Lovely Lavi – Episode 23
Lovely Lavi – Episode 23
அத்தியாயம் – 23
லவி எடுத்தெறிந்து பேச, “லவி… நீ கொஞ்சம் கூட மாறலை.” என்று யாதவ் எழுந்து நின்று கோபமாகக் கூற, “யாதவ்..” என்று சங்கர் நிதானமாக அழைத்தான்.
“என்னை ஏன்டா சொல்ற? உன் மனைவியை சொல்லு.” என்று யாதவ் கடுப்பாகக் கூற, “சரி… நாங்க வரோம். ராஜ்க்காக வரோம்.” என்று சங்கர் பதவிசமாக கூறினான்.
‘எல்லாம் ராஜ்க்காக? சும்மா சும்மா பையன் பெயரைச் சொல்லிச் சொல்லி இவன் நினைச்சதெல்லாம் செய்ய வேண்டியது. அப்ப எனக்கு என்ன மரியாதை?’ என்று மனதில் சங்கரை திட்டியபடி, “முடியாது. நான் யார் சொல்றதையும் கேட்க மாட்டேன்.” என்று லவி உறுதியாகக் கூறினாள்.
‘இப்ப லவி இப்படி எல்லாம் பேசமாட்டாளே… இன்னைக்கி என்ன பிரச்சனை?’ என்ற யோசனையோடு சங்கர் சோபாவில் அமர்ந்தபடி லவியை கூர்மையாக பார்க்க, லவி எதிரே இருந்த நாற்காலியில் கோபமாக அமர்ந்திருந்தாள்.
இவர்கள் பேச்சில் சுவாரஸ்யமின்றி, ராஜ் அவன் அறையில் விளையாட ஆரம்பித்தான். “நீ என்னைக்கு யார் சொல்றதை கேட்குறக்க?” என்று யாதவ் கோபமாக கேட்க, “யாதவ் கொஞ்சம் அமைதியா இரேன்.” என்று சங்கர் கெஞ்சினான்.
நித்திலா, மூவரையும் பரிதாபமாகப் பார்க்க, “எதுக்கு டா அமைதியா இருக்கணும்? நீ இப்படி அமைதியா இருக்கறது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.” என்று யாதவ் சங்கரைப் பார்த்து அறிவுரை கூற, “ம்… ச்…” என்று சலிப்பாகக் குரல் எழுப்பினான் சங்கர்.
லவி எதுவும் பேசாமல் பிடிவாதமாக அமர்ந்திருக்க, “லவி நல்லா கேட்டுக்கோ. உன் கோபம், உன் பிடிவாதம் இது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். உன் பொறுமையின்மையால் நீ இழந்தது அதிகம்.” என்று யாதவ் கூற, “யாதவ்… போதும் நிறுத்து.” என்று சோபாவிலிருந்து எழுந்து நின்று கோபமாகக் கர்ஜித்தான் சங்கர்.
“நான் ஏண்டா நிறுத்தணும்? நான் சொல்றதில் என்ன தப்பிருக்கு? என்ன பொய் இருக்கு? அவ பிடிவாதத்தால் அவ வாழ்க்கையும் நாசமாக்கி, உன் வாழ்க்கையையும் நாசமாக்கி, இப்ப ராஜ் வாழ்க்கையும் நாசமாக்க….” என்று யாதவ் கோபமாகப் பேசிக் கொண்டே செல்ல, சங்கரின் கைகள் யாதவின் கன்னத்தில் பளார் என்று இறங்கியது.
யாதவ் சங்கரையும், லவியையும் கோபமாக முறைத்தப்படி அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
யாதவ் சென்று விட, “சங்கர்… லூசா நீ? உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? இன்னைக்கி தான் யாதவ் என்னை இப்படி பேசிறானா? இத்தனை வருஷமா அவன் இப்படி பேசினதே இல்லையா?” என்று லவி சங்கர் முன் நின்று கொண்டு கோபமாகக் கேட்க, “லவி… விடு… நான் பார்த்துக்கறேன்…” என்று நித்திலா கூற, “இத்தனை வருஷம் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால், என் மனைவியை பேசுற உரிமை யாருக்கும் கிடையாது.” என்று சங்கர் அழுத்தமாக கூற லவி சங்கரை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
அரை நொடியில் தன்னை சமாதானம் செய்து கொண்டு, “நீ மட்டும் அடுத்தவ புருஷனை அடிக்கலாமா?” என்று லவி சண்டைக்கு தயாராக, ‘ஐயோ… நம்மளால சங்கர், லவிக்கு சண்டை வந்திற கூடாதே.’ என்றெண்ணி, “லவி… தயவு செய்ஞ்சி அமைதியா இரு.” என்று நித்திலா கெஞ்ச, “நித்திலா நீ போ. நான் யாதவ் கிட்ட பேசுறேன்.” என்று நித்திலாவிடம் சங்கர் கூற, நித்திலா அவர்கள் வீட்டிற்குச் சென்றாள்.
“சங்கர்… உனக்கு ரொம்ப கோவம் வருது. இது நல்லதுக்கில்லை.” என்று லவி கோபமாகக் கூற, சங்கர் அந்த கருப்பு நிற குஷன் சோபாவில் சாய்வாக அமர்ந்தான். “நான் உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்.” என்று லவி அவன் முன் இடுப்பில் கை வைத்து, சீற்றமாக கூற, “உன்னைப் பத்தி யாரோ பேசுறது எனக்கு பிடிக்கலை. அது யாதவா இருந்தாலும் சரி.” என்று சங்கர் இறுமாப்போடு கூற, “நித்திலா மனசு சங்கடப்பட்டிருப்பாளே?” என்று லவி இறங்கிய குரலில் கூற, சங்கர் லவியை யோசனையாகப் பார்த்தான்.
“சரி… விடு… எங்களுக்குள்ள என்ன ஈகோ! நான் யாதவ் கிட்ட பேசுறேன். நித்திலா கிட்டையும் பேசுறேன்.” என்று சங்கர் சமாதானமாகக் கூற, ‘இவன் தான் சங்கர்.’ என்று அவனை மெச்சுதலாக பார்த்தாள் லவி.
சங்கர் யாதவ் வீட்டிற்குச் செல்ல, நித்திலா கதவைத் திறந்தாள். யாதவ் சங்கர் வருவான் என்றறிந்தவன் போல், அவனைப் பார்த்தும் பார்க்காதது போல், தன் தலையைக் கோபமாகத் திருப்பிக் கொண்டான்.
“நித்திலா சாரி.” என்று சங்கர் குற்ற உணர்ச்சியோடு கூற, யாதவ் சங்கரை அதிர்ச்சியாகப் பார்த்தான். “உங்க இரண்டு பேருக்கு இடையில் ஒரு நாளும் வர மாட்டேன். சங்கர் உங்க பாடாச்சு. யாதவ் பாடாச்சு.” என்று நித்திலா சமையலறைக்குள் சென்று கொண்டே கூற, “என்ன இரண்டு பேரும், என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க?” என்று கடுப்பாக கேட்டான் யாதவ்.
“அடிச்சது என்னை! மன்னிப்பு அவ கிட்டயா?” என்று யாதவ் தன் கண்களைச் சுருக்கி கேட்க, “நீ லவியை சொன்னா, எனக்குக் கோபம் வர மாதிரி, உன்னை அடிச்சா நித்திலாக்கு கோபம் வருமில்லை.” என்று சங்கர் யாதவின் தோள் மேல் கைபோட்டுக் கூற, சங்கரின் கைகளைத் தட்டி விட்டான் யாதவ்.
“உன் அன்பை உன் பொண்டாட்டி கிட்ட சொல்றதுக்கு ஆயிரம் வழி இருக்கு. அதுல எதாவது ஒன்னை யூஸ் பண்ண வேண்டியது தானே? என்னை அடிச்சி தான் உன் மனைவிக்கு காதலை சொல்லுவீயா?” என்று யாதவ் கடுப்பாக கேட்க, நித்திலா “க்ளுக்…” என்று சிரித்தாள்.
“உனக்கென சிரிப்பு?” என்று யாதவ் தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு நித்திலாவிடம் பாய, “நீங்க லவியை பத்தி எப்படி அப்படி சொல்லலாம்? லவி எந்த தப்பும் பண்ணலை. அவ வரலைன்னு சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்.” என்று தன் தோழிக்காக வக்காலத்து வாங்கினாள் நித்திலா.
“ம்..க்கும்…” என்று யாதவ் சலிப்பாகக் கூற, “யாதவ்… எதாவது காரணம் இருக்கும். நான் பேசி அவளை கூட்டிட்டு வரேன்.” என்று சங்கர் உறுதி அளித்தான்.”ஆனால், லவியின் உடல் நிலை.” என்று நித்திலா இழுக்க… “ஒன்னும் பிரச்சனை இல்லை. அவ ஸ்ட்ரெஸ் ஆனா தான் அவ உயிருக்கு ஆபத்து. மத்தபடி.. ஒன்னும் கவலைப் படவேண்டாம். நாம கூடத் தானே இருக்கோம். நான் பார்த்துப்பேன்.” என்று சங்கர் நம்பிக்கையோடு கூற, நித்திலா தலை அசைத்தாள்.
“சரி… அப்ப… நான் ரூம் புக் பண்றேன். நாம ஒரே காரில் போயிரலாம்.” என்று பட்டும்படாமலும் கோபமாக இருப்பது போல் யாதவ் கூற, அவள் தோள் தட்டி, “விடுறா…” என்று சங்கர் தோழமையுடன் கூறினான்.
விதியின் விளையாட்டை யார் அறிவார்? கொடுத்தவன் கேட்டால், மறுத்தேன்ன பயனோ?
வாழ்பவனுக்கு மட்டும் தான் வீம்பா? படைத்தவனுக்கு?
அனைவரின் வாழ்வும் திசை மாறப்போவது அறியாமல், அவர்கள் ஆனந்தமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
லவி விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். பல நாட்களுக்கு பின் அவள் முகத்தில் ஓர் அழகான புன்னகை கீற்று.
‘என்னை சொன்னால் சங்கருக்கு ஏன் கோபம் வர வேண்டும்? என்னை ஏதாவது சொன்னால் இவனுக்கு அடிக்கும் அளவுக்கு கோபம் வருமா?’ என்று கேள்வி மனதில் தோன்ற, லவியின் புன்னகை மேலும் விரிந்தது.
‘சங்கருக்கு இப்ப ரொம்ப தான் கோபம் வருது. அதுவும் அடிக்கும் அளவுக்கு!” என்ற எண்ணம் தோன்ற லவியின் கண்கள் பெரிதாக விரிந்தது. ‘யாதவ் வீட்டில் இவ்வுளவு நேரம் என்ன செய்றான்? நம்ம கிட்ட தான் வாய் பேச மாட்டான். பெயர் சொல்லிக் கூட கூப்பிட மாட்டான். திமிர் பிடிச்சவன். அழுத்தக்காரன்.’ என்று சங்கரை பற்றி சிந்திக்க ஆரம்பித்து, அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள் லவி.
‘என் கிட்ட ரொம்ப பேசுறானோ இல்லையோ, அவனும் ராஜும் செய்யும் அட்டகாசம் அதிகம் தான்.’ என்று ராஜ் கேட்ட விளையாட்டு சாமானை எடுத்துக் கொடுத்தபடி யோசித்து கொண்டிருந்தாள் லவி.
“அப்பா எப்ப வருவாங்க அம்மா? ரொம்ப போர் அடிக்குது.” என்று ராஜ் சிணுங்கலாகக் கேட்க, “தெரியலை டா. நானும் அதைத் தான் யோசிக்கிறேன்.” என்று கூறி தன் நாக்கை கடித்துக் கொண்டு கண் சிமிட்டினாள் லவி.
‘எனக்காக அப்பாவுக்கு அப்புறம் சங்கர் தான் பேசுறான்.’ என்ற எண்ணம் தோன்ற, ‘நான் இவனுக்காக என்ன செய்தேன்?’ என்ற கேள்வி மனதில் எழ, ‘நான் ஏன் சங்கரைப் பற்றி யோசிக்கிறேன்? நானும் அவனைத் தேடுகிறேனா?’ என்று கேட்டுக் கொண்டு, தன் தலையை இருபக்கமும் அசைத்து, “இல்லை.” என்று உறுதியாகக் முணுமுணுத்தாள் லவி.
“அம்மா… என்ன இல்லை?” என்று ராஜ் அடுத்த கேள்வியைக் கேட்க, “டேய்… போடா… உனக்கு உங்க அப்பா தான் சரி. என்கிட்டே நிறையக் கேள்வி கேட்காத டா…” என்று குழந்தையிடம் கெஞ்சினாள் லவி.
ராஜ் சம்மதமாகத் தலை அசைத்து, விளையாட ஆரம்பிக்க, லவியின் எண்ணங்கள் நயகரா நீர் வீழ்ச்சியைச் சுற்றி வந்தது.
‘என்னை சங்கருக்குப் பிடிக்காது. இங்க என்னை கூட்டிட்டு வந்தது ராஜ்காக. எல்லாமே ராஜை வைத்தே செய்யலாமுன்னு நினைப்பு. லவி உனக்காக போறோம். நீ வா. உனக்கு நயகரா பிடிக்கும். என்ஜாய் பண்ணுவ. இப்படி சொல்லி எனக்காக என்னைக் கூப்பிட்டா தான் இந்த லவி வருவா. இல்லைனா வரமாட்டா.’ என்று தன் மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டு தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் லவி.
அப்பொழுது சங்கர் உள்ளே நுழைய, அவனைக் கண்டும் காணாததும் போல் தன் பணியை தொடர்ந்தாள் லவி.
“ராஜ். நாம டூர் போலாமா?” என்று சங்கர் கேட்க, “ஜாலி… ஜாலி… போலாம் அப்பா.” என்று குழந்தை குதூகலமாகக் கூற, சங்கர் தன் ஓரக் கண்களால் லவியை பார்த்தான்.
லவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பாத்திரங்கள் சத்தமாக உருண்டோடின. ‘இவ எதுக்கு இப்ப இப்படி கோபப்படுறா?’ என்று காரண மறியாமல் குழம்பினான் சங்கர். அன்று இரவு அனைவரும் மெத்தையில் படுக்க, ‘டேய். உங்க பாட்டி, மார்னிங் மட்டும் தான் கிஸ் குடுத்து எழுப்புவாங்களா? நைட் இல்லையா?” என்று லவியை ரசனையோடு பார்த்தபடி சங்கர் ராஜிடம் கேட்க, குழந்தை பரிதாபமாக தலை அசைத்தான்.
லவி கையிலிருந்த தலையணை சர்ரென்று மெத்தையின் ஓரத்திற்குப் பறந்தது.
‘சூப்பரு. மேடம் இன்னைக்கி செம ஹாட்.’ என்றெண்ணியபடி ராஜை தூங்க வைத்தான் சங்கர்.
ராஜ் தூங்கியவுடன், “ம்… க்கும்..” என்று சங்கர் சத்தம் எழுப்ப, அது தனக்கான அழைப்பு என்றறிந்தும், ‘இவனுக்கும், குழந்தைக்கும் எல்லாம் வேணும். அதுக்கு நான் ஒரு தொடுக்கு.’ என்றெண்ணியபடி, தான் எதற்காக இங்கு வந்தோம் என்பதை வசதியாக மறந்து கொண்டு அமைதியாகப் படுத்திருந்தாள் லவி.
சங்கர் லவியை கைகளால் எழுப்ப, “என்னைக் கூப்பிட வேண்டியது தானே?” என்று காட்டமாகக் கேட்டாள் லவி. “நீ தானே உன் பெயரை சொல்லி கூப்பிட வேண்டாம்முனு சொன்ன…” என்று தன் மெல்லிய புன்னகையை மறைத்தபடி சங்கர் கூற, ‘இல்லைனா கூப்பிட்டுட்டாலும்…’ என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள் லவி.
சங்கர் லவியின் கண்களை அவள் ஆழ் மனதை ஊடுருவும் விதமாக ஆழமாகப் பார்த்து, “ஏன் வரலைன்னு சொல்ற?” என்ற மூன்று வார்த்தையில் சங்கரின் குரல் பாகாய் கரைந்து, லவியிடம் கெஞ்சியது. கொஞ்சியது என்றும் சொல்லலாம்.
‘இது என்ன பார்வை. இது என்ன குரல்?’ என்றெண்ணியபடி, வெட்கமா? தயக்கமா? இல்லை அச்சமா? என்று சொல்லத் தெரியாமல், தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் லவி.
“எனக்கு பிடிக்கலை.” என்று லவி இரு வார்த்தையில் பதில் கூற, “ஏன்?” என்று ஒரு வார்த்தையில் அழுத்தமாகப் பிடிவாதமாகக் கேட்டான் சங்கர்.
“நான் குழந்தைக்காகத் தான் இங்கு வந்தேன். ஊரு சுத்த இல்லை.” என்று லவி மிடுக்காகக் கூற, “அது பழைய கதை.” என்று சங்கர் லவியின் பதிலைச் சட்டை செய்யாமல் கூறினான். “எல்லா நாளும் ஒரே கதை தான்.” என்று லவி பிடிவாதமாகக் கூற, “இல்லைன்னு நான் நிரூபிக்கட்டுமா?” என்று சவாலாகக் கேட்டான் சங்கர்.
லவியின் இமைகள் வேகமாகத் துடித்து, “என்ன நிரூபிப்ப? என்ன நிரூபிப்பன்னு கேட்கறேன்? என் வார்த்தைக்கு மதிப்பில்லை. எனக்கு மதிப்பில்லை. நானே இங்க இஷ்டமில்லாமல் தான் இருக்கேன். நான் வரலைன்னு சொன்னால், விட வேண்டியது தானே. எல்லாமே உன் இஷ்டபடி தான் நடக்கணுமா?” என்று லவி லவியாகவே கோபமாகப் பொரிந்து தள்ளி, ‘நான் என்ன நினைக்கறேன்னு இவனுக்குத் தெரிந்துவிடுமோ?’ என்று சற்று சஞ்சலத்தோடும், ஆர்வத்தோடும் அவனை எங்கோ பார்த்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் லவி.
‘லவி… லவி தான். ஆனாலும் இந்த லவி புதிது.’ என்று எண்ணம் சங்கருக்குள் எழும்ப, அவள் மனமறிந்து சங்கரின் மனதில் குறும்பு எட்டி பார்த்தது.
லவியின் கேள்விக்குப் பதிலாக, சங்கர் விடுத்த அழைப்பில், ‘அட பாவி. நான் நினைச்ச மாதிரி என்னை கூப்பிடாமா, என்னைச் சம்மதிக்க வச்சிட்டானே. இந்த சங்கர் ரொம்ப கெட்டிக்காரனாகிட்டான்!’ என்ற யோசனையோடு சங்கரின் வார்த்தையில் மெய்சிலிர்த்து தலை அசைத்தாள் லவி.
லவ்லி லவி வருவாள்…