KM-8

8

 

அர்விந்த் வந்ததிலிருந்து எப்போதும் போல சாதாரணமாகவே இருந்தான். பங்கஜம் கேட்டதற்கு அவர்கள் வீட்டில் உண்ட உணவைப் பற்றி சொல்ல,

அவளுக்கும் வாயில் நீர் உறவே செய்தது.

 

“அன்னிக்கு நிச்சய சாப்பாடும் ரொம்ப நன்னா இருந்தது டா கிச்சா” உண்மையை இப்போது ஒத்துக்க கொண்டாள்.

 

“அப்பறம் ஏன் அன்னிக்கு இது சரியில்ல அது சரியில்லன்னு சொன்ன?” வேணு அருகில் வர,

 

“உடனே எல்லாம் நன்னா இருக்குன்னு சொல்லிட்டா அப்புறம் அவா கேர்லெஸ்சா விட்டுடுவா கல்யாணத்துல. இப்படி சொன்ன தான் கல்யாண சாப்பாடும் நன்னா பண்ணுவா”

 

“அடிப்பாவி. நன்னா இருந்ததுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவாளும் சந்தோஷப் பட்டிருப்பா. கல்யாணத்துலையும் இதே போல செய்ங்கோன்னு சொல்லிருக்கலாம். ஆனா அந்த சின்ன பொண்ணு உனக்கு சரியான பதிலடி கொடுத்தா” வேணு மீண்டும் அதை நினைவு படுத்த,

 

“அப்படியா என்ன பா சொன்ன?” ஆர்வமானான் அர்விந்த்.

 

“நல்லா இல்லையான்னு பாக்க தான் ரெண்டு மூணு தடவ கேட்டு வாங்கி சாப்டீங்களான்னு கேட்டா?” வேணு நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல,

 

அர்விந்துக்கும் அவளின் உடனடி கேள்வியை நினைத்து ஆச்சரிய படாமல் இருக்க முடியவில்லை.

 

“அம்மாவ, அதுவும் ஆன் தி ஸ்பாட்ல கேட்ருக்கானா அவ பெரிய ஆளு தான்” அவனும் பாராட்ட,

 

“யப்பா என்ன வாய் அந்த பொண்ணுக்கு, நல்ல வேளை அனு இப்படி இல்லை. பொறுமையா பேசறா” கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

 

“ஹா ஹா. ஒரு வேளை இவ மாட்டுப்பொன்னா வந்தா என்ன பண்ணுவ?” அர்விந்த் உள்ளர்த்தத்தோடு சிரிக்க,

 

“என்ன பண்றது, அதிகாரத்த அவகிட்ட குடுத்துட்டு, அவ போடறதா தின்னுட்டு மூலைல கிடக்க வேண்டியது தான்” வேணு நடக்கப் போவதை சொல்லி சொல்லி சிரித்தார்.

 

“ஹ்ம்ம் ஹூம.. அப்பாக்கும் பிள்ளைக்கும் கிண்டலா போச்சா. ஏண்டா உங்க அம்மா வ ஒருத்தி இப்படி பேசியிருக்கா உனக்கு கோவம் வரல?” அரவிந்தை பார்த்து கத்த,

 

“நான் ஏன் கோவப் படனும்? நீ அவளோட அப்பா அம்மா கஷ்டப்பட்டு பண்ணதை குறை சொல்லிருக்க, அதை பாத்துட்டு அவ சும்மா இருக்கணுமா?உன்னை யாரவது சொன்னா நான் கேட்கணும்னு நீ எதிர்பார்க்கற மாதிரி தான அவளும் அவா ஆத்துக்காக பேசிருப்பா. இதுல தப்பு என்ன இருக்கு? அதுவும் இல்லாம நீ வேணும்னே குறை சொல்லிருக்க. அதுக்கு அவ பேசினது தப்பில்லன்னு தான் நான் சொல்லுவேன்” அசால்டாக சொல்லிவிட்டு அர்விந்த் சென்று விட,

 

“ரகுவே தேவலாம்.உனக்கு கல்யாணம் பண்ணின கையோட உன்னை முதல்ல ஊருக்கு அனுப்பிடனும்.இல்லனா உன் பொண்டாட்டியும் நீயும் சேந்து என்னை ஒரு வழி ஆக்கிடுவீங்க. இங்க பாத்தேளா இவன?” வேணுவைத் தேட, அவர் எப்போதோ சென்றிருந்தார்.

 

“எல்லாம் மத்தவாளுக்குத் தான் சப்போர்ட் பண்றதுகள்.இருக்கட்டும் நான் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.பங்கஜமா கொக்கா”, புலம்பிக் கொண்டே நாத்தனாருக்கு போன் செய்தாள்.

 

“அலமு கிளம்பி வா டீ. துணிமணி எல்லாம் எடுத்துண்டு வருவோம். நோக்கு ஆறு கஜமா இல்ல ஒம்போதா?”

 

“…”

“சரி வா. என் அண்ணா தம்பி தங்கைக்கு உங்காத்துக்கு எல்லாருக்கும் நாமளே வாங்கிண்டு வருவோம்” போனை வைத்துவிட்டு வேறு புடவை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

 

மாப்பிளை வீட்டுப் பத்திரிக்கை அச்சிட்டு வந்தது. பெண் வீட்டுப் பத்திரிக்கையும் வந்திருக்க, இருவரும் கோவிலுக்குச் சென்று ஸ்வாமிக்கு வைத்து அர்ச்சனை செய்துவிட்டு, அங்கேயே மாற்றிக் கொண்டனர்.

 

வைஷுவை எதிர்ப்பார்த்து வந்த அர்விந்த் ஏமாந்தான்.

வச்சு சாரங்கன் மற்றும் அனு மட்டுமே வந்திருந்தனர்.பெரியவர்கள் பிரகாரத்தை சுற்றச் செல்ல,

ரகசியமாக அனுவைக் கூப்பிட்டுக் கேட்டான் அர்விந்த்.

 

“அவளுக்கு ஆபீஸ் இருக்கு அதுனால வரல”

“ஆமா..கேட்கணும்னு நெனச்சேன். எங்க ஒர்க் பண்றா?”

கம்பெனியின் பெயரைச் சொல்ல,

 

“ஓ! எங்க இருக்கு” அப்பாவியாய் அர்விந்த் கேட்க,

அங்கு வந்த ரகு,

“டேய்..கெளம்பு டா. அவ கிட்டயும் வம்பு பண்ணாத”

“சும்மா ஒரு ஜி கே க்காக கேட்டேன்.” மழுப்பிவிட்டுச் சென்றான்.

ரகு அருகில் வந்ததும் அனு சற்று வெட்கப் பட, ஒரு மரத்தடியில் சென்று நின்றனர்.

” புடவையெல்லாம் வாங்கியாச்சா?”

“ம்ம். அதான் அணிக்கு போன் ல சொன்னேனே” குரல் முன்பை விட சற்று சத்தமாக வந்தது.

“ஆமால. தினமும் போன் ல பேசிடறோமா, அதுனால நேர்ல பாக்கறப்ப ஒன்னும் தோணமாட்டேங்குது” உணர்ந்து சொன்னான்.

“ஆமா”

“அப்போ இனிமே இப்படி பண்ணலாம். வாரத்துக்கு ஒரு தடவ பேசுவோம்.” தனது மனதில் பட்டதைச் சொல்ல,

அனுவின் முகம் வாடியது.

“டேய். என்ன டா உடனே டல் ஆகற. நான் எதுக்கு சொன்னேன்னு சொல்றேன். அப்பறம் நீ உன் முடிவைச் சொல்லு.” அவளை அரை நிமிடம் கூட முகம் வாடா விடாமல் அவன் பேச,

 

“சொல்லுங்க” பொறுமையாகவே கேட்டாள்.

“இந்தக் காலத்துல புருஷன் பொண்டாட்டிக்குள்ள புரிதல் ரொம்பவே கம்மி. அதுக்கு காரணம் கூடுமான வரைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பேசி முடிச்சிடறது தான். அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி வீட்டுல இருக்கறப்ப என்ன பேசறதுன்னே தெரியாது. புருஷன் ஒரு பக்கம் வேலைக்கு போவான் பொண்டாட்டி ஒரு பக்கம் வேலை. கடமைக்கு புள்ளைங்க. இல்லனா அக்கம் பக்கம் இருக்கறவா கேப்பாளேன்னு.

 

இதுவே அந்த காலம் மாதிரி நெனச்சு பாரு. கல்யாணம் ஆனா பிறகு தான் பேசவே ஆரம்பிப்பா. புருஷன் எப்போ வருவான்னு பொண்டாட்டி காத்திருந்து பேசுவா.

புருஷனும் பொண்டாட்டிய காதலிக்கவே அவளுக்காக பூ வாங்கிட்டு சீக்கிரம் போவான்.

கணவனுக்கு பிடிச்சதை சமைச்சு போட்டு, பொண்டாட்டி ரசிக்க,

அவனும் எது நல்லா இருக்குன்னு ருசிச்சு சாப்பிட, மத்தவங்க முன்னாடி பேச முடியாம,

 

தனிமையில சந்திச்சு பேசறதுக்காக காத்திருப்பாங்க. யாரும் பாக்காம அவளுக்கு அவன் ஜாடை காட்றது. அவ அதை புரிஞ்சுகிட்டு வெட்கப் படறது.

 

இரவு தனிமையில மணிக்கணக்கா முகத்தைப் பார்த்து பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அதன் பிறகு அவங்க சேர்ற தாம்பத்தியம் இருக்கே, அது இந்தக் காலத்துல வரவே வராது அனு.

 

ஏன்னா கல்யாணத்துக்கு பிறகு பேசவேண்டியதை மெசேஜ்லையும், போன்ல யும் பேசிட்டா அவங்க ரியாக்ஷன நேர்ல பாக்கற வாய்ப்பில்லாம போகுது. அதோட இல்லாம அவங்க வெட்கமும் காதலும் போன்ல அடங்கி போயிடுது. இதுவே தொடர்றதுனால கல்யாணம் ஆனா பிறகு என்ன தான் திரும்பவும் அதை பேசினாலும், முதல்ல பேசறப்ப இருந்த வெட்கம் நாணம் எதுவும் வராது.

 

அது கொஞ்ச நாள்லயே மறந்தும் போய்டும். அப்புறம் முகம் குடுத்து பேசக்கூட மாட்டாங்க.

 

இது நமக்கும் வேண்டாம்.அதுக்காக நாம பேசாமலே இருக்கணும்னு நான் சொல்லல. வாரத்துக்கு ஒரு முறை காத்திருந்து பேசுவோம்.இப்போவும் உனக்கு இதுல விருப்பம் இல்லனா தினமும் பேசலாம். உன் இஷ்டம் தான் எனக்கு முக்கியம்.” அவளின் முகம் பார்க்க,

 

“நீங்க சொல்றது சரி தான். வாரத்துக்கு ஒரு முறை பேசுவோம்.” அவளும் ஒத்துக்கொள்ள,

பெற்றோர்களும் பிரகாரம் சுற்றி வர இரு குடும்பமும் கிளம்பினர்.

 

பெரிய பெரிய பையுடன் ஆடி ஆடி ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தார் பப்பி பாட்டி.

 

“பப்பி பாட்டி, மாமா வும் வந்தாச்சு.” வைஷு ஓடி வந்து பாட்டியை கட்டிக்கொள்ள,

 

“வா டீ என் கண்ணு. நான்னா இருக்கியா” வைஷுவின் கண்ணம் வழித்து முத்தமிட்டார்.

 

“நன்னா இருக்கேன் பாட்டி. நீ எப்படி இருக்க?”

 

“நன்னா இருக்கேன்.எங்க அனு?”கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய,

 

அனு வந்து பாட்டியை கட்டிக்கொண்டாள்.

 

“நன்னா இரு டீ கோந்தே. உங்க தாத்தா மேலேந்து உங்கள பாத்துண்டே இருப்பார். நோக்கு ஒரு குறையும் வராது.” கண்கலங்கினார்.

 

“என்ன பாட்டி வந்ததும் வராததும்மா அழுதுண்டு. கண்ண தொட” வைஷு சமாதானம் செய்தாள்.

 

வச்சுவும் வந்து தாயுடன் சற்று அளவளாவினாள். வச்சுவின் அண்ணன் அன்று இரவு பாட்டியை விட்டு விட்டு ஊருக்கு கிளம்பினார்.

 

சாராங்கனைப் பார்த்தால் இன்னும் கூட சற்று மறைந்து நின்று தான் பேசுவார் பப்பி. மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை அது.

 

அவரே அன்று இரவு அரிசியை உடைத்து, பருப்பைச் சேர்த்து காய்ந்த மிளகாய், அத்துடன் சிறிது பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பில்லை சேர்த்து பெருங்காயத்தை தட்டைப் போட்டு, சுடச் சுட மணக்க மணக்க அரிசி உப்புமா செய்து கொடுத்தார்.

 

சாரங்கன் இரவு உண்டு மாடிக்குச் சென்று படுக்கும் வரை பப்பி சமையல்அறையில் தான் இருந்தார்.

 

அதன் பிறகு கதை பேசிக்கொண்டே பெண்கள் அனைவரும், அங்கேயே அமர்ந்து அந்த உப்புமாவை கொத்சு சேர்த்து உண்டனர்.

 

வைஷு அந்த வாணலியில் ஒட்டிக்கொண்டிருந்த மொறு மொறு உப்புமாவை கரண்டியால் சுரண்டி எடுத்து தனியாக வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அனு அதை எடுக்கப் போக, “இதுல கைய வெச்ச மொத டெட் பாடி நீ தான். அங்க இருக்கற எல்லா உப்புமாவும் நீயே சாப்பிடு, ஆனா இந்த காந்தலுக்கு மட்டும் வராத. ப்ளீஸ் டீ”

 

பாவமாக கெஞ்ச,

“போய் தொல. ஆனா மாகாளி கிழங்கு பக்கத்துல மட்டும் நீ வரவே கூடாது” அனு தொடாமல் செல்ல,

 

“அக்கா..”

 

“ஹாங்ங் ..”

 

“சிறிது காந்தல் எடுத்துக் கொண்டு மாகாளியில் பங்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”

 

“அப்படி வா வழிக்கு”

 

இருவரும் இருவரும் உப்புமாவுக்கு மாகாளிக்கிழங்கு ஊறுகாயை தொட்டுக் கொண்டு ரசித்து உண்டனர்.

 

“ஏன் டீ மா. இன்னும் அடிச்சுக்கறேளே! அவ கல்யாணம் பண்ணி போய்ட்டா நீ என்ன பண்ணுவ வைஷு” பப்பி கேட்க,

 

“நானும் கூட போய்டுவேன்” சொன்னனவள், உடனே அர்விந்த் நினைவு வர,

 

“இல்ல போ மாட்டேன்” என மாற்றி பேசினாள்.

“ஏன் டீ. இதனை நாள் வேற சொல்லிட்டு இருந்த” அனு மறைமுகமாக கேட்க,

 

“அது அப்போ. இது இப்போ. நீ என் வாய கிளறாத.” நன்றாக உண்டுவிட்டு எழுந்து சென்றாள்.

 

அனுவுக்கு ஏதோ புரிந்தது. ஆனாலும் கண்டுகொள்ளாமல் விட்டாள்.

 

பெண்கள் அனைவரும் ஒரே அறையில் கதை பேசிக்கொண்டு படுத்திருந்தனர்.

 

“அம்மா. எல்லாருக்கும் புடவை துணி எடுத்தாச்சு. மாப்பிளை வகையறாவுக்கும் எல்லாம் வாங்கியாச்சு. வேற என்ன பண்ணனும். எல்லாம் ரொம்ப முறையா பண்ணனும். அதுனால நீயே சொல்லு” வச்சு கேட்க,

 

பாட்டியின் அருகில் படுத்துக்க கொண்டிருந்த வைஷுவும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

 

“முகூர்த்தக் கால் நடறதுக்கு முன்னாடி, சில விஷயமெல்லாம் நாம செஞ்சு வெச்சுக்கணும். பொண்ணோட மாமா தான் பொண்ணுக்கு ஊஞ்சல் புடவை, காலுக்கு மெட்டி வாங்கித் தரணும். அப்பறம் பொண்ணோட அத்தை பொண்ணுக்கு அரிசி அப்பளம், வடாம் எல்லாம் போட்டு எடுத்துண்டு வரணும். இதெல்லாம் செஞ்ஜேளா?”

 

“புடவைக்கு அண்ணா அனுவையே பாத்து எடுத்துக்க சொல்லிட்டான். அதுக்கு தனியா பணம் குடுக்கறதா சொல்லிருக்கான். அப்புறம் நாளைக்கே அம்புவுக்கு சொல்லிடறேன் அப்பளம் இட ஆரம்பிச்சுடுவா”, வச்சு பதில் சொல்ல,

 

“சரி அது அவா பண்ணிட்டும், நாம நம்ம அனுவுக்கு நலங்கு வைக்கணும். அத்தை மாமி எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்தா, அவாளை வெச்சுண்டு தான் பண்ணனும். ஆத்துல பொண்ண அனுப்பறதுக்கு முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணி தான் அனுப்பனும். அதுனால மொதல்ல அதுக்கு ஏற்பாடு பண்ணு.”

பப்பி பாட்டி பட்டியல் போட ஆரம்பித்தாள்.

“நீ வந்தப்புறம் தான், கல்யாணம் களை கட்டுது பாட்டி.” வைஷு பாட்டியின் சுருக்கம் விழுந்த துணி போன்ற கையை தொட்டு தொட்டு விளையாடிக் கொண்டே சொல்ல,

“அடுத்து உனக்கும் சீக்கிரம் பண்ணின்டுடு. பாட்டி இருக்கறச்சேயே பாத்துட்ரேன்  டீ” வைஷுவின் தாடையைப் பிடித்து சொல்ல,

 

“பாட்டி அவ ரெடி தான். அவரோட தம்பிய கல்யாணம் பண்ணிண்டு எனக்கு துணையா வரேன்னு சொல்லிருக்கா” மேலே  மெத்தையில் படுத்திருந்த அனு கிண்டலடிக்க,

 

” பேஷா பன்னின்டுறு டீ. புள்ளாண்டான் எப்படி?”

 

வைஷுவுக்கு உள்ளே கொதிக்க ஆரம்பித்தது இந்த உரையாடல். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணற,

 

“நன்னா லட்சணமா இருக்கான் பையன்.ஆஸ்திரேலியா ல வேலை பாக்கறான். மரியாதையா நடந்துக்கறான்” வச்சு பாராட்டு பாத்திரம் வாசிக்க,

 

‘அவனுக்கு மரியாதையா நடந்துக்க தெரியுமா?வச்சு அவன் செஞ்சதா சொன்ன வெச்சு செஞ்சுடுவ. நான் அதை தான் பண்ண போறேன்.இருந்தாலும் ஓவரா வாசிக்காத’

 

“அப்படியா.அப்போ பேசிடுவோமா” பப்பி கேட்க,

 

“பப்பி, கம்முனு தூங்கு.அனு வ மொதல்ல பேக் பண்ணுவோம். அப்பறம் என்னை பத்தி யோசிக்கலாம். நான் தாத்தா உன்கிட்ட அடங்கி இருந்தாரு பாரு அப்டி ஒரு பையன தான்

பாக்கறேன். இது நமக்கு செட் ஆகாது. அதுவும் அனு மாமியார் இருக்காளே,அவளுக்கு கல்யாணத்துல நன்னா நோஸ் கேட் பண்ணி விடணும்” அர்விந்திலிருந்து பேச்சை மாற்ற,

 

“ஏன் டீ. அவ என்ன பண்ணா.”

 

நிச்சயத்தில் நடந்ததை சொல்ல,

 

“நீயாவது சொல்லுமா , அவளை பேசாம இருக்க சொல்லு, துக்குறி தனமா ஏதாவது செஞ்சுட போறா” வச்சு தாயிடம் சொல்ல,

 

“அதெல்லாம் பண்ண மாட்டா. நான் சொல்றேன்” பாட்டி வச்சுவை தற்காலிகமாக சமாளித்தலும், மனதில் குறித்துக் கொண்டாள்.

 

பாட்டி எப்போதும் வைஷு பக்கம் தான்.

 

அவளின் காதில் கிசுகிசுத்தாள்.

“பாத்துக்கலாம் வைஷு”.

வைஷு இன்னும் தெம்பாக உணர்ந்தாள்.பாட்டி கூட நிற்பாள் என்று.