Ponnoonjal-9

Ponnoonjal-9

ஊஞ்சல் – 9

பொம்மி என்னும் பத்மாக்ஷினி பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து பத்து நாட்கள் கடந்திருந்தது. அவள் பள்ளிக்கு சென்று வந்த கதைகளை எல்லோரிடமும் சொல்லியே அலட்டிக் கொண்டிருந்தாள்.

இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த சின்னாவும் அவளது அட்டகாசத்தை தாங்காமல், வீம்புடன் அவளை சீண்டுவதை வேலையாகக் கொண்டிருந்தான்.

“பொம்மி ஸ்கூல்ல போட்ட ஆட்டத்தை பெருமையா வந்து செப்புர! உவ்வேக்… காது வலிக்குது, ஆஃப் பண்ணு!” – சின்னா.

“நீ கேட்காத சின்னையா! என்னை எல்லாரும் குட் ஃபிரண்ட்னு சொல்றாங்க தெரியுமா?” – பொம்மி.

“அம்மா இவ சொல்றத நம்பாதீங்க! கிளாஸ்ல ரொம்ப சேட்டை பண்ண ஆரம்பிச்சுட்டா! எல்லாரையும் மிரட்டி வைக்கிறா!” தன் பேச்சு தங்கையிடம் பலிக்கவில்லை என்றதும், அசலாட்சியிடம் புகார் படிக்க ஆரம்பித்து விட்டான் சின்னா.

“அவங்க என் ஃபிரண்ட்ஸ் சின்னையா! நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க!” மெத்தனமாய் பதில் கூறினாள் பொம்மி.

“இன்னைக்கு என் ஃபிரண்ட்கூட இவ கிளாஸ் போய் பார்த்தேன், எங்களை போடான்னு சொல்லிட்டா!” – சின்னா.

“இதென்ன பழக்கம் பொம்மி வாடா போடான்னு பேசுறது?” என்று அசலாட்சி கண்டிக்க,

“எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலம்மா இவனை மட்டும் வரச் சொல்லுங்க, நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்!” பள்ளிக்கு சென்று வந்தாலும் வெளிமனிதர்களிடம் பழகுவதை அறவே தவிர்த்து வந்தாள் பொம்மி. மீறிப் பேசினால் முறைப்பு அல்லது பாராமுகமாக இருப்பதை வாடிக்கையாக்கி கொண்டாள்.

“இவ இப்படி இருக்கிறத பார்த்து என் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் உங்க சித்தியும் இப்படிதான் இருக்காங்களான்னு கேக்குறாங்கம்மா” – சின்னா.

“என்ன கேக்குறாங்க பாபு?” இவன் அமைதியாக நடமாடுவதற்கு அதுதான் காரணமோ என தெரிந்து கொள்ள கேட்டாள்.

“உங்கசித்தி உன்கூட எப்படி பழகுறாங்க? அடிக்கிறாங்களா? திட்டுராங்களான்னு கேட்குறாங்க? ஏன்மா?” கிராமத்து மனிதர்களின் எண்ணங்கள், சித்தி என்றால் இப்படிதான் இருப்பார்கள் என்று சின்னாவிடம் சொல்லி வைத்திருக்க அதனால் வந்த குழப்பத்தில் கேட்டான்.

“எங்க வீட்டுல அம்மா தான் இருக்காங்க, சித்தி இல்லன்னு சொல்லுரா பாபு!” உச்சி முகர்ந்து அவனை முத்தமிட்டு சொல்லிட,

“நாணா என்னை பார்க்க இதுவரை ஸ்கூலுக்கு வந்ததில்ல? நீங்களும் பொம்மிய சேர்த்த பிறகு தானே வந்தீங்க?” என்று சின்னா கேட்கும்போதே அசலாவிற்கு மகனின் ஏக்கம் தெளிவாக புரிந்து விட்டது.

“நீ சின்ன பையனா இருக்கும் போது வந்திருப்பார், உனக்கு மறந்திருக்கும் கண்ணா!”

“நீங்களே இனிமே இவள வந்து பார்த்துக்கோங்க!” முகம் கூம்பியே சின்னா பேசிட,

“உன்னை நம்பித்தான் அவள ஸ்கூல்ல சேர்த்திருக்கோம் பாபு! நீதான் பார்த்துக்கனும்ரா” என்று அவனுக்குரிய பொறுப்பை சுட்டிக்காட்ட, அதுவே அவனுக்கு மனதை சமன்படுத்தி விட்டது..

“நான் பார்த்துப்பேன்ம்மா… இவதான் என்னை சேர்த்துக்க மாட்டா!” அசிரத்தையாய் சொல்ல

“இனி அப்படி பேசமாட்டா… நான் சொல்லி வைக்கிறேன்” என்று மேலும் பல வார்த்தைகளை பேசி ஒருவாறு சமாதானப்படுத்தினாள்.

சின்னாவின் ஏக்கத்தைப் பற்றி கணவனிடம் கூறினாலும் அவன் அதை மனதில் பதிய வைத்துக் கொண்டானா என்று தெரியவில்லை.

“சின்னா மனசுல தேவையில்லாத குழப்பம் இருக்குனு நினைக்கிறேன், அவன்கூட கொஞ்ச நேரம் பேசுங்க பாவா”

“அவன் சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க மாட்டியா சாலா?” என்று விட்டேற்றியாக பதில் சொல்லி விட்டான்.

ஆனால் அத்தனை எளிதாக இந்த பிரச்சனை முடிந்து விடவில்லை. புதிதாக வந்த உறவுகளிடம் காட்டும் நெருக்கம் தங்கள் பேரனிடம் காட்டவில்லை என்று ரிஷபனை குறை கூறி, சின்னாவை தாங்களே வளர்த்துக் கொள்கிறோம் என்று வந்தனர் கங்காலட்சுமியின் பெற்றோர்கள்.

ரிஷபனின் முதல் மனைவி கங்காலட்சுமி தூரத்து உறவு முறைப்பெண். அந்தஸ்தைப் பார்க்காமல் பெண்ணின் குணத்தை மட்டுமே பார்த்து ரிஷபனுக்கு மணம் முடித்து இருந்தனர்.

சிறிதளவு நிலத்தை தானமாக கொடுத்து அவர்களின் வருமானத்திற்கு ரிஷபனும் வழிவகை செய்திருந்தான். மகளின் மறைவிற்கு பிறகு பேரனை தங்களிடம் வளர்க்க கொடுக்காத மனஸ்தாபம் அவர்களை ரிஷபனின் குடும்பத்திலிருந்து தள்ளி வைத்திருக்க, சமயம் கிடைக்கும் பொழுது மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்வர்.

அப்படி ஓரிருமுறை வந்த சமயங்களில் பொம்மி அவனை சின்னையா என்று அழைத்து அதிகாரம் செய்ததும், அந்த வீட்டில் உள்ளவர்கள் அவளை கொஞ்சியே மகிழ்வதும் ஏனோ தங்கள் பேரனை ஒதுக்குவதாக பட புதிய முடிவோடு வந்தனர்.

கிராமத்தில் உள்ள பெரியவர்களை சேர்த்துக் கொண்டு நியாயம் கேட்டு வந்தது, ரிஷபனை மட்டுமல்ல ராமைய்யாவையும் ஆவேசம் கொள்ள வைத்தது. இருவருக்கும் ஊரார் முன் பொறுமையுடன் பேசுவதே பெரும் அவஸ்தையாக இருந்தது.

வீட்டில் வரவேற்பறையில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்திட முடியாமல் உள்ளே மாமியார் மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள் அசலாட்சி. கிராமத்தில் எப்பொழுதும் பெண்களை சபையில் சமமாக மதிக்கும் பழக்கம் குறைவே!

அவர்களது குற்றச்சாட்டு எல்லாம் ரிஷபனை மட்டுமே பின்னப்பட்டு இருந்தது. அவர்களது கோரிக்கை அந்த குடும்பத்தையே ஆட்டம் காணச் செய்தது எனலாம்.

புதுமனைவியின் மோகத்தில் சின்னாவை ரிஷபன் மறந்து விட்டான் என்றும், பெண் குழந்தையை அக்கறையுடன் தூக்கிக் கொண்டு அலைபவன் எதிர்காலத்தில் சொத்து முழுவதையும் மனைவி மற்றும் மகள் பெயருக்கே மாற்றி விடுவான் என்றும் அடுக்கடுக்கான புகார்கள் ரிஷபன் மீது சொல்லப்பட்டது.

சின்னாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பூர்வீக சொத்து முழுவதையும் அவன் பெயருக்கு இப்பொழுதே மாற்றி வைக்கவும், அவனை தங்கள் பொறுப்பில் விடவும் கங்காலட்சுமியின் பெற்றோர் கோரிக்கை வைக்க, அங்கே நிலவரம் கலவரமாக வெடிக்க தொடங்கியது.

“பட்டணத்து பொண்ணையும், அவங்க பழக்க வழக்கத்தையும் பார்த்ததும் குடும்பமே மயங்கி போயிடுச்சு” என்று தாய் மகளின் மீதும் குற்றம் சுமத்த, உரிமையுடன் அவர்களிடம் தான் பாசம் காட்டியதும் தவறாகிப் போனதோ என்றே மனதோடு நொந்து கொண்டான் ரிஷபன்.

“அவங்க வந்ததாலதான் சின்னாக்கு குறையாகிப் போச்சா?” என்று ஆற்றாமையுடன் ராமைய்யாவும் கேட்க,

“இல்லையா பின்ன? என் பொண்ணு இருந்தப்போ ஒருநாளும் பொண்டாட்டி பிள்ளைனு கவனிச்சதில்ல உங்க மகன்… பொறுப்பில்லாம அவளை எமன்கிட்ட தூக்கி கொடுத்த மாதிரி, எங்க பேரனையும் தூக்கிக் கொடுக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்?” என்று சொன்னதும் ரிஷபனுக்கு அடங்காத கோபம் வர கொந்தளித்து விட்டான்.

அவனது கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் எழுந்தவன், தான் அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்து தள்ளியபடியே, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று,

“யார் வீட்டுக்கு வந்து என்ன பேசுறீங்க? என்னை சீண்டிப் பார்க்க நினைக்கிறீங்களா?” என்று ஆக்ரோஷமாய் கத்த, அவனது கட்டுக்கடங்காத சத்தத்தில் உள்ளே குழந்தைகளுடன் அமர்ந்திருந்த அசலா வெளியே எட்டிப் பார்த்தாள்.

“என் மனைவி பிள்ளைகள பத்தி பேச இங்கே யாருக்கும் உரிமையில்லை… இவ்வளவு நாள் எங்கே போனீங்க? பத்து வருஷம் அவனை தூரமா இருந்து பார்த்தவங்களுக்கு இப்போ என்ன புது பாசம் பொங்குது? என் மகனை என்கிட்டே இருந்து பிரிச்சு வைக்கிற உரிமைய யார் உங்களுக்கு கொடுத்தா?” என்று கண்கள் சிவக்க, ரிஷபன் பேசிய பேச்சில் கேள்வி கேட்பவர்களை அடித்து விடும் ஆவேசம் தெரிந்தது.

“வாசு! நான் பேசுறேன் நீ அமைதியா இரு” என்று ராமைய்யா எடுத்து சொன்னாலும் அவன் அடங்கவில்லை.

“இவங்களோட கிறுக்குத்தனத்துக்கு நான் தலையாட்டிட்டு உக்காந்திருக்கனுமா?” என்று மீசையை முறுக்கிக் கொண்டு நின்றவனின் தோரணையே சொன்னது இனி உங்களை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று…

“ஊர் பெரியவங்கள நீயே இப்படி சத்தம் போட்டு பேசினா எப்படி?” என்று அவனது பதவியை நினைவுபடுத்தி மீண்டும் தந்தை அறிவுறுத்தவும் சற்றே அடங்கினான்.

“இப்போ மட்டுமில்ல எப்போவும் எங்க வீட்டு வாரிச யார் கூடவும் அனுப்ப முடியாது… எங்க குடும்ப விஷயத்துல யாரும் உள்ளே வரவேணாம்… யாருக்கு எப்போ என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும்” என்று கண்டிப்புடன் பேசி முடித்தார் ராமையா.

“விவரம் தெரியாத பையனா இருந்தா நீங்க சொல்றத சரின்னு கேட்டுட்டு போகலாம். அவனை கூப்பிட்டு கேப்போம்… இங்கே இருக்குறது அவனுக்கு பிடிக்குதா இல்லையான்னு?

அவன் எங்ககூட வர சம்மத்திச்சா, அனுப்பி வைங்க… யாருமே திரும்பி பார்க்காத மாளிகையில இருக்குறத விட, கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க போற எங்ககூட குடிசையில இருக்குறது எவ்வளவோ மேல்” என்று கங்காலட்சுமியின் தந்தை புதிய வெடியை கொளுத்திப் போட, அது அனைவரின் ஆதரவோடு நன்றாக பற்றி எரிந்து சின்னாவை சபைக்கு வரவழைத்து நிறுத்தியது.

இங்கே இந்த களேபரம் நடந்து கொண்டிருக்க உள்ளே அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டே விவரங்களை கேட்டுக் கொண்டே இருந்தாள் பொம்மி. அசலட்சியால் சற்று நேரம் கூட அவளை அடக்க முடியவில்லை.

“சின்னையா நீ குட்பாய் தானே? என்ன சேட்டை பண்ண? எதுக்கு உன்பேரையே சொல்லிட்டு இருக்காங்க…” கிராமத்தினர் பேசிய தெலுங்கு பாஷை அவளுக்கு புரியாமல் அவன் பேர் மட்டுமே அவளுக்கு விளங்கிட, காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள்.

“எனக்கும் தெரியல பொம்மி! என்னம்மா சொல்றாங்க… நாணா ஏன் இவ்வளவு சத்தம் போட்டு பேசுறாங்க?” வெளிறிய முகத்துடன் அசலாட்சியிடம் கேட்டான் சின்னா.

“போச்சு… சீனிப்பாக்கு கோபம் வந்துடுச்சு சின்னையா… அந்த சேரை எடுத்து யாரையோ அடிக்க போறாங்க…” என்று ரிஷபன் கோபமுடன் எழுந்து நின்ற வேகத்தை குறிப்பிட்டாள்.

“கொஞ்ச நேரம் பேசாதே பொம்மி! அப்புறமா அம்மா உனக்கு சொல்றேன்” என்று கெஞ்சிய பிறகே அவள் சற்று நேரம் அமைதியானாள்.

“இப்போ உன்னை அங்கே கூப்பிடுவாங்க பாபு… உன் மனசுல என்ன தோணுதோ அதை சொல்லுரா” – அசலாட்சி.

“எல்லாரும் கோபமா பேசுறாங்க நான் போகமாட்டேன்” – சின்னா.

“நாணா பக்கத்துல நின்னுக்கோ சின்னையா… பயம் போயிடும். எனக்கும் இப்படிதான்… ஸ்கூல் போனதும் நாணா தூக்கினாரா எனக்கு பயம் போயிடுச்சு…” என்று தன் இரட்டை குடுமிகள் ஆட பாவனையுடன் பேசினாள் அந்த பெரிய மனுஷி.

அறைவாசலில் நின்றிருந்த சின்னாவை ரிஷபன் அழைக்க அங்கே வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து, வெலவெலத்து நின்றான். அந்த நேரத்தில் அவன் தோள் அணைத்து அன்பாக பேச யாரும் முன்வரவில்லை. அந்த நொடியில் ஏற்பட்ட பதட்டம் அசலாட்சியின் அரவணைப்பை அவன் மனம் வெகுவாக தேடியது.

“நீ எங்கே இருக்க போறே சின்னா?”

“இங்கே உனக்கு இருக்க பிடிக்குதா?”

“புதுசா வந்த சித்தி எப்படி நடத்துறாங்க?”

“உன்னை யாரும் கஷ்டபடுத்துராங்களா?” என்று பலர் பலவிதமா சின்னாவிடம் கேள்வி கேட்க, அவனுக்கு எதற்காக தன்னிடம் இதையெல்லாம் கேட்கின்றனர் என்றே விளங்கவில்லை.

பதிலைச் சொல்லாமல் முழித்துக் கொண்டு பயத்தோடு நிற்கும் மகனின் நிலையை ரிஷபனும் கவனிக்க தவறிவிட்டான். அவனது அந்த நேரத்து கோபம், மகன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தந்தையின் இந்த மாதிரியான தோற்றத்தை இதுவரை கண்டிராத மகனுக்கு அதிர்ச்சியோடு கலந்த பயத்தை மேலும் கூட்டியது.

சின்னாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்த அசலாவும் சபையின் ஓரத்தில் வந்து நின்று, ‘பயப்படாதே’ என்று சைகையில் சொல்ல,

“சின்னையா நாங்க இங்கேதான் இருக்கோம்… பயப்படாதே!” என்று யாருக்கும் கேட்காத கிசுகிசுக்கும் குரலில் பொம்மி சொன்னாள்.

அவனிடம் இருந்து பதில் வரவில்லை… நிமிடங்கள் கரைய பொறுமை இழந்து முதியவர் ஒருவர் கங்காலட்சுமியின் தந்தையை பார்த்து,

“பேரனை பார்த்து பேசிட்டோம்… அவன் வர சம்மதிச்சுட்டான்னு சொன்னீங்க. இப்போ பதில் பேசாம நிக்கிறானே” என்று மேலும் கொளுத்திப் போட, ரிஷபனின் கோபம் கட்டுக்கடங்காமல் மகன் மீது மையம் கொண்டது.

“யார் வந்து என்ன பேசினா செப்புரா? எப்போ பேசினாங்க?” என்று சத்தம் போட,

“சின்ன பையன மிரட்டாதீங்க! நாங்கதான் பள்ளிகூடத்துக்கு போய் பேசிட்டு வந்தோம்” என்று சொன்னது ரிஷபனின் முன்னாள் மாமனார்.

அளவில்லாமல் மனதை அடைத்துக்கொண்ட கோபம் ஒரே நொடியில் வீரியம் கொண்டு விட,

“யார் வந்து என்ன பேசினாலும் வீட்டுல சொல்ல மாட்டியா? என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அடிக்க கையை ஒங்கி விட்டான் ரிஷபன்.

சின்னாவிடம் ஆத்திரத்துடன் பேசும் போதே, அங்கே முன்னேறி வந்த அசலாட்சி, ரிஷபனின் அடி மகனை தாக்கும் முன்பே அவனை மார்போடு அரவணைத்து பின்னடைந்து விட்டாள்.

“உங்க கோபத்தை காட்ட என் பையன்தான் கிடைச்சானா? யார் பிரச்சனை பண்றாங்களோ அவங்களை பேசி அனுப்பி வைக்கிறத விட்டுட்டு, சின்ன பையன எதுக்கு நிக்க வைக்கறீங்க பாவா?” என்று அனைவரின் முன்பும் சற்றே கோபமாக கூறியவள்,

“இங்கே உங்க பேரன் மட்டும் இல்ல, உங்க பொண்ணு உங்க பேத்தியும் இங்கே தான் இருக்கோம்… எப்போ என்ன தேவைன்னு சொன்னாலும் ஓடி வந்து செய்ய நாங்க தயாரா இருக்கோம்… இந்த சொத்து தான் உங்களுக்கு பிரச்சனைன்னா இப்போவே எங்களுக்கு வேண்டாம்னு எழுதி குடுக்கறேன்… வீணா சந்தேகப்பட்டு எங்களை பிரிச்சுராதீங்க” என்று சமாதானமாகப் பேச ஆரம்பித்து கனிவுடன் முடித்தாள் அசலாட்சி.

அதுவரை அவளோடு ஒட்டிக்கொண்டு இருந்த சின்னாவும், “நானும் அம்மாவ விட்டு போகமாட்டேன் நாணா” என்று அழுகையோடு சொல்லி மீண்டும் அசலாவின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.

“சின்னையா இங்கேயே இருக்கட்டும் சீனிப்பா! அம்மா வேணும்னு அழுவான்… அவன் பாவம் சீனிப்பா…” தாயை ஓட்டிக்கொண்டே நின்று தந்தையைப் பார்த்து பேசிய பொம்மி ராமையாவை நோக்கி,

“தாத்தா… சின்னையாவ யாரையும் கூட்டிட்டு போக கூடாதுன்னு சொல்லுங்க… எனக்கு சின்னையாவ ரொம்ப பிடிக்கும்… என்கூடவே இருக்கட்டும்” என்று அழகாக உத்தரவிட்டாள் பொம்மி.

“நான் சொல்லிட்டேன்ரா அம்மு… இவங்களுக்கு உங்க நாணாதான் கவனிக்கனும் போல…” என்று ராமைய்யா சொல்லியபடியே அனைவரையும் கூர்ந்து நோக்க, அங்கே இருந்தவர்களும் சின்னா, பொம்மி இருவரும் அசலாட்சியை கட்டியனைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்து போய் விட்டனர்.

“அழாதேரா பாபு! அம்மா இருக்கும்போது எங்கேயும் அனுப்ப மாட்டேன்” என்று அசலாட்சி பலவாறு சமாதானம் சொன்னாலும் சின்னாவின் அழுகை முடிந்த பாடில்லை.

“இந்த தாத்தா எப்போவாவது வந்து வெளியே கூட்டிட்டு போவாரு! இப்பவும் அப்படிதான் கேக்குறார்னு நினைச்சு சரின்னு சொல்லிட்டேன்… இங்கே இருந்து என்னை அனுப்ப வேணாம்னு சொல்லுங்கம்மா” என்று அழுகையில் திக்கி திணறியபடியே சின்னா நடந்ததை சொல்ல…

இப்பொழுது பேச இயலாமல் திண்டாடியது ரிஷபன் மட்டுமே! பன்னிரண்டு வயது மகனை தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற குற்ற உணர்வு மேலோங்க, தனது வீட்டில் தன்னையே அன்னியமாக உணர ஆரம்பித்து அவன் மனதும் தவியாய் தவித்து விட்டது.

தன்னை தனியாக ஒதுக்கி வைத்து விட்டு மூவரும் ஒன்று சேர்ந்து நின்றது அந்த நேரத்தில் அவனுக்கு சற்று பொறாமையையும் வரவழைத்தது.

“சீனிப்பா இப்போ இவங்கள எல்லாம் போக சொல்லுங்க… சின்னையா அழுறான்?” என்று அவன் தவிப்பிற்கும் தடை விதித்து, அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிக்க தந்தையை துரிதப்படுத்தினாள் பொம்மி.

“நீ தான்ரா இவங்க கூட பேச சரியான ஆள்… செப்புரா உனக்கு என்ன சொல்லனும்னு தோணுதோ அத சொல்லி இவங்கள எல்லாம் விரட்டி விடு பங்காரம்!” என்று சொல்லிக்கொண்டே மகளை தோள்களில் அள்ளிக் கொண்டான். மகளுக்கும் தந்தை கூறிய வார்த்தையே தெம்பை கொடுக்க,

“பெரியவங்க எல்லாம் குட்டி பசங்கள அழவைக்க மாட்டாங்க! நல்லபிள்ளையா இருன்னு மட்டுமே சொல்வாங்க! அதே மாதிரி நீங்களும் சொல்லிட்டு இங்கே இருந்து போய்டுங்க… எங்க சின்னா நீங்க போனாதான் அழுகையை நிப்பாட்டுவான்” என்று தந்தையின் தோள்களில் இருந்த தைரியத்தில் அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டு,

“அப்படிதானே சின்னையா!” என்று தன் அண்ணனைப் பார்த்து கேட்க அவனும் அழுகையுடன் ‘ஆமாம்’ என்று தலையசைத்து அசலாவின் தோள்சாய்ந்து விட்டான்.

அத்தனை தவிப்பு அவனுக்கு. தன்னை இங்கே இருந்து அனுப்பி விடுவார்களோ? தனக்கு கிடைத்த புதிய அன்பும் அரவணைப்பும் எங்கே தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி நடுங்கியவனுக்கு, பழையபடி தாய் மடியில் வந்து சேர்ந்ததும் அவளை விட்டு விலக மனம் வரவில்லை.

“கேட்டாச்சா… திருப்தியா உங்களுக்கு… சொத்து மட்டுமே முக்கியமா நினைச்சு நீங்க கிளம்பி வந்துடீங்க… இங்கே யாருக்கும் அது தேவையில்ல… என் குடும்பத்தை பத்தி யாரும் விமர்சிக்க நான் விடமாட்டேன். முடிஞ்சு போனத பத்தி அலசி ஆராய நான் தயாரா இல்ல… என் மேல தப்பில்லன்னு நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்ல… இப்படி கிளம்பி வர்றது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று கங்காலட்சுமி பெற்றோரை பார்த்து ஆணித்தரமாய் கூறியவன்,

“பெரியவங்கன்னு மாரியாதை கொடுக்க நினைக்கிறேன், பிரச்சனை பண்ணியே ஆகனும்னு நினைச்சா எனக்கு ஆட்சேபனை இல்ல… எதுவா இருந்தாலும் ஒரு கை பார்க்க நானும் தயாரா இருக்கேன்” என்று ஊர்க்காவலனாய் ரிஷபன் முடிக்க, அவனது மிரட்டலில் வந்த கூட்டம் எந்த சலசலப்பும் இல்லாமல் கலைந்து போனது.

அசலாட்சிக்கு கணவனின் மேல் கோபம் இன்னும் குறைந்த பாடில்லை. ஒன்றும் தெரியாத சிறுவனை பயமுறுத்தியதும் அல்லாமல் அனைவரின் முன்பும் அவனை அடிக்க முன்வந்ததையும் நினைத்து அவள் மனம் மிகவும் வேதனைபட்டுக் கொண்டிருந்தத்து.

ரிஷபனின் கசையடியின் வலியையும், அவனது கை வலிமையையும் பார்த்தும் கேட்டும் இருந்தவளுக்கு, அந்த திண்மையான கைகளால் மகன் அடி வாங்கிருந்தால் அவனது நிலை என்னவாகி இருக்கும் என்ற நினைவே அவளுக்கு உடலெங்கும் நடுக்கத்தை தந்தது.

இதனைத் தன் பேச்சிலும் வெளிபடுத்தி விட்டாள். “கல்யாணமான அன்னைக்கே தத்தெடுத்ததையும் பதிவு பண்ணி வச்சோமே! அதை காமிச்சு அவங்கள விரட்டி விடறத விட்டுட்டு இப்படி பிள்ளைய பயமுறுத்தி வைக்கிறீங்களே பாவா! சின்ன பையன் மனசு உடைஞ்சி போகும்னு தெரியாதா?” என்று கோபம் குறையாமல் பேசிட,

“சாலா! இது கிராமம் அவ்வளவு சீக்கிரமா வந்தவங்கள திருப்பி அனுப்ப முடியாது. உனக்கு இதெல்லாம் தெரியாது” என்று ஒரே பதிலில் அவளை வேறு கேள்வியை கேட்க முடியாமல் தடை செய்து விட்டான்

“வாசு நானும் அத தான் சொல்றேன்… உன்னோட கோபத்தை கட்டுபடுத்தி அமைதியா மருமக சொல்ற மாதிரி அவங்க கூட பேசி சமாதானம் ஆகிருக்கலாம். நீ சத்தம் போட்டு அவங்கள ஏத்தி விட்ட மாதிரி ஆகிடுச்சு” – ராமையா

“இருக்கட்டுமே… யார் குடும்பத்தை யார் வந்து பேசுறதுன்னு வரைமுறை வேணாம்…” என்று முடியாத கோபத்தில் ரிஷபன் சொல்ல,

“நீ கங்காவ சரியா கவனிக்கலன்னு ஒரு ஆதங்கம், அவங்கள பேச வைச்சிருச்சு வாசு” – ராமைய்யா.

“நீங்களும் என்னை பொறுப்பில்லாத்தவன்னு சொல்றீங்களா? நாணா” என்று தந்தையின் பேச்சில் மேலும் கோபம் கொண்டு வெளியே கிளம்பி விட்டான் ரிஷபன்.

ஊராரின் முன் தன் குடும்ப வாழ்க்கை பற்றிய விமர்சனம், தன் வீட்டுக்குள்ளேயே தான் தனிமைப் படுத்தப்பட்ட உணர்வு, மனைவியின் தற்போதைய கோபமுகம் அதோடு தந்தையின் அறிவுரை என்று எல்லாம் ஒன்று சேர ரிஷபனின் மனம் பலவித உளைச்சல்களை தத்தெடுத்துக் கொண்டு தீர்வு காணமுடியாமல் தவித்துப் போனது.

அழும் மகனை சமாதானப் படுத்தும் முயற்சியில் இருந்த அசலாட்சிக்கு கணவன் கோபித்துக் கொண்டு போக, அவனை தடுக்கும் வழி யாதென்று தெரியாமல் தன் பங்கிற்கு அவளும் தவித்துப் போனாள்.

error: Content is protected !!