KYA 6

                     காலம் யாவும் அன்பே 6

 

நட்ட நடு நிசி. ஜனங்கள் வாழும் இடம் என்பதைக் குறிக்கும் படி ஒரு சுவடும் இல்ல. ஒரே ஒரு நீளமான முடிவில்லாத பாதை . அந்த சாலையில் இவர்களின் ஜீப் மட்டும் காற்றைக் கிழுத்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது.

உள்ளிருத்த அனைவரும் , அவன் வாசலில்லாத அந்த மூன்றாம் பிரமிடின் முன் நிற்பதைப் போன்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தனர்.  அடுத்து அவன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக , அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு வந்தனர்.

அந்த நிசப்தம் வாகீசனை திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு முறை அனைவரையும் சுற்றிப் பார்த்தவன்,

“ ஹே ! ச்சில்… ஏன் இப்படி ஒரு ரீயாக்க்ஷன்” கூலாக மீண்டும் பாதையில் கவனம் செலுத்த,

“ ‘சில்’லா.. எங்களுக்கு அங்க நிக்கற மாதிரி மூச்சு முட்டுது , அப்புறம் என்ன அச்சுன்னு சொல்லுங்க ஹெட்” வந்தானா அவனைத் தூண்ட,

அவனுக்கு ஏனோ இயலின் ஆர்வத்தைப் பார்க்க தோன்றியது. முன்னால் இருந்த கண்ணாடி வழியாக இயலைக் காண, அவளும் அந்நேரம் அதே கண்ணாடி  வழியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, கண்கள் சந்தித்த நேரம் இருவருக்குள்ளும் ஒரு துள்ளல் எழவே செய்தது.

இயல் , ‘ ச்சே! என்ன இப்படி பே ன்னு பாக்கறோம்னு நெனச்சுடப் போறாரு..ஆனா அவர் பார்வையும் கொஞ்சம் ..’ வேறு யோசித்த மண்டையில் மானசீகமாகக் கொட்டிக் கொண்டாள்.

அவளின் எண்ணம் அவனுக்கும் புரியவே செய்தது. அப்போதே ‘நான் நினைப்பதே வேற’ என்று சொல்லத் தோன்றிய மனது மற்ற இருவரும் அருகில்  இருத்ததால் தற்காலிகமாக அதை மாற்றி மீண்டும் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

அன்று:

மூன்றாவது பிரமிடுக்குள் போவதற்கு வாசல் இல்லை என்று ஸ்டெபன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான். அப்படி அவன் எந்தப் புத்தகத்திலும் படிக்கவில்ல என்பதால் அவனுக்கு ஆச்சரியம். ஏனெனில் யாரும் இரண்டாவது பிரமிடையே முழுதாகப் பார்த்ததில்லையே!

 “ அப்பறம் அதுக்கு என்ன தான் வழி ப்ரோஃபசர்?!” இரண்டாவது பிரமிடின் முதற் படியில் வியர்வை வழிய நின்று கொண்டிருந்தவன் கேட்க,

“அதுக்கு வழி இந்த பிரமிட் மூலமா தான் நமக்குக் கிடைக்கும் வாகீ, இங்க இருக்கற சிம்பல்ஸ், அதாவது குறியீடுகள் ஒரு கடினமான பசில் போன்றது. அதை நாம சரியா புரிஞ்சுகிட்டு அதுக்கு அப்புறம் இங்க வந்தா தான் நாம கண்டு பிடிக்க முடியும்.” அவர் சொல்வதை கவனமாக கருத்தில் கொண்டவன், இரண்டாம் பிரமிடின் உள்ளே அடியெடுத்து வைக்க ஆயத்தமானான்.

வாகீ கையில் மெழுவர்த்தியை எடுக்க, அவனது ஆசிரியரும் ஒன்றைக் கையில் எடுத்தார்.

உடனே அவரைத் தடுத்தான் வாகீ .

“ உள்ள ஆக்சிஜென் கம்மி ப்ரோஃபசர். இரண்டு மெழுவர்த்தி கொளுத்தினா அங்கிருக்கற காற்றை இரண்டுமே பகிர்ந்துக்கும். அப்போ ரெண்டும் சீக்கிரமே அணைஞ்சு போய்டும். அதனால இது ஒன்னே போதும். இந்த மெழுகுவர்த்தி கொஞ்சம் பிரகாசமா எரியும். இந்தப் பத்துக்குப் பத்து அறையில இதோட வெளிச்சம் தாராளமா வரும். இதுலையே ரெண்டு பேரும்  குறிப்புகளை எடுக்கலாம்.” அவன் சொன்ன விளக்கம் கேட்டு அவனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இருந்தாலும் நேரம் கடத்தாமல் அவன் சொன்னது போல செய்தனர்.

உள்ளே முதல் அடியை எடுத்து வைத்தவுடன் , முதல் பிரமிடில் இருந்த உணர்வை விட அதிகமாக அவனுக்கு வியர்த்தது. அவனுக்கு என்னவென்று புரியவில்லை. அவனது ஆசிரியர் சாதாரணமாகத் தான் இருந்தார்.

அவனுக்கோ , லிட்டர் லிட்டராக வழிந்தது. முதலில் இருந்த வெளிச்சம் கூட இல்லை. எதையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று அந்த மெழுகுவர்த்தியை ஏற்றினான்.

அதைக் கீழே வைத்துவிட்டு இடது பக்கச் சுவரில் அவனால் முடிந்த மட்டும் அங்கிருந்த கிறுக்கல்களை தன்னுடைய பாக்கெட் டைரியில் எழுத ஆரம்பித்தான். பேனாவைப் பிடித்தவுடன் , அவன் கையைப் பிடித்து யாரோ வேகமாக எழுதியது போல இருந்தது.

அவனது ஆசிரியர் ஒரு புறம் எழுதிக் கொண்டிருக்க, காதில் கேட்கக் கூடாத சத்தமெல்லாம் கேட்டது. எந்த ஒரு சாதாரண மனிதனும் உள்ளே பயம் கிளம்பும். வாகீக்கு சாதரணமாகவே தைரியம் அதிகம். அதிலும் இதை எல்லாம் முன்பே எதிர்ப்பார்த்துத் தான் வந்திருந்தான்.

ஸ்டெபன் முன்பே சொன்னது , ‘எந்த ஒரு சத்தமும் கேட்க்காதது போல இருக்க வேண்டும்’ என்பது தான். அவனது கருத்து முழுதும் அங்கிருக்கும் கண்ணா பின்னா குறிப்புகளை எழுதுவதிலேயே இருந்தது.

சரியாக ஒரு நிமிடம் இருபத்தி ஐந்து நொடி எறிந்துவிட்டு , சிறிது சிறிதாக அணைந்தது. இருவரும் மூச்சை இழுத்துப் பிடித்துத் தான் இந்த ஒரு நிமிடம் இருந்ததே.

விளக்கு அணைந்தவுடன் எழுதுவதை நிறுத்தினார்கள். அவனது ஆசிரியர், அவனையும் இழுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தார். அதற்குள் அவனுக்கு பயங்கர சப்தம் கேட்டு காதைத் துளைத்தது. முதல் பிரமிடின் படியில் வந்த பிறகு தான் அவனால் சற்று காற்றை உணர் முடிந்தது.

இத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை சீராக சுவாசிக்க முடிந்தது. ஒரு இருட்டுக் குகையிலிருந்து தப்பித்து வந்தது போல ஆனாது.

“வாகீ, சீக்கிரம் போலாம் வா!” அவர் சொல்வதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் என்று அவனும் அந்த பிரமிடின் வெளியே வந்தான்.

“ நாம இனி அடுத்த வாரத்துல இதே போல ஒரு நாள் வரலாம். தினம் தினம் வந்தா சந்தேகம் வரும், அதுக்கும் மேல நம்ம ஹெல்த் பாதிக்கப் படும். அந்த இடத்துல எலெக்ட்ரானிக் பொருட்களை செயலிழக்க வைக்கற அளவுக்கு வைப்ரேஷன் அதிகமா இருக்கும். அதுனால அடிக்கடி , அதும் உடனே உடனே அங்க போறது நம்மளுக்குத் தான் ஆபத்து. கிளம்பு!”

அவர் சொன்னது மிகவும் சரியே! இந்த ஆராய்ச்சியைச் செய்ய அவர்களுக்கு மனமும் அறிவும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக சில காலம் பொறுத்தாலும் பரவாயில்லை என்று அப்போதைக்கு அங்கிருந்து சென்றனர்.

இரவு தங்கள் இடத்தில் அமர்ந்து ஆசிரியர் முன்பே சேகரித்த குறிப்புகளையும் இன்று இருவரும் சேர்ந்து எடுத்த குறிப்புகளையும் சேர்த்து அவனது பெரிய போர்டில் எழுதிப் பார்த்தான்.

அவை வெறும் குறியீடுகளே! எத்தனை பெர்முடேஷன் காம்பினேஷன் செய்து பார்த்தாலும் விளங்கவில்லை.

தற்போது அவனிடம் இருந்தது மொத்தம் ஒரு நூற்றிப் இருபது குறியீடுகள், இன்னும் அங்கே மற்ற அனைத்தையும் சேர்த்தால் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது விளங்கியது.

பொறுமை காத்தான் !

“என்ன ஹெட் பொறுமையா இருந்தீங்களா! என்னால இங்கயே பொறுமையா இருக்க முடியல” இயல் ஆர்வத்தில் கத்த,

அவளை மீண்டும் அதே பார்வை பார்த்தான். அதில் தன்னிலை உணர்ந்து அமைதியாக,

“வேறு வழியில்ல, ஒரு விஷயத்தை நாம தெளிவா அதோட அடி ஆழம் வரை அலசிப் பார்க்க, பொறுமை ரொம்ப அவசியம்” பொதுவாகச் சொன்னான்.

அது தனக்குத் தானே இயல் விஷயத்தில் கூறிக் கொண்ட ஒன்றாகவே நினைத்தான்.

“ அப்புறம் சொல்லுங்க ஹெட்” ஆகாஷ் உந்த,

“ அதே மாதிரி ஒரு ஐஞ்சு தடவ நானும் ப்ரோபசரும் அங்க போனோம். ஆனா அதுக்கே எங்களுக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சு. நான் கடைசி வருஷம் படிக்கறப்ப தான் அதோட மொத்த குறிப்புகளும் எங்களுக்குக் கெடச்சுது.

ஆனா ஒவ்வொரு முறை நான் போக ஆரம்பிச்ச பிறகு அங்க சில மாற்றங்கள் நடந்துச்சு. அந்த மெழுவர்த்தி எரியறது ஐஞ்சு ஐஞ்சு நொடி கூடிகிட்டே வந்துச்சு. அந்த சத்தங்கள் ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் குறைஞ்சுது.

என் ப்ரோஃபசர் ரொம்ப ஆச்சரியப் பட்டாரு. அவரு முன்னாடி போனப்ப எல்லாம் இது மாதிரி நடந்ததே இல்லன்னு சொன்னாரு. ஆனா அந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் எப்போதும் வேலை செஞ்சதில்லை. அந்த இருட்டும் மாறவில்லை.”

“நீட் எ பிரேக்” என சிறிது நேரம் வண்டியை நிறுத்தி இறங்கி நடக்க. இரண்டு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவன் சோம்பல் முறித்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த இயலை , அவனது வலிய கரங்கள்  ஏதோ செய்தது. அந்தக் கரங்களுக்குள் சிறை இருக்கத் துடித்தது. ஏனோ இம்முறை அவனை விட்டு கண்களை எடுப்பதாக இல்லை அவள்.

‘அவன் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்த முயர்ச்சிகளைச் செய்திருப்பான். இவன் ஹீரோ தான். நான் சைடு கேரேக்டரா இருந்தாலும் பரவால்ல, ஹீரோ வ யார் வேணா சைட் அடிக்கலாம்’ அவளது மனம் ஏதோ காரணங்களைக் கூறிக் கொண்டு அவனையே சுற்றி வந்தது.

வந்தனாவும் ஆகாஷும் அந்த நிலவொளியில் தெரிந்த அந்த சாலையில் அழகை ரசித்தபடி இறங்கி நடக்க, அங்கே இயல் மட்டுமே வண்டியிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்தாள்.

கைகளைக் கட்டிக் கொண்டு அவனை அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தாள். அவனது செயல்களால் மொத்தமாக அவன் புறம் சாய்ந்துவிட்டாள். தன்னைப் போன்றே பழைய பாடல்கள், இந்த ஆராய்ச்சி, விடா முயற்சி , கூடவே அவனது கண்கள் என பல விஷயம் அவளை பாதித்தது.

சிறிது நடந்தவன் திரும்பிப் பார்க்க, அங்கே இயல் மட்டுமே நின்று கொண்டிருந்தாள்.

‘‘ டென்ட் அடிச்சு அங்கேயே இருப்பாளாம்’ என்ன ஒரு தைரியம் , எங்க இருந்து டி வந்த! உன் கண்ணுல கொஞ்சம் கூட பயம் இல்ல, ஆர்வம் மட்டுமே இருக்கு, இப்படி ஒரு பெண்ணை பார்த்ததே இல்ல’ அவன் தனக்குள் சிந்திக்க, அவள் அருகே வந்தான்.

“ என்ன பாக்கற?!”

அவனது கேள்வியில் சற்று ‘வாகீ மயக்கம்’ தெளிய, “இல்ல அப்பறம் என்ன நடந்திருக்கும் என்ன பண்ணிருப்பீங்கன்னு யோசிச்சுட்டு இருந்தேன்” கண்களை வேறு புறம் திருப்பிக் கொண்டு இயல் பேச,

‘ பொய் சொல்லாத டி, என்னை சைட் அடிச்சுட்டு இப்போ ஆராய்ச்சிங்கற. எத்தனை பொண்ணுங்க என்னை சைட் அடிச்சிருப்பாங்க , ஆனா சின்ன பொண்ணுன்னு தெரிஞ்சாலும் நீ பாக்கறது பிடிச்சித் தொலையுது’

“ ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டு

“டீ வேணுமா ஹெட்” அவன் களைப்பைப் பார்த்துக் கேட்க,

“ கொண்டு வந்திருக்கியா ?”

“ம்ம்.. ட்ரிவிங் ல தேவைப் படுமோன்னு ஆகாஷ் கிட்ட ப்ளாஸ்க்ல எடுத்துக்க சொன்னேன்.” வண்டியிலிருந்து பிளாஸ்கை எடுத்தபடியே சொல்ல,

“பரவால்லையே ஹெல்பர் ன்னா இப்படித் தான் இருக்கணும்” அவன் எதார்த்தமாகச் சொல்ல,

அந்த ஹெல்பர் என்ற வார்த்தை இத்தனை நேரம் கண்ட அவளது கற்பனைக் கனவை எங்கோ அடித்தது!

ஒரு பேப்பர் கப்பில் டீ யை ஊற்றிக் கொடுக்க, அவள் முகம் வாடியதை அவனும் கவனித்தான்.

பிறகு தான் தன் சொல் அவளை தாக்கியிருப்பது புரிந்தது. அதை சரி செய்ய நினைத்து ஏதோ சொல்ல வர, அங்கே ஆகாஷ் அதற்குள் வந்தான்.

“ எனக்கும் டீ” எனவும் வந்தனா ஆகாஷ் இருவரும் குடித்தனர்.

“ நீயும் எடுத்துக்கோ இயல்” வந்தனா சொல்ல, டீயின் வாசம் அவளை இழுத்தாலும் ஏனோ குடிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

‘ஹெல்பர் எதுக்குக் குடிக்கணும்’ என்று தோன்றிவிட,

“எனக்கு வேணாம்.” அதோடு நிறுத்திக்கொண்டாள்.

வாகீசன் கவனிக்கத் தவறவில்லை. ‘சாரி டா’ மனதிற்குள் நினைத்து

மீண்டும் வண்டி ஓட்ட ஆரம்பித்தான்.

அன்று:

அந்த குறிப்புகளை  ‘லேப்’ல வெச்சு பார்க்கும்போது ஒரு விஷயம் தெரிந்தது. அதில் இருந்த மொத்த குறியீடுகள் இருநூற்று நாற்பத்தி ஏழு.

தமிழ் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை என்பது மட்டுமே முதலில் அவனது சிந்தையில் தோன்றியது. ஆனால் தமிழுக்கும் இந்த பென்சில்வேனியா பிரமிடுக்கும் சம்மந்தம் எப்படி வரும் என்று குழம்பினான்.

அவனது ஆசிரியரிடம் சொல்ல, அவர் இந்தக் கோணத்தில் யோசிக்கவே இல்லை.

“இதை இந்த வகையில நீ ரிலேட் பண்ணு வாகீ, நான் என்னுடைய வழில பண்றேன். நிச்சயம் வழி கிடைக்கும்” ஸ்டெபன் சொல்ல,

இவன் தமிழ் எழுத்துக்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினான்.

மீண்டும் ஒரு அரை வருடம் அதில் மூழ்க , அந்தக் குறியீடுகளை, உயிர், மெய், உயிர்மெய் என்று பிரிக்க அவனால் எளிதாக முடிந்தது. தனித்தனியாக வகுத்து வைத்தான். கடைசியாக ஒரு மண்டையோட்டுக் குறியீடு. அது மட்டுமே எஞ்சி இருக்க, அதன் கண் மற்றும் வாய் பகுதிய மட்டும் பார்க்க அது ஆய்த எழுத்து ‘ஃ’ போலத் தெளிவாகத் தெரிந்தது.

“ஹூரே!!” கத்தினான். நிச்சயம் இது தமிழ் சம்மந்தப்பட்டது தான்!!

அதன் பிறகு அந்தக் குறியீடுகளை வாக்கியமாகத் தொடுக்க அவனுக்கு இரண்டே மாதங்கள் தான் தேவைப் பட்டது.

அந்தக் குறியீடுகளைப் பார்த்ததும் மூன்றாம் பிரமிடின் வழி தெரிந்தது.

அவனது கண்கள் அதைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்க நினைத்தான். அந்த மூன்றாம் பிரமிடில் என்ன அதிசயம் நிகழும் என்பதைக் காணப் போகும் முதல் ஆள் தான் என்பதில் அவனுக்கு மிகவும் பெருமையே!

அவன் கண்டுபிடித்த அனைத்தயும் எடுத்துக் கொண்டு ஸ்டெபனிடம் சென்றான்.

அவரோ அவர் கண்டுபிடுத்த முறையில் ஒரு வழியைக் கண்டார்.

எந்த வழி அந்த மூன்றாம் கதவைத் திறக்கும் என்று சோதிக்க இருவரும் அங்கே சென்றனர். பல ஆயத்தங்களோடு!

முதலில் ஸ்டெபன் தனது முயற்சியை செய்தார். அவரது கணக்குப் படி அந்தக் குறியீடுகள் கொடுத்த விளக்கம், கூட்டல் கழித்தல் முறை.

அந்த இருநூற்று நாற்பத்தி ஏழு குறியீடுகளில் சிலவற்றைக் கழித்துப் பின் கூட்டியதும் எஞ்சிய சில குறிகளை மட்டும் அதன் இடத்தில் ஒரு நிமிடத்திற்குள் கட்டை விரலால் அழுத்த வேண்டும் . அவ்வாறு செய்தால் கதவு திறக்கும் என்பது அவரது கணிப்பு.

அதன் படி வாகீ அவருக்காக மெழுகுவர்த்தியைப் பிடித்துக் கொள்ள , அவர் திடமான நம்பிக்கையுடன் அந்த மங்கிய ஒளியில் அந்தக் குறிகளை மட்டும் வேகமாக அழுத்தி விட்டு நின்றார்.

 அவர் செய்ததில் , அங்கே இத்தனை நாட்கள் குறைந்த சத்தங்கள் பெரும் ஓலமெடுத்து அலறத் தொடங்கியது. உடனே மெழுவர்த்தி அனைய, இருவரும் உடனே ஓடி வெளியே வந்தனர்.

“ இது சரி வராது வாகீ . என் கணிப்பு தவறு. உன்னோட முயற்சியை செய்வோம்” எனவும்

“அதுக்கு நாம மிட்நைட் வரைக்கும் காத்திருக்கணும் ப்ரொபசர்”..

 

திருவாசகம் : 

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25

பொருள்:
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! – உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்