AOA-15

அவனன்றி ஓரணுவும்- 15

கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான்

மனிதனுக்கு தெரியவரும்… இந்த பணம் என்ற காகிதத்தை தின்ன முடியாது என்று

இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைத்து நிகழ்காலத்தில் தினம் தினம் அழுகிற சம்பவங்கள் உலகத்தில் எப்போதாவதுதான் நடக்கும். இயற்கை பேரிடர்களை எல்லாம் தாண்டிய ஒரு பேரிடரின் பெயர் செர்னோபில்!

அந்த இரவு நேரத்தில், வெப்ப நிலை 10 டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது. இந்தியா போன்ற நாட்டவருக்கு அது கடும் குளிர் கொடுக்கக் கூடிய சீதோஷ்ணம் தான். ஆனால், அன்றைய ஒருங்கிணைந்த சோவியத்தின், செர்னோபில் பகுதி மக்களுக்கு, அது கடுமையான குளிர் இல்லை.

26-04-1986. அது ஒரு சனிக்கிழமை.

நள்ளிரவு மணி 1. 15. செர்னோபில் அணு உலையின் 4 வது எண் கலனில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

1.20 மணி… அதீத வெப்பத்தைக் கக்க ஆரம்பிக்கிறது. தண்ணீர் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஆவியாகத் தொடங்குகின்றன.

மணி… 1.22 நிமிடங்கள், 30 நொடிகள். அதைப் பரிசோதித்துக் கொண்டிருந்த ஆய்வாளர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர்கள் முடிவெடுத்து முடிப்பதற்குள்…

மணி… 1.23 பெரும் சத்தத்தோடு உலை வெடிக்கிறது. கடுமையான வெப்பம். அதைப் பரிசோதித்த இருவரும் சம்பவ இடத்திலேயே சாகிறார்கள். தீ பற்றத் தொடங்குகிறது. பற்றி எரியத் தொடங்குகிறது. எந்தளவிற்கு என்றால்… அது தொடர்ந்து 9 நாட்களுக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

முதலில் இதை சாதாரண விபத்தாகத் தான் நினைக்கிறது சோவியத் அரசு. பின்னர், விபத்தின் வீரியத்தை உணர்ந்து ஹெலிகாப்டரில் பறந்து மண்ணையும், கரியத்தையும் வீசி அணைக்க முயற்சிக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள், அணு உலையிலிருந்து தரை வழி வெளியேறும் அணுக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

10 லட்சம் பேர் வரை இணைந்து முதற்கட்ட மீட்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். 200 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிறைந்த அணுக்கழிவு, 30 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிரம்பிய துகள்கள், 16 டன் அளவிற்கான யுரேனியம் மற்றும் புளுட்டேனியம் நிறைந்து கிடந்த அந்தப் பகுதியைப் பாதுகாக்க அதன்மீது ஒரு கான்கிரீட் வேலியை அமைக்கிறார்கள். விபத்து நடந்த அன்று மட்டும் 31 பேர் நேரடியாக இதில் மரணம் அடைந்தார்கள்.

(குறிப்பு- இந்த அணுகழிவில் கலந்திருக்கும் சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 ஆயிரம் ஆண்டுகள் தேவை.)

விபத்து நடந்து 36 மணி நேரத்தில்,10 கிமீ சுற்றளவிலிருந்த கிட்டத்தட்ட 49 ஆயிரம் பேர் அந்தப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். மொத்தமாக 8 டன் அளவிற்கான கதிர்வீச்சு பொருள் வகைகள் வெளியேறின. பல லட்சம் பேருக்கு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டன. கேன்சர் பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. கதிர்வீச்சு பாதிப்புகளின் காரணமாக தோராயமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

இதில் 20% தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வாழ்வாதாரத்தைக் குலைத்து, மரணத்தை அளித்து, பல லட்சம் பேரை நடை பிணங்களாக்கி, மரம், செடி கொடிகளைக் கொன்று, லட்சக்கணக்கான கால்நடைகளைக் கொன்று என மனித இன வரலாற்றில், மனிதன் ஏற்படுத்திய ஆகப் பெரும் பேரிடராக பெரும் வலியோடு இதுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகள் கடந்தும் கூட, இன்றும் அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கதிர்வீச்சின் பாதிப்புகள் நாடுகள் கடந்து அயர்லாந்து வரை இன்றும் இருந்து வருகிறது.

வருடங்கள் கடந்தாலும் அணு உலையின் தழும்புகளைச் சுமந்தே  இப்போதும் பல குழந்தைகள் பிறக்கின்றன. விபத்து நடந்து பதினாறு வருடங்கள் கழித்து, தொண்டு நிறுவனம் ஒன்று பெலாரஸ் குழந்தைகள் பற்றிய புகைப்படங்களை எடுத்திருக்கிறது.

புகைப்படத்தில் இருக்கிற குழந்தைகள்  எல்லாம் ஒன்றிலிருந்து நான்கு வயதை உடையக் குழந்தைகள். கதிரியக்கத்தின் தாக்கம் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு உடல் சார்ந்த தீவிர நோய் தாக்குதலில் இருக்கிறார்கள்.

மண்டை ஓட்டுக்குள் இருக்க வேண்டிய குழந்தையின் மூளை  தலைக்கு வெளியே இருக்கிற பெரிய கட்டிக்குள் இருக்கிறது.

உடலுக்குள் இருக்க வேண்டிய சிறுநீரகம் உடலுக்குள் இருக்கிற பெரிய கட்டிக்குள் இருக்கிறது. நீர் சூழ்ந்து பெரிய தலையுடன் சில குழந்தைகள்  உடல் வளர்ச்சியில் மாறுபட்ட உருவத்தை பெற்றிருக்கிறார்கள்.

1980களில் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைகளின் சதவிகிதம் 80. 1986 அணு உலை விபத்திற்கு பிறகு அது 20 சதவீதமாக  குறைந்திருக்கிறது. வருடத்திற்கு 7000 குழந்தைகள் என்கிற விகிதத்தில் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள்

செர்பினியா விபத்திற்குப் பிறகு 57 விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில் 57 சதவிகிதம் அமெரிக்காவில் நடந்துள்ளன.

2011 செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து; 2011, மார்ச் 11இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து; 1986, ஏப்ரல் 26இல் நிகழ்ந்த செர்னொபில் அணு விபத்து;1979 இல் அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரி மைல் தீவு விபத்து, 1961இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு விபத்து ஆகியவைக் குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன. இவ்வாறாக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அதில் குறிப்பிடத்தக்க மிக மோசமான விபத்து புகுஷிமா அணுஉலை வெடிப்பு. சுனாமியோ, நிலநடுக்கமோ ஜப்பானைத் தாக்குவது புதிதான செய்தியல்ல. ஆனால், அன்று 9.0 என்ற ரிக்டர் அளவில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கமோ வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது.

உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவில்  ஏற்பட்ட விபத்து இன்றும் பேசப்பட்டு வருகிறது. பசிபிக் பெருங்கடலின் வடக்கு புகுஷிமா பகுதியில் உள்ள செனடாய் நகரத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் அன்று கடல்நீர் புகுந்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் கண்டன.

இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கத் தொடங்கியது. உலையைக் குளிர்விக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கதிர்வீச்சின் தாக்கத்தை சிறிதளவு குறைக்க முடிந்ததே தவிர, முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. கரும்புகை சூழ்ந்தது. அங்கு வசித்த 45,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆறு ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கிக் கொண்டிருக்கிறது அந்த உலை. இப்போது புகுஷிமா பற்றி வெளியாகியிருக்கும் செய்தி இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.

புகுஷிமா அணு உலை விபத்தினால் வெளியேறிய கதிர்வீச்சு எட்டு ஆண்டுகளைக் கடந்தும் காற்றிலும் கடலிலும் கலந்து உலகின் பல்வேறு மூலைகளுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது கனடா நாட்டின் அலஸ்கா கடற்பகுதியில் புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதை இன்றளவும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் விஞ்ஞானிகள். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வானது சிறிய அளவில் நீண்டகாலமாக நடத்தப்பட்ட ஆய்வு.

புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு பசிபிக் பெருங்கடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விளையும் திராட்சைகளில் புகுஷிமாவின் கதிர்வீச்சு கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி கதிர்வீச்சானது பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. இன்னும் நிறைய இடங்களுக்குக் கதிர்வீச்சு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் அணு உலை தொடர்பான விபத்து நடக்கவே நடக்காது எனச் சொல்லிய இடங்களில்தான் எல்லாமே சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது.

மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் வயது வந்தோரைப் பற்றி ஏற்கனவே மறந்துவிடத் தொடங்கிய உலகம் அதன் கொடூர விளைவுகளுடன் வாழ்கிற குழந்தைகளை பார்த்த பின்பும் அணுஉலைகளை  நடத்திக் கொண்டிருக்கின்றன.

அணு உலைகள் வேண்டும் என்பதைச் சொல்ல எத்தனைக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வேண்டாம் என்பதைச் சொல்ல இப்போதைக்கு  இந்தக் குழந்தைகள் காரணமாய் இருக்கிறார்கள்.

அணு உலை விபத்தின் தாக்கத்தில் முடங்கிப் போய்  கிடப்பது செர்னோபில்  சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்ல அந்தக் குழந்தைகளின் நாளை பற்றிய நம்பிக்கைகளும்தான்.’

இந்த தகவல்களை இணையதளம் மூலம் தேடி படித்த பின் பிரபஞ்சன் தன்னறையின் பால்கனியில் சென்று அமைதியாக நின்று கொண்டான்.

அனிச்சையாக அவன் விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. விழிகள் சிவந்தன.

எங்கோ, என்றோ நடந்த அழிவு… நமக்கான அதிவேக வாழ்வில் இதை செய்தியாகக் கூட கடக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், அந்த வெப்பத்தில் வெந்தவர்களுக்கு, வெந்து இறந்தவர்களுக்கு, கருகி செத்த மரம், செடிகளுக்கு, எந்தத் தீங்கும் செய்திடாமல் இன்றளவும் முடமாகிப் பிறக்கும் சிசுக்களுக்கு…

அவர்களை நினைந்து நாம் சிந்தும் சில துளி கண்ணீர் தான் நமக்குள் எங்கோ ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தின் மிச்சமாக இருக்கக்கூடும்.

பிரபஞ்சனின் பார்வை கண்ணீரை சுரந்து கொண்டே தூரத்தில் தெரிந்த சமுத்திரனிடம் நிலை கொண்டிருந்தது. எந்த நொடி தன் கரையை உடைத்து கொண்டு வருவானோ?!

தற்போது வீட்டில் அவன் மட்டுமே தனிமையில் நின்றிருந்தான்.  ஷெர்லியை சத்யா வீட்டிற்கு தகவல் சொல்ல சொல்லி அனுப்பியிருந்தான்.

உடன் ஹரியும் சென்றிருந்தார். அதேநேரம் தன் ஊர் காவல் நிலையத்திலிருக்கும் அவரின் நண்பரும் ஆய்வாளருமான சதாசிவத்திடம் ஏதேனும் சொல்லி உதவி பெற முடியுமா என்று பார்க்க சென்றிருந்தார்.

ஆனால் இது போன்ற விஷயங்களில் வெறும் யுகங்கள் மட்டும்  உதவாதே. இருப்பினும் முயற்சி செய்யாமலும் இருக்க முடியவில்லை.

மூளையின் ஒவ்வொரு மூலையிலும் பதட்டம்! பயம்! எச்சரிக்கை உணர்வு! என்று ஒவ்வொரு விநாடியும் பிரபஞ்சனுக்கு நரகவேதனையாக இருந்தது.

மரணம் கூட ஒரு சில நிமிடங்களின் வலி! ஆனால் மரணத்தை எதிர்கொண்டிருக்கும் போராட்டம் இருக்கே! அதுதான் வலிக்களுக்கெல்லாம் பெரிய வலி!

பிரபஞ்சன் மனதளவில் ஓர் பயங்கரமான மரண போராட்டத்தில் நின்று கொண்டிருந்தான். எரிகுழம்பின் மீது நிற்பது போல்  தகித்தபடி நொடிகளை எரித்து கொண்டிருந்தான். எதிர்க்காலத்தை பார்ப்பது என்பது சக்தியல்ல. சாபம்!

எதுவுமே செய்ய முடியாது என்ற இயலாமையை விட பிரபஞ்சனுக்கு இந்த பேரழிவை தடுக்க என்ன செய்வது? என்ன செய்வது? என்று அவனுக்குள் இருக்கும் தவிப்பு மிகுந்த அவஸ்தையாக இருந்தது. அவனை கொல்லாமல் உயிரோடு கொன்று கொண்டிருந்தது.

இதே போன்ற ஓர் அணுஉலை விபத்து நம் நாட்டில் நடந்து அதனால் பல்லாயிரம் உயிர்கள் இறப்பதையும் அவர்கள் சந்ததிகள் அனுபவிக்க போகும் கொடுமைகளையும் அவனால் மனதால் யோசித்து கூட பார்க்கமுடியவில்லை.

தான் கண்ட கனவு பலித்து அப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்துவிடுமேயானால் அந்த நொடியே அந்த சூழ்நிலையில் தன் உயிரும் அப்படியே போய்விட வேண்டுமென்று ஓர் ஆபத்தான சங்கலப்பத்தை மனதிற்குள் எடுத்து கொண்டான்.

அவன் பார்வை கடலை வெறித்திருந்தாலும் அவன் மனம் ஓர் ஆழமான தியான நிலையில் இருந்ததை அவன் மட்டுமே அறிய கூடும். எண்ணங்களுக்கு ஓர் அபாரசக்தி இருக்கிறது. அந்த சக்தியின் மூலமாக எந்தவித பேரழிவும் ஆபத்தும் யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்று தன்னுடைய ஒவ்வொரு அணுவிலிருந்தும் வேண்டுதலாக வைத்து கொண்டிருந்தான்.

இப்படியாக ஒவ்வொரு விநாடிக்கும் அவன் செத்து செத்து பிழைத்து கொண்டிருந்தான்.

அப்போது மேஜை மீதிருந்த பிரபஞ்சனின் கைப்பேசி தொடர்ந்து ரீங்காரிமிட்டது. இரண்டு மூன்று அழைப்புக்கு பின்னரே பிரபஞ்சன் அந்த சத்தத்தை கேட்டறிந்து வந்து அதனை ஏற்று காதில் வைத்தான்.

எதிர்புறத்தில் மிகுந்த பதற்றத்தோடு பேசியது சேது!

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையில்லாமல் பேசியை காதில் வைத்து கொண்டே கீழே முகப்பறைக்கு வந்தவன் தொலைகாட்சியை உயிர்பித்தான்.

ப்ரேகிங் நியூஸ் ஒளிப்பரப்பட்டு கொண்டிருந்தது!

‘சுனாமி வர போகும் முன்னெச்சரிக்கை தகவல். வங்காளவிரிகுடா நடுகடலுக்கடியில் உணரப்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு. இது கடலோர பகுதிகளிலும் உணரப்பட்டது.’

அனைத்து சேனல்களில் இந்த ஒரே செய்தி மட்டுமே!

உச்சபட்ச பரப்பரப்பை எட்டியது வங்காளவிரிகுடா கடற்பகுதியின் ஓரமாக அமைந்திருந்த நகரங்கள்!

வர போகும் பேரழிவை முன்னமே கண்டறிந்த மனிதனின் புத்திகூர்மை அணுஉலை என்ற பெயரில் ஓர் பேரழிவை தானே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை உணராது போனது அவனின் முட்டாளத்தனத்தின் உச்சமா?

அடிப்படை வசதிகளான உணவு, உடை, தங்க இடம் போன்றவற்றை கூட நம் நாட்டில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இதுவரை ஒழங்காக பூர்த்தி செய்யாத இந்த அரசாங்கங்கள் பல கோடிகளில் செலவு செய்து வெளிநாடுகளுடன் கை கோர்த்து அணுஉலைகள் நிர்மாணித்து மின்உற்பத்தி செய்கிறது. நிச்சயம் அது அடித்தட்டு மக்களுக்காக அல்ல. சென்னை போன்ற மாநகரங்களில் கோடிகளில் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்காக!

ஆக மனிதனின் அடிப்படை தேவை பணம் மட்டுமே! இந்த பணம் என்ற காகிதத்திற்க்காக எதிர்கால சந்ததியை முடமாக்கவும் மலடாக்கவும் பலிக்கடாவாக மாற்றவும் இந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கின்றனர்.