Pokisha pezhai – 7

‘யாரந்த ஆளு?’ என்ற எண்ணத்தில் போன மூவரின் பார்வையைப் பார்த்த ரோமியோ, “எல்லாரும் என்ன பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.

“நீதான சொன்ன ‘யாரோ ஆளுன்னு’… அதான் பார்க்கிறோம்” – மைக்கேல்.

“ம்ப்ச், நான் சொல்ல வந்தது, அந்தப் பெரியவர் பத்தி”

“எந்தப் பெரியவர்?” – தனம்.

“லாட்ஜ்ல பார்த்தோமே அந்தப் பெரியவர்”

‘ச்சே’ என்று சொல்லி, அரண்டிருந்த மூவரும் எரிச்சல் கொண்டனர்.

“அவரைப் பத்தி இப்போ எதுக்கு யோசிக்கிற?” – மைக்கேல்.

“ம்ம்ம், நம்ம இவ்ளோ கஷ்டப்பட்டு புதையலை எடுத்திட்டு… அவருக்கு எதுக்கு பாதி கொடுக்கணும்?”

“இதேதான் நான் அங்கேயே கேட்டேன். அப்போ நீதான ஒத்துக்கிட்ட?” – தனம்.

“அப்போ இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நினைக்கலை”

“அவர் சொன்னார்ல ரோமியோ, ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் நிறைய ஆபத்து இருக்கும்னு” – மைக்கேல்.

“அது இருக்கட்டும். ஆனா அவருக்கு எதுக்கு பாதி கொடுக்கணும்?”

“எனக்கும் ரோமியோ சொல்றது கரெக்ட்டுன்னு தோணுது” – தனம்.

“ஆனா அவர்கிட்ட ‘ஓகே’ சொல்லியிருக்கீங்கள??” – ஸ்வீட் ஹார்ட்.

“ம்ம்ம், சிஸ்டர் கேட்கிறது கரெக்ட்” – மைக்கேல்.

உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணத்தில் கிடைக்கும் புதையலை, எந்த ஒரு உபயமும் செய்யாத ஒருவருக்கு கொடுக்க மனம் மறுத்தது.

“சரி, இப்போ இதைப் பத்தி யோசிக்க வேண்டாம். முதல வந்த வேலையைப் பார்க்கலாம்” – மைக்கேல்.

“அதுவும் சரிதான்” என்று சொல்லி, ரோமியோ எழுந்து கொண்டான்.

அவனது நிழல் போல, ஸ்வீட் ஹார்ட்டும் எழுந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் சென்றவுடன்…

தனம், “ரெடியா? தேடலாமா?” என்று மைக்கேலைப் பார்த்துக் கேட்டாள்.

“தனம்” என்று தயங்கினான்.

“என்ன?” என்றவள், எழுந்து கொண்டாள்.

அமைதியாக இருந்தான்.

“என்னாச்சு?”

“இல்லை. நியாயமா பார்த்தா, யாராவது ஒருத்தர்தான் தேடணும். அதனால…”

“ஓ! அதனால…”

“நீ தேடு… உன்னால முடியலைன்னா சொல்லு நான் தேடுறேன். ஆனா நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தான் தேடணும்”

சற்று யோசித்தாள். பின், “சரி விடு” என்று தோளைக் குலுக்கினாள்.

“தனம்”

“விடுன்னு சொல்றேன்ல. நான் பார்த்துகிறேன்”

மீண்டும் அமைதியாக இருந்தான்.

“அப்புறம், நீ எனக்கு ஹெல்ப் பண்ணலை. ஸோ நீ என்னைய லவ் பண்ணலைன்னு அர்த்தம். புரியுதா?”

“அதுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்? இப்படிப் பேசாத தனம்”

“அப்படித்தான் பேசுவேன்” என்று இரண்டு மூன்று முறை சொல்லியவாறு படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தாள்.

மற்றொரு புறம்…

வழமை போல் ஸ்வீட் ஹார்ட் அச்சம் கொண்டு நின்றாள்.

ரோமியோ தேடுவதற்கான யுக்தியை யோசிக்கத் தொடங்கினான். அது மட்டுமில்லாமல், அவனின் எண்ணத்தில் பெரியவர் யார்? என்ற சந்தேகமும் வலுக்க ஆரம்பித்துவிட்டது. இதில் காதலியின் அச்சத்தை அறிந்துகொள்ளவே இல்லை.

“ரோமியோ” என்று இருமுறை அழைத்தாள்.

மூன்றாவது முறையாக அழைத்த பின்னர், “சொல்லு ஸ்வீட் ஹார்ட்” என்றான்.

“என்ன யோசிக்கிற?”

“ஒண்ணுமில்லை”

“ரோமியோ”

“பயமா இருக்கா?”

“ம்ம்ம், தேடாமா இருக்க முடியாதா?”

“அதெப்படி! இவ்ளோ தூரம் வந்திட்டு தேடாம இருந்தா எப்படி?”

“தண்ணிக்குள்ள தேடறத நினைச்சா பயமா இருக்கு ரோமியோ”

“உன் கண்ணு முன்னாடிதான தேடப் போறேன். பயப்படாதே”

“நெக்ஸ்ட் ஸ்டேஜ்ல தேடேன். இதுல வேண்டாமே”

“அங்க எப்படி எப்படி இருக்கோ? அதோட, இதுதான் லாஸ்ட் ஸ்டேஜ்னா என்ன பண்ண?”

“அப்போ ஒரு சின்ன ரெக்வஸ்ட்”

“ரெக்வஸ்ட்டா? ஸ்வீட் ஹார்ட் என்னன்னு சொல்லு செய்றேன்”

“தண்ணீ ரெண்டாவது படிக்கட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடி, நான் உன்னைய கூப்பிடுவேன். அப்போ வந்திடனும்”

‘அதெப்படி ஸ்வீட் ஹார்ட்?’ என்பது போன்ற சங்கடப் பார்வைகள் பார்த்தான்.

“இதுக்கு மட்டும் ஓத்துக்கோ. ப்ளீஸ் அதுக்கு மேல ரிஸ்க் எடுக்காத. என்னால பார்க்க முடியாது”

காதலுக்கு என்னவாகுமோ என்ற கிலி கொண்டு, காதலனுக்கு வலித்து விடுமோ என்ற பயம் கொண்டு, காதல் மொழிகளால் காதலி புலம்ப ஆரம்பித்தாள்.

கடைசியில், “சரி” என்று காதலன் ஒத்துக் கொண்டான்.

*****
சற்று நேரத்தில் தேடலுக்குத் தயாரானார்கள்.

மைக்கேலும் ஸ்வீட் ஹார்ட்டும் மேல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

ரோமியோவும், தனமும் கீழ் படியினில் நின்றார்கள். ஆனால் ரோமியோ ஒரு புறம் என்றால், தனம் மற்றொரு புறம் என்று பிரிந்து நின்றார்கள். நான்கு திசையிலும் அணைக்கட்டு போன்று இருந்த கருமை நிற படிக்கட்டுகள். நடுவில், சுற்றியிருந்த நிறத்திற்கு முற்றிலும் மாறாக பச்சையும் நீலமும் இணைந்த நிறத்தில் இருந்த நீர்நிலை.

இருவரும் ஒரே நொடியில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு உள்ளே குதித்தார்கள். அவர்கள் குதித்த விசைக்கு எதிர்வினையாக, நாலாபக்கமும் நீர்த்திவலைகள் சிதறின.

நீருக்கடியில்…

எங்கேயோ இழுத்துச் செல்லும் அளவிற்கு ஆழம் இருந்தது. நீரின் அடிப்பரப்பு இள மணல் நிறைந்த பகுதியாக இருந்தது. அதன் மேல் ஆங்காங்கே சிப்பிகள்!

சிப்பிகள் முழுதும் வெள்ளை நிறத்தில் இருந்தன. அதன் மேல் கருமை வண்ணத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

நீருக்கடியில் தேடுவது என்பது சிரமமாக இருந்தது.

தனம், தான் குதித்திருந்த பக்கத்தில் காலூன்றி நிற்கப் பார்த்தாள். இயலவில்லை. எனவே நீருக்குள் மிதந்தவாறே, அந்த மணல் பரப்பில் கிடந்த சிப்பிகளைப் பார்த்தாள். கடகடவென கையில் நான்கு சிப்பிகளை அள்ளிக் கொண்டவள், திறந்து பார்க்க ஆரம்பித்தாள். தேடி முடித்த சிப்பிகளையெல்லாம் ஒரு ஓரத்தில் தூக்கிப் போட்டாள்.

இதேதான் ரோமியோவும் செய்து கொண்டிருந்தான்.

ஒரு இருபது இருபத்தைந்து சிப்பிகளைத் திறந்து பார்த்திருக்கும் சமயத்தில், தடாகத்தின் நீர் மட்டம் ஒரு படிக்கட்டு அளவு உயர்ந்தது. அதேபோல், நீருக்கடியில் இருந்த சிப்பியின் எண்ணிக்கை மந்திரம் போட்டது போல் இரு மடங்கானது. நீரின் அளவு அதிகமானதால் நிகழ்ந்த அதிர்வில், சிப்பிகள் கலந்து விடப்பட்டன.

தேடியவர்களுக்கு ‘ஐயோ’ என்றிருந்தது. எனினும் மீண்டும் தேடத் துவங்கினார்கள்.

மேலே படிக்கட்டில்…

ஸ்வீட் ஹார்ட்டும், மைக்கேலும்…

“ப்ரோ” என ஆரம்பித்தாள்.

“பயப்படாதீங்க சிஸ்டர், ரெண்டு பேருக்கு எதுவும் ஆகாது”

“இல்லை… இல்லை… நான் அதுக்காக கூப்பிடலை. நடந்து வர்றப்போ, நீங்க தேடப் போறீங்கன்னு ரோமியோ சொன்னான். அதான், போகலையா?”

“இல்லை சிஸ்டர். நானும் தனமும் சேர்ந்து தேடினா… ம்ம்ம் நியாயமா இருக்காதில்லையா? அதான் தேடப் போகலை”

“ஓ! நீங்களும் என்னை மாதிரி நியாமா இருக்கணும்னு நினைப்பீங்களா?”

“ம்ம்ம் ஆமா சிஸ்டர். ஆனா, நான் ரோமியோவுக்கு சப்போர்ட் பண்ணறேன்னு தனம் நினைக்கிறா”

“ரோமியோவும் அப்படித்தான். நியாமா பேசினா, ‘நீ அவளுக்குச் சப்போர்ட் பண்ணாதான்னு’ சொல்லுவான்”

“தேடறது ரொம்பக் கஸ்டம்ல, அந்த டென்ஷன்ல ஏதாவது சொல்லுவாங்க. அதெல்லாம் கண்டுக்காதீங்க”

“ம்ம்ம்… ஓகே ப்ரோ”

இப்படிப் பேசிக் கொண்டே பொழுதைத் கடத்தினர்.

நீருக்கடியில்…

கண், மூக்கு, காது மற்றும் வாய் என நான்கு புலன்களுக்குள்ளும் செல்லும் உப்பு நீரின் விளைவால் தேடுதல் என்பது கடினமாக இருந்தது. அதேசமயம் மூச்சை அடக்கிப் பிடித்து தேடுவது சிரமம் தந்தது.

எனவே சற்று நேர சீரான மூச்சிற்காக நீரிலிருந்து வெளியே வருவதும், பின் உள்ளே செல்வதுமாக இருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில், நீரின் அளவும், சிப்பியின் எண்ணிக்கையும் அதிகரிப்பது நடந்து கொண்டே இருந்தது.

சிப்பிகளைத் திறந்து பார்த்து பார்த்து நகக்கண் வலிகொண்டது. உப்பு நீரானது, உடலின் புறத்தோலை புண்ணாக்கியது.

நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வந்தது. இன்னும் இரண்டு படி உயர்ந்தால், மேல் படிக்கட்டை நீர் மட்டம் தொட்டுவிடும் என்ற நிலையில், ஸ்வீட் ஹார்ட் எழுந்தாள்.

“ரோமியோ ரோமியோ” என்று கூச்சலிட்டாள்.

“அவன் தேடட்டும் சிஸ்டர்” என்று சொன்ன மைக்கேலை கண்டு கொள்ளவேயில்லை.

“ரோமியோ… போதும் வா” என்று கத்தினாள்.

காதலியின் குரல் கேட்டு, வெளியே தலை நீட்டினான்.

“என்ன ஸ்வீட் ஹார்ட்?”

“போதும் வா. பயமா இருக்கு”

சுற்றிப் பார்த்தான், தண்ணீர் நிரம்பி வழியப் போகும் நிலையில் தடாகம் இருந்தது. அவளுக்கு வாக்கு கொடுத்திருப்பதால், தேடுதலை முடித்துக்கொண்டு நீந்தியபடியே வந்து, படிக்கட்டைப் பிடித்து, மேலேறினான்.

ஸ்வீட் ஹார்ட்டிற்கு ‘அப்பாடி’ என்றிருந்தது. அவனுக்கு துடைப்பதற்கு துண்டு கொடுத்தாள்.

இப்போது தனியாகத் தேடும் தனத்தை எண்ணி, மைக்கேலுக்கு பயம் அதிகமாகியது. “தனம் தனம்” என்று அழைத்துப் பார்த்தான்.

வெளியே தலை நீட்டியவள், ரோமியோ நிற்பதை பார்த்தாள். ‘இவன் இப்பவும் காயின எடுத்திட்டானா?’ என்ற கேள்விதான் நினைவில் முதலில் வந்தது.

“தனம் போதும் வா”

“ஏன்? அவன் காயினை எடுத்திட்டானா?”

“இல்லை. இன்னும் ரெண்டு படிதான் இருக்கு. அதான் சொல்றேன் வந்திடு”

“நீயும் தேட மாட்ட. தேடுறவங்களையும் தேட விடமாட்டியா?” என்று பற்களைக் கடித்துக் கேட்டுக் கொண்டே, முங்கு நீச்சல் செய்து நீருக்குள் சென்றாள்.

அடுத்த நொடி, நீர்மட்டம் மேலும் ஒரு படி உயர்ந்தது.

நீருக்கு மேலே…

மைக்கேல் எழுந்து விட்டான். கண்கள் கலங்க, “தனம் போதும் வந்திரு” என்று கண்களில் கண்ணீர் நிறைய, காதலில் கரைய ஆரம்பித்தான்.

ஸ்வீட் ஹார்ட்டும், “சிஸ்டர் வந்திடுங்க ப்ளீஸ்” என்று மன்றாடினாள்.

ரோமியோவின் முகம் கூட, தனத்தை நினைத்துப் பயத்தை வெளிப்படுத்தியது.

நீருக்கு அடியில்…

இன்னும் இன்னும் வேகமாகத் தேடினாள். நகக் கண்ணின் வலியெல்லாம் துச்சமாக எண்ணித் தேடினாள். இப்படித்தான் வலிக்க வேண்டும் என்று இல்லாமல், இஷ்டத்திற்கு வலிக்கும் வலியை மறந்து தேடினாள். கண்களும் மூளையும் எது புதிதாய் வந்த சிப்பிகள் என்று ஒரு கணக்கு வைத்துக் கொண்டு தேடினாள்.

சற்று நொடிகளில்…
நீர் மட்டம் முதற் படியைத் தொடும் நேரத்தில், ரோமியோ எந்தப் பக்கம் தேடினானோ, அப்பக்கத்தின் படியைப் பிடித்தெழுந்து மேலே வந்தாள். நன்றாக நனைந்திருந்தாள்.

மூன்று பேரும் திகைத்துப் பார்த்திருந்தனர்.

“ரொம்ப பயந்திட்டோம் சிஸ்டர்” – ஸ்வீட் ஹார்ட்.

தனத்திடமிருந்து, ‘அப்படியா?’ என்பது போல் ஒரு பார்வை.

“வெளில இருந்து மைக்கேல் கத்தினது கேட்கலையா?” – ரோமியோ.

“எதுக்கு கத்தினான்?”

“எதுக்கா? அங்க பாரு, அவன் எப்படி கலங்கி நிக்கிறான்னு” என்று மைக்கேலைக் காட்டினான்.

“காயின் எடுக்கலைன்னா எல்லாரும் அப்படித்தான் நின்றுப்போம்” என்று நகர ஆரம்பித்தவளிடம்,

“நீ காயினை எடுத்திட்டியா?”

“ஆமா” என்று நகராமல் நின்றாள்.

எதுவும் சொல்லாமல், தன்னிடம் இருந்த புத்தகத்தை எடுத்து தனத்திடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

வாங்கிக் கொண்டவள், மைக்கேலை நோக்கிச் சென்றாள்.

*****

மைக்கேல் முன்னால் வந்து நின்றவள், ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“ஏன் தனம்?” என்று கண்ணீர் வடித்தான்.

“என்ன ஏன் தனம்? இப்போ எதுக்கு இந்தக் கண்ணீர்”

“உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்திட்டேன்”

“அவ்வளவு பயப்பிடறவன் என் கூட சேர்ந்து தேடியிருக்கணும்”

மைக்கேல் தலைகுனிந்து நின்றான். அவனின் கலங்கிய கண்கள், கரிசன வார்த்தைகள்… லேசாக அவளைக் கரையச் செய்தது.

ஆதலால், “உண்மையிலே என்மேல லவ்னா… என்னோட தேவை என்னன்னு பார்த்து ஹெல்ப் செஞ்சிருப்ப” என்றாள்.

“இப்போ என்ன தேவை?”

“பாரு எப்படி நனைஞ்சிருக்கேன்னு? ஒரு டவல் எடுத்துத் தரலாம். இவ்வளவு நேரம் தேடினதுல பசிக்குது, இருக்கிற கொஞ்ச சாப்பாட எடுத்து தரலாம்”

இப்படிச் சொல்லிவிட்டு நாணயத்தை எடுத்து ஆராய ஆரம்பித்தாள். அப்பொழுது அவளது முகத்தின் முன்னே துண்டு நீட்டப்பட்டது.

“என்ன?” – தனம்.

“இப்போ உன்னோட தேவை இதான??”

“மைக்கேலு லவ்ல டயமிங் ரொம்ப முக்கியம்”

“அது காமெடிலதான சொல்லுவாங்க” என்று அப்பாவியாக கேட்டான்.

“இல்லை. லவ்வுக்கும்தான்” என்று அடாவடி செய்தாள்.

“இப்போ என்ன? நான் ஹெல்ப் பண்ணாலும், அது லவ் இல்லை? அதான?”

‘ஆமாம்’ எனத் தலையாட்டி முறுவல் செய்தாள்.

கண்கள் லேசாகக் கலங்கி இருந்தாலும், மைக்கேல் சிரித்தான். மேலும் துண்டை அவளிடம் நீட்டி, “தொடச்சிக்கோ. ரொம்ப நேரம் ஈரமா நிக்காத” என்று அக்கறையுடன் சொன்னான்.

இதற்கு முன்பும், இதுபோல் மைக்கேல் அக்கறையாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் இன்று அவனின் இந்த அக்கறை, அவளுள் சக்கரையாக இனித்தது.

அத்தை மகனின் அணைகட்டிடா அன்பு மேல், ஒரு சிறு ஆசை வந்தது, தனத்திற்கு!

*****

ரோமியோவும் ஸ்வீட் ஹார்ட்டும்…

இம்முறை, இருவருமே சோகமாக இருந்தனர்.

ரோமியோவுக்கு இன்னும் சற்று நேரம் தேடி இருந்தால், தனக்குத்தான் நாணயம் கிடைத்திருக்கும் என்ற எண்ணம் வலுத்திருந்தது. காரணம், கடைசியில் தனம் நாணயம் எடுத்து வந்தது, தான் தேடிய பகுதியில் இருந்ததால்.

ஸ்வீட் ஹார்ட், தான் அழைத்ததினால்தான், ரோமியோ மேலே வந்தானோ? இன்னும் சற்று நேரம் தேட விட்டிருக்கலாமோ? என்ற எண்ணங்கள்!

“ஸாரி ரோமியோ”

“எதுக்கு?”

“என்னாலதான காயின் எடுக்க முடியாம போயிடுச்சி”

“ஹே ஸ்வீட் ஹார்ட் அப்படியெல்லாம் இல்லை”

“இல்லை. அப்படித்தான்”

ரோமியோ எதுவும் சொல்லவில்லை. திரும்பவும் மௌனமாக இருந்தனர். காதல் கண்ணாடியில் கீறல் விழும் சத்தம், காதலன் ரோமியோவிற்கு கேட்டது. ஸ்வீட் ஹார்ட்டைப் பார்த்தான். அவளது இதயத்தின் திண்டாட்டம், கண்களில் தெரிந்தது.

காட்டுக்குள் வந்த பின், வீட்டுக்குள் கொண்டாடிய காதலைக் கொண்டாட வில்லையோ என்ற சந்தேகம், ரோமியோவிற்கு வந்தது.

திண்டாடும் காதலைக் கொண்டாட எண்ணி, “ஸ்வீட் ஹார்ட்” என்று தேனைத் தோற்கடிக்கும் தித்திக்கும் குரலில் அழைத்தான்.

“என்ன ரோமியோ?”

“நம்ம லவ்வ செலிப்ரேட் பண்ணி ரொம்ப நாளாச்சு. அதான் இந்தமாதிரி… ” என்று பாதியிலே நிறுத்தினாள்.

புரியாமல் விழிகள் விழித்தாள், இதழைச் சுழித்தாள்.

“கம் ஆன்! லெட்ஸ் செலிபிரேட் அவர் பிரெஷ் லவ்” என்று இரு கைகளையும் காற்றில் விரித்தபடி கூறினான்.

நிறமில்லா அந்த பூமி எங்கும், நிறமாகத் தோன்றும் அளவிற்கு வெட்கப்பட்டாள்.

காதலி இதழ்களில் காதலைக் கொண்டாடி, அவளது திண்டாடிடும் இதயத்தைத் தித்திக்கச் செய்தான், காதலன் ரோமியோ.

இந்த ரோமியோ ஒரு இதழ் கொண்டாட்டக்காரன்!

“ம்ம்க்கும்” என்று செருமும் சத்தம் கேட்ட பின்னரே, இருவரும் நிகழ்கணம் உணர்ந்தனர்.

கணவன் மனைவி இருவரும் வெட்கம் கொண்டு தலை கவிழ்ந்து நின்று, முகிழ்நகை புரிந்தனர்.

மைக்கேலும் தனமும், அவர்கள் இருவரையும் கடந்து நடக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் கடந்த பின்,

“நாம இவங்க இருக்கிறத மறந்திட்டோம்ல?” என்று கண் சுருக்கிக் கேள்வியாகக் கேட்டாள், காதலி.

“இனி அடிக்கடி மறந்திடுவோம் ஸ்வீட் ஹார்ட்” என்று கண் சிமிட்டிப் பதில் சொன்னான், காதலன்.

அவனது பேச்சால், அநியாயத்திற்கு வெட்கப்பட்டாள். பின் அவனிடமே சரணடைந்தாள்.

காதலியை அணைத்துக் கொண்டே “நெக்ஸ்ட் எங்க போகணும்னு புக்ல பார்க்கலையா?” என்று கேட்டான் ரோமியோ.

“அதெல்லாம் பார்த்தாச்சு” என்று சொல்லி, தனம் நிற்காமல் சென்றாள்.

“எங்க?”

“ஆச்சிரியம் ஒன்று காத்திருக்கிறது!
அடுத்த கல் நாணயம் புல்வெளி நிலத்தில்”

‘என்ன ஆச்சிரியம்?’ என்று ரோமியோ யோசிக்கத் தொடங்கினான்.

*****
காதலுக்கான வேளை முடிந்து, கால்களுக்கான வேலை ஆரம்பித்தது. பாதங்கள் தேயத் தேய நடந்தார்கள். வரைமுறை இன்றி வலிக்க வலிக்க வழிகளைக் கடந்தார்கள்.

நாடித்துடிப்பை நார்நாராய் கிழித்திடும் நாழிகைகள் கழிந்த பின்னர், பாதைகளில் மாற்றம் வந்தது. விதவிதமான வண்ணங்களில், நீல் வட்ட வடிவில் கூழாங்கற்கள். வழிகள் முழுவதும் ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் நிறைந்திருந்தது. அந்தப் பாதையின் இரு ஓரங்களிலும் சாம்பல் நிற புற்கள். ஒவ்வொரு புல்லின் நுனியிலும் ஆரஞ்சு வர்ணத்தில் ஒரு சிறிய பூ இருந்தது. அந்தப் பூக்கள் அனைத்தும் மின்னின.

அந்தப் பரப்பெங்கும் சாம்பல் நிற ஒளிக்கற்றைகள் ஊடுருவி வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் அப்பாதையில் மனிதக் கால்தடம் பட்டால் என்னவாகும் என்ற பயம் இருந்தது.

ரோமியோதான் முதலில் அடி எடுத்து வைத்தான். அனைவரையும் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறிது தூரம் நடந்து பார்த்தான். ஏதும்மாற்றம் இல்லை. சைகை செய்து, மற்ற மூவரையும் அழைத்தான்.

சற்று நேரம் நடந்தனர். இம்முறை நடப்பதைச் சந்தோஷமாகச் செய்தனர். காரணம், கூழாங்கற்களில் நடப்பது களைப்படைந்த கால்களுக்கு, மசாஜ் செய்து விட்டது போல் இருந்தது.

பாதைகள் வளைந்து வளைந்து சென்றது. சாம்பல் நிற ஒளி அழுது வடிந்தாலும், இரு ஓரங்களிலும் இருந்த புற்களில் நுனியில் இருந்த ஆரஞ்சு வர்ண சின்னஞ் சிறிய பூக்களின் பளிச்சென்ற ஒளி அழகாக இருந்தன.

கொஞ்ச நேரத்துக்குப்பின் ரோமியோவும் தனமும் அமர்ந்து விட்டனர். முந்தைய தேடல்களின் விளைவாக மிகவும் சோர்வடைந்து தெரிந்தனர்.

“என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்?” – மைக்கேல்.

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் வேணும் மைக்கேல்” – ரோமியோ.

“எனக்கும்தான்” – தனம்.

“சரி நீங்க உட்கார்ந்து இருங்க. நான் போய் பார்த்திட்டு வரேன்” என்று மைக்கேல் வளைவுகளில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

மூவரும் ஓய்வெடுத்தனர்.

திடீரென்று ஸ்வீட் ஹார்ட், “அங்க பாருங்க” என்று ஆகாயமோ உயரமோ, ஏதோ ஒன்றை நோக்கிக் கை காட்டினாள்.

அங்கேயும் இங்குள்ளது போல ஆரஞ்சு நிறத்தில் சிறுசிறு வெளிச்சங்கள். ஆனால் வேறெதுவும் சரியாகத் தெரியவில்லை. அவ்விடம் இருள் பரவியிருந்தது.

ரோமியோ மற்றும் தனம்… இருவருக்கும், ‘அங்கேதான் போக வேண்டுமா? ஆனால் எப்படி அங்கு சென்றடைய?’ என்ற மலைப்பான எண்ணங்கள்.

மூன்று பேரும் எழுந்து விட்டார்கள். மைக்கேல் திரும்பிய வளைவினில் திரும்பி நடையைத் தொடர்ந்தார்கள்.

இரு பெண்களின் பார்வையும் பாதையில் இல்லை. உயரத்தில் புள்ளிகளாய் தெரியும் வெளிச்சத்தின் மேல்தான்.

தீடீரென்று ரோமியோ, “யாரந்த பொண்ணு?” என்று கேட்டான்.

‘இதே வேலையா போச்சு இவனுக்கு?’ என்று நினைத்த தனம், “எங்க நம்ம ஊர்ல பார்த்தியா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

ஸ்வீட் ஹார்ட்டும் சிரித்தாள்.

மறுப்பாகாகத் தலையை அசைத்தவன், “இல்லை. மைக்கேலோட பேசிக்கிட்டு இருக்கிற பொண்ணு” என்று அரண்ட குரலில், தூரத்தில் நின்ற மைக்கேலைக் கை காட்டினான்.

இரு பெண்களும், அவன் கை காட்டிய திசையில் பார்த்தனர். அங்கே மைக்கேலின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.

தனம், ‘இந்தப் பெண், தன் சிறிய ஆசையின் பெரிய இம்சையோ?’ என நினைக்க ஆரம்பித்தாள்.