KYA – 8

KYA – 8

                            காலம் யாவும் அன்பே 8

 

 கரு நீலப் போர்வை போர்த்திய வானம் மெல்ல விழித்தெழ தயாராக இருக்கும் சமயம், வாகீசன் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, உள்ளே ஏசி யின் குளுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் , திக் பிரம்மையில் ஆழ்ந்திருந்த மூவருக்கும் ஏனோ வியர்த்தது.

அப்படி ஒரு சம்பவத்தை சாதாரணமாகச் சொல்லிவிட்டு , ‘இதெல்லாம் ஒரு சாதனையா’ என்பது போல அலட்டிக் கொள்ளாமல் இருப்பவனைக் காண்பது ஆச்சரியம் தான்.

அவனது தைரியமும் , தன்னம்பிக்கையும் சிந்தனையாற்றலும் நினைக்க நினைக்க , அவர்களின் ‘ஹெட்’  எப்பேர்ப்பட்டவன் , அவனுடன் வேலை செய்ய தங்களுக்கு தகுதி உள்ளதா என்பது தான் மூவரின் தலைக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்த எண்ணம்.

அன்றைய நிகழ்வு  இப்போது நடந்தது போல வாகீசனுக்குமே தோன்ற, அந்த பிம்பம் அவனது கண் முன் வந்து சென்றது. அந்த எண்ணம் அவனை எங்கோ இழுத்துச் செல்ல , தலைய ஒரு முறை சிலுப்பி மீண்டும் சிந்தனை வந்தவனாய் மற்றவர்களைப் பார்க்க, யாரும் இப்போது  உயிர்ப்புடன் இல்லை என்பது புரிந்தது.

அவர்களின் அந்த நிலையைக் கலைக்க , மீண்டும் பெண்டிரைவில் பழைய பாடலை ஒலிக்கச் செய்தான்.

“ தூங்காதே தம்பி தூங்காதே

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே….

தூங்காதே தம்பி தூங்காதே….!” சத்தம் பெரிதாக வைக்கவே , அனைவரும் திடுக்கிட்டு சுற்றுபுறம் உணர,

“ சிடுவேஷன் சாங்கா பாஸ்” ஆகாஷ் மெல்ல அவனைத் திரும்பிப் பார்க்க,

வாகீசன் தோளைக் தூக்கி கையை விரிக்க, நொந்தது ஆகாஷ் தான்.

“ முக்கியமான இடத்துல வந்து பிரேக் போட்டுடீங்களே ஹெட்! அந்தப் பெட்டிக் குள்ள என்ன இருந்துது ? மறுபடி நீங்க அந்த பிரமிடுக்கு போனீங்களா!” இயலின் மனதில் இருந்த கேள்விகள் தான் இவை. ஆகாஷும் அதையே கேட்க,

ஏதோ சொல்ல வாய் எடுத்தவள், அவனின் முகம் பார்த்தவுடன் அப்போது கூறிய ‘ஹெல்பர்’ நினைவுக்கு வந்து தொலைத்தது. அதனால் பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்.

அவளின் நிலை புரியாமல் , வந்தனா,

“ என்ன சொல்ல வந்த இயல்? சொல்லு”  அனாவசியமாக கேட்டு வைக்க,

அவள், தான் சொன்ன வார்த்தையால் காயப்பட்டிருந்தாலும் அதையும் தாண்டி அந்தப் பெட்டியைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட அவளைக் கண்ணாடியில் பார்த்தான் வாகீசன்.

‘இவ வேற நேரங்கெட்ட நேரத்துல கேக்கறாளே!’ , “ நத்திங்” என வந்தனாவை வாயை மூடுமாறு அவள் சைகை செய்தது கண்ணில் பட,

‘ சைல்ட்டிஷ்’ என்று மனதில் நினைத்து , “ அதை  அப்பறம் சொல்றேன் ஆகாஷ். நாம அல்மோஸ்ட் அந்த ஊரை நெருங்கிட்டோம். இந்த அட்ரஸ் கொஞ்சம் செக் பண்ணு.” அவனை திசைதிருப்பினான்.

அவனும் ஜிபிஎஸ்-ல் தேட , அந்த சிறு கிராமத்திற்குள் நுழைந்தது ஜீப்.  அது ஒரு பட்டிக்காட்டு கிராமம். பெயர் நீலப்பாறை. அந்த ஊரைச் சுற்றி நீர் வரத்து அதிகம். தண்ணீர் பஞ்சம் எப்போது இருந்ததில்லை. எங்கு திரும்பினாலும் வாய்க்காலும் , ஆறும் மலைகளும் தான்.

மிகவும் ரம்யமான சூழ்நிலை நிலவியது. அந்த விடியல் கூட அந்த ஊரை புதிதாய் பூத்த மலர் போலக் காட்டியது. மேடு பள்ளமான சாலையில் வண்டி குலுங்கினாலும் அந்த ஊரின் அழகு அவர்கள் கண்ணுக்கு விருந்தானது.

மாடுகள் பால் கொடுப்பதற்காக கன்றுகளை அழைக்கும் சத்தத்தோடு , கோயில் மணியின் ஓசையும் சேர்ந்து காதுகளை நிரப்ப,

“வாவ்! ரொம்ப அழகான ஊருல்ல ஆகாஷ்.. நாங்க இது மாதிரி பாத்ததே இல்ல இயல்!” இருவரையும் சேர்த்துக் கொண்டு பேசினாள் வந்தனா.

அவள் சொன்னதை ஆமோதிப்பது போல இயல் லேசாக சிரித்து வைக்க, ஆகாஷ் வெகு தீவிரமாக கையில் இருந்த அந்த ஜிபிஎஸ் – சை நோண்டிக்கொண்டிருந்தான்.

“ என்ன டா பண்ணிட்டு இருக்க, இங்க ஒருத்தி பேசிட்டு இருக்கேன்ல்ல” பின்னாலிருந்து அவன் முதுகைக் குத்த,

“ அட உன் ரசனைய அப்பறம் வெச்சுக்கலாம், இப்போ அந்த வீட்டுக்கு போக வழி தெரியல, இங்க சிக்னல் இல்ல, சோ ஜிபிஎஸ் வொர்க் ஆகல, அதை பாத்துட்டு இருக்கேன்” அவனும் சலித்துக் கொள்ள,

“ ஹே! டென்ஷன் ஆகாத, அங்க ரெண்டு பேர் வராங்க பாரு, அவங்க கிட்ட நான் கேட்டுட்டு வரேன், கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க” ஆகாஷிடம் பேசினாலும் , பொதுவாக வாகீசனிடம் வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

சில்லென்ற காற்று முகத்தில் மோத , அவ்விடத்தின் குளுமையை ரசித்த படியே அங்கு வந்த பெரியவர்கள் இருவரிடம் , “ இந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கு எப்படிப் போகணும்னு கொஞ்சம் சொல்றீங்களா சார்” பொறுமையாகவும் பணிவாகவும் அவள் கேட்க,

பின்னால் நின்ற அவர்களது ஜீப்பை ஒரு முறை பார்த்தவர்கள்.

“ நீங்க யாரு மா? எதுக்கு வந்திருக்கீங்க?” பதில் கேள்வி கேட்க,

“ நாங்க தொல்பொருள் ஆராய்ச்சி க்காக…” ஆரம்ப்பிக்கும் போதே

“ ஓ! அந்த கோயில பத்தி ஆராய்ச்சி பண்ண  வருவாங்கன்னு சொன்னாங்களே ! அவங்களா நீங்க.. வலது பக்கம் திரும்புனா ஒரு சின்ன பிள்ளையார் கோயில் வரும் , அந்த தெருவுலையே பெரிய வீடு தான் தலைவர் வீடு.”

“ரொம்ப நன்றிங்க!” மீண்டும் காரின் பக்கம் திரும்பி நடக்க

“அவளப் பாரு ! டக்குனு போய் அவங்ககிட்ட வழி கேட்டுட்டு வந்துட்டா.. நீயும் இருக்கியே” வந்தனா ஆகாஷை வார,

“ஹே! ஐ டோன்ட் நோ! அவங்க கிட்ட எல்லாம் வழி கேட்டா சொல்லுவாங்கனு எனக்குத் தெரியாது. நம்ம ஊர்ல சடனா போய் பேசுனாலே பயந்துருவாங்க, இங்க அப்படி இல்லன்னு இப்போ தான் தெரியுது, பட் ஷி இஸ் குட், டைம் வேஸ்ட் பண்ணாம உடனே வேலைய முடிச்சுட்டா” ஆகாஷின் பாராட்டு மழையில் நனைத்து கொண்டே வந்தாள் இயல்.

“ பக்கத்துல தான் இருக்கு ரைட்ல போக சொன்னாங்க , கோயில் பக்கத்துல வர பெரிய வீடாம் ” என்றபடி காரில் ஏறாமல் வெளியிலேயே நின்று அவள் ஆகாஷை மட்டுமே பார்த்துச் சொல்ல,

“ கெட் இன் இயல்” ஆகாஷ் அழைத்தான்.

“ இல்ல நான் நடந்து வரேன், பக்கத்துல தான, இந்த பிளேஸ் நல்லா இருக்கு , சோ நீங்க போங்க” என்றுவிட, அந்த வாய்ப்பை நழுவ விடாமல் வந்தனாவும் இறங்கிக் கொண்டாள்.

“ இரு. நானும் வரேன்”

அவளின்  சிறு கோவத்தை உணர்ந்து, எதுவும் சொல்லாமல் வண்டியைக் கிளப்பினான் வாகீ!

இயலுக்கு அவன் சென்றது நிம்மதியே என்றாலும், வண்டியில் அவன் ஏறச் சொல்லவில்லை என்பது மீண்டும்  ஒரு குறையாகிப் போனது.

ஆழ்ந்து ஒரு பெருமூச்சை விட்டவள், மீண்டும் அந்த ஊரின் அழகை வந்தனாவுடன் ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு கிராமத்தின் சுத்தமான காற்று, காய்கறிகள், உணவு,நீர் இவற்றைப் பற்றி சொல்ல, வந்தனா ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டே வந்தாள்.

“ எல்லாமே ஆர்கானிக் இல்லையா இயல்”

“ஆமா! நூறு பெர்சென்ட்!”

“அப்போ இனிமே ஆகாஷை பிரெஷ்ஷா சமைக்க சொல்லி சாப்பிடலாம்!”

“அமெரிக்கா லேந்து இங்க வந்து உனக்கு சமைச்சு போடணும்னு அவன் தலை எழுத்து பார்த்தியா”

“வேற வழி! ஆனா நான் எவ்வளோ டீஸ் பண்ணாலும் என்னை விட்டுக் குடுக்க மாட்டான் . அது தான் அவன் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும்” சீரியசாக அவள் சொல்ல,

அவளின் சென்டிமெண்டில் இயல் அவர்களுக்குள் இருக்கும் அழகான காதலை உணர்ந்தாள். இருந்தாலும்

“லேசா நெஞ்சு வலிக்கரமாதிரி இருக்கு வந்தனா..” இதயத்தைத் தொட்டுக் கொண்டு நிற்க,

ஒரு நொடி  சிந்தித்து பின் அவள் கிண்டலை உணர்ந்தவள்…

“ஏய்… உன்ன….” இருவரும் சிரித்தபடியே அந்த வீட்டினை அடைய

அதற்குள் வாகீசன் சென்று அனைத்தையும் பேசி, அவர்கள் தங்க வேண்டிய வீட்டின் சாவியையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

ஒரு வேலைக்காரன் அவர்களை  சைக்கிளில் தொடர்ந்து வரச் செய்ய, மெல்ல ஜீப்பினை ஓட்டிக்கொண்டு பின்னால் சென்றனர்.

ஒரு சிறு தெருவிற்குள் நுழைய , அங்கே ஒரு சில வீடுகளே இருந்தது. இவர்களுக்குக் கொடுத்தது, ஓரளவு பெரிய வீடு தான்.

கார் நிறுத்த வீட்டின் முன்பு சிறு இடம், வீட்டினைச் சுற்றி பல வகை மரங்கள் , பல வண்ணப் பூச்செடிகள் , சீராக வெட்டப் பட்ட புல் தரை அதில் ஒரு மர பெஞ்சு. வீட்டின் முகப்பு , அந்தக் காலத்து பழைய வீட்டினை சற்றும் மாற்றாமல் அப்படியே வைத்திருந்தனர்.

ஆனால் சுத்தமாக புதுசு போல வெள்ளையடித்து அழகாக பராமரித்து வந்தனர்.

அந்த வேலையாள் வீட்டினைத் திறந்து அவர்களை உள்ளே அழைக்க, அனைவரும் உள்ளே செல்ல,

சின்னதாக இருந்தாலும் அழகான வீடு. வாசல் வரண்டாவை மூங்கில் வேலி போட்டு வைத்திருக்க, உள்ளே சிறு ஹால், அங்கேயே இரண்டு அறைகள் மற்றும் சமையல் அறை.தரை முழுதும் பெயிண்ட்டால் கோலம் போட்டு வைத்திருந்தனர்.

வீட்டின் உள்ளேயே ஒரு சிறு ஏணி போல் அமைத்து மேலேயும் இரண்டு அறைகள். வீடே வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.

“சமைப்பதற்கு ஆள் வேணும்னா ஐயா சொல்ல சொன்னாங்க.நான் வரேங்க ” வேலையாள் கிளம்பிவிட,

உடனே வாகீசன் இயலைப் பார்க்க, அவளுக்கு உள்ளே கதி கலங்கியது. அவளோ ஆகாஷை கெஞ்சும் பார்வை பார்க்க,

“ ஆள் வெச்சுக்கலாம் ஹெட். நமக்கு இனி நிறைய வேலை இருக்கும், இயல் நம்ம கூட இருந்தா தான் நல்லது.” வேலையை முன் வைத்து வாகீசனிடம் சொல்ல,

“ம்ம் ஓகே “ என்று விட்டு மேலே உள்ள அறைக்குச் சென்றான்.

இயல் , “ நான் கீழ இருக்கற ரூம் எடுத்துக்கறேன். ஐ லவ் திஸ் பிளேஸ்”

“ அப்போ நானும் கீழ இருக்கேன். ஆகாஷ் நீ ஹெட் க்கு பக்கத்துல இருக்கற ரூம் எடுத்துக்கோ” வந்தனா அழகு காட்டிச் சொல்ல,

முகத்தை தொங்க போட்டுக் கொண்டு சோகமாய் இருப்பது போல காட்டிக் கொண்டான்.

“என்ன ஆச்சு” இயலுக்கு ஒன்றும் புரியவில்லை.

“உள்ள வரப்ப நாம ரெண்டு பேரும் பக்கத்துல ரூம் எடுத்துக்கலாம்னு சொல்லுச்சு  லூசு” சிரித்துக் கொண்டே சொன்னாள் வந்தனா.

“  இவ்ளோ தானா, ஆகாஷ், நீ எதுக்கு பக்கத்து ரூம் எடுக்கணும். அவ ரூம்லேயே இருக்கலாமே! இன்னும் வசதியா இருக்கும்”

“ முக்கால் வாசி அப்படித் தான் இயல் இருப்போம். வொர்க் முடிச்சு வர லேட் ஆச்சுனா அவ ரூம்லேயே படுத்துக்க சொல்லுவா.  இப்போ உன் முன்னாடி சீன் போடறா.” வந்தனாவை அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டே சொல்ல,

“ ஹே லையர். என்ன டா இப்படி புளுகற. பொய் இயல் நம்பாத”

“ பொய்யா… சேம் ரூம் சேம்…” கண்ணடித்தான் ஆகாஷ்.

“ ஓகே! சம் டைம் என் ரூம்ல தூங்கிருகான். ஆனா சோபா ல ..” பல்லைக் கடித்தாள்.

“உனக்கு தூக்கத்துல எதுவும் தெரியாது பேபி! என் மடிலையே தூங்கிருக்கா இயல்…”

“நோ வே!”

“ ப்ரூஃப் போடோஸ் காட்டவா பேபி!” அவனது போனை எடுக்க,

“டேய்!” என அவனது போனை பிடிங்கிக் கொண்டு அவளது அறைக்கு ஓட, பின்னால் ஆகாஷும், பேபி பேபி என்று கொஞ்ச,

இயல் கொஞ்சம் ஏக்கப் பெருமூச்சுடன் தனது அறைக்குச் சென்றாள். சைடு கேரெக்ட்டர் என்ற கவலையோடு!

குளித்துக் கிளம்பி அனைவரும் அந்த இடத்தைக் காணச் சென்றனர்.

அவர்கள் இருந்த இடத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த இடம். சில நாட்களுக்கு முன்பு செடி கொடிகள் வளர்ந்து காடுபோல இருக்க, கிராம மக்கள் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர். அப்போது அவர்ளுக்கு இரண்டடி மண்ணுக்குள் கோபுர கலசம் போல ஏதோ தட்டுப் பட , அதை வெளியே எடுக்க முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. பின்பு அரசாங்கத்திடம் சொல்ல, அவர்கள் வந்து அந்த இடம் முழுதும் தோண்டிப் பார்க்க, அங்கே ஒரு சிறு கோயில் தென்பட்டது. அந்த இடத்தை முழுமையாக தூர் வாரி அந்தக் கோயிலின் மொத்த அமைப்பையும் கண்டவுடன் , அதன் தொன்மையையும் பற்றி அறிய இப்போது இவர்களை  வர வைத்தனர்.

சில  நாட்களுக்கு முன்பு தான் கண்டு பிடித்த ஒரு சிறு தகவலின் மூலம் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று தேட , இந்த இடத்தில் கோயிலை கண்டுபிடித்திருப்பது பற்றி அறிந்தான் வாகீசன் . இந்தப் ப்ராஜெக்ட்டை தனக்கு அளிக்குமாறு கேட்டு வாங்கி இங்கே வந்திருந்தான்.

அந்தக் கோயில் சற்று பள்ளத்தில் இருந்தது. அந்த இடத்தை மட்டும் மண்ணுக்குள் இருந்து தோண்டி வைத்திருந்தனர். அது ஒரு சிவன் கோயில்!

கீழே இறங்கி அந்தக் கோயிலில் கால் வைத்தான் வாகீஸ்வரன். அடுத்த நொடி யாரோ அவனைப் பிடித்துத் தள்ளியது போலிருக்க, இரண்டடி முன்னே தடுக்கிச் சென்று சமாளித்து நின்றான்.

“ என்னாச்சு ஹெட்” ஆகாஷ் அருகில் வர,

அவனைப் பார்த்து இயலும் வந்தனாவும் வர, வாகீயைப் போல

இயலும் தடுக்கி விழுந்தாள்.

இருவருக்கும் ஒரே உணர்வு !!

 

Thiuvaasagam :

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

பொருள்:
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

 

 

 

 

 

 

error: Content is protected !!