Un Kannil Inbangal Kanbein -4


4

அதிகாலை நேரத்தை வெகு நாட்களுக்கு பின் சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தான் சந்த்ரு..
தனக்குப் பிடித்த லேட்டஸ்ட் பாடலானா,

“நீ எவனாய் இருந்தால் என்ன
சிவனாய் இருந்தாலும்
உனக்கு சமமாய் அமர்வேன் நான்” வாய்க்குள் முணுமுணுத்து கொண்டவனின் இடையில் டவல் சுற்றியிருக்க, முறுக்கேறிய புஜங்களை அரைக் கை பனியன் இன்னும் மெருக்கேற்றி காட்டியது..

சந்த்ரு நல்ல மனநிலையில் இருந்தால் அவனுக்குத் தேவையானதை அவனே சமைத்து கொள்வான், அதே அதிக சந்தோஷத்துடன் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்குமே அன்றைய சமையல் அவனுடையது தான்…

சந்த்ருவின் கைப்பக்குவம் அப்படியே அவன் அன்னை சீதாலெஷ்மியை கொண்டிருக்கும்..குறைவாய் சமைப்பான் அதிகமெனுக்கள் இருக்கும் ஆனால் சுவை குறைவில்லாமல் இருக்கும்…

அவனது வீட்டில் அவனும், அம்மாவின் காலத்தில் இருந்த ஆஸ்தான கணக்காளர் தனசேகரும், வீட்டின் சமையல் காரன் முத்து மற்றும் தோட்டக்காரன் ராமு…

மொத்தம் நால்வரே அடங்கியவர்கள் இருக்கும் அது வீடல்ல அரண்மனை..

ஆம்! அரண்மனை தான் மத்திய சென்னையைத் தாண்டி கொஞ்சம் வாகன நெரிசல்கள் மற்றும் அரவம் அடங்கிய இந்தப் பழைய காலத்து வீட்டில் கூடம் முற்றமென மொத்தம் இருப்பது இருபத்தி ஆறு அறைகள்..

ஒரு காலத்தில் இவ்வீடு காணாது என சொல்லும் அளவிற்கு வாழ்ந்த கூட்டுக் குடும்பம், இன்று இவனே இவ்வீட்டின் மிச்சம்…

பெற்ற தந்தை இருந்தும் இல்லாமலும் இருக்கிறார்!

கண்ணுக்கு எதிரே எமன் வந்து சட்டமாய் நின்றாலும் பயமில்லாமல் அவனைக் கடந்து செல்லும் ரகம் சந்த்ரு..

தன்னுடைய பதினாரு வயதில் தந்தையை விடுத்து மற்றவரை இழந்த போதும் தனியொருவனாய் துணிந்து நின்றான்..தனசேகர் கூட இவனது கல்லென்னும் மனதைக் கண்டு நிலைத் தடுமாறியது உண்டு..

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வெளியூர் வேலைகளை முடித்துவிட்டு தமிழ்நாடு வரும் போது வீட்டை புதுபித்திருந்தான்…வீட்டின் அனைத்து இடங்களும் கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் மாற்றியமைக்க இன்டெரியர் ஒருவர் இவனுக்கென்று பிரத்யேகமாக வடநாட்டில் இருந்து வந்து செய்து கொடுத்தார்..

அவனது தற்போதைய மனநிலை மற்றும் அவனை போலவே வீட்டின் நிறங்களும் இறுகியவை தான்..

பாடலை சத்தமாய் பாடி முடித்தவனின் கை பழக்கம் போலும் ஆம்லெட்டை திருப்பி போட, பின்னால் இருந்து தனது இருப்பைக் காட்டியது அவனது மொபைல் போன்..

சாம்சங் S8 மாடல் போன் அலறியதும் தனக்கு கைக்குள் சிறையிட்டு அழைப்பு வந்த எண்களை விழிகளால் தழுவ, ஆனந்த் தான் அழைத்தான்..

அவனைத் தவிர யாருக்கும் இந்த நம்பர் தெரியாது என்றாலும் தற்சமயத்தில் அதை மறந்திருந்தான்..

“ஹலோ பாஸ்..”

“ம்ம்…”

“நேத்து போலீஸ் கஸ்டடியில் இருந்து எடுத்தோமே அவன் பேரு கூட…”

“ஈஸ்வர்..”

“ம்ம்ம்…ஆமா சார் ஈஸ்வர் அவனை என்ன பண்ண..?”

“ஈசிஆர்..” குறிப்பாய் உச்சரித்தவன் அழைப்பைத் துண்டித்துவிட, அந்தப் பக்கம் அலைபேசியை பிடித்திருந்தவனுக்கு தான் வியர்த்தது..

அலைபேசியை அணைத்து தனது இடுப்பில் கட்டியிருக்கும் டவலில் சொறுகி கொள்ள, ப்ரெஞ் டோஸ்டும், வெஜிடபிள் ஆம்லேட்டுடன் ஆரஞ்ச் ஜூஸ் அவனது கைகளை நிரப்பியிருந்தது..

டைனிங் டேபிளில் தட்டுகளை அடுக்கினான்..அவன் அடுக்கும் சத்தம் கேட்டு சமையல் காரன் முத்து வரும்போது குறுக்கே பாய்ந்து ஓடியது அடர்கருப்பு நிற பூனை..

ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கும் போது முத்துவிற்கு தொண்டைக்குழியில் ஒரு உருண்டை சதுரங்கம் ஆடும்…அதன் பழுப்பு நிற விழிகளை ஒருநாள் இருட்டில் கண்டதில் இருந்து இன்றுவரை அவன் நடுராத்திரியில் அறையைவிட்டு வெளியே வருவது இல்லை..

பூனையும் ஒன்றும் சாதரணமானது அல்ல.. தன்னையோ தனது நண்பன் சந்த்ருவையோ எவரேனும் தனக்கு முன்னால் பேசினால் கடிக்காமல் விடமாட்டான்.. அவ்வளவு முரடு..

அவன் அடங்கிப் போவது சந்த்ருவிடமும் தனசேகரிடமும் மட்டுமே…

பூனை பாய்ந்து ஓடியதில் ஒருமுறை நெஞ்சைப் பிடித்து நின்ற முத்து, பின் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு சந்த்ருவிடம் விரைய அதற்குள் தனது தட்டை காலி செய்து ஜூஸில் வாயை வைத்திருந்தான்..

அவனது முன்னால் அமர்ந்திருந்த பூனை, தனது நண்பனைக் கண்ட சந்தோசத்தில் அங்குமிங்கும் குதிக்க, ஓரக்கண்ணால் அதைப் பார்த்து கொண்டே ஜூஸை குடித்து முடிக்க,
அதற்காகவே காத்திருந்தது போல அவனது மடியில் தாவி அமர்ந்தது..

“மைலோ..” கனிவாய் அழைத்தான் சந்த்ரு..

நண்பன் தன்னை அழைத்ததும், “மியாவ்..மியாவ்..” என மைலோ கத்தியதில் கூட ஒரு இனிமை இல்லை…

தனக்கருகே நிற்கும் முத்துவிடம், “மைலோக்கு சாப்பிட ஏதாச்சும் குடு முத்து..” மைலோவின் காது பக்கம் மற்றும் முதுகை வருடிக் கொடுக்க, இதமாய் அவன் மடியில் அமர்ந்து கண்மூடிக் கொண்டான் மைலோ..

கொஞ்சம் நேரம் அதனுடன் செலவிட்டவன், இப்போது அவனைத் தட்டியெழுப்பி, “மைலோ,இட்ஸ் கெட்டிங் லேட்..நீ போய் விளையாடு..” பேசிக் கொண்டே உணவு மேஜைக்கு கீழ் இறக்கிவிட்டவனைக் கண்டு முகம் திருப்பிய மைலோ ஒரு சிறு குழந்தை போல சமையல் அறைக்குள் கோபம் கொண்டு ஓடிவிட்டான்..

இது நிதமும் நடக்கும் ஒன்று என்பதால் சிரித்து கொண்டே அவ்விடம் வந்த தனசேகர், இடுப்பில் கைவைத்து மைலோ ஓடிய திசையைப் பார்த்து நின்றவனின் தோளில் தட்டினார்..

“ஹாய் அங்கிள்…குட் மார்னிங்..” பல மாதங்களுக்கு பின் அவன் சிரித்து பார்க்கிறார் தனசேகர்..

“குட் மார்னிங் தம்பி..”

“ம்…நீங்க சாப்பிடுங்க..எனக்கு வேலையிருக்கு..” நடந்து கொண்டே பேசி சென்றவன் அடுத்த அரை மணி நேரத்தில் மிடுக்காய் கிளம்பி வந்திருந்தான்..

நடுக்கூடத்தில் நின்று, “அங்கிள்..” என்றவன் அழைக்கவும், உணவு மேஜையில் இருந்து அவர் எட்டிப் பார்க்க, வேகமாய் அவருக்கு அருகே சென்றவன்..

“இன்னைக்கு உங்க எல்லோருக்கும் மன்த்லி செக்அப் பண்ண டாக்டர் வருவாங்க..” தகவலாய் உரைத்தவன்
அடுத்த ஆன்ந்தின் அழைப்பிற்கு செவி சாய்த்து வெளியேறினான்..

ஈசிஆர் கடற்கரை சாலை பங்களா..

கிட்டதட்ட மூன்று ஏக்கர் நிலத்தில் சுற்றிலும் தென்னந்தோப்பு இருக்க, நடுநாயகமாய் வீற்றிருந்தது அந்த இரண்டு படுக்கையறையைக் கொண்டு குட்டி வீடு..

இவனது காரைக் கண்டதும் அங்குள்ள வாட்ச் மேன் கேட்டைத் திறந்துவிட புளுதியைக் கிளப்பிக் கொண்டு உள்ளே வந்தவனை வெளிவாசலில் நின்றே வரவேற்றான் ஆனந்த்..

காரைவிட்டு இறங்கியவன், அங்கு ஓரமாய் நின்றிருந்த தோட்டக்காரனுக்கு கண்களால் செய்கை செய்து உள்ளே செல்ல, காரின் நம்பர் ப்ளேட்டை இருபுறமும் மாற்றியமைத்தான் அவன்..

வேகமாய் முன்னேரும் பாஸிற்கு ஈடு கொடுத்தவாறே ஓடிய ஆனந்தை முந்திக் கொண்டு அன்டர்கிரவுன்ட் அறைக்குள் நுழைந்தான் சந்த்ரு..

சேரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை தொங்க அமர்ந்திருக்கும் ஈஸ்வரைக் கண்டவன், ஆனந்திடம் திரும்பி செய்கையில்,

“ஏதாச்சும் சாப்பிட்டானா..?” எனக் கேட்க, மற்றவன் மறுத்து தலையசைத்ததும், தனது டக்-இன் செய்த சட்டையை வெளியெடுத்துவிட்டு, மார்பின் முதல் இரண்டு பித்தான்களை கழற்றிவிட்டவனின் இடது கரம்
இப்போது வலது கர சட்டையை மேலேற்றிக் கொண்டிருந்தது..

நிதானமாய் ஈஸ்வருக்கு அருகே சேரை இழுத்து போட்டவன், கால்மேல் கால் போட்டு ஓய்யாரமாய் அமர்ந்து கொண்டே ஆனந்திற்கு செய்கை காட்டினான்..

சந்த்ருவின் கண்ணசைவில் தனக்கு முன்னால் இருந்த ஜக்கின் நீரை ஈஸ்வரை முகத்தில் பீய்ச்சியடிக்க, அரக்கபரக்க விழித்தவன் அங்கே சத்தியமாய் சந்த்ருவை எதிர்பார்க்கவில்லை..

தனக்கு முன்னால் இருந்தவனின் முகத்தில் கண்ட பீதியில் தனது உள்ளம் குளிர,
“கட்டை அவுத்து விடு..” என்றான் இடது கையில் மாட்டியிருந்த வாட்சை கழற்றியவாறே..

கட்டை அவுத்துவிட்ட ஆனந்திடம், “சாப்பிட ஏதாச்சும் கொண்டு வா..” என வெளியனுப்பி வைக்க

மற்றவன் வெளியேறியதும், “தல..என்னா தல இப்படி கட்டி வச்சுட்ட…” கூலாய் விசாரித்தவன் இப்போது இடது காலை தனது சேரில் தூக்கி வைத்து கட்டப்பட்ட கையை நீவி விட்டுக் கொண்டான்..

“டேனி..உன்னைக் காப்பாத்திருக்கேன்..” என முறைப்பாய் சொன்ன சந்த்ருவிடம் சிரித்தவன் எழுந்து அவ்வறையை நோட்டம்விட்டான்..

********

இன்றொடு தனது அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு இரண்டு தினங்கள் முடிந்துவிட்டது.. வந்தவர்கள் யாரென அறிவது எங்கே சந்தேகம் கூட படமுடியாத அளவிற்கு எதில் தொட்டாலும் சிக்கல் தான்…

ஈஸ்வர் யாரென அறியவும் அவளால் முடியவில்லை… அவனிடம் இருந்து எடுத்த அலைபேசியை கூட விடாமல் எடுத்து சென்றுவிட்டிருந்தனர்..

போதாத குறைக்கு அந்த பஸ் நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் வேறு மறுபக்கம் தலைவலியை கொடுத்திருக்க, சுற்றிலும் எல்லா பக்கமும் போட்ட முட்டுக்கட்டையில் அயர்ந்து போயிருந்தாள் கனி..

ஒரு பார்க்கின் ஓரத்தில் வண்டியை நிறுத்தச் சொல்ல, தனது பக்க கதவை திறந்து கொண்டு அமைதியாய் கண்ணை மூடி அமர்ந்து கொண்டாள்..

சரியாக அங்கே வந்த ஒரு மணி நேரத்தில் தனது எண்ணுக்கு அனுஷிடமிருந்து அழைப்பு, இருந்த சோர்வை முயன்று விரட்டி..

“மாம்ஸ் சொல்லுங்க..” என்றாள்.

“என்ன டார்லிங் குரல் டல்லடிக்குது..?”

“அதுஒண்ணும் இல்ல…இங்க கொஞ்சம் வேலை பிஸி அவ்வளவு தான்..”

“ஓ..சாப்டியா..?”

“ம்ம் ஆச்சு…நீங்க..?”

“ம்ம்ம்…அப்புறம்…அந்த அக்யூஸ்ட் கிடைச்சுட்டானா..?” அவனது கேள்விக்கு பெருமூச்சை விடுத்தவள்..

“இல்ல ட்ராக் பண்ணவே முடில..” என்றவளிடம்

“சரி அதுக்குன்னு இப்படியா சோர்ந்து போயிடுறது..?”

“அவன் மட்டும் சிக்கட்டும்..!!நான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்..” என்றவளை சமாளிக்கும் பொருட்டு,

“இதெல்லாம் உனக்கு ஒரு சேலன்ஜா எடுத்து பண்ணு எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு..அவன் கண்டிப்பா உன்கிட்ட மாட்டிப்பான்…அவன் மாட்டுனதும் எனக்கு சொல்லு..” என்றவனிடம் சரியென்றவள் மற்றதை பேசி வைக்க, நேரம் மாலை ஆறு மணியைத் தொட்டு நின்றது…

வண்டியை கிளப்பி கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விசாரனையின் பொருட்டு சென்றவள், அங்கிருந்த அலுவலக அதிகாரி, டைம் கீப்பரென ஒவ்வொருவராய் விசாரிக்க,

அனைவரிடமும் இருந்து வந்த ஒத்த பதில்கள், “மேடம், டக்குன்னு வெட்டிட்டு ஓடிட்டான்..நாங்க அவன் கையில வச்சிருந்த கத்திக்கு பயந்து பக்கத்துல போகல..” என்பதே..

தலையைப் பிடித்து கொண்டவளுக்கு சிசிடிவியும் கைகொடுக்காமல் போய்விட, கொஞ்சம் திணறித் தான் போனாள்..

“கொலை நடந்து 48 மணி நேரத்தைக் கடந்தும் கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை-போலீஸின் அலட்சியம்”
அனைத்து ஊடகங்களும் நடுதெருவில் இவர்களது மானத்தைக் கூறு போட்டு விற்க,

“ஒரு நாள் காக்கி சட்டைய மாட்ட வச்சி, அக்யூஸ்ட்ட பிடிக்க வச்சா தெரியும் நம்ம நெலம…டிஆர்பிக்காக..ச்சீ..” வெறுப்பாய் வார்த்தையைக் கக்கிட மட்டுமே அவளால் முடிந்தது..

இறந்த பெண்ணின் குடும்பம் மொத்தமும் ஆளும் கட்சியின் விழுதுகளாய் இருக்க, போதாக்குறைக்கு அப்பெண்ணது தந்தை வேறு ஜாதி கட்சி தலைவர்..

“நாராயணா..எங்கயாவது நிறுத்துங்க ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்..” தலையில் கைவைத்து கொண்டு சொல்லும் கனியிடம் சரியென்றவர் சரவண பவன் வாசலில் வண்டியை நிறுத்தினார்..

வண்டி நின்றதும் இறங்கியவள், “நாராயணா, நீங்களும் வண்டியை ஓரமா விட்டுட்டு வாங்க..”

“சரி மேடம்..” என்றவரும் வண்டியை சாலையின் ஓரமாய் நிறுத்தி உள்ளே செல்ல அதற்குள் இருவருக்குமாய் காபியும் அவருக்கு மட்டும் சிற்றுண்டியும் ஆர்டர் செய்துவிட்டிருந்தாள்..

கனியுடன் உட்காரதயங்கிய நாராயணன் அவளுக்கு அடுத்ததாக இருந்த டேபிளுக்கு சென்று உட்கார்ந்து கொள்ள, எதுவும் பேசாமல் சுற்றத்தை பார்வையால் அளந்து கொண்டிருந்தவளின் முன்னுள்ள மேஜையில் அமர்ந்தான் சந்த்ரு..