Kathiruntha kathaladi 6

 

க…க…..க….. கல்லூரி சாலை…

க…க….க….கல்லூரி சாலை….

அந்த காலமோ! இந்த காலமோ! வருங்காலமோ! கல்லூரி என்றால் கலாட்டாக்களுக்கும், ரகளைக்கும், சைட்டடிப்பதற்கும் பஞ்சமில்லை.

ஆருஷின் கல்லூரி வாழ்வு அவனது வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

பள்ளி பருவத்திலேயே தந்தையும், தாயும் இறந்துவிட மாமனின் தயவால் பள்ளி படிப்பு, அதன்பின் இவனது முயற்சியால் மட்டுமே கல்லூரி வாழ்க்கை.

அரசாங்கபணம் மூலம் படிப்பு உறுதியாகிவிட விடுதி, சாப்பாடு, துணி, இவற்றையெல்லாம் ட்ரஸ்ட் அமைப்பு பார்த்துக் கொண்டது.

கஷ்ட வாழ்க்கைதான். ஏறக்குறைய கையேந்தும் நிலை. ஆனால் பிச்சை புகினும் கற்கை நன்றே அல்லவா! அவனுடைய சொந்த செலவுகளுக்கு அவனது தந்தையின் ஒரே வீட்டை விற்று வங்கியில் போட்ட பணம் மட்டும் இருந்தது.

ஆனால் ஆருஷ் அதை தொட்டதில்லை. பகுதி நேர வேலை அவனுக்கு உதவியது. வாழ்க்கை பற்றிய தெளிவு அவனிடம் துல்லியமாக இருந்தது.

இப்போது சில காலம்தான் சரியான உணவில்லை. மற்றபடி அவனது அன்னை இருந்தவரை சத்தான உணவுகளையே உண்டதால் ராஜாவைப் போல தேகம் அவனுக்கு. அதையேதான் அவன் அன்னையும் கூறுவார் “ராஜாடா கண்ணா நீ” அவ்வளவு பெருமையும் வாஞ்சையும் அவர்கண்ணில் தெரியும்.

சில நாட்களிலேயே அனைத்தும் முடிந்தது. அன்னையின் மேல் அள்ளக் குறையாத பாசம் அவனுக்கு. இன்றும் பாசம் இருக்கிறது. ஆனால் அன்னைதான் இல்லை. ஆனால் என்றுமே அவன் வருத்தத்தை வெளிக் காட்டியதில்லை. வருந்தினால் ஆறுதல் கூற யாரும் இல்லை. அதனால் மறைக்கப் பழகிக் கொண்டான்.

வகுப்பில் முதல் பெஞ்சும் சரி, கடைசி பெஞ்சும்சரி அனைவரும் இவனது தோழர்களே. வறுமையிலும் நேர்த்தியான அவனது உடை அவனை என்றும் கீழாக காட்டியதில்லை.

அதற்காக சிடுமூஞ்சியும் இல்லை. குறும்பும், கேலியும் என சக மாணவர்களுடன் இலகுவாக இருக்கவும் செய்வான். ஆனால் வரம்பு மீறிய ஆர்ப்பாட்டமோ வேறு எதுவுமோ அவனிடம் இருக்காது. பெண்களிடம் சற்று விலகியே நிற்பான்.

இது மூன்றாம் வருடம் . பல காதல் கடிதங்கள் வந்துள்ளன. ஆனால் எதையும் கருத்தில் கொள்வதில்லை. அவனுக்கு படிப்பு மட்டுமே பிடிப்பாகும் என நினைத்தவன் வேறு பக்கம் கவனத்தை திருப்பவில்லை.

இதை அவனுடன் படிக்கும் அனைவரும் அறிவர். அவர்களே கூட பலரை தடுத்து திருப்பி விட்டதும் உண்டு. அப்படி இருந்தும் அவர்களையும் மீறி ஒன்றிரண்டு வருவதுதான்.

அவனுடன் படிப்பவள்தான் தீப்தி. பணக்காரரின் மகள். இவன் படிக்க உதவும் ட்ரஸ்ட் அவர்களுடையதுதான். ஆனால் இதுவரை இருவருக்குமே தெரியாது. அவன் சபரிநாதனைக்கூட கண்டதில்லை. ஆனால் தன்னை படிக்க வைப்பவரின் பெயரை மட்டும் அறிவான்.

ஆருஷின் நிலையே தீப்தியை சற்று தள்ளி வைத்தது எனலாம். தன்னால் அவனது கவனம் சிதறக்கூடாது என நினைத்து, அவன் படித்து முடிக்கட்டும் என காத்திருந்தாள். இல்லையென்றால் எப்போதோ தன் காதலை கூறியிருப்பாள். இன்று வரை அவள் வருந்துவதும் அதற்குதான். அப்போதே கூறியிருக்கலாமோ!

அன்று கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக விழா. ரேகிங் எல்லாம் உண்டுதான். ஆனால் அளவாக.

கல்லூரி கேம்பஸ் கலாட்டாக்களால் நிரம்பியது. வயதானவர்களை கூட இளமையாக உணர வைக்கும் இடமல்லவா!

ஹர்ஷினியும் அங்கு முதலாமாண்டு மாணவியாக சேர்ந்திருந்தாள். ஹர்ஷிக்கு, தர்ஷிகா என்ற தங்கையுண்டு. பணக்கார தாய் தந்தையின் மகள்கள். அவர்கள் ஒருத்தருடன் பேசுவதென்றால் கூட எதிரில் இருப்பவரின் பின் பணக்காரன் என்ற டேக் (tag) இருக்க வேண்டும்.

ஆனால் மகள்கள் அதற்கு நேரெதிர். இருந்தாலும் தாய் தந்தை முன்பு ஒன்றும் கூற முடியாது. தர்ஷியாவது சற்று எதிர்த்து வாதிடுவாள். ஆனால் ஹர்ஷி அதைக் கூட செய்ய மாட்டாள்.

இடுப்பு வரை நீளும் படிய வாரிய எண்ணெயில்லாத கூந்தல். நேர்த்தியான சுடிதார். குழந்தைதனத்துடன் வசீகரிக்கும் முகம். இதுதான் அவளது அடையாளம். பயந்தவள்தான். ஆனால் உறுதியானவள்.

அறிமுக விழாவில் அவளை பாட சொல்ல, தனக்கு பாட வராது எனக்கூறி நடனமாடினாள். நீ கூறுவது எனக்கு தெரியாது. அதனால் எனக்கு தெரிந்ததைச் செய்கிறேன். அவளது இந்த ஆட்டிட்யுட் சீனியர்களை மட்டுமல்லாது முதலாம் ஆண்டு மாணவர்களையும் கவர்ந்தது.

கல்லூரியில் அவள் செல்லப் பிள்ளை ரகம் அல்ல. ஆனால் பிடித்த பெண் வரிசையில் இருந்தாள். “டேய் அந்த பொண்ணுகிட்ட பிரச்சனை பண்ணாத” என மற்றவர்கள் பாதுகாக்க நினைக்கும் ரகம். தேவதைதானோ!

வகுப்புகள் ஆரம்பித்து முதல் செமஸ்டர் வரை ஒன்றும் தெரியவில்லை ஆருஷிற்கு. ஆனால் அவன் வகுப்பு தோழர்கள் கண்டுகொண்டிருந்தனர். தினமும் இவனை தேடிச் சென்று பார்க்கும் ஹர்ஷியை.

பார்வை மட்டுமே…. ஆளை விழுங்கும் பார்வையல்ல. மற்றவரை விழவைக்கும் பார்வையது. யாரிடமும் கூறியதில்லை. ஆனால் அவள் பார்வை அப்பட்டமாய் அனைவருக்கும் சேதி கூறியது.

ஆருஷைப் பற்றியும் தெரியும், ஹர்ஷியைப் பற்றியும் தெரியுமாதலால் சுவாரசியமாகவே பார்த்திருந்தனர். ஆனால் இது ஆருஷிற்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை.

அவளை தெரிந்து கொள்ளும் சமயமும் வந்தது. ஆருஷ் தினமும் மாலை கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபடுவான். சில நாட்களாக ஏதோ ஒன்று அவனை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

இன்றும் அதுபோலவே இருக்க அவனால் நிம்மதியாக விளையாட முடியவில்லை. எப்போதும் பந்தானது அவனது கையில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விலகாது.

அவனது உயரமும் பரந்து விரிந்த கைகளும் சற்றே எகிறி கூடைக்குள் பந்தை போடும் பாங்கும் ரசனைக்குரியதாய் இருக்கும். இன்றோ! அனைத்தும் தாளம் தப்பியது. ஒருவித இயலாமையில் பந்தை தூக்கி அடித்தவன் வெளியே வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

தன் பேக்கிலிருந்து பாட்டிலை எடுத்து வாயில் நீரைச் சரித்தவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். அது வட்ட வடிவிலான மைதானம். சுற்றிலும் அமர்வதற்கென்று அடுக்கடுக்காய் இருக்கைகள் போடப்பட்டிருக்கும்.

மாலை வேளைகளில் பலர் அங்கு நண்பர்களோடு கூடியிருப்பர். அப்படி பலர் குழு குழுவாக அமர்ந்திருந்தனர். ஆருஷ் இனி விளையாட முடியாது எனத் தோன்றவே அமைதியாய் வேடிக்கைப் பார்க்கலானான்.

அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் பார்வை ஓரிடத்தில் நின்றது. அங்கு கடலின் மெல்லிய நீல நிறத்தில் சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தற்செயலாக இருக்கலாம் என நினைக்க முடியவில்லை. ஏனென்றால் அவள் தோழிகள் திரும்பி அமர்ந்திருக்க இவள் மட்டும் இவனைப் பார்த்தவாறு இருந்தாள்.

இவன் பார்ப்பது தெரிந்தும் அவள் பார்வையைத் திருப்பவில்லை. என்னடா இது! ஏன் இந்தப் பெண் இப்படிப் பார்க்கிறாள். இவனும் இவனுக்கு பின்னால் யாரையேனும் பார்க்கிறாளா? எனத் திரும்பிப் பார்க்க ஒரு ஈ காக்கை கூட பின்னால் இல்லை.

மீண்டும் இவன் அவளைப் பார்க்க தன்னை அறிந்து கொண்ட அவனை நினைத்து மெல்லிய சிரிப்பு அவளிடத்தில். பேக்கை மடியில் வைத்து அதன் மேல் ஒரு கை மடக்கி கன்னத்துக்கு முட்டுக் கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள்.

அதன் பிறகு அவனும் பார்வையைத் திருப்பவில்லை. அவளும் திரும்பவில்லை.

இப்படியே ஒருவாரம் சென்றது. அதே இருக்கை , அதே பார்வை. ஆனால் ஆருஷிடம் முன் இருந்தது போல உறுத்தல் இல்லை. மனம் அமைதியாய் இருந்தது. ஆனால் தினமும் அணியும் உடை, உண்ணும் உணவு போல அவள் பார்வை ஆனது.

எவ்வளவுதான் இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டினாலும் பறவையானது சிறகு விரிக்கத்தான் செய்யும். அதுபோல தான் மனிதனும். இவன் கட்டுப்பாடாக இருக்க நினைக்க, உடலின் ஹார்மோன்கள் இவன் பேச்சைக் கேட்கவில்லை.

அவளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தான். உபயம் அவனது வகுப்பு தோழர்கள். இவளது பூர்வீகம் முதல் அவர்களால் அலசி ஆராயப்பட்டதை அறிவான். அதில் சிலர் காதல் கடிதம் கொடுத்து பல்பு வாங்கியதையும் அறிவான்.

ஒன்றிரண்டு முறை அவளை கேம்பஸில் பார்த்தும் இருக்கிறான். ஓ…. இவள்தானா! என்பதுதான் அவன் எண்ணமாக இருந்தது. அதைத்தாண்டி யோசித்ததில்லை.

இப்போதோ பல மாற்றம் அவனுள். மறைக்கக் கற்றுக் கொண்டானே தவிர மறுக்க முடியவில்லை. முதலில் அவள் பார்வையை ஏற்றுக் கொண்டான். பிறகு அவள் வரத் தாமதமானால் தேடத் தொடங்கினான்.

காதல் காரணமறியாது அது வரும் நேரமறியாது. வந்தபின்தான் காரணம் தேடும். கிடைக்கவில்லையா ஆயிரம் சப்பைக் கட்டு கட்டும். மொத்தத்தில் வந்தால் போகாது.

ஹர்ஷிக்கும் காரணம் தெரியவில்லை. பார்த்தவுடன் ஈர்த்தது என்னவோ உண்மை. ஆனால் அந்த ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகமானது. ஆருஷ் தினமும் பார்க்க வைத்தான்.

அவளது வகுப்பு மாணவிகள் பலர் இவனது விசிறிகள். ஆஹோ …. ஓஹோ… என இவனைப் பற்றிப் புகழ, இதனால் தான் பார்க்கிறேன், அப்படி புகழும் அளவிற்கா அவன் இருக்கிறான் என்பதை பார்க்கத்தான் அவனைப் பார்க்கிறேன் என மனதோடு கூறிக் கொண்டாள்.

இவள் பார்ப்பது தெரிந்து தோழிகள் ஆருஷைப் பற்றிக் கூறி தடுத்துப் பார்க்க, நான் பார்க்கிறேன் அவ்வளவுதான். அதைத் தாண்டி காதலெல்லாம் இல்லை எனக் கூறி விட்டாள்.

பார்ப்பாளாம், தினமும் விடாமல் முழுங்குவது போலப் பார்ப்பாளாம் ஆனால் காதல் இல்லையாம் எனத் தோழிகள் கிண்டல் செய்ய, அதை அப்படியே குப்பைத் தொட்டிக்கு திருப்பி விட்டுவிட்டு இவள் அவனைப் பார்ப்பாள். ஒரு நாள், இரண்டு நாளல்ல கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்துதான் அவனுக்கு இவள் பார்ப்பது தெரிந்தது.

முதல் நான்கு மாதம் ஒன் வேயாக இருந்த பார்வை அடுத்த நான்கு மாதங்களில் டூ வேயாக மாறியதுதான் மாற்றம். மற்றபடி இருவரும் அருகில் கூட பார்த்ததில்லை. அவள் ஒரு நாள் வரவில்லையென்றால் கூட அவள் அமரும் இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டே செல்வான். என்ன செய்கிறாம் என்ன எதிர்பார்க்கிறோம் என இருவருமே அறிய முற்படவில்லை என்பதுதான் ஆச்சரயம்.

வருடத்தின் இறுதி நாட்கள். விழாக்கோலம் பூண்டிருந்தது கல்லூரி. ஆண்டுவிழா. வருடாவருடம் நடனம் ஆடும் ஆருஷ் இந்த வருடமும் கலக்கிவிட்டான். ஹர்ஷியும் நடனத்தில் இருந்தாள்.

முதலில் ஆருஷின் நடனம் முடிந்திருக்க அமைதியாய் பின் இருக்கைகளில் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான். அடுத்து அவளது நடனம் வருமல்லவா? ஏதோ ஆவல்… “டேய் ஆருஷ் உன் ஆளும் டேன்ஸ் ஆடுதாண்டா” நண்பன் ஒருவன் கூற மறுத்துப் பேசவில்லை. ரசித்தானோ!

அடுத்த இரண்டு நடனங்களுக்கு பிறகுதான் அவளுடையது. சற்றே எரிச்சல் வந்தது. விரைவில் வந்தால்தான் என்ன?

முதலாமாண்டு மாணவிகளின் நடனம் அறிவிக்கப்பட்டது. குழுவாக வந்தார்கள். கண்கள் அவளைத் தேடியது. எங்கே? எங்கே? அதோ இரண்டாம் வரிசையில்…ஏன் முதலாவதாக நின்றால் என்ன? மனம் சுணங்கியது.

அவள் கண்களும் அலைபாய்ந்தது. தேடுகிறாள்…. என்னைத் தானோ! விடை தெரிந்தும் பலமுறை கேள்வி கேட்டு விடை பெற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை காதலுக்குதான் உண்டு.

கண்டுகொண்டாள்…. கண்கள் நான்கும் இனைந்தது. மெல்லிய சிலிர்ப்பு அவளிடத்தில்…. சிரிப்போ இவனிடத்தில்…

ஏதோ ஒரு வகையான உடை. என்ன உடை அது? ஓ…ஆயர்பாடியில் கோபிகைகளின் உடை போல் அல்லவா இருக்கிறது! பாட்டையும் கூட ஊகித்து விட்டான். செல்களில் பரபரப்புத் தொற்றிக் கொள்ள அமரமுடியவில்லை… என்ன அவஸ்தை இது! எழுந்து ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டான்.

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ!

கண் ரெண்டும் தந்தியடிக்க…. கண்ணா வா கண்டுபிடிக்க….

இங்கு கண்ணனின் மனதிலும் ரகசியம் ஒளிந்துள்ளதே. ஆனால் தெரிந்த ரகசியம். அடுத்த நிமிடங்கள் அவள் காட்டிய பாவனை… அவள் நடனம், அந்த நளினம் இவனைக் கட்டித்தான் இழுத்தது.

சுவரில் அழுத்தமாய்ச் சாய்ந்துக் கொண்டான். நொடிக்கு நொடி போதையேற்றிக் கொண்டிருந்தாள். அனைத்தையும் அழுத்தமாய் உள்வாங்கிக் கொண்டான்.

அந்த நொடிகளில் ஏதோதோ ஆசைகள்… சுழன்றடிக்க அவன் எண்ணப்போக்கை அவனாலேயே கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. பாட்டு முடிந்தவுடன் விடுவிடுவென வெளியேறிவிட்டான்.

error: Content is protected !!