Lovely Lavi – Episode 25

Lovely Lavi – Episode 25

அத்தியாயம் – 25

லவி திருமணம் முடிந்த அன்று  பேசிய பேச்சில் வேலையைக் காரணம் காட்டி அங்கிருந்து சென்றான் சங்கர். லவி, சங்கரைத் திரும்பி வரக் கூடாது என்று எச்சரித்து அனுப்ப, தலை அசைத்துக் கிளம்பினான் சங்கர்.

‘இந்த திருமணம் தேவையா? அங்கிள் கேட்டா என்ன பதில் சொல்லுவேன்? எத்தனை நாள் என்னால் ஓடி ஒழிய முடியும்?’ போன்ற கேள்விகளோடு அங்கிருந்து கிளம்பினான் சங்கர்.

வாழ்க்கை சிரமமாகும் என்றறிந்தும் அதை அனுபவிக்கும் போது அதிகமாக வலிப்பதை உணர்ந்தான் சங்கர். வேலை நிமித்தமாக அங்குமிங்கும் அலைந்து லவியை சென்னையில் விட்டுவிட்டு அமெரிக்க செல்வதற்கான வாய்ப்போடு ஒரு வாரம் கழித்து வீடு திரும்பினான் சங்கர்.

ஒரு வாரத்தில், சங்கரை அங்கு எதிர்பார்க்காத லவி, கடுங்கோபத்தில் சங்கரை முறைத்தாள்.

தந்தை உடல் நிலை கருதி,  தன் தாய், தந்தை முன் எதுவும் பேச முடியாத காரணத்தினால், தன் பற்களை நறநறவென்று கடித்தபடி சங்கரை முறைத்தபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள் லவி.

“மாப்பிள்ளைக்கு அதைக் கொடு… மாப்பிள்ளைக்கு இதைக் கொடு.” என்று லவியின் தயார் ஏவ, சங்கர் மாப்பிள்ளையாகப் பதவி உயர்ந்ததை ஏற்றக்கொள்ள முடியாமல் லவியின் மனம் கனன்றது.

லவியிடம் பேசி புரிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு, லவியை தனியே சந்தித்து விஷயத்தைத் தெரிவிக்க சங்கர் காத்திருக்க, சங்கரிடம் சண்டையிட லவி காத்திருந்தாள்.

“சங்கர்… இன்னைக்கி தான் வந்திருக்க. உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.” என்று லவியின் தந்தை நடராஜ் கூற, சங்கர் சம்மதமாகத் தலை அசைத்து அவன் அறைக்கு சென்றான்.

சங்கரை பின் தொடர்ந்து வந்த லவி, வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தாள்.     “ஏய்… சங்கர்…” என்று சங்கருக்குப் பின்னோடு வந்த லவி அவனை சொடக்கிட்டு அழைத்தாள்.

சங்கர் லவியை  திரும்பி பார்த்து பேச ஆரம்பிக்க, “மூடு வாயை.” என்று கர்ஜனையாக லவி கூற, சங்கர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“உனக்கு அறிவில்லை?” என்று லவி கேள்வி கேட்டு, அவளே பதிலும் கூறினாள். “சரி… அதை விடு. அறிவில்லை. எனக்கு உன்னை பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிகிட்ட. ஆனால், மானம், ரோஷம் கூடவா இருக்காது? எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு திரும்பி வந்த?” என்று லவி தன் கண்களைச் சுருக்கி தலை அசைத்துக் கேட்க, அவள் கேட்பது சரி என்பது போல் அவள் காதில் தொங்கிய வளையம் அசைந்தாடியது.

“அது… வந்து…” என்று சங்கர் பேச ஆரம்பிக்க, “நீ ஒன்னும் பேச வேண்டாம். உன்னை இங்க வராத அப்படியே போயிருன்னு சொன்னேன் தானே? முன்னாடி சாப்பிட வழி இல்லை. இங்க இருந்த. இப்ப தான் வேலைக்கு போற கையில் காசிருக்கில்லை. எங்கயாவது போக வேண்டியது தானே?” என்று லவி சங்கரை பேச விடாமல் பேசிக் கொண்டிருக்க, சங்கர் அந்த அறையிலிருந்த நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்தான்.

லவியின்  கனவு கலைந்து போன ஏமாற்றம், கல்யாண விஷயத்தில் தோல்வி என அவளது முழு கோபமும் சங்கரின் மீது திரும்பி இருந்தது.

“எப்ப பாரு… அது வந்து… அது வந்துன்னு தடுமாற வேண்டியது. என் பெயரை சொல்ற தைரியம் இருக்கா உனக்கு?” என்று லவி சங்கரைப் பார்த்து நக்கலாகக் கேட்க, சங்கர் பதில் கூற விருப்பம் இல்லாதவன் போல் அமர்ந்திருந்தான்.

‘என்னவேணாலும் பேசிட்டு போ. நான் இங்கிருந்து ஒரு வாரத்தில் கிளம்பிவிடுவேன்.’ என்ற எண்ணத்தோடு அவன் நாற்காலியில் சாய, “எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை. எங்கேயாவது போக வழி இல்லைனா. செத்து போ.” என்று லவி கடுப்பாகக் கூற, சங்கர் துணுக்குற்று லவியை அடிபட்ட பார்வை பார்த்தான்.

லவியின் பேச்சில் அறையிலிருந்து கிளம்பி, வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான் சங்கர்.

‘ரொம்ப பேசிட்டோமோ?’ என்று சங்கரின் பார்வையில் ஒரு நொடி யோசித்தாள் லவி. அதன் பின் தன் தோளைக் குலுக்கிக் கொண்டு, ‘இவன் ஏன் என் வீட்டுக்கு வந்தான்?’ என்று தன் என்ன போக்கை மாற்றிக் கொண்டாள் லவி. ‘இவனை ஏன் எனக்குப் பிடிக்கவில்லை? அம்மாவும், அப்பாவும் இவனைத் தாங்குவதாலா? என்னவா இருந்தா என்ன! எனக்கு பிடிக்கலைன்னா இவன் எங்கயாவது போய் தொலைய வேண்டியது தானே? அமைதியா இருந்தே நல்லவன் வேஷம் போட வேண்டியது.’ என்று வெறுப்போடு யோசித்தாள் லவி.

சங்கர் பொடி நடையாக சாலையில் வெறுப்பாக நடந்தான். வழக்கமாக யாதவிற்க்கு அழைக்கும் சங்கர் அவனுக்கு திருமணம் முடிந்த காரணத்தினால் அவனுக்கு அழைக்க விரும்பவில்லை.

அதே நேரம் லவியும் அவள் காரை எடுத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பினாள்.  எங்கு செல்வதென்றறியாமல், சங்கர் தெருவில் அலைய… லவியின் கார் எங்கு செல்வதென்றறியாமல், அங்குமிங்கும் சுற்றியது.

‘ச்ச… என்ன பெண் இவள்? பேசுவதைக் கூட கேட்கும் பொறுமை இல்லாதவள். இவளோடு என்னால் ஒரு நொடி கூட வாழ முடியாது.’ என்று எண்ணியபடியே, சங்கர் சாலையில் நடக்க… அப்பொழுது சங்கரை எதிர்கொண்டான் அவன் கல்லூரி நண்பன்.

“ஹை… சங்கர்… என்ன புது மாப்பிளை அதுக்குள்ள வெளிய?” என ஆரம்பித்து அவர்கள் பேச்சு வேலையைச் சுற்ற, “ஏன் இங்க நின்னுக்கிட்டே பேசுறோம். வா.” என்று அருகே இருந்த பாரை காட்ட, சங்கர் மறுப்பாகத் தலை அசைத்தான்.

“ஹே சங்கர். நீ நல்லவன்னு ஊருக்கே தெரியும். இந்த இடத்துக்கே வரதெல்லாம் பெரிய பாவமில்லை. உனக்கென்ன தேசிய விருதா குடுக்க போறாங்க?” என்று கேலியாக அந்த நண்பன் கூற, ‘தேசிய விருதா? சாக சொல்லுவாங்க!’ என்ற எண்ணம் தோன்ற சங்கர் தலை அசைப்போடு உள்ளே சென்றான்.

அந்த நண்பன் மது அருந்தியபடியே சங்கரிடம் பேச, சங்கர் தன் கவலைகளை மறந்து பேச முயற்சித்தான். “செத்து போ…” என்று லவி கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சங்கரின் காதில் ஒலிக்க, சங்கரின் நண்பன் “ஜஸ்ட் எ சிப்? ” என்று கேட்க சங்கர் அவன் மனதிலிருந்த தடுமாற்றத்தை தாண்டி கோபமாக  மது அருந்த ஆரம்பித்தான்.

லவி வழக்கமாக நித்திலாவோடு வரும் பிஸ்ஸா கடைக்கு தனியாக வந்திருந்தாள்.

‘ச்ச… கல்யாணத்துக்கு அப்புறம் நித்தி கூட வர முடியலை.’ என்றெண்ணியபடி சோகமாக அமர்ந்திருந்தாள் லவி. ‘ஐயோ… எனக்கு சங்கரைப் பார்த்தாலே பிடிக்கலையே. என்ன காரணமுன்னு எல்லாரும் கேட்கிற கேள்விக்கு எனக்குப் பதில் தெரியலை.’ என்று மனக் குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் லவி.

ஒரு பிஸ்ஸா, கோக் உடன் லவி அமர்ந்திருக்க, எதிரே வந்தமர்ந்தான் ஹரி.

“ஏய்! நீ எதுக்கு இங்க வந்த?” என்று லவி கடுப்பாகக் கேட்க, “நோ டென்ஷன். லவி. யாரவது கல்யாண ஆன பொண்ணு கிட்ட வம்பு பண்ணுவாங்களா?” என்று பதவிசமாக கேட்டான் ஹரி.

‘இவன் கூற்றில் உண்மை இருக்குமோ?’ என்ற எண்ணத்தோடு ஹரியைப் பார்த்தபடி, “அப்ப எதுக்கு இங்க வந்திருக்க?” என்று சிடுசிடுப்பாக கேட்டாள் லவி.

சூரியன் மறைந்து இருட்டிவிட… அப்பொழுது லவியின் வீட்டில் அவள் தாயார்,  லவி சென்று நேரமாக, லவியை தேடி லவியின் தாயார் சங்கருக்கு அழைக்க, அவன் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வர, லவியின் தாயார் நித்திலாவுக்கு அழைத்தார்.

லவியின் அருகே அமர்ந்திருந்த ஹரி, “உன்னை வழியில் பார்த்தேன். உன் கல்யாணத்துக்கு வர முடியலை. அது தான் உனக்குக் கல்யாண வாழ்த்து சொல்லலாமுன்னு.” என்று லவியுடன் பேசியபடி, அவள் வாங்கி வைத்திருந்த கோக்கில் லவி அறியாமல் மயக்க மருந்தைக் கலந்தான் ஹரி.

லவி மனக் குழப்பத்திலிருந்ததால் ஹரியின் செய்கையைக் கவனிக்கவில்லை.

‘முழுசா கலக்கலை லவி. என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியணும்.’ என்று மனதில் கருவிக் கொண்டே தன் வேலையைச் செய்தான் ஹரி.

லவி கோக் குடித்து முடிக்க, ஹரியின் கண்களில் தெரிந்த மிருகப் பார்வையை உணர்ந்த லவி, ஹரியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள்.

“டேய்… என்ன பண்ண?” என்று லவி காட்டமாகக் கேட்க, “மயக்க மருந்து கலந்தேன். இத்தனை நாள் தப்பித்த நீ இன்னைக்கி வசமா சிக்கிட்ட.” என்று கூறி ஹரி சிரிக்க, லவி தன் கால்களிலிருந்த செருப்பைக் கழட்டி அந்த கடையில் அனைவரின் முன்னிலையிலும் ஹரியை காட்டுத்தனமாக அடித்தாள்.

சிலர் இருந்ததால் ஹரி அவளைத் தாக்காமல், அவள் செய்கையைத் தடுக்க முயற்சித்தான்.

அதே நேரம் சங்கர் சாலையில் தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தான்.

லவியின் தாயார் அழைத்தவுடன், யாதவொடு லவியை தேடி கிளம்பினாள் நித்திலா.

அவர்கள் வழக்கமாக வரும் இடத்திற்கு வர, லவி ஹரியை அடித்து விட்டு அவள் காரை எடுத்துக் கொண்டு வேகமாகக் கிளம்புவதைப் பார்த்து நித்திலா ஓடி வர, அதற்குள் லவி சர்ரென்று  கிளம்பிவிட்டாள்.

அனைவரின் முன்னும் அவமானப்பட்ட ஹரி, “இன்னைக்கி நீ காலி டீ… உன் அழிவு என் கையில் தான்.” என்று முனங்கிக் கொண்டு அவன் பைக்கை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் லவியை பின் தொடர்ந்தான்.

“ஐயோ… ஹரி…” என்று நித்திலா அலற, “ஒன்னுமாகுது. நீ வா… நாம பின்னாடியே போவோம்.” என்று யாதவ் கூற, சம்மதமாகத் தலை அசைத்து, நித்திலா அவனோடு காரில் கிளம்பினாள்.

ஹரி கொடுத்த மயக்க அளவு சற்று குறைவே என்பதால் லவி மயக்கமடையாமல், தலையில்  சற்று விண்வினென்று வலியோடு சாலையில் காரை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தாள். ஹரியும் அவளை மடக்கிப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தோடு வேகமாக பின் தொடர்ந்தான்.

யாதவ், நித்திலா இருவரும் லவியை பாதுகாப்பாக வீட்டில் லவியை சேர்த்து விடும் எண்ணத்தோடு  அவர்களை பின் தொடர்ந்தனர்.

அனைவரையும் சங்கரைக் கடந்தே சென்றனர். யாரும் சங்கரைக் கவனிக்கவில்லை. சங்கரும் யாரையும் கவனிக்கவோ, இல்லை அங்கிருக்கும் ஆபத்தையோ அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!