KVI-8

 

 

கனலை விழுங்கும் இரும்பு – 7

சயனாவிற்கு, உடனே தோன்றியது என்னவென்றால் ரேவிடம் பேச வேண்டும் என்றுதான்!

அடுத்த நாளுக்கான  விடியல் ஆரம்பம் ஆனதும், எழுந்து, புறப்பட்டு ரேவின் வீட்டிற்குச் சென்றாள், சயனா.

ஆனால், சயனா சென்றடையும் முன்பே, ரேவ் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றிருந்தாள்.

சயனா அலுவலகம் வந்தடைந்தாள்.

சயனாவின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ஏதோ, சரியல்ல என்று!!

“என்னாச்சி? ஏன் இப்படி இருக்க?” – ரேவ்.

“என்ன?? இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்திட்ட. நான், உன்னைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தேன்.”

“சும்மாதான். எதுக்கு தேடின?”

“அது.. அது.. ரேவ் ஒரு விஷயம்” – குரல் குழிக்குள் இருந்து வந்தது.

“ம்ம்ம்.. சொல்லு”

“நேத்து, மனோகிட்ட சக்தி மேல ஒரு பீல் இருக்குன்னு சொன்னேன். அதுலருந்து மனோ என்கிட்ட பேசல. ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன பண்ணனும் தெரியல” – வார்த்தைகள் வரண்டு போயிருந்தன.

கோபத்தை அமைதியாக வெளிப் படுத்தினாள், ரேவ்.

“ரேவ் ஏதாவது சொல்லு”

“நான் சொன்னா நீ கேட்பியா?? ”

“டிரை பண்றேன்”

“சயனா, கேஸ் முடிஞ்சாச்சி. கனலினி இருக்கிற இடத்தை, அமைச்சர்கிட்ட சொல்லிட்டா போதும். அதுக்கப்புறம் மனோவ போஃன் பண்ணி வரச் சொல்லி, மேரேஜ் பண்ணிக்கோ. ”

“அது முடியாது ரேவ். அந்தக் காப்பகம் போய், அவங்களப் பார்க்கலாம். ப்ளீஸ், நீயும் என்கூட வா ”

“முடியாது. எனக்கு வேற வேலை இருக்கு”

“என்ன வேலை? ”

“ஏர்போர்ட்ல செக் பண்ணப் போறேன். ஏன்னா? அமைச்சர் சக்திவேலப் பத்திக் கேட்டா சொல்லனும்ல”

“கொஞ்சம் கூட தேவையில்லாத இன்வெஸ்டிகேஷன் ” – அமைதியாக சொன்னாள், சயனா.

“நேத்து, சக்திவேலுக்கு கல்யாணம் ஆயிருச்சான கேட்டியே? அதுமட்டும் தேவையானதா?? ” – ஆங்காரமாய் கேட்டாள், ரேவ்.

இம்முறை கோபம் சயனாவிற்கு. அமைதியாக, அதை வெளிப்படுத்தத் தெரியாததால், அறையை விட்டு வெளியேறினாள், சயனா.

*******

மனநிலை காப்பகம்…

மூளையும் மனதும் ஒரு சிறிய இடைவெளியில் வேலை செய்வதால், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகக்  கருதப்பட்டனர், அங்கிருந்தோர்.

அந்தக் காப்பகத்தின் உரிமையாளர், ஒரு பெண்மணி, பெயர் சந்திரா. கனலினியும், அவரும் நெருங்கிய  தோழிகள்.

கனலினிப் பற்றி விசாரிக்க வந்ததால், சயனாவிற்கு பிரத்தியேக நேரத்தை ஒதுக்கினார்.

“கனலிப் பத்தி, எதுக்கு கேட்கறீங்க?”

“அவங்களோட, பழைய கேஸ் பத்திக் கேள்விப்பட்டேன். அதான் விசாரி… பார்த்திட்டுப் போகலாம்னு” என்று, பத்திரிக்கைச் செய்தியைக் காட்டினாள்.

“இதுக்கு மேல என்ன டிடெயில்ஸ் வேணும்?”

“இல்ல, ரெண்டு மாசமா? மூனு மாசமா? ”

“என்னது?”

“ஜெயில்ல இருந்தது”

“பேப்பர்ல போட்டுருக்கே, ரெண்டு மாசம்னு”

“ஏன் இப்படி ஆனதுன்னு சொல்ல முடியுமா? ”

“ஜெயில்ல, நிறைய டார்ச்சர். அதான், அதனாலதான். போதுமா? ”

“பிஸிக்கல் டார்ச்சரா? இல்ல மென்டல் டார்ச்சரா? ”

“சயனா.. உங்களுக்கு வேணா இது ரொம்ப ஈசியா இருக்கும். ஆனா எங்களுக்கு இந்த மாதிரி வார்த்தையெல்லாம்… நாங்க ” – தன் தோழியின் துயரத்தில்  துவண்டார்.

“ஸாரி… நான்.. நான்.. யோசிக்கல. ரியலி ஸாரி மேடம்”

“இருக்கட்டும் ”

“உங்க சைடுலருந்து எந்த ஆக்சனும் எடுக்கலையா?? ஜாமீன்.. வக்கீல் வச்சி…லைக் தேட் ”

“சக்தி நிறைய டிரை பண்ணான். ஆனா எல்லாமே அநியாயமா நடக்கிறப்ப, என்ன பண்ண முடியும்? ”

அந்த அநியாயம், சக்திவேலை ஆட்டியதோ என்னவோ? சயனாவை ஆட்டிப் படைத்தது.

“முதல் நாள், அவனால ஏத்துக்கவே முடியல. ஏன்? என்ன செய்யனும்னு கூடத் தெரியல. ”

சக்திவேலால் ஏற்க முடியாத ஒன்றை சயனாவும் ஏற்றுக் கொள்ள முடியாமல், தவித்தாள்.

“நானும், சக்தியோட ப்ரண்ட்ஸும் சேர்ந்துதான், அவனக் கொஞ்சம் தேத்திக் கொண்டு வந்தோம்”

அந்த இடத்தில், நான் இல்லாமல் போனேனே, சக்திவேலைத் தேற்ற!! – இது சயனாவின் ஏக்கம்!

“அப்புறமாவும், சக்தி ப்ரண்ட்ஸ்தான் வக்கீல் அரேஞ்ச் பண்ணாங்க. எதுவும் யூஸாகல ”

சட்டம் உபயோகமில்லாமல் போனதா? – இது சயனாவின் கோபம்!!

“ரெண்டு நாளா சக்திதான், போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே இருந்தான். அதுக்கு மேல, அவனாலயும் ஒன்னும் பண்ண முடியல”

அநியாயத்திடமிருந்து தாயை மீட்க, காத்துக் கிடந்தப் பிள்ளை. அதே பிள்ளையை நியாயத்திற்காக காக்க நினைக்கும் சயனா!!

“நான்தான், அவன வற்புறுத்தி என்னோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். ”

” சக்தியோட ரிலேட்டிவ்ஸ்”

“சந்தோஷம்னா சங்கமிக்கிறதும், துக்கம்னா தூரப் போறதும்தான், சொந்தம்னு ஆயிருச்சி சக்திக்கு”

என்னைப் போலவே இன்னொரு ஜீவன்!! – இது சயனாவின் துயரம்!!

“அந்த ரெண்டு மாசமும், அவன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தூங்கவே மாட்டான். ஏதோ பேருக்கு சாப்பிட்டு, போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல போய் உட்கார்ந்திருவான். ”

கௌரவத்தோடு கஷ்டப்பட்டத் தன் தாயை நினைத்தே, தன்னால் உறங்க இயலவில்லை. கௌரவத்தை இழந்து கஷ்டப்பட்டத் தாயை நினைத்தால், எப்படி அவனுக்கு உறக்கம் பிடிக்கும்.

“ஆனா அந்த ரெண்டு மாசத்துக்கு அப்புறமா, கனலிய அப்படி பார்த்தப்ப, அவனால முடியல. உடஞ்சிட்டான். ”

இது, சயனா முழுவதும் சக்திக்காக உருகிய தருணம்!

“அதான்… அதுக்குத்தான்.. ” என்றவர் முகம், ரௌத்திரம் காட்டியது.

“அதுக்குத்தான்..” – இது சிஐடி சயனா.

அவர் சுதாரித்துக் கொண்டார்.

“ஒன்னுமில்லை ”

“சரி, எப்படி மாட்டிவிட முடிஞ்சது”

“அது, அந்தச்சமயம் கனலி ஒரு புது வீடு வாங்கிருந்தா. அதுக்காக  கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதனால, வேற ஒரு பிராப்பர்ட்டிய வித்திருந்தா. அத வாங்கினவரு பணத்த, ஆபிஸ்ல வந்து தந்தாரு. அதான் பிரச்சனை ஆயிருச்சி”

“தப்பில்லையா? ஆபீஸ்ல வச்சி ஒரு இன்கம்டாக்ஸ் ஆபிஸர், பணம் வாங்கிறது. அவங்க யோசிச்சிருக்க வேண்டாமா?? ரொம்பத் தப்பு”

“அப்போ, அது இவ்வளவு பெரிய விஷயமா மாறும்னு கனலி  நினைக்கல. அதோட கனலி, அவளோட டியூட்டியதான பண்ணா. வரிக் கட்டச் சொல்லிக் கேட்டது தப்பா… ”

“இல்ல, ஒரு இன்கம்டேக்ஸ் ஆபீஸர் இந்த மாதிரி விஷயத்தையும் பார்த்திருக்கனும். சரி, எனக்கு அந்த ஆளோட அட்ரஸ் சொல்லுங்க. நான் பேசிப் பாக்கிறேன்”

“நாங்களும் நிறைய ட்ரை பண்ணிப் பார்த்தாச்சு. ”

“இல்ல, நான் வேற மாதிரி ட்ரை பண்றேன். நீங்க அந்த அட்ரஸ் கொடுங்க”

“அவர் ஒரு பிஸினஸ்மேன். காலி லேன்ட் வாங்கி பில்டிங் கெட்ற பில்டர். நல்லவர்தான், ஆனா அமைச்சரே இன்வால்வ் ஆகிருக்கும் போது.. ”

அவரிடமிருந்து முகவரியை வாங்கி கொண்டாள், சயனா.

“வேற ஆங்கில்ல டிரை பண்ணீங்களா? ”

“இல்லை. நிறைய பத்திரிகைல கூட வந்திருச்சி. அதனால ஒன்னும் பண்ண முடியல”

“இல்ல நீங்க சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன். ரெண்டு மூனு பேப்பர்ல கனலினி மேம்பத்தி, கரெக்டா தான் எழுதிருக்காங்க. ”

“இல்ல மெஜாரிட்டி பார்த்தா ”

“மெஜாரிட்டி பார்த்து, வெற்றின்னு சொல்றதுக்கு, இது ஒன்னும் எலக்சன் இல்ல. உண்மை”

சயனாவின் தெளிவு அவருக்கு வியப்பு தந்தது.

“சரி, கனலினி மேம்ம பார்க்கலாமா? ”

“தாராளமா. வாங்க கூட்டிட்டுப் போறேன் ” என்று கனலினி இருக்கும் இடத்திற்குக்  கூட்டிச்சென்றார்.

அது ஒரு சிறிய அறைதான். ஒற்றைக் கட்டில் போடப்பட்டிருந்தது. கனலினி, அதில்தான் அமர்ந்திருந்தார்.

தேகம் மெலிந்திருந்தது. கண்களின் கீழே கருவளையங்கள். நன்றாக வெண்மை ஏறிப்போன தலைமுடிகள். புன்னகை தொலைத்த முகம். உடலும் குறுகிப் போய் இருந்தது. உதடுகள் எல்லாம் வெடிப்புகளாக இருந்தன. அந்தக் காப்பகத்திற்கே உரிய சீருடை அணிந்திருந்தார்.

பத்திரிகையில் பார்த்தவரா இவர்?? அத்துனை வேறுபாடுகள். ப்ளைன் காட்டன் சுடிதார். தனிப்பட்டுத் தெரியும் வண்ணத்தில், துப்பட்டா. தூக்கிப் போடப்பட்ட ‘போனி டெயில்’. எவ்வித ஆபரணங்கள் கிடையாது. ஆனால், மூக்கில் மட்டும் பெரிய, வட்டமான ஆன்டிக் மூக்குத்தி.

“பேசினா பேசுவாங்களா?”

“இல்ல. அப்படியெல்லாம் ரியாக்ட் பண்ண மாட்டாங்க. பேசறதுனா?.. எப்பவாவது சக்..”

“….” – உண்மையைச் சொல்லுங்க என்பது போன்ற சயனாவின் அமைதிப் பார்வை.

“வாங்க,  வெளில போய் பேசலாம்.” – சந்திரா, உண்மையை மறைத்து, பேச்சை மாற்றிவிட்டார்.

“சரி” என்று காப்பகத்தை விட்டு வெளியே வந்தனர்.

“இது சரியாக வாய்ப்பு இருக்கா?” – சயனா.

“டாக்டர் பெரிய ஹோப் கொடுக்கல. சரியாயிரும்னு நம்புறோம் ”

“உங்களுக்கு கனலி மேம்… எப்படி தெரியும்? ”

“மேமெல்லாம் வேண்டாம். ஆன்ட்டினு சொல்லுங்க”

“ஓகே, கனலி ஆன்ட்டி உங்களுக்கு எப்படி பழக்கம்” என்று தலையை நன்றாக ஆட்டினாள்.

“கனலியோட ஹஸ்பண்ட் மோகனும், நானும் ப்ரண்ட்ஸ். நாங்க சேர்ந்துதான், இந்த டிரஸ்ட்ட நடத்தி வந்தோம். மோகன் மேரேஜ்க்கு அப்புறமாதான், கனலி எனக்கு அறிமுகம். ”

“ஓ.. நைஸ்”

“ஸோ க்யூட் பேமலி. மோகன் கனலிய அவ்வளவு நல்லா பார்த்துப்பான். ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர்.”

“வாவ், குட் லைஃப் பார்ட்னர்”

“ஈவன், சக்தி கூட சொல்லிக்கிட்டே இருப்பான்.. ‘டாட் உங்களவிட ஒன் ஸ்டெப் அஹெடா, என் லைஃப் பார்ட்னர  கேர் பண்ணுவேனு’ ”

சக்தியின் ‘கவனிப்பை’, கவனமாக உள்வாங்கி கொண்டாள், சயனா.

“சக்தி வளர்ந்த பின்னாடி, அவனும் மோகனும் சேர்ந்து கனலிய ரொம்ப பெட்(pet) பண்ணாங்க”

“ஓ…நைஸ் டூ ஹியர்”

“அது கனலிய ரொம்ப வீக் ஆகிடுச்சி. அதான் அவளால, இந்த விஷயத்த தைரியமா ஹேன்டில் பண்ணத் தெரியல”

“மே பீ…”

“இப்பெல்லாம் சக்தி சொல்றது, ஒரு ஸ்டார்ங்கான பொண்ணுதான் தனக்கு லைஃப் பார்ட்னரா வரனும்னு”

“ம்ம்ம், சக்தியோட அப்பா… ”

“மோகன், இப்ப இல்லை. நார்மல் டெத்தான். பட், நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணல. ஸோ, அப்பவே சக்தி கொஞ்சம் டவுன் ஆயிட்டான்”

“ஸாரி பார் தேட்… ”

“வீடும் கொஞ்சம் சந்தோஷத்த தொலைச்சது. ஆப்டர் சிக்ஸ் மன்த், ஓகே ஆனான். அதுக்குள்ள இப்படி ஆயிருச்சி. சக்தி மனசு சங்கடப் பட்டு இருக்கு சயனா”

“இப்ப எதுக்கு என்கிட்ட இதெல்லாம் சொன்னீங்க? ”

“அது.. அது…. ” – தடுமாற்றம்.

சயனாவிற்கு புரிந்துவிட்டது. சக்தி, தன்னைப் பற்றி இவர்களிடம் பேசுகிறான் என்று. நேற்று, சக்தியின் நண்பனின் வாய் வார்த்தையான ‘லவ்கூட பண்ணல’ என்பதே போதும். சக்தி ‘எந்த உறவின் பெயரில்’, இவர்களிடம் தன்னை நிறுத்திப் பேசியிருப்பான் என்று!!

“ஓகே ஓகே அவங்க பையன் இப்போ எங்க இருக்காங்க.? இவ்வளவு செஞ்ச பையன், இப்ப எங்க? ”

“சக்தி யூகேல படிக்கிறான் ”

“ஓ, கிரேட் ”

“ஆமா, சக்தி ரொம்ப நல்ல பையன். நல்லாவும் படிப்பான்”

“நான் அதுக்காக கிரேட்னு  சொல்லல. ஒரு மனுஷன், ஒரே நேரத்துல யூஎஸ்லயும் படிச்சுக்கிட்டு, யுகேலயும் படிக்கிறான்ல. அதச்  சொன்னேன்”

சந்திரா, தடுமாறினார். அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள்,சயனா.

“டயலாக் மறந்துட்டீங்களா?” – புருவம் உயர்த்திய சயனா.

பதற்றம் வந்தது சந்திராவிடம்.

“சில கேரக்டர், டயலாக் மறக்கிறீங்க. சிலர் மாத்றீங்க. இன்னும் சிலர், எமோஷனலாகி நிறைய டயலாக் பேசறீங்க”

பதற்றம் போய், அமைதி வந்தது.

“உங்க டேரக்டர்கிட்ட சொல்லுங்க,  ஸ்கிரிப்ட் கொஞ்சம் வீக்தானு”

அமைதி விலகி, புன்னகை வந்தது.

“அப்புறம், ஸ்க்ரீன்ப்ளேயும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல.”

புன்னகை விரிந்து சிரிப்பு வந்தது.

“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு, சக்திகிட்ட சொல்லிடுங்க” என்றவள், சிரிப்புடன் சேர்த்து, மனதையும் சிதற விட்டுச் சென்றாள்.

******

காப்பகத்திலிருந்து வெளியே வந்த சயனா, ராயலின் மேல் அமர்ந்தாள். இந்த வழக்கை, இனிமேல் எந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என யோசித்தாள்.

நின்றுகொண்டிருந்த ராயலின் மேல், சயனாவின் மூளை, ராட்சச வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது. வேலையின் முடிவில், அவளுக்குத் தேவையான விடயங்கள்…

தற்போது, அமைச்சர் இருக்கின்ற கட்சியில், அவருக்குப் போட்டியாக  யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அந்த நபருக்குக் கட்சியிலும், தொகுதியிலும் கொஞ்சம் செல்வாக்கு இருக்க வேண்டும். சுருக்கமாக, அமைச்சரைக் கீழே தள்ளிவிட்டு, அந்த நபர் மேலே வரத் துடிக்க வேண்டும்.

இரண்டாவது, அந்தக் காவல்துறை அதிகாரியின் தவறைச் சுட்டிக் காட்ட, தட்டிக் கேட்க ஒருவர் வேண்டும். அதே துறையைச் சேர்ந்த அதிகாரி – அந்த ஒருவர்.

சில பத்திரிக்கைகள்… கடைசியாக, இந்த வழக்கின் முக்கிய நபரான ‘பில்டர்’.

கைப்பேசி கொண்டு, விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள்.  அவளது வேலையும் இதுபோன்று என்பதால், எளிதாகத் தேவையான விவரங்களைத் திரட்டினாள்.

தற்சமயம், இதற்கு அவசியம் இல்லை என்று தெரியும். எப்பொழுது தேவையோ அந்தச் சமயத்திற்கான முன்னேற்பாடு, இது.

அந்நொடி, கைப்பேசியின் அதிர்வைச் சயனாவின் கரங்கள் உணர்ந்தன.

ரேவ்தான்.

“சொல்லு ரேவ்”

“சயனா, நீ எங்க இருக்க?” – குரலில் மிகுந்த பதற்றம்.

“இங்க, கனலினி ஆன்ட்டிய பார்க்க வந்திருக்கேன். ஏன்? என்னாச்சி?”

“சரி, ஆபீசுக்கு சீக்கிரம் வா. கொரியர் வந்திருக்கு”

“ம்ம், கொரியர் தாம்பரத்தில இருந்து வந்திருக்கா?”

“ப்ச், முதல நீ ஆபிஸுக்கு வா?”

“சரி, வரேன். பட், நான் சொன்னத செக் பண்ணி வைச்சிரு”

“நான் செக் பண்றேன். ஆனா நீ உடனே வரனும் ”

” ம்ம்ம் ”

எதற்கிந்த பதற்றம் என்று தெரிந்து கொள்ள, என்ஃபீல்டு எகிறிச் செல்கிறது.

*******

அலுவலகத்தில்…

சயனா, ரேவின் அறைக்குள் நுழைந்த மறுவினாடியே, ரேவ் ஓடிவந்து சயனாவைப் பிடித்துக் கொண்டாள்.

காலையின் கருத்து வேறுபாட்டிற்கா?  என்றால்… கண்டிப்பாகக் கிடையாது. ஏனெனில், இதுபோல் கருத்து வேறுபாடுகள், எல்லா வழக்கிலும், ஏராளமாக வரும். அதையும் தாண்டி நிற்பதுதான் அவர்களது நட்பு!!

“என்னாச்சி?? சொல்லு ரேவ்”

ரேவ், சயனாவின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். லேசான விம்மல்களும் வந்தன.

“ரேவ், நீ பர்ஸ்ட் நார்மலாகு. மேம் நீங்களாவது சொல்லுங்க”

“உனக்கு ஒன்னும் ஆகலையே” – ரேவ்

“என்னாச்சுன்னு சொல்லு, ரேவ்”

“இதை வாசிச்சிப் பாரு” என்று கூறி, கொரியரில் வந்த காகிதத்தைக் கொடுத்தார், கனகா மேம்.

ரேவை, விலக்கி நிறுத்திவிட்டுக் காகிதத்தை வாங்கினாள், சயனா.

“மறுபடியும் கொரியரா? எந்த ஏரியா?” என்று கேட்டவாரே காகிதத்தைக் பிரித்தாள்.

“தாம்பரம்”

“ஓ, அப்போ அந்த அப்பார்ட்மெண்ட்ல செக்யூரிட்டி இருக்காருல, அவரோட ஏரியா. ”

“இவங்கெல்லாம், ஏன்? எதுக்கு இந்த சக்திவேலுக்கு இவ்வளவு உதவுனும்?” – அழுத்தம் திருத்தமாக ரேவின் விம்மல்களுக்கு ஊடே வினா?.

“கெட்டவங்களுக்கு உதவி செஞ்சா ஏன்னு கேட்கலாம்? நல்லவங்களுக்கு உதவி செஞ்சா, எதுக்கு கேட்கணும்? ” – விரிவான பதில் இல்லையெனிலும், விளக்கமான பதில்.

“சயனா, நான் ஏர்போர்ட்ல செக் பண்ணிட்டேன். சக்திவேல், எங்கயும் போகல. இங்கதான் இருக்கான். ”

“தெரிஞ்சதுதான”

“அப்புறமென்ன, அமைச்சர்கிட்ட சொல்லிட்டு, கேஸக் குளோஸ் பண்ணிடலாம்” – கனகா மேம்.

கொரியர் தாங்கி வந்த வார்த்தை, அவர்களை இப்படி பேச வைக்கிறது.

” நோ.. நோ.. அது இப்ப வேண்டாம். ” – சயனா.

“சயனா, இந்தக் கொரியரப் வந்த பிறகு, சக்தியால உனக்கு எதாவது ஆயிடுமோனு பயமாயிருக்கு ” – நடுங்கினாள் ரேவ்.

“ஹே ரேவ், அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அதுவும்  சக்தியால எனக்கு… சான்ஸே இல்லை”

“சயனா, அமைச்சர்கிட்ட சொல்லிப், பாதுகாப்பு கேட்கலாமா?” – கனகா மேம்.

“மேம், நாம சிஐடி ஆபிஸர்ஸ். ஏன் இப்படி யோசிக்கிறீங்க?! ”

இதற்கிடையில், செக்யூரிட்டி வந்து நின்றார்,

“என்ன அண்ணே? ” – சயனா.

“மேடம், அமைச்சர் அனுப்பினதாச்  சொல்லி, போலீஸ் வந்திருக்காரு ”

“இவன் வேற? இன்னைக்கு பார்க்க முடியாதுனு சொல்லுங்க” – சயனா.

கனலினி கஷ்டத்திற்குக் காரணம், இவனும் என்பதால் வந்த கோபம்.

“அதெல்லாம் வேண்டாம். அவர உள்ளே வரச் சொல்லுங்க” – கனகா மேம்.

“மேம், ஏன் இப்படிப் பண்றீங்க” – சயனா.

“அந்த போலீஸ்கிட்ட இந்த மாதிரி மெசேஜ் வந்திருக்கின்னு சொல்வோம்” – மேம்.

” மேம், எதுவும் சொல்ல வேண்டாம் ”

“அவர் கேட்பாரு, சயனா. இத்தனை நாள் என்ன பண்ணீங்கனு. அதுக்கு என்ன பதில் சொல்ல? ”

“ஏதாவது சொல்லி சமாளிப்போம்”

“எத்தனை நாள்தான் சமாளிக்க. சக்திவேலால, உனக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்தா?? ”

“கண்டிப்பா அப்படி எதுவும் பண்ண மாட்டான்”

“அம்மாக்காக பழி வாங்கிறானு நீதான சொன்ன. நீ, அமைச்சர்க்காக அவனத் தேடி போறனா, உன்னையும் பழி வாங்குவான்ல”

“நிச்சயமா, அந்த மாதிரி நடக்காது”

“எப்படி சொல்ற? சக்திவேல் வந்து உன்கிட்ட ஏதாவது சொன்னானா? ”

“இல்ல. இது நான் உணர்ர விஷயம், இத எப்படி உங்ககிட்ட சொல்லன்னு தெரியல”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்” – ரேவ்.

“ரேவ், புரிஞ்சிக்கோ. நான் அப்புறமா சக்திப் பத்திச் சொல்றேன்.”

இடையே, காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தார்.

“குட் ஆப்டர் நூன்” – காவல்.

“குட் ஆப்டர் நூன். உட்காருங்க”- மேம்.

“கேஸப்பத்தி, அமைச்சர் கேட்கச் சொன்னாரு”

“இப்ப கூட, நாங்க கேஸ் டிடெயில்ஸ் பத்திதான் டிஸ்கஸ் பண்ணோம்”

“சரி, அதை அப்படியே என்கிட்ட சொல்லுங்க. நான் அமைச்சர்கிட்ட சொல்லிடுவேன். ”

“அது.அது ஹேக்கர் சென்னைலதான் இருக்கான். ஹேக்கிங் டிடெயில்ஸ் வச்சி, ரேவ் இத லோகேட் பண்ணிருக்கா” – சயனா.

“இதக் கண்டுபிடிக்க, உனக்கு இத்தனை நாள் தேவப்படுதா? ”

“இன்னும் ரெண்டு நாள்ல, எல்லா டிடெயில்ஸூம் கலெக்ட் பண்ணிச் சொல்றேன். ” – ரேவ்.

“இன்னும் ரெண்டு நாளுஉ… ”

“கண்டிப்பா சொல்றோம். ” – மேம்.

“ரெண்டு நாள்ள இல்லன்னா, திரும்பவும் மீட்டிங்தான்” என்று எச்சரித்துக் கொண்டே காவல்துறை விடைபெற்றது.

அவர் சென்றதும்,

“ரெண்டு நாள்னு ஏன் சொன்ன, ரேவ்?” – சயனா.

“அதுவே அதிகம். கேஸ் ஓவர்” – ரேவ்.

“அறிவேயில்லையா?? நான் கேஸ, எலக்சன் வரைக்கும் டிலே பண்ண நினைச்சேன்.. ச்சே… ” என்று சயனா, கோபத்தில் வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல், தன் தனியறைக்குச் சென்றாள்.

*****

சயனா சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், கனகா மேம் மற்றும் ரேவ்.

“இவ சரியே இல்லை, ரேவ். நிச்சயமா இவ சரியா இல்லை” – மேம்.

“கரெக்ட் மேம். அவ மாறிட்டா மேம்.”

உணவு செல்லவில்லை

றக்கம் கொள்ளவில்லை 

மணம் விரும்பவில்லை 

மலர் பிடிக்கவில்லை 

குணம் உறுதி இல்லை – எதிலும்

குழப்பம் வந்தது… 

– தனியறையில் சயனாவும், காதலும். 

“நேத்து மனோவ வேற பிடிக்கலன்னு சொல்லிருக்கா, மேம்”

“இது வேறயா? நீ சொல்லவே இல்ல. சொல்லிருந்தா, இப்ப வந்த போலீஸ்கிட்டேயே எல்லாத்தையும் சொல்லியிருப்பேனே, ரேவ்”

“இருக்கட்டும் மேம். சக்திவேலோட போஃட்டோவ பார்த்திட்டுதான், இவ இப்படியெல்லாம் பேசிருக்கா. ”

எங்கிருந்தோ வந்தான்,

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!! 

– தனியறையில் சயனாவும், காதலும்.

“இதுல நேத்து இன்வெஸ்டிகேஷன் பேர்ல, அந்த சக்திக்கு கல்யாணம் ஆச்சான்னு, கேள்வி வேற”

“இவ என்ன முட்டாளா? யாருனே தெரியாதவனப் போய், நம்பிகிட்டு நினைச்சுக்கிட்டு இருக்கா? ”

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்! திக்குத் தெரியாத காட்டில் – உனைத் தேடித் தேடி இளைத்தேன்!! 

– தனியறையில் சயனாவும், காதலும்.

“இப்ப, என்ன பண்ண, ரேவ்? ஏதாவது செய்யனும்ல?”

“அவகிட்ட திரும்பவும் சொல்லிப் பார்க்கிறேன், மேம். சக்திவேல் விஷயத்த மறக்கச் சொல்றேன்”

நேரம் முழுதிலும்அப் பாவி தன்னையே – உள்ளம்

நினைத்து மறுகுதே…

– தனியறையில் சயனாவும் காதலும்.

“அதைக் கேட்கலனா, நாளைக்கு நாம  அமைச்சர்கிட்ட சொல்லிரலாம்”

“நாளைக்கு வேண்டாம் மேம், சயனா பர்த்டே. ஸோ அதுக்கு அடுத்த நாள், மீட்டிங் அரேஞ்ச் பண்ணி, அமைச்சரக் கூப்பிட்டு, கனலினி இருக்கிற இடத்தை சொல்லிருவோம்”

“ஓகே ரேவ், தேட் ஸவுன்ட்ஸ் குட். அப்பதான், அவ மைன்ட் சேஞ்சாகும்”

எண்ணி எண்ணிப் பார்த்தேன் – அவன்தான்

யாரெனச் சிந்தை செய்தேன்!! 

– தனியறையில் சயனாவும் காதலும்.

“ரேவ், நீ சொன்னா கண்டிப்பா இதெல்லாம் மறந்திடுவா. நீ தெளிவா பேசு”

“சரி மேம்”

கண்ணன் முகம்மறந்து போனால் – இந்தக்

கண்கள் இருந்தும்பயன் உண்டோ? 

– தனியறையில் சயனாவும் காதலும்.

*******

அப்படி என்னதான், அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது.

நெருங்காதே!!

உன்னை விழுங்கும் கனலாவேன்!

ஆனால், இதைச் சயனா எவ்விதத்தில் எடுத்துக் கொண்டாள்… என்று தெரியவில்லை.

அவள் நிலையைப் பார்க்கும் போது, ‘உன்னை விரும்பும் கனலாவேன்’ , என்றே எடுத்துக் கொண்டாளோ??

அவளின் நிலைதான் என்ன??

சக்திவேல்,

உன் காயத்தைச்

சரி செய்வதாய்ச் சொல்லி… 

எனைக் காதலில் 

சரியச் செய்தாயடா!! 

– தனியறையில் சயனாவும் காதலும்