LIM1

மேஜிக் 1

மழை பொழியும் காலை வேளை, கதிரவன் மேகக் கூட்டத்தின் பின்னே ஒளிந்து விளையாட…வெயிட்! வெயிட்! அந்த சீனே இல்லை! 

மழைனா மழை அப்படியொரு பேய் மழை சென்னையைப் புரட்டி எடுக்க , நகரத்தில் இருக்கிற எல்லா குண்டும் குழியும் நிரம்பி வழிந்து, ஆறா ஓடி, இப்படியே போச்சுன்னா  சென்னை ஒரு தீவாகவே மாறிடும் அப்படியொரு வெயிட்டான மழை, அதான் கண மழை.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும், ஆர்வக்கோளாறில் அந்தத் தனியார் கலைக்கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வரவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர். எதோ ‘ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லப் போகிறோம்’ என்கிற வெறியோடு நடன ஒத்திகை நடந்து கொண்டிருந்தது.

ஒருத்தி மட்டும் எதிலும் நாட்டம் இல்லாமல் ஒரு மூலையில் அமர்ந்து “நாசா“ இல்லை இல்லை “ஐ.எஸ்.ஆர்.ஓ” விஞ்ஞானி போல யோசனையில் இருக்க. 

இவளோ யோசித்தால் தோழி விஞ்ஞானி ஆகிடுவாளோன்னு பொறுக்காமல் கையில் தேநீருடன் வந்து அவள் சிந்தனையைக் கலைத்தாள் சுகன்யா.

“பார்த்து நகத்தைக் கடிக்கிறேன் பேர்விழின்னு விரலைக் கடிச்சு துப்பிடாதே ? அப்படி என்னடி யோசனை வந்ததிலிருந்து.” கேட்டபடி தோழியின் அருகில் அமர்ந்தாள்..

“என் காலேஜ் ஐடி கார்டை காணும்டி !” உதடு பிதுக்கி சிறுபிள்ளைபோல் பதிலளித்தவள்

“எங்கே விட்டேன்னு தெரியலை. கார்த்தாலே கிளம்பும்பொழுது இருந்தது சுகு“ சோகமாகத் தேநீரை வாங்கிக்கொண்டாள்.

“காலேஜ் பஸ்ல விழுந்துருக்கான்னு பார்க்கச்சொல்லுவோம். ஏன் கவலை படுறே? இல்லனா புதுசா வாங்கிப்போம்.” தேநீரைப் பருகியபடி பதிலளித்தாள் சுகன்யா..

தேநீர் கோப்பையின் விளிம்புவழி பார்த்தவள்

 “அதெல்லாம் சரி வராது லெட்டர் கொடுக்கணும், தொலைச்சதுக்கு ஃபைன் கட்டணும், எல்லாத்துக்கும் மேல அந்தக் கேஷியர் கொடுக்கிற அறுவை அட்வைஸை கேட்கணும்” அலுத்துக்கொள்ள.

புருவம் சுருக்கிய சுகன்யாவோ “என்ன தாண்டிப் பண்ணனும்?“ என்று பொறுமை இழக்க

“அடுத்தது நீதான் சுகன்யா !“ என்ற குரல் வர எழுந்தவள்

 “சரி யோசிச்சுட்டே இரு நான் போயிட்டு வந்துடுறேன்.” தேநீர் பருகியபடி சென்றுவிட்டாள்

இவளோ நிலைகொள்ளாது கண் மூடி “கடவுளே! என் ஐடி கார்டை கண்டுபிடிச்சு கொடுத்துட்டேன் உனக்கு…”

அவள் வேண்டுதலை முடிக்கும் முன்னரே கடவுள் உதவுவது போல அவளது கைப்பேசி ஒலித்தது.

‘ புது நம்பர், எடுக்கவா வேண்டாமா? ‘ அவள் தயங்கிய படி எடுக்க

“இஸ் இட் மிஸ் நந்தனா ? “ கணீரென்று ஒலித்தது ஒரு ஆண் குரல்.

“ம்ம் நந்தனா தான் பேசுறேன்”

“உங்க காலேஜ் ஐடி கார்டு என்கிட்ட இருக்கு. இன்னிக்கி ஈவினிங் வந்து வாங்கிக்கிறீங்களா ? “

முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு மின்ன “தேங்க்ஸ் சார். எங்க கிடைச்சுது ? “ அவள் ஆவலாய் கேட்க

“எனக்கு வேலை இருக்கு. எங்க மீட் பண்ணலாம்னு மெஸேஜ் பண்றேன் பை!“ வைத்துவிட்டான் அவன்

“அட அவளோ நல்லவனாடா நீ ? பெயரைக் கூடச் சொல்லலை! ” அவள் முணுமுணுக்க ‘அடியே நீ அவன் பெயரைக் கேட்டியா ? ‘ மனம் எதிர் கேள்விகேட்க

“விடு…பார்க்கும்பொழுது கேட்டுக்கலாம்” தோளைக் குலுக்கிவிட்டு உற்சாகமாக நண்பர்களிடம் சென்றாள்.

கைப்பேசியில் வந்த மெஸேஜ் படி மாலை 5 மணிக்கு அந்தக் காபி கடைக்குச் செல்ல ஒப்புக்கொண்டு புறப்பட்டாள்.

சும்மாவே சென்னையில் சாலை நெரிசல் மாலையில் அள்ளும், இதில் மழை வேறு கேட்கவா வேண்டும். சாலையில் நீந்திக்கொண்டு செல்வதற்குள் நொந்துவிட்டாள் நந்தனா.

அவள் சென்றடையும்பொழுது மணி ஆறடிக்க அவள் அந்த எண்ணிற்குத் தொடர்புகொள்ள

“சாரி சார் வர லேட் ஆகிடுச்சு. எங்கே இருக்கீங்க? “

“சாரி நான் அரை மணிநேரம் வெயிட்பண்ணேன் அப்புறம் பெர்சனல் காரணத்தால கிளம்பிட்டேன். நாளை மீட் பண்ணுவோம் பை” பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.

‘அட லூசு பயலே! கிளம்புறேன்னு ஃபோன் செஞ்சிட்டு கிளம்புறதுக்கு என்ன கேடு? இவளோ தூரம் வரவச்சுட்டு ஓடிட்டியே! ‘ மனதினுள் முகம் தெரியா அவனைத் திட்ட

‘நீ தான் அவனுக்கு நேரம் ஆகுதுன்னு ஃபோன் இல்லைனா மெசேஜ் செஞ்சுருக்கலாம். கோட்டை விட்டுட்டு அவன் மேல ஏண்டி பழி போடுறே ? ‘ மீண்டும் தனக்கு தானே பதில் தந்துகொண்டாள்

இதான் நந்தனா. கேள்வியும் அவளே பதிலும் அவளே. இது இதனால் தான் இப்படி நடக்கிறது, இவர் இதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று தாக்குதானே பதிலும் விளக்கமும் சொல்லிக்கொள்வாள்.

இவளின் இந்தப் பழக்கம் இவளுக்குச் சாதகமா பாதகமா காலம்தான் பதில்சொல்லனும்.

அன்றிரவு வீட்டில் அவள் அண்ணன் ஸ்ரீராமிடம் அனைத்தையும் சொல்லிக் கொண்டிடுர்ந்தாள் நந்தனா.

“டேய் ! நான் மெனக்கெட்டுச் சொல்லிக்கிட்டு இருக்கேன், அதைவிட்டு நீ பாட்டுக்குக் கிரிக்கெட் பாக்குறே ?” ஆத்திரமாய் ரிமோட்டை பிடுங்கி டீவியை அணைத்தாள்.

ஸ்ரீராமோ கோவமாய் “நந்து எதுக்கு இப்போ இப்படி ஸீன் போடுறே? அதான் அவன் நாளைக் கார்டை கொடுக்குறேன்னு சொல்லிருக்கான்ல இப்போ ரிமோட்டை கொடு”

“முடியாது போடா ஹைலைட்ஸ் தானே பார்க்கற…அப்புறம் என்ன ? மொதல்ல அவன்கிட்டேந்து கார்டை வாங்கிக்கொடு ! “ நந்தனா விடாமல் வாதிட

“அம்மா இவளை ஒழுங்கா ரிமோட்டை கொடுக்கச் சொல்லு ஓவரா பண்றா. ஒரு கார்டை ஒழுங்கா வச்சுக்க தெரியலை என்னை இம்சிக்கிறா“

ஸ்ரீராம் அன்னையிடம் புகார் வாசிக்க… சுடச் சுடத் தட்டில் தோசையுடன் வந்த அவர்களின் தாய் சரஸ்வதியோ

“நான் இந்த விளையாட்டுக்கு வரலை. இப்போ அடிச்சுப்பீங்க அப்புறம் கூடிப்பீங்க நடுவுல நானும் உங்கப்பாவும்தான் பல்பு வாங்கணும்“. ‘ இதுங்க திருந்தாதுங்க ! ‘ என்ற முகபாவத்துடன் சொல்லிவிட்டுச் செல்ல

சிரித்துவிட்ட அவர்கள் தந்தை கண்ணனோ “இதுங்க கூடச் சேர்ந்து உனக்கும் அவங்க பாஷை தொத்திக்குச்சா? பல்பு கில்புன்னுல்லாம் பேசுறே ? “

தாயிடம் வேலையைச் சாதிக்க முடியாமல் ஸ்ரீராம் இப்பொழுது தந்தையின் பக்கம் திரும்பி “அப்பா நீயாவது உன் பொண்ணுகிட்ட சொல்லேன்”

செய்தித்தாளை மடித்து மேஜையில் போட்டவரோ மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அதை அவர் ட்ஷிர்டில் துடைத்தபடி

“அவ குழந்தைடா கண்ணா! நீ தான் அவ கார்டை அந்தப் பையன் கிட்டேந்து வாங்கி கொடேன்.” சொல்லிவிட்டு கண்ணாடியைப் போட்டுக் கொண்டார்.

ஸ்ரீராம் பொறுமை இழந்தான் “இது குழந்தையா ? இதுக்கு இப்போ மார்ச் வந்தா 19 வயசு ஆகப்போகுது. குழந்தையாம்ல ! என்னால் முடியாது. வேணும்னா உன் சீமந்த புத்திரிக்கு நீ போய் வாங்கி கொடு நான் நாளைக்கு இன்டெர்வியூக்கு போகணும்”

நந்தனாவோ “அண்ணா டேய் ப்ளீஸ் டா இன்டெர்வியூ முடிஞ்ச அப்புறம் வாங்கிகொடேன்.” ராமின் நாடியைப் பிடித்துக் கெஞ்சினாள்.

ஸ்ரீராமோ “முடிவே முடியாது எனக்கு நிறைய வேலை இருக்கு அப்படியே வெட்டியா இருந்தாலும் உனக்குக் கொரியர் வேலை செய்யமாட்டேன்.” தோசையைத் தின்றபடியே தோளைக் குலுக்க.

சிலிர்த்து எழுந்த நந்தனாவோ “போடாப் போ ! எனக்கு உதவிப் பண்ணமாட்டல ? உன் இருக்குடி! “ நாக்கை துருத்திக்காட்ட

இது வேலைக்காகாது என்றுணர்ந்த அவர்கள் தந்தையோ “நான் வேணும்னா போய் வாங்கிண்டு வரேன். அந்தப் பையன் நம்பர் குடுமா “

“வேணாம்பா நீங்க இந்த மழையில் அலையை வேண்டாம். இப்போதான் கைக்கட்டு பிரிச்சுருக்கு வேற” நந்தனா ஆதங்கப்பட

ஸ்ரீராமோ “என்னப்பா நீ ? எப்போவும், எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்னு தானே சொல்றா. அவளே பாத்துப்பா”

இப்பொழுது நந்தனா பொறுமை இழந்தாள் “டேய் வேண்டாம் ரொம்ப கடுப்பேத்தாதே சொல்லிட்டேன்! “

“அம்மா பயமா இருக்கு! ” என்று போலியாய்‌ அஞ்சியவன் ஏளனமான குரலில் “போடி போடி பூச்சாண்டி காட்டாதே தம்மாத்தூண்டு இருக்கே அப்படியே நசுக்கிடுவேன்!”

தலையைப் பிடித்தபடி கண்ணனோ “டேய் நிறுத்துங்கடா தலைவலிக்குது!”

“நீ இதுல வராதே பா! “ நந்தனா முறைக்க

ஸ்ரீராம் சிரித்தபடியே கேலியாய் “அப்பா நீ கிளம்பு. உனக்குத் தலைவலியே இவளால்தான். இம்சை! “

அடுத்த தோசையுடன் வந்த சரஸ்வதியோ “சொல்றதை கேளுங்க இதுங்ககூட பேசிட்டு இருந்தால் நமக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்” கணவரைப் பார்த்துச் சிரிக்க.

அவரோ “ஆமாண்டி! தேவைதான் எனக்கு”

சிலநொடி ஏதோ யோசித்த நந்தனா

“சரிடா! நானே வாங்கிக்கிறேன். பையன் நல்லா இருந்தால் சைட் அடிச்சமாதிரியும் இருக்கும்” என்று சொல்லிக் கண்ணடித்து, டிவியை ஆன் செய்து ரிமோட்டை ராமிடம் கொடுத்தாள்.

அவள் மனத்திலோ ‘பாவம் அண்ணாக்கு ஏதாவது காரணம் இருக்கும். இல்லைன்னா இப்படிச் சொல்லமாட்டான்”

சிந்தனையுடன் கணவரைப் பார்த்த சரஸ்வதி கண்சாடை காட்ட அதை நொடியில் புரிந்துகொண்ட கண்ணனோ “சரஸ் எனக்கு ஒரு கப் பால் கொடு நான் போய்த் தூங்குறேன் இதுங்க கிட்ட மாறடிக்க என்னால முடியலை” மெல்ல மனைவியைப் பின்தொடர்ந்து சமையலறைக்குச் சென்றார்

“சொல்லுமா என்ன விஷயம்?”

“ஏங்க எனக்கு நம்ம நந்துவை நெனச்சா கவலையா இருக்கு. எந்த விஷயமானாலும் தன்னை பத்தி ஒரு அளவுக்கு மேல யோசிக்கிறதில்லை உடனே விட்டுக் குடுத்திடறா”

“அதுக்கென்ன சரஸ் நல்ல குணம்தானே ? “

“நமக்குள்ள பரவால்லைங்க. ஆனால் இவ இப்படியே இருந்தால் இவளை யார் வேணும்னாலும் ஏமாற்றிடலாம். எனக்குப் பயமா இருக்கு. விட்டுக் கொடுக்கிறதுக்கும் மத்தவங்களுக்காக யோசிக்கிறதுக்கும் அளவு வேண்டாமா? “

“நீ தேவை இல்லாமல் ரொம்ப யோசிக்கிறே சரஸ். அப்படி கூட நாம விட்டிடுவோமா சொல்லு? நமக்கு அப்புறமும் ராம் இருக்கான்”

“இருந்தாலும்…”

“நீ கவலைப்படாதே என்னை நம்புமா ” மனைவியின் கையை ஆதரவாய் பற்றிச் சமாதானம் செய்தார்.

மறுநாள் மாலை அவள் கல்லூரி அருகிலிருக்கும் உணவகத்தில் அவனைச் சந்திப்பதாய் ஒப்பந்தமானது. மாலை அவள் அங்குப் புறப்படும் முன்னரே அந்த எண்ணிலிருந்து மெஸ்ஸேஜ் வந்தது.

அதில்…

“சாரி அவசரமா நான் ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன். மன்னிச்சுடு நாளை மீட் பண்ணுவோம்”

‘பாவம் யாருக்கு என்ன உடம்பு முடியலையோ? கடவுளே அவர்களைக் குணப்படுத்து‘ முகமறியா உயிருக்காக வேண்டிக்கொண்டாள்.

இரண்டு தினங்கள் ஆகியும் அந்த எண்ணிலிருந்து எந்தத் தகவலும் வாராததால் அவள் சற்று கவலையாகவே இருந்தாள்.

அன்று நடன ஒத்திகையில் நாட்டம் இல்லாமல் ஏனோ தானோ என்று நந்தனா நடனமாட சுகன்யா ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனாள்.

“நந்து நீ என்ன தான் நெனச்சுட்டு இருக்க ? முதல்ல ஸ்டெப் மறந்தே இப்போ பீட் மிஸ் பன்றே ! நீ வீட்டுக்குக் கிளம்பு. திங்கள்கிழமை பாத்துக்கலாம். “

‘என் மேல தான் தப்பு. பாவம் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேன் போல ‘ நந்தனா கிளம்ப ஆயத்தமாக

“நந்து ஒரு நிமிஷம் கௌரவ் உன்னை மீட் பண்ணனும்னு சொன்னான். கால் பண்ணி பாரேன்” சுகன்யா குரல் கொடுக்க.

“ம்ம் சரிடா “பதிலுக்குக் குரல்கொடுத்த படியே அரங்கத்திலிருந்து வெளியேறினாள் நந்தனா.

கைப்பேசியில் கௌரவிற்கு கால் செய்தவள் அவனை ஒரு உணவகத்தில் சந்திப்பதாகச் சொன்னாள்.

அந்தக் காலை வைத்த மறுநொடி அந்தப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“நந்தனா இன்னிக்கி மீட் பண்ணலாமா? நான் இப்போ 3 மணிக்கு அப்புறம் ஃபிரியா இருக்கேன்.”

“ம்ம் சரி சார். நான் அசோக் நகர் சரவண பவன் போறேன் ஒரு ஃபிரெண்டை பார்க்க.நீங்க அங்க வர முடியுமா? “

“தரளமா வரேன். அப்போ…”

“சார்….”

“எஸ்”

“உங்களை எனக்குத் தெரியாதே.உங்க பெயர் என்ன ?”

“உங்களை நான் ஃபோட்டோல பார்த்துகிட்டு இருக்கேனே நானே உங்க கிட்ட வரேன் பை”

‘லூசு லூசு ! பெயரைக் கூடவா சொல்ல மாட்ட ? நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா?’ மனதில் அவனைத் திட்டியபடி புறப்பட்டாள்.

அந்த உணவகத்தின் வாசலில் கௌரவ் நந்தனாவிற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

அவளைக் கண்டவன் முகமெங்கும் பல்லாய் சிரித்தபடி

“ஹாய் நந்து வா வா…”

“எதுக்காக வரச்சொன்னீங்க?”

“இங்க வேண்டாம்! உள்ள போய்ப் பேசலாம். ” அவன் முன்னே செல்லத் தயங்கிய படியே நந்தனா பின்தொடர்ந்தாள்.

நால்வர் அமரும் மேஜையில் எதிர் எதிரே இருவரும் அமர்ந்தனர்.

“என்ன சீனியர் காலேஜ்லயே பேசி இருக்கலாமே ஏன் வெளியே …” நந்தனா கேள்வியாய் கௌரவை பார்க்க.

“மொதல்ல என்ன சாபிட்றே சொல்லு ஆர்டர் செஞ்சிட்டு பேசுவோம்.” புண்ணகைத்தவன் அவர்களுக்குப் பழச்சாறு ஆர்டர் செய்தான்.

“இப்போ சொல்லுங்க சீனியர்”

“கௌரவ்ன்னே கூப்பிடு எத்தனை முறை சொல்றது ? ” அவன் கடிந்துகொள்ள.

“முயற்சி பன்றேன். சொல்லுங்க என்ன விஷயம்.? “

அவன் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்த ஏதேதோ பேசிக்கொண்டே போக நேரம் விரயமானது.

பழச்சாறும் வர 

கௌரவோ புன்னகையுடன் “ஜுஸ் குடிச்சுட்டு பேசுவோம் நந்து. நான் எங்க ஒடியா போறேன்”

மறுக்கமுடியாமல் பருகத் துவங்கியவள் மனதில் ஒரு ஓரமாய் ‘ஒருவேளை ப்ரொபோஸ் பண்ணித் தொலைப்பானோ ? ஆகா அப்படி இருந்தா எப்படிச் சமாளிக்க போரேடி நந்து ?’ என்ற எண்ணமெழ பயத்தில் கால்கள் மெல்லியதாய் உத்தர துவங்கியது.

‘அய்யோ இப்போவே உதறுதே. இவன் வேற இப்படி முழிச்சு முழிச்சு பாக்குறானே’ நில்லாமல் கால்கள் நடுங்க.

ஆழ்ந்த மூச்சொன்றை வெளியேற்றிய கௌரவ்வோ “நந்து நான் உன்னை…உன்னை வந்து…லவ் ” முடிக்காமல் பதட்டமாய் மீதி இருந்த ஜூசை ஒரே மிடரில் முடித்தான்.

ஏனோ தன்னையறியாது “சாரி சீனியர் நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்பறேன்.” நந்தனா அவசரமாய் பதிலளிக்க.

முகம் சுருங்கிய கௌரவோ “பொய் சொல்லாதே உனக்கு ஆள் இல்லைன்னு மயூரா சொன்னா”

பதறிய நந்தனா “அய்யோ பொய்யில்ல உண்மைதான் சொல்றேன்”

அவனோ நம்புவதாக இல்லை கேலி குரலில் “அப்படியா. அவன் பேர் என்ன ? நம்ம காலேஜா ?”

தட்டுதடுமரியவளோ ‘அப்படி ஒருத்தன் இருந்தா தானே தெரியும்… யாரோ எவனோ?இப்படி பொசுக்குன்னு கேட்டா ?’ உள்ளே நடக்கும் கலவரம் வெளியே தெரியாமல் புன்னகைத்தவள் “அவர் பெயர்…பெயர்…”

” நிரஞ்சன் ! ” பின்னாலிருந்து தீர்க்கமாக ஒலித்தது ஒரு ஆண் குரல்.