மேஜிக் 12
நந்தனா அன்று நடந்தவற்றைப் பெற்றோரிடம் இரவு உணவின் பொழுது சொல்ல, கண்ணனும் சரஸ்வதியும் “ என்னமா இது இப்படிலாமா பண்ணுவாங்க? பெரியவங்க கிட்ட ஒருவார்த்தை சொல்லக் கூடாதா ? ஏதான ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா அப்புறம் என்ன பண்ண முடியும்?” என்று பதறி விட,
ஸ்ரீராமோ “அப்பாடா இந்த உலகத்துல உன்னை பேயின்னு சரியா கண்டுபிடிச்ச உன் பிரெண்ட்ஸ் இரண்டு பேரும் பெரிய புத்திசாலிதான். நாளைக்கு வரச்சொல்லி அவங்களை தடபுடலா ட்ரீட் தரணும் ”
“அடேய் நான் பேயா ? பேயா? ” நந்தனா கையில் ஸ்பூனை வைத்துக்கொண்டு மிரட்ட “ஆமா இல்லையா பின்ன, இத்தனை வருஷமா நான் உனக்கு அண்ணனா படுற கஷ்டம் யாருக்கு தெரியுது? எனக்கு பின்னாடி பிறந்த குரங்குக்கெல்லாம் லவ்வர், ஆளுன்னு இருக்கு நான் தான் இப்படி வெட்டியா சுத்துறேன். ஹ்ம்ம் எல்லாம் என் நேரம்” ஸ்ரீராம் போலியாய் அலுத்துக்கொண்டான்.
“உனக்கேத்த வரன் நான் பார்த்து வச்சுருக்கேன். நீ ம்ம் ன்னு ஒரு வார்த்தை சொல்லு உடனே பேசி முடிச்சிடலாம் பா” கண்ணன் சொல்ல
“ஆஹா ஒரு பேச்சுக்கு சொன்னா, என்னை சம்சார சாகரத்தில் பிடிச்சுதள்ள தயாரா இருக்கீங்க போல இருக்கே. எனக்கு கல்யாணம் கத்திரிக்காய் ரெண்டுமே பிடிக்காது.நான் இப்படியே இருக்கேன். ஆளை விடுங்க சாமி” புன்னகைத்தபடி சொல்லிச் சென்றுவிட, பெற்றோர்கள் இருவரும் முகம் வாடியதைக் கண்ட நந்தனா.
“மா… பா…அவனுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா, நேரம் வரும்போது அவளே வந்து இவன் காதை பிடிச்சு திருகி கட்டுடா தாலியைன்னு சொல்லப்போறா, இவனும் பும் பும் மாடு மாதிரி அவ சொன்ன படி ஆடப்போறான். இதுக்கெல்லாம் சோக கீதம் வாசிச்சுகிட்டு…தூங்குங்க போங்க. கூட்நைட்”
***
அன்றுடன் நிரஞ்சன் அவளைத் தொடர்பு கொண்டு பேசி ஒரு வாரம் ஓடி இருந்தது.
மனதில் சொல்லத் தெரியாத பாரம் கூட , தானே அவனைத் தொடர்பு கொண்டாள் நந்தனா.
ஃபோனை எடுத்து ஒரு பெண் “ஹலோ எஸ்”
“சார் இருக்காரா? நான் நந்தனா பேசறேன்”
“ஹாய் நான் வைஷாலிதான் பேசறேன். எப்படி இருகே பா” மிகவும் அன்பான குரலில் அவள் கேட்க ஏனோ நந்தனாவிற்க்கு சங்கடமாக இருந்தது.
“ஹாய். எப்படி இருக்கீங்க. சாரி நான் அவர்கிட்ட பேச…”
“நிரஞ்சன் ஒரு ஆபரேஷன்ல இருக்கான். அவசர கால் வந்தா என்னை அட்டெண்ட் பண்ண சொல்லிட்டு போனான். எதாண அவசர விஷயம் இருந்தா சொல்லுப்பா நான் அவன் கிட்ட சொல்லிடறேன்”
வைஷாலி குரலில் இம்மியும் மாறுதல் இல்லை
‘என்னனு சொல்லுவேன் குரலை கேட்கணும் போல இருக்குன்னு சொல்லவா முடியும் ‘
“சும்மா தான் ஃபோன் பண்ணேன். விஷயம் ஒண்ணுமில்ல. அப்போ நான் வச்சுடவா?” பதற்றம் நிறைந்த குரலில் பதிலளித்து கண்களை மூடிக்கொண்டாள் நந்தனா.
“ஓகே தென். பை ”
“பை”
கோவமாகத் தலையணையை அடித்தவள் ‘ஃபோனை ஒன்னு ஆஃப் பண்ணு இல்ல நீயே வச்சிக்கோ எதுக்கு வைஷ கிட்ட கொடுத்தே ? அவ என்ன உனக்கு பியேவா? ‘
‘அவன் ஃபோன் அவன் யார் கிட்ட வேனா கொடுப்பான் உனக்கென்ன ‘
‘அதெப்படி கொடுப்பான் அதுவும் அவகிட்ட ‘
‘மேடம் அது அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. மறந்து போச்சா?’
மனம் தன்னுடனே வாதாடக் கோபமாய் தலையணையைத் தூக்கி எறிந்து மெத்தையில் முகம் புதைத்தாள்.
இரவு உணவு வேண்டாமென்று சொன்னவள் உறக்கம் பிடிக்காமல் அண்ணன் அறையைத் தட்டினாள்.
“ ராம் எனக்கு தூக்கமே வரலை. விளையாடலாமா ?”
கண்களைக் கசக்கியபடி கடிகாரத்தைப் பார்த்தவன் சிரித்தபடி “லூசாடி நீ ? மணி பதினொன்னு. அர்த்த ராத்திரயில வந்து விளையாட கூப்பிடுற”
“ப்ளீஸ் டா! ஒரு கேம்”
“ஹே படுத்தாம ஓடிரு”
அவன் சட்டை நுனியைப் பற்றிக் கொண்டவள் “ப்ளீஸ்… ப்ளீஸ் ….ப்ளீஸ்…” என்று கெஞ்ச
“வந்து தொலை! என்ன விளையாடனும்? “
“ கேரம் போர்டு?”
“ராத்திரி சத்தம் வரும். கார்டஸ்ட் விளையாடலாமா ? ஒரே ஒரு ரவுண்டு எனக்கு தூக்கம் வருது சரியா?” கண்ணை மீண்டும் கசக்கிக் கொண்டு அவன் சொல்ல
“ம்ம் “ என்று தலையாட்டியவள் , தன் அறைக்குச்சென்று சீட்டுக் கட்டினை கொண்டு வந்தாள்.
அவர்கள் ஆட துவங்கி முழுதாய் 2 நிமிடம் ஆகவில்லை , நந்தனாவின் கைப்பேசி வைப்ரேட் ஆக அதை எடுத்துப் பார்த்தவள் , நிரஞ்சன் வாட்ஸாப்ப் செய்திருந்தான்.
“ ராம் எனக்குத் தூக்கம் வருது நாளைக்கு விளையாடலாமா?”
“அடியே தூங்குறவன எழுப்பி விளையாட சொல்லிப்புட்டு, ஒழுங்கா ஒரு ரவுண்டு விளையாடி முடிச்சுட்டுபோ! ”
“லூசாடா நீ ? யாரான ராத்திரி கார்ட்ஸ் விளையாடுவாங்களா? சின்னப் புள்ள தனமால்ல இருக்கு!” அவனைக் கேலி பேசியவள் அவன் அடிக்க வரவும் ஓடிச்சென்று தன் அறையில் தாளிட்டு கொண்டாள்.
சிரித்துக்கொண்ட ஸ்ரீராம் கதவின் வழியே “எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதேமா. எல்லாம் யாம் அறிவோம். மொபைல் சவுண்ட் கேட்டதும் நீ ஓடினது தெரியாத மடையன் இல்லடி நானு.” சிரித்தபடியே தன அறைக்குத் திரும்பிவிட்டான்.
கதவின் மறுபுறம் சாய்ந்து நின்றிருந்தவளோ ‘அவ்ளோ சத்தமாவா கேக்குது?’ வெட்க புன்னகையுடன் கைப்பேசியால் நெற்றியில் தட்டிக் கொண்டாள்.
‘லூசு லூசு அவன் எதோ தூக்க கலக்கத்துல இருக்கறதால சிரிச்சுட்டு போறான். இது மட்டும் கார்த்தாலயா இருக்கட்டும் மவளே வச்சு செஞ்சுருப்பான்’
அவன் மெஸேஜை பார்த்தபடி கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
“ஹாய் சாரி தூங்கிட்டியா பேபி ? நீ கால் பண்ணதா வைஷு சொன்னா. என்ன விஷயம். எதாவது அவசரமா ?”
‘வைஷுவாம் வைஷு’ தனக்குள்ளே பழித்தவள்
“ஹாய் தூங்கலை. நீங்க தூங்கலையா?” என்று பதில் அனுப்பினாள்.
நொடியும் தாமதிக்காமல் பதில் வந்தது
“என்ன விஷயம் ? எதுக்கு கால் பண்ணே ?”
‘ஆஹா என்னன்னு சொல்லுவேன்? சும்மா கூப்பிட்டதா சொல்லவும் முடியாது, குரலைக் கேட்க கூப்பிட்டேன்னா கேவலமா நினைப்பான். ஐயோ நந்து ஒரு காரணமும் தோணலையே’ அவள் மனதுள் போராடிக் கொண்டிருக்கும் பொழுதே நிரஞ்சன் கால் செய்துவிட்டான்.
அவன் குரலைக் கேட்கும் ஆவல் மேலோங்க உடனே அழைப்பை ஏற்றாள்.
“பேபி சொல்லுமா என்ன விஷயம் ?”
“அது… மறந்துபோச்சு யோசிச்சு சொல்றேன்”
“சரி அப்போ வைக்கிறேன். எப்போ ஞாபகம் வருதோ மெஸேஜ் பண்ணு. குட்நைட் !” அவன் அழைப்பைத் துண்டிக்கப் போக
“ஒரு நிமிஷம்…”
“சொல்லுமா”
“நீங்க ஏன் ஒரு வாரமா என்னக்கு ஃபோன் பண்ணலை?”
‘ஐயோ உளறிட்டேனே!’
“நான் ஃபோன் பண்ணுவேன்னு எதிர்பார்த்தியா?”
‘ஆஹா இப்படி கேட்டா என்னண்ணு சொல்லுவேன்?’
“அன்னிக்கி எதோ உதவின்னு கேடீங்க, அப்புறம் ஒன்னுமே கேட்கலையே அதான் கேட்கலாம்னு”
“ நீ யோசிச்சு சொல்றேன்னு சொன்னியே, அதுக்கு அப்புறம் நான் எப்படி உனக்கு ஃபோன் பண்ணி தொல்லை பண்ண முடியும்?”
‘நீ என்ன அவ்வளவு நல்லவனா?’
“ஓஹோ”
“சரி நீ எப்போ முடிவு பன்றியோ அப்போ சொல்லு. நான் கெளம்பனும்.”
“எங்க கிளம்பனும்?”
“வீட்டுக்கு”
“இப்போவா? மணி 11 மேல ஆகுதே இன்னுமா ஹாஸ்பிடல்ல இருக்கீங்க?”
“நேரம் பார்த்தலாம் வேலை செய்ய முடியாதும்மா, தேவைன்னா ஓவர்நயிட் (இரவு முழுவதும்) இருக்க வேண்டியிருக்கும். ஆமா நீ ஏன் இன்னும் தூங்கலை? நாளைக்கு காலேஜ் போக வேண்டாமா?”
“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை !”
“ஓஹ் மறந்தே போச்சுமா சாரி”
“பரவாயில்லை, அப்புறம் ?”
“சொல்லுமா”
‘அது தெரிஞ்சா நானே சொல்ல மாட்டேனா ?’
“…”
“அவசரமா எதுவுமில்லைனா நான் வைக்கவா ? வீட்டுக்கு கிளம்பனும் “
“சரி குட்நயிட்”
“குட் நயிட்”
***
நந்தனாவும் காஞ்சனாவும் கோவில் பிரகாரத்தைச் சுற்றிவந்து ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“நந்து?” குரல் கொடுத்தபடி வந்தவளைப் பார்த்த நந்தனா
“ஹாய்! நிவேதா எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?”
“ஃபைன். வாங்க உட்காருங்க.” நிவேதாவிற்கு இடம்விட்டு அமர்ந்து கொண்டவள். காஞ்சாவிடம் நிவேதாவை அறிமுகம் செய்துவைத்தாள்.
“அன்னிக்கி நீ வந்துட்டு போனப்புறம், அம்மா எங்க ரெண்டு பேரையும் ஒரே திட்டு. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லி இருந்தா அவங்க உன்னை பார்த்து இருப்பாங்களாம்”
“சாரி அன்னிக்கி லேட் ஆகிப்போச்சு அதான்… இன்னொரு நாள் நான் வந்து பாக்கறேன். அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?”
“அவங்க ஒகே! அடுத்த நாளே டியூட்டிக்கு போயாச்சு. இப்போ அடுத்து என்ன பிளான்? “
“வீட்டுக்குத் தான்! “ காஞ்சனா பதிலளிக்க
“அப்போ வீட்டுக்கு வாங்களேன். அம்மா சந்தோஷ பாடுவாங்க”
‘ஆஹா வேணாம் அன்னிக்கி அப்பாகிட்ட உளறினதுக்கே வாங்கி கட்டிகிட்டேன். இப்போ அம்மாகிட்ட ஏதாவது சொல்லி? வேணாம் வம்பே வேணாம்!’ வேண்டாமென்று நந்தனா சொல்லும் முன்பே,
“ஓஹ் அதுனால என்ன? தாராளமா வரோம்.” காஞ்சனா பதில்தர திகைத்த நந்தனா
‘எனக்குன்னு வருவியோ? என்னடா எதோ வாழ்க்கை சீரா போகுதேன்னு நெனச்சேன்…ஆரம்பிச்சுட்டே போ’
“அத்தை! அம்மா அப்பா கிட்ட சொல்லாம எப்படி? அது நல்லா இருக்காதே? இன்னொரு நாள் போவோம்” என்று காஞ்சனாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“அதெல்லாம் சொல்லிக்கலாம். நான் இருக்கேன்ல?”
‘நீ இருப்பே! நான் இருப்பேனா?’
“காஞ்சுமா ப்ளீஸ்”
“கிளம்பலாமா நிவிமா” காஞ்சனா நந்தனாவின் முனகல்களைக் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.
இருசக்கர வாகனத்தில் நிவேதாவின் காரைப் பின்தொடர்ந்து நிரஞ்சனின் வீட்டை அடைந்தனர்.
“வெல்கம்! உட்காருங்க அம்மாவை கூட்டிண்டு வரேன்!” உள்ளே விரைந்தாள் நிவேதா.
“என்ன நந்து இவளோ பெரிய வீடா இருக்கு? நிறைய வசதி தான் போல இருக்கு. ஆனா நிவேதா எவளோ எளிமையா இருக்கா பாரேன்!” காஞ்சனா சொல்லவும்
‘ஆமா இவ எளிமையா இருக்கா, இவ அண்ணன் தான் சிங்கம் மாதிரி இருக்கான், எப்போ சிரிப்பான், எப்போ முறைப்பான் ஒன்னும் புரிய மாட்டேங்குது’
ஏதும் சொல்லாமல் அமைதியாகத் தலையசைத்துக் கொண்டிருந்தாள்.
மகளுடன் வந்த மைதிலியை கண்ட பெண்கள் இருவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க. அவரோ
“வாமா வா வா வா!” காஞ்சனாவின் தோளைப் பற்றிக்கொண்டு “சாரிமா அன்னிக்கி கொஞ்சம் மயக்கமா இருந்ததால உன்னை பார்த்து பேச முடியலை” என்று சொல்ல, நந்தனா, காஞ்சனா மற்றும் நிவேதா திகைத்து நின்றனர்.
“அம்மா!” நிவேதா கூப்பிட அவளை “நீ இவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவா” அவளைப் பேச விடாமல் சமையலறைக்குக் கிட்டத்தட்டத் துரத்திவிட்டார்.
“உட்காரும்மா!” காஞ்சனாவை அமரவைத்தவர், நந்தனாவை பார்த்து “நீயும் உட்காரும்மா”
“அப்புறம் காலேஜ் பைனல் இயர்ன்னு நிவி சொன்னா. படிப்பெல்லாம் எப்படி போகுது?” காஞ்சனாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கைகளைப் பற்றிய படி ஆசையாய் மைதிலி கேட்க
“சாரி நான்…” காஞ்சனா பேசதுவங்கும் பொழுதே
“எதுக்கு சாரி? நிரஞ்சன் எதுவும் என்கிட்டே சொல்ல, எனக்கு அது மனவருத்தம் தான். இருந்தாலும் பரவாயில்லை”
“ஐயோ நீங்க என்னைத் தப்பா நெனச்சுக்கிட்டிங்க” காஞ்சனா பதற
“உன்னை நான் ஏன் தப்பா நினைக்க போறேன்? நிரஞ்சன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்”
“ஆனா நான்…”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம்ம. நாங்க உன்னை பார்த்த உடனே புரிஞ்சுகிட்டேன் நீ நல்ல பொண்ணுன்னு. உனக்கு நிஜமா என் பையனை பிடிச்சிருக்கா?”
‘சுத்தம்! நான்ன்னு நெனச்சு அத்தை கிட்ட பேசிட்டு இருகாங்க. காஞ்சு உனக்கு இது தேவைதான் என்ன எங்க பேச விடுறே? முழி முழி’ பொங்கிவரும் சிரிப்பை மிகவும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள் நந்தனா.
“ ஹாய் அத்தை!” கையில் டென்னிஸ் பேட்டுடன் வந்தான் நிரஞ்சன்.
“அத்தையா ?” மைதிலி மகனைப் பார்க்க.
“ஹாய் நந்து எப்போ வந்தே? என்ன சர்ப்ரைஸ்! ” நந்தானாவை பார்த்துப் புன்னகைத்தபடி சோஃபாவில் அமர்ந்தான்.
“இப்போதான் ” அவளுக்கே கேட்காத குரலில் பதிலளித்தாள் நந்தனா.
இப்பொழுது திகைப்பது மைதிலியின் முறையானது.
“நீ நந்தனா இல்லையாமா ? ” கஞ்சானவிடம் மைதிலி கேட்க
அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர் கையில் காபியுடன் வந்த நிவேதா உள்பட. நாந்தனாவை தவிர.
‘கிழிஞ்சுது கிருஷ்ணகிரி’ சிரித்தால் தப்பாகிவிடுமோ என்ற தயக்கமும்
‘ஏன் என்னை ஒருவேளை இவங்களுக்கு பிடிக்கலையோ ?’ என்ற சொல்லத்தெரியாத வருத்தமும் , அச்சமும் லேசாக நந்தனாவிற்கு தோன்றியது.
இப்பொழுது தான் மைதிலி நந்தனாவை முதல் முறை ஒழுங்காகக் கவனித்தார்.
மனதை உடனே கவரும் துரு துரு கண்கள் , வட்டமுகம் அதில் அளவான சிரிப்பு. பார்த்தவுடன் சொல்லிவிடலாம் அவள் முகத்தைப் போன்றே குழந்தை மனம் கொண்டவளென்று.
நந்தனாவை காஞ்சாவுடன் ஒப்பிடும்பொழுது இன்னும் சிரியவளாகத் தோன்றியதால் மைதிலி காஞ்சனாவை நந்தனா என்று தவறாக நினைத்துக் கொண்டார்.
‘ ரொம்ப சின்ன பெண்ணா தெரியுறாளே!’ மனம் அடித்துக்கொள்ள காஞ்சனாவயும் நந்தனாவயும் பார்த்து வெட்க புன்னகயை சிந்தி அவர் என்ன சொல்வதென்று தயங்க,
காஞ்சனா “நான் நந்து வோட அத்தை…..” அவர் மெல்ல விளக்கமளிக்க, மைதிலி கொஞ்சம் சகஜமனார்.