vizhi22

vizhi22

சுமித்ராவை அங்கு எதிர்பாராமல் வினுவும் திருவும் திகைக்க, அவளோ நேராக அகிலிடம் சென்றாள்.. கையில் அவள் எடுத்து வந்திருந்த போர்வையை அவனுக்கு போர்த்திவிட்டவள், அவன் தலையருகே அமர்ந்து சிறிது நேரம் அவனை பார்த்தாள்.. பின் தன் கண்களை துடைத்துக் கொண்டவள் அங்கிருந்து நகர, அகில் அருகே விரிக்கப்பட்டிருந்த மற்றொரு போர்வை அவள் கண்ணில் விழுந்தது..

நெற்றியை சுருக்கி யோசித்தவள் சுற்றும் முற்றும் பார்க்க, வினு திருவோடு ஒன்றியவாறு டேங்கின் பின்னால் நன்றாக மறைந்துக் கொண்டாள்..

மாடியை சுற்றி பார்த்த சுமியும் யோசனையாக அங்கிருந்து சென்றுவிட, வினு இன்னும் திருவின் அணைப்பில் இருந்தாள்..

“புஜ்ஜி.. சுமி போய்ட்டா..” தன் நெஞ்சுக்குள் புதைந்திருந்தவளின் காதில் திரு கிசுகிசுக்க, வினு வேகமாக அவனிடமிருந்து விலகினாள்..

“பார்த்தியா அரசு.. உன் தங்கச்சிக்கு என் அண்ணா மேல பாசம் இருக்கு ஆனா நம்மகிட்ட மறைக்கிறாங்க.. எப்படியாச்சும் எதாச்சும் ப்ளான் பண்ணி அவங்களை சேர்த்து வைக்கிறோம்.. சரியா???” அகிலின் மேல் சுமி அக்கறை கொள்வதை பார்த்த வினுவிற்கு சந்தோஷம் பொங்க.. முகம் முழுதும் பிரகாசமாக ஜொலிக்க, திருவின் மேல் இருந்த கோபம் அனைத்தையும் மறந்து திருவிடம் கூறினாள்…

அவளது முகத்தில் தோன்றும் ரசனையான பாவனைகளை பார்த்தவனுக்கு அவளது பேச்சு காதில் விழாமல் போக, அவளையே ரசித்திருந்தான்…

அவன் கவனம் தான் கூறுவதில் இல்லாமல் தன்னிடம் இருக்கிறது என்றுணர்ந்தவள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு,

“சரி நான் போறேன்.. நீ தூங்கு.. சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாத..” என்றவள் அங்கிருந்து வேகமாக கீழே சென்றுவிட, திருவிற்கு அவளை நினைத்து புன்னகை மலர்ந்தது..

“நான் டிஸ்டர்ப் பண்றேனா??? நல்லா தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பிட்டு, இப்போ தூங்குன்னு சொல்றா.. ஹம்ம் இனி எங்க தூங்குறது..” பெருமூச்சுவிட்டவன் அகில் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.. அருகில் தூங்கும் அகிலை திரும்பி பார்த்தவன்,

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சுமி சரி சொன்னதும் எனக்கு அரைமனசா தான் இருந்துச்சு.. ஆனா இப்போ புரியுது.. இது சரி தான்.. சீக்கிரம் ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்திடனும்..” சுமி வந்து சென்றதை வைத்து திரு மனதோடு அகிலிடம் பேச, அவன் தூக்கத்திலே “ம்ம்” என்றான்..

தங்கையை பற்றியும் அகிலை பற்றியும் எண்ணியவாறே திருவும் தூங்கி போனான்…

மறுநாள் காலை முதலில் எழும்பிய அகில், திருவையும் எழுப்பி அவனது அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு தனது அறைக்கு செல்ல, அங்கு சுமி வெறுந்தரையில் படுத்திருந்தாள்.. ஹனி மட்டும் மெத்தையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்..

சுமியை நெருங்கியவன் அவளது தூக்கம் கெடாதவாறு அவளை தூக்கி ஹனியின் அருகில் படுக்க வைத்தான்.. குனிந்து படுக்க வைத்ததில் அவனது முகத்தின் அருகே அவள் முகம் இருக்க, இதமாக அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,

“சீக்கிரம் என்னை மன்னிச்சிடு சுமிம்மா..” என்க, சுமி தூக்கத்தில் அசைந்தாள். அவள் விழித்து இத்தனை நெருக்கத்தில் தன்னை பார்த்தால் கோபப்படுவாள் என்பதால் வேகமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்..

அவன் மறைந்ததும் சுமி கண் திறந்து பார்க்க, அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்களில் இருந்து கோடாக இறங்கியது.. அவன் தூக்கியதுமே விழித்து விட்டாள் ஆனால் அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அவள் அமைதியாக இருக்க, அவன் சொல்லி சென்ற மன்னிப்பு அவளை உயிர் வரை தீண்டியது..

காதல் கொண்ட மனம் மன்னிக்க விழைந்தாலும், காயம் கொண்ட மனது அதற்கு ஒப்பவில்லை…அவனோடு திருமணம் என்றதில் இருந்தே தன் மனதோடு தினமும் போராடியே களைத்துப் போனாள் அவள்.

பாதி தூக்கத்தில் அகில் எழுப்பிவிட்ட கோபத்தை அவனிடம் காட்ட முடியாமல் தன் அறைக்கு வந்தான் திரு.. அங்கு வினு இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவனும் சென்று அவள் அருகில் அவளை அணைத்துக் கொண்டு மீண்டும் தான் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் திரு..!!!

வெளியே காலையில் எழுந்ததில் இருந்து கடுகடுத்த முகத்துடன் அமரந்திருக்கும் விக்கியின் மேல் ஒரு கண்ணை பதித்தவாறும் சுமி கொடுத்த காப்பியை அருந்தியவாறும் அமர்ந்திருந்தார் சுதா..

“என்னடா விக்கி??? எதுக்காக அப்படி இருக்க???” காப்பியின் நறுமனத்தை உள்வாங்கியவாறு அவர் கூற, விக்கி அவரை முறைத்தான்..

“வேண்டுதல்…” சுள்ளென்று கூறியவன் சுதாவை பார்க்க, அவர் அவனை கண்டு கொள்ளாமல் காப்பியின் ருசியை சப்புக் கொட்டிக் கொண்டிருந்தார்..

“ஹம்ம் நல்லா வேண்டிக்கோ… ஹம்ம என்னா ருசி.. என்னா ருசி.. மருமக எவ்வளவு அருமையா காஃப்பி போடுறா…” சுமியை சிலாகித்தவர் மீண்டும் காஃப்பியில் ஐக்கியமாகிவிட, விக்கிக்கு கோபத்தில் முகம் சிவந்தது..

“ம்மாமா…” கொஞ்சம் கூட தன் அக்காவின் வாழ்வை நினைத்து வருத்தப்படாமல் அமர்ந்திருக்கும் தாயை அவன் முறைக்க, சுதா அவனை என்னடா என்பது போல் பார்த்தார்…

“வினு எங்க??? ஏன் இன்னும் வரல???” நேற்று இரவு வினுவின் கண்ணில் கண்ணீரை கண்டதில் இருந்து அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை..

“என்னடா பேசுற?? அவ வருவா.. வளர்ந்தாலும் புத்தியோட பேசுறானா பாரு…” நேற்று தான் திருமணம் முடிந்திருக்கும் நிலையில் விக்கி கேட்பது சுதாவிற்கு அபத்தமாக பட்டது..

சுதாவின் பாவனையில் ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் இப்போது அவரை நன்றாக முறைக்க, சரியாக அகில் இடையில் வந்தான்..

“விக்கி.. நாம ரெண்டு பேரும் வாக்கிங் போய்ட்டு வரலாம் டா.. வா..” அவனை அழைக்க, விக்கியும் அவனிடம் பேச வேண்டியிருந்ததால் அவனோடு செல்ல எழும்பினான்.. அவர்கள் வெளியே கிளம்பவும் ஹனியும் ரித்தினும் விக்கியிடம் ஓடி வந்தனர்..

“பக்கி மாமா.. எங்க போற?? நாங்களும் வரோம்.” .விக்கியின் கைகளை பற்றிக் கொண்டு ஹனியும் விக்கியும் துள்ள…

ஹனியின் பக்கி மாமாவில் அகிலுக்கு சிரிப்பு வந்தது, அவளது உயரத்திற்கு குனிந்தவன்,

“ஹனி குட்டி விக்கி உனக்கு மாமா இல்ல டா.. சித்தப்பான்னு சொல்லனும்..” உறவுமுறையை அவன் சரியாக சொல்லிக் கொடுக்க,

“என்கிட்ட பேசாதிங்க.. நீங்க பேட் பாய்.. என் மம்மிய அழ வச்சிங்க.. ம்க்கும்..” அன்று நடந்ததை மறக்காமல் ஹனி இன்னும் அகிலின் மேல் கோபத்தில் இருந்தாள். .முகத்தை சுருக்கியவள் விக்கியின் பக்கம் திரும்பிக் கொள்ள, அகில் உடைந்து போனான்..

அவள் குழந்தை தான் என்ற மனம் கூறினாலும்.. வலித்தது… இப்படி ஒரு மகள் இருப்பதே இவ்வளவு நாட்கள் அவனுக்கு தெரியாது தான் ஆனால் தெரிந்த பின் மகளின் உதாசீனம் துயரமாக இருந்தது…

மகளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் அவன் பார்க்க, அவர்களின் சம்பாக்ஷனையை பார்த்தவாறே வந்தாள் சுமி.. முகம் கசங்கி நிற்கம் அகிலை பார்க்க ஏனோ மனதுக்குள் பிசைந்தது.. ஆனாலும் தானாக சென்று பேசவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

தன் அண்ணனை முறைத்துக் கொண்டும் நிற்கம் ஹனியை கையில் தூக்கி கொண்ட விக்கி,

“ஹனி பேபி… பக்கி மாமா வெளியே போறேன்.. நீங்க சமத்தா வீட்ல இருங்க ஓ.கே???…” என்க, அவள் முடியாது என பிடிவாதம் பிடித்தாள். இவர்களையும் அழைத்து சென்றால் அகிலோடு பேச முடியாது என்பதறக்காக அவன் ஹனியோடும் ரித்தினோடும் கெஞ்ச, ரித்தினை தேடி வந்த அனுவிற்கு சிரிப்பு வந்தது..

வாய்விட்டு அவள் சிரிக்க, மூவரும் அவளை புரியாமல் பார்த்தனர்..

அவர்கள் தன்னை லூசாமா நீ என்பது போல் பார்ப்பதை உணர்ந்தவள், “பரவாயில்ல டா விக்கி கண்ணா.. ஒரு வழியா… நீ பக்கின்னு ஒத்துக்கிட்டியே…” அனு கலகலவென்று சிரிக்க, மற்றவர்களுக்கும் அவளின் சிரிப்பை கண்டு சிரித்தனர்.

“அண்ணிணிணி….!!!!” அனுவை பார்த்து பல்லை கடித்தவன் ஹனியை கீழே விட, அவள் அவனை விட்டு நகர மறுத்தாள்.. ரித்தினும் இப்போது அடம் பிடிக்க ஆரம்பிக்க,

“நானும் உங்க கூட வரேன்.. குழந்தைங்களை நான் பார்த்துக்கிறேன்..” என்றவாறு சுமி முன்வர, அனுவும் ஆர்வமாக வருகிறேன் என்றாள்.. அவர்களை பார்த்த நிகிலும் தானும் வருவதாக கூற, விக்கிக்கு எங்கு சென்று முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது..

அகிலோடு தனியாக பேச வேண்டும் என்று அவன் நினைக்க, அதற்கு இடம் தராமல் சுதா, திரு, வினு மூவரையும் தவிர அனைவரும் அருகிலிருந்த பார்க்கிற்கு சென்றனர்… விக்கி தன் அண்ணனை முறைத்தவாறே வர, நிகில் சாதுரியமாக விக்கியிடம் அவர்களது மகன் ரித்தினை தள்ளிவிட்டு அனுவை தனியாக அழைத்துச் சென்றான்… முன்னாடியும் இது போல நிகழும் என்பதால் நிகில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சென்றுவிட, விக்கி தான் மனதுக்குள் குமைந்தான்..

இந்த மூன்று மாதமாக அனுவின் முகத்தை பார்த்து பேசி கூட நிறைய நாள் ஆகியது போல் இருந்தது நிகிலுக்கு.. மொத்த கம்பெனி பொறுப்பையும் அவன் பார்த்துக் கொள்வதால் அவனால் அனுவோடு நேரம் செலவழிக்க முடியவில்லை அதற்காக தான் அவன் அவளை தனியாக அழைத்து சென்றது.. அது விக்கிக்கு புரிந்தாலும் இன்று பேசியே ஆக வேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு எரிச்சலாக இருந்தது.

விக்கியின் முகத்தை பார்த்த சுமி, “நான் ஹனியையும் ரித்தினையும் பார்த்துக்கிறேன்” என்றவாறு அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவர்களை அழைத்துக் கொண்டு குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு செல்ல,

செல்லும் அவர்களையே பார்த்திருந்தான் அகில்…

“அண்ணா.. இங்க பாரு” எடுத்த எடுப்பில் விக்கி கோபமாக ஆரம்பிக்க,

“விக்கி.. ப்ளீஸ்.. நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும்.. என்னை நம்பு.. என்னால வினுவோட வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது.. அதோட திரு அவளை அப்படியெல்லாம் விட்டுடமாட்டான்.. எனக்கு அவனை பத்தி நல்லாவே தெரியும்…” விக்கி பேசப்போவதை யூகித்தவானாக பதிலளித்தான் அகில்…

“இங்க பாரு அகில் அண்ணா.. நேத்து வினு அழுததும் என்னால தாங்க முடியல.. இன்னொருக்கா என் அக்கா அழுதா… முதல்ல அடி வாங்குறது நீயா தான் இருக்கும்.. அப்புறம் அந்த ஹிட்லர்.. நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியும் தானே???” என்றவனின் கண்களில் எப்போதும் இருக்கும் விளையாட்டுத்தனம் இல்லை…

விக்கி அப்படி கூறியதும் அகிலுக்கே மெலிதாக பயம் எட்டிப்பார்த்தது… பத்து வயதில் வினுவை ஒருவன் தள்ளிவிட்டதற்கே அவனை பழி வாங்க டாபர்மேன் வகையை சார்ந்த நாயை வாங்கி அந்த பையனை கடிக்க விட்டவன்.. அப்படி இருக்கையில் இன்று விட்டுவிடுவானா???

“டேய் விக்கி.. நீ அடிக்கடி ஏன்டா வில்லன் மாதிரி பேசுற.. எனக்கும் என் தங்கச்சி மேல அக்கறை இருக்குடா..” அவனை இலகுவாக மாற்றும் பொருட்டு கேலியாக கூறுவது போல் கூறியவன் அவன் தோளில் கைப்போட்டுக் கொண்டான்..

“சாரி அண்ணா.. எனக்கு அக்கா அழுததும் என்ன பண்றதுன்னே தெரியல.. அவ கஷ்டப்பட்டா எனக்கும் வலிக்குதுண்ணா.. ஒரு வேளை டுவின்ஸா இருந்தா இப்படி தான் இருக்குமாண்ணா..” சீறிக் கொண்டிருந்தவன் இப்போது சிறுபிள்ளையாக அகிலிடம் கண்கள் கலங்க கேட்க,

அகில் அவனை தன் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான்..

“ம்ம்ஹும்.. நீங்க டுவின்ஸா பிறக்காட்டாலும் இப்படி தான்டா இருந்திருப்பிங்க.. உங்களை பார்த்தா எனக்கே பொறாமையா இருக்குடா.. ஆனா இந்த அண்ணாவை நம்பு.. நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் சரியா???” அவனுக்கு ஆறுதலாக கூறியவன் அவனை அழைத்துக் கொண்டு சுமியை தேடி சென்றான்..

அனுவும் நிகிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த தனிமையில் தங்களையும் மறந்து மௌனமாக அந்த பார்க்கில் அமர்ந்திருந்தனர்.. அவன் சந்தோஷமாக இருந்தால் இப்படி இருப்பது அவனது வழக்கம்… அவர்களுக்கு எப்போதுமே இது பிடித்த விஷயமும் கூட.. நிகில் அதிகம் பேச மாட்டான் என்பதால் அவனது காதல் இப்படியே வெளிப்படும்.. அனுவை தோளோடு அணைத்தவாறு அவளது வலதுக்கையை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டு அமர்ந்திருப்பான்.. வாய் ஓயாமல் பேசும் அனு கூட அவன் இப்படி அவளோடு இருக்கும் போது அமைதியாக அவனை ரசித்தவாறு அமர்ந்திருப்பாள்..

“சார் என்ன ரொம்ப ஹேப்பியா இருக்கிங்க போல இருக்கு..” தன் கையை அவன் அழுத்தமாக பிடித்திருப்பதை வைத்து அனு கேட்க,

“ம்ம்.. ஹேப்பி ப்ளஸ் பயம்..” என்றவனை எதுக்கு என்பது போல் பார்த்தாள் அனு.

“அகில் லைஃப்பும் வினு லைஃப்பும் நல்லபடியா அமைஞ்சது சந்தோஷம் தான்.. ஆனா இனி அப்பா வந்தா என்னவாகுமோன்னு பயமா இருக்கு… என்னை நம்பி தான் உங்க எல்லாரையும் விட்டுட்டு போனாங்க.. அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியல அனு…” என்றவனுக்குள் தந்தைக்கு தெரியாமல் தம்பி தங்கையின் திருமணத்தை நடத்தியது குற்றவுணர்வாக இருந்தது..

அவனது வருத்தம் அனுவையும் தாக்க, “ப்ச்ச் நிகி.. நடக்கனும்னு இருந்தா.. அதை மாத்த முடியாதுப்பா.. சுமி இழக்க இருந்தது அவளோட வாழ்க்கைய அதனால இந்த முடிவு சரி தான்.. மாமா வந்திருந்தா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.. இனி மாமாவால எதுவும் செய்ய முடியாது.. கோபப்பட்டாலும் நாம எல்லாம் சேர்ந்து சமாளிச்சிக்கலாம் நிகி.. நீங்க தேவை இல்லாம வருத்தப்படாதிங்க..” என்றவள் அவன் தோளில் சாய்ந்துக் கொள்ள.. அவனும் தன் தலையை சரித்து அவள் தலையில் பதித்துக் கொண்டான்..

இரண்டு பேருமே தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவர்களை கலைத்தது தூரத்தில் கேட்ட ரித்தினின் குரல்.. அவர்களை பார்த்து தான் ஓடி வந்துக் கொண்டிருந்தான்.. பின்னால் சுமியும் ஹனியும் ஒடி வந்துக் கொண்டிருந்தனர்..

நிகில் ஓடி வந்த மகனை கையில் ஏந்திக் கொள்ள, அனு பின்னால் ஓடி வந்த ஹனியை தூக்கினாள்..

“சாரிக்கா.. உங்களை பார்த்ததும் ஓடி வந்துட்டான்..” மூச்சு வாங்க கூறிய சுமியை வாஞ்சையாக பார்த்தனர் நிகிலும் அனுவும்..

“ஹோய் மேடம்.. இதுகெல்லாம் சாரி கேட்பாங்களா?? நாங்க தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. எங்க அறுந்தவாலை நீ பார்த்துக்கிட்டதுக்கு” என்றவள் புன்னகைக்க, சுமியும் புன்னகைத்தாள்..

“அதெல்லாம் பரவாயில்ல.. ரித்தின் ரொம்ப சமத்து…” என்றவள் அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் விழித்தாள்…

சுமியின் கையை பற்றிக் கொண்ட அனு, “உன்கூட பேச டைம் கிடைக்கலை சுமி.. இனி ஒன்னா தானே இருக்க போறோம்.. நிறைய பேசுவோம்.. நீ அகிலை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ரொம்ப சந்தோஷம்..” என்க, நிகிலும் அனு கூறியதை ஆமோதித்தான்..

“ஆமா சுமி.. என்னை உன்னோட அண்ணாவா நினைச்சிக்கோ.. எதுக்கும் கலங்ககூடாது.. நாங்க எல்லாரும் உனக்கு துணையா இருப்போம் சரியா??? அகிலை விட நீயும் ஹனியும் தான் எங்க எல்லாருக்கம் முக்கியம்.” உளமாற நிகில் கூற, சுமிக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை..

எத்தனை அன்பான குடும்பம்.. ஆனால் அவன் மட்டும் ஏன் தப்பாகி போனான் என எண்ணிக் கொண்டிருந்தாள்..

அவர்களை தேடி விக்கியும் அகிலும் வர, “அப்போ நான் யாரை விட முக்கியம் அனு அண்ணி??? அகில் பேசியதில் சற்று தெளிந்திருந்தவன் நேற்றிலிருந்து தொலைத்த கேலிப் பேச்சை ஆரம்பிக்க, அனு அவனை மேலும் கீழும் பார்த்தாள்..

“நீயா டா வாலு.. நீ யாருக்க அப்புறம் முக்கியம்ன்னா??” யோசிப்பது போல் பாவனை செய்தவள், “நீ உன்னை அடிச்ச க்ரீன் சுடிக்க அப்புறம் தான்” என்றவள் குறும்பாக சிரிக்க, விக்கி அதிர்ந்தான்.. இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது போல் அவன் பார்க்க, அனைவருமே சிரிப்பை அடக்குவது தெரிந்தது.. அப்படியென்றால் அனைவருக்கம் தெரியுமா??? விக்கி திகைக்க,

அனு தான் பாவம் பார்த்து, “நேத்து ஹனி செல்லம் சொல்லிட்டா..” என்றுவிட்டு ஹனியின் நெற்றியில் முத்தம் வைக்க, விக்கியோ பாவமாக இப்படி பண்ணிட்டியே ஹனி குட்டி என்பது போல் அவளை பார்த்தான்..

ஹனியும் சிரித்தவாறே… “பக்கி மாமா இனி யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றுவிட்டு வாளை தன் பிஞ்சு கரங்களால் பொத்த, அவள் பாவனையில் விக்கிக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது…

“ஹனி குட்டி இதெல்லாம் ரொம்ப போங்காட்டாம்.. யார்க்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு எவ்வளவு சாக்கி வாங்கி கொடுத்திருப்பேன்.. இப்படி இந்த மாமாவை ஏமாத்திட்டியே..” விக்கி செல்லமாக அலுத்துக் கொள்ள.. ஹனி கிளுக்கி சிரித்தாள்..

அனு நக்கலாக பார்க்க, அவளை பார்த்தவன், “ ரொம்ப சிரிக்காதிங்க அண்ணி.. நாளைக்கே.. விக்கி கண்ணா ரித்தினை பார்த்துக்கோடான்னுட்டு ரெண்டு பேரும் என்கிட்ட தான் வரணும்” என்றுவிட்டு அவன் முன்னே செல்ல அனு அவனை சமாதனம் செய்ய பின்னே சென்றாள்.. நிகிலும் சிரித்தவாறே பின்னே சென்றுவிட, ஹனி அகிலின் சட்டையை பற்றி இழுத்தாள்…

அவளின் செயலில் வியந்த அகில் அவளை கையில் தூக்க ஹனியும் அமைதியாக அவன் கைகளில் அமர்ந்துக் கொண்டாள்..

“என்னம்மா???” தன்னிடம் பேசுவாளா என்று தயங்கியவாறே அகில் கேட்க, ஹனி அவன் முன்னால் தன் வலது கையை நீட்டினாள்

அகில் புரியாமல் பார்க்க, “இனி என் மம்மிய என்கிட்ட இருந்து கூட்டிட்டு போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க..” சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு ஹனி கேட்க, அவர்களின் பாசப்பிணப்பை கண்டு மகிழ்ச்சியுற்றவனாக அவள் கையில் தன் கையை வைத்து ப்ராமிஸ் செய்தான் அகில்..

“கண்டிப்பா ஹனி குட்டி.. எப்போவும் உங்களை நான் பிரிக்க மாட்டேன்..” அகில் உறுதியளிக்க ஹனி அவனை கட்டிக் கொண்டாள்..

“தேங்க்ஸ் ப்பா “ என்றவள் அகிலின் கன்னத்தில் முத்தம் வைக்க, அகிலுக்கு மேனி சிலிர்த்தது.. முதல் முறையாக அப்பா என அழைக்கும் மகளை உச்சி முகர்ந்தவனுக்குள் அத்தனை சந்தோஷம்.. உலகமே வண்ணமயமாக ஆனது போல் உணர்ந்தான். கண்கள் கூட லேசாக கலங்கிவிட்டது.. மகளை அணைத்துக் கொண்டவன்,

“தேங்க்ஸ் டா.. நீயாச்சும் இந்த அப்பாவை சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டியே..” என்க,

ஹனியோ, “நீங்க தான் என்னோட அப்பாவா?? ஏன் இவ்வளவு நாள் சொல்லலை…. அம்மா தான் இப்போ சொன்னாங்க..” என்றவள் பேசிக் கொண்டே போக.. அகில் சுமியை நன்றிப்பார்வை பார்த்தான்.

சுமி சலனமே இல்லாமல் இருவரையும் பார்த்திருந்தாள்… அகிலின் வருத்தம் தாளாமல் அவள் தான் ஹனியிடம் அப்பா என்று அழைக்க சொல்லியிருந்தாள் ஆனால் இந்த சத்தியம் அவளே எதிர்பாராதது தான்.. ஏனோ தன்னை விட்டு மகள் நழுவி செல்கிறாளோ என்று பயமாக இருந்தது. அதை வெளிக்காட்டாதவள்,

“உனக்காக இல்லை.. என் பொண்ணுக்காக தான் சொன்னேன்.. அப்பன் பேரு தெரியாதவன்னு யாரும் சொல்லிட்க்கூடாது பாரு.. அதுக்காக தான்..” என்றவள் மகளை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு சென்றாள்..

அவள் கூறியது சரியாக அவனை தாக்கினாலும்.. என்று இந்த நிலைமை மாறும் என்று தெரியாமல் அவள் பின்னால் சென்றான் அகில்..

கண்களில் விழுந்த சூரிய வெளிச்சத்தில் கண்விழித்த வினு, கண்ணை கசக்கியவாறு பார்க்க, எதிரில் இருந்த சுவர் கடிகாரம் மணி எட்டு என்று காட்டியது..அதை பார்த்தவள் பதறியவாறு எழும்ப, அவளை விடாமல் பிடித்திருந்தான் திரு..

திரும்பி பார்த்தவள் தன்னை ஒட்டியவாறு படுத்துக் கொண்டிருந்த திருவை பார்த்து மிரண்டு அவனை விலக்க, திரு மேலும் அவளோடு ஒன்ற முயன்றான்..

“டேய் இப்பாவாச்சும் என் பொண்டாட்டி கூட டூயட் ஆட விடு டா.. நான் பாவம்டா..” இன்னும் தூக்க கலக்கத்தில் அகில் எழுப்புவதாக நினைத்துக் கொண்டு திரு கூற, வினு தலையில் அடித்துக் கொண்டாள்..

“அரசு.. அரசு எழும்பு டா.. உன்னை யாருடா இங்க வந்து படுக்க சொன்னது.. எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்.. எல்லாரும் என்ன நினைப்பாங்க…” திருவின் சட்டையை பற்றி உலுக்கியவாறே வினு புலம்ப, திருவும் அவளது சத்ததில் விழித்தான்..

“என்ன புஜ்ஜி.. ஏன் கத்துற???” தன்னருகே பதட்டமாக அமர்ந்திருப்பவளை பார்த்தவாறே அவன் கேட்க, அவள் முறைத்தாள்..

“ஏன் டா என்னை எழுப்பி விடல.. இப்போ பாரு லேட்டாகிடுச்சு… வெளியே போள அண்ணி சிரிப்பாங்க..” என்றவள் அவனை குறை சொல்ல, திரு சிரித்தான்..

“நமக்குள்ள ஒன்னும் நடக்கலன்னு உன் தம்பி, அண்ணான்னு எல்லாருக்கும் தெரியும்.. இதுல உன்னை பார்த்து தான் சிரிக்கப் போறாங்களா???” திரு மீண்டும் கட்டிலில் விழுந்து சிரிக்க, வினு கொலைவெறியானாள்.. அவனை அடியில் மொத்தியவள் பின் வேகமாக குளித்து தயாரானாள்.. அதற்கும் அவன் சிரித்து வைக்க,, அங்கிருந்த தலையனையை அவன் மீது விட்டெறிந்தாள்..

அதன்பின் திருவும் குளிக்க செல்ல, வினு வெளியே மெதுவாக எட்டிப் பார்த்தாள்.. யாரையும் காணாது போகவும் யோசனையாக ஹாலுக்கு வந்தவளிடம் சுதா அனைவரும் அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றிருப்பதாக கூற, வினு நிம்மதியாக உணர்ந்தாள்.. தாயோடு சேர்ந்து அனைவருக்கும் காலை உணவு தயாரிக்க வினு உதவியவாறு இருக்க, அனைவரும் திரும்பி வந்திருந்தனர்…

வந்ததும் ஹனி வினுவின் இடுப்பில் ஏறிக் கொண்டு பூங்காவில் விளையாடியது, அகிலை அப்பாவென அழைத்தது என அனைத்தையும் கூறினாள். வினுவும் மகிழ்வுடன் அவள் சொல்வதை கேட்டவாறே வேலைகளை கவனித்தாள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த விக்கி, சுமியிடம் வர, அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். . இதுவரை அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட அவனாக பேசியிருக்கவில்லை..

“தேங்க்ஸ் அண்ணி..” விக்கி கூற, சுமி அவளை யோசனையாக பார்த்தாள்..

“எதுக்கு தம்பி???” ஏனோ அவளால் அந்த பாசக்கார தம்பியிடம் முகத்தை திருப்ப முடியவில்லை.. அவளும் தான் பார்க்கிறாளே.. அவன் வினுவின் மீதும் ஹனியின் மீதும் கொண்டிருக்கும் பாசத்தை.

“எல்லாத்துக்கும் தான் அண்ணி..” காலை தன் அண்ணனிடம் தான் தனியாக பேச விரும்புவதை உணர்ந்து, அவள் குழந்தைகளை பார்த்துக் கொண்டதை மனதில் வைத்து தான் அவன் நன்றியுரைத்தான்.

“ஏன் தம்பி நீங்க நிஜம்மாவே அந்த கிரீன் சுடிகிட்ட அடி வாங்கினிங்களா???” கண்களில் சிரிப்போடு சுமி கேட்க, விக்கிக்கு வெட்கமாக போனது..

“அண்ணி.. அது சும்மா சொல்றாங்க எல்லாரும்.. அனு அண்ணி சொன்னதை நம்பாதிங்க..” தன் புது அண்ணியிடத்தில் தான் அடிவாங்கியதை சொல்ல முடியாமல் அவன் தயங்க, சுமி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்..

“அனு அக்கா சொன்னதுக்காக நான் கேட்கல.. ஹனியே சொன்னா.. அவ தான் உங்களுக்கு அடி வாங்கி கொடுத்தாளாம்…” என்றவள் சிரிக்க, விக்கி தலையை சொறிந்தான்..

“ஹி ஹி வாழ்க்கைன்னா சில பல அடிகள் விழத்தான் செய்யும் அண்ணி…” அசடு வழிந்தவாறு விக்கி அங்கிருந்து செல்ல, சுமியும் சிரித்தவாறு ஹனியை காண சென்றாள்.. அங்கே வினுவோடு ஹனியிருக்க, ஹனியை இழுக்காத குறையாக அவளிடமிருந்து பிரித்து சென்றாள்.. வினு அவளுடன் பேச முயல, சுமி அதையெல்லாம் கவனிக்கவில்லை..

டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க, அனுவும் சுமியும் பரிமாறிக் கொண்டிருந்தனர்… சுதா சுமியை சாப்பிட அமர கூறிய போதும் அவள் கேட்காமல் அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். வினு சட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, திரு அவளை பார்த்திருந்தான்… மெதுவே அவளருகே குனிந்தவன்,

“ஏன் புஜ்ஜி மா.. நீயும் பரிமாறலாம் தானே?? “

“போடா எனக்கு ரொம்ப பசிக்குது..” என்றவள் சாப்பிட ஆரம்பிக்க,

சுதா நிகிலிடம் பேசியவாறு இருந்தார்… சுதாவின் சொந்த கிராமத்தில் திருவிழா தொடங்க இருப்பதால், சுமியை சென்னைக்கு அழைத்து செல்லும் முன் அனைவரும் குடும்பமாக குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் என்னவென்று தோன்ற, ஊரில் இருக்கும் தன் தம்பியிடம் பேசியிருந்தார்.. அதை இப்போது அனைவரிடமும் அவர் கூற, வினுவும் விக்கியும் மகிழ்ச்சியானார்கள்..

சுதாவின் சொந்த ஊருக்கு செல்ல வினுவின் அப்பா குமார் அதிகம் அனுமதிக்க மாட்டார்.. அவர் வெளியூர் வேலைகளுக்காக செல்லும் போது அவருக்கு தெரியாமல் பிள்ளைகளை அனுப்பி வைப்பார் சுதா.. ஆனால் அனைவரும் வளர்ந்த பின்னர் போக்குவரத்து மிகவும் குறைந்துவிட்டது.. ஆனால் அடிக்கடி அங்கிருக்கும் சுதாவின் தம்பியோடும் அவரது மனைவியோடும் போனில் பேசுவார்கள்..

இப்போது அங்கே செல்ல வேண்டும் என்றதும் வினுவின் முகத்திலும் விக்கியின் முகத்திலும் பல்ப் எரிய, அனைவரும் கலந்து பேசி மறுநாளே சுதாவின் சொந்த கிராமத்திற்கு செல்வது என முடிவு செய்தனர்.. திரு ஏற்கனவே திருமணத்திற்காக என்று பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருக்க அவனும் ஒத்துக் கொண்டான்..

சாப்பிட்டு முடித்ததும் ஹனி வினுவை விளையாட கூப்பிட, அவளும் சந்தோஷமாக ரித்தின் மற்றும் விக்கியோடு சேர்ந்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தாள்.. அதை கவனித்த சுமி ஹனியை அழைக்க, ஹனி விளையாட்டு குஷியில் அவளிடம் ஓடி வந்தாள்..

“என்னம்மா??? எதுக்கு கூப்பிட்டிங்க???”

“சாப்பிட்டதும் விளையாட கூடாது.. வாங்க நான் ரூம்ல டி.வி போட்டு தரேன்..” சுமி ஹனிக்கு ஆசைக்காட்ட.. ஹனியும் விளையாட்டை மறந்து அவளோடு சென்றாள்…

பாதி விளையாட்டில் அழைத்து செல்லும் சுமியை தடுக்க தெரியாமல் அமைதியாக நின்றனர் விக்கியும் வினுவும்…

“இட்ஸ் ஓ.கே வினு.. அவங்க சீக்கிரம் உன்னை புரிஞ்சிக்குவாங்க.” வினுவின் தோளில் கைப்போட்டவாறு விக்கி உரைக்க, வினுவும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்..

என்ன தான் ஹனி சுமியின் குழந்தை என்று சமாதனம் செய்தாலும் ஏனோ பாசம் வைத்த மனதால் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

“அவங்க என்கிட்ட இன்னும் பேசவேயில்லை விக்கி.. உங்க எல்லார்கிட்டயும் பேசுறாங்க..” ஆனா என்னை கண்டுக்கிறதேயில்லை வருத்தமாக வினு கூற,

“வினு நீ வேணும்னா அண்ணிக்கிட்ட பேசிப் பாரேன்..நான் இன்னைக்கு பேசினப்போ கூட அண்ணி என்கிட்ட கோபமா பேசல..”

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான்டா.. நான் போய் அண்ணிக்கிட்ட பேசிப் பார்க்கிறேன்.. என் மேல தான் தப்பு.. அவங்க திரும்பி வந்ததுக்க அப்புறம் ஒரு தடவை கூட நான் அவங்க கூட பேசல..” என்றவள் வேகமாக தன் அறைக்கு சென்று சுமிக்காக அவள் வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்துக் கொண்டு சுமியின் அறையை நோக்கி சென்றாள்…

ஹனி அமைதியாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்க, சுமி மறுநாள் கிளம்ப வேண்டும் என்பதால் துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்…

“அண்ணி… இங்க இருக்கிங்களா??? வேகமாக சுமியிடம் பேச வந்துவிட்டாலும், சுமியின் ஒட்டாத பார்வை வினுவிற்கு பேச வந்ததையெல்லாம் மறக்க செய்ய, அமைதியாக நின்றாள்…

“ம்ம்.. என்ன???” கையில் இருந்த துணியில் கவனத்தை பதித்தவாறு கேட்டாள் சுமி..

“அது.. அது வந்து.. நீங்க திரும்ப வந்ததுக்க அப்புறம் நான் உங்க கூட பேசவே இல்லை… சாரி அண்ணி.. நான் பண்ணினது தப்பு தான்.. எனக்கு என்னோட கல்யாணம். இப்போ அவசியம் தானான்னு ரொம்ப குழப்பமா இருந்துச்சு.. சாரி…” பொய்யுரைக்காமல் வினு வெளிப்படையாக உன்மையை உரைக்க, சுமி திரும்பிக் கூட பார்க்கவில்லை..

“ம்ம்ம்..”

“அ..அண்ணி.. இந்தாங்க.. இது நான் உங்களுக்காக வாங்கின சாரி.. வாங்கிக்கோங்க..” கையில் இருந்த புடவையை அவளிடம் வினு நீட்ட.. அப்போதும் சுமியிடம் எந்த மாறுதலும் இல்லை…

“எனக்கு வேண்டாம் நீ எடுத்துட்டு போ…” அவள் முகம் காணாமல் சுமி மறுக்க,

“ஏன் அண்ணி புடவை பிடிக்கலையா??”

“எனக்கு புடவை கட்டுறது பிடிக்காது.. நீ எடுத்துட்டு போ..”

“என் மேல கோபமா இருக்கிங்களா அண்ணி???”

“உரிமை இல்லாதவங்க மேல நான் கோபப்படுறதில்ல..” அவள் குரலில் இருந்தது வெறுப்பா ஆற்றாமையா எனத் தெரியாமல் வினு தான் குழம்பிப் போனாள்..

“நான் ரொம்ப ஆசையா வாங்கினேன் அண்ணி… புடவை கட்டுறது பிடிக்காட்டாலும் வச்சிக்கோங்க.. தோணுற டைம் கட்டுங்க அண்ணி ப்ளீஸ்…” என்றவள் புடவையை அங்கே கட்டிலில் வைக்க, ஏற்கனவே அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஹனி எழும்பி வினுவை தூக்க சொல்ல, வினு அவளை தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்..

சுமிக்கு ஆத்திரமாக வந்தது.. மனதளவில் அவளுக்கு வினுவின் வெறுப்பு இல்லை என்றாலும் தன்னை விட தன் மகளுக்கு அவளை பிடிக்கிறது என்பதே அவளை கோபமடைய செய்தது.. ஹனி மட்டுமே தன் உலகம் என்று நம்பி வந்தவளால் தன் மகளை வினுவோடு பங்கு போட முடியவில்லை.. தாய்மை அவளின் கண்களை மறைக்க, தேவையில்லாமல் வினுவின் மேல வெறுப்பை வளர்த்தாள் அவள்..

கட்டிலில் கோபமாக அமர்ந்தவளின் கண்ணில் அருகிலிருந்த புடவை தென்பட, அதை தூக்கி கீழே எறிந்தவள், நெற்றியை கைகளால் தாங்கியவாறு அமரந்துவிட, அவளின் செய்கையை வெளியே நின்று பார்த்திருந்த வினுவிற்கு புடவையை தன் முகத்திலே விட்டெறிந்தது போல் இருந்தது..

ஹனியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவள் தன் அன்னை சுமியை அழைத்து வர கூறவும் ஹனியை விட்டுவிட்டு மீண்டும் அவளது அறைக்கு வந்தவளின் கண்ணில் தான் இந்த காட்சி விழுந்தது.

அழுகை வேறு வர, அங்கிருந்து வேகமாக தன் அறைக்கு சென்று அழ ஆரம்பித்தாள்..

அழுதவாறு ஓடும் மனைவியை பின்தொடர்ந்து வந்தான் திரு.. அவனை பார்த்ததும் வேகமாக முகத்தை துடைத்தவள் திருவை பார்த்து சிரிக்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்..

“அது ஒண்ணுமில்ல அரசு… நான் எதோ…” அழுகையில் பேச்சு வராமல் போக அவனை பார்த்தவாறு நின்றாள்..

“பொய் சொல்லாத புஜ்ஜி மா.. நான் பார்தேன்.. நீ சுமி ரூம்ல இருந்து அழுதுட்டு ஓடி வந்ததை..” என்றவனுக்கு அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. ஆனால் அழும் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டவன் தன் கை வளைவில் வைத்துக் கொண்டே என்னவென்று கேட்க, வினுவும் அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே நடந்ததை கூறினாள்..

அவள் கூறுவதை கேட்டவனுக்கு தங்கையை நினைத்து யோசனையில் புருவம் சுருங்கியது.. தங்கை இப்படி நடந்துக் கொள்பவள் இல்லையே என்று நினைத்தவன் இப்போது வினுவை சமாதானம் செய்வதே பிரதானமாக தோன்றியதால்,

“அவ எதாச்சும் கோபத்துல இருந்திருப்பா புஜ்ஜி மா.. நான் பேசுறேன் அவள் கிட்ட…

“வேண்டாம் வேண்டாம்” அவசரமாக மறுத்தவள், “நீ எனக்காக பேசினா.. அப்புறம் உன் மேலயும் கோபப்படுவா..” என்றவளின் முகம் அழுகையில் சிவந்திருந்தது..

அவள் முகத்தை தன் நெஞ்சில் இருந்து நிமிர்த்தியவன் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்க்க, வினு அவனை புரியாமல் பார்த்தாள்..

“என்ன பார்க்கிற??”

“அதில்ல புஜ்ஜி மா… அழுதாலும் பொண்ணுங்க பார்க்க அழகா இருப்பாங்களாமே??? ஆனா நீ ஏன் அசிங்கமா இருக்க” என்றவன் முகத்தை சுழிக்க, வினுவின் முகம் அழுகையில் இருந்து கோபத்தை தத்தெடுத்தது..

“என்னடா சொன்ன.. அசிங்கமா இருக்கா..?, உன்னை…!!” என்றவள் அவனை அடிக்க துரத்த… அவன் கட்டிலை சுற்றி ஓடினான்..

“நிஜம்மா தான்டி சொல்றேன்.. நீ அழுதா அசிங்கமா இருக்க..”

“டேய்ய்ய்ய்ய்… உன்னை..!!” ஒரு வழியாக அவனை பிடித்தவள் அவனை கட்டிலில் தள்ளி தலையனையால் அவனை அடிக்க, லாவகமாக அதை தடுத்தவன் அவனை தன் கையணைப்புக்குள் கொண்டு வந்தான்..

மொத்தமாக அவன் மீது படுத்திருந்தவள் அவனது செய்கையில் விழிக்க, அவன் அவளை தன்னோடு சேர்த்தணைத்தான்..

“புஜ்ஜி மா.. நீ எனக்காக கூட இதுவரைக்கும் அழுதது இல்லை..ஏன் நான் உன்னை மோசமா பேசினப்போ கூட தைரியமா இருந்த ஆனா இப்போ இந்த சின்ன விஷயத்துக்காக இப்படி அழலாமா?? ரிலாக்ஸ் மா.. சுமியோட மனசுல எதோ ஒன்னு அவளை டிஸ்டர்ப் பண்ணுது… அதனால தான் இப்படி நடந்துக்குற.. சீக்கிரம் சரியாகிடுவா…” அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்டியவன் அவளுக்கு புரியவைக்க, வினுவும் அவன் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டு, இனி சுமி மனதில் இருப்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துக் கொண்டாள்..

“ம்ம்” முனகலாக கூறியவள் அவன் நெஞ்சில் தலைசாய்த்துக் கொள்ள, திருவும் அவளை இதமாக அணைத்துக் கொண்டான்..

“புஜ்ஜி மா…” அவள் நெற்றியில் தன் உதட்டால் கோலம் வரைந்தவாறே அவன் அழைக்க,

“ம்ம்..”

“என் மேல கோபம் போய்டுச்சா???” தன் அணைப்பில் அவள் விலகாமல் இருப்பதில் கணவனாக அவனது உணர்வுகள் தட்டியெழுப்பப்பட, அவளை தன்னைவிட்டு விலக்குவதற்காகவே அப்படி கேட்டான்.. இந்த நிலமையில் அவன் என்ன செய்தாலும் அவள் எதுவும் கூற மாட்டாள் தான். ஆனால் ஏற்கனவே ஒரு முறை சூழ்நிலையால் இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துவிட்டனர்.. மீண்டும் அதே தவறை செய்ய அவன் விரும்பவில்லை..

வேகமாக அவனை விட்டு விலகியவள், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, “நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்… நீ அட்வான்டேஜ் எடுத்துக்காத” என்றாள் இவ்வளவு நேரம் அவன் அணைப்பில் கட்டுண்டு ,இருந்ததையெல்லாம் மறந்து..

அவள் பாவனையில் பொங்கிய சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கியவன் சரி என்பது போல் தலையசைக்க.. அவள் அவனை முறைத்தவாறு அங்கிருந்து சென்றாள்.. ஆனால் மனமோ மாறாக மகிழ்ச்சியில் ததும்பியது..

அன்றிரவு தன் அறைக்கு வந்த அகில் போர்வையையும் தலையனையையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு கிளம்ப, சுமி அவனை தடுத்தாள்..

“நீ அங்க போக வேண்டாம்.. இங்கேயே எங்கயாச்சும் படுத்துக்கோ..” முகத்தை திருப்பியவாறு சுமி கூற,

“ஏன் என்னாச்சு??? உனக்கு தான் நான் இங்க படுத்தா பிடிக்காதே…” எங்கே வெளியே செல்ல சொல்லிவிடுவாளோ என்று பயமிருந்தாலும் காரணம் அறிய வேண்டி கேட்டான்..

“நீ வெளியே போனா.. என் அண்ணாவும் பின்னாடியே வருவான்.. அதனால இங்கேயே படுத்துக்கோ..” எரிச்சலாக கூறியவள் தரையில் ஒரு போர்வையை விரித்து படுக்க ஆயத்தமாக… அகிலும் கட்டிலின் மறுபுறத்தில் போர்வையை விரித்தான்.. மனதில் திருவிற்கு ஆயிரம் நன்றிகளை கூறிவிட்டு திரும்பியவன், சுமியும் தரையில் போர்வையை விரிப்பதை பார்த்து அதிர்ந்தான்..

“சுமி.. நீ ஹனிக்கூட மேல படுத்துக்கோ..” என்றவன் பார்வையால் மகளை வருடினான்.. சுமி கூறிய பின் இன்று முழுவதும் அவனோடு தானாகவே வந்து பேசியிருந்தாள் அவனது மகள்.

“எனக்கு தெரியும்… நான் என்ன பண்ணணும்னு.. நீ உன் வேலைய பாரு..” முகத்தில் அடித்தாற் போல் கூறியவள் படுத்துக் கொண்டாள்.. அகிலும் அவள் முகத்தை பார்த்தவாறே தன் போர்வையில் படுத்துக் கொண்டான்.. அவள் தரையில் படுத்திருப்பது வருத்தமாக இருந்தாலும் மனதின் ஒரு ஒரம் தனக்காக என்று மகிழவே செய்தது..

திருவும் போர்வையோடு கிளம்ப, வினு அவனை அவர்களது அறையிலே படுக்க கூறினாள்..

“அண்ணா அங்க இருக்க மாட்டான் அரசு… உன் தங்கச்சிக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும். நேத்து நீயும் அங்க தான் படுத்திருந்தன்னு அதனால இன்னைக்கு அண்ணாவை அனுப்ப மாட்டாங்க..” என்றவள் பெருமிதமாக பார்க்க, திருவிற்கு கூட ஆச்சரியம் தான்.. வினுவின் புத்திக் கூர்மையை கண்டு,

“அட ஆமா.. அப்போ இன்னைக்கு நான் உன்கூட தூங்கலாமா???” ஆர்வமாக கேட்டவனை முறைத்தவள், தரையை சுட்டிக் காண்பித்து

“அதோ அங்க படுத்துக்கோ” என்க, அவன் கையில் இருந்த போர்வையோடு வெளியே செல்ல ஆயத்தமானான்..

“டேய் என்னடா பண்ற???” அவன் கைகளை பற்றி தடுத்தவாறு அவள் கேட்க, அவனோ அவள் கையை தட்டிவிட்டு விட்டு,

“என்னால கீழே எல்லாம் தூங்க முடியாது… நான் பேசாம என் சாமியார் நண்பனை கூட்டிட்டு மேலே போய் தூங்கிக்கிறேன்”..என்றான் கர்மசிரத்தையாக …

“லூசு மாதிரி பேசாத டா.. அவங்களை சேர்த்து வைக்க வேண்டாமா???”

“அப்போ நாம சேர வேண்டாமா???” எதிர் கேள்வி கேட்டவனை பார்த்து வினு ஙே என்று விழிக்க,

“ஒன்னு நானும் உன்கூட தான் படுப்பேன்.. அப்படி இல்லாட்டி என் சாமியார் ஃப்ரெண்ட் கூட தான் தூங்குவேன்..” என்றவனது கூற்றில் வினு அவனை விழி விரிய பார்த்தாள்..

அவன் இப்படி மிரட்டுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.. நேற்று அவள் அவனை அகிலின் பின்னால் அனுப்பியதன் காரணமே இது தான்.. விஷயமறிந்து சுமி மீண்டும் தன் அண்ணாவை வெளியே அனுப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான்… ஆனால் இதில், தான் இப்போது வசமாக மாட்டிக் கொண்டதை நினைத்து அவள் திகைத்து நிற்க, திருவோ டீலா?? நோ டீலா?? என்ற விதத்தில் அவளை பார்த்தான்….

“சரிப் போ.. கட்டில்ல படுத்துக்கோ ஆனா எதாச்சும் சேட்டை பண்ணின??? பிடிச்சி கீழே தள்ளி விட்டுருவேன்..” ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவள் அவன் கையில் இருந்த பெட்ஷீட்டை வாங்கி கட்டிலில் விரிக்க ஆரம்பித்தாள்..

அவளை நினைத்து ரகசியமாக புன்னகைத்தான் அவளது ஹிட்லர்.. அவள் போர்வையை விரிப்பதற்கள் தண்ணீர் குடித்துவிட்டு வரலாம் என்று வெளியே வந்தவன் அங்கே விக்கி பதுங்கி பதுங்கி செல்லவும் யோசனையாக அவனை பின் தொடர்ந்தான்..

அனைவரும் உறங்கியிருக்க..இந்த நேரத்தில் எங்கே செல்கிறான் என்பது போல திருவும் அவன் அறியாமல் பின்னே செல்ல.. விக்கி நேராக சென்றது திருவின் வீட்டு மொட்டை மாடிக்கு…

விக்கி மேலே செல்ல திரு கீழேயே நின்றுக் கொண்டு பார்த்தான்.. மேலே சென்ற விக்கி அங்கே யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வேகமாக கீழே வந்து மொட்டை மாடிக்கு செல்லும் கதவை சாற்றினான்…

அவனது செய்கையை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த திருவிற்கு அடுத்து அவன் செய்ததை பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வ்ந்தது.. ஏனென்றால் மொட்டை மாடிக்கு செல்லும் கதவை பூட்டு வைத்து பூட்டிக் கொண்டிருந்தான் விக்கி.!!!.

விழிகள் தொடரும்….

error: Content is protected !!