்ததே. ஆனால் அவனோ எல்லாம் கை மீறி போய்விட்டதென்ற மொத்தமாக விரக்தி நிலையில் அமர்ந்திருந்தான்.
அந்த சமயம் சேது அவர்கள் வீட்டின் வாயிலுக்குள் அவசர அவசரமாக உள்ளே நுழைய,
தோட்டத்திலிருந்த பிரபஞ்சன் அவனை பார்த்துவிட்டு, “சேது நான் இங்கே இருக்கேன்” என்று குரல்கொடுத்தான்.
சேது அவனை பார்த்தும் பாய்ந்து கொண்டு வந்து,
“டே! என்னடா நடக்க போகுது… நீ நேத்து சொன்னதுக்கும் இன்னைக்கு நடக்கறதுக்கும் ஏதோ பெருசா சம்பந்தம் இருக்கு மாதிரி தோணுது?” என்று கேட்டான். அருகில் ஷெர்லி நின்று கொண்டிருந்ததை சேதுவின் மூளை பதிவு கூட செய்யவில்லை. அவன் மனநிலை அப்படியிருந்தது.
சேது மீனவ குடும்பத்தில் பிறந்தவன் ஆதலால் அவன் ஏற்கனவே ஒருமுறை இந்த சுனாமியின் கோர தாண்டவங்களை கண்ணெதிரே பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறானே?
நண்பனை அமைதியடைய செய்ய எந்தவித முயற்சியும் பிரபா மேற்கொள்ளாமல் அவன் முகத்தை பார்த்து, “நுய்க்கிளியர் டிசெஸ்டர்!!!” என்று சொல்ல சேது அதிர்ந்தான்.
பிரபா அப்போது சேதுவிடம் விளக்கமாக அவன் இன்ஸ்டிங்கட் பற்றியும் இப்போதைய சூழ்நிலையில் குறித்தும் அதனால் அவனுக்கு உண்டான பயம் குறித்தும் உரைக்க, சேது முகம் இருளடர்ந்து போனது. அவன் உடல் வியர்வையில் நனைந்தது.
சேதுவின் வீடும் கல்பாக்கம் டவுனில்தான் உள்ளது. பிரபாவின் கனவு மட்டும் நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை அவனால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அதற்கு பிறகு எந்த நிலைமையிலும் அந்த இடத்தில் வசிப்பதை அவன் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த மொத்த நிலமுமே செர்னோபில் போன்று ஓர் பேரழிவின் சின்னமாக மாறிவிடும்.