Kvi-15

அதிகாலை இரண்டு மணியளவில், சயனாவிற்கு விழிப்புத் தட்டியது. அதற்கு மேல், உறக்கம் இரக்கமே இன்றித் தூரே சென்றது.

எழுந்து அமர்ந்து விட்டாள்.

நிறைய விடயங்கள் சிந்தைக்குள் சிக்கிச் சுற்றிக் கொண்டே இருப்பது போல் இருந்தது.

அறையை விட்டு வெளியேறி, நேராக தன் தாயார் அறைக்குச் சென்றாள்.

தாயார் மறைவிற்குப் பின், படுக்கை விரிப்புக் கூட மாற்றவில்லை. அந்த வாசம், இதற்கு முன்பு ஒருமுறை, இந்த வழக்கில் தடைபட்டு நிற்கும் போது சுவாசமாக இருந்தது.

இப்பொழுதும் அதே!!

நிதானமாக நடந்துசென்றவள், படுக்கையில் அமர்ந்து கொண்டாள். யோசிக்க ஆரம்பித்தாள்.

அமைச்சரின் திட்டம் வேறு ஏதாவது இருந்தால், தான் எப்படி அதனைச் சமாளிக்கப் போகிறோம் என்று!

எதற்கும் ஒருமுறை அந்தப் ‘பில்டர்’ எண்ணிற்கு அழைப்பு விடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்து, தன் அறைக்கு விரைந்து சென்றாள்.

கைப்பேசி எடுத்தாள்.
அழைப்பு விடுத்தாள்.

ஆனால், நடுராத்திரியில் அழைப்பு வந்ததாலோ என்னவோ எரிந்து விழுந்தார், பில்டர்.

அந்த எரிச்சல், அவளையும் ஒட்டிக் கொண்டது. டிரெட் மில்லை ஓட விட்டு, அதில் சிறிது நேரம் ஓடி, தன் எரிச்சலை எரித்துக் கொண்டாள்.

அந்தக் களைப்புடன் உறங்கினாள்.

முக்கிய நாள்…

இரவின் தூக்கமின்மை, பகலில் மதியம் இரண்டு மணிவரைக்கும் தூக்கம் தந்தது.

எழுந்தாள்.
எழுந்தவுடன், சயனா செய்தது, பீட்டருக்கு அழைப்பு விடுத்ததுதான்.

“ஹலோ யாரு?” – பீட்டர்.

“நான் சயனா, நேத்து நைட்டு.. ” – பாதியில் நிறுத்தப்பட்டது பேச்சு. அதற்கு மேல், பீட்டர் புரிய வேண்டும்.

“சொல்லும்மா. உன் நம்பர் பதிஞ்சி வைக்கல. அதான் ” – புரிந்து கொண்டார்.

“ஓகே அண்ணே, ஆட்டோ ரெடியா?? ”

“ம்ம்ம்… ஆட்டோ ரெடிம்மா ” – சொல்லியது பதில் மட்டுமல்ல. அவள் மீது, அவர் கொண்ட மரியாதையும்.

“ஆட்டோல நம்பர் பிளேட் வேண்டாம். சந்தேகம் வரும். ஏன்னா அவங்க எல்லா வெகிள்லயும் செக் பண்ணி கிளியர் பண்ணுவாங்க. ”

“புரியுதும்மா ”

“நான், திரும்பி ஒரு எட்டு மணிக்கு கால் பண்ணி, எக்சாக்ட் பிளேஸ் என்னன்னு டிடெயில்ஸ் சொல்றேன். ”

“சரிம்மா”

“நீங்க பத்து மணிக்கு முன்னாடியே போயிரனும்”

“சரிம்மா”

“அதேமாதிரி ஸ்பாட்ல ஏதாவது சத்தம் கேட்டவுடனே வந்திருக்கனும்”

“ம்ம்ம்”

“அப்புறம் ஸ்பாட்ல, நீங்களும் நானும் மட்டும்தான் இருப்போம். அப்போ என்ன நடக்குதோ, அதுக்கு ஏத்தமாதிரி நம்ம பிளான் மாறலாம். ”

“ம்ம்ம் சரிம்மா”

“சரி, வச்சிரேன்”

அதற்குமேல் பீட்டரிடம் சொல்வதற்கு, ஏதும் இல்லை. அதனால், அத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
அலுவலகத்திற்கு நுழைந்தாள்.
இதற்கிடைப்பட்ட தூரம் ராயலின் மீது அமர்ந்தபடியே கழிந்தது.

கனகா மேம், அவளுக்கு முன்னரே வந்திருந்தார். அவருக்கு எதிரே சென்று அமர்ந்து கொண்டாள், சயனா.

நிமிர்ந்து பார்த்தார். – கனகா மேம்.
பார்த்ததும் சிரித்தாள். – சயனா.

“வா, என்னடா இவ்வளவு லேட்டா வந்திருக்க?”

“நைட்டு சரியா தூக்கமில்ல. அதான், காலைல தூங்கிட்டேன்” – சயனாவின் குரல் கூட யோசித்தது.

“டிப்பிரஸன்னா பீல் பண்றியா? ”

“ப்ச்.. ரேவ் எங்க?” – நேற்றையதினம் முடிந்து போன வார்த்தை பரிமாற்றம், இன்னும் தொடரவில்லை.

அலைபேசியில் இருமுறை முயன்று பார்த்தாள். பலனில்லை.

“நான்தான், ரேவ வேற ஒரு கேஸ் ரிலேட்டடா, இன்வெஸ்டிகேஷனுக்கு அனுப்பிருக்கேன்.”

“எப்ப வருவா?”

“இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சப்புறம், வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன்”

” ஏன் மேம்?? ” – கனகா மேம் முன்னே, ரேவ் கூட பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தாள். அது முடியாமல் போன ஏமாற்றம், இந்த ‘ஏன் மேம்?’.

” அவ ஏற்கனவே ரொம்ப கவலப்படுறா. நீ, கன்னோட போறது பார்த்தா என்ன மாதிரி பீல் பண்ணுவாளோ?? ”

“ம்ம்ம், சரிதான் ”

“புரிஞ்சுக்கோ.  ”

“ஐ கேன் அன்டர்ஸ்டேண்ட்”

“ஆமா, நீ எதுக்கு அவளைத் தேடுற”

“தெரியல. போறதுக்கு முன்னாடி அவளப் பார்த்திட்டுப் போலாம்னு, நினைச்சேன். சம்திங்!! ஸோ தேட். ”

“அப்போ, போஃன் பண்ணி வரச் சொல்லவா”

“வேண்டாம்… வேண்டாம்” – திட்டம் முக்கியம், உணர்வுகளுக்கு இரண்டாம் இடமே! ஆதலால் ,  இந்தப் பதில்.

“பிளான் என்ன? என்ன யோசிச்ச? அத முதல்ல சொல்லு”

உதடு சுழித்து, ‘மாட்டேன்’ என்பது போல், தலையை ஆட்டினாள்.

“எனக்கே சொல்ல மாட்டேல…” – சயனா மீது கொண்ட நம்பிக்கையில், அதற்கு மேல் கேட்கவில்லை.

“சொல்றேன் மேம். பர்ஸ்ட் எனக்கு ஒரு டவுட் ”

“கேளுடா”

“நான் கன் யூஸ் பண்ணா, என்னோட வேலைக்குப் பிராப்ளம் வருமா?? ”

“கன் யூஸ் பண்ற மாதிரியா பிளான் போட்டிருக்க?? அப்படி செய்ய மாட்டியே” – இதுவும் நம்பிக்கைதான்.

“நான் யூஸ் பண்ற மாதிரி ப்ளான் போடல. ஆனா, யூஸ் பண்ணற மாதிரி சிச்சுவேஷன் வந்தா?? ”

“கண்டிப்பா பிரச்சனை வரும். சரி பிளான் என்ன?? ”

“இதுதானு சரியா தெரியல மேம். பட், கன் வச்சி பிளான் இருக்கு. எக்சாக்ட்டா சொல்ல முடியல”

“கன் வச்சினா? பிளான்தான் என்ன?”

அப்போது கதவை திறந்து கொண்டு, காவல் வந்தது.

‘இதுதான் என் ப்ளான்’ என்பது போல், கனகா மேமைப் பார்த்தாள், சயனா. சிரித்துவிட்டார்.

நேற்றைய நிகழ்வுகளை நினைத்து, காவல் குறைபட்டுக் கொண்டே வந்து, அமர்ந்தது.

நேற்று, அடிகளைக் கொண்டு காயப் படுத்தியவள்… இன்று, அலட்சியம் கொண்டு காயப்படுத்தினாள்…

“ரெடியா இருக்கியா? ” – காவல்.

“ம்ம்ம், கன் எங்க?

தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொடுத்தது, காவல்.

சயனா, துப்பாக்கியைக் கையில் வைத்து முன்னும் பின்னும் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.

“எல்லாம் ஸ்டேஷன் கன்தான். லெட்ஜர்ல சைன் பண்ணிதான் எடுத்திட்டு வந்திருக்கேன்”

‘என்ன ஒரு விவரம்? லெட்ஜர்ல வேற, சைன் போட்டிருக்கியா” என்றதை சிந்தைக்குள் இருத்திக் கொண்டாள், சயனா.

” ஏரியா டிடெயில்ஸ் சொல்லு? ”

காவல், சம்பவம் நடக்கப் போகும் சாலையின் அடையாளம் சொன்னது.

அதன்பிறகு….
மூன்று பேரின் குரல், வாய் திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் மனக்குரல் பேசியது.

‘இவன், நம் கூட வந்து விடுவானோ? ‘ – இது சயனா.

‘இவள், தன்னை கூப்பிடுவாளோ? ‘ – இது காவல்.

‘இவள், திட்டம் வெற்றியடையுமா?.’ – இது மேம்.

சற்று நேரம், மனக் குரல்களின் ஒலி மட்டுமே, அவ்வறையில்.

காவல் புறப்பட எழுந்து கொண்டது. நேற்றைய அவமானத்திற்குத்தான் பதில் சொல்ல முடியவில்லை. இன்றைய அலட்சியத்திற்காகவாது பதில் சொல்லியே ஆக வேண்டும்.

சயனா அமர்ந்திருந்த நாற்காலி பின்புறம் நின்று கொண்டு…

“ஆமா, உனக்கு குறி பார்த்துச் சுடத் தெரியுமா??” கேட்டது நக்கலாக.

சிக்கலை விட்டுவிட்டு, இந்த நக்கலை முதலில் சம்மட்டி அடி அடிக்க வேண்டும்.

“சோல்டர் ஸ்டெர்ன்த் இருக்கா?? இல்லன்னா சோல்டர் போயிடும்”

சிறிதளவும் யோசிக்காமல், எழுந்தாள். நாற்காலியை காலால் தள்ளி விட்டாள். அந்தத் துப்பாக்கியைக் காவலின் நெற்றிப் பொட்டில் அழுத்தமாக வைத்தாள்.

“வேனும்னா, இங்கயே ஒரு டிரையல் பார்க்கலாமா??”

பயத்தில், காவலின் தொண்டைப் பகுதியில், எச்சிலை விழுங்குவது தெரிந்தது. சிறு சிறு வியர்வை க் குமிழ்கள் கூட, ஆங்காங்கே!!

“எப்ப பார்த்தாலும் நீயே வந்து நிக்கிற?? இது, உன்னய எங்க போய் நிக்க வைக்கப் போகுதோ?? பார்த்து இரு” – இதுவும் விதைதான். அறுபடை நடக்குமா??

சயனாவின் கரத்தைத் தட்டிவிட்டு, “நான் கிளம்புறேன்” என்று காவல் கிளம்பிவிட்டது.

காவல் சென்றதும்…

பீட்டருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு சாலை விவரங்களைச் சொன்னாள்.

சிறிது இடைவெளியில், சயனாவும் கிளம்ப ஆரம்பித்தாள்.

கனகா மேம் எழுந்து வந்து, அவளைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

“எனக்கு இந்தக் கேஸ், ஸ்டார்ட் பண்ணப்போவே தோணுச்சு, இதால உன் லைஃப்பே மாறிப் போயிரும்னு. பயமா இருக்கு. கொஞ்சம் பாத்து நடந்துக்கோ”

“ம்ம்ம்”

“சயனா, கேர்ஃபுல்லா இருடா. நான் முழிச்சிதான் இருப்பேன். எதுனாலும் போஃன் பண்ணு. பிரபுவும் ஹெல்ப் கேட்டா பண்ணுவார்”

‘சரி சரி’ என்று தலையாட்டியபடியே கிளம்பினாள்.

ராயல், ரௌத்திரமாகக் கிளம்பியது.

இரவின் இருளின் நேரம் 11 : 30.

சிறிது நேரம், இருளில் நனைந்து பயணம்.
சிறிது நேரம், மரத்தின் கிளை வழியே விழுந்த சாலை விளக்கு வெளிச்சம் வழியாகப் பயணம்.

சயனா சம்பவச் சாலைக்கு, நேராக செல்லவில்லை. அந்தச் சாலையை சுற்றியுள்ள மற்ற சாலைகளுக்குச் சென்று நோட்டம் விட்டாள்.

திட்டப்படி, அந்த ஒரு சாலை மட்டுமே ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், சுற்றுவட்டாரம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாதது போல இருந்தது. அதைப் போல், சாலை கொஞ்சம் ஒதுக்குபுறமாகத் தெரிந்தது.

திட்டம்தான் என்ன???

எல்லாவற்றையும் கண்காணித்த விட்டு, யோசித்தபடியே பயணத்தை மீண்டும் தொடர்ந்தாள்.

இரவின் இருளின் நேரம் 12:30.

திட்டங்கள் திசைமாறுகிறதோ!

இப்படித் தோன்றியவுடன், தான் அதீத எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று நினைத்தாள்.

சட்டென்று ஒரு எதிர்பார்ப்பு. முந்தைய நாளைப் போல, இன்றும் சக்தி பின் தொடர்வானா?? என்று நினைத்தாள். வண்டியை நிறுத்திப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.

இல்லை என்றதும்!
மட்டியைக் கடித்து, பின்னந்தலையில் அடித்துக் கொண்டு கிளம்பினாள்.

இரவின் இருளின் நேரம் 12:45.

மீண்டும் பயணம்…

ராயல், தார் ரோட்டில் வேகமாகச் சென்றது. வந்து கொண்டிருந்த முக்கிய சாலை முடிந்தது. கிளைச் சாலைப் புறமாகத் திரும்ப வேண்டும்.

ஒருமுறை யோசித்தாள்.ரேவிற்காக கனலினிக்காக இதைச் செய்ய வேண்டும்.

பின் தெளிவாய் முடிவெடுத்து, கிளைச் சாலையின் உட்புறத்தில் வழியே செல்லத் தொடங்கினாள்.

கடைகளின் எண்ணிக்கை பெரிதாக இல்லை. வீடுகள் அரவே இல்லை. ‘ஏன் இப்படி ஒரு இடத்தை தேர்வு செய்தார்கள்’ என்று யோசித்தபடியே பயணம்.

சில வழிகளில்…
என்பீல்டின் முகப்பு விளக்கு ஒளி, அவளை முன்னடத்திச் சென்றது.

சில வழிகளில்…
இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையில் தெரு விளக்கின் ஒளியில் பயணம் நீண்டது.

சில வழிகளில்…
பூச்சிகள் கண்கள் முன்பு ஆய்ந்தன.

சிறிது தூரம் சென்ற பிறகு, அந்தச் சாலையின் முடிவில் வந்து நின்று கொண்டாள்.

ஒரு மறைவான இடத்தில், வண்டியை நிறுத்தி ஸ்டான்ட் போட்டாள்.

வண்டியிலிருந்து இறங்கினாள்.

கண்களைச் சுழல விட்டு, ஆட்டோ நிற்கிறதா? என்று பார்த்தாள். தூரத்தில் நிற்ப்பது தெரிந்தது. ‘பீட்டர் இருக்கிறார்’, என்று ஒரு நிம்மதி கிடைத்தது.

விடியலுக்கு மிக முந்தைய உலகம்!

இரவின் இருமை அதீத அளவு இருந்தது!
அரவமே இல்லா அல் பொழுது!
வரையறுக்க முடியா அமைதி!!

இரவின் இருளின் நேரம் 1:00.

தன் மீது, இருளும் வெளிச்சமும் சரிவிகிதத்தில் விழும்படியான, ஒரு இடத்தைத் தேடினாள்.

அவ்வாறு தேடிக் கிடைத்த இடத்தில் இருந்த மரத்தின் பின்னால் சென்று, ஒளிந்து கொண்டாள்.

சிலையாய் நின்றபடியே சில நிமிடங்கள் சென்றன.

சூழ்நிலை சரியில்லாததால், சுற்றுப் புறத்தின் ஒவ்வொரு திசையையும் செவியால் வாசித்தாள்.

அவளுடைய அங்கத்தின் ஒவ்வொரு அணுக்களும் சிஐடி மூளையாக மாறி இருந்தது. இனி சற்று நேரத்திற்கு, வேறு எந்த ஒரு உணர்வுக்கும் அங்கே இடமில்லை!!

காத்திருந்தாள்…
சுற்றிலும், அவர்கள் செய்திருந்த, ஆள்நடமாட்டமின்னமை, அவளுக்குச் சந்தேகத்தை அதிகப் படுத்தியது.

ஆனால், தேர்தல் வருவதால் அமைச்சர் பெரிதாய் எதுவும் செய்ய மாட்டார் என்று நம்பிக்கை இருந்தது.

இரவின் இருளின் நேரம் 1:35.

அந்தக்கணம், மனிதக் காலடிப் பாதங்கள் நகர்ந்திடும் ஓசை கேட்டது.

நன்றாகச் செவியைத் திறந்து வைத்துக் கேட்டாள்.

இப்பொழுது,
மூன்று ஜோடி காலடி ஓசைகள் கேட்டது.

அந்த ஓசைகள், தன்னை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதைப் போல் உணர்ந்தாள்.

முதலில் எந்தப் பக்கத்திலிருந்து ஓசை வருகிறது எனப் பார்க்க வேண்டும். செவியை செம்மையாகப் பயன்படுத்தினாள்.

தெரிந்துவிட்டது.
பின்புறம் இருந்து ஒன்று. முன்புறம் இருந்து இரண்டு.

ஆக மொத்தத்தில் மூன்று பேர், தன்னைச் சூழ்ந்துள்ளனர் என்று தெரிய வந்தது

அதற்கு அடுத்த கணமே, அவளுக்கு புரிந்து விட்டது. அமைச்சரின் திட்டம் என்னவென்று!

தன் கையிலுள்ள துப்பாக்கியைப் பயன்படுத்த முடியாது.

தற்காப்புக்காக என்ன செய்ய என்று யோசித்தாள். அதுவும், உடலை இரு புறமும் அசைவு கொடுத்துக் கொண்டே யோசித்தாள்.

முடிவு எடுக்க வேண்டும், ஆனால் என்ன முடிவு எடுக்க… குழம்பினாள்.

ஆனால், சயனா முடிவெடுக்கும் முன்பே, முன்னிருந்த உருவத்தின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து வெளி வந்த தோட்டா, அவளின் இடது தோள் பட்டையை உரசிக்கொண்டு சென்றது.

சைலன்சர் துப்பாக்கி அல்லவா!
சயனா பக்கத்து, ஒரே நபரான பீட்டரால் உதவிக்கு வர இயலவில்லை.

இங்கே,
அவள் உடலின் அசைவினால், குறி தவறியிருக்கிறது.

தோட்டா உரசிய வேகத்தால், வலி தாங்க முடியாமல் குனிந்து விட்டாள். ஆனாலும் சத்தம் செய்யவில்லை.

அடுத்த நிமிடமே, மற்றொரு தோட்டா.
அவள் குனிந்திருந்ததால், மரத்தின் பட்டையை உரசி, எடுத்துக் கொண்டு சென்றது.

சயனாவின் தோள் பட்டையிலிருந்து, செந்நீர் சொரிய ஆரம்பித்தது.

*******

Epi 16 promo

அதீத வலியாலும், அவர்களது அடுத்த முயற்சியாலும், தன் கட்டுப்பாட்டை இழந்தாள், சயனா.

தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி, துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தாள்.

அவளுக்கு உருவங்கள் இருந்தது, ஓரளவே தெரிந்தது.

முட்டியின் கீழாவது சுட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், என்று நினைத்தாள்.

முதலில் பின்புறம் இருந்த உருவம் மீது ஒரு துப்பாக்கிச்சூடு…

பின் முன்புறம் இருந்த உருவங்கள் மீது இரு துப்பாக்கி சூடுகள்…


துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டது.
பீட்டர் வந்தார்.
….
….
….



விடியப் போகும் வானத்தை நோக்கி, இருளாகிப் போன தன் வாழ்வை நினைத்து ‘அம்மா’ ஆங்காரமாய் கத்தினாள்.

….
….
…..
..

என்பீல்டு உறும மறுத்தது..
இதயம் இறும ஆரம்பித்தது…

பின்புறமாக நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றி யோசித்தாள்.

இதயம் இறுமுகிறதே ‘சக்தியோ’ என நினைத்தாள்.

“சக்தி… சக்தி..” என்று…


பின்புறமிருந்த உருவத்தின் திசை நோக்கி ஓடினாள்.

அருகில் சென்றாள்.
தோட்டா துளைத்ததால், தொடைப் பகுதியில் இருந்து, குருதி கொட்டிக் கொண்டிருந்தது.

….

“கனலை விழுங்கிய என் இரும்பியே” – அந்த ‘ழ’கரத்தில், அவன் தந்த அழுத்தத்தில், அவள் அழுத்தம் கொண்டாள்.