logicIllaaMagic8

மேஜிக் 8

 

மறுமுனையில் தன் அறையில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தனா.

‘ஒருவேளை அப்பா அம்மா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா? ’ என்ற எண்ணம் வர “அய்யய்யோ! “ வாய்விட்டு அலறியவள்

‘டேய் உன்னக்காக பார்த்தேன் பாரு, என்னை என் ஜோட்டால அடிக்கணும். ச்சே ! ‘ கோவத்தில் பொருமத் துவங்கினாள்.

அதே நொடி கைப்பேசியில் நிரஞ்சனின் குறுஞ்செய்தி வர அதைப் பார்த்தவள் பதிலளிக்காமல் கோவமாய் திரும்பிக் கொண்டாள்.

நிரஞ்சனோ அவள் படித்ததற்கு சான்றாய் வாட்சப்பில் நீல நிற டிக் வர.மீண்டும் முயற்சிதான். இம்முறையும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

பொறுமையிழந்து நேராகக் கால் செய்தான்.

“ஹலோ நந்து”

“என்னதான்டா வேணும் உனக்கு? நானும் பொறுத்துப் பொறுத்து பாக்கறேன். எதுக்கு இன்னிக்கி இப்படி பண்ணே?”

“ டா வா?” கோவம் தலைக்கேறியது நிரஞ்சனுக்கு

“ ஆமாடா ! அப்படித்தாண்டா! சொல்லுவேண்டா!”

“அடிச்சு பல்லை பேத்துடுவேன்! என்ன ரொம்பதான் ஓவரா போற ?”

“நீ அடிக்கிறவரை என் கை என்ன சும்மா இருக்குமா? என் மேல கையை வச்சுப்பாரு அந்த கையை ஒடைச்சுடுவேன்!”

“ஏய்!” அவன் கத்தியதில் ஒருகணம் அதிர்ந்தவள்

“இப்போ என்னதான் வேணும் ?” வெறுப்பாய் கேட்க

“ச்சே! உன்னை என்னவோன்னு நெனச்சேன். நீயும் சாதாரண பொண்ணு தான்” அலுத்துக்கொண்டான்.

“நான் ரொம்ப ஸ்பெஷல் பொண்ணுன்னு உங்ககிட்ட சொன்னேனா? நீங்களா நெனச்சுகிட்டா நானா பொறுப்பு?” மீண்டும் ஒருமையிலிருந்து மாறிப் பேச்சில் மரியாதையைக் கொஞ்சம் தர்மத்திற்குச் சேர்த்துக்கொண்டாள்.

“…”

“சார்”

“ம்ம் சொல்லித்தொலை” அவன் குரல் வெறுப்பை உமிழ

கோவமாய் அழைப்பைத் துண்டித்தாள் நந்தனா அதில் கோவம் தலைக்கேறி அவளுக்கு மீண்டும் கால் செய்தான் நிரஞ்சன். சில ரிங்குகள் செல்ல அழைப்பை ஏற்றாள்.

“ம்ம்”

“நாகரிகமே தெரியாதா? பேசிட்டே இருக்கும்பொழுது போனை கட் பண்றது என்ன பழக்கம் நந்து?” குற்றம் சாட்டினான்.

“சாரி சார்! நாளை வந்து உங்க காலுல விழறேன் போதுமா? இப்போ என்ன வேணும் அதைச் சொல்லுங்க” வெறுப்பை கோவத்தைக் குரலில் வெளிப்படுத்தினாள்.

“நீ…நீ…வேண்டாம் விடு!”

“இன்னிக்கு என்னை ஏமாத்தினத்துக்கு நீங்க என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்!”

“ஹேய்! நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்? நீ என் அப்பாகிட்ட வைஷாலலிகிட்ட எல்லாம் உண்மையைச் சொன்னியா?”

“ தோடா! நான் நீங்க சொன்ன பொய்யைத் தானே சொன்னேன் ? நீங்க எதுக்கு காஞ்சு அத்தை கிட்டப் பொய் சொன்னீங்க ? ”

“ அது அவங்க உன் அத்தைன்னு தெரியாம அப்போ இருந்த மனநிலைல சொன்னேன்”

“அதே மாதிரித்தான் அவங்க நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு தெரியாம கோவத்துல சொன்னேன்”

“சரி விடு. எங்கப்பா காலுல எதுக்கு விழுந்தே ?”

“நீங்க தானே கண் ஜாடை காட்டினீங்க ?”

“அது அவர்கிட்ட உண்மையை சொல்லுன்னு சொல்ல காட்டினேன்”

“அய்யோடா ! உங்க கண்ல வர அபிநயத்தை புரிஞ்சுக்க எனக்கு அறிவு பத்தாது. அது இருக்கட்டும் நீங்க ஏன் என் கூடவே அவர் காலுல விழுந்தீங்க ? ” ஏளனமாய் கேட்க

“என் தலையெழுத்து விழுந்தேன்”

“ அதை விடுங்க இப்போ எதுக்கு எங்க வீட்டுல பொய் சொன்னீங்க ?”

“ ….”

“இருக்கீங்களா இன்னும் என்ன கதை கட்டலாமுன்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்குத்தான் புழுகருது கைவந்த கலையா இருக்கே”

“இப்போ என்ன பண்ணனும்னு சொல்றே?”

“சொன்னா செஞ்சுட போறீங்களா ?”

“நந்து ப்ளீஸ், நீ செஞ்சதுல நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆகி இருக்கேன்”

“சார்! அதை நான் சொல்லணும். எங்க வீட்ல வண்டி வண்டியா புழுகிட்டு உங்களுக்கு டிஸ்டர்பாம்ல ?”

அவனோ வெறுப்பாய் “இப்ப என்ன செய்யணும்?”

“எனக்கு தெரியல”

அவனுக்கும் தெரியவில்லை. இருவரும் சில நொடிகள் அமைதியாகவே இருந்தனர்.

மெல்ல ஆழ்ந்து சுவாசித்த நந்தனா “சார்…”

“ம்ம் இருக்கேன்”

“அப்பறம் பேசவா கொஞ்சம் ஒருமாதிரி இருக்கு” குரலில் எந்த உணர்ச்சியுமே இல்லாமல் அவள் கேட்க அதே மனநிலையில் அவனும்.

“ம்ம் ஓகே பை”

அழைப்பைத் துண்டித்தவன் கண்களை மூடி யோசனையில் மூழ்கினான்.

கல்லூரியில் நந்தனா மீண்டும் ஒட்டுதலின்றி காணப்பட்டாள்.

இதையே கவனித்துக் கொண்டிருந்த மயூரா “ஏய் சுகு, நீ ஏன் நான் சொல்றதை சீரியஸா எடுத்துக்க மாட்டேங்குற?”.

“மையூ சொன்னா கேளு மா, அவளுக்கு எதுவும் கிடையாது ஏதோ சொல்லத் தெரியாத டென்ஷன்ல இருக்கிற மாதிரி எனக்கு தோணுது”

மயூராவோ சுகன்யாவை முறைத்தபடி “ஒருநாள் சந்தோஷமாவும், ஒருநாள் சோகமாவும், ஒருநாள் கோபமாவும் மாறி மாறி இருக்குறது எப்படி சாதாரணமான விஷயம்னு நீ நெனைக்கிரே?

நான் சொல்றதை கேளு இன்னிக்கி நாம அவளை எப்படியாவது கோவிலுக்குக் கூட்டிட்டு போய் தீரனும்.”

“அடி போடி இவளே! எத்தனை வாட்டி நான் சொல்றது உனக்கு புரியவே மாட்டேங்குது அவ கண்டிப்பா சாதாரணமா இல்லை”

வகுப்பிற்கிடையே இடைவேளையில் மெல்ல நந்தனாவிடம் சென்ற சுகன்யா “எனக்கு கொஞ்சம் மனசு ஒரு மாதிரி இருக்கு, கொஞ்சம் பக்கத்துல போயிட்டு வரலாம் வரியா?” என்று சற்று ஆதங்கம் தோய்ந்த குரலில் அவளை அழைக்க,

நந்தனா இம்முறை மறுக்காமல் சுகன்யாவுடன் புறப்பட, இதை எதிர்பார்க்காத மயூரா சந்தேக பார்வையுடன் அஞ்சி அஞ்சி நந்தனாவை விட்டு சற்று விலகியே நடந்தாள்.

மெல்ல அவர்கள் நடை கோவிலை நோக்கிச் செல்வதை அறிந்த நந்தனா பிரேக் அடித்தது போல் நின்று விட்டாள்.

“ஏய் சுகு. கோவிலுக்குன்னு சொல்ல மாட்ட? நான் வரலை”

“ஏய் என்னடி இது கோயிலுக்குத் தானடி கூப்பிட்டேன் வாடி…”

“உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா? நான் வரலைன்னா வரல நீ போ”

சுகன்யாவின் உயரத்திற்கு எம்பிய மயூரா, அவள் காதில் “கண்டிப்பா இவளுக்குள்ள எதோ ஒளிஞ்சுகிட்டு இருக்கு. நான் சொன்னப்போ உனக்குப் புரியலை, இப்ப பார் கோவிலுக்குள்ள காலை வைக்காம எப்படி தையா தக்கான்னு குதிக்குது ?”

இதைக் காதில் போட்டுக்கொள்ளாத சுகன்யா, விலகிச் செல்ல முற்பட நந்தனாவின் கையை பிடித்து இழுத்து “இப்ப எதுக்கு உள்ள வரமாட்டேன்னு வம்பு பண்ற?”

சுகன்யாவுடன் வாதம் செய்ய அவள் வாய் ‌திறக்கும்பொழுது கைப்பேசி வைப்ரேட் ஆக அதை எடுத்துப் பார்த்தவள் அதில் நிரஞ்சன் என்ற எழுத்து மிளிர “ஒரு நிமிஷம் ப்ளீஸ்” சுகன்யா விடமிருந்து கையை வெடுக்கென விடுவித்துக்கொண்டு தள்ளிச் சென்று அவன் அழைப்பை ஏற்று

“ஹலோ சொல்லுங்க, என்ன வேணும் இப்போ?” கோபமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“நந்து நான் சொல்றதை பொறுமையா கேளு. நாம நேரா மீட் பண்ணி பேசினா நல்லதுன்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்குள்ள இருக்குற குழப்பங்கள் எல்லாம் தீரும்.”

“எனக்கு உங்களைப் பார்க்கவோ பேசவோ விருப்பம் இல்லை”

“நந்து ப்ளீஸ்….நான் சொல்றத முழுசா கேளு நேத்து நடந்த குழப்பத்திற்கு எல்லாம் ஒரு தீர்வு வேணும்னா நாம இன்னிக்கி மீட் பண்ணியே ஆகணும்”

“வேண்டான்னா விடுங்க. ஏன் இப்படி கம்பல் பண்றீங்க? எல்லாத்தையும் குழப்பறதே நீங்க தானே”

“மீட் பண்ணலாம். எல்லாம் நல்லபடியாக முடியும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு நுங்கம்பாக்கம் காபி ஷாப்ல உனக்காக காத்துக்கிட்டு பண்ணிட்டு இருப்பேன். பை” அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

“எல்லா முடிவும் இவனே எடுக்கிறதுக்கு எனக்கு எதுக்கு ஃபோன் பண்றான்? இவன் இம்சை தாங்கவே முடியலை, எங்க இருந்து வந்தானோ ஒரு நாள் கூட நிம்மதியா விட மாட்டேங்கறான்”

கைப்பேசியைப் பார்த்துக் கத்தியபடி திரும்ப, அங்கு சுகன்யா எதுவும் புரியாமல் நின்றிருந்தாள்.

“சுகு எனக்கு தலை வலிக்குது. நீ போ” என்று திரும்பிப் பார்க்காமல் வகுப்பிற்குச் சென்று விட்டாள் நந்தனா.

பயத்தில் கைக்கால்கள் நடுங்கியபடி கோவில் உள்ளே நின்றிருந்தாள் மயூரா. சோகமாய் வந்த சுகன்யாவிடம்

“நான் கிளாஸ்க்கு வால, வீட்டுக்கு போறேன். எனக்கு பயமா இருக்கு. ஒன்னு இவளை நாம சரி பண்ணனும், இல்ல நான் காலேஜுக்கு வரவேமாட்டேன்”

பதறிய சுகன்யா “ஐயோ ப்ளீஸ். நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். இந்த மாதிரி செய்யாத. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டு நாம தான் தீர்த்து…”

“இதுல கேக்குறதுக்கு ஒன்னுமே இல்லடி நான் சொல்றது தான். நீ தான் நம்ப மாட்டேங்குற தாயத்தையும் கட்டிக்க மாட்டேங்குற, அவளையும் கூட்டிட்டு வர ஹெல்ப் பண்ண மாட்டேங்குற”

மயூரா மீண்டும் அதே பல்லவியைப் பாட சுகன்யாவிற்கு இம்முறை அவள் சொல்லுவதைப் போல இருக்குமோ என்ற எண்ணம் எழ அவளை நம்ப முடிவு செய்தாள்.

“சரி இந்த சனிக்கிழமை அவளைப் பேயோட்ட கூட்டிகிட்டு போவோம்”

“வெரி குட் நான் இன்னிக்கே அந்த கீரைக் கார பாட்டிகிட்ட சொல்லி வைக்கிறேன்.வா அவ நல்லபடியா இருக்க வேண்டுவோம்” தோழிகள் இருவரும் நந்தனாவிற்காக மனமுருக வேண்டிக்கொண்டு வகுப்பிற்குச் சென்றனர்.

***

மாலை காபி ஷாப்பில் அமர்ந்திருந்த நிரஞ்சனும் நந்தனாவும் எதுவும் பேசாமல் தங்கள் முன்னே இருந்த காபியை வெறித்திருந்தனர்.

‘நந்து, எப்படியான இன்னியோட இவன் பிரச்சனையை முடிக்கணும். இத முடிச்சுட்டு வீட்டுக்கு போனதும் அப்பா அம்மா அண்ணாகிட்ட சாரி கேட்கணும்!’

‘க்குக்கும்…’.தொண்டையை செருமினாள் அவனிடமிருந்து எந்த அசைவுமில்லை, கண்ணாடிச் சுவரின் வழியே வெளியே சாலையை வெறித்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன்

மீண்டும் உரக்கத் தொண்டையை செருமினாள் அதில் யோசனை கலைந்து அவள் புறம் திரும்பினான்

பேபி சொல்லு என்ன ?” அப்பொழுதுதான் அவளைக் கவனித்ததுபோல் கேட்க

“பேபின்னு சொல்லாம இருந்தாலே போதும்” தோளைக் குலுக்கினாள்

“ச்…நேத்து சொன்னேன்ல எப்படியோ கூப்டுட்டு போறேன். ப்ளீஸ் பேபி” அவன் குரலில் எப்பொழுதும் இருக்கும் குறும்போ கண்டிப்போ இல்லை மாறுதலாக விரக்தியாகத் தெரிந்தது

“ஓகே சார்…என்ன விஷயம் சொல்லுங்க. உங்களுக்கு சொல்ல ஏதும் இல்லைனா பரவால்ல எனக்கு நிறைய சொல்லணும்.”

“நீயே மொதல்ல பேசு பேபி… பட் ஒரு சின்ன வேண்டுகோள்”

“ம்ம் என்ன சார்?”

“இங்க தான் பேசணுமா, வேற எங்கயானா போகலாமா?”

“நீங்க தானே இந்த இடத்தை தேர்ந்தெடுத்தீங்க. ஏன் சார் இங்க வாஸ்து ஏதாவது சரி இல்லையா? முதலாளியை கூப்பிட்டு வாஸ்துப்படி மாத்த சொல்வோமா?” நக்கலாகத்தான் கேட்டாள்

“வாஸ்துலாம் எனக்கு தெரியாதுமா. உனக்கு அதெல்லாம் தெரியுமா என்ன?” அவன் முகத்தில் ஆர்வம் எட்டிப் பார்த்தது

‘ஜோக் சொன்னா அதையும் நம்பி விளக்கம் கேக்குறானே!’

“அத விடுங்க சார் இப்போ வேற எங்க போகலாம்? எனக்கு இன்னும் 3 மணிநேரம் டைம் இருக்கு!”

“பீச்?” சிறுபிள்ளை போல் அவன் குரலில் உற்சாகம் தென்பட்டது

“போலாமே? ஆனா வீட்ல சொல்லணும்…” அவள் தயங்க

“ஓகே! சீக்கிரம் சொல்லு கிளம்பலாம்”

கைப்பேசியில் தன் பெற்றோரைத் தொடர்புகொண்டு அவள் தெரிவித்தவுடன் இருவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்குப் புறப்பட்டனர்.

காரில் நேரம் மௌனமாகக் கழியப் பேச்சைத் துவங்கினாள் நந்தனா.
“சார் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாடீங்களே?”

“மாட்டேன் கேளுமா”

“எதுக்கு பீச்? ஒருவேளை நேத்து நான் உளறிவச்சத மனசுல வச்சு கடல்ல தள்ளிட மாட்டங்க தானே?”

இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காதவன் அதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியாமல் குழப்பமாய் ஒரு நொடி அவளைப் பார்க்க, அவள் முகத்திலிருந்த கேலி புன்னகையில் சற்று மன இறுக்கம் குறைவதை உணர்ந்தான்

“சேச்சே இப்போ தள்ளினா காப்பாத்த ஆளுங்க இருபாங்க.. நான் அப்புறமா ஆள் நடமாட்டம் இருக்காத நேரமா பார்த்து தள்ளிவிடறேன்” சிரித்தபடியே பதிலளித்தான்

“ஆகா… அப்போ அதான் திட்டமா ? நானே தான் உளறி ஐடியா குடுத்துட்டேனா? சொந்த காசுல சூனியம்னு இதைத்தான் சொல்லுவாங்களோ?” கன்னத்தில் கைவைத்தபடி போலியாய் புலம்ப நிரஞ்சனோ உரக்கச் சிரிக்கத் துவங்கினான்

‘இப்படி மனசு விட்டு சிரிச்சா செமயா இருக்கியேடா! ‘ அந்த நொடியைத் தன்னை அறியாமல் மனதினில் படம்பிடித்துக் கொண்டாள்.

“ஐயோ நந்து ஸ்டெடி ஸ்டெடி ஒன்னு அவனுக்கு ஆல்ரெடி ஆளிருக்கு.

இன்னோன்னு இவன் உனக்கு இப்போ எதிரி!

நயமா பேசினோமா அவன் வாயால உண்மையை சொல்லவச்சோமான்னு இருக்கணும். இந்த சயிட் அடிக்கிற வேலை வேண்டாம் சொல்லிட்டேன்’

மனம் அவளை எச்சரிக்கை செய்ய அவன்மேல் ஒட்டி இருந்த பார்வையைச் சாலையோரம் திருப்பினாள்.

கடற்கரையை அடைந்தவுடன் சிறுபிள்ளையைப் போல ஆர்வமாக கடலை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.

“சார் மெதுவா நடங்க.. என்னை நெஜமாவே தள்ளப்போற மாதிரி எதுக்கு இப்படியொரு ஆர்வம் உங்க முகத்துல?” வம்பிழுத்தபடி ஓட்டமும் நடையாய் அவனுடன் நடந்தாள்

“ஹே பேபி அதெல்லாம் இல்ல. எனக்கு பீச்னா ரொம்ப பிடிக்கும், அவளோதான். இங்க உட்காரலாமா?” சற்று மேடான இடத்தை காட்டி கேட்க, இருவரும் அமர்ந்து கொண்டனர்.

மாலை நேரம் சில்லென்று காற்று மெல்லிய குளிரை உடலுக்குள் பாய்ச்ச, ஏனோ அமைதியின்றி துடித்துக் கொண்டிருந்த இருவரது மனமும் மெல்ல மெல்லச் சலனமின்றி அமைதியானது.

சுற்றி இருந்த மக்களின் ஆரவாரமும் கூச்சலும் காதில் விழாது கடல் அலை மட்டுமே அவர்கள் மனதையும், கண்களையும், செவிகளையும் நிரப்பியது.

இயற்கைக்குத்தான் எவ்வளவு சக்தி. சில நொடிகள் தான் என்றாலும் அந்த அமைதி இருவருக்கும் தேவையான ஒன்றாய் இருந்தது.

இப்பொழுதும் மௌனத்தைக் கலைத்தது நந்தனாதான்

“சார் ! என்ன அமைதியா இருக்கீங்க? இங்கேயும் வாஸ்து சரி இல்லையா?” அவனை வம்பிழுக்க,

“என்ன ?”

“இல்லை இது பீச் உங்க இஷ்டத்துக்கு கடலை மாத்தி வைக்க முடியாது ! வேணும்னா சுண்டல் கார பையனை கூப்பிட்டு சூடா கடலை சாப்பிடலாம் அவ்ளோதான் ”

“தாயே! இங்க நம்ம சுத்தி எக்கச்சக்கமா கடலை போடறாங்க, அதுவே போதும். நாம வேற எதுக்கு ?” அவனும் கேலிப்பேச்சில் சளைக்க வில்லை.

ஏனோ முகமிருகியவன் மெல்ல நந்தனாவின் புறம் திரும்பி “சொல்லு பேபி…எதோ சொல்லணும்னு சொன்னியே. நீ பேசின அப்புறம் நான் சொல்ல வந்ததை சொல்றேன்”

இனம் புரியா அமைதியில் மூழ்கியவளோ கோவமாய் கேட்க நினைத்தவற்றை மறந்திருந்தாள்.

“அது வந்து…” பேச்சைத் துவங்கியவள் அவனைப் பாராது கடலை வெறித்தபடி தொடர்ந்தாள்.

“நீங்க வீட்ல உண்மையை சொல்லாட்டிகூட நான் சமாளிச்சு இருப்பேன். ஆனா இப்போ நீங்க சொன்ன பொய்… எனக்கு ஒன்னுமே முடியல பைத்தியம் பிடிக்கிது. ஏன் அப்படி சொன்னீங்க? ” கோவம் இல்லாமல் வருத்தம் பூசி வெளிவந்தன அவள் வார்த்தைகள்

“சாரி பேபி எனக்கும் தெரியலை நான் ஏன் அப்படி சொன்னேன்னு. எனக்கு உன் மேல வெறித்தனமான கோவம் இருந்தது உண்மைதான்…” ஒப்புக்கொண்டவன் மறந்தும் பார்வையை அவள் புறம் திருப்பவில்லை

“கோவம்னா திட்டி இருக்கலாமே இப்படியா பெரியவங்க கிட்ட…” கண்களில் தன் கட்டுப்பாட்டையும் மீறி நீர் சேர அதை மறைக்க கைகளால் கன்னத்தைத் தாங்கியபடி அமர்ந்தாள் நந்தனா

“நீ எங்கப்பா கிட்ட சொன்னபோது எனக்கும் இப்படித்தான் இருந்துது. கோவம்னா திட்டி இருக்கலாம் இப்படியா வேணும்னே ஒரு பொண்ணு செய்வான்னு கோவம். அதான் நீயும் என்னை மாதிரி முழிக்கணும்னு விளையாட்டாய் மிரட்ட தான் ஆரம்பிச்சேன் ஆனா…”

தலையைக் கோதினான், நெற்றியைத் தடவினான், நிலைகொள்ளாது தவித்தான்.