அத்தியாயம் நான்கு
ஹாசனும் ஸ்ரீநாத்தும் தான் பதட்டமாக பார்த்தனரே தவிர, இந்தர் அலட்டிகொள்ளாமல் தான் அமர்ந்திருந்தான்.
இது போன்ற கேள்விகளை அவன் சந்திக்காமலில்லை. ஆனால் இவ்வளவு வெளிப்படையாக முகத்தில் அடித்தார் போல யாரும் இதுவரை கேட்டதில்லை.
ஒருவகையில் அவளது அந்த அலட்சியமும் திமிரும் தான் அவனை ஈர்த்துக் கொண்டிருக்கிறதோ?
இருக்கலாம்… ஆனால் அவளது இந்த அலட்சியத்திற்கு பதில் கொடுக்காவிட்டால் எப்படி? தான் எப்படி இந்த்ரஜித் ஆகிவிட முடியும்?
இந்த்ரஜித் யாராலும் தொட முடியாதவன்… அணுக முடியாதவன்… அவன் ஒரு வகையில் கல்… சந்திர மண்டலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்பெஷல் கல்! அதற்கு ஈவு இரக்கம் கிடையாது. பெற்றவர் உற்றவர் என்றும் பார்க்காது. தன்னை எதிர்ப்பவர்களை நசுக்கிப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
“நம்ம கைல அஞ்சு விரலும் ஒன்னு போல இருக்காது இந்தர்… அது மாதிரிதான் நம்மை சுற்றி இருக்க மனுஷங்களும்… நாலு விதமாத்தான் இருப்பாங்க… அதுவும் நம்ம துறைல நானூறு விதமா இருப்பாங்க… அவங்க இப்படிதான்னு நமக்கு தெரியும்… நாம இப்படித்தான்னு அவங்களுக்கும் தெரியும்… ஆனா முகத்துக்கு நேரா பார்க்கும் போது உலக மகா நடிகனாட்டம் நடிச்சுட்டு போகணும்… இதுக்கு பேர் தான் டீசன்சி…”
ஒரு முறை தந்தை அவனை அருகில் இருத்தி வைத்துக் கொண்டு கூறியது என்றும் அவனது நினைவில்!
இப்போதும் கூட தாயும் தந்தையும் பூரி ஜகன்னாதர் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கிருந்தே காலையில் அழைத்த போதும் கூட,
“டேய் தம்பி… நீ நல்லவன் தான் ஆனா கொஞ்சம் கோபக்காரன்… நாங்க வர்ற வரைக்கும் உன்னோட கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வை… சரியா?”
கிண்டலாக தந்தை அவனை கலாய்க்க,
“அப்ப்ப்பா…” என்று அழுத்தம் கொடுத்து பொய் கோபம் காட்டியவனை,
“விடுடா தம்பி… விடுடா…” அதே கிண்டல் குரலில் கலாய்த்து விட்டு, அருகிலிருந்த தனது மனையாட்டியிடம் கொடுத்து விட, அவரோ சிவச்சந்திரனே தேவலாம் என்று நினைக்க வைத்துவிட்டார்.
“டேய் நல்லவனே… நாங்க அங்க வர்ற வரைக்கும் எந்த பொண்ணு கூடவும் கிசுகிசு வராம பார்த்துக்க… விட்டா கல்யாணமாகி குழந்தையும் இருக்குன்னு எங்களுக்கு நியுஸ் கொடுத்துட போற…” என்று அவர் சிரிக்காமல் கிண்டலடிக்க, இவனோ “அம்மா…” என்று வாய்விட்டு சிரித்தான்.
“ஏன்டா… நான் சொல்றது உண்மைதானே?” என்று மேலும் அவர் கலாய்க்க, “ம்மா… போதும் மா… நான் பாவம்… நான் சும்மாவே இருந்தாலும் எழுதுவாங்க… சுமந்துட்டு இருந்தாலும் எழுதுவாங்க… இதையெல்லாம் வெச்சு இந்த சின்ன பையனை நீங்க ஓட்டறீங்களா?”
அவர் கூறுவதின் அர்த்தம் அவனுக்கு புரியாதா? தினம் தினம் அவனுக்கு புதுப் புது பெண்களை திருமணம் செய்விக்கும் மீடியாவின் அட்ராசிட்டியை அல்லவா அவர் கிண்டல் செய்வது.
அவன் இந்தளவு சிறு பையனாக செல்லம் கொண்டாடுவது தன் அன்னையிடம் மட்டுமே. தந்தை மேல் மரியாதை உண்டு, பாசம் உண்டு, அதை காட்டிலும் நல்ல நட்புண்டு! ஆனால் இன்னும் சிறு பிள்ளையாக தன்னை பார்க்கும் அன்னையிடம் இந்த சலுகை உண்டு. ஆனானப்பட்ட இந்தர் இப்படி சிறு பிள்ளையாக அன்னையிடம் கொஞ்சிக்கொண்டிருப்பான் என்று யாரால் நினைக்க முடியும்?
வெளியில் அவனுக்கிருக்கும் பிம்பம் வேறு!
கலையுலகின் தாதா, கிட்டத்தட்ட அப்படித்தான்!
அவனுக்கு அங்கு எதைப் பற்றியும் பயமுமில்லை, தயக்கமுமில்லை! அவனுக்குரிய முக்கியத்துவத்தை அவன் இல்லாமலே உணர வைப்பவன் அவன்.
அவனுடைய பெயரை உச்சரிக்காமல் எந்தவொரு விழாவையும் நடத்திவிட முடியாது. அவனது ஒப்புதல் இல்லாமல் சங்கங்களில் யாரையும் தேர்ந்தெடுத்து விட முடியாது. அவனது பார்வை படாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் சங்கத்தில் கொண்டு வந்துவிட முடியாது.
பின்னாலிருந்து ஆட்டி வைப்பவன் இவன்!
நவீன பொம்மலாட்டம்… கலையுலகில் எங்கு எதுவொன்று நடந்தாலும் அதன் கயிறு இவனிடமிருக்கும்.
அத்தனையும் எந்தவிதமான எதிர்ப்புமின்றி தானாகவே நடப்பது போல இருப்பதுதான் வேடிக்கை! அந்தளவு இண்டஸ்ட்ரியை கைக்குள் வைத்து ஆட்டி வைத்துக் கொண்டிருப்பவனை தான் கவின் மலர் இப்படி கேள்வி கேட்டாள்.
சற்று நேரம் அவளை உறுத்துப் பார்த்தவன், “yes…you are right” அலட்டாமல் பதில் கூறினான்.
கவின் அவனை நேர் பார்வை பார்வை பார்க்க, மற்ற இருவருக்கும் என்ன நடக்குமோ என்று மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது.
“you mean?” சற்று தயங்கினாள் கவின்.
“எஸ்… நான் தூண்டி விட்டுத்தான் ரசிகர்கள் கோஷம் போடறாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு ஐநூறு ருபாய் கொடுத்து கோஷம் போட வைக்கிறேன்…” என்று அலட்டாமல் கூற,
“வாட்…” அவனது வார்த்தைகளில் திகைத்து பார்த்தாள் கவின்.
“ம்ம்ம்… அப்புறம் என்ன சொன்னீங்க? எனக்கும் நந்திதாவுக்கும் affair… எஸ்… வெறும் தொடர்பு மட்டுமில்ல… அவங்களுக்கும் எனக்கும் ரெண்டு வயசுல குழந்தையே இருக்கு…” என்றவனின் வார்த்தைகளில் கொஞ்சமும் விளையாட்டுத்தனமில்லை. அவ்வளவு தீவிரமான பார்வையோடு தான் கூறினான்.
கவின் கண்களை விரித்து விழித்தாள் என்றால் ஹாசனுக்கு இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போல இருந்தது.
“அப்படியே எழுதிக்கட்டா?” மிகவும் தீவிரமான பாவனையோடு கவின் கேட்க, “sure…” என்று அவனும் வெகு கேசுவலாக கூற, ஹாசனுக்கே சற்று பயமாக இருந்தது.
“அப்புறம் என்ன கேட்டீங்க? மகேசனுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு காரணம் நான் ஹீரோயினை மாத்த சொன்னதுதான் இல்லையா?” என்று கவினை பார்த்து இந்தர் கேட்க, அவள் தலையாட்ட மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள், அதிர்வோடு!
“ஆமா… அவருக்கு ஹார்ட் அட்டாக் மட்டுமில்ல, இன்னும் நந்தனோட கிட்னி பெய்லியர், ராகேஷோட டைபாயிட் எல்லாத்துக்குமே நான் தான் காரணம்…” என்று அவன் கொஞ்சமும் கோபமே இல்லாமல், சிரிக்கவும் செய்யாமல் அவன் கூற, கவின் இன்னமும் திகைத்தாள்.
நந்தன் இன்னொரு தயாரிப்பாளர். ராகேஷ் சக நடிகன்.
இப்படிப்பட்ட பதில்களை அவள் எதிர்பார்க்கவில்லை. அவனோ அவள் கேட்ட கேள்விகளை வைத்து கலாய்த்துக் கொண்டிருந்தான். அதை உணர்ந்தவளுக்கு என்ன சொல்வது என தெரியாமல் விழித்தாள். அரசியல்வாதிகளை கேள்விகளால் துளைத்தெடுத்து இருக்கிறாள். மிகப் பெரிய அதிகாரிகளை எல்லாம் கேள்விகளால் அரள வைத்திருக்கிறாள். ஆனால் இவனது பதில்களை எந்த வகையில் சேர்ப்பது?
அவனது பாவனைகளை எல்லாம் ஹாசன் கேமராவில் உள்வாங்கிக்கொண்டிருந்தான் அவன். ஸ்ரீநாத் உள்ளுக்குள் பதட்டமடைந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
அப்படி காட்டிக் கொள்வது இந்தருக்கு பிடிக்காது. எப்போதும் நிதானமாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவன் அவன். தவறே செய்தாலும் திருத்தமாக, நிதானமாக, திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவன்.
அவருக்கு தெரியும், இந்தர் இதுபோல யாரையும், அதுவும் நிருபர்களை, அதிலும் பெண் நிருபர்களை கலாய்த்ததில்லை. அதுபோல செய்யவும் மாட்டான். தள்ளித்தான் இருப்பான். அருகில் யாரையும் வரவிட்டதுமில்லை, அவனாக யாரிடமும் அவ்வளவு சுலபத்தில் பேசியதுமில்லை.
அவன் இதுபோல பேசுகிறான் என்றால்?
அவருக்கு உள்ளுக்குள் மணியடித்தது!
“தெரியாம எதற்கு செய்யணும் நாதன்? தெரிஞ்சே செய்வோம்! யார் என்ன பண்ணிட முடியும்!” இப்படியொரு ஆட்டிடியுடில் இருப்பவனிடமா இந்த பெண் வாயை விட வேண்டும் என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
தன்னை எதிர்த்து நிற்பவர்களை முழுவதுமாக வாஷ் அவுட் செய்வது இந்தருக்கு கை வந்த கலை!
‘ஈஸ்வரா இந்த பெண்ணின் வாயை கொஞ்சம் அடக்கேன்…’ என்று மனதுக்குள் கோரிக்கை விடுத்தார் ஸ்ரீநாத்.
ஆனால் ஈஸ்வரன் அதற்கெல்லாம் மசிந்து விடுவாரா என்ன?
அவரது கோரிக்கையை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டவர், நடப்பவற்றை வேடிக்கை பார்க்க, கையில் பாப்கார்னோடும் தன் தேவி பார்வதியோடும், குட்டீஸ் கணபதி, கார்த்திக்கோடும், தன்னுடைய பேவரிட் வெஹிகிளான எருதின் மீது அமர்ந்து கொண்டார்.
“start music”
****
எதுவும் பேசாமல் அறைக்குள் நுழைந்த கவின்மலர், நாற்காலியில் தொப்பென்று சரிந்தாள். அவளுக்கு சற்று நேர ஆசுவாசம் தேவைப்பட்டது. தாறுமாறாக துடித்த இதயத்தையும் வெளியான சுவாசத்தையும் சமன் படுத்திக் கொண்டிருந்தாள்.
வெளியே இரவை கொண்டாடிக்கொண்டிருந்தனர் சென்னை மக்கள். உள்ளே ஓயாத கடல் அலை போல மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
வேர்வையில் அணிந்திருந்த சுடிதார் நனைந்திருந்தது.
இந்தளவு பதட்டத்தை தான் இதுவரையில் உணர்ந்து இருக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டாள் அவள்!
நிச்சயமாக இல்லை!
கைகளால் முகத்தை அழுத்தமாக துடைத்தவள், நாற்காலியின் அருகிலிருந்த ஏசி சுவிச்சை ஆன் செய்தாள். பக்கவாட்டில் தனக்கு நேராக இருந்த விண்டோ ஏசி சப்தத்தோடு இயங்க ஆரம்பித்தது. மேஜையின் மேலிருந்த காகித கற்றைகள் காற்றினால் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
அடுத்த நாளின் எடிஷனுக்கு இந்தரின் பேட்டியோடு அவளுடைய கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் அவளை பார்த்து அவன் கேட்ட கேள்வி?
அவளது ரத்த அழுத்தம் எகிறியது!
எப்படி கேட்கலாம் அப்படி ஒரு கேள்வியை?
யார் கொடுத்தது அந்த உரிமையை?
அதுவும் எப்படிப்பட்ட கேள்வி?
ச்சீ… அவனெல்லாம் ஒரு நாகரிகமான மனிதனா?
அவள் கேட்ட கேள்விக்கு பதில் கேள்வியாய் கேட்கும் கேள்வியா அது?
அவனை பற்றி யார் யாரோ என்னவெல்லாம் கூறினாலும், இந்தளவுக்கு மோசமான கேள்வியை அவன் யாரை பார்த்தாவது கேட்டிருப்பானா?
டேபிளின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயோடு கவிழ்த்துக் கொண்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக இதயப் படபடப்பு அடங்குவது போலிருந்தது.
ஆனால் மனதுக்குள் வெப்பம் கனன்றுக் கொண்டிருந்தது.
அவளது படபடப்பை வெளியிருந்து பார்த்த வசுந்தரா புருவத்தை சுளித்தபடி உள்ளே வந்தாள்.
அடுத்தநாள் எடிசனுக்கு அவள் proof பார்த்துக் கொண்டிருந்தாள். பதட்டத்தோடு அலுவலகத்தினுள் நுழைந்த கவின், தலையை பிடித்துக் கொண்டு அமர்வதை பார்த்ததும் என்ன ஆயிற்றோ என்று உள்ளே வந்தாள்.
ஏதாவது வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வருவதில் ஸ்வப்னா கவின் மலர் ஸ்பெஷலிஸ்ட் தான் என்றாலும், எதற்காகவும் அவள் பதட்டப்பட்டு பார்த்ததில்லை.
ஆனால் இன்று அப்படியல்ல!
அவளது முகத்தில் அப்படியொரு பதட்டம், எரிச்சல், கோபம், ஆற்றாமை என அனைத்தும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.
இன்றுதானே இந்தரை பேட்டிக் காண சென்றாள்?
ஆவலாக அவள் முன்னே சென்று, “என்ன சொப்பன சுந்தரி… என்னோட sweet heart எப்படி இருக்கான்?” என்று கண்ணடித்து கேட்க, அவளை எரித்து விடுவது போல முறைத்தாள் கவின்.
“மனுஷனாடி அவன்?” நறநறவென பல்லைக் கடித்தவாறு கவின் கேட்ட கேள்வியில் புரியாமல் பார்த்தாள்.
“சொப்பன சுந்தரி… what happened?”
“ஆளும் அவனும்… எருமைமாடு… பேய்… பிசாசு…” என்று ஆரம்பித்து அவளுக்கு தெரிந்த அத்தனை திட்டு வார்த்தைகளையும் சொல்லி திட்ட, வசு காதை மூடிக் கொண்டாள்.
சைவம், அசைவம் என அவளது வாயில் அத்தனை வார்த்தைகளும் பறந்தன. அவன் தன் முன்னே இருப்பதாக நினைத்துக் கொண்டு வார்த்தையால் வறுத்தெடுத்தாள் கவின்மலர்.
வசு காதையும் கண்ணையும் மூடிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்த கவின், திட்டுவதை கைவிட்டு அவளது தலையில் கொட்டினாள்.
“ஏன்டி எருமை? அவனை திட்டினா உனக்கு பொறுக்காதோ?”
“என்னோட டார்ஜ்லிங்க ஏன்டி சொப்பன சுந்தரி இப்படி திட்ற?” பாவமாக வசு கேட்க,
“அவன் என்ன கேட்டான்னு தெரியுமாடி எருமை?” கோபத்தில் சிவந்தாள் கவின். அவள் இந்தளவெல்லாம் கோபப்படுபவள் கிடையாதே. ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறாள் என்று யோசித்தாள் வசு.
“என் செல்லம் என்னடி சொல்லுச்சு?”
“மண்ணாங்கட்டி… அவனை செல்லம் வெல்லம்ன்னு சொன்ன, உன் மண்டைலையே ரெண்டு போட்டுடுவேன் பாத்துக்க…”
“சொல்லிட்டு கொதிம்மா ராசாத்தி… தலையும் புரியாம வாலும் புரியாம நான் என்னன்னு புரிஞ்சுக்க?” பரிதாபமாக கேட்டவளை பார்க்கையில் பாவமாக இருந்தது. ஆனால் எல்லோரிடமும் சொல்ல முடியுமா அவன் கேட்டதை?
“நீ ஒன்னும் புரிஞ்சுக்க வேணாம்…” என்று கவின் எரிச்சல்பட,
“சொல்லவும் மாட்டேங்கற… கன்னாபின்னான்னு திட்ற… அப்படி என்னதான் தாயே நடந்தது?”
“என்ன நடந்ததா?” என்று குரலை சற்று உயர்த்தி கேட்டவள், எதையோ சொல்ல வந்து அப்படியே அடங்கினாள். என்னவென்று சொல்ல?
அவன் கேட்ட கேள்வி, அவளது காதில் வந்து அறைந்தது!
“Are you still a virgin?”