KVI-17

ஓடியவள்…
தன் என்பீல்டை எடுத்துக்கொண்டு, சக்தி இருக்கும் இடத்திற்கு வந்தாள். ராயலை, ஒரு ஓரமாக நிறுத்தினாள்.

சட்டென்று யோசனை வர, கைப்பேசி எடுத்துப் பீட்டருக்கு அழைப்பை விடுத்தாள்.

“ஹலோ, சொல்லும்மா”

“அண்ணே, நான்தான்“

“ம்ம்ம், தெரியுது. என்னம்மா?”

“அண்ணே, கவனமா கேளுங்க மூனு பேர் இல்ல, ரெண்டு பேரு”

“என்னதும்மா?”

“அடியாள் மூனு பேர் கிடையாது. ரெண்டு பேர்தான்”

“ஏன் திடிர்னு?”

“இப்போ சொல்ல முடியாதுண்ணே. நான் அப்புறமா சொல்றேன் “

“ப்ச், எதுவும் சொல்லிறாத.”

“அண்ணே, அந்த ரிக்கார்டிங்க ஒரு காப்பி எடுத்து வச்சிக்கோங்க”

“சரி, சரி. முதல ஹாஸ்பிட்டல் போயாச்சா??“

“இதோ போறேன். அப்புறம், உங்க ஸ்டேஷன்ல சொல்லி, யாராவது ஒருத்தர இங்க கிடக்கிற டெட்பாடிய, வந்துப் பார்க்கச் சொல்லுங்க“

“அதெல்லாம் சொல்லியாச்சி. நீ முதல ஸ்பாட்ல இருந்து கிளம்பு”

“சரிண்ணே” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அத்தனையும், சக்தி பார்த்துக் கொ‌ண்டுதா‌ன் இருந்தான்.

“சக்தி.. எந்திரி” – குரல்

எழுந்து அமர்ந்தவனுக்கு, அதற்கு மேல் எழுந்து நிற்பது, முடியாத காரியமாக இருந்தது.

“ம்ம்ம், சக்தி பிடிச்சிக்கிட்டு எந்திரி.” – கை நீட்டினாள், சயனா.

அவன் எழுந்து கொள்ள உதவினாள். எழுந்தவன், அவள் கை பிடியில் தாங்கலிலே நிற்க முடிந்தது.

“சக்தி, நான் கைய விடப் போறேன். பேலன்ஸ் பண்ணி நில்லு”

“ம்ம்ம், சரி”

“பைக் எடுக்கனும் சக்தி, சரியா”

“பைக் வேண்டாம் ட்டேபீ. ஆம்புலன்ஸ் அரேஞ்ச் பண்ணு. அதான் சேஃப். ”

“அது எப்போ வருமோ? ஏற்கனவே ரொம்ப நேரம் இப்படி இருந்திருக்க”

அவன் கையை விட்டுவிட்டு, ராயலில் ஏறியவள், அவனை ஏறுமாறு சைகை செய்தாள்.

அவனும் ஏறிக்கொண்டான் . என்பீல்ட் உறும ஆரம்பித்தது.

செல்லும் வழியில் …

“சயனா, எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும். எனக்கு வேற வழியில்லை. அதான் இப்படியெல்லாம் ட்டேபீ ”

ராயல் சீரான வேகத்தில் சென்றது.

“சயனா, தப்புதான், நான் பண்ணது பெரிய தப்புதான். இல்லன்னு சொல்லல. ஆனா.. ”

“சக்தி, மைன்ட் புல்லா டிஜிபிகிட்ட என்ன பேசனும்? எப்படி பேசனும்னு?? இந்த தாட்தான் இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாத”

” ஓகே… ஓகே…”

” தேங்க்ஸ் ”

“லவ்ல, ஸாரி தேங்க்ஸ் சொல்லாத, ட்டேபீ” – காதல் கிரகத்தின் சட்டம்.

“இது கண்டிப்பா லவ் இல்ல, சக்தி. அதப் புரிஞ்சுக்கோ” – காதல் சட்டத்தை மதிக்க விரும்பா, சயனா.

அதற்கு மேல் காதலனும், காதல் கிரகத்து காதலும் என்ன செய்ய முடியும்?? அமைதி காத்தனர்.

வலி அதிகமாவது போல் இருந்தது, சயனாவிற்கு. இதுவரை அசைவு கொடுக்காமல் இருந்ததால், வலி தெரியவில்லையோ?. இப்பொழுது வண்டி ஓட்டுவதால், வலியினை உடல் அறிய ஆரம்பிக்கிறதோ?? .

ஆனால் உண்மை அதுவல்ல.

இதுவரை தனியாய் இருப்பது போல் இருந்தது. இப்போது, அவளது சக்தி இருக்கின்றான். அவளின் உடல் சக்தியின்மையை, அவள் மனதின் சக்தியானவனிடம் பகிர்ந்து கொள்ள ஆசை. – இது காதல் கண்டுபிடித்துச் சொல்லியது.

ராயலை நிறுத்தினாள்.

“என்னாச்சி? ” – வடிந்து போன குரலுடன், சக்தி.

காதல் கிரகத்தின் குரல், என்றுமே இப்படி ஒலித்தது இல்லை.

“கூஃபி” – தயங்கிய குரலில் சயனா.

இந்தப் பெயரை உச்சரிக்கிறாள் என்றால், என்ன அர்த்தம்??

“என்ன ட்டேபீ?”

“சக்தி”

“சொல்லு சயனா” – வலியை மறந்து பதட்டம் உணர்த்தும் குரல்.

“கை ரொம்ப வலிக்குது, சக்தி”

சக்திக்கு உயிர் துடித்தது.

“பைக் ஓட்டவே முடியல, சக்தி”

சக்தி, சுற்றிப் பார்த்தான். அகாலப் பொழுது என்பதால் எந்த ஒரு வாகனமும் இல்லை.

“நீ இறங்கு. இனிமே நான் ஓட்றேன்.”

“உனக்கு கால்ல அடி பட்டிருக்கு, சக்தி. உன்னால முடியாது. உனக்கு ரொம்ப வலிக்கும்.” – அன்பும் அடமும் சேர்ந்த குரலில், காதலி.

“பரவால்ல சயனா, நான் மேனேஜ் பண்றேன். இறங்கு” – அக்கறை ஒளிந்து கொண்டிருக்கும் கோபம்.

“நீ, ஏன் இப்படி பண்ண சக்தி?”

” ப்ச், இத இப்போ பேசனுமா?? ”

“யாரும் கேட்க மாட்டாங்கன்னுதான், இப்படி என்னய ஏமாத்தினியா?? ”

“முட்டாள் மாதிரி பேசாத சயனா”

“நீதான் என்னய முட்டாளா மாத்திட்ட”

“…. ”

“கை வலிக்குது சக்தி”

“அதான், ஆம்புலன்ஸ் அரேஞ்ச் பண்ணச் சொன்னேன். அதுக்கு மாட்டேன் சொல்லிட்ட. பைக்கவாது கொடு, சயனா ”

“இது என்னோட பைக். நான்தான் ஒட்டுவேன். யாருக்கும் கொடுக்க மாட்டேன்”

“சின்னப்பிள்ளையா, சயனா?? எந்த நேரத்தில என்ன பேசற?? ”

காதலனே! அவள் மழலையாக மாறுவது, உன்னிடம் மட்டுமே! புரிந்து கொள்.

“சரிம்மா, கிளெட்ச்லருந்து கைய எடுத்திரு. நான் பிடிச்சிக்கிறேன். ” – சயனா முகமாற்றம் கண்ட, சக்தி சொன்ன வார்த்தை.

“ம்ம்ம்”

“பைக் ஸ்டார்ட் பண்ணு. இங்கயே நிக்க வேண்டாம்.”

“ம்ம்ம்”

“டிலே பண்ண வேண்டாம், ட்டேபீ”

மீண்டும் சீரான வேகத்தில் ராயல்.

வார்த்தைகளைக் கொண்டு அவளை வழிக்கு கொண்டு வரும் வாழ்வியல் கற்றுக்கொண்டவன்!

ஒரு இரவிற்கு முந்தய இரவில்தான், ‘எதுக்கு ரெண்டு பைக், ஒன்னே போதும்’ என்றான். இவ்வளவு விரைவில், அது நிறைவேறும் என்று நினைக்கவில்லை. அதுவும் இப்படி ஒரு நிலைமையில்!!

*****
இருவரும், மருத்துவமனை வந்து சேர்ந்தனர். விடியற்காலை என்பதால் கூட்டம் இல்லை.

வண்டியிலிருந்து இறங்கினார்கள். சக்தி பாதி உயிராய் போயிருந்தான். சயனாதான், அங்கே இங்கே என்று அலைந்து, அவனை ‘அட்மிட்’ செய்ய ஏற்பாடு செய்தாள்.

சக்தி பார்வை மட்டும், சயனா எங்கு சென்றாலும், அவளின் காதலை யாசித்து நின்றது.

“இது போலீஸ் கேஸ். ஸோ நாங்க பார்க்க மாட்டோம்” என்றவர்களிடம், தன் அடையாள அட்டையைக் காண்பித்தாள்.

அவர்களுக்கு வேறு வழியில்லை.

சக்தியை, அறுவைசிகிச்சை அறை இருக்கின்ற தளத்திற்கு, கூட்டிச் சென்றார்கள்.

அதே சமயம் டியூட்டி டாக்டர்ஸ் மட்டுமே இருந்தார்கள். அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவரை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்.

அவளின், தோள்பட்டை காயத்திற்கு தையல் போட அழைத்தனர்.

போகும் முன்..

கண்கள் சொருகிப்போய் இருந்த சக்தியைப் பார்த்தாள், சயனா. அருகில் சென்றாள்.

“சக்தி.. சக்தி”

சக்தி பதில் சொல்லவில்லை. சயனா பயந்து விட்டாள்.

“கான்சியஸ் இல்ல. அதான், சரியாயிடும். நீங்க வாங்க” – செவிலியர்.

அவனைப் பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.
மற்றொரு அறைக்கு, சயனாவை அழைத்துச் சென்றனர். காயத்திற்கு வைத்தியம் செய்யப்ப்பட்டது.

சயனா, இடையே கேட்டுக் கொண்டே இருந்தாள்.. சக்தி அறுவை சிகிச்சை, மருத்துவர் வருகை பற்றி….

சயனாவிற்கு, டிரிப்ஸ் ஏற்றப்பட வேண்டும் என்று, அதற்கான ஏற்பாடு செய்ய, செவிலியர் சென்றார்.

இதன் பிறகான இவளது வேகம், மின்னலுக்கு ஒப்பானது. வலியை மறந்தே விட்டாள்.

கடகடவென ஓடி, மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள். இன்று, நடந்து முடிய வேண்டிய விடயங்கள், நிரம்ப இருக்கிறது.

ஏன்? இத்தனை அவசரம் அவசியமா? ஆம்! அதிகாரத்தின் கை ஓங்கிவிடக் கூடாது அல்லவா??

ஒரு விசில்.
ஒரு ஆட்டோ வந்தது.
ஒரு “வேகமா போங்க அண்ணே”.
டிஜிபி அலுவலகம் வந்து விட்டது.

டிஜிபி அறைக்குச் சென்றாள். அறையின் வெளியே, காவல் நின்று கொண்டிருந்தது. பில்டரும் வந்திருந்தார். சயனாதான் வரச் செய்திருந்தாள்.

காவலைப் பார்த்து…

“ஓ, கடைசில நீ இங்கதான் வந்து நிக்கிறயா??” – இந்த வலியிலும், இத்தனை நய்யாண்டி தேவையா, சயனா?

ஓரளவு டிஜிபி மூலம் விடயம் கசிந்ததால், பெரிய பேச்சுக்கள் பேச முடியாதநிலை, காவலுக்கு.

அறையின் உள்ளே நுழைந்தாள்.

இருக்கையில் டிஜிபி பிரபு அமர்ந்திருந்தார். கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

அந்தப் பேச்சு முடிந்தவுடன்…

“உன்னைய யார் வரச்சொன்னது?? கனகா எங்க?”

“அவங்கள இங்க வரசொன்னேனே. வரலையா அண்ணே?”

“வரல. நீ ஏன் ஹாஸ்பிட்டலுக்கு போகாம, இங்க வந்து நிக்கிற?”

“ஹாஸ்பிட்டல் போய் ஸ்ட்ரிச் போட்டாச்சி. பீல் பெட்டர்”

“ஆர் யூ ஸூயர்?”

“யெஸ் அண்ணே.”

“ம்ம்ம், தென் ஒன்திங், போலீஸோட பேசறப்ப சார்னு கூப்பிடு. ”

“சரிண்ணே”

வெளியில் நின்று கொண்டிருந்த, காவல், பீட்டர் இருவரையும் உள்ளே வருமாறு கூப்பிட்டார்.

டிஜிபியின் அறையில்…

பெரிய பெரிய, சந்தேகங்கள், சிறிய சிறிய முறைப்புக்கள் என்று – இது காவல்.

பெரிய நிம்மதி, சிறிய கவலை – இது பீட்டர்

தெளிவான இலக்குடன் – இது சயனா.

“சொல்லுங்க, எதுக்கு கன்ன எடுத்து, ஒரு அடியாள் கைல கொடுத்தீங்க? ” – இது போலீஸை நோக்கிய கேள்வி, கேட்டது டிஜிபி.

ஏனென்றால், பீட்டர் மற்றவர்கள் வரும் முன்னே நடந்த சம்பவத்தைக் சொல்லிவிட்டார்.

ஓரளவிற்கு காவல்துறை, சிஐடி வட்டாரத்தில் செய்தி பரவி இருந்தது. ஊடகமும் ஊக்கம் காட்டியது, விடயம் என்னவென்று அறிவதற்கு!

“சார், எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” – காவல்.

“சரி, அப்புறம் ” – டிஜிபி.

“பொய் சொல்றாங்க சார்” – காவல்.

தன்னிடம் பீட்டர் தந்த கைப்பேசி பதிவுகளைப் போட்டுக் காட்டினார், டிஜிபி.
காவலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடும் இக்கட்டில் காவல்.

“இதுக்கு பதில் சொல்லுங்க” – டிஜிபி கைப்பேசியைக் காட்டிக் கேட்டார்.

“சார்ர்ர்” – காவல்.

“ஒரு சிஐடி ஆபிஸர கொல பண்ண பாத்திருக்கீங்க ” – பிரபு.

“ஐயோ, இல்ல சார்” – காவல்.

“இத நான் சொல்லல, நீங்கதான் சொல்லியிருக்கீங்க” – பிரபு.

இவ்வளவு பெரிய மடத்தனம் செய்து விட்டோமே என்று காவல் கலங்கியது.

“எதுக்காக? நீங்க பொய்யா கிரியேட் பண்ண கேஸ, அவங்க திரும்ப எடுத்ததாங்கனா??? ” – பிரபு.

“புரியல சார்.” – காவல்.

“கனலினி, இன்கம்டாக்ஸ் ஆபிஸர். இப்போ ஞாபகம் வருதா.?” – பிரபு.

“சார், அந்தக் கேஸ் உண்மை சார்” – காவல் வயிற்றில், பல்லி ஊர்ந்து செல்லும் உணர்வு.

“பீட்டர், பில்டர கூட்டிட்டு வாங்க ” – பிரபு.

பில்டரும் பீட்டரும் உள்ளே வந்தனர்.

“பில்டர் சொல்றத, கேளுங்க. நீங்க பொய்யா கேஸ் போட்டது தெரியும்.” – டிஜிபி.

பில்டர், விவரமாகச் சொன்னார். கனலினி விற்பனை செய்த நிலத்தை தான் வாங்கியதாகவும், அதற்கான பணத்தைக் கொடுக்கச் செல்லும் போது, இவ்வாறு நிகழ்ந்தன என்றும் தெளிவாகச் சொன்னார். அதைக் காவல் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.

“சார், அவர் பொய் சொல்லறாரு” – காவல்.

இப்போது பில்டரை பார்த்து… பிரபு

“உங்களுக்கு உண்மை என்னன்னு தெரியும்ல. எதுக்கு, நீங்களும் சேர்ந்து பொய் சொல்லிருக்கீங்க. இதுக்கு என்ன தன்டணை தெரியுமா??” – பிரபு.

“இல்ல சார், மிரட்டனாங்க. அதான் பயந்து போய்… ” – பில்டர்.

“அதுக்காக ஒரு கவர்மெண்ட் ஸ்டாப்ப இப்படிதான் மாட்டி விடுவீங்களா.? ” – பிரபு.

பில்டர் தரைத்தளத்தைப் பார்வை இட்டார்.

“சொல்லுங்க” – டிஜிபி.

“சார், கொலை பண்ணிருவோம்னு மிரட்னாங்க சார்.” – பில்டர்.

“அதுக்காக! அப்படி பண்ணுவீங்களா? இங்க வந்து சொல்லாமே?” – பிரபு.

பில்டரின் முகம், காய்ந்த கான்கிரீட் போல் இறுக்கம் காட்டியது.

“நாங்க எதுக்கு இருக்கோம்” – பிரபு.

” சார், … ” – காவல் ஆரம்பிக்க…

“ஒரு நிமிஷம்” என்று சொல்லி டிஜிபி, காவல் பேச்சை நிறுத்தச் சொன்னார்.

“நீங்க போகலாம். பட், ஸ்டார்ங் சப்போர்ட் இருக்கு. ஸோ, பயப்படாம சாட்சி சொல்ல வரனும்” – பில்டரை நோக்கி, டிஜிபி.

“கண்டிப்பா சார்” என்று சொல்லி, வெளியே சென்றார், பில்டர்.

‘தொடர்ந்து பேசலாம்’ என்று கை காட்டினார், டிஜிபி.

“பொய் சார். எல்லாம் பொய் சார் ”

“ஓ அப்படியா?? அவர்கிட்ட எல்லா எவிடென்ஸும் இருக்கு”

“என்ன எவிடென்ஸ், சார்”

“அவர், கனலினி ப்ராப்பெர்ட்டி வித்த டாக்குமெண்ட்ட சம்பிட் பண்ணிட்டார். போதுமா?? ” – பிரபு.

இந்த வழக்கு எப்படி வந்தது? என்று காவலுக்குப் புரியவில்லை.

“அவர் செஞ்ச தப்பு, டிபார்ட்மென்ட்ல வந்து மணி கொடுத்தது தான்.”

“எனக்கென்னமோ, அதுகூட இவங்க ஏற்பாடா இருக்கும்னு தோணுது. இல்லன்னா லஞ்சம் கொடுத்தவர் மேலயும் ஆக்சன் எடுக்கனும்ல, சார்” – இதற்குத்தான் சயனா ஓடி வந்தாள்.

இப்போது காவலைப் பார்த்து, பிரபு

“என்ன சொல்லப்போறீங்க? ”

“சார், ஒன்னு கேட்கிறேன். இப்படி பொய்யா கேஸ் போட்டவங்க, எதுக்கு சார் திரும்பி டேக்ஸ் கட்டணும்” – காவலே கேடட்டிருந்தாலும் நியாமான கேள்வி.

“அது எதுக்குன்னா?? நான் கேஸ விசாரிக்கிறேன்னு தெரிஞ்சிதான், டேக்ஸ் கட்டி, மீடியாவ வேற கூப்பிட்டு சொல்லியிருக்கீங்க ” – சயனா.

‘அப்படியா?’ என்று பிரபு கண்களால், காவலிடம் கேட்டாள்.

“இவங்க பொய் சொல்றாங்க சார்” – காவல்.

“வந்ததுல இருந்து, இதமட்டும்தான் சொல்றீங்க?” – பிரபு.

“சார், எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் ப்ரூவ் பண்றேன்”

“இதென்ன கோர்ட்டா?? வாய்தா வாங்க” – சயனா.

“ரெண்டு நாளைக்கு முன்னாடியே, இவங்க ரெக்வஸ்ட் பண்ணனாங்க. கேஸ அவங்க டிபார்ட்மென்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணச் சொல்லி. நான்தான் கேட்கவேயில்ல” – டிஜிபி.

“எதுக்கு சார், இவங்க கேட்கணும். இவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, அப்படி ரெக்வஸ்ட் பண்ண” –
காவல்.

இனி காவல் அவளின், சின்னச் சின்ன பிழைகளைச் சுட்டிக் காட்டும்.

“ஏன்னா? கேஸ, நீங்க அப்படி பண்ணி வச்சிருக்கீங்க” – பிரபு.

” தேங்க்ஸ் சார் ” – சயனா.

“ஆனா, இதுவரைக்கும் அவங்க விசாரிச்சத, கொஞ்சம் கிராஸ் செக் பண்ணேன்”

பதற்றம் வந்தது சயனாவிற்கு…

“அவங்க டேக்ஸ் டிபார்ட்மென்ட் போய் விசாரிச்சிருக்காங்க. தெரியுமா?

பயம் வந்தது சயனாவிற்கு…

“கனலினி வீட்டுக்குக் கூடப் போய் பார்த்திருக்காங்க ”

உதறல் வந்தது சயனாவிற்கு…

“இந்த பில்டருக்கே நிறைய தடவை கால் பண்ணிருக்காங்க”

நடுக்கம் வந்தது சயனாவிற்கு…

“சரி, இன்னும் நல்லா விசாரிச்சிட்டு, கேஸ ட்ரான்ஸ்பர் பண்ணலாம்னு நினைச்சேன்”

மூச்சு வந்தது சயனாவிற்கு …

“பட், அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு”

“????” – காவல்.

“!!!!” – சயனா.

“கனலினி மேல போட்ட கேஸ் பொய்யின்னு சொல்ல இருக்கிற எவிடென்ஸ், இந்த பில்டர்”

“????” – காவல்.

“!!!!” – சயனா.

“நீங்க சிஐடி ஆஃபீசரா கொலை பண்ண பார்த்ததுக்கு, எவிடென்ஸ் இந்த போஃன் ரெக்கார்ட் அன்ட் ஹாஸ்பிட்டல்ல ஒரு சாட்சி”

“????” – காவல்.

“!!!!” – சயனா.

“சொல்லுங்க, நீங்க சொல்றதுக்கு எவிடென்ஸ் இருக்கா?”

“சார், ஒரு தடவ இவங்க டீம் அமைச்சரோட சொகுசு பங்களாவுக்கு வந்தாங்க, அது எதுக்குனு கேளுங்க சார்” – காவல்.

“போனீங்களா?” – பிரபு.

“ஆமா சார். போனோம்” – சயனா.

“எதுக்குன்னு கேளுங்க சார்” – காவல்.

“சார், நான் இந்த கேஸ்பத்தி டிடெயில்ஸ் கலெக்ட் பண்றேன்னு தெரிஞ்சி, என்னய மிரட்னாங்க சார்” – சயனா.

“மிரட்டினாங்களா?? ” – பிரபு.

“நீங்க மிரட்னாலும், இந்தக் கேஸ விடமாட்டேன்னு சொல்லிட்டேன்” – சயனா.

“குட். இப்படியெல்லாம் நடக்குதா? ஏன் நீங்க முதலே சொல்லல, சயனா ?” – பிரபு.

“எங்க சார்?? ஹையர் ஆபீசர்கிட்ட கேட்டா, எவிடென்ஸ் வேணும்னு சொல்றாங்க. கேஸ் கொடுக்காம, எவிடன்ஸ் எப்படி கிடைக்கும் ” – சயனா.

‘போதும், நீ என்னயவே டார்கெட் பண்ணாத’ என்பது போல் கைகாட்டினார், பிரபு.

“சார்.. ” – காவல்.

“சொல்லுங்க.? ” – பிரபு.

“உண்மையா சொல்றேன் சார், கேஸ் இங்க வேற” – காவல்.

“என்ன கேஸ் சார்? புதுசா ? – சயனா.

“என்ன கேஸ் சொல்லுங்க?” – பிரபு.

“அது கம்யூட்டர்..” – அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. ஏனெனில் வரி ஏய்ப்பு செய்ததாக, மற்றொரு வழக்கைத் தலையில் கட்டிவிடும்.

“கம்ப்யூட்டர் ரிலேட்டடுனா,.. ரேவ்.. ரேவ் சூப்பரா இன்வெஸ்டிகேஷன் பண்ணுவா, பிரபு சார்” – சயனா.

பொறுமை போனது காவலுக்கு…

“ஏய்! என்னடி இப்படி நடிக்கிற ?” – இப்படி பேசும் பொழுது காவலின் முகத்தைப் பார்க்க வேண்டுமே!அது கோபமில்லை… இயலாமை!!

“பாருங்க சார். உங்க முன்னாடியே சிஐடி ஆபிஸர மரியாதை இல்லாம ‘டி’ போட்டு பேசுறாரு. நான் கம்பிளைன்ட் பண்ணலாமா சார் ?” – சயனா.

“பண்ணுங்க. பத்தோட பதினொன்னா அந்தக் கேஸூக்கும் அலையட்டும்” – டிஜிபி.

“சிஐடி ஆபிஸர மரியாதை குறைவா நடத்தினதுக்கு… ம்ம்ம் சரியா?. ஒரு கேஸ் ”

காவலை நோக்கி, சயனா பல்லைக் கடித்துக் கொண்டு, வார்த்தைகளைப் பலம் கொண்டு பேசினாள். இது ரேவிற்கான நியாயம் …

“சார், நான் சொல்றது உண்மை சார் ” – திரும்பவும் காவல். திரும்பவும் அதே!

“என்ன உண்மை ? – பிரபு.

“நம்புங்க சார் ” – காவல்.

“எத நம்ப?” – பிரபு.

“நான் சொல்ற உண்மைய” – காவல் திரும்பத் திரும்ப சொல்லியது.

பீட்டரும் சயனவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் கண்களில், நேர்மைக்கு கிடைத்த வெற்றியின் பெருமை தெரிந்தது. இது கனலினிக்கான நியாயம்..

“உண்மைன்னா எவிடென்ஸ் கொடுங்க ” – பிரபு.

“சார், உண்மைக்கு எதுக்கு வேணும் எவிடென்ஸ்?? ” – காவல்.

“ச்சே செம்ம டயலாக். என்ன! உங்க வாய்ல இருந்து வர்றப்போ நாராசமா இருக்கு ” – சயனா.

“சரி சார். இவங்கள கொல்ல பிளான் பண்ணோம். ஒத்துக்கிறேன்” – காவல் சரணடைந்தது.

“அப்படி வாங்க வழிக்கு” – பிரபு.

“இருங்க சார். ஆனா சக்திவேல்னு ஒருத்தனையும் சேர்த்து சுட்டதா சொல்றாங்கள? அது எப்படி சார்?? அவன் ஏன் அங்க வந்தான்?? ” – காவல்.

“ஆமா சயனா , அது யாரு ? நானே கேட்கனும்னு நினைச்சேன்” – பிரபு.

“சார், சக்தியும் நானும் லவ் பண்றோம். நாங்க இப்படித்தான் நைட்ல பைக் ரைட் பண்ணுவோம் ”

“ம்ம்ம்”

“இதுக்கு ஒரு நாள் முன்னாடி கூட இந்த மாதிரி பைக்ல.. வீ யூஸ்டூ டூ பிலே. இட்ஸ் லவ். அதோட கேஸ கனெக்ட் பண்ணாதீங்க. இட்ஸ் மை பெர்ஸனல்” – சயனா.

“ஓகே ஓகே… கன்க்ராட்ஸ் ”

“தேங்க்ஸ் சார். ஆக்சுவலி சக்தி கனலினி ஆன்ட்டி பையன். ஸோ அத வச்சுதான் இந்தக் கேஸ் எனக்குத் தெரிய வந்தது ”

“ஓ ஓகே லவ்வருக்காக” – சிரித்தார் பிரபு.

‘செஞ்சது என்ன? சொல்றது என்ன?’ என்ற பார்வையில் காவல்.

“நீங்க என்ன சொல்றீங்க ” – பிரபு.

“சரி சார், இவங்க லவ் பண்ணாங்க. விளையான்டாங்க. பீட்டர் எதுக்கு அங்க போனாரு ?” – காவலின் மன தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்!

“சார், அது எங்க ஏரியா ஸ்டேசன் கீழதான் வரும். நான் சும்மா ஆட்டோ எடுத்துட்டு ரௌண்ட்ஸ் போனேன். அதனால அவங்கள காப்பாத்த முடிஞ்சது.” – பீட்டர்.

“இது நம்புறமாதிரி இருக்கா சார் ”

“அவங்ககிட்ட எவிடன்ஸ் இருக்கு. இன்னொன்னு சொல்லவா.?”

பிரபு, தன் கைப்பேசியை எடுத்து காண்பித்தார் .

“பாருங்க எத்தனை கால்ஸ்னு. எல்லாமே இவங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க…

ஒரு போலீஸே சிஐடி ஆபிஸர, கொலை செய்ய ட்ரை பண்ணாங்கனு, கோபத்துல போஃன் வந்துக்கிட்டே இருக்கு….

இவங்க மேம், அதான் கனகா. எல்லாருக்கும் சொல்லிட்டாங்க…

இன்னும் டேக்ஸ் டிபார்ட்மென்ட்க்குத் தெரியாது. அது தெரிஞ்சா என்ன பண்ணனு தெரியல….

இத்தனை விஷயம் இருக்குது . நீங்க அவர் ஏன் காப்பதினாருன்னு கேட்கறீங்க….

அத வச்சித்தான், நான் இத்தனை பேரையும் கூச்சமில்லாம பேஸ் பண்ண முடியும்… ”

கோர்வையாகச் சொல்லி முடித்தார், டிஜிபி பிரபு.

“சார், நான் ஒன்னு கேட்கவா ?” – காவல்.

“கேளுங்க. ஆனா இதுதான் கடைசி கேள்வி?” – பிரபு.

“அந்த அடியாட்கள்கிட்ட அமைச்சர் கன் கொடுத்திருக்கார்ல. அப்புறம் நான் ஏன் என்னோட கன் எடுத்துக் கொடுக்கணும்?? ”

“எந்த அமைச்சர் ?” – சயனா.

இந்த இடத்தில், அமைச்சர் பெயரில், காவலால் எப்ஐஆர் போடப்பட்டது.

“சொல்லுங்க சார், கன்ன லெட்ஜெர்ல சைன் போட்டு எதுக்கு நான் எடுத்து கொடுக்கனும்?’ – காவல்.

“இதே கொஸ்டின் நான் உங்ககிட்ட கேட்டேன். திருப்பி எங்கிட்ட அதே கேள்வியை கேக்கறீங்களா? ” – பிரபு.

காவல் யோசித்தது.

“பேசாம ரிசைன் பண்ணிடுங்க. அப்பத்தான் ஆக்சன் எடுக்க வசதியா இருக்கும். நீங்க போலாம் ” பிரபு.

காவல் வெளியேறியது.

“நீ கிளம்பு. கனகா வந்தாதான் அபிஸ்யலா சிலது பண்ண முடியும்”

“ஓகே சார் வரேன் ” – சயனாவும் வெளியேறினாள்.

வெளியே நின்ற காவலின் அருகே வந்த சயனா, புருவத்தை உயர்த்தினாள் ..

“சத்தியமா சொல்றேன். என்னோட டார்கெட் நீதான். ஆனா உன்னோட டார்கெட் அமைச்சரா இருக்கும்னு எனக்கு தெரியவே தெரியாது”

காவலின் வார்த்தைகள், கைது செய்து கொண்டன.

வெளியே வந்த பீட்டர், “நீ இன்னும் போகலையா? கேப் புக் பண்ணவா?” என்று கேட்டார்.

காவல்துறையில், பீட்டர் போன்ற ஆட்கள் இருப்பது ஒரு வரம். நிறைய பீட்டர்கள் இருக்கவும் செய்யலாம்.

“இல்லண்ணே, லேட்டா ஆகுது. நான் கிளம்புறேன்” என்று காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடியபடியே சொல்லிச் சென்றாள்.

கடகடவென, டிஜிபி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாள் .

மறுபடியும்,
ஒரு விசில்.
ஒரு ஆட்டோ வந்தது.
ஒரு ‘வேகமா போங்க அண்ணே’.
மருத்துவமனை வந்தே விட்டது.

மருத்துவமனை சற்று பரபரப்பு கூடிக் கொள்ள ஆரம்பித்தது.
ஆட்கள் வருவது போவதும் இருந்தது.

இரண்டாவது தளத்திற்குச் செல்ல, லிப்ட் அருகே காத்திருந்தாள்.
சயனாவின் உடல் களைப்பைக் காட்ட ஆரம்பித்தது.
லிப்ட் அருகே இருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.

“உங்களுக்கு ஸ்டர்ச்சர் கொண்டு வரச் சொல்லவா?” – சயனாவின் களைப்பு கண்ட செவிலியர் ஒருவர்.

“இல்ல சிஸ்டர். இதுவே எனக்கு அப்படித்தான்” என்று சொல்லிவிட்டு, வந்த லிப்ட்டில் ஏறினாள் .

இரண்டாவது தளத்தில்…

“எங்க போனீங்க?” – காயத்திற்கு மருந்து போட்ட செவிலியர், நன்றாகக் கடிந்து கொண்டார்.

“ஸாரி, ஸாரி. ஒரு வேல சிஸ்டர்”

“வேலைன்னா?? இப்படித்தான் போனுமா?? டியூட்டி டாக்டர் எங்கள பிடிச்சி திட்னாரு.”

“ஸாரி”

“நீங்க போனதுக்கு, நாங்க திட்டு வாங்கனுமா??”

“ஸாரி ”

“இதுல, யாரோ ஒரு மேமும் ஒரு பொண்ணும் வேற உங்களைத் தேடி வந்தாங்க ”

“ஓ, இப்போ எங்க? ”

“தெரியல. ஆனா, இனிமே எங்கயும் போகாதீங்க?”

“ம்ம்ம்”

“போங்க போய் அந்த ரூம்ல இருங்க ” – செவிலியர் ஒரு அறையைக் காட்டி விட்டுச் சென்றார்.

“சிஸ்டர், நான் ஒருத்தர அட்மிட் பண்ணேன்லே. அவருக்கு… ”

“புல்லட் கொஞ்சம் டீப்பாக போயிருக்கு, ஸோ ஆபரேஷன் நடக்குது. ”

“வேற எந்த பார்மாலிட்டிஸ்.. ?? ”

“உங்களத் தேடி வந்தாங்கள, அவங்க கொஞ்சம் பென்டிங் பார்மாலிட்டிஸ் கிளியர் பண்ணிக் கொடுத்தாங்க”

“ஓ, தேங்க்ஸ்”

“போதும், நீங்க போங்க. ப்ளீஸ் ”

“ஓ ஸாரி.. ஓகே”

அறையில் நுழைந்தாள்.
கைப்பேசி எடுத்தாள்.
யாரிடமோ ‘இங்கேயே வருமாறு’ வேண்டுதல் வைத்தாள்.

சற்று நேரம் இளைப்பாற நினைத்துக் கட்டிலில் அமர்ந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில்…

சயனாவிற்கு, வேண்டிய வலி நிவாரணிகள் கொடுத்து, ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

இன்னும் சிறிது நேரத்திற்கு, அவள் உணர்வுடன் இருக்க வேண்டும். ஆனால், அவளது உடல் வலிகளை நன்றாகவே உணர ஆரம்பித்தது. உணரப்பட்ட வலிகளால், உடல் வலுவிழந்து போனது.

அக்கணத்தில் ஒருவர் உள்ளே நுழைந்தார். வேறு யாருமில்லை அமைச்சரின் துரோகி வந்துவிட்டார்.

“சிஸ்டர் நீங்க கொஞ்ச நேரம் வெளிய இருங்களேன் ” – சயனா.

“ஒரு நிமிஷம் ” – செவிலியர் டிரிப்ஸ் பாட்டிலைச் சரி செய்து விட்டுச் சென்றார்.

செவிலியர் வெளியே சென்றவுடன்…

“ஏய்! உனக்கு மரியாதை தெரியாதா? என்னய எதுக்கு இங்க வர வச்ச???. ஏதோ ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்…அதுக்காக…” – துரோகம் கோபத்தைக் காட்டியது.

“சார் உங்களுக்கு மரியாதைதான வேணும். உங்க வீட்டுக்கே வந்து, மரியாதை செலுத்துறேன் ” – இவள் எந்த அர்த்தத்தில் சொல்கிறாள்!

“ஆங்! என்னது?? ”

“ஸாரி சார். நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க, ப்ளீஸ்”

“சரி, சொல்லுங்க” – துரோகிக்கு, அமைச்சரை விட மரியாதை தெரிகிறதே! ஓ, அதிகாரம் கைக்கு வரவில்லை அல்லவா!

மருத்துவமனையில் அடியாள் …
காவல், பில்டரின் வாக்குமூலம் …
அடிபட்டிருக்கும் தான் …
கைப்பேசி உரையாடல்கள்…

இவை அனைத்தும், அமைச்சருக்கு எதிராக இருக்கின்ற சாட்சிகள் என்று படபடவென ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள், சயனா.

“ஓ, இவ்ளோ பண்ணிருக்கான அந்தாளு?” – துரோகி யோசிக்கிறது.

“ம்ம்ம். இன்னும் கொஞ்ச நேரத்தில நியூஸ் வரும். இப்போ என்ன சொல்றீங்க ”

“எனக்கு ஒரு சான்ஸ். நான் யூஸ் பண்ணிக்கப் போறேன்” – தெளிவான துரோகி.

“ஹாஸ்பிட்டல் வெளியில, எங்க மேம்கிட்ட பேட்டி எடுக்கனும்னு பிரஸ் வெய்ட் பண்றாங்க”

“ஆமா!! வர்றப்போ பார்த்தேன்”

“ஓகே. போறப்போ பார்த்துட்டு மட்டும் போகாதீங்க ”

“ஏன்? என்ன பண்ணனும்??”

“இந்த மாதிரி ஒரு சிஐடி ஆபீஸருக்கு நடந்திருக்கு. அந்த ஆபிஸர பார்க்க வந்தேன்னு சொல்லுங்க. இது ஒரு ப்ளஸ் பாய்ன்ட் உங்களுக்கு. அதான் இங்க வரச் சொன்னேன்”

அன்று அமைச்சரின் தேர்தல் வெற்றி வேண்டி, ஒரு பேட்டி கொடுக்கச் சொன்னாள். இன்று அதே அமைச்சர் தேர்தலில் போட்டி போடாதிருக்க திட்டம் தீட்டுகிறாள்.

துரோகத்திற்குப் புரியாமல் இருக்க வாய்ப்பில்லை!!

“எங்க கட்சி அமைச்சர்தான், இதுக்கு காரணம்னு உண்மைய சொல்லுங்க” – சயனா.

“ஐயோ!! கட்சித் தலைமை என்ன சொல்லுமோ??”

“ஒன்னும் சொல்லமாட்டாங்க. அது அவரோட சொந்தக் கருத்துன்னு சொல்லி முடிச்சிடுவாங்க ” – அட! சயனா கொஞ்சம் விவரம்!

“தெரியுதுல, என்ன சொன்னாலும் ஒன்னும் நடக்காதுன்னு. அப்புறம் எதுக்கு இந்த வேலை?? ”

“டிஜிபிகிட்ட, போலீஸ் அமைச்சர்தான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்லியாச்சி”

“ஆனாலும் சொல்றேன், கண்டிப்பா யாரும் கட்சியில இதைக் கண்டுக்கவே மாட்டாங்க”

“தெரியும் சார். அதான், நீங்க இப்போ நியாயத்துக்காகப் போராடுவேன்னு சொல்லுங்க”

“இங்க பாருங்க, உங்களுக்கு புரியல. கட்சியில பெரிசா எதுவும் நடவடிக்கை எடுக்க மாட்டங்க”

“அதான் உங்கள கூப்பிட்டிருக்கேன்”

“ஆனா, நான் தனியா நின்னு, என்ன பண்ண முடியும் சொல்லுங்க??”

“உங்கள யாரு தனியா நிக்கச் சொன்னது?? எல்லா பேட்டியலையும் கட்சியை டேக் பண்ணுங்க”

“அப்படின்னா?? ”

“அப்படின்னா?? கோர்த்து விடறது ”

“கோர்த்து விடறதா??”

“அமைச்சர் மேல கட்சி நடவடிக்கை எடுக்கும்… சிஐடி ஆபிஸருக்கும், அந்த இன்கம்டாக்ஸ் ஆபிஸருக்கும்… நியாயம் கிடைக்கிறதுக்கு, கட்சி உறுதுணையா இருக்கும். அப்படி இப்படின்னு சொல்லுங்க சார்… ”

“ஓ ”

“இதனால, மக்கள்கிட்ட உங்க மேல அட்டன்சென் கிரியேட் ஆகும். ”

“என்னோட முகத்தை மக்கள் மறக்க மாட்டாங்க. அதான! ”

“கரெக்ட். ஸோ கட்சிப்பார்வை உங்க மேல படும்.”

“அதே நேரத்தில், அமைச்சர் பத்தி நல்ல அபிப்பிராயம் இருக்காத மாதிரி, இந்தக் கேஸ்பத்தி திரும்பத் திரும்ப பேசனும்”

“கரெக்ட். ஸோ அடுத்த எலக்சன்ல, அவருக்கு சீட் கொடுக்க, கட்சி யோசிக்கனும். ”

“அவர் தொகுதியில எனக்கு சீட் கொடுக்க ஆலோசிக்கனும்”

“அதோட விடாதீங்க, அவரை இப்பவே பதவி விலகச் சொல்லனும்.”

“இது ரொம்ப கஷ்டம். ”

“சரி விடுங்க. நான் அடுத்தவங்களை பார்த்துக்கிறேன் ”

“யாரு அடுத்தவங்க??”

“என்னமோ உங்களுக்கு மட்டும்தான் அமைச்சர பிடிக்காதுன்னு நினைக்கிறீங்களா?? ”

“அப்புறம்?”

“என்கிட்ட, ஒரு லிஸ்டே இருக்கு. என்ன ஒன்னு? லிஸ்ட்ல நீங்கதான் பர்ஸ்ட்ல இருக்கீங்க”

“சரி இப்போ என்ன?? இந்தக் கேஸ எனக்கு சாதகமாக பயன்படுத்தனும். அதானே?. ” – இதுதான், அமைச்சர் ஆவதற்கான அறிகுறி!

“ம்ம்ம், ”

“ம்ம்ம் புரியுது.. சரி வர்றேன்.”

துரோகம் தோற்றுப் போவதில்லை. அரசியல் களத்தில் மட்டும்!!

அவர் வெளியே சென்றவுடன், கட்டிலில் படுத்து விட்டாள்.

சற்று நேரத்தில், அறைக் கதவை திறந்து கொண்டு, கனகா மேம் மற்றும் ரேவ் வந்தார்கள் .

ரேவ் வழக்கமான கண்ணீருடன்..

இருவரும், சயனா அருகில் வந்து நின்று கொண்டனர்.

“சயனா… ” – கனகா மேம்.

சயனாவின் பார்வை, ரேவின் மீதே இருந்தது.

“பெயின் ரொம்ப இருக்காடா?? ”

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது இவளிடம் பேசியே!! – சயனா பார்வை.

” இது தேவையாடா?? ”

“மேம் உங்கள பிரபு அண்ணே கூப்பிட்டாரு. ஏதோ பார்மாலிட்டிஸ் இருக்குதாம் ”

“தெரியும். அவர்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்”

“ஓ..”

“காலையிலருந்து எத்தனை பதட்டம் தெரியுமா?”

” விடுங்க. முடிஞ்சிருச்சி”

“உனக்கு இப்படி ஆயிடுச்சின்னு நியூஸ் வந்ததும், டென்ஷன்தான்”

” யாரு சொன்னாங்க? ”

“பீட்டர். இங்க வந்து கேட்டா?? எங்க போனாங்கன்னு தெரியலன்னு சொல்றாங்க ”

“டிஜிபி ஆபீஸ் போயிருந்தேன் ”

“அங்க போய்ட்டுதான் வர்றோம்” – கண்ணாமூச்சி ஆட்டத்தினால் வந்த சலிப்பு,மேமின் குரலில்.

“ஓ, அங்க போய் தேடுனீங்களா.?”

“நியூஸ் சேனலுக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சிடுச்சி. சயனா, வெளியில இன்டர்வியூ கேட்டு வேற நிக்கிறாங்க”

“ம்ம்ம் பார்த்தேன். ”

“பட், பிரபு சொல்லிட்டாரு. எந்த ஒரு இன்டர்வியூம் வேண்டாம்னு. ஏன்னா அவங்களோட ஆட்சிதான நடக்குது. அவருக்கும் பொலிட்டிக்கல் பிரஸ்ஸர் போல”

இது நடக்கும் என்று தெரியும். குற்றம் என்று தெரிந்தும், அதிகாரிகளுக்கு மட்டுமே தண்டனை!!

அதிகாரங்கள், அப்படியே ஆட்சியில் இருக்கும். இதை முன்கூட்டியே கணித்துதான் கட்சிக்குள்ளேயே ஒரு கருப்பு ஆட்டை, அமைச்சருக்கு எதிராக உலவ விட்டிருக்கிறாள்.

அவர் பார்த்துக்கொள்வார்.
இனி அமைச்சரின் – துரோகி, எதிரி ஏன்?? அமைச்சர் தொகுதியின் எதிர்கால அமைச்சரே அவர்தான்!!

இதற்குமேல் அமைச்சர் பற்றிப் பேசினால், சயனா கட்சி ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

ஆதலால், காதல் கிரகத்தின் காதல் அழுது கொண்டு இருக்கிறது. இனிமேல் அதற்கு காதல் ஆராரோ பாடுவதே பிரதானம்!!

ரேவ், இன்னும் அமைதியாக அழுது கொண்டிருந்தாள்.

“போஃன் பண்ணா எடுக்க மாட்டிய ” – சயனாவின் குரலில் நினைவை இழக்கும் தன்மை தெரிந்தது.

“போஃன் எடுக்கலனா? வீட்டுக்கு வர மாட்டியா??” – ரேவ்.

சரிதானே! நீ எத்தனை முறை ‘வராதே’, ‘பேசாதே’ என்று சொன்னாய்!! பிறகும் வீட்டின் வாசலில் வந்து நின்றவள், அவள்!!

“வலிக்குதா சயனா?” – ரேவ்.

“ரொம்ப இல்ல. இப்போ ஓகே” – கண் நன்றாகவே சொருக ஆரம்பித்தது.

“மனோ ப்ரோக்கு தெரிஞ்சா, ரொம்ப பீல் பண்ணுவாரு”

“ரேவ், பிளீஸ் மனோகர் பேர யூஸ் பண்ணாத. அந்த மாதிரி ஒருத்தர் கிடையவே கிடையாது”

“என்ன சொல்ற, சயனா? அம்மா சொன்னாங்கள”

“அவ்வளவுதான். ஆனா, பேசுனது சக்திதான்”

இரண்டு ‘ஐயோ’ வந்தது.

“ரேவ், நம்ம ஏதோ ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல வச்சி மனோகர் பத்திப் பேசிருக்கோம். ஞாபகம் இருக்கா? ”

“ம்ம்ம், அந்தக் காஃபி ஷாப்ல சயனா”

“ம், அங்க சக்தி இருந்திருக்கான்.”

இரண்டு ‘அய்யோ’ வந்தது.

“எல்லா கேட்டுட்டு, மனோகர் பேர யூஸ் பண்ணி பர்ஸ்ட் டைம் கான்வெர்சேஷன் ஸ்டார்ட் பண்ணியிருக்கான். ”

இரண்டு ‘ஓ’ வந்தது.

“அதான் பர்ஸ்ட் டைம் பேசனுதுக்கு அப்புறமா, அவன் அந்தப் பேர யூஸ் பண்ணவே இல்ல”

‘இது வேறயா’ என்பது போல், இரு பார்வைகள்.

“இது எதுவுமே தெரியாம, நானும் பேசிக்கிட்டு இருந்திருக்கேன் ”

“உனக்கு கேஸ் டென்ஷன்டா “- மேம்.

“இப்போ எப்படி தெரிஞ்சது??” – ரேவ்.

“இந்த ப்ராப்ளம்ல அவனுக்கும் இன்ஜூயுரி”

அதற்குமேல் சொல்ல முடியவில்லை.
ஒன்று, தான் சுட்டோம் என்றதால்…
மற்றொன்று, உடல் வலுவிழந்தது…

அது, பீட்டருக்கும், அவளுக்கும் இருளுக்குமான ரகசியம்…

“இப்போ என்ன பண்ணப் போற ?”

தூக்கம் சொக்கிய சயனாவின் கண்கள், துயரம் காட்டின.

“சக்திவேல் பத்தி என்ன முடிவு எடுக்கப் போற? ” – ரேவ்.

“அத எதுக்கு இப்போ, ரேவ்? நீ ரெஸ்ட் எடுடா. மத்ததெல்லாம் அப்புறம்தான்” – கனகா மேம்.

“மேம் சக்தி ப்ரண்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிடுங்க. ரேவ் நீ பார்த்துக்கோ. மேம் நீங்க டிஜிபி ஆபீஸ் போங்க. டிலே பண்ணாதீங்க ” – உளறலாக வர ஆரம்பித்தன வார்த்தைகள்.

“சரிடா. நீ ரெஸ்ட் எடு”

அதற்குமேல் சயனா தூங்கிவிட்டாள்.

ஒரு ஐந்து மணி நேரத்துக்குப் பின் ..

சயனாவின் அறையில் ரேவ் மற்றும் கனகா மேம் அமர்ந்திருந்தனர் .

கனகா மேம் முறைப்படி என்னென்ன செய்ய வேண்டுமோ செய்துவிட்டு வந்திருந்தார் .

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அறைக்கதவை திறந்து கொண்டு, சக்கர நாற்காலியில் சக்தி உள்ளே வந்தான். அவனது நண்பர்கள்தான் கூட்டிக்கொண்டு வந்தனர்.

அறையில் ஏற்கனவே இருந்த, இருவரும் வெறுப்பைக் காட்டினார்கள். அவனது வருகை, அவர்களுக்குத் துளியும் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

சயனாவின் கட்டில் அருகே கொண்டு வந்து, நாற்காலியை நிறுத்தினர்.

சக்தி, சயனாவைப் பார்த்திருந்தான். பின் நண்பர்களைப் பார்த்தான்.

“மேம், ஒரு பைவ் மினிட்ஸ். அவன் தனியா சயனா கூட இருக்கனும்னு, நினைக்கிறான். டாக்டரும் பைவ் மினிட்ஸ்தான் கொடுத்திருக்காங்க ”

அவர்கள் தயங்கினார்கள்.

“மேம், ரீயலி அவனுக்கும் ட்ரிப்ஸ் ஏத்தனும்…பிளீஸ் மேம்”

“அதெல்லாம் முடியாது” – ரேவ்.

“ரேவ், வெளியே வா ” என்று ரேவை அழைத்துக்கொண்டு, கனகா மேம் வெளியேறினார்.

“சக்தி, ஸ்ட்ரைன் பண்ணாதடா” என்று சொல்லி விட்டு, நண்பர்களும் வெளியேறினார்கள் .

தனிமையில் சக்தியும் சயனாவும்…

தன் அண்ணை அதிகாரத்தை எதிர்த்து, தோற்றுப்போய் நின்றார் .

இவள், அதிகாரத்தை எதிர்த்தது மட்டுமல்லாமல், அதில் வெற்றியும் கண்டிருக்கிறாள்.

கர்வம் வந்தது, சக்திக்கு. ஆனால் ஒரு காதலனாய், அவளின் காயம் கவலை கொள்ளச் செய்தது.

அவள் தோள்பட்டையில் போட்டிருந்த கட்டு, அவனைக் கண் கலங்கி நிற்கச் செய்தது.

கலங்கிய கண்களுடன், மெல்லிய கீற்றாய் முறுவல். சயனா பார்க்கத் தவறவிட்ட, சக்தியின் காதல் முகம்.

காதலை வேண்டிக் கரைகின்றேன் , இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்!!யாசிப்புடன் சக்தியும் காதலும்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️