அத்தியாயம் – 9
ஹரி லவியை கேலியாகப் பார்க்க, அவனை அமைதியாகக் கடந்து சென்றாள் லவி.
அழுகை, கோபம் இவை இரண்டுமே ஏதோ ஒரு வகையில் நம் இயலாமையின் வெளிப்பாடு. ‘லவி கோபப்படுவா. ஆனால் அழமாட்டா. எதாவது பெரிய பிரச்சனைனா, இப்படி தான் இருப்பா. லவி அடங்கி அமைதியா இருக்கிறது அவங்க அப்பா கிட்ட மட்டும் தான். இன்னைக்கு இப்படி அமைதியா இருக்காளே?’ என்ற யோசனையோடு லவியை பார்த்தாள் நித்திலா.
லவி, நித்திலா இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக நடக்க, அவர்கள் அமைதியைக் கலைக்கும் விதமாக நித்திலா, “ஹரி என்ன சொன்னான்?” என்று மெதுவாகக் கலவரத்தோடு கேட்டாள்.
“லஞ்ச் முடிஞ்சு, எல்லாரும் வந்தபிறகு… எல்லார் முன்னாடியும் நான் அவன் கிட்ட மன்னிப்பு கேட்கணுமாம். அப்புறம்…” என்று லவி பேச்சை நிறுத்த, “மன்னிப்பு கேட்டிரு லவி.” என்று லவியின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தபடி கூறினாள் நித்திலா.
“மன்னிப்பு கேட்டா?” என்று லவி நித்திலாவை கேள்வியாகப் பார்க்க, “அவனுக்கு நடந்தது அவமானம். ஒருவேளை நீ மன்னிப்பு கேட்டா, அவன் கோபம் குறைந்து, இந்தப் பிரச்சனைக்கு இதோட முடிவு கட்டலாமில்லை?” என்று நித்திலா யோசனையாகக் கூற, லவி மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“நாம மன்னிப்பு கேட்டா, அவனுக்குத் தொக்கா போய்டும். குனிய குனிய தலையில் கொட்டுற உலகமிது. அவன் வேற திட்டம் போடுறான். நிமிர்ந்து நின்னு அடிக்கணும்.” என்று லவி தன் ஜீன் டாப்ஸ் மீதிருந்த கோட்டை சரி செய்தபடி அழுத்தமாகக் கூறினாள்.
“லவி… வேண்டாம். பிரச்சனை பெருசாகும். அவனும் திரும்ப ஏதாவது பண்ணுவான்.” என்று லவியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்தாள் நித்திலா.
“இல்லைனாலும் பண்ணுவான். அடிக்கிற அடியில் அவன் நிமிரவே கூடாது. நம்மை எதிர்க்கவே பயப்படுனும்.” என்று லவி கூற, நித்திலா ஏதோ பேச ஆரம்பிக்க, “நித்தி… பேசாம வா. எனக்குப் பசிக்குது.” என்று கூறி லவி வேகமாக நடக்க, நித்திலா அவளை மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.
அதே நேரம், மெல்லிய புன்னகையோடு நடந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
“சங்கர்…” என்று யாதவ் அழைக்க, சங்கர் யாதவை திரும்பிப் பார்த்தான்.
“உனக்குக் கோபமே வராதா?” என்று யாதவ் அவன் முகத்தைப் பார்த்து நடந்தபடி கேட்க, “யார் மேல? எதுக்கு கோபம் வரணும்?” என்று புரியாமல் கேட்டான் சங்கர்.
“லவி மேல…” என்று யாதவ் கூற, சங்கர் அதிர்ச்சியாக யாதவை பார்த்தான்.
“ஐயோ… அவ மேல எனக்கு எதுக்கு கோபம் வரணும்?” என்று பதட்டமாகக் கேட்க, “அவ பெயரைச் சொன்னாலே, நீ இப்படி பயப்படுற.” என்று யாதவ் கேலியாகக் கூறினான்.
“பயமெல்லாம் இல்லை. அவளுக்கு என்னைப் பிடிக்காது. ஆனால், ஆண்ட்டி, அங்கிள் மாதிரி நல்லவங்களை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. அவளும் நல்லவ தான்.” என்று சங்கர் சிரித்த முகமாகக் கூற, “நீ அவ பெயரைக் கூடச் சொல்ல மாட்ட?” என்று யாதவ் நக்கலாகக் கேட்டான்.
சங்கர் அசட்டையாகத் தோளைக் குலுக்கி நடந்தான். “நல்லவ ஏன் உன்னை இப்படி எப்பப்பாரு அவமானப்படுத்தனும்?” என்று யாதவ் விடாப்பிடியாகக் கேட்க, “அது தான் சொன்னேனே, அவளுக்கு என்னைப் பிடிக்காது. அவ எடுத்தெறிந்து பேசுற மாதிரி தெரியும். ஆனால், அங்கிள் கிட்ட மொத்தமும் அடங்கிரும்.” என்று கூறி கேலியாகச் சிரித்தான் சங்கர்.
“உண்மையைச் சொல்லணுமுனா, அவளுக்கு என் மேல பொறாமை.” என்று கூறி, கண்சிமிட்டினான் சங்கர்.
யாதவ் சங்கரை யோசனையாகப் பார்க்க, “ஏழ்மை மேல் கோபம் கிடையாது. அவ ஸ்டேட்டஸ் பார்த்துப் பழகறதா இருந்தா நித்திலா அவளுக்கு நெருக்கமான தோழி ஆக முடியுமா? அவளுக்கு என் ஏழ்மை மட்டும் பிடிக்காது. அந்த ஏழ்மையால் தானே, நான் அவங்க வீட்டில் இருக்கேன். ஆண்ட்டி, அங்கிள் என்மேல் பாசமா இருக்காங்க. அது பொறாமை…” என்று சங்கர் புருவம் உயர்த்தி, தன் உதட்டைச் சுழித்துக் கூற, யாதவ் சங்கரை ஆழமாகப் பார்த்தான்.
‘என்ன?’ என்று சங்கர் யாதவை பார்த்துப் புருவம் உயர்த்த, “சங்கர்… நீ நல்லவனா இருக்கலாம். ஆனால், இவ்வளவு நல்லவனா இருக்க கூடாது.” என்று யாதவ் கூற, சங்கர் சிரித்துக் கொண்டான்.
அதே நேரம், லவி தன் ஜீன் டாப்ஸின் மீதுள்ள கோட்டை கழற்றி கையில் சுற்றியபடி சுவீட்டி, சுவி, வசு இவர்களோடு பேசிக்கொண்டு நடக்க, நித்திலா படபடக்கும் நெஞ்சோடு அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
அப்பொழுது ஹரி சுவரோரமாக நின்று லவியை வழிமறிக்க, அதை எதிர்பார்த்தவள் போல், அவள் கையிலிருந்த கோட்டை, அவன் கழுத்தில் சுற்றினாள் லவி.
எதிர்பாராத தாக்குதலில், ஹரி மூச்சு திணற, அவன் கன்னத்தில் தாறுமாறாக அறைந்தாள் லவி.
லவியின் தோழிகள் அதை அவர்கள் அலைப்பேசியில் படம்பிடிக்க, “நீ வச்சிருக்கிறது மார்பிங் வீடியோஸ்… இப்ப நான் பண்ணுவேன் லைவ் டெலிகாஸ்ட். ஏன் மார்ப் பண்ண அப்படின்னு கேட்டுக் கேட்டு… அது மட்டுமில்லை… இன்னும் மார்ப் பண்ணுவேன், காலேஜில் இருக்கிற ஒவ்வொரு பொண்ணும் உன்னைச் செருப்பால அடிக்கிற மாதிரி எனக்கு வீடியோ பண்ண தெரியாது? நீ என்னை பற்றி போடுற விடியோக்கு வியூஸ் கம்மி ஆகி, நான் உன்னை பற்றி போடுற விடியோக்கு வியூஸ் அதிகமாகும். பொண்ணுங்க, விடியோவை தான் உங்களை மாதிரி பசங்க நிறைய வச்சிருக்காங்களே… நான் சொல்ற வீடியோ தான் டிரண்டில் இல்லை… நாம உருவாக்குவோம்?” என்று லவி புருவம் உயர்த்தி கேட்க, ஹரி லவியை மூச்சுத் திணறலோடு, சற்று பயத்தோடும் பார்த்தான்.
“போட்டு பாரு என் விடியோவை.” என்று லவி ஹரியை மிரட்டினாள்.
ஹரி மேல் துவசம் கொண்ட பெண்கள் லவியின் செயல்களை அமைதியாகப் பார்க்க, “லவி. வேணாம்டி விட்டுரு லவி.” என்று நித்திலா மெதுவாகக் கூறினாள்.
அனைத்து பெண்களுக்குள்ளும் ஓர் லவி இருப்பதே நிஜம். லவியின் அளவே ஒவ்வொரு பெண்களுக்கு ஏற்ப மாறும். அப்படி நித்திலாவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த லவி, லவியின் செயலை முழுதாக மறுக்கவும் முடியாமல்… அதே நேரம் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்தது.
மாணவர்களோ, எங்குத் தங்கள் பெயரும் நாறி விடுமோ, என்ற அச்சத்தோடு ஒதுங்கி நின்றனர்.
லவியின் வெறி அடங்கவில்லை.
“பொறுக்கி ராஸ்கல். உனக்கு இப்படியொரு வேலையை செய்யக் கேவலமா இல்லை? உன்னைச் சொல்லி என்ன பண்றது? உன்னை வளர்த்தவங்களை சொல்லணும்.” என்று காட்டமாகக் கூறினாள் லவி.
ஹரி அவள் பிடிமானத்தை உருவப் போராடப் போராட, லவியின் பிடி ஹரியின் கழுத்தை இறுக்கியது. “லொக்… லொக்…” என்று இருமினான் ஹரி.
“லவி… விட்டுரு லவி… செத்துர போறான்…” என்று நித்திலா பயத்தில் அலறினாள்.
“சாவட்டும் நித்தி… இவன் சாவணும்… இவனை மாதிரி ஆளுங்களை நடு ரோட்டில் வைத்து அடிக்கணும்… ஆனால் இந்த உலகம் என்ன சொல்லும் தெரியுமா? பொண்ணுங்க அடக்கமா இருக்கனும்… பொண்ணுங்க பொறுமையா இருக்கனும்…. பொண்ணுங்க பதவிசமா இருக்கணும்… நீ ஜாக்கிரதையா இருக்கணும்… நீ பத்திரமா இருக்கணும். இப்படி சொல்ற சமுதாயம் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம்.” என்று லவி ஹரியை குரூரமாகப் பார்த்தபடி கூறினாள்.
“ஏன் ஒரு மாற்றத்திற்கு, ஆண்கள் அடக்கமா இருங்க… ஆண்கள் பதவிசமா இருங்க… நாங்க எங்க வேலையைத் தானே பாக்குறோம்… உங்களுக்கு எங்க வலிக்குது? உங்களால் ஒழுங்கா இருக்க முடியலைன்னா வீட்டுக்குள்ள இருங்க வெளிய வாராதீங்க.” என்று லவி அறிவுரை கூற, ‘திமிரு புடிச்சவ, என் சங்கை பிடிச்சிட்டு, எப்படி பேசுறா?’ என்று எண்ணியபடி லவியை வேகமாகத் தள்ளினான் ஹரி. லவி அவனிடமிருந்து சற்று விலக, அவள் பிடிமானம் இறுகி, அந்தக் கோட் ஹரியின் கழுத்தை இறுகியது, ஹரியின் மூச்சு திணற அவன் பலம் குறைந்து சிரமப்பட்டான்.
“மொக்கையான கவிதை சொல்லிட்டு… ஜாலியா இருந்தா நாங்க எதுவும் படிக்காம வந்திருக்கோமுன்னு நினைச்சியா? புலியை முறத்தால் அடித்த பெண்கள் வழி வந்தவங்க தான் நாங்க. முன்னாள் நிக்குற எதிரியை எதிர்க்கும் பலம் மட்டும் தான் ஆண்களுக்கு. அதனால் தான் ஆண்கள் போர்க்களத்திற்கு போனீங்க. அந்தக் காலத்தில் எங்க இருந்து எதிரிகள், மிருகங்கள் வந்தாலும் எதிர்க்கும் பலம் எங்களுக்கு! எல்லா வேலையைச் செய்யும் பலமும் எங்களுக்குத் தான். அது தான் அந்தக் காலத்தில், பெண்கள் வீட்டையும் குழந்தையும் பாத்துக்கிட்டாங்க. நாங்க இல்லாமல் நீங்க வாழமுடியாதுன்னு தான் உங்க இனம் பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை. எங்களுக்கு உங்க உதவியே தேவை இல்லை. தனியாவே சமாளிப்போம். ஆனால், உங்க நலத்துக்காகச் செஞ்ச எல்லாத்தயும் சமூகம் விதி முறையா மாத்திருச்சு.” என்று லவி கூற, ஹரி அவளைக் கடுப்பாகப் பார்த்தான்.
“ஆணோ, பெண்ணோ தேவை ஒழுக்கம். நாட் ரூல்ஸ்… ஒழுக்கம் மட்டும் தான். அது எங்க மனசில் இருக்கு. எங்க நடத்தையில் இருக்கு. இதுக்கு மேல என் வழியில் குறுக்க வந்த, நீ அசிங்கப் படுவ… அவமானப் படுவ… நீ செய்றதை விட அசிங்கமா வேலை செய்ய எனக்குத் தெரியும். ஆனால், என் சுய ஒழுக்கம் அப்படி என்னைச் செய்ய விடாது.
ஆனால்,
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை…
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
இப்படிப்பட்ட பாரதியின் கவிதைகளைப் படிச்சி வளர்ந்தவ நான்.
அதனால் நான், பயப்படமாட்டேன்… அடங்கமாட்டேன்… இனி நீ என் வழியில் குறுக்க வந்தா உன்னைச் சும்மா விடமாட்டேன்… ” என்று லவி கோபமாக பேச, ஹரி மூச்சு திணறத் திணற மயக்க நிலைக்குச் செல்ல, அப்பொழுது உள்ளே வந்த யாதவ், சங்கர் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்தனர்.
“நித்திலா. லவிக்கு தான் அறிவில்லை. உனக்குமா இல்லை. லவியை தடுக்கமா என்ன பண்ணிட்டு இருக்க? அவன் செத்து போயிருவான். ” என்று நித்திலாவை திட்டிக் கொண்டே, லவியை பிடித்து வேகமாகத் தள்ளினான் யாதவ்.
யாதவ், ஹரிக்கு தண்ணீரை புகட்ட, ஹரி சகஜ நிலைக்குத் திரும்பினான்.
லவி வேகமாக நித்திலா மேல் விழ, இரு பெண்களும் கீழே சரிய, சங்கர் இரு பெண்களையும் தாங்கிப் பிடித்தான்.
பதட்டமாகத் திரும்பிப் பார்த்த, நித்திலா சங்கரைப் பார்த்து நிதானமாக மூச்சு விட்டாள். கீழே விழுந்த லவி சற்று சுதாரித்து, சங்கரைப் பார்த்துத் தன் முகத்தைச் சுழித்துக் கொண்டு ஹரியைக் கடுப்பாகப் பார்த்தாள்.
விஷயமறிந்து கடும் கோபத்தோடு வந்த தலைமை ஆசிரியர், இருவருக்கும் கடுந்தண்டனை கொடுக்க, லவி தன் பக்க நியாயத்தைக் கேட்டாள்.
இந்தச் சமுதாயம் லவியை நிந்திக்கக் காத்திருக்க, லவி அவர்கள் அனைவரையும் தைரியமாக எதிர்க்கத் தயாரானாள்.
ஆனால் நடைமுறை?
லவ்லி லவி வருவாள்…