LogicillaMagic2

மேஜிக் 2

 

“நிரஞ்சன்!” என்ற தீர்க்கமான குரலைக் கேட்டுத் திரும்பியவள் முன்னே,

முகமெங்கும் வசீகரிக்கும் புன்னகையுடன் சற்று அதிகப்படியான உயரத்தில், மாநிறத்தில், நன்று கருதடர்ந்த சிகையும் அதற்கேற்றாற்போல் சீராகவெட்டப்பட்ட மீசையும், நீல ஜீன்ஸும், முழங்கைவரை மடித்துவிட்ட வெள்ளை சட்டையும் நொடியில் கவரும் அழகுடன் கம்பீரமாய் வந்து நின்றான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன்.

நந்தனாவை பார்த்து மயக்கும் புன்னகையை உதிர்த்தவன்

“ஹாய் பேபி! சாரி ஒரு அவசர வேலை, அதான் கொஞ்சம் லேட்“

அவளருகில் அமர்ந்தவன், எதிரில் அமர்ந்திருந்த கௌரவை பார்த்து “ஹாய் நான் நிரஞ்சன். நீ…நீ சொல்லலாம்ல? என்னைவிடச் சின்னப் பையன்தான்னு நினைக்கிறேன்“

“ஸ்ஸ் சொல்லலாம் சார். நான் கௌரவ். நந்தனா காலேஜ் சீனியர்” நிரஞ்சனை பார்த்ததும் மரியாதை தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும் நட்பாய் பழகினாலும் அவன் தோரணை அப்படி.

“ஆமா எதுக்கு என் பெயரைக் கேட்டுக்கிட்டு இருந்தே? என்ன விஷயம்? “ என்று கௌரவை கேட்டவன், அவன் பதிலிக்குக் காத்திராமல் நந்தனாவை பார்த்து

“பேபி வீட்டில் சொல்லும் வரை நம்ம காதல் யாருக்கும் தெரிய வேண்டாம் சொன்னேன்ல ஆனா அதுகுள்ள இப்படி செய்றது நியாயமா?” செல்லமாகக் கடிந்துகொள்ள.

நந்தனா விக்கித்து போனாள் ‘ காதலா? நீயே யாருன்னு தெரியலை இதுல நம்ம காதலா? ஐயோ யாருடா நீ?’ குழப்பமாய் அவனைக் கண்கள் விரியப் பார்க்க

நிரஞ்சனோ “ஹே என்ன யோசனை? ஓட்ட வாய் இன்னும் யார் கிட்ட எல்லாம் சொல்லி வச்சுருக்கே ?” ‌புன்னகைத்தவன்

“ம்ம்…இதுக்கு தான் இவளோ சின்னப் பெண்ணை லவ் பண்ண கூடாதுன்றது”

திகைத்த கௌரவோ தீவிரமாய் நந்தனாவின் முகத்தையே பார்க்க

‘ஆஹா இவன் எதிரே யாருடா நீன்னு கேட்டா வம்பாகிடுமோ? முதல்ல இவனைச் சாக்கா வச்சு அவனைச் சமாளிப்போம் மீதியை அப்புறம் யோசிப்போம்’ அவள் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே

“சரிசரி இனி இப்படிச் செய்யாதே. அப்புறம் இந்தா உன் ஐடி அட்டை போனவாட்டி மீட் பன்னப்போ விட்டுட்டு போயிட்டே. இனியாவது பத்திரமா வச்சிக்கோ” அவள் ஐடி கார்டை கொடுத்தவன் அவள் எதிரே இருந்த மாம்பழ ஜூஸை எடுத்துக் குடித்தபடி

“சாரி கௌரவ் உன்னை மறந்து பேசிட்டே இருக்கேன்…அப்புறம் படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்று ஆரம்பித்தவன் விடாது கேள்விக்கணைகளைத் தொடுக்க விழி பிதுங்கிய கௌரவோ

“சாரி சார் கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன்…வரேன் நந்தனா”

“நந்து நந்து” என்று அழைப்பவன் நிரஞ்சனை கண்டதும் “நந்தனா” என்று நீட்டி முழங்கியது நந்தனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

கௌரவ் தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடிவிட, சிரித்துக்கொண்டே நந்தனாவின் பக்கம் திரும்பியவன் “என்னை மன்னிச்சுடு நந்தனா! நான் வேணும்னே செய்யலை…”என்று அவன் முடிக்கும் முன்னே

“நந்தனா! “ உறுமியபடி அவள் முன் வந்து அமர்ந்தார் காஞ்சனா, நந்தனாவின் அத்தை, அவள் தந்தை கண்ணனின் கடைக்குட்டி தங்கை!

நந்தனா உறைந்தேவிட்டாள்.

“என்ன இது ? நான் இவளோ நேரம் கேட்டதெல்லாம் உண்மையா ? நீங்கக் காதலிக்கிறீர்களா? எவ்வளவு நாளா நடக்குது இதெல்லாம் ?“ புருவம் முடிச்சிட கேட்க

நிரஞ்சனோ நந்தனாவை முந்திக்கொண்டு “ஆமா நாங்க லவ் பண்றோம்! ஆமா அதைக் கேக்க நீங்க யார்? “

“நான் யாரென்று உங்க காதலி சொல்வா! “

நந்தனாவோ அவளிர்க்கே கேட்காத குரலில் “அத்தை” என்று சொல்லத் திகைப்பது நிரஞ்சனின் முறையானது.

காஞ்சனா பார்க்க நந்தனாவின் அப்பா ஜாடை என்றாலும் நந்தனாவின் அக்காவோ என்று கூற தோன்றும். ஃபேஷன் டிசைன் முடித்துவிட்டு இப்பொழுது சொந்தமாகப் பொட்டீக் வைத்திருக்கிறார்.

“இப்போ சரிதானே? நீங்க யார் ? உங்க இரண்டு பேருக்குள்ள எவளோ நாளா இது நடக்குது? எப்படி பழக்கம்? “

“அத்தை அது வந்து இவர் யார்ன்னா…” நந்தனா துவங்க அவள் கையை மேஜையின் அடியில் நிரஞ்சன் பிடிக்க அவளோ வாயடைத்து போனாள்.

“நான் நிரஞ்சன். பிளாஸ்டிக் சர்ஜன்!”

“…”

தானே தொடர்ந்தான் “என் அப்பா ஜெகந்நாதன் கார்டியாக் சர்ஜன் (இதய அறுவைசிகிச்சை நிபுணர்), அம்மா மைதிலி மகப்பேறு மருத்துவர், என் தங்கை நிவேதா BDS பைனல் இயர் படிக்கிறா (பல் மருத்துவம்)” சர்வ சாதாரணமாய் சொன்னான்.

‘குடும்பமே டாக்டரா? ‘ நந்தனா திகைத்தாள்.

காஞ்சனாவோ ஆர்வமாய் “எந்த ஹாஸ்பிடல்ல?”

“எங்கப்பாவுடைய வீனஸ் குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ்”

காஞ்சனாவோ வாய்பிளந்து “வீனஸ் குரூப் உங்களுடையதா ? அந்த அடையார்…”

“எஸ் அதான்…”

“எங்க நந்துவை உங்களுக்கு எப்படித் தெரியும்? எப்படி லவ்?” காஞ்சனாவின் குரலில் ஏகத்திற்கும் மரியாதை கூடியது அப்பட்டமாகத் தெரிந்தது.

“ம்ம் பேபியை, சாரி நந்துவை எனக்குச் சமீபமாத்தான் தெரியும். கண்டதும் காதல் மாதிரி இது பார்த்ததும் காதல். எனக்கு…” மேலும் மேலும் அவன் பேசிக்கொண்டே போகக் காஞ்சனா மயங்கியே போக நந்தனாவோ சிலையாகிப் போனாள்

‘டேய் யாரடா நீ? என்னடா எனக்கே தெரியாம என்னென்னமோ சொல்றே? கண்டதும் காதலாவது காண்டா மிருகமாவது? ஐயோ என்னடா இப்படி புழுகுறே?’ மனம் அடித்துக்கொள்ள, வாய்திறக்கப் போகும்போதெல்லாம் நிரஞ்சன் அவள் கையைப் பிடித்து அழுத்த…அழுத்த…மௌனமானாள்.

“எல்லாம் சரி மிஸ்டர் நிரஞ்சன் ஆனா…” காஞ்சனா தயங்க

“தாராளமா கேளுங்க அத்தை! “ அத்தை என்பதை அழுத்திச் சொன்னவன் கூடவே போனஸாக மயக்கும் புன்னகையை உதிர்த்து “அத்தைன்னு சொல்லலாம்ல ? “ பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டான்.

“தாராளமா அதுல என்ன? “ இப்பொழுது காஞ்சனா இளகிவிட்டார்

“இல்லை பார்த்தா சின்னப் பெண்ணா தெரியுறீங்க ஆனால் அத்தை முறை அதான்.” குளிர் மேல் ஐஸ் அடுக்க அவரோ குளிர்ந்துவிட்டார்

“தேங்க்ஸ் ! நான் நந்து அப்பாவுடைய கடைக்குட்டி தங்கை… எனக்கு மொத்தம் 2 அண்ணா 1 அக்கா. நந்துவோட அப்பாதான் பெரியண்ணா.” புன்னகை குறையாமல் அவர் சொல்ல

“அதானா? ” ஏகத்துக்கும் புன்னகைத்தான் நிரஞ்சன்.

சிறிய அமைதிக்கு பிறகு காஞ்சனா “கேக்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம் நீங்கச் சொல்றதை பார்த்தா உங்களுக்கும் நந்துக்கும் வயசு வித்தியாசம்…” முடிக்காமல் அவர் தயங்க

ஒரு நொடி இறுகி இளகியது நிரஞ்சனின் முகம் “ம்ம் நான் நந்து விட 8 வயசு பெரியவன்.” ஒரு சிறிய மௌனத்தின் பிறகு “ஆனால் அதையெல்லாம் உணரும் முன்னாடியே நந்துவை விரும்பிட்டேன்” ஏனோ அவன் முகம் மீண்டும் இறுகியது

‘ என்னது 8 வயசு பெரியவனா? பார்த்தா தெரியவே இல்லையே! ‘ நந்தனா யோசிக்க

காஞ்சனாவோ நிரஞ்சனின் இறுகிய முகத்தைக் காண சகியாமல் “அதுனால என்ன மிஸ்டர் நிரஞ்சன் என் பாட்டி, தாத்தாவைவிட 12 வயசு சின்னவங்க…”

‘இப்போ இது ரொம்ப முக்கியமா ? ‘ நந்தனா கண்களை உருட்டினாள்.

அவரை குறுக்கிட்டவனோ “மிஸ்டர் எல்லாம் வேண்டாம். நிரஞ்சன்ன்னு சொல்லுங்க ப்ளீஸ் அத்தை”

புன்னகைத்த காஞ்சனா “நீங்கப் பெரிய இடத்துப் பையன் நாங்க நடுத்தர குடும்பம். உங்க வீட்டுல எப்படி? இல்லை வெறுமனே பழகிட்டு…” வார்த்தைகளை முடிக்காமல் எதிரில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்

வெருட்டென்று எழுந்த நிரஞ்சன் சற்று கடினமான குரலில் “இதுக்கு நீங்க என்னை நாலு அரை ஆரஞ்சு இருக்கலாம்! “ கண்களை மூடித் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான்.

பெண்கள் இருவரும் அவனின் செயலில் பதரிவிட

“அதுக்கில்லை நிரஞ்சன்” காஞ்சனா தயங்கியபடி துவங்கக் கையைக் காட்டி அவரைத் தடுத்தவன்.

“இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவின்னா என் நந்தனா தான். இப்போவே என் வீட்டில பேசிட்டு முறைப்படி பெரியவங்களை அழைச்சுட்டு வரேன். “ தீர்க்கமாய் முடிக்கப் பெண்கள் இருவரும் உரைத்தே போனார்கள்.

காஞ்சனா அவன் தன் காதல் மேல் கொண்ட உறுதியில் உறைந்தார் என்றால், நந்தனாவோ ‘ இல்லாத காதல்ல என்ன உறுதிமொழி? டேய் யாரடா நீ ? ‘ என்று உறைந்தாள்.

“சாரி! நான் ஆதங்கத்தில்…”

“பரவாயில்லை மன்னிப்பெல்லாம் வேண்டாம்”

காஞ்சனா நந்தனாவை நோக்கிக் கையை நீட்ட அவளோ திரு திருவென விழிக்க

“கையைக் கொடுடி வாலு ! “ காஞ்சனா புன்னகைக்கக் கையை நீட்டியவளின் கைகளை இரு கைகளாலும் குலுக்கியவர்

“வாழ்த்துக்கள் குட்டிமா நல்ல சாய்ஸ் ! கண்டிப்பா அண்ணா அண்ணிகிட்ட உனக்காக நான் பேசறேன். அதுக்கு முன்னாடி நீயே சொல்லிடு சரியா. என் ஆதரவு உங்கள் ரெண்டு பேருக்கும் எப்போதும் உண்டு”

ஈ என்று வெறுமையாக இளிப்பதைத் தவிர நந்தனாவால் வேறொன்றும் முடியவில்லை

“சரி நான் கிளம்பறேன் அத்தை இன்னும் 2 மணிநேரத்தில் ஒரு சர்ஜெரி இருக்கு நடுவில் பேபியை சாரி நந்துவை பார்க்க வந்தேன்”

“அதென்ன நிரஞ்சன், பேபி ? “ காஞ்சனா கேட்க,

‘அவன் புழுகுறான் அதெல்லாம் கோட்டைவிடு பேபிலதான் உன் சந்தேகமா ? மக்கு அத்தை ! ‘

“அது நான் அவளைச் செல்லமா அப்படிதான் கூப்பிடுவேன் அப்படியே வருது” நிரஞ்சன் அசடு வழிய காஞ்சனாவும் வெட்கப் பட்டார்

நந்தனாருக்கோ தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.

புன்னகையுடன் நிரஞ்சன் விடைபெறக் காஞ்சனா நந்தனாவிடம்

“சாரி நான் ரொம்ப பயந்துட்டேன் என்னவோ ஏதோன்னு நல்ல பையனா இருக்கான். கள்ளி! கார்டு தொலைஞ்சதுனு சொன்னியே மனசு தொலைஞ்சதை சொன்னியா கள்ளி”

‘ தொலஞ்சாதானே சொல்ல, இப்போ தொலைஞ்சது நிம்மதிதான் போல இருக்கு. முண்டம் எவன் என்ன சொன்னாலும் நம்புவியா? ‘

‘ஈ’ என்று இளித்துச் சமாளித்தவள் அங்கிருந்து காஞ்சனாவுடன் புறப்பட்டாள், அவரை அவர் வீட்டில் இறக்கி விட்டவள் தன் வீட்டை அடைத்த நொடிமுதல் யாரையும் ஏற்றெடுத்துப் பார்க்க முடியாமல் அறையிலேயே முடங்கினாள்.

தன்னுள் ஆயிரம் கேள்வி நிரஞ்சனுக்கு கால் செய்தால் அது ஆஃப் என்றே வந்தது. யோசித்து யோசித்து மனம் சோர்த்து.

‘ எதுக்காக அப்படிச் சொன்னான்? ஒரு வேலை இப்படி ப்ரொபோஸ் பன்றானோ ? என்னைப் பார்த்தா கேனை கிறுக்கின்னு நெத்தில எழுதி ஒட்டி இருக்கோ ?‘

கீழ்த்தளத்திலிருந்து சரஸ்வதி “நந்து சாப்பிடவா ! “

பதிலேதும் சொல்லாது மெதுவாக எதிலுமே நாட்டமில்லாதது போல அன்ன நடை நடந்து சென்றாள்.

குடும்பத்தினர் அனைவரும் இரவு உணவிற்காக அமர்ந்திருக்க அவர்களை ஏனோ நேருக்கு நேர் பார்க்க நந்தனாவால் முடியவில்லை. சொல்லத்தெரியாத குற்ற உணர்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது.

“என்ன டா ஐடி கார்டு வாங்கிட்டியா? “ கண்ணன் பாசமாய் கேட்க

“ம்ம் ! “ என்று மட்டுமே பதிலளித்தாள் ‘ ஐயோ ஏன்டா அப்படி சொன்னே லூசு லூசு ! ‘ மனதினுள் நிரஞ்சனை திட்டுவதை நிறுத்துவதாய் இல்லை.

ஸ்ரீராம் “அந்தப் பையன் எப்படி ? சப்பையா தானே இருந்தான் ? “ சிரித்தபடி வம்பிழுக்க

நந்தனாவோ “யாரு ? நிரஞ்சனா? “ எதோ ஞாபகத்தில் கேட்டுவைத்து கண்களை மூடிக்கொண்டாள்.

ஸ்ரீராமோ யோசனையாய் “அவன் பெயர் நிரஞ்சனா ?”

“ம்ம்”

“என்ன பன்றானாம் ? எந்தக் காலேஜ் ? “ சரஸ்வதி அவள் தட்டில் இட்லியை வைத்தபடி கேட்க,

“படிக்கலாம் இல்லை” விட்டேத்தியாய் பதிலளித்தாள்.

“ஆஹா அப்போ வெட்டியா சுத்துறவனா? நெனச்சேன் உனக்குன்னு ஒருத்தன் வந்தான் பார் கார்டு கொடுக்க” ஸ்ரீராம் சிரிக்க, ஏனோ சிலிர்த்தெழுந்தாள் நந்தனா

“அவன் ஒன்னும் வெட்டி இல்லை ! டாக்டர்! பிளாஸ்டிக் சர்ஜன்! “ சொன்னவள் வெறும் இட்லியை வாயில் அடக்கிக்கொண்டாள்

‘அடியே அவனை வெட்டின்னு சொன்னா உனக்கென்ன, தண்டம்ன்னு சொன்னா உனக்கென்ன ? எதுக்கு இப்போ நீ பொங்கரே ? ‘ மனம் கேள்வி கேட்க மறுபடியும் வெறும் இட்லியை வாயில் அடக்கிக் கொண்டாள். மனசாட்சியின் வாயையும் அடைக்க நினைத்து.

குடும்பத்தினர் அவளைக் கேள்வியாய் பார்க்கச் சரஸ்வதி மெதுவாய் நந்தனாவிடம்

“ சாம்பார் தொட்டுச் சாப்பிடு மா”

கணவரைப் பார்த்துக் கண்சாடை காட்ட ‘ என்ன ஆச்சுன்னு கேளுங்க ‘ என்ற அர்த்தத்தில்.

கண்ணனோ மெதுவாய் “ஓஹ் டாக்டரா பரவால்லயே ! எப்படி உன் ஐடி கார்டு அவனுக்குக் கெடைச்சுதாம்? எங்க மீட் பண்ணேடா ? “

“ஹோட்டல்ல பா ! “

“ம்ம் நல்ல பையனா? உன்கிட்ட மரியாதையா பேசினானா ?”

அவளோ மனதில் ‘ மரியாதையா? ஏகத்துக்கும் கொடுத்தான்’

இடையில் புகுந்த ஸ்ரீராமோ “என்னப்பா நீ ? மரியாதையா பேசினானான்னு கேட்குறே ? இவ நூத்தியெட்டு கிழவி பாரு. பார்த்தாலே காமெடி பீசுன்னு தெரிஞ்சுருக்கும். அதுவும் அவன் டாக்டர், இவளுக்கெல்லாம் மரியாதை கொடுக்கனுமா ? நல்ல காமெடி பண்றே போ” நகைக்க,

சாதாரணமாய் தன் அண்ணன் தன்னை கிண்டல் செய்யும் பொழுதெல்லாம் பொங்கிவிடும் நந்தனாவோ மௌனமாய் எதோ நினைவுகளில் தொலைந்தபடி மீண்டும் வெறும் இட்லியை மெள்ள

சரஸ்வதி கவலையானார் “நந்து ! சாம்பார் தொட்டுச் சாப்பிடு. அப்படி என்ன யோசனை சாப்பிடும்பொழுது?”

இவள் பதிலளிக்கும் முன்னரே தொலைப்பேசி மணியடிக்க அதை எடுத்த ஸ்ரீராம் “அப்பா காஞ்சு குட்டி ! “ என்றபடி தொலைப்பேசியைத் தந்தையிடம் கொடுக்க,

கண்ணனோ புன்னகையுடன் “பிச்சுடுவேன் பாடவா காஞ்சுக்குட்டியாம் அத்தைன்னு சொல்லுன்னு சொல்றேன்ல” தொலைப்பேசியை வாங்கிக்கொண்டார்.

“ஆமா என்னைவிட காஞ்சுக்குட்டிக்கு 5 வயசுதான் கூட அதுக்கு அத்தைன்னு சொல்லமுடியுமா ?” ஸ்ரீராம் புன்னகைக்க

“இருந்தாலும் அத்தை முறைடா” சரஸ்வதி நாத்தனாரை விட்டுக்கொடுக்காமல் பேச

“அப்பாக்கு கல்யாணம் செய்யுற வயசுல தாத்தா எப்படித் துள்ளி விளையாடி இருக்கார் பார் மா”விடாமல் வம்பு செய்ய, கண்ணனிடமிருந்து செல்லமாக முதுகில் அடியை வாங்கிக்கொண்டான்.

தொலைப்பேசியில் அத்தை என்றதுமே பகிரென்று இருந்தது நந்தனாவிற்கு

‘ஐயோ காஞ்சுமா போட்டுக் கொடுத்துடாதே நானே எப்படி இதைச் சமாளிக்குறதுன்னு தெரியாமல் முழிக்கிறேன். நீ வேற குட்டையைக் குழப்பிடாதே தெய்வமே’

தொலைப்பேசியில் பேசியபடி கண்ணன் எழுந்து சென்றுவிட நந்தனாவிற்கு ஜீவனே இல்லை.

அவர் வரும் வரை அவள் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

புன்னகைத்தபடி வந்த கண்ணனோ ஏதும் சொல்லாமல் டிவி முன் அமர்ந்துவிட

“என்ன அப்பா சொன்னாங்க அத்தை”

“கிரிஜா அத்தை இல்ல. ஃபோன் பண்ணது காஞ்சனா அத்தைடா”

“ம்ம் காஞ்சனா அத்தை தான்…காஞ்சுமா தான்“

“என்ன ஒரே மரியாதை பொங்குது ? அவளும் என்னமோ ஏகத்துக்கு உனக்காகவே பேசறா. நந்தக்குட்டி நல்ல முடிவாதான் எடுப்பா நம்பு அண்ணன்னு சொல்றா ?”

நந்துவிற்கு இதயமே நின்றது “ஏ…ஏ…ஏன் அப்படி சொல்ராங்க” வியர்த்துவிட

“நீ காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல டேன்ஸ் அடப்போறேன்னு சொன்னதுக்கு நான் மொதல்ல வேண்டாம்னு சொன்னேன்ல அதுக்கு சிபாரிசு. ஆமா நான் அனுமதி கொடுத்ததை நீ அவ கிட்டச் சொல்லலையா ? “

தந்தையைப் பார்த்துச் சன்னமான குரலில் “சாரி பா !” என்றவள் மெல்லத் திரும்பி அன்னையிடமும் “சாரி மா !” எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணனையும் விட்டு வைக்கவில்லை “சாரி டா ! “ என்றவள் அவர்கள் ஏதும் கேட்கும் முன்னரே நாலுகால் பாய்ச்சலில் தன் அறைக்கு ஓடிவிட்டாள்.

தலையணையை எடுத்து மடியில் வைத்து அமர்ந்தவள்

“யாருடா நீ ? எங்கேந்து வந்தே ? எதுக்கு இப்படிப் பொய் சொன்னே? “ தலையணையை அடி அடியென அடித்தாள். கண்களில் கண்ணீர் சிந்தி விடுவேன் என்று மிரட்டக் கண்களை மூடி மௌனமானாள்.

“என் அனுமதி இல்லாமலே என்னை இப்படி நீ விரும்பறேன்னு காஞ்சு அத்தை கிட்டச் சொல்லி வச்சுருக்கியே கிறுக்கு பையா. நான் எப்படிச் சமாளிக்க போறேன். இல்லைனு இப்போ சொன்னா அப்போ ஏன் சும்மா இருந்தேன்னு அத்தை கேப்பாங்களே என்ன செய்வேன் ? ஐயோ தலையே வெடிக்கும் போல இருக்கே”

தலையணையை மொத்தி எடுத்தவள் மீண்டும் மௌனமானாள்.

ஒரு மனம் நிரஞ்சனுக்கு பரிந்துகொண்டு வந்தது ‘ என்னைக் காப்பாற்றத்தானே கௌரவ் கிட்ட பொய் சொன்னான்’

ஒரு மனம் ‘அதுக்காக அவன்தான் காதலன்னு சொல்லனுமா? ‘

‘என்ன காரணமோ தெரியலையே! காரணம் இல்லாமல் இத்தனை பெரிய பொறுப்பில் இருக்கும் டாக்டர் பொய் சொல்லமாட்டான்’

‘ஏது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் லாஜிக்கா ?’

‘அவன் ஒன்னும் வெள்ளை இல்லை மாநிறம்தான் ‘

‘அடியே அவன் எப்படி இருந்தா உனக்கென்ன என்ன ? ‘

‘எனக்கென்ன சும்மா சொன்னேன்’

‘ஒரு ஆணியும் புடுங்க வேணாம் ! மொதல்ல அவனுக்கு கால் போட்டு ஏன்டா இப்படிப் பொய் சொன்னேன்னு நாக்கை பிடுங்கற மாதிரி கேளு’

‘எனக்கென்ன பயமா இதோ கேக்குறேன்’

கைப்பேசியை எடுத்தவள் அவன் எண்ணிற்கு முயற்சித்தாள். ஒவ்வொரு முறையும் நீண்ட ரிங் சென்று தானாக அடங்கியது. அவன் எடுக்க வில்லை.

வெறுப்பாய் கைப்பேசியைக் கட்டிலில் விட்டெறிந்தவள் வாய்விட்டே கத்திவிட்டாள் “போடாடேய் !”

வெகுநேரம் போராடி தன்னை மறந்து அவள் கண்களை மூடிய சிறிது நேரத்தில் கைப்பேசி அலற, அதைத் தட்டுத் தடுமாறி எடுத்து “எஸ்…” தூக்கக் கலக்கத்தில் கேட்க

“நிரஞ்சன் பேசறேன். சாரி தூங்கிட்டியா அப்புறம் கால் பண்ணவா?”

நிரஞ்சனின் குரலில் அவள் உறக்கம் ஊரப்பாக்கம் வரை பறக்க, ஷாக் அடித்தாற்போல் எழுது அமர்ந்தாள்.

“எத்தனை தரம் கால் பண்ணுறது ? எடுத்தா என்ன ?” உரிமையாய் அவள் கேட்க,

அவனோ வருத்தமான குரலில் “சாரி நந்து ! அந்த ஆபரேஷன் கொஞ்சம் கடினமானது அதான் முடிக்க நேரமாகிடுச்சு. என்ன விஷயம்?” கொட்டாவி விட்டபடி கேட்க

இவளையும் அது தொத்திக் கொண்டது கொட்டாவி விட்டவள் “என்ன ஆபரேஷன் ? “

“ஒரு பேஸ் ரீகன்ஸ்ட்ரக்ஷன் (முக சீரமைப்பு) அதான்”

“அப்படின்னா?”

“ஒரு சின்னப் பொண்ணு விபத்துல முகம் அடிபட்டு முகமெல்லாம்… கல்யாண வயசு வேற பாவம் அதை மறுபடி முண்டிஞ்சவரை பழையபடி மாத்துற ஆபரேஷன்”

“சினிமாவுல வறமாதிரியா ? “

“ஹா ஹா அதெல்லாம் தெரியாது. நான் சினிமாவே பாக்குறதில்லை ! “

“ஏன் சினிமாவே பிடிக்காதா? “

“இந்தச் சந்தேகம் கேட்கத்தான் கால் பண்ணியா?”

“இல்லை”அசடு வழிந்தவள்

“முக்கியமா ஏதும் இல்லைனா நாளைக் கால் பண்ணவா? இப்போ ரொம்ப சோர்வா இருக்கு, சாப்பிட போகணும், பசிக்குது”

அவன் பசி என்று சொன்னதும் அவளுள் என்ன ஆனதோ

“இன்னுமா சாப்பிடலை? போங்க சாப்பிடுங்க. முக்கியமா ஒன்னும் இல்லை நாளைப் பேசுவோம் ! பை ! “ அரக்கப் பறக்கப் பேசியவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் ஃபோனை வைத்துவிட்டாள்.

கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தவள் “அச்சோ! மணி 11 20 இன்னுமா சாப்பிடலை? பாவம்“

தனக்காகப் பேசி நியாயம் கேட்க நினைத்தவள் அவன் பசியென்ற வார்த்தையில் அனைத்தையும் மறந்தாள். உறக்கம் பிடிக்காமல் அவன் சொன்ன சிகிச்சை முறையைப் பற்றிப் படிக்கத் துவங்கி உறக்கம் தொலைத்தாள்.

error: Content is protected !!