TMN23(2)

TMN23(2)

“நீங்க இவ்வளவு நாளும் என்கிட்ட சம்மதமே கேட்கலையேப்பா…”என்றான் வெற்றிவேல்.

“ஓஹோ…இதுதான் இப்ப பிரச்சனையா…சரிப்பா தப்புதேன்…இப்பக் கேக்குறேன்…என் தங்கச்சி மவளை கட்டிக்க உனக்கு சம்மதமா…”

“ இல்லப்பா…எனக்கு சம்மதமில்லை…” சத்தம் கேட்ட போதே வெளியே வந்திருந்த மதுமதி நடப்பதை நன்கு வேடிக்கை பார்த்தாள்.வெற்றிவேல் ஏதோ விளையாடிக் கொண்டு இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது.அவனால் தன்னை மறுக்கவே முடியாது என்று ஆணித்தரமாக நம்பினாள் மதுமதி.’இவன் விளையாட்டிற்கு அளவே இல்லை’ என்று தன் காதலனை உள்ளுக்குள்ளேயே ரசிக்க வேறு செய்தாள்.

“என்னய்யா சொல்ற…நீதான சொன்ன மது ஒரு வீட்டுக்கு மருமகளாப் போகணும்னா அது இந்த வீட்டுக்கு மட்டும்தேன்னு” என்றார் மயிலம்மை.

“ஆமா சொன்னேன்…இப்பவும் அதத்தான் சொல்றேன்…இல்லங்கலையே…”

“ என்னடா சொல்ற…நிச்சயத்துல உனக்கு விருப்பம் இல்லங்குற…அத நிறுத்தவும் சொல்ற…அப்புறம் எப்படி மது இந்த வீட்டுக்கு மருமகளாக முடியும்…”

“ஏன் முடியாது…என்னக் கட்டினா மட்டும் இல்ல…அவ ராஜாவக் கட்டினாலும் இந்த வீட்டுக்கு மருமக தான…” இதைக் கேட்டு மதுமதி உட்பட அனைவரும் அதிர்ந்து போயினர்.’இது விளையாட்டல்ல விபரீதமாக போய்க்கொண்டிருக்கிறது’ என்று மதுமதி தெரிந்து கொண்டாள். ஆனால் ஏன் என்று அவளுக்கு புரியவில்லை.அதிர்ச்சியில் நிலைகுத்திய பார்வையோடு நின்றிருந்தவளை நெருங்கிய வெற்றி,

“உனக்கு ராஜாவக் கட்டிக்க சம்மதம் தான…”என்றான்.இவன் ஏன் இப்படிக் கேட்கிறான் என்று குழம்பிப் போனாள் மதுமதி.’பாவி…பாவி…சும்மா இருந்தவளிடம் காதல் சொல்லிவிட்டு…என்னைக் காதலிக்கவும் வைத்து விட்டு…இப்போது வந்து என் தம்பிய மணக்க சம்மதம் தானே என்று உளறிக் கொண்டிருப்பவனே கண்கள் கலங்கப் பார்த்தாள்.

அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் அவள் பேசவும் திராணியற்றுப் போயிருந்த மதுமதி ‘இல்லை’ என்று மறுப்பாகத் தலையாட்டினாள்.

“ஏன் இல்ல…ஆரம்பத்துல அவன் கூட நல்லா பேசிச் சிரிச்சு பழகினவ தான நீ…

இப்ப மட்டும் ஏன் வேணாங்குற” என்றான் வெற்றிவேல்.

‘சிரித்துப் பேசி பழகுபவர்களை எல்லாம் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று  கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாளா அவன்…’என்று மனம் கசந்தாள் மதுமதி.

“நானும் இந்த வீட்டு பிள்ளை தான்… அவனும் இந்த வீட்டு பிள்ளை தான்…அப்புறம் ஏன் வேணாங்குற…எப்படிப் பார்த்தாலும் நீ இந்த வீட்டுக்கு மருமகதான்…”

‘டேய்…நானென்ன இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு தாவிக்கிட்டு இருக்கேனா…நான் விரும்புறது வெற்றிவேல்ன்ற தனி மனுஷனாடா…நீயும் தானே என்னை விரும்புற…அப்புறம் ஏன்டா கிறுக்குத் தனமா இப்பிடி வந்து உளறிக் கிட்டு இருக்க…’ புண்பட்டுப்போன மதுமதியின் மனமும் கண்களும் சேர்ந்து அழுதன.

அவளது கண்ணீர் அவன் மனதைக் கரைக்கவில்லை…அவள் படும் வேதனை அவனுக்குப் புரியவில்லை…அவள் மனதின் அழுகுரல் அவனுக்குக் கேட்கவே இல்லை…

“ஒருவேளை என்கிட்ட இருக்கிற மில்லு,தோப்புதொறவு,பணம், அந்தஸ்துன்னு இதையெல்லாம் பாத்து மயங்கிட்டியோ…” நேரடியாக அவள் இதயத்தில் கத்தியினை சொருகியிருந்தான் வெற்றிவேல்.

அது தந்த வலி தாங்காமல் அருகிலிருந்த தூணை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் மதுமதி.அவனது அந்த வார்த்தைகளின் வீரியத்தை மதுமதியால் தாங்கவே முடியவில்லை…அத்தனை நேரமும் அவளது காதலின் சல்லி வேர்கள் அசைத்துக் கொண்டிருந்தவன்…தனது இந்தக் கேள்வியினால் அதன் ஆணிவேர்களை  அறுத்துவிட்டான்.

“பணத்துக்காகவா…பணத்துக்காக நான் உன்கிட்ட மயங்கிட்டேனா… அடப்பாவி…என்னை பார்த்து இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு… நான் உன்கிட்ட மயங்கினேன்தான்…ஆனா அது உன் மனச பாத்து…உன்கிட்ட இருக்கிற பண்பைப் பாத்து…எல்லார்கிட்டயும் நீ காட்டுற பாசத்தைப் பாத்து…ஊருக்காக அன்னைக்கு காம்பு சுத்தினியே அந்த வீரத்தையும் விவேகத்தையும் பாத்து… கடைசில என்னை பார்த்து பணத்துக்காக மயங்கியவன்னு சொல்லிட்டல்ல… வலிக்குதுடா…என் மனசெல்லாம் வலிக்குது… இப்படி ஒரு கேவலமான எண்ணத்தை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் என்கூட பழகுனியா…ஏற்காட்டில் உன்கூட…இசைஞ்சு நின்னப்ப கூட… இப்படித்தான் நினைச்சியா…ஐயோ என்னால தாங்க முடியலையே… உடம்பெல்லாம் எரியுதே…” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியபடியே அழுது புலம்பி கரைந்தாள் மதுமதி.

அதனை சகிக்கமாட்டாதவராய் சுந்தரம் “குலசேகர ஐயா…நான் உங்கப் பிள்ள வெற்றிக்கு என் பொண்ணக் கொடுக்கத்தான் சம்மதம் சொன்னேன் ராஜாவுக்கு இல்ல…அதோட எம்பொண்ண தரக்குறைவாப் பேசுற உரிம இங்க யாருக்கு இல்லை…நம்ம இந்த சம்மந்தத்தை முறிச்சுக்குவோம்…நாங்க கெளம்புறோம்” என்றார்.

“ நீ என்னைய்யா என் பிள்ளைய வேணாங்குறது…வீட்டு வேலைக்காரன் மவளைக் கட்டணும்னு என் பிள்ளைக்கு என்ன தலையெழுத்து…

நாந் தெரியாமத்தேன் கேக்குறேன்…

என் பிள்ளையை கட்ட உன் மவளுக்கு என்ன தகுதி இருக்கு…” நஞ்சு தோய்த்த வார்த்தைகளை இறக்கினார் அழகம்மை.

விவகாரம் வேறு திசை நோக்கிச் செல்வதை உணர்ந்த மயிலம்மை,

“ஏலேய் சின்னவனே…உம் பொண்டாட்டிய வீட்டுக்கு வந்த மருமகங்கிட்ட மருவாதியா பேசச் சொல்லு இல்லன்னா அப்புறம் நான் பேச வேண்டி வரும்…”என்று எச்சரித்தார்.

“ஏன் அத்த நான் பேசக்கூடாது… என் மவனை எல்லாரும் கொறவாப் பேசலாம்… நான் மட்டும் வாய மூடிக்கிறனுமா…” அப்போது தான் உள்ளே வந்த ராஜாவைக் கண்டவர்,”வாடா ராஜா…இந்த மதுவ உன்னை கட்டிக்க சொல்றான் உன் அண்ணே…அதுக்கு நீ என்ன சொல்ற…” என்றார்.

“என்ன நானா…என்னம்மா சொல்லுற… நான் மது கிட்ட அப்படி ஒரு எண்ணத்தோடயே பழகலயே…ஏன் மது…நீ அப்படி ஒரு நினைப்போடத் தான் என் கூட பழகுனியா…அப்புறம் எப்படி அண்ணன கல்யாணம் பண்ணிக்க சம்பாதிச்ச…” மதுமதிக்கு அவமானம் பிடுங்கித் திண்றது. இதைவிட தன் பெண்மையை அசிங்கப்படுத்தி விட முடியாது என்று வருந்தியவள்…இதற்குக் காரணமான வெற்றிவேலை உறுத்து விழித்தாள்.

“அப்படிக் கேளுடா ராஜா..

அவன் இவ கூடப் பழகுவானாம்…அவளக் கூட்டிக்கிட்டு ஊரெல்லாம் சுத்தி வருவானாம்…ஆனா கல்யாணம் மட்டும் என்மவன் பண்ணிக்கணுமாம்…” வார்த்தைகளை கொட்டினார் அழகம்மை.

இந்த வார்த்தைகளின் கணம் தாங்க முடியாமல் நிலை குலைந்து போனாள்.’இவனைக் காதலித்த பாவத்திற்கு இன்னும் என்னென்னவற்றை யெல்லாம் சகிக்க வேண்டிவருமோ’என்று நொந்து போனாள் மதுமதி.ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

இவை அனைத்திற்கும் இடித்த புளியாய் நிற்கும் வெற்றிவேலிடம்,

“டேய் வெற்றி…என்னடா நடக்குது இங்க… மதுவ உனக்குக் கட்டி வக்கப் பேசி இருக்கும் போது நீ ஏன் அவள ராஜா கூட எணச்சுப் பேசுற…” என்று கேட்டார் குலசேகரன். அவனது அமைதியே அவருக்கு பதிலாக கிடைத்தது.

“அவன் எப்பிடிப்  பேசுவான்…வேலைக்காரன் மகளக் கட்ட அவனுக்கு மட்டும் இனிக்குமா…அவகூட பழகிச் சலிச்சுருக்கும்…கை கழுவி விட நினைச்சிருப்பான்…அதுக்கு வழி இல்லாம நிச்சயித்த முடிவு பண்ணிட்டீங்க…என் பிள்ளை தலையில கட்ட பார்த்தான்… அதுவும் முடியாமப் போச்சு…இப்ப முழிக்கிறான்…”

அழகம்மையின் பேச்சைக் கேட்டதும் ‘பூமி அப்படியே பிளந்து கொண்டு தன்னை விழுங்கி விடாதா’என்ற பேராசை தோன்றியது மதுமதிக்கு…அந்த ஆசை நிறைவேற அவள் சீதையும் இல்லை… பூமாதேவி அவளின் தாயும் இல்லை…

எனவே தன் தாயான கமலத்தின் மடியில் விழுந்து “அம்மா…நான் ஏமாந்துட்டேன்ம்மா…என்னால முடியலம்மா…நான் தோத்துப் போயிட்டேன்மா…என் வாழ்க்கையில தோத்துப் போயிட்டேன்மா…செத்துரலாம் போல இருக்கும்மா…” என்று கதறினாள்… அழுதாள்…அரற்றினாள்…

—-தொடரும்

சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நட்புக்களுக்கும் மிக்க நன்றி…உங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும் பிரியா குமார்..

error: Content is protected !!