vav1
vav1
அன்பான வாசகர்களே!
கதை நிகழ் கால சம்பவத்தை ஒட்டி சென்றாலும், கற்பனை நிறைந்தது என்று தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கதையில் வரும் சில சம்பவங்களும், கருத்துக்களும் நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலத்திலும் இத்தகைய எண்ணங்களும், நம்பிக்கைகளும் மக்கள் மனதில் உள்ளனவா என்ற கேள்வி வாசகர்களாகிய உங்கள் மனதில் எழுந்தால், “ஆம்…” என்பதே என் அழுத்தமான பதில்.
வா… அருகே வா… என்ற தலைப்பு கதையில் பல இடங்களைத் தொட்டுச் செல்லும். தலைப்பு பயணிக்கும் பாதையில் நாமும் கதையோடு பயணிப்போம்.
வா… அருகே வா! – 1
கும் இருட்டு. அடர்ந்த காடு. சற்று முன் பலத்த காற்று வீசி அடங்கியிருக்கும், என்பது போல அங்குப் பேரமைதி நிலவி, செடிகள், மரங்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தது. மலை கடினமான பூத அரசன் போல் இறுகிக் காட்சியளித்தது.
மிகப் பெரிய நெருக்கமான மரங்கள் ராட்சச உருவம் போல் காட்சி அளிக்க, அப்பொழுது சரேல் என்ற சத்தம். சின்ன சின்ன கூடாரம் அமைத்து, அங்கு தங்கி இருந்தவர்கள் கண்களில் சுதாரிப்பு இருந்தாலும், இந்த சரேல் என்ற சத்தத்தில், அந்த சுத்தரிப்பு இன்னும் அதிகரித்தது. அவர்கள் கையிலிருந்த துப்பாக்கி செயல் பெற துடிப்பாக நிமிர்ந்து நின்றது. அதன் பின் அங்கு அதீத அமைதி நிலவியது.
அந்த கானகத்தில், பழக்கம் உள்ளவர்களுக்கு, அந்த ஒற்றையடிப் பாதை பிரசித்தம் என்பதால் அவர்கள் விழிகள் அந்த ஒற்றையடி பாதையை நோக்கித் திரும்பியது. அவர்கள் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. இருபின்னும், ஏதோ ஒன்று அசைந்து சென்றதற்கு அடையாளமாக, அங்கிருந்த செடிகள் சிலுசிலுப்பை ஏற்படுத்தியது.
“இன்ஸான் நஹி ஹை… ஷயட் ஜன்வர் ஹை…”, மனிதர்களாக இருக்க முடியாது, எதாவது மிருகங்களாக இருக்கக் கூடும் என்று ஹிந்தியில் முணுமுணுத்துக் கொண்டு, உள்ளே நுழைந்தனர்.
மீண்டும் அமைதி நிலவியதால், குளிரின் காரணமாக தீ மூட்டத்தின் அருகே செல்ல, இருவர் மட்டும் குளிரைப் பொருட்படுத்தாமல், சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மீண்டும், “தட்.. தட்… தட்…” என்ற சத்தம் வர, அங்கு ஓர் கரிய உருவம் வேகமாக நகர்ந்தது.
இருவரில் ஒருவன் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வது போல், அந்த கரிய உருவத்தை நோக்கி வேகமாகச் செல்ல, “திலக் மத் ஜாவோ!” என்று திலக், செல்ல வேண்டாம் என்று ஹிந்தியில் ஓங்கி ஒலித்து எச்சரித்தது அந்த பஞ்சாபியின் குரல். ஆனால், அதை பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து முன்னேறினான் திலக்.
“தீவிரவாதியா இருக்கலாம்…” என்று அந்த பஞ்சாபி திலக் பின்னோடு ஓடிக் கொண்டே ஹிந்தியில் எச்சரிக்க, “நான் அவனைப் பிடிக்கிறேன்… நீ நம்மவரோடு வா…” என்று ஹிந்தியில் பதிலளித்துக் கொண்டே திலக் அவன் கண்களிலிருந்து மறைந்து விட்டான்.
“உஸ்…” என்று காற்று சத்தம் வேகமாக வீச, அங்கு மெல்லிய பனிச்சரிவு ஏற்பட்டது. அத்தோடு மண் சரிவும். அத்தனை பெரிதில்லை. ஆனால், சற்று ஆபத்தானதாகவே இருந்தது.
வேகமாக, மிக வேகமாக உருண்டான் திலக். அவன் ராணுவ உடை அவனுக்குப் பாதுகாப்பாக இருந்தாலும், அதைத் தாண்டி அவன் கைகளில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. வலியை, அவன் கண்கள் காட்டினாலும், வலியை பொருட்படுத்தாமல் அந்த கரிய உருவத்தை நோக்கி முன்னேறினான் திலக்.
அவனுக்குத் தெரிந்த ஓர் கரிய உருவம், இப்பொழுது பல உருவமாகக் காட்சி அளித்து மறைந்து விட்டது.
திலக்கின் சந்தேகம் வலுப்பெற, அவன் சத்தம் எழுப்பாமல் பதுங்கி பதுங்கி அவர்களை நோக்கி முன்னேறினான். அப்பொழுது எதிரே இருந்த இடத்திலிருந்து, வெளிச்சம் பரவியது. அந்த வெளிச்சத்திற்குக் கீழ், இந்தியத் தேசியக் கொடி எரிந்து கொண்டிருந்தது. திலக்கின் ரத்தம் கொதித்தது.
வீறுகொண்டு, அவன் வேகமாக முன்னேற, அந்த இருளில், திலக் அங்கிருந்த புதை குழியில் சிக்கினான். உருண்டு விழுந்ததில் ஏற்பட்ட காயம் வலியைக் கொடுத்தாலும் விடாமல் அந்த புதை குழியிலிருந்து வெளி வரப் போராடினான்.
அவன் உடலுக்கு ஏற்பட்ட காயத்தைத் தாண்டி, இந்தியத் தேசியக் கொடிக்கு ஏற்பட்ட நிலை அவனைத் துயரத்திலும், கோபத்திலும் ஆழ்த்த அங்கிருந்து வெளி வர கோபமாக, கடினமாகப் போராடினான்.
வந்தே — மாதரம் — ஜய வந்தே மாதரம்
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
ஆரிய பூமியில் நாரிய ரும்நர
சூரிய ரும்சொல்லும் வீரிய வாசகம்
நொந்தே போயினும் வெந்தே மாயினும
நந்தே சத்தர் உவந்தே சொல்வது
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம்
வந்தே — மாதரம் — ஜய வந்தே மாதரம்
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
சிறுவயதிலிருந்து கேட்டு வளர்ந்த பாரதியார் பாடல், அவன் உதடு, இரத்தம், உடல், நாடி என்று சகல இடத்திலும் ஒலிக்க, தேசப்பற்று மேலோங்க அவன் அங்கிருந்து வெளி வந்து தேசியக் கொடியை நோக்கிச் செல்ல போராடினான்.
திலக்கை தேடி மற்ற ராணுவ வீரர்கள் பல திசைகளில் செல்ல, அப்பொழுது “டுமீல்… டுமீல்… டுமீல்…” என்ற சத்தம் வானைக் கிழித்துக் கொண்டு எல்லோர் காதிலும் கேட்டது.
பல உயிர்ப் பலியை நேரில் கண்ட வீர நெஞ்சங்களாக இருந்தாலும், அந்த சத்தம் அனைவரின் நெஞ்சையும் திக் என்று ஓர் நொடி நிற்கச் செய்தது. அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர்.
அதே நாட்களை ஒட்டி,
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் திருப்புடைமருதூர் – சேரன்மகாதேவி இடையில் அமைந்துள்ள வீரவநல்லூர் ஊரை ஒட்டிய கிராமத்தில் அமைந்திருந்த தென்னை மரமும், மாமரமும் சூழ்ந்திருந்த வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தாள் தாவணி அணிந்த இளம் பெண்.
அப்பொழுது அகன்ற தோள்களும், முறுக்கிய மீசையோடும், உழைப்புக்கு அஞ்சாதவன் என்று எடுத்துரைக்கும் தேகத்தோடு அழுத்தமான காலடிகளோடு அந்த வீட்டின் அருகே சென்று கதவைத் திறக்க, “அத்தான்…” என்று கூவிக் கொண்டு கதவைத் திறந்தாள் அந்த இளம் பெண்.
அவள் பின்னல் அவள் இடை அசைவுக்கு ஏற்ப, அங்குமிங்கும் வேகமாக அசைந்தது. திறந்த வேகத்தில், தன் முகத்தைத் திருப்பி குனிந்து கொண்டாள்.
அவள் பாசம், கோபம் இரண்டையும் உள்வாங்கி ரசித்து, “பூங்கோதை கோவிச்சிகிட்டியா?” என்று அவள் உயரத்திற்குக் குனிந்து அவள் முகம் பார்த்து புன்னகையோடு கேட்டான்.
மேலும் கீழும் தலை அசைத்து, “அத்தான்… சேவல் கூவுனத்துல இருந்து காத்திருக்கேன். நீங்க இப்பத்தென் வரீக அத்தான். என்ன அத்தான் இம்புட்டு பைய வாரிய?” என்று கோபமாகக் கேட்டாள் பூங்கோதை.
அவன் ஏதோ பேச ஆரம்பிக்க, தன் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு சிறிதும் தூசி, அழுக்கு எதுவும் இல்லாத வெள்ளை புடவையோடும், நெற்றியில் திருநீரோடும் தளராத நடையோடு வேகமாக வந்தார் முத்தமா ஆச்சி.
“கதிரேசா வந்துட்டியா? உனக்காகத்தேன் பூங்கோதை இங்கனயே நிக்கா.” என்று கூறிக் கொண்டே ஆச்சி அவர்களை நெருங்கி, நறுக்கென்று பூங்கோதையின் தலையில் ஒரு கொட்டு வைத்தார்.
“ஏட்டி… உனக்கு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன்? அவனை உரசிக்கிட்டு நிக்காதான்னு.” என்று முத்தமா ஆச்சி கடிந்து கொள்ள, “ஆச்சி… விடுங்க ஆச்சி. சின்ன புள்ளை…” என்று கதிரேசன் பூங்கோதைக்கு வக்காலத்து வாங்கினான்.
“அத்தான்… நா சின்ன புள்ளை இல்லை. உன்னை கட்டிக்க போறவ.” என்று கழுத்தை நொடிக்க, “என்ன பேசிட்டு இருந்தீக?” என்று முத்தமா ஆச்சி தன் காதுகளை தீட்டியபடி கேட்டார்.
“சத்த நேரம் சும்மா இருக்க முடியாது… நீ எங்களை எங்க பேச விட்ட? அது தான் வந்துட்டீயே!” என்று அங்கலாய்ப்பாக பூங்கோதை முணுமுணுக்க, “என்ன முணுமுணுப்பு?” என்று முத்தமா பாட்டி கிடுக்கு பிடியாகக் கேட்டார்.
“நாங்க ஒன்னும் பேசலை. அப்படியே நாங்க பேசினதைச் சொன்னாலும் உனக்கு புரியாது ஆச்சி. நாங்க யூத்.” என்று பூங்கோதை தன் உதட்டை அங்குமிங்கும் அசைக்க, “நானும் விஜய் டிவி, பாலிமர் எல்லாம் பார்த்து ஊத் தான்.” என்று பாட்டி வாசலிலிருந்த திண்ணையில் அமர்ந்து, கதிரேசனைப் பக்கத்தில் அமரும் படி செய்கை காட்டினார்.
பூங்கோதை முத்தமா ஆச்சியை கடுப்பாக பார்க்க, “கதிரேசா! உன் சேக்காளி (நண்பன்) திலக் கிட்டருந்து வந்த கடிதத்தை படிக்கணுமுன்னு பார்வதி காத்துகிட்டு இருக்காய்யா. இவளை, அங்க அனுப்பினா தோது படாது.” என்று முத்தமா ஆச்சி கூற, “ஆச்சி… உங்களை பார்த்திட்டு அங்கனேதென் போறேன் ஆச்சி.” என்று கூறினான் கதிரேசன்.
“ஏல… போறேன்னு சொல்லாத… கிளம்புறேன்னு சொல்லு. இல்ல போயிட்டு வரேன்னு சொல்லுன்னு எத்தனை தடவை சொல்லுதேன்.” என்று முத்தமா ஆச்சி கதிரேசனைக் கடிந்து கொண்டார்.
“சரி… நான் வரதுக்கு முன்னாடி என்ன பேசிட்டு இருந்தீக?” என்று பாட்டி மீண்டும் அதே கேள்வியில் நிற்க, பக்கத்து வீட்டிலிருந்து இரு கண்களும் இவர்களை சற்று பொறாமையோடும் ஏக்கத்தோடும் தழுவியது.
“நாங்க எதுவும் பேசலை ஆச்சி. ஆனால்…” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள் பூங்கோதை.
“அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்.”
என்று பாடிக்கொண்டே தன் கன்னத்தை ஆச்சியிடம் தடவிக் காட்டியபடி அவள் தாவணி முந்தானை அசைய அவர்கள் எதிரே இருந்த மரபலகையாலான ஊஞ்சலில் அமர்ந்தாள் பூங்கோதை.
கதிரேசன் தர்மசங்கடமாக நெளிய, “பூங்கோதை எந்த காலத்துல இருக்க? சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்து பாட்டு பாடுறே? விஜய், அஜித், சிம்பு, தனுஷ் பாட்டே பழசாகிருச்சு.” என்று முத்தமா ஆச்சி பதிலடி கொடுக்க, கதிரேசன் வாய் விட்டு சிரித்தான்.
“அத்தான்! என்ன சிரிப்பாணி வேண்டி கிடக்கு? நீங்க என்னைப் பார்க்க வந்தீகளா? இல்லை கிழவியை பார்க்க வந்தீகளா?” என்று பூங்கோதை முகத்தைச் சுருக்க, “முத்தம் கொடுத்தானாம்… முத்தம்… இனமும் இவ அம்மாவை சரிக்கட்டி உன்னை கட்டிக்க முடியலை. என்னைக்கோ போய் சேர்ந்த அம்மாவை வைத்து, உன்னை ராசி இல்லைன்னு சொல்தாளாம். இவனும், அவ அம்மையைச் சரி கட்ட முடியாமல் இருக்கானாம்?” என்று முத்தமா ஆச்சி கோபத்தில் முகத்தைச் சுழித்தார்.
“ஆச்சி… அத்தானை ஏன் வைதீக? உனக்கு அத்தை குணம் தெரியாதா? நீ உன் மருமகளை மிரட்ட வேண்டியது தானே?” என்று பூங்கோதை சண்டைக்குத் தயாராக, “அதுக்கு என் மவன் சரியா இருக்கனுமில்லை.” என்று தன் கைகளால் மோவாயைத் தடவியபடி கூறினார் முத்தமா ஆச்சி.
“ஆச்சி… நான் எல்லாத்தயும் சரி செய்யறேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க.” என்று பவ்வியமாகக் கூறினான் கதிரேசன்.
அப்பொழுது பக்கத்துக்கு வீட்டு பார்வதி ஆச்சி வர, “கதிரேசா! ஏதோ கடிதம் வந்திருக்கு. கொஞ்சம் சீக்கிரம் படிச்சி சொல்லுப்பா…” என்று அவர் கடிதத்தை கதிரேசனிடம் நீட்டினார்.
“என்ன கிழவி… மிலிட்டரி லெட்டர் போட்டுருக்கா?” என்று பூங்கோதை கேட்க, அவர் அவளைக் கோபமாகப் பார்க்க, “எதுக்கு இப்படி முறைக்க… பைய பாரு… என்னவோ இப்ப வந்த வாட்ஸப் மெசேஜ் மாதிரி பதறுற, மிலிட்டரி அனுப்பிச்சி நாலு நாள் கழிச்சி தான் உனக்கே இந்த கடுதாசி வரும்.” என்று கூறிக்கொண்டே ஊஞ்சலில் வேகமாக ஆடினாள் பூங்கோதை.
கதிரேசன் யோசனையோடு தன் நண்பன் அனுப்பியிருந்த கடிதத்தை படிக்க, “கிழவி, உன் பேரனுக்கு உன் மேல அக்கறையே இல்லை. அது தான் உன்னை இங்க தனியா விட்டுட்டு காஷ்மீர்ல இருக்கான். அங்கனையே ஏதாவது பெண்ணை கட்டிகிட்டானான்னு எதுக்கும் ஒரு கண்ணு வை.” என்று பூங்கோதை அசட்டையாகக் கூறினாள்.
‘என் பேரனுக்கு நாட்டு மேல அக்கறை. பூங்கோதை… உன்னை அப்புறம் கவனிக்கிறேன்.’ என்று மனதில் எண்ணியபடி, கடிதத்தை பற்றி அறியும் ஆவலில் பார்வதி ஆச்சி, அதில் இருக்கும் செய்தியைக் கேட்க ஆர்வமாகத் திரும்பினார்.
கதிரேசன் கூறிய செய்தியில் அங்கு அமைதி நிலவியது.
வா… அருகே வா! வரும்….