Lovely Lavi – Episode 27

Lovely Lavi – Episode 27

 

அத்தியாயம் – 27 – Pre Final episode 

லவியின் தந்தை உலகத்தை விட்டுச் சென்று, சில நாட்களில் உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். லவியிடம் பழைய துருதுருப்பு காணப்படவில்லை. மௌனமே அவள் ஆயுதமாகியது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பவள் போல் காணப்பட்டாள். அனைவரும் வீட்டிலிருந்து சென்றுவிட, அந்த அதிகாலை வேளையில் சங்கர் ஏதோ வேலையில் மூழ்கியிருக்க, அவன் அருகே சென்று துணிமணிகள் கொண்ட பெட்டியை விட்டெறிந்தாள் லவி.

சங்கர் லவியை அதிர்ச்சியாகப் பார்க்க, “லவி…” என்றழைத்தபடி ஓடி வந்தார் லவியின் தாயார் கல்யாணி.

“அம்மா… அப்பாவை கொன்னது இவன் தான். இவன் வாழ்க்கை சரி இல்லைன்னு தானே அப்பா உயிரை விட்டாங்க.” என்று லவி கோபமாகக் கூற, சங்கர் லவியை பரிதாபமாகப் பார்த்தான்.  “லவி… உளறாத.” என்று லவியின் தாயார் கூற, “அம்மா… நீங்க சும்மா இருங்க.” என்று தன் ஒற்றை விரலை எடுத்து தன் தாயை மிரட்டினாள் லவி.

சங்கர் அருகே சென்று, “கடைசி வரைக்கும் நீ என் அப்பா முன்னாடி நல்லவனாகிட்ட. என்னை மோசமானவளாக்கிட்டல்ல?” என்று லவி தன் கண்களை சுருக்கி பரிதாபமாகக் கேட்க, “கொஞ்சம் பொறுமையா இரு. நாம பேசிக்கலாம்.” என்று சங்கர் பொறுமையாக எடுத்துரைத்தான்.

“அப்ப எனக்குப் பொறுமை இல்லை. நான் அடங்காப்பிடாரி. நீ ரொம்ப யோக்கியன்? அது தான் சொல்ல வர? அப்படி தானே?” என்று லவி கேட்க, சங்கர் மௌனம் காக்க, “இப்படியே அமைதியா இருந்து, எங்க அப்பாவை கொன்னுட்ட. இன்னும் ஒரு நிமிஷம் இந்த வீட்டிலிருந்த, அப்புறம் நடக்கிறதே வேற.” என்று லவி சங்கரை மிரட்டினாள்.

“என் அம்மா, அப்பா எல்லாரையும் உன் பக்கம் திருப்பிட்டு, நீ அனாதைன்னு சொல்லிச் சொல்லி என்னை தனியாகிட்ட.” என்று லெவி முணுமுணுத்தாள் லவி.

சங்கர் தன் பெட்டியை எடுக்க, “சங்கர்…” என்று லவியின் தாயார் கல்யாணி தடுக்க, “இல்லை ஆண்ட்டி… நான் கிளம்பறேன். நிச்சயம் தேவைப்படும் பொழுது வரேன்.” என்று சங்கர் தன்மையாக  கூற, “தேவைப்படாது. உன்னை இனி நான் என் கண் முன்னாடி பார்க்கக் கூடாது. பார்த்தா நான் நல்லாருக்க மாட்டேன்.” என்று லவி அதிகாரமாகக் கூற, சங்கர் ஓர் விரக்தி புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினான்.

லவியின் தாயார் சங்கர் பின்னாடியே செல்ல, எந்த பயனுமில்லை. சங்கர் அவரிடம் மரியாதையாக விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான்.

கோபமாக உள்ளே வந்த தாயார், லவியை பார்த்து, “நல்லா சொல்றேன் கேட்டுக்கோ. உங்க அப்பாவை சங்கர் கொலை செய்யலை. நீ… நீ தான் சாகடிச்சிட்ட. இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ. நீ அவசர புத்தியால், கோபத்தால், பிடிவாதத்தால் என்னையும் சாகடிப்ப.” என்று கூறி தரையில் அமர்ந்தார்.

லவி தன் தாயை வெறுப்பாகப் பார்க்க, “உன்னைத் தைரியமா வளர்த்தோம். ஆனால், இப்படி இல்லை லவி. இப்படி இல்லை. ஏன் டீ சங்கர் விஷயத்தில் இப்படி நடந்துக்குற?” என்று தலையிலும், மார்பிலும் அடித்து அழுதார் லவியின் தாயார் கல்யாணி.

லவிக்கும், அவள் தாயுக்குமான பேச்சு வார்த்தை அன்று முதல் குறைய ஆரம்பித்தது.  லவி தனக்குள் முடங்க ஆரம்பித்தாள். தான் கருவுற்றதைக் காலம் தாழ்ந்தே உணர்ந்தாள் லவி. குழந்தை பிறந்த பின், தன் தந்தையின் பெயரான நடராஜ் என்பதைச் சுருக்கி ராஜ் என்று பெயரிட்டாள். லவியால் சங்கரை மன்னிக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

மெல்ல மெல்லத் தாய் கூறுவது போல் தந்தையின் மரணத்திற்கு தானே காரணம் என்ற எண்ணம் லவியின் மனதில் அவளறியாமல் வேர் விட்டு வளர ஆரம்பித்தது. அதன் பலனாக  லவிக்குள் அழுத்தம் ஏற்பட்டு அவள் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள, அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

இதே நிலை நீடித்தால், லவியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் கூற, ராஜின் எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் லவிக்குள் பரவ, சங்கரிடமிருந்து அழைப்பு வர ராஜை சங்கரிடம் ஒப்படைக்கும் எண்ணத்தோடு லவி யூ.எஸ். கிளம்பினாள்.

காலமும் கதையின் போக்கும் நம்மை நிகழ் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

‘நீ தான் காரணம். உன் வாழ்க்கை நாசமா போனதுக்கு நீ தான் காரணம். உன் கூட எவன் வாழ்வான்?’ என மீண்டும் மீண்டும் தாய், உற்றார் உறவினர் என பலர் கூறுவது லவியின் காதில் மீண்டும் மீண்டும் விழ லவி இந்த ஐந்து வருட வலியை தன் மனதில் அனுபவித்தாள்.

அன்பான வாசகர்களே!

என் மனதில் தோன்றிய சில வினாக்கள் – உங்கள் கருத்தை எதிர்பார்த்து நான்!

  1. ஓர் பெண் சற்று அதீத குறும்போடு, துடுக்குத்தனமாக, அவள் விருப்பு, வெறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தால் அவள் இத்தனை சோதனைக்கும், நிந்தனைக்கும் ஆளாக வேண்டுமா? இதே குணத்தோடு ஆண் இருந்தால் கர்வமாக ஏற்றுக் கொள்ளும் சமுதாயம் லவியை அதே மனதோடு ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெண்ணின் சிறு குறைகளை பூதாகாரமாக்குவது எதுவோ?

இந்த கேள்வியே லவி. ஏன் இந்த சமுதாயத்திற்கு இத்தனை ஓரவஞ்சனை.

லவியிடம் பொறுமை குறைவாக இருக்கலாம். லவி எந்த குற்றமும் புரியவில்லை. ஆனால், குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டாள். அவள் தைரியம் அடங்காபிடாரித்தனமாக சித்தரிக்கப்படுகிறது. இதுவே இந்த சமுதாயத்தின் வெளிப்பாடு. எதிர்த்துக் கேட்கும் பெண்ணை, வீட்டினரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆண்களும் தாங்கிக் கொள்வதில்லை. இந்த சமுதாயமும் பாதுகாப்பு அளிப்பதில்லை.

  1. தவறுவது மனித குணம்! ஆனால், அவர்கள் திருந்தி வாழக்  கூடாதா? அப்படி அவர்கள் திருந்தி வாழ்ந்தால் இந்த சமுதாயம் அவர்களை வாழ விடுமா? அவர்கள் கடந்த காலத்தைக் குத்தி கிளறாமல் அவர்களை அவர்களாக ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை இந்த சமுதாயத்திற்கு இருக்கிறதா?

இந்த வினாக்களே, அவர்களின் கடந்த காலத்தை இத்தனை நாட்கள் உங்களிடம் மறைக்க என்னை உந்தியது. லவி அவள் குணத்தோடு, தன் குற்ற உணர்ச்சியை அழுத்தமாகக் கடக்க முயன்றாள். சங்கர் பெருந்தன்மையாக ஓர் புன்னகையோடு அவன் தவற்றைச் சரி செய்யப் போராடினான்.

ஆனால், ஏன் நம்மால் இவர்கள் கடந்த காலம் எதுவாக இருப்பினும், அதை ஆராயும் சிந்தனை இல்லாமல்  அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தடுமாறுகிறது. மனிதர்களின் கடந்த காலத்தைத் தோண்டி துருவ தோன்றுகிறது.

மனிதர்களை அவர்கள் போக்கில் ஏற்றுக் கொள்ள முடியாமல், நியாயம் கற்பித்துத் தடுமாறுவது  இந்த சமுதாயத்தின் சாபக்கேடா? நியாயம் கற்பிப்பவர்கள் அனைவரும் நியாயஸ்தர்களா?

“சங்கர்…. சங்கர்…” என்ற முனங்கலோடு லவி சங்கரோடு நம்மையும்  அழைக்கிறாள்.

லவியின் உணர்வுகள் கடந்த காலத்தைக் கடந்து ஓய்வாக நிகழ் காலத்திற்குத் திரும்பியது. சங்கர் அவள் தலை கோதி, அவளை அன்பாகப் பார்த்தான்.

“ராஜ்… ராஜை உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். ” என்று புன்னகைத்தாள் லவி. சங்கர் தலை அசைத்துக் கேட்டுக் கொண்டான்.

“அவன் உன்னை மாதிரி வளரனும்.” என்று லவி கூற, மறுப்பாகத் தலை அசைத்து… “உன்னை மாதிரி தைரியமா வளரனும்.” என்று சங்கர் அவள் கண்களை பார்த்தபடி கூறினான்.

“அதுக்கு நீ நல்ல படியா எழுந்து வரணும். எல்லாம் சரியாகிரும்.” என்று சங்கர் அன்பு கட்டளையிட, மறுப்பாகத் தலை அசைத்த லவி, “என் தனிமை, என் உடல் நிலை, உன் அருகாமை என்னை மெலிதா அசைத்துப் பார்த்திருக்கலாம். ஆனால், நான் உன்னை ஒரு நாளும் ஏற்க மாட்டேன். நான் உன்னை மன்னித்து ஏத்துக்  கொண்டாலும், உன்னால் என்னை மன்னிக்க முடியாது. உனக்கு என் மேல் உள்ளது அனுதாபம். வாழ்க்கையைத் தொடங்க அனுதாபம் போதாது.” என்று சங்கரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்தாள் லவி.

 

“நீ குழந்தைக்காகக் கூட இத்தனை வருஷம் வரலை. இப்ப என் மேல் அனுதாபப்பட்டு வந்திருக்க. யாருடைய அனுதாபமும் எனக்குத் தேவை இல்லை. எல்லாரும் சொல்ற மாதிரி நான் தப்பானவளா இருந்தா  எல்லாம் என் விதிப்படி நடக்கட்டும்.” என்று லவி உறுதியாகக் கூற, “லூசா நீ.” என்று அப்பொழுது உள்ளே நுழைந்த நித்திலா கோபமாகக் கேட்டாள்.

“நித்திலா. கொஞ்சம் அமைதியா இரேன்.” என்று யாதவ் நித்திலாவை கண்டிக்க, “ம்… க்கும்.” என்று சலிப்பான குரலை நித்திலா எழுப்பினாள்.

“அம்மா…” என்று ராஜ் அழைக்க, லவி எழுந்து அமர்ந்தாள்.

“அவ்வுளவு ஈஸியா இந்த உலக பந்தம் போதுமுன்னு சொல்ல முடியுமா?” என்று நித்திலா கேலி பேச, “என்னை விட்டே போக முடியாது. அப்புறம் தானே இந்த உலக பந்தம் பத்தி பேச்சு.” என்று சங்கர் லவியை பார்த்தபடி கூற, ‘அப்படியே என்னை விரும்பி கல்யாணம் பண்ண மாதிரி தான் பேச்சு.’ என்று லவி மனதிக்கிற்குள் எண்ணியபடி சங்கரைக் கடுப்பாகப் பார்த்தாள்.

“சரி லவி. நான் ராஜை கூட்டிட்டு கிளம்பறேன். உனக்கு இன்னும் கொஞ்சம் டெஸ்ட் இருக்கு. முடிச்சிட்டு வாங்க.” என்று நித்திலா கிளம்ப, யாதவ் அவர்களோடு கிளம்பினான்.

“நீ ஏன் டென்ஷன் ஆகுற? இனி டென்ஷன் ஆக கூடாது. பழசை நினைக்கக் கூடாது.  நாம எல்லாம் பேசி சரி பண்ணிக்கலாம்.” என்று சங்கர் பொறுமையாகக் கூற, “என்னை பார்த்தா பாவாம இருக்கா? நீ இப்படி என்னை பாக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ ராஜ்க்காக கூப்பிட்டேன்னு நினைச்சி தான் நான் வந்தேன். நீ என் மேல் அனுதாபப்பட்டு, எனக்காக கூப்பிட்டேன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்.” என்று லவி மிடுக்காகக் கூற, சங்கர் அவளை புன்னகையோடு பார்த்தான்.

“இப்ப எதுக்கு சிரிக்குற?” என்று லவி சங்கரிடம் கோபமாகக் கேட்க, “நான் உன்னை எதுக்கு இங்க இத்தனை வருஷம் கூட்டிட்டு வரமா, இப்ப கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா?” என்று சங்கர் கேட்க, “அது தான் அனுதாபமென்று இத்தனை தடவை சொல்றனே. தெரியலை?” என்று லவி கடுப்பாகக் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து சங்கர் கூறிய பதிலில் லவி அவனைக் கோபமாக முறைத்தாள்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!