KVK-12

KVK-12

ஒரு பெரிய பிரமாண்டமான கம்பனியின் முன் அந்தக் கார் நிற்க , உள்ளே சென்றனர். அந்தக் கட்டிட அமைப்பைப் பார்த்து மிகவும் வியந்தாள் ஆராதனா.
மின்விளக்குகளும் அழகிய கண்ணாடியில் அமைந்த ஓவியங்களும் , செயற்கையாக அமைந்த நீரூற்றுகளும் , பளிங்கு போன்ற தரையும் அந்த இடத்தையே ஒரு மாளிகையாகக் காட்டியது.
அந்தக் கம்பனியின் முதலாளியே வந்து அவர்களை வரவேற்றுக் கூட்டிச் சென்றான். ஆராதனவைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தான்.அவளும் பதிலுக்குப் புன்னகை செய்ய அவளைக் கூர்மையாக நோக்கினான்.
கான்ஃபெரன்ஸ் ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க அந்தக் கம்பனியின் மேனேஜெர் அங்கு முதலில் தகவல்களைத் தெரிவிக்க, அடுத்ததாக யுவராஜ் தனது யோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தான். அவன் அருகிலேயே இருந்து அவனுக்கு அடுத்து தேவைப்படும் தகவல்களை ஆராதனா கொடுத்தாள்.
தான் அடுத்து சொல்ல வருவது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்பது யுவாவிற்குமே ஆச்சரியமாக இருந்தது. அவளிடம் அதுபற்றி அவன் முன்பே சொல்லியிருக்க வில்லை. அவளின் இந்தத் திறமை பாராட்டுக்குரியதே என்று மனதில் மெச்சினான்.
அதை அங்கிருந்த அனைவருமே கவனித்தனர். அதிலும் குறிப்பாக அந்தக் கம்பனி முதலாளி கவனிக்கத் தவறவில்லை.
அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்த பிறகு அவர்களைச் சாப்பிட அழைத்துச் சென்றனர்.
வேண்டும் என்றே அந்த முதலாளி ஆராதனாவவை உரசிக்கொண்டே வந்தான். அவள் பக்கத்தில் அமர்ந்தான். அதை யுவராஜ் முதலில் கவனித்தாலும் பின்பு சகஜமாகப் பேசியதால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆராதனா அதைப் பற்றி அறியவில்லை. அவன் பேச்சுவாக்கில் அவளது அறை எண்ணைக் கேட்க, ‘சொல்ல வேண்டாம்’ என்று யுவராஜ் சைகை செய்ததை கவனிக்காமல் சொல்லிவிட்டாள்.
பல்லைக் கடித்துக் கொண்டான் யுவா. அவனே எழுந்து அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினான். ஆராதனவும் பின்னோடு செல்ல , லிஃப்டில் வரும் போதும் அவளை உரசியபடியே இடித்துக்கொண்டு அவள் பின்னால் நின்றான் அவன். அங்கேயே அவனை இழுத்து உதைத்து துவம்சம் செய்யும் அளவு கோபம் வந்தது யுவாவிற்கு . அவன் அருகில் வந்து நின்றான்.

அதை உணர்ந்தவன் “ உங்க பிரசன்டேஷன் நல்லா இருந்தது தேங்க்ஸ் “ சொல்லிக்கொண்டே அவளை விட்டு நகர்ந்தது நின்றான்.
வரும் வழியெல்லாம் அவன் முகம் கடுகடுப்பாகவே இருந்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ எப்பவும் கொஞ்சம் சிடுமூஞ்சி தான் ஆனா இன்னிக்கு கொஞ்சம் ஓவரா இருக்கே !’ அவனைக் கேட்கலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டே இருந்தாள்.
அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறை வாசலை நெருங்கும்போது அவளைப் பார்த்து நின்றான்.
“ உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா ?!” தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டுக்கொண்டு சாதரணமாகக் கேட்க
அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.
“ என்ன சொன்ன ?” வெடுக்கெனக் கேட்டாள்.
“ இந்த வெட்டிக் கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை , என்ன பண்றோம்னு தெரியாம எதையாவது பண்ணு “ அவளை நெருங்கி அவன் சொல்ல
“ என்ன பண்ணேன் ? ஏன் இப்போ பக்கத்துல வர ? “ விழித்துக்கொண்டே கேட்டாள்.
“ நான் பக்கத்துல வந்தா மட்டும் உனக்கு உடம்பெல்லாம் நடுங்கும், அடுத்தவன் உரசினாக் கூடத் தெரியாது, ச்சே! “ காலால் தரையை வேகமாக உதைத்து விட்டு அவன் அறைக்குள் சென்று புகுந்தான்.
அவன் ஏன் தன்னை இப்படி திட்டுகிறான் என்பது அவளுக்கு விளங்கவே இல்லை. ஆத்திரமும் கோபமும் அவளுக்குக் கண்ணீரை வர வைத்து விடும் போலத் தோன்ற
அவளும் தன் அறைக்குள் சென்றாள். முகம் கழுவிவிட்டு வந்து மெத்தையில் சாய்ந்தாள்.
அவனிடம் உள்ள கோபத்தில் இவளைக் கத்திவிட்டோம் என்று வருந்தினான் யுவா. சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு இரவு வெளியில் செல்லாம் என முடிவு செய்தான். அதை அவளிடம் சொல்லி அவள் என்ன செய்கிறாள் என்பதையும் தெரிந்து கொள்ள அவளுக்கு டெலிபோன் செய்தான்.
அவளது லைன் கிடைக்கவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டான். அப்போதும் அது பிசி என சொல்லியது. ‘ இங்கு வந்து யாரிடம் பேசுகிறாள்’ என்று குழம்பினான்.
அங்கு ஆராதனாவிற்கு அந்த முதலாளி தான் கால் செய்திருந்தான். சில பேப்பர்களை கொடுக்க மறந்துவிட்டதாகவும் , யுவா வை தொந்தரவு செய்ய விருப்பமில்லாததால் அவளுக்குக் கால் செய்ததாகவும் சொன்னான். அவளை அந்த ஹோட்டலில் தனக்கே உரிய அறையில் அரைமணி நேரத்தில் வந்து சந்திக்கும்மாறு கூறி வைத்தான்.
இவளும் அதை நம்பி கிளம்பினாள்.

மறுபடி யுவா அவளுக்குக் கால் செய்தான். அவள் எடுக்காமல் போன் அடித்துக்கொண்டே இருக்கவும் அவன் உள்ளுணர்வு ஏதோ சொல்ல அவள் அறைக்கு விரைந்தான். கதவைத் திறக்கவில்லை. மிகவும் யோசிக்காமல் ரிசெப்ஷன்னுக்கு சென்றான். தன்னோடு வந்த அந்தப் பெண் வெளியில் சென்றாளா என்று விசாரிக்க, இல்லை என்றே கூறினார்கள்.
உள்ளுக்குள் மிகவும் பதறினான். ‘ ஆரு! நீ எங்க இருக்க ?!” முதல் முறையாக அவளுக்காக அவன் மனம் ஏங்கியது.

மதியம் அவர்கள் அந்தக் கம்பனியில் சந்தித்த ஒரு நபர் அவன் கண்ணில் பட, அவனை நோக்கி வேகமாக நடந்தான்.
யுவராஜ் தன்னைப் பார்த்து விட்டான் என்பதை அறிந்தவன் இன்னும் வேகமாக ஓட, தன் சந்தேகம் உறுதியானது யுவாவிற்கு . அவனை இரண்டே எட்டில் பிடித்தான்.
“ எனக்கு எதுவும் தெரியாது சார் “ அவன் கைகூப்பி பதற,
கண்மண் தெரியாமல் அவனை அடித்தான்.
“எங்கே ஆராதனா ? ஒழுங்கா சொல்லிடு இல்லனா இங்கயே செத்துடுவ .. “ அவன் கழுத்தை நெரித்துக் கொண்டே கேட்டான்.
அவன் ஓர் அறையை கை காட்ட , அவனையும் இழுத்துக்கொண்டே சென்றான். கதவைத் தட்டிக்கொண்டே இருக்க யாரும் திறக்க வில்லை.
ரிசெப்ஷனுக்கு சென்று ஆட்களைக் கூப்பிடலாம் என்று நினைப்பதற்குள் ஆராதனா கதவைத் திறந்தாள். அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான்.
“ஆரு ! உனக்கு ஒன்னும் இல்லையே ! என்கிட்டே சொல்லாம எதுக்கு வந்த ? எங்க அவன் ? அவனை இன்னுக்கு கொன்னுட்டு தான் மறுவேலை “ பதட்டத்தில் அங்கு நடந்திருப்பதைக் கவனிக்க மறந்தான்.
ஆராதனா நடப்பது கனவா நினைவா என்று உறைந்தே விட்டாள். ‘ அவன் தன்னைக் கட்டிப்பிடித்தானா?! அதற்கும் மேலாக அவளை எப்படி அழைத்தான். “ஆரு”!!.
ஆனந்தத்தில் அவளுக்குக் கண்ணீர் பெருகியது.
“ எங்க அந்தச் சண்டாளன்? “ என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றுப் பார்க்க, அங்கே வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் விழுந்து கிடந்தான் அவன்.
ஒன்றும் புரியாமல் அவளைப் பார்க்க
“ எனக்கு கராட்டே தெரியும் “ என்றாள் அவனைப் பார்க்காமலே. அப்போது தான் தன் மூச்சை இழுத்து விட்டு நிம்மதி அடைந்தான்.
மெதுவாகத் தங்களின் அறைக்கு வந்து சேர்ந்தனர். அவளைத் தன் அறைக்கே அழைத்துச் சென்றான். அவளுக்கு அருந்த தண்ணீர் கொடுத்து அவளைச் சற்று தேற்றினான்.
“ அவன் பார்வையே சரியில்லை . அவன் கூப்டா போயிடுவியா ? என்கிட்ட சொல்லனும்ன்னு தோனல இல்ல ?” அவளை உரிமையுடன் கேட்க
“ நான் அவனைக் கவனிச்சா தான அவன் பார்வை எனக்கு தெரியும். என் கண்ணுக்கு உன்னைத தவிர வேற எதுவும் தெரியல “ எழுந்து சென்று ஜன்னலருகே நின்று சொன்னாள்.

“ உனக்கு எதாவது ஆகியிருந்தா ? என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியல ஆரு! “ அவன் குரல் உடைந்தது.
“ என்ன திடிர்ன்னு அக்கறை? “ அவனைப் பார்க்காமலே சொல்ல
அவளை நெருங்கி வந்தான். “ உன்மேல என்னைத் தவிர வேற யார் அக்கறை காட்ட முடியும் “ அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
“ இதைச் சொல்ல உனக்கு இவ்வளவு நாள் தேவைப் பட்டுதா யுவா “ அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைக்க
“ நான் சொல்லலனா உனக்குத் தெரியாதா ? “ அவளின் முகத்தை நிமிர்த்தித் தன் இதழ்களால் அவளது கண்ணீரைத் துடைத்தான்.
“ இனிமே நீ எதுக்கும் அழக் கூடாது. நிறைய விஷயங்கள் உன்கிட்ட சொல்லணும் ஆனா இப்போ முடியாது. நேரம் வர்றப்ப சொல்றேன்.“ அவளை அணைத்த கரங்களை விடாமலே அவன் சொல்ல
அவளும் அவனை விட்டு விலகவில்லை. நீண்ட நேரம் ஆனதால் இரவு உணவை அறைக்கே வரவைத்து உண்டனர்.
அவள் அவளது அறைக்குக் கிளம்ப
“ இங்கயே படு “ அவள் கையைப் பிடித்து நிறுத்த
அவன் சொன்ன வார்த்தைகளால் அதிர்ந்தாள்.
“வேணாம் யுவா” அவளுக்கே கேட்க்காதவாரு சொல்ல
“ எப்பவும் லவுட் ஸ்பீகர் மாதிரி கத்துவ , இப்போ என்ன சத்தமே காணும் “ அவள் வாயின் அருகே தன் காதை வைத்துக் கேட்டான்.
“யுவா…… ! “ சிரித்துவிட்டு அவனைத் தள்ளினாள்.
“உன்னைத் தனியா விடக் கொஞ்சம் பயமா இருக்கு ஆரு! நீ பெரிய ஸ்டன்ட் மாஸ்டர் தான் , இருந்தாலும் எனக்காக இங்கயே படு. ஐ வோன்ட் ஈவன் டச் யூ “
சம்மதித்தாள். கட்டில் மிகவும் பெரிதாக இருந்ததால் நடுவில் சில பல தலையணைகளை வைத்துவிட்டு இருவரும் உறங்கினர்.

மற்றும் இருவர் உறக்கம் வராமல் தவித்தனர்.
ஒன்று சித்து. (யுவாவை நினைத்துத் தான். )
மற்றொன்று மலர்மொழி,
சக்தியின் தந்தை ஸ்ரீநிவாசன் இன்று மலர் மற்றும் அன்பரசுவைத் சந்தித்து பெண் பார்க்க வருமாறும் அன்றே நிச்சயம் செய்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து விட்டுச் சக்தியின் போட்டோவையும் கொடுத்து விட்டே கிளம்பியிருந்தார். உறக்கமின்றி மகிழ்ச்சியில் இருந்தார் மலர்.

கதிர் காலையிலேயே மிகவும் கலவரத்துடன் காணப்பட்டான். சித்து அவர்களின் ஆபீசுக்கு நிறைய முறை போன் செய்துவிட்டான் என்று கேள்விப்பட்டதும் செய்வதறியாது குழம்பினான்.
யுவாவிற்கு போன் செய்துப் பார்த்தான். நிறைய முறை அடித்து ஓய்ந்தது. ஆபிசில் தன் அறையின் உள்ளே நடந்துகொண்டே யோசித்தான். மறுமுறை சித்து போன் செய்தால் என்ன சொல்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான்.
சித்து தனது மேனேஜரை வரவழைத்தான். மனதில் பயமும் உடலில் நடுக்கமும் அவரைத் தொற்றிக்கொண்டது. வெளிறிய முகத்துடன் அவனை வந்து பார்த்தார். கையில் சிறு காகிதம் வைத்திருந்தார். தன அறையில் தனது இருக்கையில் அமர்ந்தபடியே அவரை நோக்கினான். அவன் பார்வையிலே ஆயிரம் கேள்விகளை அவரிடம் கேட்டுவிட்டான்.
“ உங்க ரெசிக்னேஷன் நான் அப்பரூவ் பண்ணிடறேன் . உங்களுக்கு எப்படியும் ‘ மலர் அட்’ கம்பெனில வேலை கண்டிப்பா இருக்கும். “ கடும் கோபத்துடன் தெளிவாகச் சொன்னான்.

“ தம்பி என்னை மன்னிச்சிடுங்க “ அழுதே விட்டார்.
“ உங்களுக்கு இந்த வேலை செய்ய எப்படி மனசு வந்துச்சு. அப்பா உங்கள எவ்வளவு நம்பினார் தெரியுமா? காசு பணம் எப்போ வேணாலும் சம்பாதிச்சுகலாம் . ஆனா ஒருத்தர் நம்ம மேல வெச்சிருக்கற நம்பிக்கைய நாசமாக்கிட்டு அந்தக் காசை வாங்கினா அது மனுஷத்தன்மையா ?! அந்தக் காச வெச்சு மறுபடியும் அந்த நம்பிக்கைய உங்களால திரும்பக் கொண்டுவர முடியுமா ? “ காதுமடல் சிவக்க அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவருக்கு மனம் வலித்தது. அவருக்குப் பேச வார்த்தைகளும் வரவில்லை. “ நான் பண்ணது பெரிய தப்பு தான் தம்பி, என் பையன வெச்சு என்னை விலைக்கு வாங்கிட்டாங்க,
என் பையனோட ஆசைய நிறைவேத்த நான் இப்படி நடந்துக்கிட்டேன் . என்னை மன்னிச்சிடுங்க “ தட்டுத் தடுமாறி சொன்னார்.
“ நீங்க அப்பாவை ஒரு வார்த்தை கேட்திருந்தா கண்டிப்பா முடியாதுன்னு சொல்லியிருக்க மாட்டாரு “ அவரைப் பார்க்க விருப்பம் இல்லாமல் திரும்பி நின்றே சொன்னான்.
“ …… “ அவரிடம் சொல்லப் பதில் இல்லை.
“ நீங்க போகலாம் . ஆனா அந்த யுவராஜ் ஏன் இப்படி செய்யறான்னு மட்டும் சொல்லிட்டுப் போங்க “ அவரையே உருத்து விழித்தான்.

“எனக்கும் தெரியலப்பா . ஆனா அவன் உங்க குடும்பத்து மேலேயே கோபமா இருக்கான்னு மட்டும் தெரியும். என்ன காரணம்ன்னு எனக்குத் தெரியாது. “ உறுதியாக அவர் சொல்ல

“ உண்மைய தான சொல்றீங்க” 
“ சத்தியமா தம்பி “ 
“ நீங்க போகலாம் “  முடித்தான் சித்து.                                                                       
அதற்கு மேல் அவரும் அங்க நிற்கவில்லை. தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வைத்துவிட்டு கிளம்பினார்.
‘ தன்னுடைய குடும்பத்தின் மீது கோபமா ?! அம்மா மிகமும் சாந்தமானவர். அப்பா எதையும் யோசித்து செய்பவர். அப்படியிருக்க இவனுக்கு யார் மீது கோபம் ?! ஒன்றும் புரியவில்லையே. இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது? ‘ தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.
அவனது செல்போன் சிணுங்கியது. சக்தி தான் அழைத்தாள்.
அவளுக்குத் தன் வீட்டில் நடக்கும் விஷயம் எதுவும் இன்னும் தெரியவில்லை. அதனால் சுஜாவுடன் ப்ராஜெக்ட் முடிக்க ஆர்வமாக இருந்தாள். சித்துவின் தற்போதைய பிரச்சனையைப் பற்றி அவளிக்கு தெரியாது. அவன் சொல்லவும் இல்லை.
சித்து அப்போது இருந்த மனநிலையில் அவளிடம் இப்போது பேசுவது சரியில்லை என்று அவளிடம் பேசாமல் அந்த இணைப்பைத துண்டித்தான். அவள் மீண்டும் அழைத்தாள். அவன் தலையில் கை வைத்து யுவாவைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான் . மீண்டும் அழைப்பதைக் கண்டு எரிச்சலுற்றான்.
தன் பேசியை இயக்கி “ ஒரு தடவ கட் பண்ணா புரிஞ்சிக்கோ , இங்க ரொம்ப பராப்ளமா இருக்கு நான் அப்பறம் பேசறேன். “ அவளைப் பேசவே விடாமல் வைத்துவிட்டான்.
மறுபுறம் அவளுக்கும் சற்று வருத்தமாக இருந்தாலும், அவன் இப்படி பேசுவது இதுவே முதல் முறை. அவனுக்கு ஆபீஸ் டென்ஷன் என்று லேசாக விட்டாள். பிறகு அவனே போன் செய்வான் என்று நினைத்துகொண்டாள்.

 

மலர்மொழி மிகவும் ஆனாந்தமாக இருந்தார். தன்னுடைய மகனின் திருமணம் தான் அவருக்கு நீட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியை தரப் போகும் ஒன்று. அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். யுவாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் பிறகு வேலையைத் துவங்க வேண்டும் என்று அன்பரசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“ கண்டிப்பா இந்தப் பொண்ண யுவாவுக்கு பிடிக்கும் மலர். “ சக்தியின் போட்டோவைப் பார்த்துக்கொண்டே சொல்ல
“ எப்படி பிடிக்காம போகும் ? பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா. நல்ல குடும்பம். நல்ல குணமா தான் பேசறாங்க. யுவா கண்டிப்பா சரின்னு சொல்லிடுவான். எனக்கு நம்பிக்கை இருக்கு “
“யுவாக்கு புடிச்சிருக்கோ இல்லையோ உனக்கு ரொம்ப புடிச்சிருக்கு “ சிரித்துக் கொண்டே சொன்னார்.
“ஆமா அண்ணா, அவ எனக்கு மருமகளா வரணும்” மனநிறைவுடன் கூறினார்.
“எல்லாம் நல்லா நடக்கும் மலர் கவலைப் படாத.”
திடிரென முகத்தில் இருந்த மகிழ்ச்சி வடிந்து அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.
“ என்ன ஆச்சு மலர். ஏன் உன் முகமே மாறிப்போச்சு. சொல்லுமா!! “ பதட்டமானார் அன்பரசு.
கண்கள் கலங்கியது. “ அவரும் கூட இருந்தா நல்லா இருக்கும்ல, எனக்கு அவர் கூட வாழ குடுத்து வைக்கல” மனமுடைந்து போனார்.

“மலர் நீ வருத்தப்பட்டா , நான் இப்போவே போய் அவன்கிட்ட பேசறேம்மா, உனக்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும் நீ தான் பிடிவாதமா இருந்துட்ட. நீ மட்டும் அன்னிக்கே போய் அவன் முன்னாடி நின்னிருந்தா இப்போ நீ எவ்ளோ சந்தோஷமா இருந்திருக்கலாம் “ மனதில் உள்ளதை அவர் கேட்டுவிட,
“இல்லை அண்ணா , அவரும் பார்வதியும் சந்தோஷமா இருக்கட்டும் , நான் எப்பவும் அவங்க வாழ்க்கைல ஒரு சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தமாட்டேன். நான் அழல, ஒரு சின்ன ஏக்கம் வந்துச்சு இப்போ இல்லை. நீங்க போய் வேலைய பாருங்க யுவா வந்ததும் நாம மத்த வேலைகளைப் பாக்கணும்” கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து சென்றார்.

தங்கையின் மனக் குமுறல்களை புரியாமல் இல்லை அன்பரசுவிற்கு. எந்த வகையிலும் தன்னால் அவளுக்கு அந்தக் குடும்ப வாழ்வின் ஏக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அவர் தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் இருந்தார்.
இப்பொழுது யுவா வந்தபின்பு அவனிடம் மனோகர் பற்றி அறிய ஆவலாய் இருந்தார். யுவாவால் தான் இதற்கு ஒரு தீர்வு வருமென நினைத்தார்.

error: Content is protected !!