tmn24

tmn24

அத்தியாயம் 24

“மது அழுகாத கண்ணு…காளியாத்தா நான் என்ன பண்ணுவேன்…என்ன நடக்குதுன்னே ஒண்ணும் புரியலையே…”என்று மயிலம்மையோடு அஞ்சுகமும் கயலும் மதுமதியைத் தேற்ற அரும்பாடு பட்டனர். அவர்களின் தேறுதல் வார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழவே இல்லை.இதைக் கண்ட ராஜா,

”ஏண்ணே…மது வெகுளிப்புள்ள…அத நீ ஏமாத்துனதக் கூட விட்டுரலாம்…ஆனா அவளைக் கொண்டு வந்து என் தலையில கட்டப் பார்த்த இல்ல… அங்க தான் நீ தப்பு பண்ணிட்ட…அதுக்கு நீ என்னைய இல்ல… வேறு ஒரு இளிச்சவாயனத்தான் பார்த்திருக்கணும்…”என்றவன்

“இப்ப என்ன சொல்லப்போறீங்க எல்லாரும்…வெற்றி ஒரு காரியம் செஞ்சா அதுல ஆயிரம் நியாயம் இருக்கும்ன்னு சொல்லுவீங்கல்ல…இப்ப இதுல என்ன நியாயத்தைக் கண்டுட்டீங்க…”என்று அனைவரையும் பார்த்து கேட்டான். ராஜாவின் இந்தக் கேள்விக்கு வெற்றிவேல் உட்பட எல்லோருமே அமைதி காத்தனர்.

“என்ன யாராலயும் பேச முடியலையா” என்று கேட்டுவிட்டு அழுது கொண்டிருந்த மதுமதியை நெருங்கி “நீ அழாத மது…
உனக்குன்னு வாழ்க்கைப் பிச்சை போட எவனாவது ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போயிருவான்…”என்று அவளை மேலும் நோகடித்தான்.

இதைக் கேட்டதும் சுந்தரம் கொதித்துப் போய்,”ஏய் ராஜா யாரப் பாத்து என்ன பேச்சு பேசுற…என் பொண்ணு ஒண்ணும் அவ்வளவு குறஞ்சு போயிரல…நாக்கை அடக்கிப் பேசு…”என்றார்.

“ஹ…பேரும் கெட்டு எல்லாம் கெட்டவளுக்கு இவ்வளவு சப்போர்ட்டா…இதுல எங்க அண்ணே போதாதுன்னு நான் வேற வேணுமாம் இவளுக்கு…” என்றவனைக் கொலைவெறியோடு

“என்னடா சொன்ன…குடிகாரப் பயலே” என்று தாக்க விரைந்தார் சுந்தரம். இதற்கிடையில் சுந்தரத்தை நெருங்கியிருந்த வெற்றிவேல் அவரை அடிக்கக் கை ஓங்கி இருந்தான்.ஓங்கிய கை அந்தரத்தில் நிற்க தனது கன்னத்தில் ‘பளார்’ என அறை வாங்கியிருந்தான் வெற்றிவேல்.அவன் எதிரே பத்திரகாளியாய் நின்றிருந்தார் கமலம்.

“ஆரப் பாத்து கையை ஓங்குற…அவரு என் புருஷன்டா…வகுந்துருவேன் பார்த்துக்க…நீ பொறந்த இதே வீட்டில் தான்டா நானும் பிறந்தேன்… உனக்குள்ள ஓடுற ரத்தம் தான் எனக்குள்ளயும் ஓடுது…உனக்கு இருக்கிற அதே கோபமும் வேகமும் தான் எனக்கும் இருக்கு…படுபாவி…நீ அன்னைக்கே சொன்னவன் தானடா…உனக்கும் புத்திரசோகம்ன்னா என்னென்னு புரிய வைக்கிறேன்னு… அன்னைக்கு எனக்குப் புரியல…ஆனா இன்னைக்குப் புரிஞ்சுருச்சு உன் வக்கிரபுத்தி என்னான்னு தெரிஞ்சு போச்சு…எம்புள்ளயையும் எம்புருஷனையும் அவமானப் படுத்தி அது மூலமா என்னைய கலங்க வக்குற…திட்டம் போட்டு பழிவாங்கிட்டல்ல…ஒன்னும் தெரியாத பச்சை மண்ணுடா என் புள்ள…அவளக் கதற வச்சுட்டல்ல…நீ நல்லா இருப்பியா…” என்றவர் அடுத்ததாக அழகம்மையிடம் திரும்பினார்.

“நீங்க மாறவே மாட்டீங்களா…ஒரு சின்னப்புள்ளய நாக்கு மேல பல்லப் போட்டு அநியாயமாப் பேச எப்பிடி உங்களுக்கு மனசு வந்துச்சு…ஒரு காலத்துல இந்த வீட்டுல வேல பாத்தா அதயே காலம் முச்சூடும் சொல்லிக் காட்டுவீங்களா…என் மக வேலக்காரன் மகயில்லை…இப்ப அவ கெசட்டட் ஆபீசர் மக…கோடீஸ்வரி… அதுபோல அவ ஒன்னும் அப்பன் காசுல வெட்டியா உட்கார்ந்து திண்ணு சொத்தை அழிக்கல…இன்னைக்கு அவளை எத்தனை வெளிநாட்டுக் கம்பெனியில் இருந்து வேலைக்குக் கூப்பிடுறாங்கன்னு தெரியுமா… இனி ஒரு தடவை என் பொண்ணை ஏதாவது பேசினீங்க…நடக்கிறதே வேற…” என்றவர் ராஜாவிடம் வந்து

“நீ என்னடா சொன்ன…எம்புள்ள கெட்டுப் போனவளா…கறந்த பால சோரம் சொல்றவந்தான்டா எம்மகளக் குத்தம் சொல்லுவான்…நீ தாண்டா கெட்டவன்… குடிகார நாயே…சொந்த வீட்டிலேயே திருடுனவந் தானடா நீ…உன் புத்தி இப்படித்தான் போகும்…நீ எல்லாம் நானும் ஒரு பொறப்புன்னு சுத்திக்கிட்டு இருக்க…” என்று அவனைக் காரி உமிழ்ந்து விட்டு எல்லோரையும் திரும்பிப் பார்த்தவர், இறுதியாக மயிலம்மையிடம்

“இதுக்குத்தான் எங்களை வரச் சொன்னியா ஆத்தா…இதுக்கெல்லாம் நீயும் உடந்தையா…போதும்டா சாமி…இனி உங்க ஒட்டும் வேணாம்…உறவும் வேணாம்…என் பெத்த வயிறு பத்தி எரியுது…நல்லாவே இருக்க மாட்டீங்க…எம்புள்ள கண்ணீர் வடிக்கக் காரணமான ஆருமே நல்லாவே இருக்க மாட்டீங்க…நாசமா போயிருவீங்க… அவ வடிக்கிற ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் நீங்க எல்லோரும் பதில் சொல்லியே ஆகணும்…”
என்று பொங்கி விட்டு கணவரையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.

“வேண்டாம்மா…போகாதம்மா கமலம்…” என்ற மயிலம்மையின் குரலோ,”நில்லும்மா கமலம்” என்ற மற்றவர்களின் குரல்களோ அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் சென்றதும்,”ஏன்டா இப்படிச் செஞ்ச” என்று குலசேகரன் வெற்றிவேலைப் பார்த்து கேட்க வாய் எடுத்த கேள்வியை வெற்றிவேல் ராஜாவைப் பார்த்து கேட்டபடியே அவனைப் பிடித்து உலுக்கி அடிக்கத் துவங்கினான்.அவனிடமிருந்து ராஜாவைப் பிடித்து இழுத்த அழகம்மை,

“விடுடா அவன…நல்லா இருக்கே உன் நாயம்…பெத்தவங்க நாங்க குத்துக்கல்லாட்டம் இருக்கும் போது நீ யாருடா அவனுக்குப் பொண்ணு பார்க்க… இவன் எவளோ ஒருத்திய கை காட்டுவானாம்…அவளை என்புள்ள கட்டிக்கிடனுமாம்…இல்லாட்டிப் போனா என் பிள்ளையை இழுத்துப் போட்டு அடிப்பானாம்…இந்த அநியாயத்தைத் தட்டிக் கேக்க யாருமே இல்லையா…எம்புள்ள என்ன தெருவிலயாக் கெடக்கான் கண்டவனும் இழுத்துப் போட்டு அடிக்க…” என்றவரிடம்,

”இதப்பாரு அழகம்மை…
கண்டவன் கிண்டவன்னு பேசுற வேலையெல்லாம் வேணாம்…அப்புறம் நல்லா தெரியாது சொல்லிப்புட்டேன்…”என்றார் மயிலம்மை.

“உங்க அருமப் பேரன் எம்புள்ளைய அடிக்க வந்தான்…அப்பல்லாம் பேசாம பாத்துக்கிட்டுதானே இருந்தீக…இப்போ உங்க பேரனச் சொல்லவும் மட்டும் சுருக்கனு வந்துருச்சாக்கும்…ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணில சுண்ணாம்பும் வச்சுப் பாக்குறீகளே…இது ரொம்ப நல்லா இருக்கு…”என்றவர்

“ஏங்க கெளம்புங்க…ராஜா கிளம்புடா உனக்கு மருவாதி இல்லாத இடத்துல இனி ஒரு நிமிஷங் கூட இருக்கக் கூடாது…”பொங்கினார் அழகம்மை.

“ஏய் அழகம்மை…என்ன இது…சின்னச் சின்னப் பிரச்சனைக்கெல்லாம் வீட்ட விட்டுப் போறது இந்த வீட்டுப் பழக்கம் இல்ல…பேசாம கெட…”

“அப்ப உங்க தங்கச்சி மட்டும் போனா…ஒரு தடவை இல்ல ரெண்டு தடவை போயிருக்கா…அது மட்டும் இந்த வீட்டுப் பழக்கமா…இங்க பாருங்க…இப்ப நீங்க என் கூட வரலன்னா இப்பவே இந்த வீட்டுலயே உத்தரத்தில தொங்கிருவேன்…அப்புறம் இதுதான் நீங்க என்னைய கடைசித் தடவயா பாக்குறதா இருக்கும்…தெரியுமில்ல என்னைய பத்தி…அழகம்மைக்கு ஒத்த நாக்கு…ஒத்த வாக்குதேன்” மனைவி சொன்ன வார்த்தையில் அதிர்ந்து தான் போனார் மகேந்திர பாண்டியன்.

இளைய மகனின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்ட மயிலம்மை,”ஐயா சின்னவனே…உன் பொண்டாட்டி விருப்பப்படியே அவ கூடவே போயிருப்பா… கொஞ்ச நாளைக்கு இத ஆறப் போடுவோம்…நாளானா எல்லாஞ் சரியாப் போயிரும்” என்று மகனுக்குப் பிரியாவிடை அளித்தார். கணவரையும்,வெற்றிவேலின் கைங்கரியத்தால் வாய் கிழிந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த மகனையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் அழகம்மை.

நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கப்பட்டிருந்த உறவுகளும் ஒவ்வொருவராய் கிளம்பிக்கொண்டிருந்தனர். எஞ்சியிருந்தவர்களான தன் குடும்பத்தைப் பார்த்தான் வெற்றிவேல்.குலசேகரன் எதுவும் கூற விரும்பாமல் ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றுவிட்டார். மயிலம்மை தூணோடு சரிந்து அமர்ந்து அழத் துவங்க கயலும் அஞ்சுகமும் அவர் அருகில் அமர்ந்தனர்.

வெளியே செல்ல எத்தனித்த வெற்றிவேலைக் கதிரின் கூரிய பார்வை தடுத்து நிறுத்தியது.அவனது பார்வையைச் சந்திக்க இயலாமல் வேறு புறம் பார்த்தான் வெற்றிவேல்.கதிர் துணுக்குற்றான். எதையும் நேருக்கு நேராக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு எதிர்கொள்பவன் தான் அவன் நண்பன் வெற்றிவேல்.இதோ இங்கே நின்று கொண்டு இருப்பவன் அவனுக்குப் பழக்கம் இல்லாதவன்.

“ஏன்டா இப்படிப் பண்ணுன” வாளின் கூர்மையைக் கொண்டிருந்தது கதிரின் கேள்வி.ஒன்றும் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தவனிடம்

“இதப்பாரு வெற்றி…எல்லாரையும் போல நீ செஞ்சா சரியாத்தான் இருக்கும்னு இந்த விஷயத்தில என்னால விட்டுட்டு போக முடியாது.அந்த புள்ள மது உன்னை விரும்பினதத் தவிர என்னடா பாவம் பண்ணிச்சு…அதை அப்பிடிக் கதற விட்டுட்ட…ரத்த சம்பந்தம் இல்லாட்டாலும் அந்தப் பிள்ளை எனக்கு உடன்பிறப்பு மாதிரிதாண்டா… அதுக்கு நீ செஞ்ச துரோகத்துக்கு எனக்குப் பதில் சொல்லியே ஆகணும்…இதையிட்டு உன்னையே எதிர்க்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை…” என்றவனை நிமிர்ந்து நோக்கினான் வெற்றிவேல்.

கதிருக்கு வெற்றிவேல் வீட்டைத் தவிர வேறு போக்கிடம் கிடையாது.அவனது படிப்பைத் தவிர வேறு எந்தச் சொத்தும் அவனிடம் இல்லை.இந்நிலையில் மதுமதிக்காக வெற்றிவேலை போருக்குத் தயாராகும் ஒரு போர்வீரனின் கடுமையோடும் ஆவேசத்தோடும் எதிர்த்து நிற்கிறான் என்றால் அவனது பாசவுணர்ச்சியினை நினைத்து வெற்றிவேலால் நெகழ்ச்சியுறாமல் இருக்க முடியவில்லை.

“பாசக்காரன்டா நீ…” என்று அந்த நிலையிலும் சிலாகித்த வெற்றிவேலிடம்,”ஆனா…நீ வேஷக்காரன்னு பேரு வாங்கிரக் கூடாதுடா…அதுக்குத் தான் கேக்கிறேன் சொல்லு…எதுக்குடா இப்படிச் செஞ்ச…” வெடித்தான் கதிர்.

முழுதாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு தன்னைத் திடப்படுத்திக் கொண்டு வெற்றிவேல்.

“மதுவுக்கு இந்த நிச்சயத்துல விருப்பம் இல்லைன்னு நெனச்சேன்டா”

“அப்படின்னனு நீயா நெனச்சுக்கிட்டியா…நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா பேசிக்கிறதை நானே பாத்துருக்கேனேடா…மதுவுக்கு உன்னப் பிடிக்கலன்னு யாருடா சொன்னது உனக்கு…”

“ ராஜாதான்டா சொன்னான்”

“ஏன்டா டேய்…அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் சொன்னதைப் போய் நம்பிக்கிட்டு வந்து நிச்சயத்தை நிறுத்தினியா”

“ இல்லடா மதுவும் தான்டா அப்பிடி சொன்னா…நானே என் காதால கேட்டேன்”

“ என்னடா சொல்ற…கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு”

தான் கண்டதை எல்லாம் வெற்றிவேல் விவரித்தான்.நிச்சயதார்த்தத்திற்கு நல்ல நேரம் பத்தரை மணிக்கு குறிக்கப்பட்டிருந்ததால் வாழைத்தோப்பில் லோடு ஏற்றும் நாளாகையால் அங்குச் சென்றுவர எண்ணித் தோப்பை அடைந்தான் வெற்றிவேல்.

அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த வெற்றிவேலுக்கு அவனுக்கு நன்கு பரிச்சயமான பேச்சுக் குரல்கள் கேட்டன… யாரென்று சென்று பார்த்தவுடன் அதிர்ந்து போனான் வெற்றிவேல்.அங்கு ராஜா பூச்சிமருந்தை கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.அவன் நண்பன் அருகில் நின்று கொண்டு பூச்சி மருந்தை அவனிடம் இருந்து கைப்பற்றப் போராடிக் கொண்டிருந்தான்.

“ டேய் ராஜா…வேணாம்டா…”

“டேய் என்னை விடுடா…நான் சாகனும்…”

“ நீ ஏன்டா சாகணும்…நீ கிடைக்கக் கொடுத்து வைக்காத அந்த மது தான்டா சாகணும்…”

“டேய் மதுவப் பத்தி ஏதாவது பேசின…நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்…அவளுக்கே இந்த நிச்சயத்தில விருப்பம் இல்லடா…பெரியவர்களுக்காகத் தான் சம்மதிச்சுருக்கா…”

“அப்படின்னு நீ நினைக்கிறாயா…இந்தப் பொம்பளைங்களையே நம்பக் கூடாது மாப்புள்ளை… உன்கிட்ட என்ன இருக்கு… உன்னைக் கட்டுகிறத விட உங்க அண்ணனை கட்டிக்கிட்டா பணத்துக்குப் பணம்,அந்தஸ்து மரியாதை எல்லாம் கிடைக்கும்…இதையெல்லாம் யோசிச்சுத் தான் அவ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருப்பா…”

இதற்கு அமைதியாகவே இருந்தான் ராஜா.
“எது எப்படியோ நான் அவ மேல வச்சது உண்மையான காதல்டா…நான் மனசாரக் காதலிச்ச அவளை எப்படிடா என் வாயால் அண்ணினு கூப்பிடுவேன்…என்னால முடியாதுடா…இந்த நிச்சயம் மட்டும் நடந்துச்சுன்னா நா செத்தே போயிருவேன்… நானும் அவளும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு விரும்பினோம்ன்னு உனக்குத் தெரியுமில்லடா…நான் இல்லாமல் வாழ்க்கையே இல்லைன்னு சொன்னவடா…இப்ப எங்க அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லி இருக்கான்னா அவளுக்கும் எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும்…”.

“பேசாம உன் அண்ணன் கிட்டே சொல்லிருவோமாடா..”.

“ச்சே…ச்சே…அவரு நல்லவருடா…அவருக்குத் தெரிஞ்சா தம்பி விரும்பின பொண்ண நாம கட்ட இருந்தோமேன்னு நொந்து போயிருவாரு… நான் போறேன்டா நான் இல்லாட்டிப் போனாலும் எங்க அண்ணன் என் குடும்பத்தைப் பார்த்துக்கிருவாரு…என் காதல் என்னோடவே மக்கி சாம்பலாப் போகட்டும்…மதுவும் எங்க அண்ணனுமாச்சு நல்லா இருக்கட்டும்…”என்று கதறி அழுதான் ராஜா.

இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வெற்றிவேலை அதிர்ச்சியும் வேதனையும் ஒருசேரத் தாக்கின.மதுவும் ராஜாவும் விரும்பினார்களா…’இது தெரியாம நாம மதுக் கிட்ட காதலை சொல்லிட்டோமா…’ இதைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே மதுமதி இதுவரை அவனிடம் காதல் சொல்லாதது தேவையில்லாமல் நினைவில் வந்தது…

மதுமதி தன்னிடமுள்ள செல்வத்திற்காக நிச்சயமாகத் தன்னுடனான திருமணத்திற்குச் சம்மதித்திருக்க மாட்டாள்
என்று உறுதியாக நம்பினான் வெற்றிவேல். ஆனால் அவளை யாராவது கட்டாயப்படுத்தி இருந்தால்…ஏன் மயிலம்மையே அவளைக் வற்புறுத்தி இருக்கலாம்.மதுமதி தான் பாசம் வைத்து விட்டால் அவர்களுக்காக எதையும் செய்வாளே…அதனால் தான் ராஜாவின் மீதான காதலை தியாகம் செய்துவிட்டு நம்மைத் திருமணம் செய்ய முன் வந்தாளோ…எனவே தான் நாம் முத்தமிட்ட போது கூட என்னை விலக்கித் தள்ளி விட்டு சென்றாளோ…அவன் முதன்முறை அவள் இசைந்து நின்றது அவனுக்கு மறந்து போனது.வீட்டிற்கு வந்த பின்னும் கூட அவளுடைய விருப்பத்தை வெற்றிவேல் கேட்க முனைந்தபோது ‘பிடிக்காவிட்டால் என்ன செய்வாய்’ என்று தானே கேட்டாள். அன்றிருந்த காதல் போதையில், மயக்கத்தில் வெற்றிவேலின் கருத்தில் அவைகளெல்லாம் படவில்லை…

ஆனால் இப்போது அதை நினைக்கையிலேயே வேதனையாயிருந்தது வெற்றிவேலுக்கு.இதற்கு மேலும் தான் மதுமதியைத் திருமணம் செய்தால் அது தன் ஆண்மைக்கே இழுக்கு என்று நினைத்தான்.ஒருவரை ஒருவர் காதலிக்கும் மதுமதியும் ராஜாவும் நான் இணைய வேண்டும்.அதுவே முறையாகும்.மதுமதிக்காக…அவள் மீதான காதலைத் தியாகம் செய்யத் துணிந்தான். இந்த நிச்சயத்தை நிறுத்தியாக வேண்டும். அதற்குச் சாம,தான,பேத,தண்ட முறைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி இதை நிறுத்தியே ஆகவேண்டும்…ஆம் மதுமதி மகிழ்வோடு அவள் விருப்பப்படி வாழ வேண்டும் என்றால் இந்த நிச்சயத்தை நிறுத்தி மது-ராஜா நிச்சயத்தை இன்றே உறுதி செய்து விட வேண்டும் என்ற ஒரே முடிவோடு வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றிவேல்…

—-தொடரும்.

தமிழால் இணைந்த அனைத்து நட்புக்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்பா…ராஜா தான் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்று கண்டு பிடித்த அனைத்து பேபீஸ்க்கும் வாழ்த்துக்கள்…காலரத் தூக்கி விட்டுக் கோங்கப்பா…பெருசா சஸ்பென்ஸ் வக்கிரேன்னு நினைச்சுட்டு இருந்த எனக்குப் பற்பல நிறங்களில் சீரியல் பல்புகள் கிடைத்தன…???அதனால் என்ன கதை முடியுற வரைக்கும் மனந்தளராம சஸ்பென்ஸ் வப்பேனாக்கும்.???சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள்…படித்துவிட்டு நீங்கள் பகிரும் கருத்துக்களை எதிர் நோக்கும் பிரியா குமார்….

error: Content is protected !!