uut9

uut9

அத்தியாயம் ஒன்பது

டிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி

  • உடற்பயிற்சி

ரெகுலராக உடற்பயிற்சி செய்வதால் டிமென்ஷியா வருவதை 50 விழுக்காடு குறைக்கலாம். உடற்பயிற்சி உடல் நலத்தை மட்டும் அல்லாது மூளையின் செயற்பாட்டையும் நலத்துடன் வைத்திருக்கும்.

கோபத்தில் சிவந்துப் போய் முறைத்தவனின் முகம் பார்க்க பயங்கரமாக இருந்தது. அபிக்கே அவனைப் பார்க்க லேசாக பயம் வந்தது.  

அவளையேப் பார்த்திருந்தவனின் கண்கள், பயத்தில் சிலிர்த்து அடங்கிய அவளின் உடல் மொழியைக் கண்டுக் கொண்டது. கோபம் வடிய, முகம் துயரத்தைப் பூசிக் கொண்டது. சட்டென அவளுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டவன்,

“அபி, என் கிட்ட கோபப்படு, திட்டு, சந்தோசத்தைக் காட்டு, எதையும் தாங்கிக்குவேன். என்னைப் பார்த்து பயப்பட மட்டும் செய்யாதே கே..ஹ்ம்ம் அபி. அத மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது. ப்ளீஸ்” என்றான். கரகரப்பாக ஒலித்தது அவன் குரல். திரும்பி நின்றிருக்கவும் அபியால் அவனின் முகவாட்டத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை.

அவனைச் சுற்றிக் கொண்டு அவன் முன்னால் போய் நின்றாள் அபி. அதற்குள் முக பாவத்தை சரிப்படுத்தி இருந்தான் சதா.

அவன் மனநிலையைப் புரிந்துக் கொண்டவள் அதை சரி செய்ய,

“வெட்டு சார், யார் சொன்னா நான் பயந்தேன்னு? லேசா குளிருது அதான் நடுங்கிட்டேன். பாருங்க பல்லு கூட டைப் அடிக்குது” என வேண்டும் என்றே பற்களை டைப் அடித்துக் காட்டினாள்.

பளீரென டாலடித்த அவளின் பல்வரிசையில் சில நொடிகள் நிலைத்து நின்றது அவன் பார்வை.   

“என் பற்பசையில உப்பு இருக்கு வெட்டு சார்” என கிண்டலாக வந்த அவள் குரலில் சுய உணர்வு அடைந்தவன், பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவன் எப்பொழுதும் முயன்று தன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. அதற்கொரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என முடிவெடுத்தவள்,

“வெட்டு சார்” என அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“வெட்டு சார்”

“சொல்லு அபி”

“வெட்டு சார்”

“என்ன அபி?”

“வெட்டு சார்”

பொறுமை இழந்த மூச்சுடன் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவன்,

“என்ன அபி?” என கேட்டான்.

அழகாக சிரித்தவள்,

“இப்படி முகத்தப் பார்த்து பேசுங்க. இனிமே சுவத்தப் பார்த்து பேசுனீங்கன்னா, நான் தெரியாத மாதிரி போயிருவேன்.” என மிரட்டினாள்.

அவன் ஊதினாலே சிறகில்லாமல் சிங்கப்பூர் பறந்து விடும் உடம்பை வைத்துக் கொண்டு, அவள் மிரட்டியது அவனுக்கு லேசாக புன்னகையை வரவைத்தது.

கண்களை நேராகப் பார்க்காவிட்டாலும் அவள் மூக்கின் மேல் பார்வையை நிறுத்தி,

“அப்படியே பழகிப் போச்சு அபி. மத்தவங்க முகத்தப் பார்த்துப் பேசும் போது, அவங்களோட கேலி பார்வையை என்னால தாங்கிக்க முடியறதில்ல. எதுக்கு மன வருத்தம்னு இப்படியே பழகிட்டேன். கொஞ்சம் டைம் குடு அபி. கண்டிப்பா உன் முகத்தப் பார்த்து பேச ட்ரை பண்ணுறேன்.” மெல்ல அவள் கண்களில் தன் கண்களைக் கலந்தவன் மீண்டும் அவசரமாக பார்வையை அவள் மூக்குக்கு கொண்டு வந்தான்.

“சரி நான் வெயிட் பண்ணறேன். நல்லா டைம் எடுத்துக்குங்க. ஆனா நாளைக்குள்ள என் கண்ண பார்த்துப் பேசனும்” என்றாள் அபி.

அவள் கொடுத்த டைம் லிமிட்டைக் கேட்டு அதிர்ந்து மீண்டும் அவள் கண்களைப் பார்த்தான் சதா. அவன் முகம் போன போக்கைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் அபி.

“ரிலாக்ஸ் வெட்டு சார். சும்ம கலாய்ச்சி விட்டேன் உங்கள” என மீண்டும் சிரித்தாள். அவள் சிரிப்பு இவனையும் தொற்றிக் கொண்டது. அவள் சிரித்து முடிக்கவும்,

“அபி, நீ எப்படிதான் சிரிச்சு, என்னை சிரிக்க வச்சு என் மூடை மாற்றினாலும், நீ கேட்டதுக்கு என் பதில் நோ தான்” என்றான்.

அபியின் முகம் சட்டென பிடிவாதத்துக்கு மாறியது.

“ஓஹோ!! அப்போ சரி. நீங்க அழைச்சிட்டுப் போகலனா, சுவரேறி குதிச்சு நானே போவேன். எப்படி வசதி வெட்டு சார்?” திமிராகக் கேட்டாள் அபி.

“மரத்துக்கு மரம் தாவற உனக்கு சுவரு மட்டும் ஏற தெரியாம இருக்குமா என்ன! போ, போய்த்தான் பாரேன்! குதிக்கற காலை உடச்சி குழியில புதைச்சிருவேன்” அவனும் திமிராகத் திருப்பி பேசினான்.

அவன் அருகில் நெருங்கி, எக்கி நின்று நெஞ்சில் ஒற்றை விரலை வைத்து குத்தியபடியே எகிறினாள் அபி.

“அப்படியா? என் காலை உடைச்சிருவீங்களா? யோவ்! உடச்சித்தான் பாரேன்! ஆட்டி ஆட்டிப் பேசுற உன் கையை உடைச்சி ஆத்துல வீசிருவேன்” வீராவேசமாக போர்க்கொடி தூக்கினாள் அபி.

‘என் நெஞ்சளவு கூட இல்ல, இவ பண்ணற ரவுசு இருக்கே!’ சிரித்தபடியே அந்த விரலைப் பிடித்து அருகில் இழுத்து முகர்ந்துப் பார்த்தான் சதா.  

“விடு, விடு வெட்டு சார்!” கையை இழுத்துக் கொண்டாள் அபி.

“உன் மேல மட்டும் எப்படி அபி எப்பவும் கேசரி வாசமா இருக்கு?” குரலில் அவ்வளவு குழைவு.

“தோடா! இப்பத்தானே கேசரி சாப்பிட்டேன். அப்போ கையில கேசரி வாசம் அடிக்காம கே.எப்.சி (kfc) வாசமா அடிக்கும்?” அவளுக்கும் கோபம் போயிருந்தது.

அவள் பதிலில் சிரித்தவன்,

“நான் எது சொன்னாலும் உன் நன்மைக்காகத்தான் அபி. நல்ல பொண்ணா கேட்டுக்குவியாம்!” என்றான். அவன் பேசிக் கொண்டிருந்த  வேளையில் போன் வர, பிறகு பேசலாம் என சைகைக் காட்டிவிட்டு நகர்ந்தான் அவன். வேலை விஷயமாக வந்த போன் அதற்குப் பிறகு அவனின் நேரத்தைப் பிடித்துக் கொண்டது. பேசியபடியே லேபிற்கு சென்றவன், ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்தப் போது அபி மாயமாய் மறைந்திருந்தாள்.

ஹாஸ்பிட்டல் காரிடரில் கையைப் பிசைந்தபடி நின்றிருந்தாள் அபி. போலிஸ் அவளை ரூமின் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

“சார், அஞ்சு நிமிஷம் மட்டும் டைம் குடுங்க. பேசிட்டு வந்துருவேன். ப்ளீஸ் சார்” கெஞ்சிக் கொண்டிருந்தாள் அபி.

“இங்கப் பாரு மா! பையன் ரொம்ப வயலண்டா இருக்கான். உள்ள யாரயும் விடக்கூடாதுன்னு டாக்டர் உத்தரவு. அதோட போலிஸ் கஸ்டடில இருக்கறவங்கள இப்படி சும்மா வந்துப் பார்க்கக் கூடாது. அதுக்கெல்லாம் பிராசிடர் நிறைய இருக்கு. இடத்த காலி பண்ணும்மா” கத்தினார் காவலுக்கு இருந்த போலிஸ்.

திரும்பிப் போக முயன்றவளை இரு கரங்கள் பிடித்து நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தவள்,

“வெட்டு சார்!” என ஆச்சரியமாக் கூப்பிட்டாள்.

அவள் காதருகே குனிந்தவன் மெல்லியக் குரலில்,

“வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா உன் காலை உடைச்சிப் போடறேன்” என மிரட்டியவன், அங்கிருந்த போலீசிடம் தேவையான டாக்குமெண்ட்களை நீட்டினான்.

பின் அபியைத் திரும்பி பார்த்து,

“சரியா ஐந்து நிமிடம் தான். நீ வெளிய வரலைன்னா, நான் உள்ள வருவேன்” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

இசைவாக தலை அசைத்தவள், கதவைத் திறந்து ராஜாவைப் பார்க்க உள்ளே நுழைந்தாள்.

ராஜாவைத் தனியாக சந்தித்து பேச வேண்டும் என கேட்டபோது அப்படி கோபப்பட்டவன், அவனாகவே சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது இவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

வெளியே நின்றிருந்த இவனோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அவளைக் காணோம் என்ற போதே திக்கென்றிருந்தது சதாவுக்கு. பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்பி வந்திருந்த கேசியிடம் கைமாத்தாக பணம் வாங்கி இருந்தவள், மற்றவர்களிடம் போக்கு காட்டி விட்டு சொன்னது போலவே சுவர் ஏறி குதித்து தான் வெளியே வந்திருந்தாள். கூர்க்காவுக்குத் தெரியாமல் எப்படி வெளியேறினாள் என சிசிடிவி ஃபுட்டேஜை பார்த்தவன் முதலில் விழுந்து விழுந்து சிரித்தான். ஒரே ஜம்பில் எகிறி மதில் மேல் ஏறி பின் மறுபுறம் குதித்திருந்தாள்.

‘குட்டிப் பிசாசு!’ மனதில் திட்டியவன், குணாவை அழைத்து ராஜாவைப் பார்க்க தேவையான வேலைகளை செய்ய சொல்லிவிட்டு, நேராக ஹாஸ்பிட்டல் கிளம்பினான்.

‘இவளைப் பார்த்ததுல இருந்து, வீட்டுப் பறவையா இருந்த நான் இப்படி 2.0 டிஜிட்டல் பறவையா மாறி ஊரே திரியறேனே!’ என மனதில் புலம்பியறவாறே அபி வெளி வர காத்திருந்தான் சதா.

உள்ளே நுழைந்த அபி, கட்டிலில் கண்மூடி பாவமாகப் படுத்திருந்த ராஜாவை அமைதியாகப் பார்த்திருந்தாள். கை கால்களை கட்டிலுடன் இணைத்துக் கட்டி இருந்தார்கள். கட்டிலில் இருந்து அவன் எழுந்து ஓட பல முறை முயற்சித்திருந்ததால், கைகளிலும் கால்களிலும் பல காயங்கள். அபியின் கண்களில் இருந்து அருவியாய் கண்ணீர் வழிந்தது. பார்த்தால் அவனும் அழுவானே என அவசரமாகக் கண்களைத் துடைத்தாள். பின் மெல்லிய குரலில்,

“ராஜா” என அழைத்தாள்.

படக்கென கண்களைத் திறந்தான் ராஜா.

“அபி, அபிம்மா! வந்துட்டியா? என்னைப் பார்க்க வந்துட்டியா? எனக்குத் தெரியும் எப்படியும் நீ வருவேன்னு” கண்களில் ஒளி மின்ன ஆனந்தமாய் பேசினான் அவன்.

“உன் கிட்ட பேசனும் ராஜா”

“சின்ன புள்ளைல கூப்புடற மாதிரி அத்தான்னு கூப்பிடு அபி. ப்ளீஸ்”

தலையை இடம் வலமாக ஆட்டினாள் அவள். ஆர்வத்துடன் பார்த்திருந்த அவன் விழிகளில் ஆத்திரம் நிறைந்தது.

“கூப்புடுன்னு சொல்றேன்ல. கூப்புடுடி” ஆங்காரமாகக் கத்தினான்.

படீரென கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் சதா.

“அபி, என்ன சத்தம்? ஆர் யூ ஓகே?” அவசரத்துடன் கேட்டான். அவன் பார்வை எரிப்பது போல ராஜாவை நோக்கியது.

“ஒன்னும் இல்ல வெட்டு சார். நான் பார்த்துக்கறேன். ப்ளீஸ், கொஞ்சம் வெளிய நில்லுங்க” என்றவள் கண்களால் கெஞ்சினாள்.

ராஜாவை முறைத்தவாறே கதவை சாற்றிவிட்டு வெளியே சென்றான் சதா.

“அவன் வேணா அபி, சொன்னா கேளு. என்னை மாதிரி யாரும் உன்னைப் பார்த்துக்க முடியாது அபி. அது ஏன் உனக்குப் புரியல? அவன் கட்டன தாலிய கழட்டிப் போட்டுட்டு என் கிட்ட வந்துரு அபி. நாம ரெண்டு பேர் மட்டும் எங்கயாச்சும் போயிரலாம். வந்துரு அபி”

கட்டி இருந்த கைகளை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டே இருந்தான். அது கைகளை வெட்டி, இன்னும் ரத்தம் கொட்டியது.

மூச்சை ஆழ இழுத்து தன்னை சமன் செய்த அபி குரலில் அழுத்தத்துடன்,

“ராஜா!” என அழைத்தாள்.

திமிருவதை நிறுத்திவிட்டு அவளை ஆழப் பார்த்தான் ராஜா.

“என்னை மறந்துரு”

“அபி!!!!!!” அலறினான் அவன்.

மீண்டும் கதவு திறந்தது. இவள் திரும்பிப் பார்க்காமலே,

“போங்க வெட்டு சார். போங்க! ஒரேடியா முடிச்சுட்டு வரேன், போங்க!” என கத்தினாள். சத்தமின்றி மீண்டும் கதவு மூடப்பட்டது.

“என்னடி முடிக்கப் போற? நம்ம உறவையா? அது மட்டும் நான் சாவற வரை உன்னால முடியாதுடி அபி. நான் உன்னை அவ்வளவு காதலிக்கறேன்” கண்களில் கண்ணீர் வழிய பேசினான் ராஜா.

“ஐயோ ராஜா! இதுக்கு பேரு காதல் இல்ல வெறி. காட்டுத்தனமான வெறி! ஒரு பொண்ணு அன்ப காட்டுனா அடங்கிப் போவா, வெறிய காட்டுனா வெறுத்துப் போயிருவா! உன் மேல நான் கரை காணாத வெறுப்பை வளர்த்து வச்சிருக்கேன். “

“அபிம்மா அப்படிலாம் சொல்லதடா! ஐ லவ் யூ அபி! இப்படிலாம் பேசாதே அபி” கட்டிலில் துடித்தான் ராஜா.

 “உன் மனசுல இருந்து என்னை விடுவிச்சிக்கிறதுக்காக தான் இங்க வந்தேன். என்னை விட்டுரு ராஜா. என்னை மறந்துரு! இப்போ நான் இன்னொருத்தரோட மனைவி. என்னை இனிமேலாச்சும் சுதந்திரமா, சந்தோஷமா வாழ விடு. நான் பயந்து பயந்து செத்துப் பிழைச்சதெல்லாம் போதும்.  என்னை மறந்துட்டு, நீ உன் வாழ்க்கைய நல்ல முறையில வாழ பாரு. உன் விஷயத்துல நான் எந்த வித தப்பும் பண்ணல. அஞ்சு வயசுல உங்க வீட்டுக்கு வந்த என்னை ராகவி மாதிரி ஒரு சகோதரியா நீ பார்த்துருக்கலாம். ஆனா ஏன் பார்க்கல? ஏன் என் மேல இந்த ஆசை? ஏன் இந்த வெறி?

அப்படி வெறி புடிச்சு அலையற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்? அந்த அஞ்சு வயசுல நான் என்னத்தான் செஞ்சிருக்க முடியும்? சொல்லு ராஜா, சொல்லு? எப்படி யோசிச்சும் எனக்கு காரணம் புரியலையே!” கட்டுப்பாட்டையும் மீறி கண் கலங்கியது அவளுக்கு.

“அபி அழாதே! நீ அழுதா என்னால தாங்க முடியாது அபி.” அவளுடன் சேர்ந்து அவனும் அழுதான்.

முயன்று கண்ணீரைக் கட்டுப்படுத்தியவள்,

“போதும்! உன்னால நான் பட்ட கஸ்டங்கள் போதும் ராஜா. இப்போ கூட உன் மேல எனக்கு கோபம் வரல. பரிதாபம் தான் வருது. இந்த கேசை நான் வாபஸ் வாங்கப் போறது இல்ல. கொஞ்ச நாள் உள்ள இருந்து, அமைதியா நீயே யோசிச்சுப் பாரு. நல்ல மனுஷனா திருந்தி வெளிய வா. உன்னோட அறிவுத்திறன் எனக்கு தெரியும். அந்த அறிவை என்னை மறக்கற விஷயத்திலும் கொஞ்சம் யூஸ் பண்ணு. தேவையில்லாம ஏன் இதையெல்லாம் வந்து சொல்லிட்டுப் போறான்னு நினைக்கறியா? உங்க வீட்டு உப்பை சாப்பிட்டு வளர்ந்திருக்கேனே! நீ எக்கேடோ கெட்டுப் போன்னு என்னால விட முடியலை ராஜா. திருந்தி நல்லவனா வா. இப்போ நான் போறேன், என் புருஷன் கிட்ட போறேன். பை ராஜா” என்றவள் ரூமை விட்டு வெளியேறினாள்.

அவள் போவதையே கண் இடுங்கப் பார்த்திருந்தான் ராஜா.

“அறிவைத் தானே யூஸ் பண்ணனும்! கண்டிப்பா யூஸ் செய்யறேன் அபிம்மா!” தனக்குள்ளாகவே பேசி கொண்டான் ராஜா.

கலங்கிய கண்களுடன் வெளியே வந்த அபிக்கு, தன்னுடைய கைக்குட்டையை நீட்டியதோடு சரி, வீட்டுக்குப் போகும் வரை ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை இருவரும்.

அபி சதாவின் முகத்தைப் பார்த்தாலும் அவன் அவளைக் கண்டுக் கொள்ளவே இல்லை. முகம் பாறாங்கல்லாய் இறுகி இருந்தது அவனுக்கு.

எப்பொழுதும் போல இரவில் அவரவர் இடத்தில் முடங்கினார்கள் இருவரும். நடுஜாமத்தில், சதாவின் மூக்கின் அருகே ஒரு சுகந்தமான மணம். (தூக்கத்துல கூட வாசனைப் புடிக்கற ஹீரோவ வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே!) சோம்பலாக கண் விழித்தவன் அருகே………..!!!!

(உரசுவான்)

error: Content is protected !!