NN 3
NN 3
காயத்ரியும் சிவாவை சற்று நேரம் பார்த்து கொண்டே இருந்தாள். அவன் முகத்தில் கேலியோ கிண்டலோ இல்லை! ஏன் சின்ன புன்னகை கூட இல்லை. மாறாக அவன் முகத்தில் ஆர்வமும் அக்கறையும் மட்டுமே இருந்தது!
“நேத்து வந்தது எப்போவும் வர கனவுதான்! ஆனா கொஞ்சம் புது விஷயங்கள் அதில் இருந்தது.” என்று சொல்லி
“அது என்ன கனவு எபிசோட் எபிசோடா கனவு வருமா உனக்கு?” என்று அவன் சிரிக்க.
“நக்கலா? நான் ஒன்னும் சொல்லல போங்க!” என்று அவள் எழ.
“ஹேய்! சாரி! சும்மா விளையாட்டுக்கு! சரி சொல்லு அப்படி என்னதான் அந்த சீரியல் கனவுல?” என்று அவன்கேட்க.
“எப்போவும் வர பப்பு பையன் கனவு! அவன் ஒரு குட்டி ஸ்கூல் பையன்.” என்று அவள் சொல்ல
“பப்புவா? அது என்ன கனவு? சொல்லு! சொல்லு!” என்று மிக ஆர்வமாய் அவளை பார்த்தான்!
“ஆஹா அது பெரிய கதை ஆச்சே சொல்ல ஆரம்பிச்சா நேரம் ஆகும் பரவாயில்லையா?” என்று அவள் கேட்க.
“சொல்லுன்னு சொல்றேன்ல” என்று சிவா பொறுமை இழக்க.
“சரி கேளுங்க! இந்த கனவுதான் எனக்கு வரும் ஒரே தொடர் கனவு. உங்க பாஷைல சீரியல் கனவு, நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது லேந்து வர கனவு. மீதி கனவுகள் எல்லாமே கிட்டத்தட்ட சம்மந்தமே இல்லாமல் வரும் கனவுகள்.
சரி பப்பு கனவு என்னனா…
ஒரு பெரிய வீடு அரண்மனை மாதிரி பெரிசா வெள்ளை வெளேர்னு!
அங்கே பப்புன்னு ஒரு ஸ்கூல் படிக்கிற பையன். அம்மா, அப்பா சித்தப்பா சித்தி, பாட்டி தாத்தான்னு ஒரு குட்டி ஆனா ரொம்ப அழகான பாசமான கூட்டு குடும்பம்.
அவன் சித்தப்பா சித்திக்கு குழந்தை இல்லை அதனால அவங்களும் பப்புவை ரொம்ப பாசமா பிள்ளை மாதிரி பத்துக்குறாங்க!
பப்புவோட அம்மா கர்பாமா இருக்காங்க.. ரொம்ப நாள் தனியா இருந்ததாலே அவனுக்கு ஒரு தங்கையோ தம்பியோ வரப்போறதா தெரிஞ்ச உடனேயே ஒரே குஷி சாருக்கு. இப்போவாது எனக்கு விளையாட பாப்பா வர போகுதுன்னு குஷியா சுத்துறான்.
அப்புறம் தினமும் அவன் பள்ளியில் இருந்து வரும் பொது அவன் அம்மா வயறுகிட்ட உட்கார்ந்து அன்னிக்கி பள்ளியில் நடந்த எல்லாத்தையும் அம்மா வயத்துல இருக்கும் அந்த குழந்தை கிட்ட சொல்லுவான் பாக்கவே அவ்ளோ கியூட்டா இருக்கும் அவன் அந்த பாப்பாகிட்ட பேசுறது.
கொஞ்ச நாள் கழிச்சு அவன் அம்மாக்கு ஒரு குட்டி பெண் குழந்தை பிறக்கிறாள்! எல்லாரும் சேர்ந்து அந்த குழந்தைக்கு, “மைத்ரேயி.” அப்படின்னு பேர் வைக்கிறாங்க!
ஆனா பப்புவோ அந்த குழந்தை காதுல மெதுவா, “அண்ணா மட்டும் உன்னை ஹாசினின்னு தான் கூப்பிடப்போறேன்.” சொல்றான் ரகசியமாய் அவன்.. “சோ கியூட்ல” என்று கேள்வியாய் சிவாவை பார்க்க.
அவன், “ம்ம்.. கேட்டுண்டு இருக்கேன்..” என்று சொல்ல. அவள் தொடர்ந்தாள்.
“அப்புறம் பப்புவோட 10த் போர்டு எக்ஸாம் வருது. அப்போ ஒரு திருமணத்துல கலந்துக்க அவங்க எல்லாரும் போகவேண்டி இருக்கு! பரிட்ஷை இருக்குறதால பப்புவை, பாட்டி தாத்தா கிட்ட விட்டுட்டு மீதி எல்லாரும் அவங்களோட ஒரு குட்டி பிளேன்ல எங்கயோ போரங்கங்க!
அங்க பிளேன்ல அந்த அங்கிள்கு அந்த விமான பணிப்பெண் எதோ லெட்டர் கொடுக்கறா அதுல
“நீ என்னை புருஞ்சுக்கலே, நான்சொல்லியும் நீ மதிக்கலை. அதுனால எனக்கு வேற வழி தெரியல! இதுக்கு பிராயச்சித்தமா, நான் உன் மகனை ஒன்றும் செய்யாமல் விட்டு வைக்கிறேன்! என்னை மன்னித்து விடு என் முன்னாள் நண்பா!”
என்று மட்டும் இருக்கு. கிழ கையெழுத்து எதோ இருக்கு ஆனா அதை என்னால பார்க்க முடியல! அப்புறம் அந்த பிளேன் ஒரு மலையில் மோதி வெடிச்சு சிதறிடுது.” என்று சொல்லி அவள் கண்ணை மூடி ஆழ்ந்து மூச்சு விட்டு பின் மெதுவாய் அவனை பார்த்து, “பப்பு பாவம்ல சிவா!” என்று கண்கலங்கியவள் கண்களை மூடியபடி மறுபடி பேச துவங்கினாள்
“இதான் அந்த தொடர் பப்பு கனவு! கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து இவ்ளோதூரம் ஒரு உருவம் அடைஞ்சுருக்கு! அதுல இந்த லெட்டர் தான் நான் நேத்து கடைசியா பார்த்த கனவில் புதுசா இருந்தது.
நானும் அந்த பப்பு யாருனு தேடி பார்க்க நெனச்சேன் ஆனான் அவனை கண்டுபிடிக்க எந்த க்ளூவும் கனவுல கிடைக்கல! அவங்க அப்பா அம்மா பேரு தெரியல! அவன் அப்பா முகம் தெளிவா தெரியல அனா அவங்க அம்மா முகம் மனசுல பதிஞ்சு இருக்கு. எனக்கு பப்புவ நெஜத்துல பார்த்து அவன் உறவுகள் எல்லாம் எதேச்சையா சாகல! அவங்கள அவனோட அப்பவோட எதோ ஒரு நண்பன் தான் எதோ சதி செய்ஞ்சு கொன்னு இருக்கான்னு சொல்லணும்னு துடிக்கிறேன்! ஆனா அவனை கண்டு பிடிக்க வழி தெரியல.” என்று அவள் முடிக்கும் போது சிவா அங்கு இல்லை!
‘எங்க போனான்?’ என்று அவள் அவனை தேட அவனோ அந்த கட்டில் அறையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கால் முட்டியில் முகம் புதைத்து கொன்டு இருந்தான். அருகே செல்ல செல்ல அவன் தேம்பும் சத்தம் கேட்கவும்.அவள் பதறி விட்டாள்.
“ஐயோ சிவா…ஏன் இப்படி அழறீங்க? எனக்கும் பப்புவா நெனச்சு பலநாள் தூக்கமே வரதில்ல அழுகையா தான் வரும் ஆனா நாம என்ன பண்ண முடியும்? ப்ளீஸ் சிவா.” என்றவள்
அவன் அருகில் மண்டி இட்டு அவன் முகத்தை மெல்ல நிமிர்த்த முயன்றாள், “சிவா! தயவு செஞ்சு அழாதீங்க.” என்று அவனை சமாதானம் செய்ய,
அவனோ அவள் நெஞ்சில் சாய்ந்து இன்னும் பலமாக அழ துவங்கி விட்டான்! இப்படி எந்த ஆணும் உடைந்து அழுவதை பார்த்திராத அவளுக்கும் என்ன சொல்வது செய்வது என்று புரிய வில்லை. ‘அதுவும் அத்தனை கம்பீரமான சிவாவின் மனது தான் எதனை மென்மையையாய் இருக்கு. எவனோ ஒரு குட்டி பையனுக்காக இப்படி கரைகிறானே! ‘ என்று நினைத்து கொண்டாள்!
அவன் ஆறுதல் ஆகும் வரை அவனை அணைத்தபடியே அவன் முதுகையும் தலை முடியையும் வருடி கொண்டு இருந்தாள்.
எத்தனை நேரம் அப்படி அவர்கள் இருந்தார்கள் என்று தெரியவில்லை. மெதுவாக தன்னை தேற்றி கொண்டு நிமிர்ந்தவன்.
“காயு! என் கூட வா!” என்று அவள் எழுந்து அவள் கை பிடித்து பக்கத்து அரையின் கதவருகே சென்றான்.
கைவிரல் ரேகை மூலம் திறக்கப்படும் லாக்கில் கை வைத்து அந்த கதவை திறந்தான்.
பற்றிய கையை விடாமல் காயத்ரியை அந்த அறையின் உள்ளே அழைத்து சென்றான். அந்த அரை சுவர் முழுவதும் புகை படங்களை காட்டினான்!
அதில் சுவற்றின் நடுவே ஒரு பெரிய புகைப்படம்!
அதை கண்ட காயத்ரி, “பப்பு!” என்று அலறி சிவாவின் கையை இருக்க பற்றி கொண்டாள்.
அந்த பெரிய புகைப்படத்தில் அந்த அழகு சிறுவன் பப்பு!
நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தா, பாட்டி! அவர்கள் நடுவே பின்புறமாய் நின்றிருந்தான் பப்பு!
வலது புறம் அவனது பெற்றோர்கள், இடது புறம் அவனது சித்தி சித்தப்பா.
பப்புவின் கையிலோ அவனது குழந்தை தங்கை ஹாசினி!”
“இங்க பப்பு எப்படி? உங்களுக்கு அவனை தெரியுமா?” என்று கேட்டவாறே அவனை பார்க்க திரும்பியவளுக்கு எதோ புரிந்தது போல் உறைந்து நிற்க. அவன் அவளை அணைத்து கொண்டு அமைதியானான்!
அவனிடம் எதையுமே கேட்க அவளுக்கு வாய் வரவில்லை! அவன் கண்களில் நிற்காமல் நீரை கரைபுரண்டது. அவனை இருக்க அனைத்தவளுக்கு அவனை பிரிய மனம் இல்லை. அவன் நிலையம் அதுவே!
நீண்ட நேர அமைதிக்கு பிறகு, அவனை மெல்ல விலக்கி..அவன் நெஞ்சை ஒற்றை விரலால் சுட்டி காட்டி, “பப்பு?” என்று மட்டும் அவள் கேட்க
மெளனமாக தலையை மட்டும் அசைத்தான் பப்பு என்கிற சிவா!
உலகமே உறைந்தது போல் இருந்தது அவளுக்கு தன் கைகளால் தன் வாயை பொத்தி கொண்டாள். மனதில் புயலே அடிப்பது போல் இருந்தது அவளுக்கு.
இருவர் மனதினில் உள்ள நிலையை குறிப்பது போல் வெளியே கடலும் அமைதியின்றி!
தன்னை தேற்றிக் கொண்டவள், மெல்ல அவனை ஹாலில் உள்ள சோஃபாவிற்கு அழைத்து சென்று குடிக்க தண்ணீர் கொடுத்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
“கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க சிவா, உங்களுக்கு அந்த பிளேன் ஆக்சிடென்ட் பத்தி எதானா தெரியுமா? எப்படி ஆச்சு என்னன்னு?” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
நீண்ட மூச்சை வெளியே விட்ட படி குனிந்து கொண்டு பேச துவங்கினான் சிவா தழுதழுத்த குரலில்
“அப்போ எனக்கு அவ்ளோ வெவரம் தெரியாது. உனக்கே தெரியுமே நான் 10த் போர்டு எக்ஸாம் இருந்ததால் பாட்டி தாத்தா கூட இருந்துட்டேன். அப்பா அம்மா சித்தி சித்தப்பா என் ஹாசினி எல்லாரும் எங்க பிரைவேட் பிளேன்ல மும்பை கிளம்பி போனாங்க. சில மணிநேரத்தில் அவங்க போன விமானம் கட்டுபாடு இழந்து மலையில மோதி வெடிச்சுட்டதாகவும் யாருமே பிழைச்சிருக்க வாய்ப்பே இல்லைன்னும், தகவல் மட்டும் வந்தது.
அந்த செய்தி கேட்டு பாட்டி படுத்த படுக்கையாகிட்டாங்க தாத்தா தான் எல்லா இடத்துக்கும் அலைஞ்சார். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிச்சுத்தான் அவங்க எல்லோர் உடலும் கிடைச்சது.
சின்ன பையன்னு என்ன யாரையுமே பார்க்க விடல! அவங்களை பார்த்து தாத்தா கதறினது கண்ணுலயே இருக்கு. எனக்கு ஒரே நாளுல உலகமே அந்நியமாகி போச்சு, தாத்தா பாட்டி இருந்தும் அனாதையா ஆகிட்ட உணர்வு.
இன்வெஸ்டிகேஷன் முடிவில் எதோ இயந்திர கோளாறு காரணமாய் அந்த விபத்து நடந்ததாக கேஸ் கிளோஸ் பண்ணிட்டாங்க! என் கண்ல கடைசியா அவங்க எல்லாருக்கும் டாட்டா காட்டி அனுப்பின பொது இருந்த அவர்களின் சிரித்த முகம் தான் நினைவில் இருக்கு. “என்றவன் குரல் உடைந்தது.
பக்கவாட்டில் அவனை அணைத்து அவன் தோளில் சாய்ந்து, “சாரி! என்னால அப்போவே உங்களை கண்டு பிடிக்க முடிஞ்சு இருந்தா, அவங்களை காப்பாத்தி இருந்திருக்கலாமோ? என் தப்புதான் எல்லாம்!” என்று அவள் உடைந்து அழ..
“காயு! நோ! என்ன இது? நீ எப்படி காரணம் ஆவே? விதி… நடுவுல நாம என்ன செய்ய முடியும்? யோசிச்சு பாரு காயு இந்த கனவு உனக்கு எப்போ வந்தது என்று சொன்னே? நீ 7த் 8த் படிக்கும் பொது தானே! அப்போ நான் முதல் ஆண்டு காலேஜ்ல இருந்துருப்பேன்! அதாவது விபத்து நனடந்துது அதுக்கு 6 வருஷம் முன்னாடி இருக்குமா? இந்த கனவு உனக்கு எதிர் காலத்தை காட்டல! உனக்கு நடந்து முடிந்ததை காட்டி இருக்கு! அந்த விபத்து நடத்த பொழுது நீ முதல் வகுப்பு படிச்சுண்டு இருந்துருப்பே! யோசி காயு!” என்றவன் கண்களை மூடி, “எனக்கு இப்போ தெரிய வேண்டியது ஒண்ணே ஒன்னு தான்!” …அதை சொல்லும்போதே அவன் முகம் மிக கடுமையாக மாறியது. நெற்றியில் நிரம்புகள் புடைக்க.. கைகளை இருக்க மூடியவனின் முகத்தை பாதத்தில் அவள் நடுங்கியே போனாள்.
“அவங்களை கொன்ன அந்த துரோகி யார்? எனக்கு தெரிஞ்சே ஆகணும்! அவனை என் கையாலேயே தண்டிக்க போறேன்!” என்று அவன் கர்ஜிக்க அவளோ உறைந்து விட்டாள்.
“இரு வரேன்!” என்று விருக்கென எழுந்து அந்த இரண்டாவது அறைக்கு சென்றான்.
அங்கிருந்து flare signal ( இடத்தை தூரத்தில் இருப்பவருக்கு தெரியப்படுத்தும் உபகரணம் ) எடுத்துக்கொண்டு கொண்டு வெளியில் சென்றான். அவன் அதை இயக்க அதிலிருந்த சிவப்பு ஒளி வான் வரை பறந்தது மேலும் வெளிச்சமாய் விரிவடைந்தது தீபாவளி ராக்கெட் போல!
இதுதான் கெளதம் அவன் இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருத்த, “நான் உங்கள் அருகில் தான் இருக்கிறேன்! அவசரம் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு தெரியும்!” என்று குறிப்பிட்டு இருந்தது.
என்ன செயகிறான் என்று பார்க்க அவள் வெளியே வர. “ஒன்னும் டென்ஷன் ஆகாதே! உள்ள வா!” என்பது போல் செய்கை செய்த்துவிட்டு அவன் சோஃபாவில் உட்கார்ந்து அமைதியானான்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே இரண்டு போட்கள் வந்து சேர்ந்தது. அதிலிருந்து கௌதமும் உதயாவும் இரண்டு மெய் காப்பாளர்களுடன் ஓடி வந்தனர்.
“என்னாச்சு சிவா? ஆர் யு ஆல்ரைட்? காயத்ரி ஆர் யு ஓகே? என்னாச்சு டா.” என்ற பதறிய படி சிவாவை நோக்கி கெளதம் செல்ல..
“உன்கிட்ட பேசணும் கெளதம்!, ஒரு நிமிஷம் இரு!” என்று சொல்லிவிட்டு, சிவா அங்கிருந்த மெய் காப்பாளர்களிடம், “நாம கொஞ்ச நேரத்துல புறப்படணும்! அதுவரை கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க!” என்றான்.
நடப்பவை எதுவும் புரியாமல் காயத்ரி விழிக்க.. சிவா கௌதமை தீர்க்கமாய் பார்த்து நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் சொன்னான். அவள் கனவு என்று அவள் சொன்ன அனைத்தையும். அவன் வாழ் நாளில் அவன் மறக்க துடிக்கும் அந்த கருப்பு பக்கங்களில் ஒளிந்திருந்த பெரிய சூழ்ச்சி உட்பட!
கெளதம், “அட கடவுளே!” என்று சிவாவை கட்டி கொண்டான். உதயாவோ வாய்மூடி அழ தொடங்கி விட்டாள்.
அனைவரின் நிலை அறிந்தும் எப்படி தேற்றுவது என்று தெரியாமல் காயத்ரி, உதயாவை மெல்ல அணைத்தபடி நின்றாள்.
“நானும் கௌதமும் கொஞ்சம் பேசணும் நீயும் உதயவும் புறப்பட தயாராகுங்க!” என்று காயத்ரியை நோக்கி சொல்லிவிட்டு, கௌதமை அந்த இரண்டாவது அறைக்கு கூட்டி சென்றான்.